உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 5

விக்கிமூலம் இலிருந்து
5
யில், சென்னையை நெருங்க நெருங்க, மணிமேகலைக்கு, பிறந்த வீட்டு ஞாபகம் சிறிதாகவும், புகுந்த வீட்டு ஞாபகம் பெரிதாகவும் மாறிக் கொண்டிருந்தன.

அவள் கணவன் ஜெயராஜ், அரக்கோணத்தில் இருந்து தனது காரை எடுத்துக்கொண்டு, எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தான். மணிமேகலை, உள்ளே வந்த அவனின் கையை, பாமாவுக்குத் தெரியாமல் கிள்ளிக் கொண்டே சிரித்தாள். பேமிலி பிராப்ளத்தைப் பற்றி அவள் கேட்கவில்லை. அவனே, ஆற அமறச் சொல்லட்டும் என்று வெளிமனம் பாசாங்கு போட்டாலும், உள்மனம் பிரச்னையின் கனபரிமாணத்தைக் கண்டுகொள்ளப் பயப்படுவதுபோல் தெரிந்தது.

ஜெயராஜ் காரை ஓட்டினான். சுருள்முடி, தலையில் கிரீடம்போல் தோன்ற, ‘போட்டோ ஜீனிக்’ முகம்-வட்டமான அந்த அழகு முகத்தை, அப்படியே உள்ளங்கையில் ஏந்திக் கொள்ள வேண்டும்போல், அவளுக்குத் தோன்றியது. முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்த மனைவியிடம், “நீ போன பத்து நாளும்... பத்து...” என்று சொல்லிக்கொண்டு போனவனை “மணி மாதிரி போயிட்டுதா” என்று அவன் கோடிட்ட இடத்தைப் பூர்த்தி செய்யும் பள்ளிப்பாலகி மாதிரி சொன்னபோது, ஜெயராஜ் ‘ஸ்டேரிங்கை’ திருப்புகிற சாக்கில் அவள் தோளில் இடித்தான். பின்னால் இருந்த இந்த பாமாவும் அண்ணன் மகனுக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் பிரச்னையைத் தொடாமல், தன்னை மட்டும் தொடுவதை உணர்ந்த மணிமேகலை “என்ன பிரச்னை?” என்றாள்.

“எங்க அண்ணாவ பழையபடியும் முருங்கை மரத்துல ஏத்தப் பாக்குறாங்க..”

“யாரு?”

“வேறு யாராய் இருக்கும்? எல்லாம் அவரோட அருமை மாமனார் ராமபத்திரன்தான்.”

“என்னவாம்?””

“பாகத்தைப் பிரித்துக் கொடுக்கணுமாம்.”

"அதெப்படி முடியும்?”

“நாங்க முடியாதுன்னு சொன்னோம்.”

“சொன்னிங்களா? சொல்றீங்களா?”

"சொன்னோம்.”

“அப்படின்னா?”

“எப்படியோ. தான்தான் குடும்பத்தைக் கட்டிக் காப்பாத்துறதா அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டுட்டு. இதுக்கு மேலயும் அவரத் தாங்குனால், என் சுயமரியாதை தாங்காது.”

“உங்க அண்ணாவோட ஈகோவுக்கும் ஒங்களோட சுயமரியாதைக்கும் சின்னஞ் சிறிசுகள் பலியாகணுமா?”

“குடும்பத்தை விட்டு சொத்தோட பிரியுறது அண்ணா தான். நாம இல்ல.”

“எனக்கு தந்தி அடிச்சிங்களே-நான் வாரது வரைக்கும் பொறுக்கப்படாதா?”

“இப்போ வெள்ளம் கழுத்துக்குத்தான் வந்திருக்கு. தலைக்கு வரல. இன்னைக்கு செட்டில்மென்ட் பண்றதா ஏற்பாடு. ஒனக்கு சாமர்த்தியம் இருந்தால் தடுத்துப் பாரு. அப்பாதான் தந்தி கொடுக்கச் சொன்னாரு.”

“அப்போ ஒங்களுக்கு தந்தி கொடுக்க இஷ்டமில்லியா?”

“எனக்கும் இஷ்டந்தான். ஆனால் ஒரு வித்தியாசம். அப்பாவுக்கு சொத்து பிரியுறத பார்க்க இஷ்டமில்ல. எனக்கு நீ பிரிஞ்சத பார்க்க முடியல...”

“சும்மா பொறுப்பில்லாம பேசாதிங்க நீங்க கொஞ்சம் மனசு வச்சிருந்தால் இதைத் தடுத்திருக்கலாம். பேசாம காரை ஸ்பீடா ஓட்டுங்க.”

அரக்கோணத்தை விட்டு விலகியதுபோலவும், ஒட்டியிருப்பது போலவும் தனியாக இருந்த நான்கைந்து பெரிய வீடுகளிலேயே மிகப்பெரிய வீட்டின் முன்னால் கார் போய் நின்றது. ஜெயராஜ் டிக்கியைத் திறந்தபோது மணிமேகலை வராந்தாவிற்கு வந்தாள்.

அங்கே போட்டிருந்த லோபா ஸெட்டில் அவள் மாமனார் சபாபதியும், அவள் பெரிய மைத்துனன் சங்கரனும், அவனது மாமனார் ராமபத்திரனும், டென்ஷனோடு உட்கார்ந்திருந்தார்கள். எதிரே இருந்த ஒரு துண்டு ஸோபாவில் ‘துக்க’ (கறுப்பு) கோட் போட்ட வக்கீல் ஒருவர் சிரித்தபடி உட்கார்ந்திருந்தார்.

அவர்களிடம் பேசப்போன மணிமேகலை, மாமியார் வந்து உள்ளே வரும்படி சைகை செய்தார். மைத்தனர் மனைவி லட்சுமி வந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் பிள்ளைகள் ரமாவும் சேகரும் ஓடி வந்து ‘சித்தி சித்தி’ என்று சொல்லிக்கொண்டே காலைக் கட்டிக் கொண்டன. சின்ன மைத்துணியும் பியூஸிக்காரியுமான சீதா, அண்ணியின் வலது தோளைப் பிடித்தாள். அவளுக்கு இளையவனான ‘ஹையர் செகண்டரி’ பாஸ்கர் குழைந்துகொண்டே வந்து நின்றான். கடைக்குட்டியான இந்திரா, அண்ணியின் உடம்பில் பிடிக்க இடந்தேடி கிடைக்காமல் அவள் கொண்டு வந்த பிளாஸ்டிக் கூடையில் இருந்த ஒரு மாம்பழத்தைப் பிடித்தாள். கொண்டு வந்த பொருட்களை, அண்ணனுடன் சேர்ந்து இறக்கி வைத்துவிட்டு அங்கே வந்த பாமா, தன்னை யாரும் கவனிக்காமல் இருப்பதைக் கணக்கிட்டுக் கொண்டே “அய்யோ என்னையும் கொஞ்சம் கவனியுங்க. நானுந்தான் பத்து நாள் பிரிஞ்சிருக்கேன்” என்றாள்.

மாமியார், மணிமேகலையின் இரண்டு கைகளையும் தன் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு “நல்ல சமயத்துல வந்துட்டம்மா. இங்க பட்டப் பகலுல அணியாயம் நடக்கு. நாங்க அதப் பாத்துட்டு பட்டமரமா நிக்கோம். எந்த வீட்லயும் இந்த அணியாயம் கிடையாது” என்றாள்.

உடனே மூத்த மைத்துனர் மனைவி லட்சுமி, “ஆமா நாங்கதான் அநியாயக்காரங்கன்னு தெரியுதே அநியாயக்காரங்கள எதுக்காவ வீட்ல வச்சிருக்கணும்? எங்க பாகத்தை பிரிச்சிக் கொடுக்க வேண்டியதுதானே?” என்று சொன்னாள். சொன்னதை அழுத்தந் திருத்தமாகச் சொல்லவில்லையே என்று மோவாயைத் தண்டிப்பவள் போல், கையை அதில் வைத்து இடித்துக்கொண்டே அவள் போனாள். எங்கேயோ போனாள்.

இதற்குள், “எமகண்டம் வரதுக்குள்ள முடிச்சிடலாம்” என்றார் ராமபத்திரன். இவரும் முன்னாளய தூத்துக்குடிவாசிதான். அக்காள் புருஷனின் மளிகைக் கடையில் எடுபிடி வேலை செய்ய வந்து, அவரது தங்கையையே மனைவியாக்கி அரவை மிஷினும், மளிகைக் கடைகளும், கட்டைத் தொட்டிகளும், கசாப்புக் கடைகளும் வைத்து முன்னேறி, தன் மகள் லட்சுமியை மைத்துனன் மகனுக்குக் கொடுத்தவர். ‘எஞ்ஜினியர் உருப்படுவான்’ என்று கொடுத்தார். ஆனால் இந்த மருமகன் சங்கரனோ, சங்கரா... சங்கரா... அதை ஏன் சொல்லணும்? ‘என்னைக்கும் குடும்பத்துல இருக்கையிலேயே, குறியா துட்ட ஒதுக்கணும். தனியா அமுக்கணும். ஆபத்துக்கு அப்பா தம்பி உதவ மாட்டான். பணந்தான் உதவும். நான் மட்டும் மச்சான் கடையில துட்ட ஒதுக்காட்டா இப்டி ஆவ முடியுமா? அவரு தங்கையைப் பிடிக்க முடியுமா? இது தெரியமாட் டக்கே இவனுக்கு எப்போ உருப்பட? எப்படி உருப்பட?’

உருப்படாமல் போய்க் கொண்டிருக்கும் மருமகனை உருப்பட வைக்க நினைத்த ராமபத்திரன், பாகப்பிரிவினை செய்தால்தான் மகளுக்கு விமோசனம் பிறக்கும் என்று நினைத்தார். அண்ணன் தம்பிக்கிடையே சண்டை, மாமியார் மருமகளுக்கிடையே சண்டை முதலியவைகளை மூட்டி அவர்கள் அசரும்போது தானும் வந்து “என் மவள பாழுங் கிணத்துல தள்ளிட்டேனே” என்று சொல்லி சண்டை போட்டு நிலைமையை இந்த அளவுக்கு ‘முன்னுக்குக்’ கொண்டுவந்த புண்ணியவான் அவரு.

மணிமேகலை, மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்த போது “ஜெயராஜ்! சீக்கிரமா வாரும். எமகண்டம் வரப் போவுது” என்று அவர் மீண்டும் கூவுவதைக் கேட்டு நிற்க முடியாமல் மணிமேகலை வெளியே வந்தாள்.

“என்ன பெரியப்பா, நல்ல காரியத்துக்குத்தான் சுபகாலம் பார்க்கணும். நீங்க செய்யுற காரியத்துக்கு எதுக்கு?”

ராமபத்திரன், அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே “இது ஆம்புள விவகாரம். நீ ஒன் வேலயப் பாத்துக்கிட்டுப் போ” என்றார். இதுவரை பேசா மடந்தை மாதிரி இருந்த ஜெயராஜின் அப்பா “அவளுக்கும் இதுல பேசுறதுக்கு உரிமை உண்டு. படபடப்புல அத மறந்துடாதேயும்..” என்றார்.

மாமனார் கொடுத்த ஊக்குவிப்பால் மணிமேகலை நிதானமாக, அதே சமயம் ஆணி வைத்து அடித்ததுபோல பேசினாள்.

“இது ஆம்புள விவகாரம் மட்டுமில்ல பெரியப்பா. பொம்புள விவகாரம். ஒரு பாவமும் அறியாத பாமா வோட விவகாரம். சீதாவோட விவகாரம். இதுல பேச எனக்கு மட்டுமில்ல, அந்த பொண்ணுங்களுக்கும் உரிம உண்டு.”

ராமபத்திரனின் ஆவேசத்தை மீசை காட்டியது.

“அப்படீன்னா, என் மகள் ஒங்க எல்லாருக்கும் சேவை செய்யனுமா? அவள் கிழவியாவது வரைக்கும், ஒங்க எச்சித் தட்டக் கழுவிக்கிட்டே இருக்கணுமா? என்ன பேச்சு பேசுற? இது பேச்சா... இது பேச்சா?”

மணிமேகலை அவர் அருகே வந்தாள். அவரின் கண்களை நேராகப் பார்த்துக்கொண்டே பேசினாள்.

“நல்லா யோசித்துப் பாருங்க பெரியப்பா. மூணு தலைமுறைக்கு முன்னால இங்க வந்து இப்போ நல்ல நிலைமையில இருக்கிங்க. எங்க பேக்டரியில, இரண்டு லேத் மிஷின்ல குத்துவிளக்கு தயாரிச்சும், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிச்சும் நல்லபடியா வாழறோம். இன்னொரு லேத் மிஷின் வரப்போவுது. இந்த சமயத்துல, ஆளுக்கொரு லேத் மிஷினை எடுத்துக்கிட்டால் பேக்டரி என்னாவும்? ஆர்டர் கொடுத்தவங்க என்ன நினைப்பாங்க? பேக்டரி என்ன அரவ மிஷினா நினைச்ச இடத்துக்கு மாத்துறதுக்கு?”

“என் தொழில மட்டமா பேசுனா, எனக்குப் பொல்லாத கோபம் வரும்.”

“கோபமே பொல்லாதது. இதுல வேற பொல்லாத கோபமுன்னு ஒண்னு இருக்கா ? பெரியப்பா, ஒங்க மகளுக்கு யாரும் எந்த குறையும் வைக்கல. எங்களுக்கு மாமாவுக்குப் பதிலா தகப்பனார் இருக்காங்க. அக்கா சந்தோஷமாத்தான் இருக்காங்க. அவங்க ரமாவையும், சேகரையும் பெத்துத்தான் போட்டாங்க வளத்ததுல்லாம் எங்க மாமியார்.”

“ஓஹோ என் மவளுக்கு பெத்த பிள்ளியள வளக் கதுக்கு துப்பில்லன்னு சொல்றியோ?”

“இப்படி சகுனி மாதிரி பேசுனா, எந்த வீடும் உருப்படாது...”

“என்னை சகுனின்னு பேசினால் எனக்குக் கெட்ட கோபம் வரும். டேய் ஜெயராஜ்! ஒன் பொண்டாட்டிய வார்த்தய அளந்து பேசச் சொல்லுடா.”

மணிமேகலை தொடர்ந்தாள்:

‘சகுனி எவ்வளவோ மேலு பெரியப்பா. அவன் கெளரவர்களுக்கு மட்டுந்தான் தாய்மாமன். பஞ்சபாண்டவங்க சம்பந்தம் இல்லாதவங்க. அதனால் அவன் செய்ததக்கூட மன்னிச்சிடலாம். ஆனால் ஒங்களுக்கு, இந்த எஞ்ஜினியர்களும், இந்த சின்னஞ் சிறிசுகளும் சொந்தமான அக்கா மக்கள். அப்படி இருந்தும் குடும்பத்தைக் கலைக்கப் பார்க்கிறிங்க. சகுனி அப்படிப் பண்ணமாட்டான்.”

“மணிமேகல... எனக்கு ஒய்யாவ விட மூணு வயசு அதிகம். வயசுக்காவது மரியாத கொடு...”

“அதனாலதான் நிதானமா பேசுறேன். எங்க அப்பா மட்டும் இப்படி இங்க வந்து பேசியிருந்தால், நானே அவரை கழுத்தைப் பிடிச்சி வெளில தள்ளியிருப்பேன்.”

ராமபத்திரன் எழுந்தார். ஆக்ரோஷமாக எழுந்தார். “என்னையா கழுத்தப் பிடிச்சி தள்ளுவேன்னு நாக்கு மேல பல்லப் போட்டுச் சொல்லுற? எல்லாத்தையும் கோர்ட்ல பாத்துக்கலாம். ஏய் லட்சுமி! புருஷனையும், பிள்ளையளையும் கூப்பிடு... வா. போகலாம்.”

மணிமேகலையும் கோபியானாள்.

“எந்த கோர்ட் வரைக்கு வேணுமுன்னாலும் போகலாம். ஏங்க ஒங்களத்தான். குழந்தைய எடுங்க. நீங்களும் எஞ்ஜினியர்தான். நாம் எங்கேயாவது வேல தேடி பிழைச்சிக்கலாம். இந்த சின்னஞ்சிறிசுங்க, ஒங்கள மாதுரியும் ஓங்க அண்ணன் மாதுரியும் சுயமாய் சம்பாதிக்கிற அளவுக்கு வாரது வரைக்கும், ஒங்க இரண்டு பேருக்கும் சொத்துல உரிமை கிடையாது. இது உங்க அப்பாவோட சுயமான சொத்து. அவரு யாருக்கு வேணுமுன்னாலும் கொடுக்கலாம். என்னங்க உங்களத்தான். புறப்படுங்க. சின்னஞ் சிறிசுகளுக்கும், பெண் பிள்ளைகள் கல்யாணத்துக்கும் இருக்க வேண்டிய சொத்த, நாம சாப்பிடுறது மாதிரி இருக்கப்படாது. புறப்படுங்க கார் உங்களுக்கும் கிடையாது. மோட்டார் பைக், ஒங்க அண்ணனுக்கும் கிடையாது.”

ராமபத்திரன் அசந்துவிட்டார். வக்கீலைப் பார்த்தார். அவர் அங்கே இல்லை. அவர் மகளைப் பார்க்க, அவள் புருஷனைப் பார்க்க, அவன் அம்மாவைப் பார்க்க, எல்லோரும் கைகளைப் பிசைந்தார்கள். ‘நல்ல வேள. லட்சுமி வாரேன்னு சொல்லல’ என்று மனதுள் நினைத்துக்கொண்டே, ராம பத்திரன் பத்திரமாகப் போய்விட்டார்.

மணிமேகலை, ‘முத்தாளிடம்’ வந்து அவள் திருப்பிய ‘மூஞ்சியின்’ மோவாயைப் பிடித்துக்கொண்டு, “அக்கா, சொல்லப்போனால் நான்தான் வேற்றாள். நான் பாகப்பிரிவினை கேட்டால் அர்த்தம் உண்டு. ஆனால் என் வீட்டுக்காரர், இந்த பாமா, இந்த பாஸ்கரன் இவங்கெல்லாம் உங்களோட ரத்தம். உங்களோட சொந்த அத்தை பிள்ளிங்க. நீங்க வேற்றுமை காட்டலாமா? இனிமேல், நீங்க எச்சித் தட்ட கழுவ வேண்டாம். ஒங்க தட்டையும் நானே கழுவுறேன்” என்றாள்.

“நான் ஒண்ணும் அப்படிச் சொல்லல!” என்றாள் லட்சுமி.

பெருமாள் மாடு மாதிரி எட்டிப் பார்த்த, ‘பெரியத்தான்’ சங்கரனையும் மணிமேகலை விடவில்லை.

“எல்லாரும் ஒண்ணாச் சாப்பிட்டு, ஒரே மாதுரி இருக்கிறதுலயும், ஒருவருக்கு வார கஷ்டத்த ஒன்பது பேரும் தங்களுக்கு வந்ததா நினைக்கிறதிலேயும், ஒன்பது பேருக்கு வார சந்தோஷத்த ஒருவர், தனக்கு வந்ததா நினைக்கதுலயும் இருக்கிற இன்பத்துக்கு ஈடு உண்டா? உங்களத்தான் அத்தான் ! இதையும் கேளுங்க, அப்புறமா போகலாம். நம்ம பேக்டரியில தொழிலாளிங்க விழாகிழா நடக்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதும், தேசிய கீதம் பாடும்போதும், நம்மோட சேர்ந்து புல்லரித்து நிற்காங்களே, ஏன்? அந்தப் பாட்டுக்களோட ராகமா காரணம்? இல்ல. நாம எல்லாம் ஒரு தாய் மக்கள் என்கிற எண்ணம் அப்போ வாரதுதான் காரணம். புரியுதா ? இந்தாங்க உங்களத்தான்! இனிமேல், காரை அத்தானிடம் கொடுத்துடணும். உங்களுக்கு மோட்டார் பைக்தான். என்ன அத்தான் பேசமாட்டக்கிங்க, ஒங்களுக்கு ஏரோப் பிளேன்தான் வேணுமா?”

சங்கரன் சிரித்துக்கொண்டே பேசினான்.

“நம்ம பேக்டரி பெரிசானதும், உன்னை பப்ளிக் ரிலேஷன் ஆபீஸராய் போடப் போறேன்.”

“வேண்டாம். நான் எப்பவும் பேமிலி ரிலேஷன் ஆபீஸராய் இருக்கத்தான் போறேன். வேணுமுன்னால் பாமாவைப் போடுங்க. எங்க ஊர்ல, பத்து நாளையில அவளுக்குக் கடுமையான சினேகிதம்.”

மணிமேகலை, பாமாவைப் பார்த்துக் கண்ணடித்தாள்.

எல்லோருக்கும் நிம்மதி. சங்கரன் ‘நம்ம பேக்டரி’ என்று சொன்னபிறகு, குடும்பத்தில் பழைய உற்சாகம் பிறந்தது. எவரும் மணிமேகலையைப் பார்த்து ‘கை கொடுத்த தெய்வம்’ என்றோ ‘பிரிவினையைப் பிரித்த பிராட்டி’ என்றோ ‘வசனம்’ பேசவில்லை. அதே சமயம் ஒவ்வொருவரின் கண்களும் ஆயிரமாயிரம் வசனங்களை ‘ஒளிபரப்பின’. எழுபது வயதில், தான் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்து பிரியாமல் போனதைக் கண்ட கிழவர், ‘தரநன்னா...’ என்றுகூட பாடினார்.

இரவு எட்டிப் பார்த்து, வீட்டுக்குள் நுழைந்தது.

படுக்கையறைக்குள் நுழைந்த மணிமேகலை, பையனை எடுத்து குட்டிக் கட்டிலில் கிடத்திவிட்டு, கணவனருகே படுத்தாள். “எப்படியோ ஒரு பிரளயத்தை தடுத்தாச்சு” என்றாள். ஜெயராஜ் சப்புக் கொட்டினான்.

“எனக்கென்னமோ அவங்க நேரத்த எதிர்பார்த்து, ஒநாய் பின்வாங்கி இருக்கது மாதிரி தெரியுது. உடைந்த கல் ஒட்டாது...”

மணிமேகலை சீறினாள்.

“உடைந்த கல் ஒட்டுமோ ஒட்டாதோ? அந்தக் கல்லை எடுத்து உங்கள மாதிரி அவநம்பிக்கை ஆசாமிங்க மேல எறியுறது வரைக்கும் இந்த மாதிரி பிரச்னை தீராது.”

“கார். ‘தம்பிகிட்டேயே இருக்கட்டு’முன்னு ஒரு வார்த்தை சொல்றானா பாரு!”

“ஒங்களோட பெரிய வம்பு, எல்லாரும் மொத்தமாய் இருக்கும்போது ரகசியமாய் பேசுவிங்க. தனியாய் இருக்கும்போது பகிரங்க விஷயத்த பேசுவிங்க.”

ஜெயராஜ், மணிமேகலையையே பார்த்தான். அவளை அணைக்கவோ அள்ளிப் பருகவோ தோன்றவில்லை. அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றியது.