இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. புலிக்கூடு[1]
பந்தம் எரியுதோடி!- கண்களைப்
பார்க்க நடுங்குதடி!
குந்தம், வாள், ஈட்டியெல்லாம் - கூடவே
கொண்டு திரியுதடி!
1
வாயைப் பிளக்குதடி!-கையுறை
வாளும் உருவுதடி!
பேயைப் படைத்தபின்னோ - இதனையும்
பிரமன் படைத்தான் அடி!
2
வாலை முறுக்குது பார் - வால் நுனி
வட்டஞ் சுழலுது பார்;
சாலப் பதுங்குது பார் - நம்மீது
சாடவும் நோக்குது பார்.
3
இடித்து முழங்குதடி!- தொண்டையும்
இரும்பாலே செய்ததோடி!
அடுத்து நெருங்காதேடி!- அது மிக
ஆங்காரம் கொள்ளுதடி!
4
கூட்டில் அடைத்திடினும் - இரையினைக்
கொண்டு கொடுத்திடினும்,
காட்டில் வளர்ந்த குணம்-புலிகளும்
காட்டா திருக்குமோடி!
5
புன்னைப் புதுமலரும் - குவளையின்
பூவும் கலந்ததுபோல்,
மின்னி மிளிரும் உடல் - கொடிய இவ்
வேங்கைக்கும் வேண்டுமோடி!
6
- ↑ இது வில்லியம் ப்ளேக் என்பவர் ஆங்கிலத்தில் செய்த பாடலைப் பின்பற்றி எழுதப்பட்டது.