உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


15. புலிக்கூடு[1]

பந்தம் எரியுதோடி!- கண்களைப்
     பார்க்க நடுங்குதடி!
குந்தம், வாள், ஈட்டியெல்லாம் - கூடவே
     கொண்டு திரியுதடி! 1

வாயைப் பிளக்குதடி!-கையுறை
     வாளும் உருவுதடி!
பேயைப் படைத்தபின்னோ - இதனையும்
     பிரமன் படைத்தான் அடி! 2

வாலை முறுக்குது பார் - வால் நுனி
     வட்டஞ் சுழலுது பார்;
சாலப் பதுங்குது பார் - நம்மீது
     சாடவும் நோக்குது பார். 3

இடித்து முழங்குதடி!- தொண்டையும்
     இரும்பாலே செய்ததோடி!
அடுத்து நெருங்காதேடி!- அது மிக
     ஆங்காரம் கொள்ளுதடி! 4

கூட்டில் அடைத்திடினும் - இரையினைக்
    கொண்டு கொடுத்திடினும்,
காட்டில் வளர்ந்த குணம்-புலிகளும்
    காட்டா திருக்குமோடி! 5

புன்னைப் புதுமலரும் - குவளையின்
    பூவும் கலந்ததுபோல்,
மின்னி மிளிரும் உடல் - கொடிய இவ்
    வேங்கைக்கும் வேண்டுமோடி! 6


  1. இது வில்லியம் ப்ளேக் என்பவர் ஆங்கிலத்தில் செய்த பாடலைப் பின்பற்றி எழுதப்பட்டது.