உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

488

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-2



கி.மு. 155 இல் சிங்கள அரசர் பரம்பரையில் வந்த அசேலன் என்பவன் இவர்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றிப் பத்து ஆண்டுகள் அரசாண்டான்.

ஏலாரன் (ஏலேலசிங்கன்)

இலங்கையில் மீண்டும் தமிழர் ஆட்சி அமைந்தது. உயர் குலத்தைச் சேர்ந்தவனும் சோழநாட்டுத் தமிழனுமான ஏலாரன் என்பவன் அசேலனை வென்று இலங்கையை நாற்பத்துநான்கு ஆண்டுகள் அரசாண்டான் என்று மகாவம்சம் கூறுகிறது. இவன் கி.மு. 145 முதல் 101 வரையில் அரசாண்டான். இவனைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் ஒன்றும் காணப்படவில்லை. ஏலாரனை ஏலேல சிங்கன் என்றும் கூறுவர். ஏலேலசிங்கன், திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைத் தன்னுடைய குருவாகக் கொண்டிருந்தான் என்று ஒரு செவிவழிச்செய்தி உண்டு.

தமிழனாகிய ஏலாரன் சைவசமயத்தவனாக இருந்தும், பௌத்த நாடாகிய இலங்கையை மதக்காழ்ப்பு இல்லாமல் நீதியாக அரசாண்டான் என்றும், பகைவர் நண்பர் என்று கருதாமல் எல்லோரையும் சமமாகக்கருதிச் செங்கோல் செலுத்தினான் என்றும் மகாவம்சம் கூறுகிறது; இவனுடைய நேர்மையும் நீதியுமான ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்துபேசுகிறது. இவ்வரசன் தன்னுடைய படுக்கைஅறையில் ஆராய்ச்சிமணியொன்றைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான். அந்த மணியை அடிப்பதற்கு வாய்ப்பாக நீண்டகயிற்றை அரண்மனைவாயிலில் கட்டிவைத்தான். முறையிடுவோரும் நீதிவேண்டுவோரும் அரண்மனைவாயிலில் உள்ள கயிற்றை இழுத்து மணியடித்தால் அரசன்நேரில் வந்து அவர்களுடைய முறையீடுகளைக் கேட்டு நீதி வழங்குவான் (மகாவம்சம்21:15).

ஏலார மன்னனுக்கு ஒரே மகன் இருந்தான். அந்த அரசகுமரன் ஒரு நாள் திஸ்ஸவாவி என்னும் ஏரிக்குச் சென்றான். செல்லும் வழியில் ஒரு பசுவின்கன்று துள்ளி ஓடிவந்து அரசகுமரனுடைய தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டு மாண்டுபோயிற்று. அதைக் கண்ட தாய்ப்பசு தீராத துயரமடைந்து, அரண்மனைக்கு வந்து கயிற்றை இழுத்து ஆராய்ச்சி மணியை அடித்தது. அரசன்வெளியே வந்து பசுவின்