118
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
கணபதிக்குக் கோவில் கட்டினார் என்பது வரலாற்றறிஞரின் பொதுவான கருத்து. ஆனால், சிறுத்தொண்ட நாயனாருக்கு முன்பே களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கணபதி வழிபாடு தமிழகத்தில் இருந்தது என்று இப்போது ஆராய்ச்சியினால் அறியப்படுகிறது. மற்றும், கபிலதேவநாயனாரின் சிவபெருமான் திருவந்தாதியில் சிவபெருமான் திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருப்பதாகக் கூறியிருப்பது கொண்டு, அந்த மலையைக் கூறுகிற கபிலதேவநாயனார் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று திரு. சதாசிவபண்டாரத்தார் கருதுகிறார். சிவபெருமான் திருவந்தாதியில் காவிரி வந்தேறு மறுகிற்சிராமலையெங் கோமான் என்று சிராமலையில் இருந்த சிவபெருமானைக் கபிலதேவ நாயனார் கூறினார் (சிவபெருமான் திருவந்தாதி, செய்யுள் 42). இதில், மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோவிலைத்தான் இவர் கூறுகிறார் என்றுகருத வேண்டியதில்லை. அதற்கு முன்பு அம்மலைமேல் இருந்த சிவன் கோவிலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆகவே, கபிலதேவ நாயனாரும், இன்னா நாற்பது கபிலரும் வெவ்வேறு கபிலர்கள் என்று கருதுவது வேண்டா. இருவரும் ஒருவரே என்பது எம்முடைய கருத்து.
இனியவை நாற்பது
இந்த நூலை இயற்றியவர் பெயர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனர். இது நாற்பது வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்தையும் உடையது. மாந்தர் செய்யவேண்டிய இனிய (நல்ல) செயல்களைக் கூறுகிறது இந்நூல். இதன் கடவுள் வாழ்த்து இது:
கண்மூன் றுடையான் தாள்சேர்தல் கடிதினிதே
தொன்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.
திரிகடுகம்
இது நூறு வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்தையும் உடைய நூல். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துச் சரக்குகளைத் தனித்தனியே பொடி செய்து, இப்பொடிகளைச் சம அளவாகச் சேர்த்து, அமைக்கப்பட்ட மருந்து திரிகடுகம் என்பது. இதைத் திரிகடுகு சூரணம் என்றும் கூறுவர். இது காரமாக இருக்கும். இதனால் இது திரிகடுகம் (மூன்று காரமான பொருள்) என்று பெயர்