உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

127


அக்காலத்தில் இருந்தது. இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னே சிந்துவெளியில் இருந்த ஹரப்பா நகரத்துத் திராவிட நாகரிக மகளிரும் சங்கு வளைகளை அணிந்திருந்தனர் என்பது அங்கு அகழ்ந்தெடுத்தப் பட்ட மனித எலும்புக்கூடுகளுடன் சங்கு வளைகளும் இருந்ததனால் அறிகிறோம். கொற்கை காவிரிப் பூம்பட்டினம் உறையூர் முதலான ஊர்களில் நிலத்தை அகழ்ந்தெடுத்த போது அங்கிருந்து கிடைத்த பழம் பொருள்களுடன் உடைந்து போன சங்கு வளையல் துண்டுகளும் கிடைத்தன. இதனால், சங்கச் செய்யுட்களில் கூறப்படுகிற அக்காலத்து மகளிர் சங்கு வளைகளை அணிந்திருந்தனர் என்னும் செய்தி வலியுறுகின்றது.

சங்கு முழங்குவது மங்கலமாகக் கருதப்பட்டது. கோயில்களிலும் அரண்மனைகளிலும் சங்கு ஊதுவது வழக்கம். அரண்மனைகளிலே காலை வேளையில் முரசு கொட்டியும் சங்கு முழங்கியும் அரசனைத் துயிலெழுப்பினார்கள். அரண்மனைகளில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை,

'தூக்கணங் குரீஇத் தூங்கு கூடேய்ப்ப ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி

ஞாலங் காவலர் கடைத்தலைக்

காலைத் தோன் றினும்'

(புறம்.225:11-14)

என்றும்,

'மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் வால் வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய

காலை முரசங் கனைகுரல் இயம்ப

(சிலம்பு, 14:12 - 14)

என்றும் கூறுவதனால் அறிகின்றோம். (கோயில் - அரண்மனை)

பற்பல நூற்றாண்டுகளாக மகளிர் சங்கு வளைகளை அணிந்து வந்த வழக்கம் சமீபகாலம் வரையில் இருந்தது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு முதல், முஸ்லீம் தொடர்பு ஏற்பட்ட பிறகு கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆகவே பழைய சங்க வளை அணியும் வழக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று.

2.

p.86 (Ancient India No 3 Jan 1947)