உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை - முதற்பகுதி/வளர்தமிழ் வாழிய!

விக்கிமூலம் இலிருந்து

வளர்தமிழ் வாழிய!

 

உலகின் மாந்தர் உணர்வினில் எழுந்தே
ஒலியாய் எழுத்தாய்ச் சொல்லாய்த் தொடராய்
வளர்ந்தெழில் கொழித்த வளமொழி பலவுள்
தமிழே முதலெனச் சாற்றுதல் சாலும்!

அந்நாள் முதலா இந்நாள் வரையும் 5
இனியும் எழிலுடன் இயங்கும் ஈடிலா
உயர்தனிச் செம்மொழி தமிழ்தான் என்பர்!

இத்தமிழ் மொழியினில் ஈடிலாப் பற்றுடன்
மெத்தவும் பேணியே மேன்மைகள் நிறைத்தோர்
பண்டை நாளிலிப் பைந்தமிழ் நாட்டின் 10
உரிமை மாந்தராத் திகழ்ந்தநம் முன்னோர்!

அவருள் பாண்டியர் ஆன்றோர் அவையினை
அமைத்துத் தமிழ்வளம் அமைவுறக் காத்தனர்!

மொழிநலம் உயிரினும் மேலெனக் கொண்டே
கடனெனக் கனித்தமிழ் காலம் வென்றுமே 15
திறலுடன் செழிக்கச் செயுட்கள் பலவும்
சிதறிச் சிதைந்திடா வணம்தொகுத் தமைத்தே
உதவியோர் ஒண்மைக் கொப்பில யாண்டும்!

சங்கம் தொகுத்துத் தந்தவை தம்முள்
எட்டெனும் தொகையுடன் பத்தெனும் பாட்டும் 20
இன்றும் என்றும் ஈடில வாகும்!

அவற்றுள் எட்டெனும் தொகையுள் ஒன்றே
நற்றிணை நானூறெனுமிந் நூலாம்!

இதனைத் தொகுப்பித்தற் கேற்றன உதவியோன்
பன்னாடு தந்தநற் பாண்டியன் மாறன் 25
வழுதி என்னும் வண்மையன் ஆவன்!

மறமாண் புடனிவன் மாத்தமிழ்ப் புலமையும்
செறிமாண் பினனெனத் திகழ்ந்தனன்; இதனை

இவன்செய் செயுட்களின் இனிமையிற் காணலாம்!

தொகுத்த சான்றோர் தம்பெயர் யாதெனச் 30
சொல்லற் கேதுவாம் குறிப்பெதும் பெற்றிலேம்;
எனினும் அவர்தம் அகத்திணைப் புலமை
ஈடற்ற தென்பதித் தொகையால் விளங்கும்!
தொகையின் எல்லையும் தொகுத்திடு செயுட்களின்
அடியள வெல்லையும் அமைத்துத் தொகுத்த 35
அருமை இவர்தம் அறிவின் செழுமையே!

நற்றிணைச் செயுள்நலம் நன்கறிந் தின்புற
நல்லதோர் பொழிப்புரை நல்கியே உதவினோர்
பின்னத் தூரினர் பெருமைசேர் புலமையர்
நாரா யணசாமி அய்யராம் நல்லரே! 40
இவர்தம் பணிக்கோர் ஈடெதும் ஈங்கிலை!

இவர்க்குப் பின்னர் இவருரை தனையே
விரித்தும் வேண்டுவ சேர்த்தும் வளர்த்தும்
பேருரை செய்தவர் பெருமழைப் புலவர்!

சித்தாந்த கலாநிதி செந்தமிழ் வலவர் 46
ஔவை துரைசாமிப் பிள்ளையும் பின்னர்
விரிவாம் ஓருரை விளக்கம் தன்னை
அமைத்து நல்கியே அரும்புகழ் கொண்டனர்!

சமாசச் சங்க இலக்கியப் பதிப்பினுள்
நற்றிணை மூலம் நல்வணம் இலங்கும்! 50

மர்ரே நிறுவன மக்கள் பதிப்பினும்
நற்றிணைச் செயுட்கள் நயனுற விளங்கும்!

இவர்கள் தம் முயற்சியால் எழில்சேர் நற்றிணை
நயத்தினைப் புலவோர் பலரும் நாடியே
கற்றின் புற்றும் கவிநலம் பொருள் நலம் 55
உற்றின் புற்றும் ஒளிசேர் நற்றிணை
வளத்தின் புற்றும் உரையொடு எழுத்தினும்
வழங்கிப் பரவிட வாய்ப்பன செய்தனர்!

நற்றிணை நாட்டிற் பரவிட நயப்பார்
பெருகினர் நற்றிணைப் பெருமையும் உயர்ந்ததே! 60

தமிழன்பர் யாவரும் இனிதாக் கற்றிட

உதவிடும் வகையில் உரையொடு பாட்டும்

உதவிடும் குறிப்புகள் பலவும் ஒருங்கே
அமைந்திட அமைந்ததித் தெளிவுரைப் பதிப்பே!

இப்பதிப் பிரண்டு தொகுதிக ளவற்றுள் 63
முதலாம் தொகுதி முதற்பாட் டதுமுதல்
இருநூறு வரையும் கொண்டதஃ திதுவாம்.

தமிழ்நலம் செழிக்கத் தக்கன என்றும்
செய்வதில் உவந்திடும் சிந்தையர் பாரி
செல்லப்பர் அவர்கள் செவ்விதாப் பதித்தே 70
வழங்குவர் இதனை வாழ்த்துவென் அவருளம்!

தமிழின் அன்பே தழைத்திடும் உளத்தினர்
அனைவரும் விருப்புடன் வாங்கிக் கற்றே
இத்தமிழ்ப் பணிக்கெனை மென்மேல் ஊக்கிச்
செலுத்திட வேண்டுவென் சிந்தையில் நினைந்தே! 75

என்னுளம் தனதாய்க் கொண்டெனை இயக்கும்
இறைவி பராபரை இன்னருள் போற்றி
வழங்குவென் இந்நூல்! வண்தமிழ்

வளரநம் தமிழர் வாழ்கபல் லாண்டே!

புலியூர்க் கேசிகன்
1-9-1990