நற்றிணை - முதற்பகுதி/கடவுள் வாழ்த்து
நற்றிணை தெளிவுரை
கடவுள் வாழ்த்து
பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்.
அனைத்துக்கும் ஆதியாகிய பரம்பொருளின், யாதாயினும் ஒரு தோற்ற நிலையினை உள்ளத்தே கற்பித்துக்கொண்டு, அதனைப் போற்றியே ஏதனையும் செய்யத்தொடங்குதல் சான்றோர்களின் பழைய மரபாகும். அந்த மரபினையொட்டியே, இந்தத் தொகை நூலிற்கான கடவுள் வாழ்த்தினையும் திருமாலைப் போற்றும் முறையிலே ஆசிரியர் பெருந்தேவனார் செய்துள்ளனர்.
மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கையாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்.
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய
5
வேத முதல்வன்' என்ப—
உலகினிடத்தே உளதான தீயவை அனைத்தும் முற்றவும் விலகிப் போகுமாறு செய்தலினாலே, 'இவ்வுலகினைக் காத்தற்கு உரியோன்' என்னும் புகழோடு விளக்கம் பெற்றவன், சக்கரப் படையினைத் தரித்தவன் ஆகிய 'திருமால்'.
இந்தப் பெரிதான நிலப்பரப்பையே தனது இரு சிவந்த திருப்பாதங்களாகக் கொண்டிருப்பவன்; தூவுகின்ற அலை நீரினைக் கொண்டதும், சங்கினம் ஆரவாரித்துக்கொண்டிருப்பதுமான கடலினையே, தன் அரையிடத்து உடுக்கையாக உடுத்திருப்பவன்; நீலவண்ணமான ஆகாயத்தினையே தன் திருமேனி வண்ணமாகக் கொண்டிருப்பவன்; நான்கு பெருந்திசைகளையுமே தன் நான்கு திருக்கரங்களாகக் கொண்டிருப்பவன்; பசுமையான கதிர்களைக் கொண்டதான மதியத்தினோடு, வெங்கதிர் ஞாயிற்றினையும் தன் இரு கண்களாகக் கொண்டிருப்பவன்; இவ்வுலகிடத்தே காணப்படுவனவாகிய எல்லாவற்றினுமாகத் தான் பொருந்தி நின்றும், அவை எல்லாவற்றையுமே தன்னகத்தே அடக்கிக் கரந்து கொண்டும், அநேகனாகியும், ஏகனாகியும் விளங்குபவன்; நான்மறைகளுக்கு முதல்வனாகவும் விளங்குபவன் அவன்.
‘அத் தகையோன், இத் தொகைநூலும், இனிது உலகிடத்தே நிலைபெற்றுச் சிறப்படைவதற்கு அருள் செய்து காப்பானாக' என்பது கருத்து.
சொற்பொருள் : தூநீர் – தூய நீர்மையும் ஆம். 'தூநீர் வளை' சங்கினத்தைக் குறிப்பதாக அப்போது கொள்க. வளை – சங்கு. நரலுதல் – ஆரவாரித்தல். திகிரி – சக்கரம்; படைக்கருவி வகையுள் ஒன்று; இதனைச் 'சுதரிசனம்' என நூல்கள் உரைக்கும்.
விளக்கம் : பரம்பொருளைத் தொழுது போற்றும் பக்திமை உடையவரது நெஞ்சகத்தே, முதற்கண் அப்பரம்பொருளது திருவடி நினைவே எழுதலால், 'மாநிலஞ்சேவடி ஆக' எனச் செய்யுளைத் தொடங்கினார். மாநிலம்— பெரிய நிலவுலகம். வேத முதல்வன்–வேதங்களை அருளியோன்; வேதங்களின் மூலப்போருளாகத் தானே அமைந்தவன்; வேதனாகிய ஆதிப்பிரமனுக்குத் தகப்பன். வேதமுதல்வனாகவும், தீதற விளங்கிய திகிரியோனாகவும் விளங்கும் பெருமான், இத்தொகைநூலும் என்றைக்கும் நிலைபெற்றுத் தமிழ்மொழியின் வளத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கக் கருணை செய்வானாக" என்பது இதன் பொருள் முடிபு.