உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை - முதற்பகுதி/நூல்: செய்யுட்கள் 1–200

விக்கிமூலம் இலிருந்து

நூல்

1. சிறுமை செய்யார்

பாடியவர் : கபிலர்.
திணை  : குறிஞ்சி.
துறை  : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

[(துறை விளக்கம்) தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் முயற்சிகளிலே ஈடுபட்டனன். அதனைக் கண்டு, அவன் பிரியின் தலைவிபால் வந்துறும் துன்பப்பெருக்கினுக்கு அஞ்சுகின்றாள் தோழி. அவள், தலைவியிடம் சென்று தன் வருத்தத்தைக் கூறிய பொழுதிலே, தலைவனிடத்தே ஆராக்காதலும் நம்பிக்கையும் உடையவளான தலைவி, தன் சால்பு தோன்ற உரைத்து, இவ்வாறு அவளைத் தேற்றுகின்றாள்.]

நின்ற சொல்லர்; நீடுதோறினியர்:
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்தா தூதி, மீமிசைச்
சந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை; 5
நீரின் றமையா உலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்

சிறுமையுறுபவோ செய்பறி யலரே!

தோழீ! நம் தலைவர் என்றுமே பிறழ்தலற்றதாகி நிலைபெறுகின்ற சொல்வாய்மையினை உடையவர்; நெடிதாகப் பழகுந்தோறும் பின்னரும், பின்னரும் இனிமை உடையவராக விளங்குகின்ற தன்மையினை உடையவர்: என் தோள்களைப் பிரிகின்றதான அந்தக் குறைபாட்டுச் செயலினை என்றுமே அறியமாட்டாத சிறந்த பண்பினையும் கொண்டவர். வண்டானது, தாமரைப் பூவினது தண்மையான தாதினை ஊதிக்கொண்டுசென்று, மிக்க மேலிடத்ததான சந்தனமரத்தினிடத்தே வைத்திருக்கும் இனிதானவொரு தேனிறாலைப் போல, மேலான தன்மையாளரான அவருடைய நட்பானது, என்றும் நமக்கு மேன்மையினைத் தருவதாகவே விளங்கும். நீர் வளத்தினை இல்லாதே அமைந்திராத இந்தப் பூமியினது இயல்பினைப் போலவே, தம்மை இல்லாதே அமைந்திராத தன்மையினைப் பெற்றுள்ள நம்மையும் விரும்பி, நமக்கு அந்நாளில் அருளினையும் செய்தவர் அவர். நம்முடைய நறுமணம் கமழ் தலையுடைய நெற்றியானது பசலையாலே உண்ணப்பட்டுப் பாழாதலை நினைத்து, அச்சங்கொண்டவர் ஆகுதலாகிய ஒரு சிறுமையினையும், அவர் அடைபவர் ஆவோரோ? அடையார்காண்!

கருத்து : சிறுமையினை அறியார்; ஆதலின் பிரிதலையும் நினையார்' என்பதாம்.

சொற்பொருள் : நின்றசொல் - நிலைபெற்ற சொல்; மாறாத சொல்வாய்மை. 'நீடுதோறு' என்றது, உறவுக்காலத்தின் நெடுமையைக் குறித்தது. புரைமை - உயர்ச்சி. நீர் - நீர்வளம்.

விளக்கம் : 'நின்ற சொல்லர்' என்றதுடன், நீடுதோறு இனியர்' என்றும் சொன்னது, வாய்மை தவறாதவர் மட்டுமன்றி, ஆராப்பெருங் காதலன்பையும் உடையவர் காதலர் என்பதற்காம். தோழி அதனை உணர்தல் இயலாமையால், தலைவி அவளுக்கு உரைத்துக் காட்டுகின்றாள். தாமரைத் தாது தலைவிக்கும், சந்தனமரம் தலைவனுக்கும், தாமரைத் தாதினை ஊதிச்சாந்தில் இறாலை வைத்தவண்டு ஊழிற்குமாகப் பொருத்திக்காணுதற்கு உரியன. நல்லூழின் செயலாலேயே தான் தலைவனோடு கலந்து இன்புறுதற்கு உயர்வுபெற்று விளங்குதலான செவ்வி வாய்த்தது; அஃது என்றும் தன்னைக் கைவிடாது பேணி நிற்கும் என்பதுமாம். அவனது பெருங்காதலை நினைந்து உவகைகொண்டு, அவன் பிரியினும், அவனது பேரன்பின் வயத்தளாகிய தான், அவன் மீண்டு வரும் வரைக்கும் பொறுத்து ஆற்றியிருக்கும் கற்பினை உடையவள் என்பதனைத் தோழிக்குத் தலைவி இவ்வாறு நுட்பமாக உணர்த்துகின்றாள்.

2. இடியினும் கொடியதாகும்?

பாடியவர் : பெரும்பதுமனார்.
திணை : பாலை.
துறை : உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது.

[(து–வி.) தலைவனும் தலைவியுமாகச் சுரத்திடையே தனித்துச் செல்கின்றனர். அவர்களைச் சில வழிப்போக்கர்கள் இடைவழியிற் காணுகின்றனர். அவர்களது உள்ளம் பெரிதும் கவலைகொள்ளுகின்றது. அவர்களுள் ஒருவர். தம்முடன் வந்த பிறர்க்கு இவ்வாறு இரங்கிக் கூறுகின்றனர்.]

அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து.
ஒலிவல் ஈந்தின் உலவை யங்காட்டு,
ஆறுசெல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந்தலைக் குருளை, மாலை, 5
மானோக்கு இண்டிவர் ஈங்கைய, சுரனே;
வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! 10

ஆழ்ந்துபடக் கிடந்ததும், பெரிய குளிர்ச்சியைக்கொண்டிருந்ததுமான

இக்குன்றினிடத்தேயுள்ளதும், தழைத்த வலிய ஈந்து மரங்களையுடையதும், காற்றுச் சுழன்று வீசுவதுமான தன்மையது காடு. இக்காட்டினிடத்தே நெறிக்கொண்டு செல்லும் மாக்களது தலையை மோதியதனாலே, குருதிக்கறை படிந்து சிவந்த மாறுபட்ட தலையை உடையனவும், வாயினை இரத்தம் பூசிய உடையவுமாக விளங்குவன புலிக்குட்டிகள். பெருத்த தலையையுடைய அப்புலிக்குட்டிகள், மாலைப்பொழுதிலே, தமக்கு உணவாக மான்களை எதிர்நோக்கியபடியே புதர்களிற் பதுங்கியிருக்கும். அத்தகைய இண்டங்கொடிகள் படர்ந்தேறிய ஈங்கைப் புதர்களைக் கொண்டதும் இச்சுரத்தின் நிலைமையாகும். இதனிடத்தே, கூர்மையான பற்களையுடைய மெல்லியலாளான தன் காதலியைத் தன்முன்னே செல்லவிடுத்துத் தானும் அவள் பின்னாக இராப் பொழுதிலேயும் செல்ல நினைக்கிறானே இந்த இளைஞன்! இப்படிச் செல்லா நிற்கின்ற இளைஞனது உள்ளமானது, காற்றோடு கலந்த பெருமழை பெய்கின்ற காலத்திலே, பெரிய துறுகற்களைப் பெயர்த்துத் தள்ளும் வலிய இடியேற்றினும் காட்டிற் கொடுமையுடையதாகும்!

கருத்து : ‘அக் காதலர்கள், இரவுப்பொழுதில் காவலான ஓரிடத்தே தங்கிச் செல்பவராயினால் நன்று' என்பதாம்.

சொற்பொருள் : அழுந்துபட – ஆழ்ந்துபட, ஒலித்தல் – தழைத்தல். உலவை – சுழல் காற்று. 'மாக்கள்' என்றது வழிப்போக்கரை. நெய்த்தோர் – இரத்தம். வல்லியம் – புலி. ஈங்கை – ஒருவகை முட்செடி; அதன்பால் இண்டும் படர்ந்தேறப் புதர்களாக விளங்கும் என்க; இதனை இக்காலத்தார் முட்சங்கு என்பர். வை – கூர்மை. ஐயள் – மெல்லியள். மிலிர்க்கும் – பெயர்த்துத் தள்ளும்.

விளக்கம் : 'பகற்போதிலேயே வழிச்செல்வாரது தலையை எறிந்து, அதனாற் குருதிக்கறை படிந்த வாயோடு விளங்கிய புலிக்குட்டிகள், மீண்டும் மாலையில் தமக்கிரையாக மான்களைக் கொன்று தின்னுதற்கு நினைந்து, அவற்றது வரவை எதிர்நோக்கிப் புதரிடையே பதுங்கியிருக்கும் சுரன்' எனச் சுரத்தின் கொடுந்தன்மையைக் கூறினார். 'அத்தகைய சுரநெறியிடத்தே, மெல்லியலாளோடு இரவின் கண் செல்லத் துணிதல் பெரிதும் கொடுமையானது' என்று நினைந்து இரங்குவார். அதனைப் 'பெருமழைக் காலத்தே அதிரும் இடியினுங் காட்டிற் கொடிது' என்கின்றனர். இதனால், பொழுது விடிவதற்கு முன்பாகத் தன்னூர்க்குச் சென்றுவிடல் வேண்டுமென்று துணிந்த அவனது துணிவையும், அவனது ஆண்மையையும் வியந்தனருமாம். ஆனால், அவளைக் குறித்து இரங்கி வருந்தினரும் ஆம்.

3. சுடரொடு படர் பொழுது!

பாடியவர் : இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
[(து–வி.) முன்பொரு காலத்தே பொருள் தேடிவரத் தலைவியைப் பிரிந்து சென்று, அந்தப் பிரிவுக்காலத்தே அவளது நினைவாலுற்ற துயரத்தை அறிந்தவனாயிருந்தான் ஒரு தலைவன். அவன் மீண்டும் பொருட்பிரிவினுக்குத் தன் நெஞ்சம் தன்னைத் தூண்டியபொழுது. இவ்வாறு தன் நெஞ்சொடு கூறியவனாக வருந்துகின்றான்.]

ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் 5
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினேன் அல்லெனோ, யானே — உள்ளிய
வினைமுடித் தன்ன இனியோள்

மனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே?

நெஞ்சமே! பார்ப்பை ஈன்ற பருந்தானது அந்த வருத்தமுடன் தங்கியிருக்கும். வானத்தைப் பொருதுமாறுபோல வளர்ந்து உயர்ந்த நெடிய கிளையினையும், பொரிந்த அடியினையும் கொண்ட வேம்பினது புள்ளிபட்ட நீழலினிடத்தே, கட்டளைக் கல்லினைப் போலத் தோற்றும் இட்டரங்கினைக் கீறிக்கொண்டு, கல்லாமையினயுைடைய சிறுவர்கள் நெல்லிவட்டினை ஆடிய படியிருக்கும், விற்போரால் ஆறலைத்து உண்டு வாழுகின்ற மக்களின் வெம்மையான குடியிருப்பையுடைய சிற்றூரினிடத்தே, சுரத்தின் கண்ணே வந்ததும், நம் வலியனைத்தையும் மாயச் செய்ததுமான மாலைக்காலத்திலே, "நினைத்த செயலைச் செய்து முடித்தாற்போன்ற இனிமையினைத் தருபவளான நம் தலைவியானவள், மனைக்கு மாட்சிதரும் விளக்கினை ஏற்றிவைத்தவளாக அதன்முன் நின்று, நம்மை நினைந்து துன்புறும் மாலைப்பொழுது இதுவாகும்" என யானும் அவளை நினைத்தேன் அல்லனோ!

கருத்து : "என் நிலைமை அவ்வாறாக, யான் இனியும் எவ்வாறு பிரிந்து போதற்குத் துணிவேன்' என்பதாம்.

சொற்பொருள் : உயவும் – வருந்தியிருக்கும். கட்டளை – கட்டளைக் கல்; இதனைப் பொன்னை உறைத்துக் காணும் கல் எனவும் கூறுவர். மலைப்பாங்கில வட்டரங்கு இழைத்திருந்த காட்சி, கட்டளைக் கல்லிலே பொன்னை உறைத்தாற் காணப்படும் வரைகளையொப்ப விளங்கிற்று என்க. இட்டரங்கு – பகுப்புக்கள் இடப்பட்டிருக்கும் வட்டாடும் அரங்கு. உரன் – ஆற்றல்; வலிமை. மனைமாண் சுடர் – அந்தி விளக்கு; மனைக்கு மாட்சிதரும் மங்கலச் சுடர்விளக்கு.

விளக்கம் : 'உள்ளினேன் அல்லனோ?' என்றது, தன்மனம் அவ்விடத்தே பொருளின்பாற் செல்லாதாய்த் தன் மனையின் கண்ணேயே சென்றபடி துயருற்றது என்பதாம். அதனாற் பிரிவைத் தன்னாலேயும் பொறுத்தற்கு இயலாது என்பதுமாம். இதனால், அவன் தன் போக்கைக் கை விட்டனனாதலும் விளங்கும்.

இறைச்சி : பொரியரை வேம்பினது உயரிய கிளையிடத்தே ஈன்பருந்து இருந்து வருந்தியிருக்க, அதன் புள்ளி பட்ட நிழலிடத்தே கல்லாச் சிறாஅர் வட்டாடியபடி இன்புற்றிருக்கின்றனர். அவ்வாறே, தன் தலைவி புதல்வனைப் பெற்ற வாலாமைநாள் தீராதாளாய் நலிந்திருக்கத், தன் மனம் அவனைப்பற்றி ஏதும் நினையாதே, தன்னைப் பொருள் நினைவிலே கொண்டு செலுத்துகின்றது எனத் தலைவன் அதனிடத்தே கூறியபடி நோகின்றனன் என்று கொள்ளுக.

4. கொண்டு செல்வாரோ?

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி அலரச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது. நச்சினார்க்கினியர் இதனைத் தலைவி கூற்றாகக் கொண்டுள்ளனர் (தொல். பொ. 113 உரை). அதனை யொட்டி நாமும் பொருள் கொள்ளலாம்.

[(து–வி.) களவுறவிலே திளைத்துவரும் நங்கையொருத்தி, ஊரிடத்தே எழுந்த பழிச்சொற்களைக் கேட்டு அச்சமுற்றுத், தலைவன் தன்னை விரையவந்து மணந்துகொள்ளல் வேண்டுமெனக் கருதினாள். அதனைத் தலைவனிடம் நேரிற் கூறுதற்கு நாணியவளாக, அவன் குறியிடத்தே சிறைப்புறத்தானாதலை அறிந்து, அவன் கேட்குமாறு, தான் தோழியிடம் உரையாடி உசாவுவாள் போல இவ்வாறு உரைக்கின்றாள்.]

கானலம் சிறுகுடிக் கடன்மேம் பரதவன்
நீல்நிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
அந்தண் அரில்வலை உணக்கும் துறைவனொடு
'அலரே அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை 5

அரிய வாகும் நமக்கு' எனக் கூறின்,
கொண்டுஞ் செல்வர்கொல் தோழி! — உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்
மணல்மடுத் துரறும் ஓசை கழனிக் 10
கருங்கால் வெண்குருகு வெரூஉம்

இருங்கழிச் சேர்ப்பின்தம் உறைவின் ஊர்க்கே?

தோழீ! கானற் சோலையிடத்தே அமைந்த அழகான குடியிருப்பிலே வாழ்வோர், கடல்மேற் சென்று மீன் வேட்டையாடி வரும் பரதவர்கள், நீலநிறப் புன்னையினது கொழுமையான நிழலினிடத்தே அவர்கள் தங்கியிருந்தவராகத், தண்ணிய பெரிய கடற்பரப்பினிடத்தே தாம் வேட்டங்குறித்துச் செல்லுதற்கேற்ற ஒள்ளிய பதத்தினை நோக்கியபடியே இருப்பார்கள். அவர்கள் அவ்விடத்தே முறுக்குண்டு கிடந்த வலையினைப் பிரித்துக் காயவைத்தபடியும் இருப்பார்கள், அத்தகைய துறையினை உடையவர் நம் தலைவர். அவர்பாற் சென்று, நம் அன்னையானவள் ஊரிலே எழுந்துள்ள பழிச்சொற்களை அறிந்தனளானால், இவ்விடத்தே தங்கியிருந்து களவிற் கூடிவாழும் நம் வாழ்க்கையானது, நமக்கு இனி அரிதாகிப் போய்விடும்' என்று கூறினால்—

வெண்மையான கல்லுப்பின் விலையைக் கூறியபடியே, கூட்டமாகிய ஆனிரையை எழுப்புகின்ற உப்பு வாணிகர்களது. நெடிதான நெறியிடத்தே செல்லும் வண்டிகள், மணலின்கண் மடுத்து எழுப்புகின்ற ஓசையைக் கேட்டு. வயலிடத்தேயுள்ள கரிய கால்களையுடைய வெளிய நாரைகள் வெருவா நிற்கும், கரிய கழிசூழ்ந்த தம் உறை வீடமாகிய நெய்தனிலத்தேயுள்ள இனிய ஊர்க்கு, நம்மை அவரும் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வாரோ?

கருத்து : 'விரைய வந்து மணந்துகொண்டு, தம்மோடு தம்மூர்க்கு நம்மையும் அழைத்தேக வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : ஒண்பதம் – ஒள்ளிய பதம் : கடலிடைச் செல்லற்கு ஏற்றதான பருவநிலை. அரில் – பிணக்கம். கொள்ளை சாற்றல் – விலைகூறல். அசைதல் – தங்குதல்.

உள்ளுறை : (1) 'பரதவர் கடலின் ஒண்பதம் நோக்கி அரில்வலை உணக்கும் துறைவன்' என்றது, அவனும் தலைவியைக் கூடி இன்புறுதற்கான செவ்விநோக்கிச் சிறைப்புறமாக நின்றபடி குறி செய்திருப்பான் என்பதாம்.

(2) 'உமணரது சகடம் மணலிடைக் செல்லும்போது எழுப்பும் ஓசையாற் கழனி நாரை வெருவும்' என்றது, தலைவன் வரைந்துவந்து மணந்துகொள்ளும்பொழுது எழுகின்ற மணமுழவுகளின் ஒலியினாலே, அலருரைக்கும் அயற்பெண்டிரது வாய்கள் அடங்கும் என்றதாம். அன்றி, 'எவரைக் குறித்தோ எழுந்த அலரைத் தன்னைக் குறித்தாகவே கொண்டு தலைவி கவலையுற்று அஞ்சுவள்' என்றதும் ஆம்.

5. பிரிதல் அரிதே!

பாடியவர் : பெருங்குன்றூர் கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைவனின் செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

[(து–வி.) தலைவன், தன்னைப் பிரிந்து செல்லுதற்காவன செய்கின்றானெனக் குறிப்பாலுணர்ந்த தலைவி எழில்வேறு பட்டனள். அவளைத் தெளிவிப்பாளான தோழி, அவளது அந்த வேறுபாட்டுக் குறிப்புக்களை அறிந்த தலைவன், தன் போக்கையே கைவிட்டனன் என்று இவ்வாறு கூறுகின்றாள்.]

நீலம்நீர் ஆரக் குன்றம் குழைப்ப
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்
குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும்பெயல் பொழிந்த தொழில எழிலி 5
தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே, காதலர்ப் பிரிதல்—இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு

மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே.

தோழீ! இன்றைக்குச் செல்லுகின்றவரான ஏவலிளையரையும் மீட்டுக் கொணர்ந்து தரக்கூடியதான வாடைக்காலத்தோடு மயங்கிய மழைபோல நீரைச் சொரிகின்ற நின் இமைகளையுடைய கண்கள்தாம், அவரைச் செல்லாதிருக்கவேண்டுமாறு ஒரு தூதினையும் பயந்தன. அதனால்— நிலம் நீரினாலே நிரம்பப்பெற்றதாய் நிறைவெய்தவும், குன்றிடத்து மரம் முதலாயினவெல்லாம் தழைப்பவும், அகன்ற வாயினையுடைய பசிய சுனையிடத்தெல்லாம் அதன்கண் தோன்றும் பயிர்வகைகள் முளைத்தெழுந்து வளர்ந்து நிறையவும், கொல்லையிடத்தே குறவர்கள் வெட்டியழித்தலினாலே குறைபட்ட மிக்க நறைக்கொடியானது நறுமணமுடைய வயிரங்கொண்ட சந்தன மரத்தின்மீது சுற்றிப் படர்ந்து ஏறவும், பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகமானது தென்திசையிடத்தே எழுந்து செல்லுதலினாலே, காதலரைப் பிரிந்தோர் இரங்குகின்றதான முன்பனிக்காலத்திலும், நின் காதலரை நீ பிரிந்து தனித்து வாழ்தல் என்பதுதான் அரிதாகும்.

கருத்து : 'ஆதலின், நீ மகிழ்வோடு அவரோடுங்கூடியின்புற்று வாழ்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : குழைப்ப – தழைப்ப. சுனைப் பயிர்: குளநெல் முதலாயின. கால் யாத்தல் – முளைத்தெழுந்து வளர்தல். நிறைப்பவர் – மணக்கொடி; நன்னாறியின் வேரைப்போலக் கொடி மணக்கும் தாவரவகையினைச் சார்ந்தது. காழ் – வயிரம். ஆரம் – சந்தனமரம். அகைத்தல் – படர்ந்து ஏறுதல். அற்சிரம் – முன்பனிக் காலம்.

விளக்கம் : குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர், நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பக், காதலர்ப் பிரிதல் அரிதாய்த் தழுவி இன்புறுக' என்று குறிப்பாகக் கூறுகின்றாள் தோழி. தலைவியின் கவலையால் மெலிந்த உடல், மீண்டும் களிப்பால் பூரித்து. அவள் தலைவனைத் தழுவியின்புறுதலைக் குறிக்கின்றாள் தோழி. அதனை உவமையாற் குறிப்பாகவும் புலப்படுத்துகின்றனள்.

6 'இவர் யார்?' என்னாள்!

பாடியவர் : பரணர்.
திணை: குறிஞ்சி.
துறை: இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாகிய தலைவன், தோழி கேட்பத்தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

[(து–வி.) இரவுக் காலத்தே தலைவியைக் கூடி மகிழும் வாய்ப்பைப் பெறக் கருதிய தலைவன், தலைவியின் தோழியைக் கண்டு, தன் நெஞ்சிற்குக் கூறுவானேபோல இப்படித் தன் உள்ளத்துயரை அவள் கேட்குமாறு கூறுகின்றான்.]

நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
நார் உரித் தன்ன மதனில் மாமைக்
குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்
திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்கு 5
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!
'இவர்யார்?' என்குவன் அல்லள்; முனாஅது
அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி ஆகும்
வல்வில் ஓரி கானம் நாறி
இரும்பல் ஒலிவரும் கூந்தல் 10
பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே!

நீரிடத்தே. வளர்கின்ற ஆம்பலினது துளையுடைய திரண்ட தண்டினை நாருரித்துக் கண்டாற்போன்ற, அழகு இல்லாத மாமையினையும், குவளை மலரைப் போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியான கண்களையும், தேமற் புள்ளிகளையுடைய அல்குல் தடத்தினையும், பெருத்த தோள்களையும் கொண்டவள் இளமகளாகிய தலைவி. அவளிடத்தே நெருங்கச் சென்று, நம் வரவைப்பற்றிச் சொல்வாரைப் பெற்றிலமே! பெற்றனமானால், அவள், 'வந்துள்ள இவர்தாம் யாரோ?' என்று கேட்பாளும் அல்லள். சுரத்திடத்தேயுள்ள குமிழமரத்தினது வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து, அவ்விடத்தே விளையாட்டயர்ந்திருக்கும் இளமான்களுக்கு உணவாக நிற்கும் இயல்புடையது, வல்வில் ஓரியினது கொல்லிக் கானம்! அக் கானத்தைப்போல நறு நாற்றத்தைக் கொண்டதாகியும், கரிய பலவாகித் தாழ்ந்த தன்மையதாகியும் விளங்கும் கூந்தலையுடைய அவள்தான், அவர்கள் உரைத்து முடிப்பதற்கு முற்படவே, வந்துள்ளது யானெனத் தெளிந்தாளாய்ப் பெரிதும் மயக்கத்தை உடையவளும் ஆவாளே!

கருத்து : 'அவளிடம் சென்று என் வரவினை உரைத்து வருவாரைத்தான் யான் பெற்றிலேன்' என்பதாம்.

சொற்பொருள் : தூம்பு – துளை. கால் – தண்டு. மதன் – அழகு. மழைக்கண் – குளிர்ச்சியான கண். திதலை – தேமற்புள்ளிகள். குறுமகள் – இளமகள். கொடுமூக்கு – வளைந்த மூக்கு. மாற்கு – மானுக்கு. ஒலிவரல் – தழைத்துத் தாழ்தல்.

விளக்கம் : "மதன்இல் மாமமை' என்று சொன்னது, தன்னைப் பிரிந்திருத்தலால், அவள்பால் மாமை உள்ளதாயிருக்கும் என்பதுபற்றியாம். 'இவர் யார்? என்குவள் அல்லள்' என்றது, அவளும் தன் நினைவோடு, தன் வரவை எதிர்பார்த்துத் காத்திருப்பாள் என்பதனாலாம். தலைவனது இப்பேச்சைக் கேட்கும் தோழி, தலைவியும் அவனைக் காதலிப்பதை அறிந்தவளாக, அவர்களைக் கூட்டுவிக்க முயல்வாள் என்பதாம்.

இறைச்சி : 'குமிழின் கனி மானுக்கு உணவாகும் தன்மைபோலத் தன் வரவு தலைவியின் கவலையைப்போக்கி இன்புறுத்தும்' என்பதாம். இதனால், தன் வரவு முன்னர்த் திட்டமிட்டிராத ஒன்று என்பதையும் தலைவன் உணர்த்தினனாம்.

7. வானம் மின்னலிடும்!

பாடியவர் : நல்வெள்ளியார்.
திணை : பாலை.
துறை : பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக்கழிந்து பொருள்வயிற் பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது.

(து–வி.) தலைவி அறத்தொடு நின்றதன் பின்னாக, அவளை வரைந்து கொள்ளாது, வரைபொருளைக் குறித்து நெடுந்தொலைவுக்குத் தலைவன் பிரிந்து போயினான். அந்தப் பிரிவுக்கு ஆற்றாளாய் நலிந்தாள் தலைவி. அதனைக்கண்ட தோழி, தலைவன் குறித்த கார்காலத்தினது வரவைக் காட்டி, அவளைத் தெளிவிக்கின்றாள்.]

சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்கப்
பெருவரை அடுக்கத்து அருவி யார்ப்பக்
கல்லலைத்து இழிதரும் கடுவரற் கான்யாற்றுக்
கழைமாய் நீத்தம் காடலை யார்ப்பத்
தழங்குகுரல் ஏறொடு முழங்கி, வானம் 5
இன்னே பெய்ய மின்னுமால் — தோழி

வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை
தண்ணறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே.

தோழீ! மூங்கிலின் வெண்ணெல்லைத் தின்றதான வரிகள் பொருந்திய நெற்றியைக் கொண்ட யானையானது, தண்ணிதாக நறுமணங் கமழ்ந்து கொண்டிருக்கின்ற மலைப்பக்கத்திலே சென்று, தான் உறக்கங்கொள்ளும். சிறியலைகளையுடைய சந்தனமரங்களும் கோடையால் வாடிப் போயிருக்கின்ற அத்தகைய பெருங்காட்டினிடத்தே –

அச்சத்தை உடையதும், இடமகன்றதுமான சுனையிடத்தே நீர் நிறையவும், பெரிதான மூங்கில்களைக் கொண்டுள்ள மலையடுக்கத்தே அருவிகள் ஆரவாரிக்கவும், கற்களைப் புரட்டிக் கொண்டதாக ஓடிவருகின்ற கடிதான நீர்வரத்தையுடைய காட்டாற்றினிடத்தே, கரையிலுள்ள மூங்கிலும் முழுகுமாறு செல்லும் வெள்ளத்தின் அலைகளானவை, காட்டிடத்து எல்லாம் மோதி ஆரவாரிக்கவும், ஒலிக்கின்ற இடியேற்றோடும் முழக்கமிட்டதாக, வானமும் இப்பொழுதிலேயே பெய்தற்குத் தொடங்கினாற்போல மின்னா நிற்கின்றது. அதனைக் காண்பாயாக!

கருத்து : "கார்காலம் தொடங்கியதாகலின், நின் காதலரும் தம் சொற்பிழையாராய் விரைய நின்னிடத்து வருவர்; அதனால், நின் துன்பமும் தீரும். நீ அதுவரை ஆற்றியிருப்பாயாக" என்பதாம்.

சொற்பொருள் : சூர் அச்சம். நனந்தலை – பரந்த இடம். வரை – மூங்கில்; கழை – மூங்கில்; ஓடக்கோலும் ஆம். நீத்தம் – வெள்ளம். தழங்கு குரல் – முழங்கும் ஒலி. ஏறு – இடியேறு. வெண்ணெல் – வெள்ளை நெல்; மூங்கிலின் நெல்.

விளக்கம் : 'தனக்கு வளத்தைத் தந்திருந்த மழையானது தன்பால் வந்து அருளாமையினாலே, வாட்டமுற்றுக் கிடந்த மலைப்பக்கத்தின் கோடைக்காய்ச்சல் அகலுமாறு, வானத்தே கார்மேகம் மின்னலிட்டு இடியேற்றோடும் எழுகின்றது. அவ்வாறே பிரிவாலாகிய நின்னது பெருவருத்தமும் அகலும்' என்று தேற்றுகின்றாள் தோழி. 'சூருடை நனந்தலை' என்றது. அணங்குகளையுடைய மலைப்பக்கம் என்பதனாலாம்.

'வெண்ணெல் அருந்திய வரிநுதல் யானை, தண் நறுஞ்சிலம்பின் துஞ்சும் சிறியிலைச் சந்தின பெருங்காடு' என்றது. கோடைக்கு முற்பட்ட வளமான காட்டின் தன்மையைச் சுட்டிக் கூறியதாகும். அத்தகைய காடும் வாடியது என்பாள், 'வாடு பெருங்காடு' என்கின்றனள்.

இறைச்சிகள் : (1) 'வாடிய காட்டை வாழ்விக்க மழை பெயலைத் தொடங்கப் போகின்றது' என்றது, அக்காலத்துச் சொற்பிழையாராய் நின் காதலரும் வந்து நின்னை வாழ்விப்பர் என்பதாம். (2) மூங்கில் நெல்லருந்திய யானை சத்தனக் காட்டிடத்தே கவலையின்றித் துயிலுமாறு போல, நீயும் இன்புற்றனையாய்ச் சாந்தம் கமழும் தலைவனின் மார்பிடத்தே துயில்தலைப் பெறுவாய் என்பதாம்.

8. பெற்றவர் வாழ்க!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண், தலைமகளை ஆயத்தோடும் கண்ட தலைமகன் சொல்லியது.

[(து.வி.) இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்த் தலைவி தலைவனை நீங்கிச் சென்று, தன் ஆயத்தவரோடும் போய்க்கலந்து கொள்ளுகின்றாள். அவளை அவரிடைக் காணும் தலைவனின் உள்ளத்தே, தான் அவளை அடைந்த நல்லூழை நினைத்து எழுகின்ற பெருமித உணர்வு மேலோங்குகின்றது. அவன், தன் நெஞ்சோடும் இவ்வாறு சொல்லுகின்றான்.]

அல்குபடர் உழந்த அரிமதர் மழைக்கண்
பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
திருமணி புரையும் மேனி மடவோள்
யார்மகள் கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண்சேறு தாஅய மதனுடை நோன்தாள்
கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி
தன்றிறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!
10

மிகுதியான துன்பத்தை நுகர்ந்தவும், செவ்வரி படர்ந்தவும், மதர்த்த குளிர்ச்சித் தகைமையுடையவுமான கண்களை உடையவள்; பலவாகிய பூக்களுடனே மாறுபட்ட வண்ணத்தைத் தேர்ந்து தொகுக்கப்பட்ட தழையுடையானது அசைந்தபடியே இருக்கும் அல்குல் தடத்தினை உடையவள்; அழகிய நீலமணியைப் போன்று விளங்கும் கார்மேனியினை உடையவள்: இளையோளாகிய நம் காதலியான இவள்தான் யாவரது மகளாவாளோ? தளராத உள்ளத் திண்மையினையுடைய எம்மையே காமத் துயரத்திலே அழுந்தச் செய்தனளே! இத்தகையாளைப் பெற்றுவளர்த்து எனக்கு உதவியாகப் பேணிக் காத்த இவள் தந்தைதான் நெடிது வாழ்வானாக!

'இவளைத் தன் மகளாகப் பெற்றெடுத்த தாயும் திண்ணிய தேரையுடையவனான பொறையனது அகற்சி கொண்ட வயற்புறங்களிலே, நெல்லரிவோரால் அரியப்பட்டும், அதனைக் கட்டிக் கொணர்ந்து போரிடத்தே தருவோரால் தரப்பட்டும், அதனால் தண்ணிய சேறு பரந்ததாகி, அழகுடைய வலிய தண்டினையுடையதும் கண்போலத் தோற்றுவதுமாகிய நெய்தல் மலர்கள் நெற்போரிடத்தேயே பூத்திருக்கும், அத்தகைய தொண்டிப்பட்டினத்துச் சிறப்பினையெல்லாம் பெற்றுச் சிறப்பெய்துவாளாக!

கருத்து : இவளைப் பெற்றது பெரும்பேறு' என்பதாம்.

சொற்பொருள் : உழந்த – வருத்தமுற்ற; இதுகலவியாற் சிவப்புற்ற கண்களைக் கண்டு கூறியது. அல்கு படர் – மிக்க துன்பம். போர் – கதிர்ச்சூடு. மதன் – அழகு.

விளக்கம் : வயலையும் அழகுபடுத்தித் தான் சேர்ந்த போரிடத்தும் அழகு செய்து திகழும் நெய்தலைப் போலவே, அவள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் சிறப்பினைத் தருவாள் என அவன் நலனை வியந்து போற்றியதும் ஆம்.

மேற்கோள் : நச்சினார்க்கினியர் (தொல். பொ. 14.உரை) இதனைப் 'புணர்தல் நிமித்தம்' என்று கூறுவர். அவ்வாறு கொண்டால், 'ஆயத்துள் ஆடிமகிழும் தலைவியைக்கண்டு நெஞ்சம் தளர்ந்த தலைவன் ஒருவன், அவளைத் தனக்குக் காட்டிய ஊழையும், அவளைப் பெற்றெடுத்த தாய் தந்தையரையும் வியந்து தனக்குள்ளேயே கூறிக் கொண்டதாகக்' கொள்க.

9. வருந்தாது செல்வாயாக!

பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாலை.
துறை : உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.

[(து.வி.) தலைமகனுடன் தலைமகள் போகத் துணிந்துவிட, அவனும் அவளை அழைத்துச் செல்லுகின்றான். அவர்கள் வழியினைக் கடந்து போகும் வேளையிலே, அவன் அவளுக்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.]

அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கணகண் டாங்கு
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நலமென் பணைத்தோள் எய்தினம்; ஆகலின்
பொரிப்பூம் புன்கின் அழற்றழை ஒண்முறி 5
சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி
நிழற்காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வாலெயிற் றோயே!
மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்
நறுந்தண் பொழில, கானம்; 10
குறும்பல் லூர யாம் செல்லும் ஆறே.

வெண்மையான பற்களை உடையாளே! இனி நாம் செல்லுதற்குரித்தான காட்டு வழியெல்லாம், மாவினது அரும்பைக் கோதியவாறு மகிழ்ச்சியுறுகின்ற குயிலினங்கள் கூவிக் களிக்கும், நறிய தண்மைவாய்ந்த சோலைகளை உடையன; அல்லாமலும், வழியினை ஒட்டியபடியே, பலப்பல சிற்றூர்களையும் கொண்டிருப்பன.

நெஞ்சுரத்தின்கண் என்றும் அழிவில்லாதவராய், உயரிய செயலினைச் செய்கின்றவரான மாந்தர், தாம் அதுகுறித்து வழிபட்டுப் போற்றும் தெய்வத்தினைத் தம்முடைய கண்ணெதிரேயே தோன்றக்கண்டாற் கொள்ளும் மகிழ்ச்சியைப் போல, யாம் நின்னை அடைதற்கு முயன்றதனால் உண்டான சுழற்சியுடைய வருத்தமெல்லாம் தீரும்படியாக, நின்னுடைய நலம் வாய்ந்த மென்மைகொண்ட பணைத்த தோள்களை இப்போது நேராகவே அடைந்துவிட்டோம். ஆதலினாலே, பொரியைப் போலத் தோன்றும் பூக்களையுடைய புன்கினது அழகிய தகைமைகொண்ட ஒள்ளிய இளந்தளிரினை, சுணங்கு பரந்து அழகு செய்திருக்கும் நின்னுடைய பருத்த முலைகளிடத்தே, அவை என்னை மேலும் தாக்கி வருத்தும் பேரழகினைக் கொள்ளும்படியாக, நீயும் அப்பிக் கொள்வாயாக. நிழலைக் காணும்போதெல்லாம் அவ்விடத்தே நெடும்பொழுது தங்கியிருந்து, வழிநடந்த வருத்தம் நீங்கக் களைப்பாற்றிக் கொள்வாயாக. மணலிடங்களைக் காணும்போதெல்லாம், வண்டலிழைத்து, அவ்விடத்தே சிறிது விளையாடி இன்புறுவாயாக. இங்ஙனமாக, நெறிகடக்கும் வருத்தத்தைப் போக்கியவளாக, நீயும் இனிதே என்னுடன் செல்வாயாக!

கருத்து : சுரநெறியைக் கடந்து விட்டோம்; இனிச்செல்லும் வழி இனிதானது ஆதலின் இன்புற்றுச் செல்வாயாக' என்று தேற்றுவதாம்.

சொற்பொருள் : அழிவிலர் – அழிவற்ற நெஞ்சுரத்தை உடையவர்; இவரது முயற்சி பேரின்பத்தை நாடியதாக இருக்கும். அலமரல் – சுழற்சியுடைய. பணைத்தோள் பருத்ததோள். புன்கு – ஒரு வகை மரம்; புங்கு என்றும் வழங்குவர்.

விளக்கம் : 'மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும் நறும் தண் பொழில்' என்ற றதனால், வசந்த காலத்தின் வருகையைக் கூறினனாம். 'முலை அணங்கு கொள்ளல், அதன்பால் பேரழகு குடிகொண்டு காண்பாரைத் தாக்கி வருத்தும் செவ்வியைப் பெறுதல். 'தோள் எய்தினன்' ஆதலின், அவன் அதனை விரும்புகின்றான்.

மேற்கோள் : இதனைப் புணர்ச்சி நிகழ்ந்தபின் வழிவந்த நன்மை கூறி ஏகு என்றது (தொல்.அகத். 41. உரை). எனவும், 'பாலைக்கண் புணர்ச்சி நிகழ்ந்தது (அகத்.15.உரை) எனவும் கூறி, நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர்.

10. கைவிடாது காப்பாயாக!

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : உடன் போக்கும் தோழி கையடுத்தது.

[(து.வி) தலைவி விரும்பியவண்ணம் அவளைத் தலைவனுடனே ஒன்றுசேர்த்த பின்னர், தோழி, 'இவளை என்றும் பேணிக் காப்பாயாக' என, அவனிடம் ஓம்படுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர!
இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க் 5
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீ இயர்
வெண்கோட்டு யானைப் போஓர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.

பூக்கள் கெழுமிய ஊரை உடையவனே! இனிப்புடையதும் கடுப்புடையதுமான கள்ளுணவையும், ஆபரணங்களால் அழகுபடுத்தப்பெற்ற நெடிய தேர்களையும் உடையவர், வலிமிக்க சோழவேந்தர்கள். அவர்கள், கொங்கு நாட்டாரைப் பணியச் செய்வித்தலின் பொருட்டாக, வெளிய கோட்டினையுடைய போர்க்களிறுகளை மிகுதியாகக் கொண்டிருந்தவனும், 'போஓர்' என்னும் ஊருக்குரியவனுமான, 'பழையன்' என்னும் குறுநிலத் தலைவனை ஏவினர். போரிடையே வெற்றியுற்று வந்த பழையனின் வேற்படையானது, தன் தொழிலிலே தப்பாது விளங்கி, அவனுக்கு வெற்றியைக் தேடிந்தந்தது. அங்ஙனமே, பிழையாது நிலைபெறும் நின்னுடைய நன்மைதரும் சொற்களைக் கேட்டு, அவற்றை உண்மையே எனத் தெளிந்தவள் இவள். இவளுக்கு, அண்ணாந்து உயர்ந்த வனப்பினைக் கொண்ட கொங்கைகள் தளர்ச்சியுற்றுப் போயினவானாலும், பொன்னையொத்த மேனியிடத்துக் கருமணிபோலத் தாழ்ந்திருக்கும் நல்ல நெடிய கூந்தலானது நரையோடு முடிக்கப்பெறும் தன்மையை அடைந்தாலும், இவளைக் கைவிடலின்றிக் காத்தலை நீயும் பேணுவாயாக!

கருத்து : 'இளமை நோக்கி இவளைக் காதலிக்கும் நீதான் முதுமையினும் இவளைக் கைவிடலின்றிக் காத்தலைப் பேணும் நிலையான மாறாக் காதலன்பினனாகத் திகழ்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : அண்ணாத்தல் – நிமிர்ந்து மேனோக்குதல். வனம் – அழகு. மணி – நீல மணி. கடுங்கள் கடுப்பு – ஏறிய கள்.

விளக்கம் : 'தளரினும் முடிப்பினும்' என்றதன்கண் தந்து சிறப்பிக்கும் உம்மையினைக் கவனிக்கவேண்டும். 'என்றும் இளமை குன்றாதாளாய் இவள் விளங்குவாளாக' என்ற வாழ்த்தோடு, 'ஒருக்கால் தளரினும் முடிப்பினும் இவளை நீத்தல் ஓம்புமதி' என்றும் உரைப்பாளாகவே கொள்ளுதல்வேண்டும். "போஒர்ப் பழையனின் வேல் வாய்த்தன்ன நின் பிழையா நன்மொழி' என்றது, குறித்த கொள்கையினை முற்றவும் நிறைவேற்றும் அவ்வேற்படை போன்று, நீயும் சொன்ன சொற்களை வாய்மையாக்குக' என்பதாம். 'நன் மொழி' என்றது. 'நின்னிற் பிரியேன்' என்றாற்போலக் கூறிய சொற்கள். 'தேறிய அவள்' என்றது, 'இவன் தன்னை மறந்து மற்றொருத்தி நாடிச் செல்வானோ' என அஞ்சிய அவள், அந்த நன்மொழிகளால் தெளிவுற்று, அவனது காதலன்பை ஏற்றனள் ஆதலால். 'பூக் கேழ் ஊரனாதலின், மலருக்கு மலர் சென்றுகளிக்கும் வண்டினத்தை ஒப்பானாகிவிடாதும், புது மலரை அணிந்தும் பிற்றைநாளில் அதனைக் களைந்து ஒதுக்கிவிட்டு வேறொன்றை நாடிச் செல்லும் தன்மைக்கு உள்ளாகியோனாகாதும், தலைவியைத் தளரினும் மூப்பினும் தாங்கிக் காத்தல் வேண்டும் என்று கூறுகின்றாளாகவும் கொள்க.

மேற்கோள் : தொல் பொருள் 39ஆம் சூத்திர உரையிடத்து, இத்துறைக்கே மேற்கோளாக இச்செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர்.

11. நிலவு விரிந்தது!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : காப்பு மிகுதிக்கண், இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) தலைவனோடு தலைவி இரவுக்குறியிற் கூடி மகிழ்ந்து இன்புற்று வருகின்ற ஒழுக்கத்தனளாக இருக்கின்றாள். அந்த ஒழுக்க நிலையை நீட்டிக்கவிடாது, அவளை வரைந்துவரும் நற்செயலிடத்தே தலைவனைச் செலுத்தல் வேண்டுமென்று நினைக்கின்றாள் தோழி. அதனால், காப்பு மிகுதியாகித் தலைவி தலைவனைச் சந்திப்பதும் இயலாதே போயின ஓர் நாளின் இரவிலே தலைவிக்குக் கூறுவாள் போலத், தலைவனும் கேட்டுத்தெளியுமாறு இவ்வாறு கூறுகின்றாள்.]

பெய்யாது வைகிய கோதை போல
மெய்சா யினை அவர் செய்தறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி யுட்கொளல்
ஒழிக மாளநின் நெஞ்சத் தானே; 5
புணரி பொருத பூமணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பாய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றாற் கான லானே.

தோழி! அவர் செய்த குறி இடையீடுபட்டதாய்த் தவறிப் போதலினாலே, சூடாது கிடந்தவொரு பூமாலையினைப் போல, நின் மெய்யும் வாட்டமுற்ற தன்மையளாக நீயும் ஆயினை. அயலாக எழுகின்ற அம்பலுரைகளைக் கருதினாயாக. 'இனித் திண்ணமாக, அவர் வரமாட்டார்' என்னும் புலவியை நீயும் உட்கொள்ளாதிருப்பாயாக. நின் நெஞ்சத்தே எழும் அந்த நினைவையே ஒழிப்பாயாக. அலைகள் வந்து பொருந்திய பொடிமணல் செறிந்திருக்கும் கடற்கரையினிடத்தே, தான் ஊர்ந்துவருகின்ற தேரின் சக்கரத்திடத்தே பட்டுச் சாவடையாவாறு நண்டுகளையும் விலக்கியவனாகப், பாகன் வாரைப்பிடித்து ஆய்ந்தபடியே தேரைச்செலுத்துமாறு, கானலிடத்தே நிலவொளியும் பரந்துள்ளது. அதனையும் காண்பாயாக.

கருத்து : 'இவற்றைக் கேட்டலுறும் தலைமகன், வரைந்து மணந்து கொண்டாலன்றித் தலைவியை அடையவியலாது என்பதனை உணர்வான்' என்பதாம்.

சொற்பொருள் : சாயினை – வாடினை. கோதை – பூமாலை. உள்ளி – நினைந்து. நொதுமலர் – அயலார். அடைகரை – கடலையடுத்த கடற்கரைப் பகுதி. வள்பு – வார்.

விளக்கம் : கோதை மணமுடைத்தேனும் சூடி நுகர்பவரைப் பெறாவிட்டால், வாடி அழகழிந்து போகும். அவ்வாறே தலைவியும், அவனை அடையாதே போய் வாடி உடலிழைத்தனள் என்கின்றாள். அலரறிவுறுத்தியும், காப்பு மிகுதி உரைத்தும், செய்குறி பிழைக்க நேர்ந்ததைச்சொல்லித் தலைவியைச் சமாதானப் படுத்துவதுபோலத் தோற்றினும், தலைவன் இவற்றை அறிந்து தலைவியை முறையாக வரைந்து வந்து மணந்து கொள்ளுதலே தக்கதென்று உரைப்பதே கருத்தாகக் கொள்ளுக. நிலவு வெளிப்பட்டதனால், தாம் வீட்டினின்றும் புறம்போதல் இயலாது என்பதும், ஆழி மருங்கின் வலவனையும் ஒம்புதற்கு ஏற்ற நிலவாதலின், அவன் வரவைச் சேரியினர் எளிதாக அறிந்துகொள்ள, அதனாற் பழியுரைகளே மிகுதிப்படும் என்பதும் குறிப்பாக உணர்த்தினாள். நண்டினையும் காக்கும் கருணை கொண்டவன், தலைவியின் துயரையும் போக்குவானாகி, அவளை விரைய வந்து மணந்துகொள்ளுதலில் மனத்தைக் செலுத்துதல் வேண்டும் என்றதும் ஆம்.

12. கண் கலங்கின!

பாடியவர் : கயமனார்.
திணை : பாலை.
துறை : தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.

[(து–வி.) தலைமகள், தலைமகனோடு உடன் போக்கிற் சென்றுவிடுவதற்கு முடிவு செய்கின்றாள். அவனும் அழைத்தேக இசைகின்றான். அவ்வேளை, தோழி, உடன் போக்கினைத் தடுத்துத் தலைவன்பால் இவ்வாறு உரைத்து மணவினைக்குத் தூண்டுகின்றாள்.]

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசம் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி யியக்கம் வெளில்முதன் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் 5

வரிபுனை பந்தொடு வை இய செல்வோள்
'இவை காண்தோறும் நோவார் மாதோ
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என
நும்மொடு வரவுதான் அயரவும்
தன்வரைத் தன்றியும் கலுழ்ந்தன கண்ணே. 10

நிறைசூல் கொண்ட மகளிரது வயிற்றைப் போலத் தோன்றுவதும், விளாம்பழத்தின் மணம் கமழ்ந்துகொண்டிருப்பதுமான தயிர்த்தாழியில், கயிறு ஆடுதலானே தேய்வு கொண்ட தண்டினையுடைய மத்தினையிட்டு வெண்ணெய் தோன்றக் கடைதலால், தறியடியினின்றும் முழக்கம் எழுந்து கொண்டிருக்கின்ற தன்மையினையுடையது, இரவு முற்றவும் தங்கியிருந்த இருள் தீர்கின்றதான விடியற்காலம். அப்பொழுதிலே. தன் மெய்யினைப் பிறர் காணாவாறு மறைத்துக்கொண்டு, தன் காலிடத்தே அணிந்துள்ள பருக்கைக் கற்களிடப்பெற்ற சிலம்புகளைக் கழற்றினாள். பலவாக மாட்சிமைப்பட்ட வரிகளால் புனையப்பட்டுள்ள தன் பந்தினோடு, அதனை ஓரிடத்தே வைப்பதற்காகவும் சென்றாள். சென்றவள் 'இவற்றைத் காணுந்தோறும் ஆயமகளிர் எல்லாரும் வருந்துவார்களே? அவர்கள் பெரிதும் இரங்கத்தக்கவர் அல்லரோ?' எனக் கருதினாள். அதன் பின், நும்மோடு தான் வருதலை மேற்கொள்ளவும், அவள் கண்கள் தம் அளவுக்கும் அடங்கி நில்லாவாய்க் கலங்கிக் கலுழ்ந்தன.

கருத்து : 'அவள் போக்குத் தவிர்ந்தாள்; இனி, அவளை வரைந்துகோடலே கருதத்தக்கது' என்பதாம்.

சொற்பொருள் : கமஞ்சூல் – நிறைசூல். குழிசி – தயிர்ப்பானை; தாழி. பாசம் – கயிறு. நெய் – வெண்ணெய். வெளில் – தயிர்கடைதற்குரிய தூண் நட்டிருக்கும் வெற்றிடம். அரி – உள்ளிடுபரல்.

விளக்கம் : 'விளம்பழம் கமழும்' என்பதற்கு, தாழியின் தயிர் நெடி மாறும் பொருட்டாக விளாம்பழத்தை இட்டுவைக்க, அந்த மணம் கமழும் என்றும் கொள்வர். மத்தின் தண்டிலே சுற்றிக் கடைதற்குரிய கயிறு பட்டுப்பட்டு தண்டு தேய்வுற்றதனைப் 'பாசந் தின்ற தேய்கான்' என்றனர். 'நெய் தெரி இயக்கம்' வெண்ணெய் தோன்றும் அளவுக்குக் கடைதல். 'மெய்கரந்து' எனவும், 'சிலம்பு கழீஇ' எனவும் சொன்னது, காவலிருக்கும் தாயர் அறியாமற்படிக்குச்செல்லும் பொருட்டாக, சிலம்பினைக் கழற்றிவிடுதல் மணத்திற்கு முற்படச் செய்யவேண்டியதொரு சடங்காதலின், தான் உடன்போக்கிற் செல்லத் துணிபவள் தானே கழற்றி வைத்தனள்' எனவும் கொள்ளலாம். இவ்வளவுக்கும் துணிந்த பின்னர், ஆயத்தோர் நோவர்; அளியர்' என்று போக்குத் தவிர்ந்தாள் என்றது, அவள் அதன்மேல் தன் குடிப்பெருமையை நினைத்தாளாய், அறத்தொடு நின்று, முறையாகத் தலைவனை மணவினையால் அடைந்து வாழ்தலையே நாடினாள் என்பதனாலாம்.

13. அழாதிருப்பாயாக!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : இயற்கைப் புணர்ச்சியின் பிற்றைஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி. தலைவி, மறைத்தற்குச் சொல்லியது.

[(து–வி.) தலைவியின் மேனியிடத்துத் தோன்றிய மாறுபாடுகளைக் கண்டு ஐயுற்ற தோழி, இயற்கைப் புணர்ச்சிக்குப் பிற்றை நாளிலே, தலைவியிடம் அதுபற்றிக் கேட்கின்றாள். அவள், தன் களவை மறைத்துக் கூறத், தோழியும் தான் அவளது ஒழுக்கத்தை அறிந்தமையினை மறைத்தவளாக, இப்படிக் குறிப்பாகக் கூறுகிறாள்.]

எழாஅ யாகலின் எழில்நலந் தொலைய
வழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த
பகழி யன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருந்தோ ளோயே! கொல்லன் 5
எறிபொற் பிதிரின் சிறுபல் காய
வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி
மயிலறிபு அறியா மன்னோ;
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே!

தினைப்புனத்தைக் காத்திருக்கும் குன்றவர்கள், புனத்தை மேய்ந்த விலங்கினைக் கொன்று வீழ்த்தியபின் பறித்துத் தம் கையிற்கொண்ட குருதிதோய்ந்த அம்பினைப்போல விளங்கும். செவ்வரி பரந்ததும் குளிர்ச்சி உடையதுமான கண்களையும், நன்றாகப் பெருத்த தோள்களையும் உடையவளே! கொல்லனது உலைக்கூடத்தே அடிக்கப்படும் இரும்பினின்றும் சிதறும் பொறியினைப் போலச், சிறுத்த பல காய்களையுடைய வேங்கையின் பூக்கள் உதிர்கின்ற, உயர்ந்த மலையிடத்துக் கூட்டிலிருக்கும் மயில்கள் அறிந்ததனை அறியாவண்ணம், பசிய புறத்தையுடைய கிளிகள் நெருங்கிய தினைக்கதிர்களைக் கவர்ந்துபோகின்றன. அதனைக் கண்டும், நீ அவற்றை ஓட்டுதற்கு எழுந்தாயில்லை. ஆகலின், நின் அழகிய நலமெல்லாம் கெட்டுப்போகுமாறு, அயலாரிருக்கும் இவ்விடத்தே, அழாதிருக்கும் அதனையேனும் இனிச் செய்வாயாக!

கருத்து : 'நின் களவுறவை யானும் அறிவேன்" என்பதாம்.

சொற்பொருள் : எழில் நலம் – எழிலாகிய நலமும் ஆம். நொதுமலர் – அயலார். மா – விலங்கு; தினைக் கதிரைக் கவருவதற்கு வரும் பன்றியும் யானையும் முதலாயின. பொன் – இரும்பு. பிதிர் – பொறி. கட்சி – கூடு; தங்குமிடம். பயிர் குரல் – நெருங்கிய தினைக்கதிர்கள்.

விளக்கம் : அழுதால் அயலார் களவுறவை அறியவும், அதனால் ஊரலர் மிகவும் நேருமாதலின், அழாஅல்' என்றனள். 'நொதுமலர்' என்றது. அயலிலாட்டியாரான பிறரை. 'மாவீழ்த்துப் பறித்த பகழி' குருதிக் கறையினாலே நிறம் பெற்றுத் தோன்றும்; அத் தன்மையாகச் செந்நிறம் பெற்றன கண்கள் என்றனள். 'அழா அதீமோ' என்றது, அழுதால் பிறர் அறிந்து இல்லத்தாரிடம் கூறுதலால், அவர் இனித் தினைப்புனம் செல்லவேண்டா என்றனராயின், நின் காதலனைச் சந்திப்பதும் இனி இயலாதுபோம் என்றதாம். மறைத்துக் கூறுதல், 'சுனையாடியதாலும் பொழிற்கண் விளையாட்டயர்தலாலும் கண்கள் சிவந்தன' என்பது போலக் கூறுதல். காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழிபோன்ற கண்' என்றது. 'கானவன் ஒருவனை நினக்கு ஆட்படுத்திக் கொண்டதாற் சிவந்த கண்' என்றதுமாம்.

இறைச்சி : வேங்கை மலர் உதிர, ஓங்கும் மலையிடத்துக் கூட்டிலிருக்கும் மயில், கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து செல்லுதலை அறியும்; அவை அறியா எனக் கிளிகள் தினைக் கதிர்களைக் கவர்ந்து செல்லும் என்றனள். அவ்வாறே, பரணிடத்திருக்கும் தான் அறியவில்லை எனக் கருதித் தலைவன் தலைவியைக் களவிற்கூடிச் சென்றனன் எனினும், தான் அதனை நன்கு அறிந்திருத்தலை உணர்த்துகின்றனள்.

14. நட்டனர் நல்குவர்!

பாடியவர் : மாமூலனார்.
திணை : பாலை.
துறை : இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.

சிறப்பு : புல்லி, குட்டுவன், செம்பியன் ஆகியோரைப்பற்றிய செய்திகள்.

[(து.வி.) தலைவனின் பிரிவினைப் பொறாத தலைவி, துயருற்றுப் புலம்புகிறாள். அதனைக் கேட்ட தோழி. அவளைத் தேற்றுவாளாய்த் தலைவனை 'அன்பிலன்' எனப்பழிக்கின்றாள். அதனைப் பொறாத தலைவி, தலைவனது சால்பினைக் கூறுதலாக அமைந்தது இச்செய்யுள்.]

தொல்கவின் தொலையத் தோள்நலம் சாஅய்
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்;
நட்டனர் வாழி! தோழி ! குட்டுவன்
அகப்பா அழிய நூறிச் செம்பியன்
பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது
அலர்எழச் சென்றன ராயினும்—மலர்கவிழ்ந்து 5

மாமடல் அவிழ்ந்த காந்தளம் சாரல்,
இனம்சால் வயக்களிறு பாந்தட் பட்டெனத்
துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல்
நெடுவரை விடரகத்து இயம்பும்
கடுமான் புல்லிய காடிறந் தோரே. 10

தோழீ! மலர் தலைகவிழ்ந்து, பெரிதான மடல்கள் விரிந்த காந்தட் பூக்களை உடையது மலைச்சாரல். அதனிடத்தே, தன் இனத்திற் சால்புடையதான வலிய களிறொன்று, பாம்பின் வாயிடத்தேபட்டது. அதுகண்டு, தளராத துயரத்தோடு அச்சமுற்றுக் கதறுகின்ற அதன்பிடியின் பேரொலியானது, நீண்ட மலையிடத்துள்ள பிளப்புக்களிடத்தே சென்று எதிரொலித்தபடியே இருக்கும். அத்தன்மை கொண்டதும், கடிதாகச் செல்லும் குதிரையினையுடைய 'புல்லி' என்பானுக்கு உரியதுமாகிய வேங்கடமலைக் காட்டினைக் கடந்து, அதன் வடபாற் சென்றுள்ளவர் நம் காதலர். அவர், என் தோள் நலமனைத்தும் அழிந்துபோய், என் பழைய கவினும் நீங்கிப்போக, எனக்கு அருளாராய் என்னைக் கைவிட்டனர். அங்ஙனம் அவர் கைவிட்டனராகிக், குட்டுவனது அகப்பா என்னும் மதிலானது ஒருங்கே அழியும்படியாக இடித்தழித்து அற்றைப் பகற்போதிலேயே அந்நகரைத் தீயிட்டுக் கொளுத்திய சோழன்செய்த போரின் கடுமையைக் காட்டினும், மிகப்பெரிதான பழிச்சொல் உண்டாகுமாறு நம்மைப்பிரிந்து சென்றனர். என்றாலும், நம்மை நட்புச் செய்தாராகிய அவர், குறித்த பருவத்தே தவறாது வந்தனராய் நமக்குத் தலையளி செய்வார். ஆதலின், அவர் நீடூழி வாழ்வாராக!

கருத்து : 'அவரைப் பழித்து உரையாதேயிரு; அவர் தவறாது வருவர்; அதுவரை ஆற்றியிருப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : தொல் கவின் – பழையதாகிய கவின்; குட்டுவன் – சேரர்களுள் ஒரு குடும்பத்தான். அகப்பா – கழுமலக்கோட்டை. செம்பியன் – சோழன்; கிள்ளிவளவன்; ஞாட்பு – போர். 'இனம் சால் வயக்களிறு என்பதற்கு, ஞால்வாய்க் களிறு எனவும் வேறுபாடம் கொள்வர். துஞ்சாத் துயரம் – தளராத் துயரம். புல்லி – கள்வர் கோமானாகிய புல்லி.

விளக்கம் : ஊர் தீப்பட்ட காலை எழுந்த அலராரவாரத்தினுங் காட்டில், பிரிவால் சேரியிடை எழுந்த அலர் பெரிதாயிருந்தது என்கின்றாள். தானுற்ற காமநோயது கொடுமை மிகுதியையும், அதனால் ஊரகத்தெழுந்த பழியது மிகுதியையும் இவ்வாறு கூறுகின்றாள். 'நல்கார் நீத்தனர் ஆயினும், நட்டனர் நல்குவர்" என்று உரைத்தது தனது கற்புமேம்பாட்டினைக் காட்டிக் கூறியதாகும்.

இறைச்சி : 'களிறு பாம்பின் வாய்ப்பட அஞ்சிய பிடியினது பூசல் மலைப்பிளப்பெல்லாம் சென்று எதிரொலிக்குமாறு போலத், தலைவன் பிரியத் தான்கொண்ட துயர மிகுதியினால் எழுந்த ஊரலர், சேரியிடமெல்லாம் சென்று பரவினும் பரவுக' என்கின்றனள்.

15. நாணும் விட்டேம்!

பாடியவர் : பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை : நெய்தல்.
துறை : வரைவு நீட்டித்த வழித் தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.

[(து–வி.) களவிலே தலைவியைக் கூடியின்புற்ற தலைவன், அவளை வரைந்து மணந்து கொள்வதாகக் கூறிப்பிரிந்தான். அவன் காலத்தை நீட்டித்துக் கொண்டேபோகத் தலைவி பெரிதும் நலிவுற்றாள். ஊரலரும் மிகுதியாயிற்று. இவற்றைக் கூறித் தலைவனைத் தலைவியை விரைந்து மணந்து கொள்வதற்கான முயற்சிகளிலே ஈடுபடுத்துவதற்குத் தோழி முற்படுகின்றாள்.]

முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்,
நுணங்குதுகில் நுடக் கம்போலக் கணம்கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன ஈலம்புதிது உண்டு
நீபுணர்ந் தனையேம் அன்மையின், 5
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசில் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட் டாங்கு.
சேணும் -எம்மொடு வந்த
நாணும் விட்டேம்! அலர்கவிவ் வூரே! 10

ஆரவாரிக்கும் அலைகள் கொணர்ந்து கொழித்த பெரிதான மணல் மேடானது, நுணங்குந்துகிலினது நுடக்கத்தைப்போல மிகுதிப்பட்டுத் தோன்றுமாறு, ஊதைக்காற்றானது அதனை எடுத்துத் தூற்றாநிற்கும் நீர்வளமிக்க வலிய கடற்கரைப் பகுதிக்குத் தலைவனே! தாமரை மலரைப்போலும் எம் தலைவியினது புதுநலத்தை உண்டு, நின்னாற் கூடி இன்புறப்பட்டேமாக, யாமும் இல்லாதேம். அங்ஙனமாக இல்லாமையினாலேயே, நினக்கு உடம்படுதலையுடைய தான எம் நெஞ்சமானது தாங்கும் அளவுக்குத் துயரைத் தாங்கினேம். குற்றமற்ற கற்பினையுடைய இளையாள் ஒருத்தி தன் குழந்தையைப் பேயானது வலிந்து எடுத்துக் கொள்ள, அதனை மீட்டற்கு இயலாளாய்க் கைவிட்டுச் சொன்றாற்போல, நெடுநாள் முதலாக எம்மோடு வளர்ந்து வந்ததான நாணத்தையும் யாம் நின்னாற் கைவிட்டேம். இனி, இவ்வூரிடத்தே அலரும் எழுவதாக!

கருத்து : ஊரலர் எழுதலால் இனித் தலைவியை மணந்து வாழ்தலே செயற்குரிய பண்பாகும்' என்பதாம்.

சொற்பொருள் : மூரி – பெரிய. நுணங்குதல் – வளைதல்; மணல் மேட்டினின்றும் எழுகின்ற காற்று மென்மணலை எடுத்துச் செல்லும்போது அலையலையாகத் தோற்றும். அந்தக் காட்சியை, நுணங்கு துகில் நுடக்கம்போல என்றனர். கணம் கொள – மிகுதிப்பட. ஊதை –வாடைக்காற்று. உரவு – வலிமை நலம் – பெண்மை நலம். சேணும் – நெடுங்காலத்தும், விளக்கம் : "நீ புணர்ந்தனையேம் யாம் ஆயின், நினக்கு எம்பால் அன்பின்மை தோன்றாது; எம்மைக் குறித்து அலரெழும் இக்கட்டிலிருந்து எம்மை விடுவிக்கக் கருதினாயாய் வரைந்து கொள்ளலில் முனைவாய். ஆயின், நீயோ அவ்வாறு கருதினாயல்லை" என்று, அலனைப் பழிக்கின்றாள் தோழி. 'அன்பை மறந்த நின்னை உறவு கொண்டதன் பயன், உடனிருந்த நாணும் இதுகாலை நின்னாலே அகன்றது" எனவும் வருத்தத்துடன் கூறுகின்றாள்.

உள்ளுறை : 'கடல் கொழித்து ஒதுக்கிய மணல் மேட்டினைக் காற்று அள்ளித் தூற்றி அலைக்கழிக்குமாறு போல, பெற்றோர் வளர்த்துப் பேணிய தலைவியின் பெண்மையை நின்னுறவு இதுகாலை அள்ளித் தூற்றி அலைக்கழிக்கும் செயலைச் செய்துவருகின்றது என்பதாம். அது நீங்குதற்கு வழியாவது, முறையாக மணந்து கோடல் ஒன்றே என்பதுமாம்.

பிறபாடங்கள் : 'நீ புணர்ந்தனையேம்' என்பது, 'நீ உணர்ந்தனையே' எனவும்: 'பேய் வாங்க' என்பது, 'ஒய்ய வாங்க' எனவும் வழங்கும்.

16. நல்லதற்கு உரியை!

பாடியவர் : சிறைக்குடி ஆந்தையார்.
திணை : பாலை.
துறை : பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது.

[(து–வி.) தலைவியை நீங்கிச்சென்று பொருளினைத் தேடி வருதலிற் செலுத்திய தன் நெஞ்சுக்குத் தலைவியை விட்டு நீங்குதற்கு மனமில்லாத தலைவன் ஒருவன், இவ்வாறு கூறுகின்றான். கூறியவனாகத், தன் பொருளார்வத்தையும் தடைசெய்து இல்லத்தேயே இருந்து, விடுகின்றான்.]

புணரின் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும் செல்லாய் ஆயினும், நல்லதற்கு
உரியை-வாழிஎன் நெஞ்சே!—பொருளே,
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் 5
ஓடுமீன் வழியின் கெடுவ; யானே
விழுநீர் வியலகம் தூணி ஆக

எழுமாண் அளக்கும் விழுநிதி பெறினும்.
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனென்; 10
எனைய ஆகுக! வாழிய பொருளே!

எனக்கே உரிமையான என் நெஞ்சமே! நீ வாழ்வாயாக! தலைவியை விட்டு நீங்காதே கூடியிருக்கப்பெறின், பொருட்செல்வமானது வந்து அடையாது. அந்தப் பொருட் செல்வத்தினைத் தேடிவருதற்கு இவளைப் பிரிந்து போயினம் ஆனாலோ, இவளோடு கூடிப்பெறுகின்ற அந்த இன்பமானது வாயாது. இவ்விரண்டு இக்கட்டுகட்கும் இடையிலே, யாதானும் ஒன்றைத் தேர்ந்தாயாய், நீ பொருள்வயிற்செல்லினும் அன்றிச் செல்லாயாயினும், எது எனக்கு நல்லதாயிருக்குமோ அதனையே செய்வதற்கு உரியையாவாய். பொருளானது, வாடாத பூக்களையுடைய பொய்கையிடத்து நின்றும் புதுநீர் வரத்தோடு ஓடிச்செல்லும் மீனினது நெறியைப் போல, இடையிற் கெடுவதான ஓர் இயல்பினையும் உடையது. யானோ, பெருங்கடலாற் சூழப்பெற்ற இந்தப் பரந்த உலகத்தையே அளவு மரக்காலாகக் கொண்டு, ஏழு தடவைகள் அளக்கத்தக்க மாண்புடைய பெரிதான செல்வத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். கனவிய குழையினை உடையாளுடைய, மாறுபட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்கள், விருப்பமுடன் இனிதாக நோக்கும் அந்த நோக்கத்தினாலே பிளக்கப்பட்டவனாகவும் உள்ளேன். பொருள் எத்தன்மையது ஆயினும் ஆகுக! அதனைத் தேடி அடைதற்கு உரியாரிடத்தே சென்று அதுவும் வாழ்வதாக!

கருத்து : 'பொருளார்வத்தைக் கை விடுக' என்பதாம்.

சொற்பொருள் : ஓடுமீன் – செல்லும் மீன்; புதுநீர் குளத்தில் வந்து வீழக்கண்டு அதன் வழி ஏறிச்சென்று, இடைவழியில் வலைப்பட்டுச் சாகும் மீன். வியலகம் – அகன்ற நிலன். அமர்த்த – மாறுபட்ட. தூணி – அளவு கருவி: அளவு – மரக்கால்.

விளக்கம் : தானிருந்த வளமான பொய்கையை விட்டுப் புதுநீரை நாடி ஓடுகின்ற மீன். சென்றடைந்து இன்புறாமலும், இருந்த இடத்தை இழந்தும், இடையிலே துயருட்பட்டும் நலிவதுபோல, யானும் இல்லிடத்து இவளிற்பெறும் இன்பத்தை இழந்தும், குறித்த பொருளினைச் சென்று அடையாமலும், இடையாகிய பாலை வழியிற் சிக்கித் துயர்ப்படுவேன் என்கின்றான். 'கனங்குழைக்கு அமர்த்த கண்'— காதளவோடிய நெடுங்கண். 'பொருள் எனைய ஆகுக' என்றது. 'அதனை நாடும் விருப்பத்தினைக் கைவிடுக' என்று உரைத்ததுமாம். 'தூணி' – நான்கு மரக்கால் அளவுகொண்ட அளவுசால். இனிப்பொருள்தான் 'ஓடுமீன் வழியிற் கெடுவ' என்பதும் ஆம்.

பிற பாடங்கள் : "செல்லினும்' என்பது 'சேர்பினும் எனவும், 'செகுத்தனன்' என்பது 'செகுத்தனென்' எனவும் வழங்கும்.

17. உரைத்தல் உய்ந்தனன்!

பாடியவர் : நொச்சி நியமங்கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : முன்னிலைப் புறமொழியாகத் தோழிக்குச் சொல்லியது.

[(து—வி.) பகற்குறிக்கண் வந்து கூடிச்செல்லும் தலைவன் ஒருநாள் வாராதுபோகத் தலைவிக்கு வருத்தம் மிகுதியாகின்றது. பிற்றை நாளிலே, குறியிடத்திற்குத் தோழியுடன் வந்திருந்த அவள், தலைவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்பது அறிந்து, தன் தோழிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டு உணருமாறு இவ்வாறு கூறுகிறாள்.]

நாள்மழை தலைஇய நல்நெடுங் குன்றத்து
மால்கடல் திரையின் இழிதரும் அருவி
அகல்இருங் கானத்து அல்குஅணி நோக்கித்
தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல்பு
ஏந்துஎழில் மழைக்கண் கலுழ்தலின், அன்னை 5

'எவன்செய் தனையோ?நின் இலங்குஎயிறு உண்கு'என.
மெல்லிய இனிய கூறலின் வல்விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி! சாரல்,
காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி 10
தீம்தொடை நரம்பின் இமிரும்
வான்தோய் வெற்பன் மார்புஅணங்கு எனவே.

தோழி! விடியற்காலை வேளையிலே மழையானது பெய்யத் தலைப்பட்ட நன்மையினையுடைய நெடிய குன்றத்தினின்றும், கருங்கடலின் அலையினைப்போல இழிகின்ற அருவி நீரானது, அகன்று பெரிதான காட்டினிடத்தே தங்கியோடுகின்ற, அந்த அழகினை நோக்கினேன். அவரைக் கூடிய இடம் அதுவாகலின், அடக்கவும் அடக்கும் எல்லையுள் நில்லாவாய்ப் பேரழகினையுடைய குளிர்ந்த என் கண்கள் அழுதலைத் தொடங்கின. அவற்றினின்றும் நீர் பெருகி வழியலாயிற்று. அதனைக்கண்ட அன்னையும், 'எதனால் அழுகின்றனையோ? அழாதே! நின் விளங்கும் எயிற்றிடத்தே யான் முத்தங் கொள்வேன்' என, மென்மையான இனிய சொற்களை என்பாற் கூறினாள். அதனைக் கேட்டதும் மிகவிரைவாக, உயிரினும் சிறந்ததாக நாம் பாதுகாக்கும் நாணத்தையும் அறவே நான் மறந்துவிட்டேன். 'மலைச் சாரலிடத்தே காந்தட் பூவினை ஊதித் தேனுண்ட கருநிற வண்டானது, இனிதாகத் தொடுத்தலையுடைய நரம்பினைப்போல ஒலிக்கா நிற்கும் வானோங்கிய வெற்பினுக்கு உரியவனான வலைவனது மார்பினைப் பிரிந்தமையினாலே உண்டான தருத்தத்திற்கு அழுதேன்' என்று சொல்லுதற்கும் வாயெடுத்தேன். அவ்வளவில் நினைவு தெளியவும், அதனைச் சொல்லாது யானும் நேற்றுப் பிழைத்தேன்.

கருத்து : 'என் களவுறவை அன்னையும் அறிந்தமையால் இனி இப்படிப் பகலில் வந்து சந்திப்பது இயலாது; அதனால் அவரை மணந்துகொள்ளல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : நாள் மழை – விடியலிற் பெய்த மழை. மால் கடல் – கருங்கடல். அல்கல் – தங்குதல். நீர் சுழல்பு – நீரைப் பெருக்கி. எயிறு உணகு – முத்தமிடுவேன். காந்தள் – காந்தட்பூ. மணிநிறம் – கருநிறம். நரம்பு – யாழ் நரம்பு.

விளக்கம் : 'மார்பு அணங்கு' என்றது, மார்பைத் தழுவும் நினைவால் எழுந்த வருத்தத்தை. பிரிவிடத்துத்தாம் முன்னர்க் கூடியிருந்த இடத்தைக் கண்டதும், நினைவுகள் பலவும் அணியணியாக மேலெழ இப்படித் தலைவி வருந்துதல் இயல்பாகும் என்று கொள்க.

இறைச்சி : 'காந்தளை ஊதித் தேனுண்ட தும்பி, அடுத்துப் பிற பூக்களை நாடிச் செல்லாது. அதனையே சுற்றி நின்று முரலும் மலைநாடனாயிருந்தும், நம்மைக் கூடியபின், நம்மை மறந்து பிறரை நாடியவனாக, நம்மைக் கைவிட்டனனே' எனக் கூறியவளாக இரங்குகின்றனள்.

மேற்கோள் : களவு அறியப்பட்ட இடத்துத் தலைவிக்குச் சொல் நிகழ்ந்ததற்கு இச் செய்யுளை நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டுவர் (தொல். பொருள். 111 உரை.)

18. படர் அகல வருவர்!

பாடியவர் : பொய்கையார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
சிறப்பு : கணைக்கால் இரும்பொறையது போர் வென்றி.

[(து–வி.) பொருளைத் தேடி வருதலின் பொருட்டாகப் பிரிந்துசென்ற தலைவனின் நினைவினாலே, தலைவி பெரிதும் வாடி மெலிவுற்றனள். அந்த மெலிவைப் போக்குதற்குக் கருதும் அவளது தோழி, தலைவனது சொன்ன சொற் பிழையாத மாண்பைக் காட்டி இவ்வாறு கூறுகின்றாள்.]

பருவரல் நெஞ்சமொடு பல்படர் அகல
வருவர் வாழி தோழி; மூவன்
முழுவலி முள்எயிறு அழுத்திய கதவின்,
கானல் அம் தொண்டிப் பொருநன், வென்வேல்
தெறல்அருந் தானைப் பொறையன் பாசறை 5
நெஞ்சம் நடுக்குறூம் துஞ்சா மறவர்
திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக்
கடா அம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடா அநிலை ஒருகோட் டன்ன
ஒன்றிலங்கு அருவிய குன்றிறந் தோரே.

தோழீ! நீ நெடிது வாழ்வாயாக! 'மூவன்" என்பானின் நிரம்பிய வலிமையினையுடைய முட்போன்ற பற்களைப் பறித்துக் கொணர்ந்து அழுத்திவைத்த கதவினையுடையது, கடற்கரைச் சோலைக்கண்ணதான தொண்டிப் பட்டினம். அதற்குரிய தலைவனாகத் திகழ்பவன், வெற்றி வேலினையும், பகைவரால் வெல்லுதற்கு அரிதான படைப் பெருக்கினையும் உடையவனாகிய சேரமான். அவனுடைய பாசறைக் கண்ணும் வீரர்கள் யாவரும் நெஞ்சம் நடுக்கங்கொள்ள உறக்கங் கொள்ளாதவராகக் கலங்கியிருந்தனர். அவர் அனைவரும், அலையோய்ந்த கடலினைப்போல் இனிதாகக் கண்ணுறங்குமாறு, மதன் ஒழிந்ததாய்ச் சினமடங்குதலைப்பெற்றது, பாசறையைக் கலக்கிய மதங்கொண்ட போர்க்களிறு. பிறரால் தடுத்தற்கு அரிதான மறத்தன்மையை உடைய அதனது ஒற்றைக் கொம்பைப்போல, ஒன்றாக விளங்கிய அருவியை உடைய குன்றத்தைக் கடந்து சென்றோர் தம் தலைவர். அவரும், வருத்தங்கொண்ட நெஞ்சத்தோடு நீ கொண்ட பலவாகிய துன்பமும் அகன்று போகுமாறு, நின்பால் விரைந்து வருவர்.

கருத்து : 'அதுகாறும் நின் கவலையை ஆற்றியவளாக நீயும் கண்ணுறக்கம் கொள்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : பருவரல் – வருத்தம். படர் – பிரிவுத்துன்பம். 'மூவன்' ஒரு குறுநில வேந்தன். பொருநன் – தலைவன். பொறையன் – இரும்பொறை மரபினனாகிய சேரமான் கணைக்கால் இரும்பொறை. திரைதபு கடல் – அலையோய்ந்த கடல். கடா அம் – மதம்.

விளக்கம் : தோற்றாரது பற்களைப் பறித்துவந்து தம் கோட்டைக் கதவுகளிலே பதித்துவைத்த வெற்றியைக் கொண்டாடுதல் பண்டைய தமிழர் மரபாதலைச் இச்செய்யுள் காட்டுகின்றது. யானை ஒரு கோட்டினை உடையதானது போர்க்களத்திலே அதனது மற்றைய கோட்டினை இழந்ததனாலும் ஆகலாம். அதனால் மதங்கொண்டு, அது பாசறையை இரவெல்லாம் கலக்கிப் பின்னரே ஓய்ந்தது என்க.

உள்ளுறை : மறவர் இனிது கண்படுப்பத் தன் மதத்தைக் கழுவிய யானையைப்போல, நீயும் இனிது கண்படுப்ப, நின் பல்படர் அகல, நின் தலைவரும் விரைந்து வந்து நினக்கு அருளிச்செய்வர்' என்பதாம்.

பிற பாடம் : தடாஅ நிலை ஒருகோடு' என்பது, 'தடவு நிலை ஒருகோடு' எனவும் வழங்கும்.

19. அறிந்தனையாய்ச் செல்க!

[(து–வி) பகற்குறியிலே தலைவியைக் கூடியின்புற்ற பின்னர் அவ்விடம்விட்டு அகன்ற தலைவனைத் தோழி சந்தித்துத், தலைவியை விரைவிலே வரைந்து கொள்ளுதலைக் கருதுமாறு, இவ்வாறு உரைக்கின்றனள்]

இறவுப்புறத்து அன்ன பிணர்படு தடவுமுதல்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
பெருங்களிற்று மருப்பி னன்ன அரும்புமுதிர்பு

நன்மான் உளையின் வேறுபடத் தோன்றி
விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப! 5
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச்
செலீஇய சேறி ஆயின், இவளே
வருவை ஆகிய சில்நாள்
வாழா ளாதல்நற்கு அறிந்தனை சென்மே!

இறால் மீனது மேற்புறத்தைப் போன்ற சருச்சரை, பொருந்திய, பெருத்த அடிப்பாகத்தையுடையது சுறாமீன். அதன் கொம்பைப்போன்ற முட்களைக் கொண்ட இலைகளையுடையது தாழை. அதனிடத்தே, பெருங்களிற்று யானையின கொம்பினைப் போன்று விளங்கும் பூவரும்பு முதிர்ச்சியுற்றிருக்கும். நல்ல பெண்மான் தலையைச் சாய்த்து நிற்றலைப்போல, அது வேறாகத் தோன்றியதாக, விழவெடுக்கும் களத்திடத்தைப்போல எங்கணும் மணத்தைப் பரப்பியபடியும் இருக்கும். அத்தகையதும், வலிய நீரையுடையதுமான கடற்பரப்பிற்குத் தலைவனே! மிகுதியான மணிகள் கட்டியிருக்கப் பெற்றுள்ள நினது நெடிதான தேரினை, நின் பாகன் செலுத்தச் செல்லுதலாலே, நீயும் நின்னூர்க்குப் போகா நின்றனை! ஆயின், நீ மீண்டும் வருவதாகிய இடைப்பட்ட அந்தச் சில நாட்களளவும், நின் தலைவி, நின்னைப் பிரிந்த துயரத்திற்கு ஆற்றாது உயிர்வாழ மாட்டாளாதலையும் நன்றாக அறிந்தவனாகிச் செல்வாயாக!

கருத்து : நின்னைப் பிரிந்து இவள் வாழாள்' என்பதாகும்.

சொற்பொருள் : இறவு – இறாமீன். பிணர் – சருச்சரை. தடவு – பெருமை. உரவு – வலிமை

விளக்கம் : தாழை அரும்பு முதிர்ந்து சாய்ந்துவிட்டதாயின், மணம் எங்கணும் பரவ, அனைவரும் அதுகுறித்துப் பேசாநிற்பர். அவ்வாறே, உங்கள் களவு எவ்விடத்தும் பரவப் பெற்றதாகி, அலவற் பெண்டிரது வாயிடைப்பட்டு அலராகும் தன்மையதுமாயிற்று என்பதாம். புலால் நாற்றத்ததான கடற்கரைப் பாங்கை விழவுக்களம் கமழும் இடம்போலச் செய்தது தாழையரும்பினது மணம்; அவ்வாறே பழிப்பேச்சு மிகுந்த இவ்வூரிடத்தே நீ வேட்டுவரும் மணச்செய்தி பரவியதானால், எமக்கு மிக இளிதாகும் என்கின்றனள். 'வருவையாகிய சின்னாள் வாழாள் ஆதல் அறிந்தனை சென்மே' என்றது, தலைவியின் கற்புப் பாங்கினைக் கூறியதாகும்.

உள்ளுறை : 'தாழையது அரும்பு முதிர்ந்து வேறுபடத் தோன்றி விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப' என்றது, அவ்வாறே தலைவியும் தன்னில்லத்திலிருந்து வேறுபடும் நிலையினளாக, நின்னோடு மணம் பெற்று வாழும் சிறப்பினை எய்தல் வேண்டும்' என்பதாம்..

மேற்கோள் : தவைவன் பிரியக் கருதியவிடத்துத் தோழிக்குச் சொல் நிகழ்ந்ததற்கு இதனை மேற்கோளாக நச்சினார்க்கினியர் கொள்வர்–(தொல். பொரு. 114 உரை).

20. வாழிய மடந்தை !

பாடியவர் : ஓரம்போகியார்.
திணை : மருதம்.
துறை : (1) பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது: (2) வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.

((து–வி.) (1) பரத்தை உறவினால் தலைவியை மறந்து பிரிந்துறைந்த தலைவன், மீளவும் தலைவிபால் வருகின்றான். அவள், அவன் செயலைக் கூறிப் பழிக்க, அவன் 'யாரையும் அறியேன்' எனக் கூறியவனாக, அவளது சினத்தைத் தணிவிக்க முயலுகின்றான். அப்போது தலைவி, அவனுக்குச் சொல்வதாக அமைந்தது. (2) தலைவளின் பரத்தமையால் ஊடிச் சினந்திருந்த தலைவியின் ஊடலை நீக்கி, அவனோடு மீண்டும் சேர்க்கக் கருதிய தோழி, தலைவியிடத்தே சென்று சொல்வது.]

ஐய! குறுமகட் கண்டிகும்; வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ்இணர்த்
தேம்பாய் மரா அம் கமழும் கூந்தல்
துளங்கியல் அசைவரக் கலிங்கம் துயல்வரச்
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகிற் 5
பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச்
சென்றனள் — வாழிய, மடந்தை!—நுண்பல்
சுணங்கணி வுற்ற விளங்கு பூணள்
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழைப்
பழம்பிணி வைகிய தோள் இணைக் 10
குழைந்த கோதை கொடிமுயங் கலளே.

ஐயனே! ஓர் இளைய பரத்தை, தன் காதலனின் மார்பிடத்தே நேற்றிராக் கிடந்து உறங்கிய அடையாளங்களோடுஞ் செல்லக் கண்டேன். வண்டுகள் பாயப்பெற்று, வண்கடப்பம் பூக்களின் மணம் கமழ்ந்தபடியிருந்த அவளது கூந்தல், கலவிக் காலத்துத் துவட்சியோடு அவளுடைய சிறு புறத்திலே வீழ்ந்து அசைந்து கொண்டிருந்தது அவளுடைய இடையில் விளங்கிய மெல்லாடையும் தளர்ந்து அசைந்து கொண்டிருந்தது. செறிவான வளைகள் ஒலிமுழங்கக் கைகளை வீசிக்கொண்டவளாக, நீலப்பூப்போன்ற மையுண்ணும் கண்கள் சுழன்று நோக்கும் பார்வையைச் செய்ய, எம் தெருவூடே சென்றனள். விளங்கிய பூண்களுடன், நுண்ணிய பலவாகிய சுணங்குகள் அணியப் பெற்றவளாகத், தன் காதலனின் மார்பிடத்தே பெற்ற முயக்கத்திடையில் நெரிந்த சோர்கின்ற குழையையும் கொண்டிருந்தனள். பழம் பிணியாகிய காமநோய் தங்கிய இரட்டைத் தோள்களையும் உடைய வளாயிருந்தனள். குழைந்த மாலையினை அணிந்த பூங்கொடிபோன்ற அவள்தான் இன்றைக்கு அவனைத் தழுவிலள் போலும்! அற்தகையாளான ஓர் இளையோளைக் கண்டேன். பெருமானே!

கருத்து : 'நினக்கு உரியவளாகிய அவள்பாலே நீயும் இனிச் செல்க' என்பதாகும்.

சொற்பொருள் : குறுமகள் – இளையோளாகிய பரத்தை; குறுமை – இளமை. மராஅம் – வெண்கடம்பு. கலிங்கம் – மெல்லிய ஆடை. தெளிர்ப்ப – ஒலிப்ப. ஞெமிர்ந்த – நெரிந்த.

விளக்கம் : 'குறுமகள் கண்டிகும்' என்றது, அவள் தன்னைக் காட்டினும் இளமைப் பருவத்தினளாதலைச் சுட்டிக் கூறியதாம். 'மகிழ்நன்' எனத் தலைவனையே படர்க்கையிடத்து வைத்துக் கூறினள். 'வாழிய மடந்தை' என வாழ்த்தியது. 'என்னைப் போலப் பிரிவால் வருத்தமுறாது, அவளாயினும் நின்னோடும் பிரியாத இன்பவாழ்வைப் பெறுவாளாக' என்றதாம்.

இரண்டாவது துறை : தோழி சொல்வதாகக் கொள்ளும்போது, 'இளம் பரத்தையின்பாற் கொண்ட காமங் காரணமாகத் தலைவன் தன்னைப் பிரிந்தான் என்று ஊடிய தலைவியிடத்தே, அவளாற் குறிப்பிடப்பெற்ற பரத்தை காமநுகர்வுக்கு ஏலாத சிறுமி என்று கூறி, அவளது ஊடலைத் தீர்த்துத் தலைவனுடன் கூட்டுவிக்கின்றாள் என்று கொள்க.

21. காட்டுக் கோழி!

பாடியவர் : மருதனிள நாகனார்.
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

[(து–வி.) அரசவினையை முடித்தற் பொருட்டகச் சென்றிருந்தான் தலைவன். அவ்வினையை முடித்த பின்னர் தன் நாட்டிற்குத் தேர்மீதமர்ந்தவனாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றான். காட்டுவழியாக வரும்போது, அவன் தன் பாகனுக்குச் சொலுவதுபோல அமைந்த செய்யுள் இது.]

விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டுஅமர் நடையர் மென்மெல வருக!
தீண்டா வைமுள் தீண்டிநாம் செலற்கு
ஏமதி வலவ, தேரே! உதுக்காண் 5
உருக்குறு நறுநெய் பால்விதிர்ந் தன்ன
அரிக்குரல் மிடற்ற அம்நுண் பல்பொறிக்
காமறு தகைய கான வாரணம்
பெயல்நீர் போகிய வியல்நெடும் புறவிற்
புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி 10
நாள் இரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!

வலவனே! நம் படைமறவர், நம்மொடும் விரைவாக மிகுதியும் நடந்து வருதலினாலே பெரிதும் வருத்தமுற்றனர். அவர்கள், தம் அரைக்கண் செறித்துள்ள கச்சையின் கட்டை அவிழ்த்து, இடையிடையே தங்கி இளைப்பாறிக்கொண்டு, மெல்ல மெல்லத் தத்தம் விருப்பம் போன்று நடந்தவராக வருவாராக! உருக்குதல் பொருந்திய நறுமணமிக்க நெய்யிடத்தே, பாலைச் சிதறித் தெளித்தாற்போலத் தோன்றும் அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளைக் கொண்டதும், கடைகின்ற குரலை எழுப்புவதுமான மிடற்றையுடையது. காண்பார்க்கு விருப்பந் தருவதான காட்டுக்கோழியின் சேவல். அது, பெயலால் வீழ்ந்த மழை நீரானது போகிய அகன்ற நெடிய காட்டினிடத்தே, புலராத ஈரமணலை நன்றாகப் பறிக்கின்றது. நாட்காலையிலே தனக்குரிய இரையான நாங்கூழைக் கவர்தலும், அதனைக் கொன்று தன் பேடைக்கு ஊட்டுதற்கு நினைந்ததாய், அதனை நோக்குகின்றது. அந்தப் பெருமைத்தகுதி விளங்குகின்ற அதன் நிலையினை அதோ பாராய்! ஆகலின், நாமும் விரைந்து நம் காதலிபாற் செல்லுவதற்கு வாய்ப்பாக, இதுகாறும் தீண்டாத கூரிய தாற்றுமுள்ளினாலே குதிரைகளைத் தீண்டித், தேரினை நீயும் விரையச் செலுத்துவாயாக!

கருத்து : 'தலைவியை விரையச் சென்று அடைதற்குத் தேரினை இன்னமும் விரையச் செலுத்துக' என்றதாம்.

சொற்பொருள் : பரி – செலவு. வீங்குசெலல் – மிக்க செலவு; நெடுந்தொலைவு கடந்த செலவு. அரிக்குரல் – கடைதற்குரல். விதிர்த்தல் – தெளித்தல்; சிதறல். மலிர – நன்றாக விளங்க. கெண்டி – பறித்து. தகுநிலை – தகை கொண்ட நிலை

விளக்கம் : 'ஏமதி வலவ தேரே என்றமையின், தலைவன், படைத்தலைமை பூண்டோனாகி, வேந்து வினைமேற் சென்ற தகுதியுடையான் என்பது காணப்படும். ‘பெயனீர் போகிய புறவு' என்றது, கார்ப்பருவத்தின் வரவினைக் கண்டு கூறியதாகும். 'தீண்டா வை முள்' என்றது, 'தீண்டாது தானே விரையச் செல்லும் இயல்பினவான குதிரைகள் அவை' என்றற்காம்.

'வேண்டமர் நடையர் மென்மெல வருக' என்பதனுள், 'விரும்பியவண்ணம் அமர்ந்த நடையினராய்' என வருவதைக் கவனிக்கவேண்டும். அவருள்ளும் விரைந்து சென்று தம் தலைவியரை இன்புறுத்தலை நாடுவார் இருந்தனரெனின் அன்னார் தம் விருப்பம்போலவே விரைந்து செலவைத் தொடர்க; அங்ஙனம் நாடாதார், தாம் விரும்பும் வண்ணம் மென்மெல நடந்தனராய் வருக" என்கின்றதாகவே கொள்க. இது தலைவனின் பெருந்தகைமையினைக் காட்டுவதுமாகும்.

உள்ளுறை : 'கானவாரணம், நாளிரை கவர மாட்டித்தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே உதுக்காண்' என்றனன். அவ்வாறே, தானும் தன் தலைவியை அடைந்து அவளுக்குத் தலையளிசெய்து இன்புறுத்தலை விரும்பிய காதல் தன்மையை இது அறிவுறுத்தியதாம்.

22. வந்தனன் வாழி!

பாடியவர் :........
திணை : குறிஞ்சி.
துறை : வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.

[(து–வி.) வரைந்து கொள்வேன்' எனக் கூறிப்பிரிந்த தலைவன், குறித்த காலத்து மீண்டும் வாராமையினாலே. தலைவி பெரிதும் வாட்டமுற்றிருந்தனள். அவன் சின்னாட் சென்று, வரைந்து வந்தானாதலைக் கண்ட தோழி, தலைவியிடம் சென்று இவ்வாறு அவன் வரவைக் கூறுகின்றனள்.]

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்
திரை அணற் கொடுங்கவுள் நிறைய முக்கி, 5
வான்பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
கைஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன்; வாழி—தோழி!—உலகம்
கயம்கண் அற்ற பைது அறு காலைப்
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே.
10

தோழி! மலைப்பக்கத்திலேயுள்ள பசிய தினைப் பயிரினைக் குன்றத்துக் கொடிச்சியர்கள் காத்திருப்பர். அவ்விடத்தே முற்படப் பறிந்து முற்றிய பெரிதான கதிரொன்றை, ஒரு மந்தியானது வந்து கவர்ந்துகொண்டது. பாயும் தொழிலன்றிப் பிறவற்றைக் கல்லாத தன் கடுவனோடு, அது நல்ல மலையின் மீதும் சென்று ஏறிக்கொண்டது. தன் உள்ளங்கை நிறையுமளவுக்குத் தினையைக் கயக்கித் தன்னுடைய திரைத்த அணலையுடைய வளைந்த கவுள் நிறையுமாறு, அது தன் வாயிலிட்டுக் கொண்டது அவ்வேளை வான்பெயலைத் தொடங்க, அதனாலே நனைந்த புறத்தைக் கொண்டதாய், அது அதன்பின் குந்தியபடியே அமர்ந்திருந்தது. நோன்புடையோர். தம் கையிடத்தே உணவைப்பெற்று உண்ணுதற்குக் குந்தி இருந்தாற்போல். அதுவும் அவ்வேளை தோன்றா நிற்கும். அத்தகைய நாடனாகிய நம் தலைவனும், இவ்வேளையிலே நம்பால் வந்தனன். உலகத்துக் குளங்கள் எல்லாம் நீர் வற்றிப்போனதனால் ஈரமற்றுப் போயிருந்த கோடைக் காலத்திலே. சூலோடும் வாடிப்போயிருந்த நெற்பயிருக்கு, நள்ளென்னும் ஒலியைக் கொண்டதான இரவின் நடுயாமத்திலே கோடை மழையானது பெய்தாற்போல. நம் தலைவனும் நம் வெம்மை தீர்க்க நம்பால் வந்தனன். அவன் வாழ்வானாக!

கருத்து : 'நீயும் இனி இன்பவாழ்வில் திளைப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : ஞிெமிடி–கயக்கி; நிமிண்டி. அணல்–தாடி, கவுள்–மோவாய் முக்கி–நிறையத் தின்று. நோன்பியர்–நோன்பு பூண்டோர்; விரத யாக்கையர். இவர் தம் கையிடத்து இடப்பெறும் பிச்சையினை மட்டுமே உண்டு, தம் நினைவை ஆன்ம உயர்ச்சியின்கண் செலுத்தியிருப்போர்.

விளக்கம் : முந்துவிளை பெருங்குரல்' என்றதால், 'தினை விளைந்து முற்றிய பின்னர் வதுவை கூடும் காலம் வரும்' என்று கூறினாளாம். 'வான் பெயல் நனைந்த புறத்த' என்றதனால், குறித்த கார்காலத்தின் வரவும் வந்தது என்றனள்.

உள்ளுறை : 'மந்தி கடுவனோடு நல்வரை ஏறித்னைக் கதிரைத் தின்றபடி இன்புற்றிருக்கும் நாடன்' என்றனள். அவ்வாறே அவனோடு வதுவைபெற்றுச் சென்று இல்லறமாற்றி இன்பத்திலே திளைப்பாள் தலைவியும் என்கின்றனளாம். 'கயம் கண்அற்ற பைதறுகாலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கு, அவனைப் பிரிதலாலே மெலிவுற்ற நின் வாட்டமனைத்தும் தீருமாறு, அவனும் வந்து அருளினான்' என்பதாம்.

மேற்கோள் : இதனை மேற்கோள் காட்டும் நச்சினார்க்கினியர், 'இதனுள் தினைவிளைகாலம் வதுவைக் காலமாயினும் வம்ப மாரி இடையிடுதலன்றித் தான் கூறிய வரைவு பொய்த்தனரேனும், இன்று மெய்யாகவே வந்தனர் என்றாள்' எனக் கூறுவர் (தொல். பொருள். சூ. 114 உரை).

வேறு பாடம் : 'கைபூண் இருக்கையின்' என்பது பாடமாயின் குளிரால் நடுங்கிய மந்தி தன் கைகளைப் பிணைத்தபடி கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நிலை; இது நோன்பியர் இருக்கும் நிலைபோல்வ தென்க. 'தையூண் இருக்கையின்' என்பதும் பாடம்.

23. கரப்பு அரிய!

பாடியவர் : கணக்காயனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.

[(து–வி.) தலைமகன் விரைய வந்து வரைந்து தன்னை மணந்து கொள்வான் என்று எதிர்பார்த்தாள் தலைவி. அவன் களவுறவிலேயே நீட்டித்து ஒழுகி வகுகின்றதைக் கண்டதும், தலைவியது ஆற்றாமை மிகுதியாகின்றது. அதனைக் கண்ட தோழி, தலைவனிடத்தே இவ்வாறு கூறுகின்றனள் ]

தொடிபழி மறைத்தலின் தோள் உய்ந் தனவே;
வடிக்கொள் கூழை ஆயமோடு ஆடலின்;
இடிப்பு மெய்யதுஒன் றுடைத்தே; கடிக்கொள
அன்னை காக்கும் தொல்நலம் சிதையக்
காண்தொறும் கலுழ்தல் அன்றியும், ஈண்டுநீர் 5
முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறுபா சடைய செப்புஊர் நெய்தல்
தெண்நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்புஅரி யவ்வே!

பெருமானே! இவளது தோள் வளைகள் பழிக்கு அஞ்சியவாய்த் தாம் கழன்று வீழாதாய் இவளது வருத்தத்தை மறைக்கின்றன. அப்படி மறைத்தலினாலே, இவளுடைய தோள்களும் தாம் மெலியாவாய்ப் பிழைத்தன. வாரி முடிக்கப்பெற்ற கூந்தலையுடைய இவள் தன் ஆயத்தாரோடும் விளையாட்டயர்கின்றாள். அப்படி விளையாட்டயர்தலினாலே, இவள் மேனியிடத்தே மெலிவு தோன்றுகின்ற ஒரு செயலையும் உடைத்தாயிற்று. காவல் மிகுதிப்பட, அன்னையானவள் பேணிக் காக்கும் இவளது பழைய நலமனைத்தும் சிதைந்து போயின. அவற்றைக் காணுந்தோறும், இவள் கண்கள் அழுதலைச் செய்கின்றன. அல்லாமலும், நெருங்கிய நீர் மிக்கதும், முத்துச் சிப்பிகள் படுகின்ற கடற்பரப்பினை உடையதுமான கொற்கைப் பட்டினத்துக் கடலின் முன்னுள்ள கடற்றுறையிடத்தே, சிறிதான பசிய இலைகளையுடைய செப்பம் அமைந்த நெய்தலது, தெளிந்த நீர்மையினையுடைய மலரினைப் போன்றவான இவளது கண்களும், அழுதலால் அழகு தொலைந்தவாயின. இனி, இவள் தன் காமத்தைப் பிறருக்கு ஒளிப்பது என்பதும் அரியதாம்!

கருத்து : 'ஆதலினாலே, விரைந்து இவளை வரைந்து வந்து மணந்து கொள்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : வடிக்கொள் கூழை – வாரி முடித்தலையுடைய தலைமயிர். இடிப்பு – இடித்தல்: மெலிவும் ஆம் கடி–காவல். செப்பு–செம்மை தெண் நீர்–தெளிந்த நீர்மை; செப்பம்.

விளக்கம் : 'தோள் உய்ந்தன' வென்றது, 'பிறர் கூறும் பழிச்சொற்களினின்று' என்று கொள்க. மேனியின் மெலிவு உண்மையாயினும், அது தோழியரோடு விளையாட்டயர்தலினாலே உண்டாயிற்றெனப் பிறர் கருதிப் பழித்தலிலர் ஆயினர். 'இவற்றை அறிந்த தலைவி கண்கலங்கியவளாகத் துயருற்று நலிகின்றனள்: அதனை மறைத்தல் இனி அரிது’ என்பதாம். ஆகவே 'இனிக் களவும் வெளிப்படும்; அலருரையும் பெருகும்; அதனைப் போக்குதற்கு, அவனை மணந்து இன்புறுத்துதலை நீயும் விரைய மேற்கொள்வையாக' என்பதாம். 'ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை' என்றது, நும்மிருவரது வதுவையினாலே இவளது தமரும் இவ்வூரும் பெரிதும் சிறப்படையும் என்பதாம்.

24. நன்று செய்தனை!

பாடியவர் : கணக்காயனார்.
திணை : பாலை.
துறை : பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது.

[(து–வி.) பொருளைத் தேடி வருதலைக் கருதித் தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் செல்லற்கு முற்படுகின்றான் தலைவன். 'அதனால், தலைவி கொள்ளும் துயரமிகுதியைத் தோழி அறியாளல்லள். என்றாலும். தலைவன் செல்லுதலே ஆண்மைக் கடனாமாறும் அறிந்தவளாதலின், அவன் போவதனை ஏற்று, அதற்குத் தானும் உடன்படுகின்றாள். அதனை அறிந்த தலைவி, தன் தோழியிடத்தே, தன் கற்புச் செவ்வி தோன்ற உவப்புடன் இவ்வாறு கூறுகின்றாள்.]

'பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டுமூக்கு இறுபு
கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்றுநாட்டு ஆர்இடைச் 5
சேறும், நாம்'எனச் சொல்லச் சேயிழை!
'நன்று' எனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே!
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர் ஆடவர்; அது அதன் பண்பே.

செவ்விதான அணிகளை உடையாய்! 'நிலம் பிளவுபட்டுப் போமாறு இறங்கியுள்ள வேரினையும், பெரிதானகிளைகளையும், உடும்புகள் பொருந்தியிருத்தலைப் போலத் தோற்றும் பொரிந்த செதில்களையுடைய நெடு மரத்தினையும் கொண்டு விளங்குவது விளாமரம். பச்சைக் கம்பளத்தை விரித்தாற் போலத் தோன்றும் பசும் பயிரினிடத்தே, ஆடுதல் ஒழிந்த பந்தானது கிடப்பதனைப் போல, அதன் கிளையினின்றும் மூக்கு இறுபட்டதாக வீழ்ந்த காய்கள் எம்மருங்கும் வீழ்ந்து பரந்துகிடக்கும். அத்தகைய விளாம்பழங்களையே தமக்கு உணவாகவுடைய மக்களைக் கொண்டதும், செல்லுதற்கு அரியதுமான பாலைவழியிலே, யாமும் செல்லா நிற்பேம்' எனத் தலைவர் நின்பாற் கூறினர். கூறுதலும், 'அத்திறம் நன்று' என விருப்புடனே நீயும் அதனை உடம்பட்டுக் கூறினை. அங்ஙனம் கூறினதனாலே, நீயும் எமக்கு நல்லதொன்றையே செய்தனை யாவாய் ஆடவர்கள் வினைமேற்கொண்ட உள்ளத்தினரே யாவர்; அவர் பொருளீட்டுதலின் பொருட்டாகத் தம் இல்லினின்று நீங்கியும் போவர்; அங்ஙனம் போதற்காலத்திலே, அதனை மறுத்துக் கூறாதே உடன்பட்டு நிற்றலே, அச் செயல் வெற்றியுறுதற்குரிய பண்பாகும்.

கருத்து : 'அவனைப் பிரிந்து ஆற்றியிருப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : வெள்ளில் – விளாமரம். ஆட்டு – விளையாட்டு. கம்பலம் – கம்பளம்; விரிப்பு. புரிதல் – விரும்புதல்.

விளக்கம் : விளாமரத்தின் பொரிந்து தோன்றும் காட்சியை, 'உடும்புகள் பொருந்தியிருந்தாற்போல' என வருணிக்கின்றனர். 'வெள்ளில் வல்சி' யாயினும், அதுதான் பசும்பயிரிடை வீழ்ந்துகிடந்தது, அதனை எடுப்பாரற்ற நிலையிலே நாட்டின் வளம் மலிவுற்று நிலவியிருந்ததனால். 'கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்' என்றது, தம் நாட்டு நிலையாக இருக்க, அவன் செல்லும் பாலைவழி, இந்த வெள்ளிலே உணவாக அமைந்த கொடுமையுடையது எனக் கூறினளாகவும் கொள்க. 'ஆடவர் செயல்படு மனத்தர்; அவர் செய்பொருட்கு அகல்வர்' எனக் கூறுவதன் மூலம், தான், தலைவன் மீண்டுவருங்காலத்தின் எல்லைவரைக்கும் பொறுத்திருக்கும் கற்புத் திண்மையுடையவள் என்பதையும் சொல்லினாள்.

மேற்கோள் : 'வடுவறு சிறப்பின் கற்பிலே திரியாமை' க்கு தனை மேற்கோளாகக் கொண்டு, 'இது செய்தனை எனத் தலைவி உவந்து கூறியது' என்பர் நச்சினார்க்கினியர். (தொல். பொருள் சூ. 147 உரை மேற்கோள்).

25. பண்பற்ற செய்தி!

பாடியவர் : பேரிசாத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைமகளைத் தோழி குறைநயப்புக் கூறியது.

[(து–வி.) தலைவன், தோழியின் உதவியைப் பெற்றுத் தலைவியைக் கூடுதற்கு முயல்கின்றான். அவனுக்கு உதவுவதற்கு விரும்பிய தோழி, தலைவியிடத்தே சென்று, தான் அவனை விரும்பினாற்போலப் படைத்துக் கூறுகின்றாள். தோழியின் பேச்சிலே பொதிந்திருந்த கருத்தை உணர்ந்த தலைவி, தானும் தலைவனை விரும்புகின்றவளாகின்றாள்.]

அவ்வளை வெரிநின் அரக்குஈர்த்தன்ன
செவ்வரி இதழ சேண்நாறு பிடவின்
நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன்உரை கல்லின் நன்னிறம் பெறூஉம்
வளமலை நாடன் நெருநல் நம்மொடு 5
கிளைமலி சிறுதினைக் கிளிகடிந்து அசைஇச்
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்றது காதலம் தோழி!
தாதுண் வேட்கையின் போதுதெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி 10
கண்டும், கழல்தொடி வலித்தவென்
பண்பில் செய்தி நினைப்பா கின்றே!

அன்பினை உடையாளான தோழியே! அழகான சங்கினது முதுகிலே செவ்வரக்கைத் தீற்றினாற்போலத் தோன்றும், சிவந்த வரிகளைப் பொருந்திய இதழ்களையுடைய பிடவமலர்களின் மணமானது. நெடுந்தொலைவுக்கும் கமழ்ந்துகொண்டிருக்கும். அம் மலர்களிற் புகுந்து, அவற்றின் நறிய தாதுக்களிலே அளைந்தாடிய வண்டானது, பசுமை நிறத்தைக் கொண்ட பொன்னின் மாற்றை உரைத்துக் கூறுதற்குரிய உரைகல்லினது நல்ல நிறத்தைப் பெற்றிருக்கும். அத்தகைய வளத்தைக் கொண்ட நல்ல நாட்டிற்கு உரியவன் ஒரு தலைவன். அவன், நேற்றைப் பொழுதிலே நம்மோடுங் கூடியிருந்து, கிளைத்தல் மிக்க சிறுதினைப்பயிரிடத்தே வந்து படியும் கிளிகளைக் கடிந்தவனாகத் தங்கியிருந்தான். தன் குறையைச் சொல்லுதற்கேற்ற இடவாய்ப்பினைப் பெறாதவனாகி, அவ்விடம்விட்டு அவன் அகன்றும் போயினான். அவன் அங்ஙனம் பெயர்ந்ததாகிய செயலானது நமக்குத் துன்பந்தருவதன்று. தேனையுண்ணுகின்ற வேட்கையினாலே மலரது செவ்வியைத் தெரிந்து சென்று ஊதாமல், எவ்விடத்தும் சென்று விழுகின்ற வண்டினைப் போன்றவன் அவன். அவனது கெடாத அந்தக் காட்சியைக்கண்டும், என் தொடிகள் தாமே கழன்றன. கழன்ற அத்தொடிகளை மீளவும் செறித்துக் கொண்ட எனது பண்பற்ற செய்தியானது, என்னை அகலாத ஒரு நினைப்பாகவே இருக்கின்றதே!

கருத்து : 'அவன் நின்னை நாடியவன்; அவனுக்கு நீயும் அருள்தலைச் செய்வாய்' என்பதாம்.

சொற்பொருள் : அவ்வளை – அழகிதான வளை. வெரிந் – முதுகுப்புறம் அசைஇ – தங்கி.

விளக்கம் : 'பிடவினது நறுந்தாது புக்காடிய தும்பி பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் நாடன்' என்றது, 'நின்பாற் கலந்த உள்ளத்தனாகிய அவனிடத்தே. அந்தக் காமத்தாலே ஏற்பட்ட நலிவினை யானும் கண்டேன்' என்றதாம். 'தாதுண் வேட்கையின் போதுதெரிந்து ஊதா வண்டோரன்னன்' என்றது, 'தகுதிப் பாட்டின் மிக்கானாகிய அவன், அவனுக்கு ஏற்புடையள் ஆகாத என்னையும் நயக்கும் குறை பாட்டினனாயினன்' எனப் பழித்ததும் ஆம். 'அவன் கண்டார் காமுறும் பேரழகன்' என்பாள். அவனைக் கண்டதும், தன் தொடி கழன்றன என்றாள். அதனைத் தான் வலித்ததைக் கூறியது, அவனைத் தான் அடைய நினைத்ததாகிய பேதைமையைத் தடுத்துச் செய்த அறிவுச் செயலைக் கூறியதாகும். இதனால், அவன் தலைவிபால் நாட்டம் உடையவன் என்பதனையும், கண்டார் விரும்பும் கவினுடையவன் என்பதனையும், தலைவிக்கே தகுதியானவன் என்பதனையும் தோழி குறிப்பாகப் புலப்படுத்தினாள்; அவன் குறையை ஏற்றருளுமாறும் தலைவிக்குச் சொல்லுகின்றாள்' என்க.

மேற்கோள் : 'குறையநயப்பித்தல்' என்னும் துறைக்கே இச்செய்யுளை நச்சினார்க்கினியரும் மேற்கோள் காட்டினர். (தொல் பொருள். 114 உரை.)

26. துணையாகிய தவறு!

பாடியவர் : சாத்தந்தையார்.
திணை : பாலை.
துறை : தலைவி பிரிவுணர்ந்து வேறுபட்டமை சொல்லித் தோழி செலவு அழுங்குவித்தது.

[(து–வி.) ‘நீயிர் பிரிகின்றீர்' என்றதைக் கேட்டலுமே இத்தன்மையினளாக வேறுபட்ட நும் தலைவியானவள், நீயிர் வினைமுடித்து வருங்காலம் வரையினும் எங்ஙனம் ஆற்றியிருப்பாளோ? எனத் தோழி கவலையுடன் கூறுகின்றாள். இதனால், அவனது செலவைத் தடுக்க முயல்வாளாதலும் அறியப்படும்.]

நோகோ யானே நெகிழ்ந்தன வளையே
செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை
விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய்மனை ஒழியச்
சுடர்முழுது எறிப்பத் திரங்கிச் செழுங்காய். 5
முடமுதிர் பலவின் அத்தம், நும்மொடு
கெடுதுணை ஆகிய தவறோ?—வைஎயிற்றுப்
பொன்பொதிந் தன்ன சுணங்கின்
இருஞ்சூழ் ஓதி, பெருந்தோ ளாட்கே.

தலைவனே! செம்மண் சேர்த்தியவும், புள்ளியிடப்பெற்றவும், வெள்ளிய அடிப்பாகத்தை உடையவுமாகி, போன்ற உயரமும் உடையவாய், அடுக்கிய நிலையமைந்தவான, நெடிய நெற்கூடுகளிலே நிறைந்திருக்கும் நெல்லைக் கொண்டது, இவளது தாய்மனை. அதனைக் கைவிட்டு, ஆதித்தன் தன் வெம்மை முற்றவும் தாக்குமாறு எறித்தலாலே வாட்டமுற்றுச் செழுமையான காய்களைக் கொண்ட முடப்பலா மரங்களும் வாடிப்போயிருக்கும் காட்டுவழியிலே நும்மோடும் உறுதுணையாகி வந்தாளும் இவள். கூர்மையான பற்களையும், பொன் பொதிந்தாற்போல் விளங்கும் தேமற்புள்ளிகளையும், நெருங்கிய சுருமையான கூந்தலையும், பெருத்த தோள்களையும் உடையாளாகிய இவளுக்கு, நும் பிரிவைக் கேட்டலுமே, வளைகள் நெகிழ்ந்து சோர்ந்தன. இதுதான், நும்மொடு கெடுதுணையாகிய தன் தவறினாலே இவளுக்கு உண்டானதாகுமோ? அதனை எண்ணியே யான் நோகின்றேன்!

கருத்து : 'பிரியின் இவள் இறந்துபடுவாள்' என்பதாம்.

சொற்பொருள் : செவ்வி – செம்மண் பூச்சால் உண்டாகும் செந்நிறம்; அழகும் ஆம்; பிண்ட நெல் – நிறைந்த நெல். கெடுதுணை –கெடுதற்காலத்தும் உறுதுணையாக விளங்கும் சிறந்த துணை.

விளக்கம் : "பிண்ட நெல்லின் தாய் மனை" என்று தாய் வீட்டின் வளமான நிலையை உரைத்தனள். அதனை நீத்து நின்பாலுள்ள காதலினாலே, நினக்குக் கெடுதுணையாகியவள்; நின்னை நம்பியவளாக அத்தம் கடந்துவந்தவள்; அவளது செயலின் தவறோ இப்போது வளை நெகிழ்ந்தன?" எனக் கேட்கின்றாள். 'நின் பிரிவை நினைந்து அவள் மேனி தளர்ந்தது; அது குறித்து நீ வருந்தினாயில்லை; யானே நோகின்றேன் என்றாளும் ஆம்.

27. என்ன நினைத்தாளோ!

பாடியவர் : குடவாயிற் கீரத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

[(து–வி.) பகற்குறியிடத்தே தலைவிக்குத் துணையாக வந்து அவளுடனிருக்கும் தோழி, தலைவன் வந்து செவ்வி நோக்கி ஒருசார் நிற்பதறிந்து, தலைவிக்குக் கூறுவாள்போல, அவன் கேட்டுணருமாறு இப்படிக்கின்றாள்.]

நீயும் யானும், நெருநல், பூவின்
நுண்தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி
ஒழிதிரை வரித்த வெண்மணல் அடைகரைக்
கழிசூழ் கானல் ஆடியது அன்றிக்
கரந்துநாம் செய்ததுஒன்று இல்லை; உண்டுஎனின், 5
பரந்துபிறர் அறிந்தன்றும் இலரே–நன்றும்
எவன் குறித் தனள்கொல் அன்னை? கயந்தோறு
இறஆர் இனக்குருகு ஒலிப்பச் சுறவம்
கழிசேர் மருங்கின் கணைக்கால் நீடிக்
கண்போல் பூத்தமை கண்டு, 'நுண்பல 10
சிறுபா சடைய நெய்தல்
குறுமோ, சென்று' எனக் கூறா தோளே.

தோழி! நேற்றைப் பொழுதிலே நீயும் நானுமாகப் பூக்களிடத்தே படிந்து நுண்ணிய தாதிலே திளைக்கும் வண்டினங்களை ஓட்டியபடியே, ஒழிந்த அலைகள் குவித்த வெள்ளிய மணலினையடுத்த கரைப்பக்கத்தே, கழி சூழ்ந்துள்ள கானற் சோலையிடத்தே விளையாட்டயர்ந்தோம். அஃதன்றிப் பிறரை மறைத்தபடி களவாக நாம் செய்ததுதான் யாதொன்றுமில்லை. அங்ஙனமாகக் கரவாக நாம் செய்ததொன்றும் உண்டென்றால், அது வேளியே பரவி, அதனைப் பிறர் அறிந்துவைத்தனர் எனவும் எவருமிலர். பொய்கை தோறும் இறாமீனைப் பற்றித் தின்னும் கடற் பறவை இனங்கள் எழுந்து ஆரவாரிக்கச், சுறாமீனானது கழியிடத்தே சென்று சேர்ந்திருக்கின்ற அந்தப் பக்கத்திலே திரண்ட தண்டானது நீட்சியுடைத்தாகி, நுண்ணிய பலவாகிய சிறிய இலைகளையுடைய நெய்தல் நம் கண்களைப் போன்றவான மலர்களைப் பூத்திருக்கும். 'அதனைச் சென்று பறித்து வாருங்கள்' என்று நம் அன்னையும் கூறினாளல்லள் ஆதலாலே, அவள்தான் பெரிதாக எதனைக் கருதினள் போலும்?

கருத்து : 'அன்னை நும் களவுறவை அறிந்தனள்; இனி இற்செறிப்பே நிகழும்; 'ஆதலின் இவளை விரைந்து வந்து மணந்து கொள்க' என்பதாம்.

சொற்பொருள் : ஒழிதிரை – கரையிலே மோதி அழியும் அலைகள். கயம் – ஆழமான பொய்கை. கழியின் இடையேயுள்ள ஆழமிக்க இடங்களுமாம்.

விளக்கம் : 'நாளும் சென்று பறித்துச் சூடுக' என்பவளான அன்னை, இன்றுமட்டும் ஏனோ கூறினாள் அல்லள்? அதுதான் அவள் நம் களவை உணர்ந்ததனாலோ?" என்ற தாம். இதனைக் கேட்கும் தலைவன், 'இனி இவள் இற்செறிக்கப்படுவாள் உணர்ந்து, விரைவிலேயே தலைவியை மணந்து கொள்வதிலே கருத்தைச் செலுத்துவான் என்பதாம் 'நேற்றுக் கானவாடியதன்றிக் கரந்து செய்தது ஒன்றில்லை' என்றது, அன்று தலைவனைத் தலைவி சந்தித்துக் கூடியிருந்ததை மறைவாகச் சுட்டிக் கூறியதுமாகும்.

உள்ளுறை : இறவார் இனக் குருகு ஒலிப்பச் சுறவங் கழிசேர் மருங்கு' என்றது, சேரிமகளிர் தலைவனது வரவைக் கண்டு அலர் தூற்றி ஆரவாரித்தனராக, அன்னையானவள், தலைவியை இறசெறிக்க முடிவு செய்தனள் என்பதாம்.

28. கள்வர் போலக் கொடியன்!

பாடியவர் : முதுகூற்றனார்.
திணை : பாலை.
துறை : (1) பிரிவின்கண் ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது; (2) குறைநயப்பும் ஆம்.

[(து–வி.) (1) தலைமகனின் பிரிவினாலே ஆற்றாளாய் மெலிந்த தலைவிக்குத் தோழி இவ்வாறு சொல்லி ஆற்றுவிக்க முயலுதல். (2) தலைவனது குறையைப் போக்குவதற்கு இசைந்த தோழி, தலைவனின் கருத்தைக் குறிப்பாக அவளுக்கு உணர்த்தி, அவளை இசைவித்தல்.]

என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும்,
தன்கைக் கொண்டுஎன் நன்னுதல் நீவியும்,
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணிஎன இழிதரும் அருவி, பொன்னென 5
வேங்கை தாய ஓங்குமலை அடுக்கத்து
ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடுமழை கிழிக்கும் சென்னிக்
கோடுஉயர் பிறங்கல், மலைகிழ வோனே!

தோழி! நீலமணியினைப் போலும் தோற்றமுடையதாக இழியும் அருவியையுடைய, பொன்னென்னுமாறு வேங்கைப் பூந்தாது உதிர்ந்து கிடப்பதான உயர்ந்த மலைப்பக்கத்திலே, அசைகின்றதும் கழை உயர்ந்ததுமான பசிய கணுக்களையுடைய மூங்கிலானது, வானத்தே ஓடுகின்ற கார்மேகத்தைக் கிழிக்கின்ற உச்சியையுடைய கொடுமுடிகள் உயர்ந்த பிறங்குதலாகிய மலைக்கு உரியவன் தலைவன். அவன்தான், முன்னர் நம்மைத் தலையளி செய்ததான அந்த நாளிலே, என் கைகளைக் கொண்டு கண்களிலே ஒற்றிக் கொண்டும், தன் கைகளாலே என் நறிய நெற்றியைத் ஒற்றிக் தடவி விட்டும், அன்னையேபோல நமக்கு இனிமை தருவனவான சொற்கள் பலவற்றைக் கூறியும், நம்மை இன்புறுத்தினான். இந்நாளிலோ, வஞ்சத்தாற் பிறரது பொருளைக் கவர்ந்து சென்று, அவரைப் பற்றி நினையாதே போகும் கள்வரைப்போலக் கொடுந்தன்மையினனாகவும் ஆயினான்.

கருத்து : 'அவன் செயலை நினைந்து வாடி நலனழியா திருத்தலே இனிச் செய்யத்தக்கது' என்பதாம்.

சொற்பொருள் : மணி – நீலமணி. நிவந்த – ஓங்கிவளர்ந்த. கிழிக்கும் – ஊடறுத்துச் சிதைக்கும். கோடு – கொடுமுடி

விளக்கம் : தலைவனைத் தோழி இவ்வாறு 'கள்வர் போலக் கொடிய'னெனப் பழிக்கவும், அதனைப் பொறுக்காத தலைவி, அவனது சால்பையும், தான் ஆற்றியிருப்பதே கடன் என்பதையும் உளங்கொண்டாளாய் ஆற்றியிருப்பள் என்பதாம்.

குறைநயப்பெனத் துறையமைதி கொள்ளின், செய்யுள் குறிஞ்சித் திணைக்கு உரியதாகக் கொள்ளப்படும். அப்போது 'தனக்குத் தலைவனொருவன் தலையளி செய்து தன் உள்ளத்தைக் கவர்ந்து போயினான்' எனத் தோழி படைத்துக் கூறினவளாய்த், தலைவியைத் தலைவன் நாடினதையும், அவள் அவனை ஏற்றலே சால்பென்பதையும் குறிப்பாகப் புலப்படுத் தினளாகக் கொள்க.

மேற்கோள் : 'அலமரல் பெருகிய காமத்தின் மிகுதியின் கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும்' என, இச்செய்யுளைத் தலைவி கூற்றுக்கு மேற்கோளாகக் காட்டுவர் இளம்பூரணனார் (தொல். பொருள். சூ. 145, உரை). இவ்வாறு கொள்வதாயின், தலைவனது பிரிவினாலே காமநோய் மிகுதியாகத் தன்னைப்பற்றி வருத்த, அதனால் பெரிதும் நலிந்த தலைவியானவள், தன் தோழியிடத்தே, தன்னைத் தலைவன் கைவிட்டமையை இவ்வாறு கூறினளாகக்கொள்க.

29. யாங்கு வல்லுநள்?

பாடியவர் : பூதனார்.
திணை : பாலை.
துறை : மகட் போக்கிய தாய் சொல்லியது.

[(து.வி.) 'தலைவனோடு தலைவி உடன்போக்கிலே வீட்டை நீத்துப்போயினாள்' எனக்கேட்ட நற்றாய், அஃது அறத்தொடு பட்டதென உணரினும், தன் மகளது மென்மைக்கு இரங்கி ஆற்றாளாக இவ்வாறு கூறுகின்றனள்]

நின்ற வேனில் உலர்ந்த காந்தள்
அழலவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,
புலிபார்த்து உறையும் புல்லதர்ச் சிறுநெறி 5
யாங்குவல் லுநள்கொல் தானே—யான், 'தன்
வனைந்துஏந்து இளமுலை நோவகொல்!' என
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான்தன்
பேர் அமர் மழைக்கண் ஈரிய கலுழ
வெய்ய உயிர்க்கும் சாயல் 5
மைஈர் ஓதி பெருமடத் தகையே?

என் மகளை அணைத்தபடியே படுத்திருந்த யான், தொய்யில் வனைந்து பருத்த இளையதான அவளுடைய கொங்கைகள் நோவுகொள்ளுமோ' எனக் கருதினவளாக, அவளை அணைத்திருந்த என் கையைச் சிறிதே நெகிழ்த்தேன். அவ்வளவிற்கே, தான் தன்னுடைய பெரிதும் அமர்த்த குளிர்ச்சிகொண்ட கண்கள் ஈரங்கொண்டவாய்க் கலங்க, அவள் சுடுமூச்சு எறிந்தனள். மென்மையும் கருமையும் கொண்ட ஈரிய கூந்தலையும், பெரிதான மடப்பமென்னும் தகைமையையும் உடையவள் அத்தகைய என் மகள். அவள் தான், வேனிற்பருவம் ஒன்றே நிலைபெற்றதனால் காய்ந்து வாடிய காந்தட்பூக்களையும், அழலைப்போல ஒளி பரப்புகின்ற வெம்மையான தன்மையையுமுடைய நெடிதான பாலை வழியிலே, இதுகாலைச் சென்றனள். நிழலுள்ள ஓர் இடத்தையேனும் பெறாததாய்க், குட்டிகளைப் பெற்றுக் காட்டிலே காவல் காத்திருக்கும் பெண்புலியானது பசியுற்றதென்று, அதனைப் போக்கக்கருதியே ஆண்புலியானது மயங்கிய மாலைப்பொழுதிலே, வழியே வருவாரைக் கொல்லும் பொருட்டாக வழியை நோக்கியபடியே பதுங்கியிருக்கும். புல்லிய அதராகிய சிறிதான அந்நெறியிலே, அவள்தான், யாங்ஙனம் நடந்து செல்லுவதற்கும் வல்லவளாவாளோ?

கருத்து : 'அவள் நலமாகப் போய்ச் சேர்தல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : உலந்த – வாடிய, மான்ற மாலை – மயங்கிய மாலை; மயக்கம் கதிரொளிகுன்றல். அதர் – வழி. ஈரிய – ஈரத்தன்மையுடைய கான் மடிந்த – காலோய்ந்த எனினும் ஆகும்.

விளக்கம் : 'நின்ற வேனில், உலந்த காந்தள், : அழல் அவிர் நீளிடை' என்பவையெல்லாம் பாலைவழியின் கொடுமையைக் கூறுவன. 'புல்லதர்ச் சிறுநெறி என்பதனைப் பரலும் முள்ளும் நிரம்பிக் கிடப்பதான் சிறிதான வழி', எனவும் கொள்வர். 'அணைத்திருந்த தன் கையை நெகிழ்க்கவும் தலைவி கலங்கி அழுதலைத் தொடங்கினள்' என்றது, அவளது மென்மைத் தன்மையினை நினைந்து கலங்கிக் கூறியதாகும்.

இறைச்சிகள் : (1) 'பிணவு பசி கூர்ந்தெனப் புலி வழங்குநர்ச் செகீஇய வழிபார்த்து உறையும் நெறி' என்றனள்; அங்ஙனமே, தலைவனும் தன் மகளைப் பேணிக் காக்கும் பெருங் காதலனாவான் என்பதனையும், மாலைப் போதிலே வழிச்செல்லாது அவளுடன் பாதுகாவலான இடத்திலே தங்கிச் செல்வான் என்பதனையும் கருதிச் சொன்னாள் எனக் கொள்க.

(2) ஈன்று தான் மடிந்த பிணவு' என்றது. அவ்வாறே தன் மகளும் தலைவனுடன் மணந்துகூடி மக்களைப் பெற்றுச்சிறப்பாள் என்பதை நினைந்து கூறியதாம்.

30. யாது செய்வேன்?

பாடியவர் : கொற்றனார்.
திணை : மருதம்.
துறை : பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தோழி சொல்லியது.

[(து–வி.) பரத்தையருடனே உறவுபூண்டிருந்த தலைவன்,மீண்டும் தன் இல்லத்திற்கு வருகின்றான். தோழி, தலைவி ஊடியிருப்பதைக் கூற, அவன், 'யாரையும் அறியேன்' என அதனை மறுக்கின்றான். அவனுக்குத் தோழி சொல்வதாக அமைந்தது இச்செய்யுள்.]

கண்டனென் மகிழ்ந! கண்டுஎவன் செய்கோ?
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கிநின்
மார்புதலைக் கொண்ட மாண்இழை மகளிர் 5
கவல் ஏமுற்ற வெய்துவீழ் அரிப்பனி
கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன்வீழ்பு
பலர்கொள் பலகை போல
வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே! 10

தலைவனே! நின்னுடைய பாணனின் கையிடத்தாக விளங்குவது பண்பமைந்த சிறிய யாழ் ஆகும். அதுதான் அழகிய வண்டினைப்போல இம்மென்னும் ஒலியோடே இசை முழக்கும். அத்தகையதும், நீ எழுந்து வருகின்றதுமான தெருவிலே, நீ எதிர்ப்படுதலை நோக்கியபடியே, நின்னுடைய மார்பினை முன்பு தமக்கு உரிமையெனப் பற்றிக் கொண்டிருந்தவரான, மாட்சிமைப்பட்ட இழைகளை அணிந்தோரான பரத்தையர் பலரும் காத்திருந்தனர். பெருங்காற்று வீசிச் சுழற்றுதலால் துன்புற்ற காலத்துக் கடலிலே மரக்கலம் கவிழ்ந்து போனதாக, அதனாற் கலங்கியவராக ஒருங்கே கடலிடை வீழ்ந்த பலரும், ஒருங்கே பற்றிக்கொண்டு, இழுக்கும் பலகையொன்றைப் போல, நின்னைப் பலரும் கவற்சி மிகுந்ததனாலே வெப்பமுடன் வீழ்கின்ற கண்ணீர்த் துளிகளுடனே, நீ வரவும், தாந்தாம் பற்றிக் கொண்டு தத்தம்முடன் வருமாறு இழுத்தனர். அதனாற் பெரிதும் வருத்தமுற்று நின்ற நின்னுடைய நிலைமையை அன்று யானும் கண்டேன். அங்ஙனம் கண்டிருந்தும், இன்று நீ யாரையும் அறியேன்' எனக் கூறும் இதற்கு யான் யாது செய்யற் பாலேன்!

கருத்து : 'நினது நிலையை யான் அறிவேன்; அதனால் என்னை ஏமாற்ற முயலுதல் வேண்டாம்' என்பதாம்

சொற்பொருள் : பண்பு – இன்னிசை மிழற்றும் அமைதி. சீறியாழ் – சிறிய யாழ். ஏர் தரு – எழுந்தருளும். 'தெரு' என்றது, பரத்தையர் வாழும் தெருவினை. கவல் ஏமுற்ற – கவற்சி மிகுதியாதலினாலே.

விளக்கம் : தோழி தலைவனைப் பழித்துக் கூறுதலின் தலைவன் மீண்டும் சூளுரைத்துப் பொய்ம்மை பாராட்டுவதனாலே வந்துறும் கேட்டிற்கு அஞ்சிய கற்பினளாய், அவனை ஏற்றுக் கொள்வாள் தலைவி என்க. கடலில் கலங்கவிழ வீழ்ந்தோர் பலரும், அகப்பட்ட ஒரு பலகையை நாற்புறமும் பற்றிக்கொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி இழுத்து, முடிவிலே அனைவரும் நீரில் மூழ்கி அழிவர். அவ்வாறே, அப் பரத்தையரும் "நின்னைப் பற்றி உய்வதற்கு முயன்றும், இயலாதே பெருந்துயரில் ஆழ்ந்தனர்" என்பதாம். அவரைச் சென்று காத்தருள்க எனக் கூறி வாயின் மறுத்ததும் ஆம்.

31. துறையும் கசந்ததடீ!

பாடியவர் : நக்கீரனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி வன்புறை எதிர் அழிந்தது.
[(து.வி.) குறியிடத்தே தலைவன் வந்து, ஒரு சார் செவ்வி நோக்கிக் களவுறவை நாடினனாய்க் காத்து நிற்கின்றான். அவ் வேளையிலே, தோழி, தலைவியின் வருத்தத்தை மாற்றக் கருதியவளாய்த் 'தலைவன் வருவான். நீ ஆற்றியிரு' எனக் கூறுகின்றாள். அதனைக் கேட்ட தலைவி, தன் ஆற்றாமை மீதூர அதனை அழித்துக் கூறுவது இது.]

மாஇரும் பரப்பகம் துணிய நோக்கிச்
சேயிறா எறிந்த சிறுவெண் காக்கை
பாய்இரும் பனிக்கழி துழைஇப் பைங்கால்
தான்வீழ் பெடைக்குப் பயிரிடூஉ கரக்கும்
சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே; 5
பெரும்பலம் புற்ற நெஞ்சமொடு, பலநினைந்து,
யானும் இனையேன்—ஆயின், ஆனாது
வேறுபல் நாட்டில் கால்தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு 10
உலவுத்திரை ஓதம் வெரூஉம்
உரவுநீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.

தோழீ! ஒன்றோடொன்று பொருந்தாதனவும், பல்வேறு தன்மைகளைக் கொண்டவுமான பற்பல நாடுகளினின்றும், காற்றுக் கலங்களைச் செலுத்துதலினாலே, அக் கலங்களிற் சென்றுவரும் வணிகர்கள் கொண்டுதர, வந்து சேர்ந்த பண்டங்கள் பலவும் இறக்கியிடப்பட்டிருக்கும், நிலவைப் போன்ற வெண்மை கொண்ட மணற்பரப்பினிடத்தேயுள்ள நெடிதான புன்னையினது கிளையிலே, முதிர்ந்த சூலினையுடைய வெள்ளிய குருகானது தங்கியிருக்கும். கரையிடத்தே வந்து உலவுகின்ற அலைகளின் ஓசைக்கு அக்குருகும் வெருவா நிற்கும் தன்மையுடைய, வலிய நீர்ப்பரப்பினைக் கொண்ட கடற்கரை நாட்டினனான தலைவனோடு, நான் கூடி மணம் பெறாததன் முன்பாக நன்றாயிருந்தேன்.

பெரியதும், கரிய நீரைக் கொண்டதுமான கழிப்பரப்பானது நீர் தெளிந்திருந்த செவ்வியை நோக்கி, அதனிடத்தேயுள்ள சிவந்த இறாமீனைப் பற்றுவதற்குப் பாய்ந்த சிறிய வெண்காக்கை, பரவிய பெரிய குளிர்ச்சியுடைய கழியிடத்தைத் துழாவியதாய்த் தான் விரும்பும் பசிய கால்களையுடைய தன் பெடையை அழைத்துத் தான் பற்றிய இறாலை அதற்குக் கொடுத்து இன்புறும் தன்மையினையுடையதும், சிறு பூக்களைக் கொண்டதுமான ஞாழலந்துறையும் முன்பு இனிதாகவேயிருந்தது. ஆனால், இப்போதோ, அதுவும் துன்பந்தருவதாயுள்ளது. பெரிதும் வருத்தங்கொண்ட நெஞ்சத்தோடு. பலவற்றையும் நினைந்தவளாக, யானும் இத்தன்மையள் ஆயினேன்; இதனைக் காண்பாயாக!

கருத்து : 'அவனைப் பிரிந்ததனாலே எல்லாம் வெறுத்ததடீ; அவன் வருவானென்ற நம்பிக்கையும் அழிந்ததடீ' என்பதாம்.

சொற்பொருள் : வெண் காக்கை – காக்கையுள் ஒரு வகை; நீர்க்காக்கை சுடற்காக்கை என்பதும் இது. துணிய – தெளிய. பயிரிடூஉ – அழைத்து. புலம்பு – வருத்தம். கால் – காற்று. பண்ணியம் – பண்டங்கள். கடுஞ்சூல் – முதிர்ந்த சூல். சேர்ப்பன் – நெய்தல் நிலத் தலைவன்.

விளக்கம் : முன்னர்க் காக்கை இறாலைப் பிடித்துத் தன் பேடையை அழைத்து அதற்கு ஊட்டுதலைக் கண்டு, தனக்குத் தலைவன் செய்யும் தண்ணளியின் நினைவாலே இன்புற்றவள் தலைவி. அவள், இப்போது, தலைவன் தன்னை மறந்தமையினாலே வந்துற்ற நோயின் மிகுதியினாலே, அக்காட்சியைக் கண்டதும், தன்பால் அன்பற்ற அவனை நினைந்து பெரிதும் துன்புற்றனள் என்று கொள்க. 'ஆனாது பல்வேறு நாட்டில்' என்றதனால், பாண்டியர் பல்வேறு கடல் கடந்த நாடுகளிடத்தும் அரசியல் கலாசாரத் தொடர்பும் வாணிக உறவும் பெற்றிருந்தனர் என்பதும் விளங்கும்.

உள்ளுறை : 'குருகு' கடற்கரையிடத்தே வாழ்வதாயினும் தான் கொண்ட சூலின் முதிர்ச்சி காரணமாகத் தளர்ந்தமையினால், அலையோசைக்கு வெருவியதுபோலத், தலைவியும் தன் பிறந்த வீட்டிலேயே இருந்தும், தன் களவுறவின் தன்மையினாலே. அன்னையின் பேச்சைக் கேட்குந்தோறும் பெரிதும் பெரிதும் அஞ்சுவாளாயினாள் என்று கொள்க.

இறைச்சி : இறாமீனைப்பற்றிய காக்கையும் அதனைத் தான் உண்ணாதாய்த் தன் அன்புப் பேடையை அழைத்து ஊட்டுகின்ற துறையை உடையவனாயிருந்தும், தலைவன் தன் அன்புறு காதலியான தன்னை மறந்தவனாய்த் தன் வினைகளிலேயே மனஞ்செல்வான் ஆயினனே! இஃது என்னையோ?' என நொந்து புலம்புகின்றாள் தலைவி எனக்கொள்க.

32. மறுப்பதற்கு அரியது!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது.

[(து–வி.) தலைவனுக்குக் குறைநேர்ந்தாளான தோழி, தான் நயமாகப் பலபடக் கூறியும், தன் சொற்களை உணராது தலைவி மயங்குதலைக் காண்கிறாள். அதன்மேல் வெளிப்படையாகவே இவ்வாறு கூறிக் குறைநேர்கின்றாள்.]

'மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன்' என்பதுஓர் வாய்ச்சொல் தேறாய்;
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, 5
அறிவறிந்து அளவல் வேண்டும்; மறுத்தாற்கு
அரிய வாழி, தோழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது,
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே.

தோழீ! நீ வாழ்வாயாக! 'மாயவனைப் போலத் தோற்றும் கருமையான பெரிய மலைப்பக்கத்திலே, அவனுக்கு முன்னோனான, வெண்ணிறப் பலராமனைப் போன்றதாக விளங்கிய வெள்ளருவியானது இழிந்து கொண்டிருக்கும். அத்தன்மையுடைய அழகிய மலைக்கு உரியவன் தலைவன். அவன், எந்நாளும் நம்மை விரும்பியவனாகப் பெரிதும் வருந்தினனாயிருந்தான்!' இவ்வாறு கூறிய எனது ஒப்பற்ற வாய்ச்சொற்களின் உண்மையினை நீ தெளியாயாய் உள்ளனை! இனி நீயும் அவன் துன்புறுதலை நீயாகவே நேரிற்கண்டும், அதனைக் குறித்து நின்பால் என்னினும் அன்புடைய ஆயத்தாரோடும் கலந்து உசாலியும் அறியவேண்டும். அறிவுத் தெளிவினை அறிந்ததன் பின்னரே, யானும் நின்னோடு அவனைப்பற்றி அளவளாவுதல் வேண்டும். அவனது நிலையோ மறுத்துக் கூறுதற்கு அரிதான ஒரு தன்மையாகும். அறிவுசான்ற பெரியோரை நாடிச் சென்று நட்புச் செய்து அவர்பால் ஆய்ந்து ஒன்றைத் தெளிவதன்றித், தம்மை வந்து நட்பு செய்து தம்மோடு நெருக்கமுடையாரின்பால், யாருமே எதனைக் குறித்தும் ஆராயமாட்டார்கள். இதனையும் நீ அறிவாயாக!

கருத்து : 'இனி, அவனது காதலை நினக்குக் கூறுதலால் யாதும் பயனில்லை' என்பதாம்.

சொற்பொருள் : மாயோன் – வாசுதேவன். வாலியோன் – பலராமன். இவரது திருமேனி வண்ணங்கள் முறையே கருமையும் வெண்மையும் ஆகும். நாடல் – ஆராய்தல்.

விளக்கம் : 'மலைகிழவோன்' என்றாள், தலைவனின் தகுதி மேம்பாட்டை உணர்த்துதற்கு. 'அவன் நம் நயந்து என்றும் வருந்தினன்' என்றாள். அத்தகுதியுடையோனை அடைதல் தமக்கு நல்வாய்ப்பாக இருப்பவும், அதனைத் தெளியாதே அவனை வருந்தச் செய்த தலைவியது அறியாமைக்கு இரங்கியதனால், 'ஓர் வாய்ச் சொல்'–ஒப்பற்ற வாய்மையுடைய சொல்; இவ்வாறு, தான் அவனது நிலையை முற்றவும் ஆய்ந்து தெளிந்தே, அவனுக்குக் குறை நேர்ந்ததனைக் காட்டுதற்காம். 'நீயும் கண்டு' என்றது, கண்டால் நின் மனமும் தானே அவன்பாற் சென்றுவிடுகின்ற தன்மையினை அடையும்; 'அவன் அத்தகைய பெருவனப்பினன்' என்று கூறியதாம். 'நுமரொடும் எண்ணி" என்றது, தன் சொற்களை ஏற்காததற்குப் புலந்து தன்னைப் பிறளாகக் கொண்டு கூறியதாம். 'அறிவறிந்து அளவல் வேண்டும்' என்றதும், 'மறுத்தரற்கு அரிய' வென்றதும், மறுப்பின் உண்மை அன்பினனான அவன், தான் மடலேறுதலையும் செய்வான் என்னும் உறுதியினால் ஆகும். 'பெரியோர் நாடி நட்பின் அல்லது, நட்டு ஒட்டியோர் திறத்தே நாடார்' என்றது, உலகினர் ஆய்ந்து தெளியும் இயல்பினைக் கூறியதாம்.

இதனைக் கேட்கும் தலைவி, தன் தோழியின் உரையினாலே தனக்கு நன்மையே வந்து சேரும் எனத் தெளிந்தாளாய்த் தலைவனை விருப்புடன் ஏற்பாள்' என்பதாம்.

மேற்கோள் : இது 'கையுறை ஏற்பத் தலைவிக்குத் தோழி கூறியது' எனவுரைப்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ 114 உரை மேற்கோள்). பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் தோழிக்குக் கூற்று நிகழ்வதற்கு இச்செய்யுளை இளம்பூரணனார் காட்டுவர் (தொல். பொருள். சூ. 112 உரை மேற்கோள்).

33. மல்கு புனல்!

பாடியவர் : இளவேட்டனார்.
திணை : பாலை.
துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.

[(து.வி.) தலைமகன், வினை முடித்தலிற் காலம் நீட்டியானாக விரைவிலே மீண்டும் வருதலைக் கருதிய தோழி, அவன்பாற் சென்று, அவனைப் பிரிந்து வாழாத தலைவியது நிலையைக் கூறி, விரைந்து மீள்தல் வேண்டும் என்பதனை உணர்த்துகின்றாள்.]

'படுசுடர் அடைந்த பகுவாய் நெடுவரை
முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலை
புலம்புகூட் டுண்ணும் புல்லென் மன்றத்துக்
கல்லுடைப் படுவில் கலுழி தந்து
நிறைபெய லறியாக் குறைத்தூண் அல்லில் 5
துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர்
அதர்பார்த் தல்கும் அஞ்சுவரு நெறியிடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வலலுவம் கொல்லோ, மெல்லியம் நாம்?" என
விம்முறு கிளவியள் என்முகம் நோக்கி, 10
நல்லக வனமுலைக் கரைசேர்பு
மல்குபுனல் பரந்த மலர்ஏர் கண்ணே.

'பிளவுபட்ட நெடிய மலைச்சாரலிடத்தேயுள்ள வன்னிலஞ் சேர்ந்த சிறிய குடியிருப்பின் கண்ணே, மறைகின்ற ஞாயிறானது மேற்கு மலையினைச் சென்றடைந்ததும் செவ்வொளி பரவிய மாலைப்பொழுதிலே, பொலிவிழந்த ஊர்ப்பொதுவிடத்திலே. அச்சம் மிகுதியாக நிரம்பியிருக்கும் கல்லையுடைய குழிகளிடத்தேயுள்ள கலங்கல் நீரைக்கொண்டு வந்து, அதனையும் நிறையப் பெய்தலை அறியாத தன்மையராய்க் குறைந்த அளவே உண்ணும் உணவினராயிருப்போர் அங்குக் கூடியிருக்கும் மறக்குடியினர். துவர்த்த நிறத்தைக் கொண்ட ஆடையினையும், செவ்விய அம்புத் தொடையினையும் உடையவரான அவ்விடத்து மறவர்கள், இரவுப்போதிலே. வழிப்போவாரைக் கொள்ளையிடலின் பொருட்டாக, நெறியினை நோக்கியபடியே நெறியயலே பதுங்கியிருப்பார்கள். அச்சம் வருதலையுடைய அத்தகைய காட்டு வழியிடையே செல்லுதலைக் கருதுவார் நம் தலைவராய அவர். அங்ஙனமாயின், நாம்தான் அதனை மறுத்துப் பேசுவதற்கும் வல்லமை உடையேம் ஆவேமோ? நாம் மென்மைத் தன்மையினேம் அல்லேமோ!" என விம்மிய சொல்லை உடையவளாக என் முகத்தை நோக்கிக் கூறினாள் நின் தலைவி அவ் வேளையிலே, அவளுடைய மலரனைய கண்களிடத்தே நின்றும் பெருகி வழிந்த கண்ணீர்த் துளிகள், அவளுடைய நல்ல மார்பகத்தேயுள்ள அழகிய நகில்களின் எல்லைக்கண்ணேயும் சென்று அடைந்தவாய், மிகுதியான வெள்ளமாகவும் பரவி நின்றன இதனை அறிவாயாக!

கருத்து : 'நின் பிரிவைப் பற்றிக்கேட்ட பொழுதேயே துன்புற்று அழுதவள், நின்னைப் பிரிந்து நெடுநாள் உயிர் தரித்திராள்; ஆதலின், நீயும் காலத்தை நீட்டியாதே விரையச்சென்று வினைமுடித்து மீள்க' என்பதாம்.

சொற்பொருள் : படுசுடர் – மாலை ஞாயிறு. பகுவாய் நெடுவரை – பிளப்புக்களையுடைய நெடிய மலைப்பக்கம். 'புலம்பு கூட்டுண்ணும்' என்றது, 'பசியாலான வருத்தத்தைக் கூடியிருந்து உண்டபடியிருக்கும்' என்பதாம். கலுழி – கலங்கல்நீர். 'நிறைபெயல் அறியா' என்றது, அக்கலங்கல் நீர் தானும் நிறையக் குடித்தற்குப் போதாதபடி குறைவாகப் பகுத்துக் குடித்தற்கே அமைகின்ற தன்மையுடைய கோடையின் நிலைமையை. முலைக்கரை – நல்களாகிய கரையிடம்; நகில்களின் மேற்பக்கம்.

விளக்கம் : வழியின் அஞ்சுவரு தன்மையினை நினைந்தாளான தலைவி, ஆறலைத்தன்றி வாழ்தற்கியலாத வறுமையுடையராய், வழிவருவாரைக் கொள்ளையிட்டு உண்ணலையே எதிர்பார்த்திருக்கும் மறவரது கொடுந்தன்மையைக் கூறுகின்றாள். அக்காட்டு வழியூடு தலைவர் செல்லத் துணிந்த வன்கண்மையை நினைக்கவும், அவளுள்ளம் பெரிதும் கலங்குகின்றது; கண்கள் நீரைச் சொரிகின்றன. அன்பும் மென்மையுமே தன்பால் உறவு கொண்ட நாள்முதலாகத் தலைவனிடம் எழக்கண்டு இன்புற்றவள் தலைவி. தலைவன் பால் அருநெறியிற் செல்லும் துணிவும், ஆறலை கள்வர்க்கு அஞ்சாத திண்மையும், பொருட்பற்றும் மிக்கெழுதலைக் கண்டதும், அவள் பெரிதும் கலங்குகின்றாள் ஆனால் அதுவே ஆடவரது இயல்பும் தகுதியுமாதலை உணர்பவள், அவன் முடிபை ஏற்று ஆற்றியிருக்கும் கற்புத் திண்மையினையும் பெறுகின்றாள். அவள்பால் தோன்றிய இந்த உளமாற்றச் செவ்வியை இச்செய்யுள் நமக்குக் காட்டும். ஆயினும், 'பிரிவினைப் பொறுக்கலாற்றாத அவளது காதன் மிகுதியைத் தோழி நயமாக அறிவித்து. அவனை விரையத் திரும்புமாறு வற்புறுத்தும்' இனிமைச் செறிவும் விளங்கும்.

இறைச்சி : 'ஆறலை கள்வர்கள் அதர்பார்த்து அல்கியிருத்தலைப் போலத், தலைவனது பிரிவை நோக்கியபடி, தலைவியைப் பற்றிக் கொள்ளுதற்குப் பசலையும் செவ்வி நோக்கியபடி காத்திருக்கின்றது' என்பதாம்.

34. முருகன் மடவன்!

பாடியவர் : பிரமசாரி.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி, தெய்வத்திற்கு உரைப்பாளாய், நெறி விலக்கியது.

[(து–வி.) களவுக் காலத்துத் தலைவனின் பிரிவினாலே துயருற்ற தலைவியைக் கண்டு. 'இவள் முருகால் அணங்கினாள்’ என அன்னை வெறியெடுப்பக் கண்ட தோழி, முருகனை முன்னிலைப் படுத்தினளாக இவ்வாறு கூறுகின்றாள்.]

கடவுட் கற்சுனை அடைஇறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தட்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவிஇன் இயத்து ஆடும் நாடன் 5
மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின்னணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக; 10
மடவை மன்ற வாழிய முருகே!

எம் கடவுளான முருகே! நின் இத்தகைய மடமையோடுங் கூடினாயாக. நீ நெடுநாள் வாழ்வாயாக! கடவுள் தன்மை பொருந்திய மலைச்சுனையிலேயிருந்தும், இலைகளை விலக்கி மேலெழுந்து வளர்ந்திருந்தவும், பிறர் கொய்யாத தன்மையுடையவுமான குவளை மலர்களைக் கொய்து, அவற்றோடு குருதியின் ஒள்ளிய செந்நிறத்தை உடையவான செங்காந்தட் பூக்களையும் கொய்து கலந்து, இரண்டும் கலந்தவண்ணம் விளங்கும்படியான மாலைகளைக் கட்டுவர். அப்படிக் கட்டிய மாலைகளைச் சூடிக்கொண்ட வராகப் பெருமலையின் பக்கம் எல்லாம் பொலிவுபெறுமாறு ஆடுகின்றவர் நினக்குத் தொண்டு நேர்ந்தாரான சூரரமகளிர். வீழும் அருவியின் ஒலியே தம் ஆட்டத்திற்குரிய இனிதான பக்க இசையாகக் கொண்டு அவர் ஆடிக்கொண்டிருக்கும் அத்தகைய நாட்டையுடையவன் எம் தலைவன். அவனது மார்பைத் தழுவிப் பிரிந்ததன் காரணமாக, அந்நினைவு தருதலாலே வந்தது, பசலை மிகுதியாகப் படர்தலைக் கொண்டதான், நீங்குதற்கரிய இக்காமநோய். இது நின்னாலே வருத்திக் கொடுக்கப்பட்ட நோயன்று என்பதனை நீயும் அறிவாய். அறிந்தும், தலை நிமிர்ந்து, கார்காலத்தே மலர்கின்ற கடப்பமலரின் மாலையைச் சூடியவனாக வெறியாடும் வேலனானவன் நின்னைக் குறித்து வேண்டவும் நீயும் வெறியயரும் எம் மனையிடத்தே வந்து தோன்றினை! அங்ஙனம் வந்த நீதான். யாம் போற்றிப் பரவும் கடவுளே யாயினும் ஆகுக! திண்ணமாக, நீயும் அறியாமை உடையை காண்!

கருத்து : முருகே! இவளை இவள் தலைவனோடு விரைவிலே மணம்பெற்று இன்புறுதற்கு உதவினையானால், இவளது நோய்தானே தீரும்' என்பதாம்.

சொற்பொருள் : கடவுட் கற்சுனை – கடவுட்டன்மையுடைய மலையிடத்துக் கற்பாங்கானவிடத்தே அமைந்திருக்கும் சுனை. கடவுட்டன்மையாவது, சூரரமகளிரன்றிப் பிற மானுட மகளிர் சென்று நீராடியும் மலர்கொய்தும் பயன்படுத்தாத தன்மை. குருதி ஒன்பூ – இரத்தச் சிவப்பு நிறம் ஒளிரும் செங்காந்தட்பூ; இது முருகனுக்கு உரியதாதலின் இதனை மானுட மகளிர் சூடார். சூர்மகள் – சூரர மகளிர்: முருகனுக்குப் பணிபூண்ட தேவகன்னியர்: 'குறமகள்' என்றும் பாடம். அப்போது முருகை மேற்கொண்டு வெறியயரும் கன்னியரான குறவர் மகளிர் என்க.

விளக்கம் : 'தலைவனோடு மணவிழா நேர்தற்கு அருளிச்செய்து தலைவியின் துயரைப் போக்காத முருகன் 'அணங்கிய நோய்' என வெறியாடும் வேலன் அழைக்க வந்தானாயின், அவன் மடவன்' என்கின்றாள் தோழி. இதனைச் செவிலி கேட்கத் தோழி கூறச், செவிலி நற்றாயொடும் சொல்ல, அவள் விரைவிலே தன் மகளுக்கு அவள் விரும்பிய காதலனையே மணஞ்செய்விக்கும் முயற்சிகளை நாடி முயல்வாளென்பது மரபாகும்.

இறைச்சி : ‘சூரரமகள் அருவியையே இன்னிசையாகக் கொண்டு முருகைப் போற்றி வெற்பகம் பொலிவுபெற ஆடிக்களிக்குமாறு போலத், தலைமகளும் தன் தலைவனது அன்பிலே திளைத்தாளாக, அவனூர் பொலிவு பெறுமாறு அவனோடு கூடிக்களித்து இல்லறம் நிகழ்த்தக் கருதியிருப்பாள் என்பதாம்:

மேற்கோள் : 'இது முருகற்குக் கூறியது' என நச்சினார்க்கினியரும் (தொல். பொருள். சூ. 114 உரை); 'இது முருகனை முன்னிலையாகக் கூறியது' என இளம் பூரணனாரும் (சூ 112 உரை) காட்டுவர்.

35. கண் பசந்த காரணம்!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : மணமனைப் பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.

[(து–வி.) மணம் பெற்றுத் தலைவி தலைவனோடு கூடியதன் பிற்றை நாளிலே, தலைவன், தோழியிடத்தே. 'நீ இதுகாறும் தலைவியை நன்றாக ஆற்றுவித்திருந்தனை' எனப் புகழ்ந்து கூறுகின்றான். அதனைக் கேட்ட தோழி, தலைமகனின் சால்பைப் புகழ்வாளாக இப்படிக் கூறுகின்றனள்.]

பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி, பழம்செத்துப்
பல்கால் அலவன் கொண்டகோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 5
இரைதேர் நாரை எய்தி விடுக்கும்
துறைகெழு மாந்தை அன்ன இவள்நலம்
பண்டும் இற்றே: கண்டிசின் தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
ஞெகிழ்ந்த கவின்நலம் கொல்லோ மகிழ்ந்தோர் 10
கட்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?—இவள் கண்பசந் ததுவே!

பொங்கிவந்து மோதுகின்ற அலையானது பொருதியதனாலே, நேரிதாகிய மணல் அடுத்திருப்பதான கடற்கரையினிடத்தே உதிர்ந்துகிடந்த புல்லிய காம்பையுடைய கருநாவலின் பெரிய கனியினைத், தம்மினமென்று கருதி வண்டினம் மொய்க்கும். அவ்வேளையிலே, அதனைப் பழமென்றே உணர்ந்து, பலவாய கால்களையுடைய நண்டானது சென்று பற்றிக்கொள்ளும். நண்டு பற்றிக் கொண்டதினின்றும் அதனை மீட்டற்கு இயலாவாய்த் தளர்ச்சியுற்ற வண்டுகள், மேலெழுந்து, அதனைச் சூழநின்று பேரொலி செய்தவாய்ப் பூசலிட்டிருக்கும். அவ்வேளையிலே, இரையைத் தேடிய ஒரு நாரையானது வரக்கண்டதும், அதற்கஞ்சிய நண்டு, பழத்தைக் கைவிட்டுச் சென்று ஓடிப் பதுங்கும். அதன்பின், வண்டுகளின் பூசலும் அடங்கும். அத்தகைய கடற்றுறை விளங்கும் குட்டுவனின் மாந்தை நகரத்தைப் போன்றது, இவளுடைய எழில் நலமாகும். அதுதான் முன்னரும் இத்தன்மையதே என்பதைக் காண்பாயாக. விலகாதே பக்கத்தேயிருந்து நீ தலையளி செய்தாலும், இவளது கண்கள் பசலைநோயுற்றதன் காரணம். சிறிதளவு முயக்கமானது கைநெகிழ்ந்ததனாலே உண்டாகிய அழகின் சிறப்பாகுமோ? கள்ளுண்டு மகிழ்ந்தார்க்குக் கள் இல்லாதே போகுங்காலத்துப் பிறந்த வேறுபாட்டைப் போன்றதான காம மயக்கத்தின் வேறுபாடு தானோ? இதனை யான் அறியேனே!

கருத்து : 'நின் காதலது மிகுதியே இவளது துயரத்தை ஆற்றுவித்துக் காத்தது' என்பதாம்.

சொற்பொருள் : அசாந்து – தளர்ந்து. நரம்பு – யாழ் நரம்பு. புன்கால் – மெல்லிய காம்பு. இருங்கனி – கரிய கனி.

விளக்கம் : 'களவுக்காலத்தே ஒன்றுபட்டிருந்து நீதான் இன்புறுத்தின காலத்தும், அணைத்திருந்த நிலை சிறிது நெகிழ்ந்ததற்கே பசந்த தன்மையுடையவள் தலைவி. இத்தன்மையினை உடையவளை ஆற்றுவிப்பது நின்னையன்றிப் பிறராலே செயத்தகும் ஒரு செயலாகுமோ? கள்ளுண்டு களித்தோர் உண்டதன் பின்னரும் நெடும்பொழுதிற்கு அந்தக் கள்ளினது மயக்கத்தின் நினைவிலே திளைத்தவராக இன்புறுதல் இயல்பு. அவ்வாறே, இவளும் நின்னோடு பெற்ற இன்பத்தின் நினைவாலே, தன்னை மறந்து, நின் பிரிவை ஒரு வேளை ஆற்றியிருந்திருக்கலாம். ஆனால், இவள் கண்கள் நின்னைக் காணாவாய்ப் பசந்தன என்பதும் உண்மை. அதுதான் எதனாலோ?' இவ்வாறு கூறுகின்றாள் தோழி. இது தலைவனது மேம்பாடே தலைவியை ஆற்றியிருக்கும் திண்மையளாகச் செய்து காத்தது என்று போற்றியதாம்.

உள்ளுறை : நாவற் கனி தலைவியாகவும் தும்பிகள் தோழியராகவும், ஞெண்டு தலைவனாகவும். இரைதேர் நாரை தமராகவும் கொள்க. நாவற்கனியைத் தம்மினம் என்று மயங்கிக் காத்துச் சூழ்ந்த தோழியரினின்றும், அதனைத் தானடைந்து இன்புறுதற்கு உரியதென உணர்ந்த ஞெண்டானது பற்றித் துய்க்கத் தொடங்குவது, தலைவியோடு தலைவன் கொண்டிருந்த களவுறவாகவும், அதனைக் கண்டு கலங்கிய தோழியரது பூசல், அதுகண்டு விலகியெழுந்து பூசலிட்ட வண்டினத்தின் பூசலாகவும் கொள்க. தமர் அறிந்தமை கண்டு தலைவன் நாரை வரக்கண்டு ஒதுங்கியது, ஞெண்டு ஒதுங்கியதற்கு ஒப்பாகும். நாரையும் கனியை முடிவில் ஞெண்டிற்கே விட்டு அகல்வதுபோலத் தமரும் தலைவனுக்கே அவளை மணத்தால் தந்து ஒன்றுபடுத்தினர் என்பதாம்.

மேற்கோள் : 'களவுறவினாலே இன்புற்ற நிலையிலும், முறையாக மணந்து துய்க்கப் பெற்றோமில்லையே என்ற கவலையினாலே உண்டானது தலைவியின் வேறுபாடு என்றும், அதுதானும் மணவுறவினாலே நீங்கியது எனவும், இச் செய்யுளைக் காட்டிக் கூறுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 150 உரை.)

'தலைமகன், தலைமகளிடத்தே இற்கிழமையை வைத்தவிடத்து, அறத்தினானாதல் பொருளினானாதல் அவனுக்காகிய இசையும் கூத்தும் முதலியவற்றான் அத்திறத்தை மறத்தலும் நிகழும். அக்காலத்தே அவனைத் திருத்துதலின் பொருட்டாகத் தோழி இவ்வாறு கூறுதல் உண்டு' என்பார் இளம்பூரணனார். (தொல். பொருள். சூ 148. உரை.) இவ்வாறு கொள்ளின் செய்யுள் மேலும் பொருள்நயம் சிறத்தலையும் அறிந்து உணர்க.

36. எதனை இழந்தது!

பாடியவர் : சீத்தலைச் சாத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
[(து–வி.) வரைந்து மணந்துகொள்ளும் முயற்சியினை நினையாதானாகிய தலைவன் ஒருவனுக்கு அறிவுறுத்தக் கருதினளான தோழி, இவ்வாறு தலைவியிடம் கூறுவாள் போல. ஒரு சார் செவ்விநோக்கி ஒதுங்கிநிற்கும் அவனும் கேட்கக் கூறுகின்றாள்.]

குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை,
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு ஆடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி
யாம்எம் நலன் இழந் தனமே; யாமத்து 5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீமொழி பயிற்றிய உரைஎடுத்து
ஆனாக் கௌவைத்து ஆக,
தான்என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?

கொல்லுதல் தொழிலிலே வல்லமைகொண்ட பெரிய புலியேறானது குறியவான முன்னங்கால்களைக் கொண்டது. நீரற்ற அகன்ற காட்டினிடத்தே, அழகிய நெற்றியையுடைய கரிய பிடியானது புலம்புமாறு, அப் புலியேறு அப்பிடியினது பெரிய களிற்றினைத் தாக்கிக் கொல்லா நிற்கும். அத்தகைய மலையிடத்தையுடைய வெற்பன் தலைவன். அவனுடைய சொல்லினை வாய்மையே எனத் தெளிந்து அவனை ஏற்றதனாலே, யாம் எம் நலனையும் இழந்தோம்; பழி தூற்றும் வாயினராகிய அயற்பெண்டிரது அம்பலோடு சேர்ந்து ஆரவாரமிக்க இவ்வூரும், மேன்மையற்ற தீச்சொற்களைக் கூறுவதற்கு வேண்டிய பேச்சுக்களை மேற்கொண்டது. அமையாத பழிமொழிகளை உடையதாக, இந்த இரவின் யாமத்தும், இது துயிலொழிந்ததாயிற்று. இதுதான் எதனை இழந்து என்னைப் போலத் துயிழொழிந்ததோ?

கருத்து : 'வழியின் ஏதமும் ஊரவர் அலருரையும் நினைந்து நாம் படும் துயரைத் தீர்த்தற்கு, அவர் நம்மை மணந்து கோடலே இனிச் செய்யத்தக்கது' என்பதாம்.

சொற்பொருள் : பூநுதல் – அழகிய நெற்றி; பொலிவு பெற்ற நெற்றியும் ஆம். புரை – மேன்மை. தீமொழி – தீய சொற்கள். கௌவை – பழிச்சொல்.

விளக்கம் : தலைவனை வரைந்து கோடற்குத் தூண்டு வாளாகத் தோழி, வழியிடை ஏதம், தலைவியின் எழில் கெட்டது, ஊரலர் பரந்தது, ஊர் கண்ணுறங்காமை ஆகியவற்றால், இரவுக்குறி வாய்த்தல் அரிதாகும் என்பதனை நயமுடன் உணர்த்துகின்றாள். தலைவனின் சொற்களை அந்நாளிலே வாய்மையானவை எனத் தெளிந்த தன் பயனாலே, இன்று யாம் துயருற்று உறக்கமும் இழந்தவராயினேம். எம்மைப் போல இவ்வூரும் அலர்உரை பயிற்றித் துயிலொழித்திருப்பது எதனாவோ? என்கின்றனள். இதனைக் கேட்கும் தலைவன், விரைவாகத் தலைவியை மணந்து இல்லறத்தே இன்புற்று வாழ்தலைச் செய்தற்கு முற்படுவான் என்பதாம்.

உள்ளுரை : 'பிடி புலம்புமாறு அதனது களிற்றைப் புலி தாக்கிக் கொல்லாநிற்கும் நாடன்' என்றது, இரவுக்குறி வரும் தலைவனைத் தான் துன்புற்றுப் புலம்புமாறு அவனுக்கு ஏதமுண்டாக்கும் நெறி என்பதாம். அதனால், இரவுக்குறி தவிர்தலையும், தலைவியை மணந்து கோடலையும் விரும்பினளாம்.

37. என் பரம் அன்று!

பாடியவர் : பேரிசாத்தனார்.
திணை : பாலை.
துறை : வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி சொல்லியது.

[(து–வி.) வரைபொருளைத் தேடிவருதற் பொருட்டாகச் செல்ல முடிவு செய்த தலைவன், தலைவியின் தோழியிடம் “நான் வரும்வரை தலைவிக்கு ஆறுதல் கூறி இருக்க", என்றான். அவனுக்குத் தோழி சொல்லுவதாக அமைந்தது இது.]

பிணங்குஅரில் வாடிய பழவிறல் நனந்தலை
உணங்குஊண் ஆயத்து ஓர்ஆன் தெள்மணி
பைபய இசைக்கும் அத்தம் வைஎயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர்சூழ் மாமலர் அன்ன கண்அழக் 5
கலையொழி பிணையின் கலங்கி மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின் என்பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் — நாகத்து
அணங்குடை அருந்தலை உடலி, வலன்ஏர்பு
ஆர்கலி நல்ஏறு திரிதரும் 10
கார்செய் மாலை வரூஉம் போழ்தே

.

ஒன்றோடொன்று பின்னிக்கொண்டுகிடக்கின்ற சிறு தூறுகளும், பழையதான நல்ல தோற்றங்களும், வாடிப் போய்க் கிடக்கும் அகன்ற இடத்தைக் கொண்டிருப்பது காடு. அவ்விடத்து, உணவில்லாதுபோயினதனாலே வாட்டமுற்ற நிரையினின்றும் அகன்று செல்லும், ஒற்றைப் பசுவினது தெளிந்த மணியோசையானது மெல்லென ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலியினயும் உளதாயிருக்கும். அவ்வழியாகக் கூரிய பற்களையுடைய இவளையும் நும்முடன் அழைத்துச் செல்பவராக, நீயிர் பொருளினைத் தேடி வருவதற்குச் சென்றீராயின் நலமாயிருக்கும். கலைமானைப் பிரிந்த பிணையினைப்போலக் கலக்கமுற்றுக் குவளையின் நீர் நிரம்பிய கரிய மலரைப்போன்ற இவள் கண்களினின்றும் நீர் வடியுமாறு இவளோடும் மாறுபட்டு, அன்பில்லாதீராக நீர் பிரிந்து செல்லாதீர். அப்படிப் பிரிந்து போயினீராயின், பாம்பினது வருத்துகின்ற அரிய தலையானது துண்டுபட்டு வீழும்படியாகச் சினந்து வலமிட்டு எழுந்து, மிக்க முழக்கத்தோடும் நல்ல இடியேறானது திரிகின்றதான கார்ப்பருவத்து மாலைக்காலமானது வந்தடையும் அந்தப் பொழுதிலே, இவள் துயரத்தை மாற்றி இவளைக் காத்திருப்பது என்பது, என் பொறுப்பாகத் தாங்கக் கூடியதன்று. இதனை அறிவீராக!

கருத்து : 'இவளைப் பிரிந்து அகன்றீராயின், இவள் அந்தப் பிரிவைத் தாங்காதே இறந்து போவாள்' என்பதாம்.

சொற்பொருள் : பிணக்கம் – பின்னிக்கிடத்தல். விறல் – வெற்றி; பழைதான காட்டது அழகுத் தோற்றங்கள். மாறி – மாறுபட்டு; அன்பினின்றும் மாறுபட்டு. பரம் – பாரம்; பொறுப்பு. உடலி – சினந்து. கலி – முழக்கம்.

விளக்கம் : 'பிணங்கு அரில் வாடிய பழவிறல் நனந்தலை, உணங்கு ஊண் ஆயத்து, ஓர் ஆன் தெள்மணிபைபய இசைக்கும் அத்தம்' என்றது, அவ்வாறே பொலிவழிந்த இவள், இவளது ஊரும் ஆயமும் இவளது மெலிவிற்குச் சோர்ந்திருப்ப, இவள் மட்டும் நின் நினைவாலே கண்ணுறங்காளாய் மெல்ல மெல்ல நடந்து நின் வரவை நோக்கிச் சாம்பியபடியே இருப்பவள்' என்பதாம். அதனால், இவளை நின்னுடனேயே அழைத்துப் போய்விடுக என்பதுமாம். கண் அழுகையால் நீர் நிரம்புதலுற்று விளங்கிய தன்மைக்குக் 'குவளை நீர் சூழ் பாமலர்' என்றனள்.

'கலை ஒழி பிணையின் கலங்கி' என்றது, பிணையது மடப்பம் நிரம்பிய மென்மைத் தன்மையினைத் தலைவியின் தகைமைக்குப் பொருத்திக் கூறியதுமாகும்.

மேற்கோள் : இச் செய்யுளை இத்துறைக்கே மேற்கோளாகக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள். சூ.114 உரை.)

38. வருத்தம் தருகின்றதே!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைவி வன்புறை எதிரழிந்து சொல்வியது.

[(து–வி.) தலைவன் பிரிந்து சென்றிருந்தான். தலைவி, பிரிவுப் பெருநோயாற் பெரிதும் நலிகின்றாள். அதுகண்ட தோழி. 'இவ்வாறு மெலியின் நின் களவைப் பிறர் அறிவர்; அதனால் அலர் எழும்; ஆகவே ஆற்றியிரு' எனக்கூறி வற்புறுத்துகின்றாள். அவட்குத் தலைவி கூறுவது இதுவாகும்.]

வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பப்
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும்பனந் தீம்பிழி உண்போர் மகிழும்
ஆர்கலி யாணர்த்து ஆயினும், தேர்கெழு
மெல்லம் புலம்பன் பிரியின் புல்லெனப் 5
புலம்புஆ கின்றே-தோழி! கலங்குநீர்க்
கழிசூழ் படப்பைக் காண்ட வாயில்
ஒலிகா வோலை முள்மிடை வேலிப்
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண்மணற் படப்பை எம் அழுங்கல் ஊரே. 10

தோழி! கலங்கலான நீர்வளத்தைக் கொண்ட கழிகள் சூழ்ந்திருக்கும் தோட்டக்கால்களையுடையது, 'காண்ட வாயில்' என்னும் நம் ஊர். ஒலித்தலைக் கொண்ட முற்றிய பனையோலைகளோடு முள்ளையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வேலிகளைக் கொண்டன, அத் தோட்டங்கள். அவற்றிடத்தேயுள்ள பனைமரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும் அவ்விடத்ததாகிய வெள்ளிய மணல்மேட்டினைக் கொண்டு விளங்குவது எம்முடைய ஆரவாரத்தையுடைய சேரியாகும். கடலிடத்து மீன்வேட்டை பொய்ப்படாது வலைவளம் என்றும் எம்மூரிற் சிறப்புற்றிருக்கும். எம்மூர்ப் பரதவர்கள், தாம் தருதற்குரிய பாட்டத்தினைப் பொய்யாதாராய்க், கிடைத்த மீன்களை விலை கூறி விற்றவராயிருப்பர். அவ்விடத்தே, கரிய பனையினது இனிதான கள்ளினை உண்போர் அதனாற் களித்து ஆரவாரித்திருப்பர். இவ்வாறான, நிரம்பிய ஆரவாரத்தையும் புதுவருவாயினையும் உடையதுதான் நம் ஊர் என்றாலும் தேரூர்ந்துவந்து அருளுகின்ற சிறப்புடையானாகிய, மெல்லிதான கடல் நாட்டானாகிய நம் தலைவன், நம்மைப் பிரிந்தானாயின், இவையனைத்தும் பொலிவழிந்தாற்போல நமக்கு வருத்தத்தைத் தருவனவும் ஆகின்றதே! இதற்கு என் செய்வேன்?

கருத்து : தலைவன் பிரியின், ஊரும் அதன் வளமும் எனக்கு வருத்தத்தையே மிகுவிக்கின்றன' என்பதாம்.

சொற்பொருள் : வேட்டம் – மீன்வேட்டை. வகை வளம் – வலைப்படும் மீனின் மிகுதி. பாட்டம் – அரசுக்கும் ஊருக்கும் தரும் இறைப்பகுதி. தீம்பிழி – இனிதான கள் 'காண்ட வாயில்' – ஓர் ஊர். 'பாட்டம்' மழைவளமும் ஆகும்.

விளக்கம் : கடல்வளமும் மழைவளமின்றி ‘அமையா தாதலின், 'பாட்டம் பொய்யாது' என்பதற்கு, மழைவளமும் கடல்வளம் பெருகுதற்கு உதவும் வகையினாலே, பொய்படாது மிகுந்திருக்கும் எனவும் கொள்ளலாம். மீன்விலை பகர்வாரது ஆரவாரமும், கள்ளுண்டு களித்தாரது ஆரவாரமுமாக, ஊர்மன்றம் 'ஆர்கலி யாணர்த்தா'யிற்று. வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்பவும், பாட்டம் பொய்யாது பரதவர் பகரவும் நிகழ்கின்றதேனும், தலைவன் நம்மை மணம்வேட்டு வருவதென்பது பொய்த்தது; நம்மவர் நம்மை அவனுக்குத் தருவரென்பதும் பொய்யாயிற்று; பனந்தீம்பிழி உண்போர் மகிழ்தலைப்போல யாம் அவனுடன் காமவின்பத்தை உண்டுகளிப்பேம் என்பதும் வாயாதாயிற்று என்று தலைவி நோகின்றாள்

பிற பாடம் : 'தேர்கெழு' என்பது, 'தோடு கெழு' எனவும் கூறப்படும். அதற்குத் 'தொகுதி விளங்கிய' என்று பொருள். 'தொகுதி விளங்கலாவது', இன்னின்னார்க்குரியது என்ற வரையோடு விளங்கும் கடற்கரைப் பகுதியாகும்.

39. கூடலன்ன தோள்!

பாடியவர் : மருதனிள நாகனார்.
திணை : குறிஞ்சி,
துறை : இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியிலே, தலைவன் சொல்லியது

[(து–வி.) முதற் கூட்டம் தெய்வச் செயலாலே வாய்த்தது. அதன்பின், தலைவிக்கு நாணம் மேலெழத் தலைவன், அவளைத் தெளிவிப்பானாக இவ்வாறு கூறுகின்றனன்.]

சொல்லின் சொல்எதிர் கொள்ளாய், யாழநின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப்
புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் 5
தலைமருப்பு ஏய்ப்பக் கடைமணி சிவந்தநின்
கண்ணே கதவ அல்ல; நண்ணார்
அரண்தலை மதில ராகவும், முரசுகொண்டு
ஓம்பு அரண் கடந்த அடுபோர்ச் செழியன்
பெரும்பெயர்க் கூடல் அன்னநின் 10
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.

அன்புடையாய்! யான் நின்னை நாடியவனாகச் சில சொற்களைக் கூறினால், அச்சொற்களை எதிரேற்றுக் கொள்ளாயாய், நின் திருமுகத்தைக் கவிழ்ந்தனையாய், நீ நாணமுற்று நிற்கின்றனை! திடுமெனக் காமமானது என்பாற் கைகடந்து மிகுதியாகுமாயின், அதனைத் தாங்கிக் கொள்ளுதல் என்பதும் எனக்கு எளிதாகுமோ? வளைந்த கருநிறக் கோடுகளையுடைய புலியினது பெரிய முதுகிலே, அது நடுங்கிச் சோருமாறு குத்தி விளையாட்டயர்ந்த வேழத்தினது, புலால் நாற்றத்தையுடைய தலையிடத்துக் கொம்புகளைப் போலக் கடைமணிகள் சிவப்படைந்த நின் கண்கள் தாமும், என்பாற் சினவா நின்றன. அவை அல்லாமலும், பகைவர் கோட்டையிடத்துத் தலைமதிலிடத்தே வந்து போந்தாராகவும், அவரது முரசத்தைக் கைக்கொண்டு, அவராலே காக்கப்பட்ட அரணையும் கைப்பற்றி வெற்றிகொள்ளும் போராடும் செவ்வியுடைய பாண்டியனது பெரும்புகழினையுடைய கூடன்மா நகரத்தைப் போன்றதான, தொய்யிற் கரும்பு தீட்டப்பெற்றதாய் விளங்கும் நின்தோள்களும், என்னைத் தாம் ஏற்க மறுத்தவாய் வருத்துகின்றனவே?

கருத்து : 'என்னை மறாதே ஏற்றுக்கொண்டு, என் குறையினைப் போக்குவாயாக' என்பதாம்.

சொற்பொருள் : திருமுகம் இறைஞ்சல் – தலை கவிழ்தல்; நாணத்தால் நேர்வது. கைம்மிகல் – கைகடத்தல், அடக்கவும் அடங்காது மிகுதல். 'பெரும்பெயர்க் கூடல் – பெரும் புகழுடையதான மதுரை.

விளக்கம் : 'புலி விளையாடிய புலவுநாறு வேழத்தின் சிவந்த மருப்புப் போன்ற கண்கள்' என்றான், அவள் சினத்தோடு தன்னை நோக்கினதால்; அச் சினந்தணிந்து அருளோடு நோக்குதலையும் யாசிக்கின்றான். 'அரண்தலை மதிலராகவும். அவரது முரசுகொண்டு ஓம்பரண் கடந்த செழியனின் கூடலன்ன தோள்' என்றது, 'என் வலியழித்து என்னைத் தனக்கு ஆட்பட வருத்துதலன்றித் தான் எனக்கு வாய்த்தல் எளிதாயிராத தோள்நலம்' என்பதனால். ஆகவே, அவளாகவே மனமிரங்கி அருளுதல் வேண்டும் என்பதுமாம்.

மேற்கோள் : 'மெய் தீண்டி நின்ற தலைவன், யான் தழீ இக்கொண்டு கூறினால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தி்'யென இடையூறு கிளத்தலைக் கூறிக், 'காமங் கைம்மிகின் தாங்குதல் எளிதோ'வென, 'நீடு நினைத்து இரங்கலை'க் கூறிப், 'புலியிடைத் தோய்ந்து சிவந்த கோடு' போல என்னிடத்துத் தோய்ந்து காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணெனக் கூடுதலும் கூறிற்று' என இச்செய்யுளை எடுத்துக்காட்டி நச்சினார்க்கினியர் கூறுவர். (தொல். பொருள். சூ. 102. உரை).

இச்செய்யுளை 'இடந்தலைப்பாடு' என்னும் துறைக்குப் பேராசிரியர் காட்டுவர் (தொல். பொருள். சூ. 498 உரை).

இச்செய்யுளை, இயற்கைப் புணர்ச்சிக்கண், தலைவன் தலைவியைச் சொல்வழிப்படுத்தல் என்னும் துறைக்கு மேற்கோளாகக் கொண்டு. 'தான் சொல்கின்ற சொல்லின் வழி அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல்' என்பர் ஆசிரியர் இளம்பூரணனார் (தொல். பொருள். சூ. 98 உரை).

பிற பாடங்கள் : 'புலி விளையாடிய புகர்முக வேழம்", ஆண்டலை மதிலர்.'

40. கள்வன்போல வந்தான்!

பாடியவர் : கோண்மா நெடுங்கோட்டனார்.
திணை : மருதம்.
துறை : தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.

[(து–வி.) பரத்தையுறவிலே இன்புற்றிருந்த தலைவன் ஒருவன், தனக்குப் புதல்வன் பிறந்தானாதலைக் கேட்டதும், தன் இல்லிற்குச் சென்று சேர்கின்றான். சினங்கொண்ட பரத்தை, தலைவியின் தோழியர் கேட்குமாறு, இவ்வாறு நகையாடிக் கூறுகின்றாள்.]

நெடுநா ஒள்மணி கடிமனை இரட்டக்
குரை இலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென, ஒருசார்,
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறிஉற விரிந்த அறுவை மெல்லணைப் 5
புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்-இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்ளன் போல 10
அகன்துறை ஊரனும் வந்தனன்—
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே.

காவலையுடையதான மனையிடத்திலே நெடிய நாவினைக் கொண்டதான ஒள்ளிய மணியும் ஒலித்தலைத் தொடங்கியது. ஒலிக்கும் தென்னங்கீற்றால் மிடைந்து மணல் பரப்பியிருக்கப் பெற்ற பந்தரிடத்தே, பெரும் பாணர்கள் சூழநின்று காவல் காத்திருந்தனர். திருந்திய கலனணிந்த மகளிர்கள், இவ் வேளையிலே தலைவனின் மகனைக் காத்தபடி நன்னிமித்தமாகச் சூழ்ந்து நிற்கின்றனர். நறுமணம் அமையுமாறு மணஞ் சேர்த்து விரிக்கப்பெற்ற விரிப்பினைக் கொண்ட மெல்லணையிடத்தே, ஈன்றதன் அணிமை மணம் மணக்கின்ற புதல்வனும், செவிலித் தாயோடு படுத்து உறங்குகின்றனன். வெண் கடுகை அரைத்து அப்பி, எண்ணெய் தேய்த்து முழுகியதான நீராட்டினாலே ஈரமான அணியைக் கொண்டதாகவும், பசுவின் நெய்யினைப் பூசிக்கொண்ட மென்மையான தன்மையதாகவும் விளங்கின உடலினளான, அழகு நிரம்பிய அவன் மனைவி, தான் கருவுயிர்த்ததன் சோர்வினாலே, தன் ஈரிமைகளும் ஒன்று பொருந்த உறக்கங்கொண்டுள்ளாள். இந்நிலையிலே, நள்ளென்னும் ஒலியை உடையதான இரவின் இடையாமப் பொழுதிலே, அகன்ற நீர்த்துறைக்கு உரியனாகிய தலைவனும், சிறந்தோனாகிய தன் தந்தையின் பெயரினைக் கொள்வானான தன் புதல்வன் பிறந்ததனாலே. கள்வனைப்போலத் தன் இல்லிற்குள்ளே வந்தனன் போலும்!

கருத்து : 'தலைவன் புதல்வனைக் காணுமாறு வந்தானேயல்லாமல், தலைவிபால் அன்புகொண்டு அவளைத் தலையளி செய்யக் கருதி வந்தவன் அல்லன்' என்பதாம்.

சொற்பொருள் : கடி – காவல். இரட்டல் – அடிக்கடி ஒலித்தல். குரை – ஒலி. பெரும்பாண் – பெரும்பாணாகிய சுற்றம். நெய்யாட்டு – நெய் முழுக்கு; கருவுயிர்த்ததும் முழுக்காட்டிய முழுக்கு. பெயரன் – பெயரினைக் கொள்வோன்.

விளக்கம் : விரிச்சி – நற்சொல்; இங்கே நன்னிமித்தமாகக் கொள்க. 'கள்வன்போல வந்தனன்' என்று பரத்தை பழிக்கின்றாள். பகலில் வந்தாற் காணும் தொடர்புடைய பரத்தையர் பலரும் பற்றிக்கொள்வாரென அஞ்சியும், தன்மனைவியும் பிறரும் தன் செயலைக் குறித்துச் சினந்துகொள்வதற்கு அஞ்சியும், அனைவரும் உறங்கியிருக்கும் இடையாமப் போதிலே, காலடியோசையும் மணியோசையாற் கேளாதிருக்கும் செவ்வி பார்த்துக் கள்வனைப்போல வீட்டினுள் நுழைந்தனன் என்கின்றாள். 'தன் புதல்வன்மீது பாசம் எழப்பெற்றவனாகத் தானே சென்று நுழைகின்றனன்' என்றதும் ஆம்: 'அழையாது தானே திருடனைப்போலச் சென்று புகும்' எளியவன் என்கின்றனள்.

மேற்கோள் : 'முன்வருங்காலத்து வாராது, சிறந்தோன் பெயரன் பிறத்தலான்' வந்தான், எனத் தோழி கூறினாள் எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். (தொல் பொருள். சூ. 146 உரை.)

'இருவர்க்கும் சிறந்த புதல்வனை நினையாமையால் தலைமகன் தனிமை யுறுதற்கண்ணும்' தோழிக்குக் கூற்று நிகழுமென்பதற்கு இச் செய்யுளை இளம்பூரணர் காட்டுவர் (தொல்.பொருள். சூ. 148.உரை.)

பிற பாடங்கள் : 'பசுநெய் கூர்ந்த' என்பது, 'பசிநோய் கூர்ந்த எனவும்; ஈரிமை' பொருந்த' என்பது, 'உரிமை பொருந்த' எனவும் வழங்கும்.

41. குறுநடைக் கூட்டம்!

பாடியவர் : இளந்தேவனார்.
திணை : பாலை.
துறை : பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது.

[(து–வி.) தலைவனது பிரிவினை அறிந்த தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. அதனைக் கண்ட தோழி. ஆடவர் பொருள்தேடி வருதலால் வருகின்ற இல்லறத்தின் செவ்வியைக் காட்டி ஆற்றியிருக்குமாறு உரைக்கின்றாள்.

பைங்கண் யானைப் பரூஉத்தாள் உதைத்த
வெண்புறக் களரி விடுநீறு ஆடிச்
சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலிஉறு கூவலின் தணியும்
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ! 5
எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக்
கிளரிழை அரிவை! நெய்துழந்து அட்ட
விளர்ஊன் அம்புகை எறிந்த நெற்றிச்
சிறுநுண் பல்வியர் பொறித்த
குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே. 10

ஒளி சிதறும் ஆபரணங்களை அணிந்தோளான தலைவியே! இரவுக்காலத்தே வந்தடைந்த நல்ல புகழையுடையவரான விருந்தினருக்கு, நெய்யைத் துழாவிக் கொழுவிய தசைக் கறியினைச் சமைத்தனை. அவ்வேளையிலே, அதனிடத்தினின்றும் எழுந்த அழகிய புகையானது நின் நெற்றியிடத்தே படர்ந்தது அதனால், நின் நெற்றியிடத்தே நுண்ணிய பலவாய் வியர்வுத் துளிகளும் தோன்றின. அத்தளர்ச்சியினாலே, குறுக நடந்தவளாகச் சென்ற நினது கூட்டத்தை மிகவும் விரும்பினராக இன்புற்றவர் நின் தலைவர். பசிய கண்களையுடைய யானையது பருத்த காலால் உதைக்கப்பட்டுப் பொடிபட்டதான, வெள்ளிய மேலிடத்தைக் கொண்ட பாழ் நிலத்தேயுள்ள புழுதியிலே மூழ்கியவராகச், சுரத்தின் கண்ணே பெற்று வருந்திய வருத்தமெல்லாம், பாறைப் பகுதியே மிக்குள்ளதான சிறு கிணற்றிடத்தே சென்று தணித்துக் கொள்பவர் வழிப்போக்கர். அத்தகைய வழிகளூடே, நெடுந்தொலைவுக்குச் சென்று, அவரும் நின் பொருட்டாக வருந்துவர், காண்பாயாக!

கருத்து : 'அவர் வருந்துவது, இல்லறமாற்றியும், விருந்தோம்பலிலே சிறந்தும் புகழடைவதற்காகவே' என்பதாம்.

சொற்பொருள் : களரி – களர்பட்ட பாழ்நிலம். நீறு – புழுதி. பார் – பாறை; கூவல் – கிணறு. 'நல்லிசை விருந்து' என்பது, சான்றாண்மை உடையாருக்கு அளிக்கும் விருந்து. 'நெய்துழந்து அட்ட விளர் ஊன்' என்பது நெய்யுடை ஊனடிசிலும் ஆம். 'குறுநடை'—குறுக நடக்கும் நடை: இது இரவுப்போதிலே விருந்தினரை உபசரித்த தளர்ச்சியால் உண்டாய வருத்தம்.

விளக்கம் : 'குறுநடைக் கூட்டம் வேண்டுவோர்' என்றது 'நின்பால் கடமைகளையாற்றும் செவ்வி சிறந்திருப்பதனைக் கண்டும் நின்னை விரும்புவார்' என்பதாம். 'புகை படிந்து வியர்வரும்பிய நெற்றியுடன் குறுநடை நடந்து வரும்' அந்தத் தலைமைப் பண்பினைத் தலைவரும் பெரிதும் விரும்பினர். எனவே, நீதான் அதனை விரும்புதலும், அவர் தாம் அதற்கு வேண்டுமளவு பொருள்தேடி வருதலும் வேண்டியவாமே என்கிறாள் தோழி. கோடைக் காலத்து, வழியிடை தம்மேற் படிந்த புழுதியைச் சிறுகூவலிடத்து நீரிற் கழுவித் தம் வருத்தம் தீர்தலைப் போலப், பிரிவுத் துயராலே வந்துற்ற நின் பசலையெல்லாம், அவர் மீளவந்து நின்னை இன்புறுத்த மறைந்துபோம் என்பதாம்.

பிற பாடம் : 'பா அர் மலி சிறு கூவல்' என்பது. 'பாரம் மலி சிறு கூவல்' எனவும் வழங்கும். பாரம் - பருத்தி: பருத்தி வாணிபர் சென்று தங்கிக் களைப்பாறியதனால், சூழவும் பருத்திப் பஞ்சுத் துகள் மலிந்து கிடந்த இடம் என்க.

42. மறப்பதற்கு அரிதாகும்!

பாடியவர் : கீரத்தனார்.
திணை : முல்லை.
துறை : வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
[(து–வி) வினையைச் செவ்விதாக முடித்ததன் பின்னர்த் தன் நாட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறான் தலைவன். காட்டு வழியே வருவதாகக் குறித்திருந்த கார் காலத்து வரவைக் கண்டதும், அவன் மனம் முன்னை நினைவுகளாலே மயங்குகின்றது. அதனைக் கூறுபவனாகத் தேரை விரையச் செலுத்துமாறு பாகனை ஏவுகின்றான்.]

மறத்தற்கு அரிதால் பாக! பல்நாள்
அறத்தொடு வருந்திய அல்குதொழில் கொளீஇய
பழமழை பொழிந்த புதுநீர் அவல
நாநவில் பல்கிளை கறங்க, மாண்வினை
மணிஒலி கேளாள், வாணுதல்; அதனால் 5
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே
இல்புக்கு அறியுந ராக மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்
சில்போது கொண்டு பல்குரல் அழுத்தி
அந்நிலை புகுதலின், மெய்வருத் துறாஅ 10
அவிழ்பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே.

பாகனே! பன்னாட்களாகக் கோடையின் வெம்மையோடு வாடிக் கிடந்தது இந்த உலகம். அது தீர்ந்து, உயிரினம் தத்தம் தொழிலை மேற்கொள்ளுமாறு, தொன்மை வாய்ந்த மழையும் இதுகாலைப் பெய்தது. பள்ளங்களிற் புதுநீர் நிரம்பியுள்ளது, அதனை வாயெடுத்து உரைப்பவான பலவாய தவளைக் கூட்டங்கள் ஒலித்தலைச் செய்கின்றன. அதனாலே, மாண்பான தொழிற்றிறம் பொருந்திய தேர்மணியின் ஒலியினையும் அவள் கேளாள். முன்னரும், இப்படித்தான் ஒள்ளிய நெற்றியினளான அவள் கேளாளாயினள்.

"முற்படச் சென்று நம் வரவைக் கூறுமின்' என ஏவப்பெற்ற இளைஞரும், விரையச்சென்று என் மனைக்கண்புகுந்து அறிவித்திருந்தனர். கேட்டதும், அதுகாறும் கழுவி ஒப்பனை செய்யாத தன் கூந்தலை மாசுதீர மெல்லக் கழுவத் தொடங்கினாள் அவள். கழுவியபின், சிலவாய மலர்களைப் பலவாய் தன் கூந்தலிடத்துப் பெய்தவளாக முடித்துக் கொண்டும் இருந்தாள், அவ்வேளையிலே, யானும் சென்று வீட்டுள் நுழைந்தேன். என்னைக் கண்டதும், அவள் தன் ஒப்பனையை மறந்தாள். மேனி துவளக் கூந்தல் அவிழ்ந்து சோர வந்து என்னைத் தழுவித் திளைத்தாள். மடப்பத்தையுடைய அவளது அந்தச் செவ்விய நிலை என்னாலே மறத்தற்கு அரிதாகும். அதனாலே விரையச் செல்வோமாக!

கருத்து : 'அந்தச் செவ்வியை இன்றும் யான் நுகருதற்கு ஏதுவாகத் தேரை விரையச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : வறம் – கோடையின் வெம்மை. அவல். பள்ளம். வாள் – ஒளி. இளையர்—ஏவலிளையர். பல்குரல் – பலவாக முடிக்கப்படுவதான கூந்தல். மகிழ்ந்தயர்தல் – இன்புற்று மயங்கித் தளர்தல்.

விளக்கம் : முன்னர் நிகழ்ந்த அதே நிகழ்ச்சியை இப்போதும் வேண்டுகின்றான் என்று கொள்க. 'மண்ணாக் கூந்தல்' என்றது, பிரிவுத்துயரத்தின் மிகுதியைக் கூறியதாம். 'நாவுடைமணி' என்றது, தவளைச் சதங்கைகளை. வறத்தொடு பொருந்திய உலகு தொழிற்கொளீஇய பழமழை பொழிந்த தன்மையைப் போன்றே, பிரிவுத்துயரால் அவளும் பெரிதும் வாட்டமுற்றுச் செயலொழிந்துகிடந்தாள். வருகைச் செய்தி கேட்டதும் தன்னைப் புனைந்து கொள்ளத் தொடங்கினாள்' என்று கொள்க.

மேற்கோள் : 'இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள்.சூ. 146 உரை.) இளம்பூரணனாரும், 'தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறுதற் கண்ணும்' என்னும் துறைக்கே மேற்கோள் காட்டுவர் (தொல். பொருள். சூ.144 உரை.)

பிறபாடங்கள் : 'அறத்தொடு வருந்திய அல்குதொழில் கொளீய'; 'புதுநீர் அவல் வர'; 'நாவுடை மணியொலி' 'இல்புக்கு அறிவுணர்வாக',

43. உவகையும் அழிவும்!

பாடியவர் : எயினந்தையார்.
திணை : பாலை.
துறை : பிரிவுணர்த்தப்பட்ட தோழி, தலைவனைச் செலவழுங்கு வித்தது.

[(து–வி.) தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுதலைத் தன்பாற் கூறக்கேட்ட தோழி, அதனால் தலைவிக்கு வந்துறும் பேரழிவைக் காட்டி, அவன் போக்கைத் தடுப்பது இது.]

துகில்விரித் தன்ன வெயில்அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்பசிச் நெந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்தன மிச்சில் சேய்நாட்டு
அருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் 5
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே

மெய்ம்மலி உவகை ஆகின்று; இவட்கே
அஞ்சல் என்ற இறைகை விட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் 10
ஓர்எயின் மன்னன் போல,
அழிவுவந் தன்றால், ஒழிதல் கேட்டே.

வெயிலின் மிகுதி விளங்கிய வெப்பத்தையுடைய மலைப்பக்கமானது. வெண்துகிலினை விரித்து மூடியிருந்தாற்போலத் தோற்றும், கோடைநீடிய. அத்தகைய குன்றத்தின் பக்கத்தே. பசியினாலே தளர்ந்துபோன செந்நாயானது, கோடைக்காற்றாது வாடியிருந்த மரையாவைக் கொன்று தின்று, தன் பசி தீர்ந்தது. அங்ஙனம் தின்றபின் எஞ்சிக்கிடந்த மிச்சம், நெடுந்தொலைவிடத்து நாட்டினைக் குறித்தவராக, கடத்தற்கரிய அச் சுரநெறியிலே செல்லும் பயணிகளுக்கு உணவாகப்பயன்படும். அத்தகைய வெம்மைமிக்க வழிலனைக் கடந்து பொருள்தேடச் செல்லுதல் என்பது, நமக்கு மேனிதிளைக்கும் உவகையினை உடைத்தாகின்றது! இவட்கோ, நீவிர் விட்டுப் பிரிதலினாலே, 'அஞ்சேல்' என்று அபயமளித்துக் காத்த இறைவன் கைவிட்டுச் சென்றானாக, அவ்வேளையிற் பசுங்கண்களையுடைய யானைப் படைகளையுடையானான பெருவேந்தன் ஒருவன் எதிற்புறத்தே வந்து பாடியிட்டுத் தங்குதலும், தன் அழிவினைப் போக்குவாரைக் காணாதே கலங்கியவனான, உடைந்து கொண்டு போகும் ஒரே மதிலையுடைய சிற்றரசனைப்போல, அழிவும் வாரா நின்றது!

கருத்து: 'இவளைப் பிரிந்தால் இவள் அழிவாள் என்பதாம்.

சொற்பொருள் : உருப்பு – வெப்பம். என்றூழ் – கோடை. கவா அன் – பக்கமலை. ஓய்பசி – ஒய்ந்த பசியுமாம்; பலநாட் பசிக்கு உணவில்லாத நிலை. வல்சி – உணவு.

விளக்கம் : 'ஓரெயில்' தலைவியின் உடல்; அஞ்சலென்ற இறை' தெளிவித்துக் கூடியிருந்த தலைவன், 'அவன் நீங்கியதும் பகையரசன் கோட்டையை முற்றுகையிட்டு உடைத்தல்', தலைவன் அகன்றதும் பசலைநோய் தலைவியது மேனியழகைச் சிதைத்தல்; 'அதனாற் களையுநர்க் காணாது கலங்கிய மன்னனின் நிலை' தலைவியது உயிரின் நிலை; இவ்வாறு பொருத்திப் பொருள்கண்டு கொள்க.

'ஓரெயில் மன்னன்' அதனைக் கைவிட்டகன்று வேறு சென்று வாழ்தற்கும் போக்கற்ற நிலையினன் ஆகின்றான். அவ்வாறே, இவ்வுடலைப் பசலைக்கு இரையாக தலைவியின் உயிரும், வேறு புகலிடம் காணாதே சென்றொழியும் என்கின்றனள்.

இறைச்சி : 'செந்நாய் தின்று கழித்த மரையாவின் ஊன் வழிச்செல்வார்க்கு உணவாகு மென்றதனாலே, நீ நுகர்ந்து கைவிட்டகன்ற இவளது மேனியின் எழிலினைப் பசலைநோய் பற்றி யுண்ணும் என்பதாம்.

44. நினக்கோ அறியக்கூடியவள்?

பாடியவர் : பெருங்கௌசிகனார்.
திணை: குறிஞ்சி
துறை : இற்செறிப்பின் பிற்றைஞான்று, தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது.

[(து–வி) தலைவியது களவுறவை உணர்ந்த தமர், அவளை இற்சிறையிட்டுக் காத்தலைத் தொடங்கியதன் பிற்றைநாள், வழக்கம்போலக் குறியிடத்திற்கு வந்த தலைவன், அவளை வரக்காணாது கலங்குகின்றான். அவன், தன் மனத்தோடு சொல்லி நோவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

பொருஇல் ஆயமொடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர்அமர் மழைக்கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய
நினக்கே அறியுநள் நெஞ்சே! புனத்த 5
நீடிலை விளைதினைக் கொடுங்கால் நிமிரக்
கொழுங்குரல் கோடல் கண்ணிச் செழும்பல
பல்கிளைக் குரவர் அல்கயர் முன்றில்
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச் 10
செல்மழை இயக்கம் காணும்
நல்மலை நாடன் காதல் மகளே?

நெஞ்சமே! புனத்திடத்தே, நீண்ட இலைகளையுடைய முற்றிய தினைப்பயிரது வளைந்த தாள் நிமிர்ந்து நிற்குமாறு அதன்பால் விளங்கும் கொழுமையான கதிரினைக் கொய்தற்கு நினைப்பார்கள் குறவர் குடியினர். செழுமையும் பல பிரிவுகளையும் கொண்ட பல்வேறு உறவின் முறையாரை உடையவரான அக்குறவர்கள் அதனைக் குறித்து ஊர்மன்றத்தைச் சேர்ந்து விழவயர்தலையும் மேற்கொள்வார்கள். அங்ஙனம், அவர் விழவயவரும் முற்றத்திடத்தே, குடம்போற் பருத்துத் தொங்கும் காய்களைக் கொண்ட ஆசினிப் பலாமரங்களின் உயரமான கிளைகள் தோட்டத்தளவுக்கும் நீண்டவாய் வளர்ந்து நிற்கும். அக் கிளைகளிலே மின்மினிப் பூச்சிகள் அமர்ந்து ஒளிபரப்பியபடி இருக்க, அந்த வெளிச்சத்தை விளக்காகக் கொண்டு, வானத்தே செல்லுகின்ற மழைமேகத்தின் போக்கினைக் கண்டறிவர். அக் குறவர்கள் அத்தகைய நல்ல மலைநாட்டிற்குத் தலைவனாகிய குன்றவனின் அன்பிற்குரிய மகள் நம் தலைவி. அவள்தான் ஒப்பற்ற தன் தோழியரோடும் அருவிநீரிலே திளைத்தாடி. அவ்விடத்து நீரலைகளாற் சிவப்புற்ற, பெரிதும் அமர்த்த, குளிர்ச்சியான கண்களைக் கொண்டவள். அவற்றால் நம்மைக் குறிப்பிட்டு நோக்காதே, மறைவாகக் காணும் பார்லையினளாய், இளமுறுவலையும் நமக்குத் தந்துவிட்டுத் தன் மனையிடத்தும் சென்று சேர்ந்தனள். அந்தக் காமக் குறிப்பினை நினைந்து, இவ்விடத்தே வந்துள்ள நினக்கோ, அவள் அறிந்து துணையாகக் கொள்ளத்தக்க எளியவள்?

கருத்து : 'அவளை முயற்சியுடன் வரைந்து கொண்டதன் பின்னரே அடைதற்கு இயலும்' என்பதாம்.

சொற்பொருள் : பொருவில் ஆயம் - ஒப்பற்ற ஆயம். நீரலைச் சிவந்த – நீரலைகளாற் பொருதப்பட்டுச் சிவந்த, குறியா நோக்கம் - கடைக்கண் பார்வை. அல்கயர் மூன்றில்— வெறியாட்டு அயர்கின்ற முற்றம். ஆசினி –ஆசினிப் பலா; பலா வகையுள் ஒன்று.

விளக்கம் : 'குறியா நோக்கமொடு முறுவல் நல்கி மனைவயிற் பெயர்ந்த' அவளது குறிப்பால் மனையடுத்துள்ள இரவுக்குறி நேர்தலாகிய ஒன்றை உணராதே, பகற்குறி வந்து ஏங்கும் தன் செயற்கு வருந்துகின்றான் அவன். 'குறவர் தினையரிதலைக் குறித்து விழாவயர்தலைக் குறிப்பிட்டது, இனி அவள்தானும் புனங்காவலுக்குப் புறம்போதலும், அவளைத் தான் களவிற் கலத்தலும் வாயாது என்பதனாலாம். 'மின்மினி விளக்கத்துச் சென்மழை இயக்கங்காணும் நன்மலை நாடன்' எனவே, இரவுக்குறி வாய்த்தலும் அரிதாகலால். இனி அவளை வரைதல் ஒன்றே செய்யத்தக்கது என்பதும் கூறினான்.

உள்ளுறை : 'குறவர் மின்மினி விளக்கொளியாற் சென்மழை இயக்கத்தைக் காணுமாறு போல, நீயும் அவளது அக்குறிப்பினாலே அவளது உள்ளத்தையும், அவளது குடிப்பெருமையையும் கொண்டு, அவளை அடைதற்கான வழிவகைகளைக் காணல் வேண்டும்' என்பதாம்.

இறைச்சி : 'சென்மழை இயக்கங்காணும் நன்மலை நாடனாதலின், தலைவியது குறிப்பாலே அவளது நிலையைக் கண்டறிந்து, அவளை இற்செறித்தனன் அவள் தந்தை' என்று கொள்க.

45. நும்மொடு பொறுந்தாது!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : குறை... வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது.

[(து–வி.) தோழி மூலம் தலைவியை அடைவதற்கு முயன்றான் ஒரு தலைவன். அவனுக்கு இசைதற்கு விரும்பாத தோழி, இவ்வாறு கூறியவளாக, அவனைப் பெரிதும் விலகிப் போகச் சொல்லுகின்றாள்.]

இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; 5
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ?
புலவு நாறுதும் செலநின் றீமோ!
பெருநீர் விளையுள்ளம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே; 10
எம்ம னோரில் செம்மலும் உடைத்தே!

ஐயனே! நீ அடைதற்கு நினையும் இவள்தான், கானற்சோலையிடத்துப் பொருந்திய அழகிய சிறு குடியினைச் சேர்ந்தவள்; நீலநிறப் பெருங்கடலும் கலங்குமாறு, அதனுட் புகுந்து சென்று மீன்களைப் பிடித்துவரும் பரதவருடைய மகள்! நீயோ வென்றால், நெடிய கொடியானது அசைந்தாடிக் கொண்டிருக்கும், 'நியமம்' என்னும் மூதூரிடத்தே இருக்கின்ற, கடிய செலவினைக் கொண்ட தேர்ப்படைகளை உடையவனான மன்னனது, அன்பிற்குரிய மகனாக இருக்கின்றனை! நிணத்தினை உடைய சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தலை வேண்டினமாக, அவற்றைக் கவர வரும் புள்ளினங்களை ஒட்டியவராக யாமும் உள்ளேம். எமக்கு நலன் என்பது யாதாகுமோ? யாம் புலவு நாற்றத்தை உடையேம்! அதனால், அகன்று நின்றே சொல்வதனைச் சொல்வாயாக! பெரு நீரான கடலையே விளைவயலாகக் கொண்டு வாழும் எமது சிறிதான நல்வாழ்க்கை, நும்மோடும் ஒப்பாக விளங்குவதும் அன்று. மேலும், எங்கள் பரதவர் குலத்தினருள்ளேயே, இவளை மணக்கத் தகுந்த தலைமைப் பாட்டினரையும் யாம் உடையராயிருக்கின்றேம்

கருத்து : எமக்கு ஏற்றவன் நீயன்றாதலின், எம் பக்கலில் வராதே அகன்று போக' என்பதாம்.

சொற்பொருள் : கானல் – கடற்கானல். காமர் – அழகு. 'நியமம்'– ஓர் ஊர். செம்மல் – தலைமை.

விளக்கம் : நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் என்றது, கோசர்க்கு உரியதான பேரூர்: இந்நாளிலே, இவ்வூர் 'நெகமம்' என்று விளங்குவது. அகநானூற்றுத் தொண்ணூறாவது செய்யுளைச் செய்த மருதனிள நாகனார், 'அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது, பெருங்கடல் முழக்கிற்றாகி, யாணர், இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர், கருங்கட் கோசர் நியமம்' என்று இவ்வூரைக் குறிப்பர். 'கடல் கலங்க உள்புக்கு மீனெறி பரதவர் எம்மவராதலின், நின்னைக் காணின் நினக்குப் பெரிதும் ஏதமாகும்; ஆதலின் அகன்று போக' என்கின்றாள். 'உணக்கல் வேண்டிப் புள் ஓப்புவோம்' என்றது எம்மை நெருங்கின் நின்னையும் அங்ஙனமே அகன்று செல்லப் போக்குவேம் என்பதாம். 'புலவு நாறுதும்' என்றது, அவனுடைய நறுஞ்சாந்தணிந்த மார்பைக் கண்டு அவன் தமக்குப் பொருந்தாமை கூறி விலக்கியதாம். 'எம்மனோரின் செம்மலும் உடைத்தே' என்றது, இவளை மணத்தற்கு உரியான் உறவிலேயே உள்ளனன்' எனக் கூறிப் போக்கியதாம்.




. இனி, இவையெல்லாம், தலைவனை வெறுத்தொதுக்கற் பொருட்டுப் புனைந்து கூறும் சொற்களாகவும் கொள்ளதற்கு உரியன. நியமம் கடற்கரைக் கண்ணதாகலின், அவனும் அவட்கு இசைவான் என்பதை நோக்க, இவ்வாறு கருதுதலும் பொருந்தும்.

மேற்கோள் : தலைவனது பெருமை காரணமாக, அவன் தனக்குப் பொருந்திய தலைவனாக மாட்டான் எனத் தலைவி அவனது விருப்பத்தை மறுத்து, அவனைப் போக்குதற்கண் கூறுவதாக இச்செய்யுளை இளம் பூரணனார் காட்டுவர் (தொல். பொருள்.சூ. 109 உரை), அவ்விடத்து, இது தலைவி கூற்றாகவே கொள்ளப்பட்டது.

'அருமை செய்தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக்குறிப்பால் தலைமையாகக் கூறினாள்' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 22 உரை). இரவு வலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய தலைவனைத் தோழி, 'தான் இவ்வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத்தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றுதல்' எனக் கூறி இச் செய்யுளைக் காட்டித், 'தான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி, அன்பின்மை ஒருதலையாக உடையவள் அல்லள்' எனவும் நச்சினார்கினியர் கூறுவர் (தொல். பொருள். 144. உரை).

46. எய்கணை நீழல்!

பாடியவர் : ......
திணை : பாலை
துறை : பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.

[(து–வி.) பொருளைத் தேடிவருதலைக் கருதினவனாகத் தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டிற்குப் போதலை நினைந்தான் ஒரு தலைவன். தன்னுடைய எண்ணத்தைத் தலைவியிடம் சொன்னால், அவள் பெரிதும் வருத்தமுறுவாள் எனக் கருதித் தோழியிடத்தே உரைக்கின்றான். அவள் இவ்வாறு அவன் செலவினால் வந்துறும் நிலைமையைக் கூறுகின்றாள்.]

வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நீழலின் கழியும்இவ் வுலகத்துக்
காணீர் என்றலோ அரிதே; அதுநனி
பேணீர் ஆகுவிர் ஐய! என் தோழி

பூண்அணி ஆகம் புலம்பப் பாணர் 5
அயிர்ப்புக்கொண் டன்ன கொன்றைஅம் தீங்கனி
பறைஅறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர
வெவ்வளி வழங்கும் வேய்பயில் அழுவத்து
எவ்வம் மிகூ உம் அருஞ்சுரம் இறந்து
நன்வாய் அல்லா வாழ்க்கை 10
மன்னாப் பொருட்பிணிப் பிரிதும்யாம் எனவே.

ஐயனே! கொன்றையின் அழகிய இனிய கனிகளைக் காணும் பாணர்கள், தாம் பறையினை அடித்து முழக்குதற்குப் பயன்படுத்தும் குறுந்தடியாமோ என்று நோக்கி மயக்கங்கொள்ளுமாறு, அதன் தாழ்ந்த கிளைகள் பாறையிடத்தே சென்றுசென்று மோதியவாய் அசைந்தாடிக் கொண்டிருக்கும். அங்ஙனமாகக் காற்று வெம்மையுடனே வீசிக் கொண்டிருப்பதும், மூங்கில்கள் நிறைந்த பெரிய இடத்தை யுடையதுமான, வருத்தத்தை மிகுதியாகக் கொண்ட, கடத்தற்கு அரிதான காட்டு வழியைக் கடந்து போதலையும் நீர் நினைந்தீர். நன்மை வாய்த்தலில்லாத வாழ்க்கையினைத் தருவதான பொருளிடத்தே பிணிக்கப் பட்ட உள்ளத்தினராய், தலைவியது பூணிட்டு அழகுடன் திசழும் மார்பகமானது வருத்தமுறும்படியாக 'இவளை யாம் பிரிதும்' எனவும் கூறினீர். இவ்வுலகத்தே, தலைவியோடு கூடிப் பெறுகின்றதான இன்பச் செவ்வியும், எய்து போக்கப்பட்ட கணையினது நிழலைப்போல. நாள்தோறும் விரைவிற் சென்று சென்று முடிவிலே முற்றவும் இல்லாதே போய்க் கழியும் இயல்பைக் கொண்டனவாம். இவற்றை, 'நீயிர் கண்டறிந்தவர் அல்லீர்' என் சொல்வதும் அரிதாகும். ஆதலின் அதனை நன்றாகப் பேணுகின்ற தகைமையினராக ஆவீராக!

கருத்து : 'இவளைப் பிரிதல் அறத்திற்கும் ஏற்காத ஒரு கொடுந்தன்மையது' என்பதாம்.

சொற்பொருள் : வைகல் – நாள் பேணீர். பேணுந்தகைமையீர்; அயிர்ப்பு – மயக்கம். பறை - பாலைக்குரிய சூறை கோட்பறை. துயல்வரல் – அசைந்தாடல். வெவ்வளி – வெம்மை கொண்ட கோடைக் காற்று. அழுவம் – காடு. நன்வாய் - நன்மை வாய்த்தல்; நன்னெறியும் ஆம்.

விளக்கம் : 'எய்கணை நீழலிற் கழியும்' என்றது, எய்யப்பட்டுக் குறியை நோக்கிச் செல்லுகின்ற கணையினது நீழல் தானும் விரைவாகச் சென்று கணை குறியிடத்துத் தைத்து நின்ற அளவிலே. தானும் முற்றவும் இல்லாதேபோம். இவ்வாறே, இன்பமும் இளமையும் குறித்த பருவத்தை நோக்கி விரைவிற் சென்று, அப் பருவத்தை அடைந்ததும் அழிந்துபோம் என்பதாம். இளமை நிலையாமைக்கு 'நல்லதோர்' உதாரணம் இது. இன்ப நுகர்வாலே இளமை தனக்குரிய பயனைத் தந்து சிறக்கும். அதனால், இன்பத்தை முற்படக் கூறினார். 'எய்கணை' என்றது, அவ்வாறே ஊழாற் பிறந்தது பருவத்தை அடைந்து, நல்லூழாற் கூட்டவும் பெற்ற அவரது இன்ப வாழ்வினைக் குறித்துக் கூறியதாம். 'இவ்வுலகம்' என்றது, இதன் நிலையாமையை நினைந்து. 'நீர் அறிவுடையீர் ஆதலின், நீர் காணீர் என்றலோ அறிது; அங்ஙனம் கண்ட நீர்தாம், அதனை மறக்காது பேணீராகவும் ஆகுவீராக' என்கின்றாள். இது பிரியாமையே செய்யத்தகுவது என்று வலியுறுத்தியதாகும். 'வெங்காற்றால் அலைப்புண்டு பாறையிடத்து மோதித் துன்புறும் கொன்றைக் கிளைகளைக் காணும் பாணர், அதுபடுகின்ற துயருக்கு நோவாது பறையறைதற்கான கடிப்பெனவே மயங்கி இன்புறுமாறு போல நும்பிரிவின் வெம்மையாலே சோரும் இவளது இரங்குதலிவின்றி அதனைத் தாம் வாய்ப்பறை அறைந்து பழிகூறித் திரிதலினாலே இன்புறுவர் அலவற் பெண்டிர்' எனவும், அலரச்சத்தைக் குறிப்பாகக் கூறுகின்றனள். 'மன்னாப் பொருள்' என்றது, அதன் நிலையாமையைக் குறித்துக் கூறியதாகும். 'அதனை விரும்பிச் சென்று, வழியிடைத் துன்பமுற்று, அநுபவிக்கும் இன்பத்தையும் இழந்து, தலைவிக்குத் துயரத்தையும் தருதல் பெரிதும் அறியாமை' என்பாள். 'பேணீர் ஆகுவீர்' என்றாள். இவற்றால், பொருள்வயிற் பிரிதல்தானும் நுகர்தற்குரிய இளமையின் கழிவுக்குப் பினனரே மேற்கொள்ளுதற்குரியது என்பதும் தெற்றென விளங்கும்.

47. சொன்னால் என்னவோ?

பாடியவர் : நல்வெள்ளியார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி.) களவுக் காலத்தே பிரிந்து, அப்பிரிவையும் நீட்டிக்கச் செய்தான் ஒரு தலைவன். அவன் பின்னொரு நாள் வந்து, ஒருசார் தலைவியைக் காணுஞ் செவ்வியைத் தேர்ந்தானாக நிற்கின்றான். தோழி, அவன் உள்ளத்தைத் தலைவியொடு மணவினை நேர்தலிற் செலுத்தக் கருதினாள். தலைவிக்கு உரைப்பாள் போல. அவனும் கேட்குமாறு இவ்வாறு கூறுகின்றாள்.]

பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்
பைதலம் குழவி தழீஇ, ஓய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும் 5
கானக நாடற்கு, 'இதுஎன' யான்அது
கூறின் எவனோ தோழி! வேறுஉணர்ந்து
அணங்கறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து
பொன்நேர் பசலைக்கு உதவா மாறே? 10

தோழீ! நின் மேனியிடத்துக் களவுக்காலத்து நேர்ந்த இந்தப் பிரிவுத்துயரினாலே வந்துற்ற வேறுபாட்டினை கண்டனள் அன்னையும். அதுதான் வேறொன்றாலே வந்துற்ற தெனவும் அவள் கருதினாள். தெய்வம் அணங்கிற்றாதலை அறிதற்குரிய கழங்கினிடத்தே. அம்மாறுபாட்டைக் குறித்துக் குறிகாணவும் நினைந்தாள். அதனைக் காரணமாகக் காட்டி, 'முருகை வேட்டு வெறியயரத் தீரும்' எனவும் நம்பினாள். அந்த நினைவோடு, ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலியிட்டு, முருகிற்கு வெறியும் அயர்ந்தாள். வெறிக்களத்தே, வேலன்பால் தோன்றிய முருகும், நின் பொன்னொத்த பசலை நோய் தீர்தற்கு உதவாமற் போதலைக் கண்டாள். அதன் பின்னர்ப் பெரிதும் கவலையுற்றவள் ஆயினாள்.

புலியானது, தனக்குரிய பெருங்களிற்றைக் கொன்றதனைக் கண்டது, அதன் கரிய பிடியானை ஒன்று. அதனால், வாடச்செய்யும் பிரிவு நோயாகிய வருத்தத்தோடு, தான் நின்ற இடத்தினின்றும் அகன்று இயங்குதற்கும் மாட்டாதாய், அது ஆயிற்று. நெய்தலின் பசுமையான இலையைப் போலத் தோற்றும் அழகிய காதுகளையுடையதும், தகப்பனை இழந்து துன்புற்றிருந்ததுமான தன் அழகிய கன்றினைத்தான் தழுவிக் கொண்டதாய்த், திடுமென விரைவாக வந்தடைந்த ஆற்றுதற்கரிய புண்ணுற்றார் ஒருவரைப் போலப் பெரிதும் வருத்தமுற்று, அவ்விடத்தேயே நிற்பதுமாயிற்று. அத்தன்மையினையுடைய கானக நாடன் நம் தலைவன் ஆவான்!

அவனுக்கு, 'நம் நிலைமைதான் இத்தன்மையது' என்று அதனைக் குறித்துக் கூறினால் எதுவும் குற்றமாகுமோ?

கருத்து : 'விரைய வந்து நம்மை மணந்துகொள்ளுமாறு அவனை வற்புறுத்துவோம்' என்பதுமாம்.

சொற்பொருள் : உழுவை – புலி. பிணி – பிரிவாலுற்ற நோய்; உள்ளத்தைப் பிணித்துக் கொண்டிருத்தலாற் பிணியாயிற்று. இயங்கல் – இடம்விட்டு நகருதல். பைதல் – துன்பம்.

விளக்கம் : 'முருகு உதவாமாறு' காணும் அன்னை, இது தெய்வக் குற்றமன்று என்பதனைத் தெளிந்து, தலைவியது களவுறவை அறியவும், அதனால் தலைவியை இற்செறிக்கவும் நேருமாதலின், வரைந்து வந்து மணத்தலே செய்தற்கு உரித்தாகுமெனத் தலைவனும் உணர்வான். ‘கழங்கு காணல்' ஒரு வகைக் குறிபார்த்தல். 'அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி, சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல், ஆகுவதறியும் முதுவாய் வேல! கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம்' எனக் குறிகேட்டறியும் மரபினைக் 'கயமனார்' மணிமிடைபவளம் விளக்கிக் கூறுகின்றனர் –(அகம். செய்யுள் 195). 'யான் அது கூறின் எவனோ?' என்றது, நம்பால் அருளுற்று நம் துயரையறிந்து தீர்த்தற்கு மறந்தானாகிய அவனுக்கு, யானே அதுகுறித்துக் கூறித் தெளிவித்தால் என்ன தவறோ?' என்றதாம். இதனால், தலைவி தோழிக்குக் கூறியதாக இச்செய்யுளைக் கொள்வதும் பொருந்துவதாகும்.

உள்ளுறை : 'களிற்றின் பிரிவுக்கு ஆற்றாத பிடியானது, தன் கன்றைத் தழுவியபடியே செயலற்று வாடி நிற்கும் நாடன்' என்றது, 'அத்தகைய நாட்டினனாயிருந்தும், தன்னைப் பிரிந்ததனால் தலைவிக்கு வந்துறும் பெருநோயைப் பற்றிக் கருதானாய், அவளை வரைந்கொள்ளாதும், பிரிந்து நெடுநாள் அகன்று போயும் அருளற்றவன் ஆயினனே' என்று நொந்ததாம். 'தலைவனை இழந்த பெருவருத்தத்தோடும் செயலற்ற பிடி, தன் கன்றினைக் காத்துப் பேணும் பண்பினதாய் அதனைத் தழுவி நின்றாற்போலத், தலைவனின் பிரிவுக் கொடுமையால் நலனிழந்த தலைவி, நாணாகிய நலனுடைமையால். தன் துயரைப் பிறர் அறியாதபடி காக்துப் பேணி நின்றனள்' என்று, அவளது கற்பு மேம்பாட்டைக் கூறியதும் ஆகும்.

48. கண்ணுள் போலச் சுழலும்!

பாடியவர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ,
திணை : பாலை
துறை : பிரிவுணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது

[(து–வி) தலைவியைப் பிரிந்து போதலைப்பற்றித் தலைவன் தோழியிடத்தே கூறுதலும், அவள், அதனால் தலைவிக்கு நேரும் துயர மிகுதியை அறிவுறுத்தி, அவன் நினைவை மாற்ற முயல்வாளாக, இவ்வாறு கூறுகின்றாள்.]

அன்றை அனைய ஆகி, இன்றும்எம்
கண்உள போலச் சுழலும் மாதோ—
புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி,
புறவுஅணி கொண்ட பூநாறு கடத்திடைக் 5
கிடின்என இடிக்கும் கோல்தொடி மறவர்
வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாது!
அமரிடை உறுதர, நீக்கி, நீர்
எமரிடை உறுதர ஒளித்த காடே.


ஐயனே! கோங்கினது மெல்லிய இதழ்மிக்க குடை போன்ற புல்லிய புறவிதழ்களையுடைய பூக்கள், வைகறைப் பொழுதிலே வானிடத்துக் காணப்படும் மீன்களோ எனக் காண்பார் கருதும்படியாகத் தோன்றும். அவ்வாறு காடெங்கணும் அழகு கொண்டிருந்ததாய் மலர்மணம் வீசியபடி யிருந்த கன்னெறியிலே, முன்பும் நீர் சென்றீர். 'கிடின்' என முழக்கமிடும் வீரவளைகளை அணிந்தோரான மறவர்கள், கூர்மை பொருந்திய அம்பினாலே செயலாற்றும் திறனுடையோர் ஆவர். அவர்கள், நம்பால் எதிரிட்டு வந்து, நம்முடன் போரினைத் தொடங்கினர். அவர்கட்கு அஞ்சாதே போரிடத்தே ஈடுபட்டு அவர்களை வெற்றி கொண்டு நீர் போக்கினீர். அவ்வேளையிலே, எம்மைப் பின்தொடர்ந்தாராக எம் ஐயன்மார் அவ்விடத்தே வந்து சேரவும், அவர்கட்கு எதிர்நிற்கத் துணியாதே, எம்மைக் கைவிட்டு நீங்கிச் சென்றீராய், அவர்கள் பார்வையிற் படாவண்ணம் ஒளித்துங் கொண்டீர். அந்தக் காடானது அற்றை நாளைப் போன்ற நிலையதேயாகி. இற்றை நாளினும், எம் கண்ணிடத்தே இருப்பதுபோலத் தோன்றிச் சுழலா நிற்கும்!

கருத்து : நும்மையே துணையாகக் கொண்டு வந்தேமாகிய எம்பால், அருளின்றிப் பீரிதல் பொருந்தாது என்பதாம்.

சொற்பொருள் : மறவர் – ஆறலைப்போராகிய பாலை நிலமாக்கள். வடி நவில் அம்பு – வடித்தல் பொருந்திய அம்பு; கூர்மையாகவும், எய்யப் பெற்றுக் கறைபடாதேயும் விளங்கும் அம்பு.

விளக்கம் : தலைவியைப் பிரியக் கருதிய தலைவனுக்கு, முன்னர்த் தன் இல்லத்தாரைப் பிரிந்து உடன்போக்கிலே வந்த தலைவியது பேரன்புத் திறத்தையும். அதுகாலை நேரிட்ட மறக்கமுடியாததொரு நிகழ்ச்சியையும், இப்படி எடுத்துக் கூறுகிறாள் தோழி. 'மறவரை அஞ்சாது எதிரிட்டு வென்று போக்கி, எம்மவர் வரவும் ஒளித்தீர்' என்றது, 'எம்மவருக்குத் துன்பமிழைப்பின் எம்முள்ளம் நோதல் கூடுமென்ற அருளினாலே, அன்று நும்மை எளியராகக் காட்டிக் கொண்டீர்' என்பதாம். இதனால், 'நும் ஆண்மைக்கு இழுக்கெனக் கருதாது, தலைவியின் நலத்தையே கருதினவரான தகுதி படைத்திருந்த நீர் தாமோ, இன்று இவளுக்கு அழிவைத் தருவதான இச் செயலைத் துணிந்தீர்' என வினவியதும் ஆம். எமரையும் பிரிந்தோம்; உறுதுணையெனக் கொண்ட நீரும் பிரிந்துபோயின், என்னாவளோ? எனக் கலங்குகின்றாள் தோழி. 'காடு வளம் பெற்றிருந்த காலத்தேயே வழிப்போவரைத் தாக்கும் மறவர், காடு வளங்குன்றிக்கிடக்கும் கோடைக்காலத்தே தாக்குதலைத் தவிர்வரோ? ஆதலின், அதுகாலை நமக்கு ஏதம் வருமோவென யாம் அஞ்சமாட்டேமோ?' என்றதாம். 'ஒளித்த காடு கண்ணுள் போல இன்றும் சுழலும்' என்றது, 'நுமக்கு அவ்விடத்தே எம் நினைவு கிளர்ந்தெழ நீர் வினைபாலும் செல்லா மனத்தீராய்த், தலைவியின் நினைவாலே இடையில் திரும்புதலை மேற்கொண்டு, அதனால் பழியையும் பெறுவீர்' என்றதுமாம்.

இறைச்சி : கோங்கம்பூ மலர்ந்ததாய்க் காடும் அழகு கொண்டிருந்ததென்பது, 'நீரும் மகிழ்வோடு தலையளி செய்திருக்கத், தலைவியும் தன் எழில் குன்றாளாய் இல்லறமாற்றிப் பெருமையடைவாள்' என்பதாம்.

49. அறிந்தால் என்னவோ?

பாடியவர் : நெய்தல் தத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது. (1): சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்த தூஉம் (2) ஆம்.

[(து–வி.) இரவுக் குறியிலே தலைவனைக் கூடுதற்கான வாய்ப்பை எடுத்துக்காட்டித் தோழி, தலைவியை அதனை மேற்கொள்ளும் விருப்பினளாக்க முயலுதல் (1); தலைவன் இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைவியது ஆற்றாமையினைக் கண்டு வியப்பாள்போல இவ்வாறு கூறி தலைவன் விரைய வரைந்து கோடலே தக்கதெனக் கருதுமாறு தூண்டுதல் (2).]

படுதிரை கொழீஇய பால்நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறைபுலம் பின்றே;
முடிவலை முகந்த முடங்குஇறாப் பரவைப்
படுபுள் ஓப்பலின் பகல்மாய்ந் தன்றே;
கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து 5
எமரும் அல்கினர்! 'எமார்ந் தனம்' எனச்
சென்றுநாம் அறியின், எவனோ—தோழி!
மன்றப் புன்னை மாச்சினை நறுவீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண்கடற் சேர்ப்பன்வாழ் சிறுநல் ஊர்க்கே? 10

தோழி! படுகின்ற அலைகள் கொண்டு குவித்த, பாலைப் போன்ற வெண்மை நிறத்தையுடைய மணல்மேட்டிடத்தே விளையாட்டயர்ந்திருந்த வளைக்கையினரான இளமகளிர், அதனை நீங்கிச்சென்று, தம் தம் மனையிடத்தே உறங்கியபடி இருத்தலினாலே, கடற்றுறை தனிமையுற்று விளங்குகின்றது. முடித்தலையுடைய வலைகளால் கடலினின்றும் முகக்கப்பெற்றமுடங்குதலையுடைய இறால்மீன்களைக் காயவிட்டு, வந்து படியும் புள்ளினங்களை ஓட்டியிருத்தலினாலே, பகற்போதும் ஒருபடியாகக் கழிந்து போயிற்று. கொம்புகளைக் கொண்ட சுறாமீன்களைப்பற்றிக் கொணர்ந்த மகிழ்ச்சியினராக, எம் ஐயன்மாரும். இரவிற் செல்லும் மீன் வேட்டையினைச் கைவிட்டவராக, இல்லிடத்தே தங்கியிருப்பாராயினர். அதனாலே, மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையிடத்துள்ள நறிய பூக்கள், வீட்டு முற்றத்திடத்தேயுள்ள தாழையின் பூக்களோடு சேர்ந்து மணங்கமழ்ந்து கொண்டிருக்கும், தெளிந்த கடல்நாட்டவனான தலைவன் வாழ்கின்ற, நன்மை கொண்ட சிற்றூரிடத்தே சென்று. நாம் அவனது நினைவிலே மயங்கினேம் எனக்கூறி, அவன் கருத்தினை அறிந்துவரின் என்ன குற்றமாமோ?

கருத்து : 'அனைவரும் துயில, யாமே நின் பிரிவால் வந்துற்ற நோய் காரணமாகத் துயிலிழந்தோம். யாமும் இனிதே துயில் கொள்ளுமாறு, எம்மைப் பிரியாதேயிருக்கும் மணவாழ்வினை நாடாயோ' என்பதுமாம்.

சொற்பொருள் : முயக்கம் – வளைவு: காய்தலாற் சுருங்கும் சுருக்கம். ஏம் – இன்பம்; ஏமார்ந்தனம்; மயக்கம். இன்பத்தை விரும்பினோம்; மயங்கினோம்.

விளக்கம் : 'துறை புலம்பின்று' என்றாள், அவ்வழி வருதலை யாரும் அறியார் எனற் பொருட்டு 'பகன் மாய்ந்தன்று' என்றாள், கடலிடத்துச் செல்லும் பரதவரது இயக்கமும் இராதெனற் பொருட்டு. 'எமரும் அல்கினர்' என்றாள், அவராலும் ஏதமின்று என்பதனைக் காட்டுவற் பொருட்டு. இதனால், இல்லை நீங்கிச் சென்று, தலைவனை இரவுக் குறியிலே சந்தித்ததற்கு நல்ல சந்தர்ப்பம் என்று வற்புறுத்தினாள். இவ்வாறு கொள்ளின் இரவுக்குறி நயத்தலாயிற்று.

இனி, 'அனைத்தும் ஒடுங்கின இந்த இரவின் யாமத்தும், அவனைக் காணாதே வருந்தினமாய், யாம் மட்டுமே துயில் ஒழிந்து மயங்கினேம் எனக் கூறினாள்' எனக்கொண்டால், 'தலைவியின் ஆற்றாமையை வியந்து வரைவு வேட்டலை நயந்தாள்' என்று ஆகும்.

'கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து எமரும் அல்கினர்' என்றது, தலைவியது தகுதிப்பாட்டைக் கூறி, அவ்வாறே நும்மை அணைத்துத் தன்பாற் கொள்ளும் வேட்டம் வாய்த்தாலன்றி, இவளும் அமைந்திராத பெருங்காதற்றிண்மை உடையாளாய் அதனை மறவாள் என்றதாம்.

உள்ளுறை : 'மன்றப் புன்னை மாச்சினை நறுவீ, முன்றில் தாழையொடு கமழும் ஊர்' என்றதனால், அவ்வாறே இவ்விடத்தாளாகிய நீயும் அவ்விடத்தானாகிய அவனுடன் அவனில்லிற் கூடியிருந்து இல்லறமாற்றுவாய்' என்றனள்.

50. பெருமையும் சிறுமையும்?

பாடியவர் : மருதம் பாடிய இளங்கடுங்கோ.
திணை : மருதம்.
துறை : தோழி பாணற்கு வாயில் மறுத்தது.

[(து–வி.) பரத்தை காரணமாகத் தலைவியைப் பிரிந்து சென்று சின்னாளிருந்த தலைவன், மீண்டும் தலைவியை நாடியவனாகப் பாணனைத் தூது விடுக்கின்றான். அப் பாணனிடம், 'தலைவி தலைவனை ஏற்பதற்கு விரும்பாள்' எனத் தோழி வரவு மறுத்துக் கூறுகின்றாள்.]

அறியா மையின், அன்னை! அஞ்சிக்
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவுஅயர் துணங்கை தழூஉகம் செல்ல.
நெடுநிமிர் தெருவில் கைபுகு கொடுமிடை,
நொதும லாளன் கதுமெனத் தாக்கலின், 5
'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று'என,
'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர்,
'நாண்இலை, எலுவ!' என்றுவந் திசினே—
செறுநரும் விழையும் செம்மலோன் என,
நறுநுதல் அரிவை; போற்றேன்,
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே 10

அன்னையோ! குழையணிந்தோனாகவும், கோதை சூடியோனாகவும். குறிய பலவாய வளைகளை அணிந்தோனாகவும், பெண்மைக் கோலத்தைப் பூண்டு ஒருவன் சேரிப் பரத்தையரோடு துணங்கைக் கூத்தாடியிருந்தான். அக்களத்திடத்தே யானும் கூத்துக் காண்பாளாக ஒரு நாட் சென்றேன். அவனை அங்குக் கண்டதும் அஞ்சியவளாக அவ்விடத்தை விட்டு அகன்றேன். நெடிதாக நிமிர்ந்த தெரு முனையிலே, எதிர்ப்பட்டு வருவார் ஒருவர் கையிடத்தே ஒருவர் புகுந்து மோதிக்கொள்ளும் வளைவினிடத்தே, அயலானாகிய அவனும் கதுமென வந்தானாக, என்னோடும் மோதிக் கொண்டனன். 'இங்ஙனம் வந்து மோதிய நின்னைக் கேட்பாரும் உளரோ இல்லையோ? அதனை அறிந்துகொள்' என்று, யான் சினந்தேன். அவனோ, 'நின் பசலையும் புத்தழகினை உடையது' என்றான். அதற்கு எதிருரையாக 'எலுவ! நீ நாணம் உடையால் அல்லை' என்று கூறினவளாக. அவனிடமிருந்து விடுபட்டு வந்துவிட்டேன். அவனைப் பகைத்தோரும்; அவனையடைதலை விரும்புகின்ற தலைமையாளன் அவன் என்று கொண்டு, நறிய நெற்றியினையுடைய அரிவையே! யான் அவனைப் போற்றினேன் அல்லேன். சிறுமையானது தன்பாற் பெருமை வந்து திடுமெனச் சேர்ந்த காலத்தும், அதளைத் தனக்குச் சிறப்பென ஆராய்ந்து அறியாதல்லவோ? அவ்வாறே, என் அறியாமையினாலேதான் யானும் அந்தச் சந்தர்ப்பத்தை இழந்தேன்!

கருத்து : 'தலைவன் எத்தகைய மகளிரையும் காமுற்றுப் பின்தொடரும் வெறியன். அதனால், 'அவன் தலைவியிடத்தே உண்மையன்பினாலே வந்தானல்லன்'; என்பதாம்.

சொற்பொருள் : துணங்கை – மகளிர் கைகோத்துத் துணங்கை கொட்டியாடும் களியாட்டம். நொதுமலாளன் – அயலான். கதுமென – விரைய. தாக்கல் – வந்து மோதுதல்.

விளக்கம் : 'அறியாமையின்' என்றது, தலைவன் துணங்கை அயரும் களத்திலே பெண்வேடத்தோடு ஆடியிருந்தான் என்பதை அறியாத தன்மையை. ‘அஞ்சி' என்றது, அவனை அங்குக் கண்டதும், அஞ்சியகன்ற தனது நிலையை. அதனை உணராத அவன், தன்னை விரும்பிக் குறிப்புக் காட்டிப் போவதாக நினைத்து, வேறுவழியாக முற்படவந்து, வளைவிடத்தே, எதிர்பாராது அவள் கைப் புகுந்து அவளை அணைத்தனன். அது குறித்தே அவள் அரற்றுகிறாள். அவனே, அதனை அஞ்சுங்குரல் எனக் குறித்தானாக 'யாணது பசலை' எனக் கூறியவனாக, அவள் தோள்களை ஆராயப் புகுகின்றான். அதன்மேற் பொறுத்தல் கூடாத நிலையில், 'நாணிலை எலுவ' எனக் கூறி அவள் விடுபட்டு ஓடுகின்றாள். இது, தலைவன், புதியளான பரத்தை ஒருத்தியைத் தன்பாற் கொண்டதனையும், அவளைக் கூட்டுவித்தவன் அப் பாண்மகனே என்பதனையும் அறிந்த தோழி, தன்மேலிட்டு அவன் நாணுமாறு புனைந்து கூறியதாம். தலைவி, தன் பெருங் சுற்புத்திறத்தால், தலைவனைப் பழித்தமை செய்த தோழியைச் சினந்துகொள்வாளாகவே, 'போற்றேன், சிறுமை பெருமையின் காணாது துணிந்தே' என்கின்றாள். இவற்றால், தலைலியின் கற்பு மேம்பாட்டை உரைத்துத் தலைவி என்றும் தலைவனை மறவாதவள் என்பதனை வலியுறுத்தினளாம். 'பாணனிடம், தோழி தலைவிபாற் கூறுவாள்போலக் கூறும் இவற்றைக் கேட்கும் தலைவன், தான் செய்தற்கு நாணினனாகத் தலைபால் குறையிரந்து, அவளைத் தெளிவித்துக் கூடுவான்' என்பது இதன் பயன்.

மேற்கோள் : 'வரையா நாளிடை வந்தோன் முட்டிய வழிக் தலைவி கூறியற்குச் செய்யுள்' என இதனைக் காட்டுவர் இளம்பூரணனார் (தொல். பொருள். சூ, 11 உரை) 'வரையாத நாளின்கண் மறைந்தொழுகா நின்ற தலைவன்', செவிலி முதலாயினாரை முட்டின வழி, தலைவி, அவனை அயலான் போலவும், தன்னை நாடிப் பின்வருவான் ஒருவன் போலவும், தான் அவன்பாற் செல்லா மனத்தள் போலவும் காட்டியவளாகத் தங்கள் உறவை மறைத்துக் கூறுவது இதுவென அப்போது கொள்ளல் வேண்டும்.

51. எதனைச் செய்வோம்?

பாடியவர் : பேராலவாயர்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆற்றது ஏதமஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து–வி) வெறியயர் களத்திலே ஒரு பக்கமாக நின்ற தலைவி, தன்னை நாடி வந்து நின்ற தலைவன், அவ்விடத்தே வருதலால் வரும் துன்பத்திற்கு அஞ்சுகின்றாள். அதனால், மறைய நின்ற அவன் கேட்குமாறு, இவ்வாறு தோழிக்கு உரைப்பாள்போல் உரைத்து, அவனைப் போக்குகின்றாள்.]

யாங்குச் செய்வாம்கொல்—தோழி! ஓங்குகழைக் காம்புடை விடரகம் சிலம்பப் பாம்புஉடன்று ஓங்குவரை மிளிரஆட்டி; வீங்குசெலல் கடுங்குரல் ஏறொடு கனைதுளி தலைஇப் பெயல்ஆ னாதே, வானம்; பெயலொடு 5

மின்னுநிமிர்ந் தன்ன வேலன் வந்தெனப்
பின்னுவிடு முச்சி அளிப்ப ஆனாதே;
பெருந்தண் குளவி குழைத்த பாஅடி,
இருஞ்சேறு ஆடிய நுதல கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்த 10
வீததர் வேங்கைய மலைகிழ வோற்கே?

தோழி! ஓங்கியுயர்ந்த தண்டினையுடைய மூங்கில்கள் நிரம்பிய மலைப்பிளப்பிடங்கள் எல்லாம் எதிரொலிக்குமாறும் பாம்புகள் உயர்ந்த வரையிடத்துக் கிடந்தவாய் வருத்தமுற்றுப் புரண்டு ஒளிரவும், கடிய குரலைச் செய்தன இடியேறுகள். அவற்றோடு, விரைந்த செலவையுடைய மேகங்கள் மிக்க துளிகளைச் சொரியத் தலைப்பட்டுப் பெயலும் நீங்காதே உள்ளது. அத்தகைய பெயலைக் கண்டதும், யான் அவ்வழியே நம் பொருட்டாக வரும் தலைவனுக்குத் துன்பம் உண்டாகுமோ எனக் கருதினளாக அஞ்சினேன். அதனால் வேறுபட்ட என் மேனியை நோக்கித் தெய்வம் அணங்கிற்றெனக் கருதிய அன்னையும், வெறியாடலை ஏற்படுத்தினாள். மின்னலைக் கொண்டு செய்தமைத்தாற் போன்று ஒளிறும் வேலினைக் கைக் கொண்டோனாக, வெறியாடும் வேலனும் வந்தனன். பின்னி விடுதலையுடைய கொண்டையிற் பூவைக் குலையாதே காத்தலும் இயலாதாயிற்று. பெரிதுங் குளிர்ச்சி வாய்ந்த காட்டுமல்லிகைக் கொடியினை மிதித்துச் சிதைத்த பரந்த அடிகளையுடைய கொலைவல்ல களிறானது, கரிய சேற்றிலே திளைத்தாடிய நெற்றியைக் கொண்டதாய், இளமைப் பருவத்தைக் கொண்ட ஆசினியை ஒடித்துப் போட்டபின், வேங்கைப் பூக்கள் சிதறிக்கிடக்கின்ற வேங்கை மரத்தினடியிலே சென்று தங்கா நிற்கும். அத் தன்மையுடைய மலைக்கு உரியோனாகிய நம் தலைவனுக்கு; இனி நாம் தாம் எதனைச் செய்யமாட்டுவாம்? நீதான், அதனை எனக்குக் கூறுவாயாக.

கருத்து : இனித் தலைவனோடு களவிற்கூடி இன்புறுதல் வாயாது போலும்' என்பதாம்.

சொற்பொருள் : உடன்று – வருந்தி, மிளிர ஒளி கொள்ள. வீங்கு செலல் - விரைந்த செலவு. கனைதுளி – மிக்க துளிகள். முச்சி – கொண்டை. குளவி – காட்டு மல்லிகை. ஆசினி – ஆசினிப் பலா; பேதை ஆசினி – முதிராத ஆசினி.

விளக்கம் : பெயலைக் கண்டவள். அக்காட்டூடு இரவினும் வருதலையுடையானாகிய தலைவனை நினைந்தாளாய், அவனுக்கு வரும் ஏதத்தைக் கருதித் தளர்ந்தாள். அதனால் வேறுபட்ட அவள் மேனியைக் கண்ட அன்னை, முருகு அணங்கிற்றென வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்தாள், வெறியயரும் வேலனும் வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றான். இனித் தலைவியை முன்னிறுத்தி அவள் கூந்தலிற் பூவை எடுத்துப் போட்டுப் பரவுக்கடன் தருதலும் நிகழும். இதற்கிடையே ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கும் தலைவியும் தோழியும் தலைவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்பதைக் காணுகின்றனர். தம் நிலையை உணர்த்தித் தம்மைக் கைவிடாது காக்குமாற்றான் விரைய வரைந்துவருமாறு அறிவுறுத்தவும், அந்நிலையே அவ்விடத்தை விட்டுப் போக்கவும் நினைக்கின்றனர். இந்த நினைவோடு தோழியிடத்துக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.

உள்ளுறை : பெருந்தண் குளவி குழைத்த பாவடிக் கொல்களிறு தலைவியைக் களவிற்கூடிப் பிரிந்து அவளது நலத்தைச் சிதையுமாறு செய்த தலைவனாகவும், இருஞ்சேறாடிய நுதலதாக அது ஆகியது அலருரையாற் பழியேற்ற தன்மையனாக அவன் ஆகியதனையும், பேதை ஆசினியை ஒசித்தது வரைந்துவரும் முயற்சியிலே செல்லாது களவையே நாடி வந்து இன்பத்தை இழக்கச்செய்து வருத்தியதையும், வீததர் வேங்கையடியிலே நின்றது வெறியயர் களத்திலே முருகைப்போல வந்து நிற்கும் நிலையினையும் குறிப்பனவாகக் கொள்க இனி, வேங்கை பூக்கும் காலம் ஆதலின் அதுவே மணத்திற்கான காலமென்பதை இதன் மூலம் உணர்த்தினளாகவும் கொள்க.

52. நீங்க மாட்டோம்!

பாடியவர் : பாலத்தனார்.
திணை : பாலை.
துறை : தலைமகன் செலவு அழுங்கியது.

[(து–வி.) தலைவியைப் பிரிந்து பொருள்தேடி வருதலிற் செல்லுதற்குத் தன் மனம் தூண்டுதலைச் செய்யத், தலைவியைப் பிரிந்து போதற்கு இயலாதும், பொருளார்வத்தை ஒதுக்குதற்கு முடியாதும் துன்புறுகின்றான் ஒரு தலைவன். முடிவில், தலைவியின் நினைவே வெற்றி பெறுகின்றது. அவன் தன் மனத்திற்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல்
மணம்கமழ் நாற்றம் மரீஇ, யாம்இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி
வீங்குஉவர்க் கவவின் நீங்கல் செல்லேம்; 5
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்துறை வாழ்க்கை புரிந்துஅமை யலையே;
அன்புஇலை வாழிஎன் நெஞ்சே! வெம்போர்
மழவர் பெருமகன் மாவண் ஓரி
கைவளம் இயைவது ஆயினும், 10
ஐதே கம்ம, இயைந்துசெய் பொருளே!

எனக்கே உரியையாயிருந்த என் நெஞ்சமே! கரிய கொடியையுடைய அதிரலின் பூவோடு, தூய பொற்றகட்டினைப் போலத் தோன்றும் பாதிரியின் பூக்களையும் எதிர் எதிர் பொருந்துமாறு வைத்து வேய்ந்திருக்கும் கூந்தலினை உடையவள் நம் தலைவி யாவாள். மணம் கமழுகின்ற அந்தக் கூந்தலின் நறுமணத்திடத்தே பொருந்தினேனாய் அவளுடைய பொற்சுணங்குகள் பரந்துள்ள மார்பகத்தினை முற்றவும் என் மார்போடு பொருந்துமாறு தழுவிக் கொள்வேன். மிகுதியான சுவையினைக் கொண்டதான அந்த அணைப்பினைவிட்டு யான் விலகிப் போதலைச் செய்யேன் ஆயின் நீதானும் பொருளீட்டும் முயற்சியானது சிறப்பாக வாய்த்தலிலேயே எண்ணங் கொண்டுள்ளனை. பன்னாளும் இவளைப் பிரிந்து வாழும் அந்த வாழ்வினையே விரும்பினையாய் அமைகின்றாயும் இல்லை. அதனாலே என்பால் உனக்கு அன்பும் இல்லை நீ வாழ்வாயாக! வெம்மையான போராற்றலைக் கொண்டவர் மழவர்கள். அவர்களின் பெருமானாகத் திகழ்ந்தவன் பெரு வள்ளலான 'ஓரி' என்பவன். அவனது கை வண்மையே போல யானும் வழங்கிப் புகழடையுமாறு பெரும்பொருள் எனக்கு வந்து வாய்ப்பினும் அதனை விரும்பேன். நுட்பமாக நீ ஈடுபட்டு விழையும் அந்தப் பொருள் முயற்சிதான் நினக்கே வாய்ப்பதாக!

கருத்து : 'இவளைப் பிரிந்து வரும் பொருள் எந்துணைப் பெரிதாயினும் அதனை வேண்டேன்' என்பதாம்.

சொற்பொருள் : மாக் கொடி – கருங்கொடி. மரீஇ – பொருந்தி. உவர்–சுவை; உவர்த்தல் கொண்ட உப்பினையன்றிச் சுவை தருவது யாதுமின்று; ஆதலின் 'உவர்' சுவையாகக் கொள்ளப்படும். ஆள்வினை – முயற்சி. புரிதல் – விரும்பல்.

விளக்கம் : 'கூந்தல் நாற்றம் மரீஇ' என்றது. கூந்தலே அணையாகக் கொண்டு துயின்று பெறுகின்ற இன்பமிகுதியை வியந்து கூறியது. 'ஆகம் அடைய முயங்குதல்' ஆவது, வளியிடைப் போகா முயக்கம் ஆகும். 'என் நெஞ்சே' என்றது முன்னர் எனக்கே உரியையாயிருந்து, இதுகாலை எனக்கு எதிராகப் போகின்ற நெஞ்சமே என்பதாம். ஐது என்றது மெல்லிதும் ஆம். 'ஓரி' கொல்லி மலைத் தலைவன். 'வல்வில் ஓரி' எனப் புகழ்பெற்றவன். 'அதிரல், என்பது புனலிப்பூவையும், மோசிமல்லிகைப் பூவையும் குறிக்கும்.

53. அன்னை நினைத்தது!

பாடியவர் : நல்வேட்டனார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரைவு நீட்டிப்பத் தோழி சிறைப்புறமாகச் சொல்வியது.

[(து–வி.) வரைந்து வருவேன் எனக்கூறிய தலைவனின் சொற்கள் வாயாவாயின. அதனால், தலைவியின் வாட்டமும் மிகுதிப்பட்டது. இந்நிலையில், ஒருநாள் தலைவியும் தோழியும் உரையாடியிருந்த இடத்தருகே, ஒருசார் வந்து செவ்வி நோக்கியபடி நின்றிருந்தான் அவன். அவனைக் கண்ட தோழி, தலைவிக்குச் சொல்வாளேபோல, அவனும் கேட்டுணருமாறு இப்படிக் கூறுகின்றனள்.]

யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான்அஃது
அறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?
எவன்கொல், தோழி அன்னை கண்ணியது?
வான்உற நிவந்த பெருமலைக் கவாஅன்
ஆர்கலி வானம் தலைஇ, நடுநாள் 5
கனைபெயல் பொழிந்தெனக் கானக் கல்யாற்று
முளிஇலை கழித்தன முகிழ்இண ரொடுவரும்

விருந்தின் தீம்நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
முனியா தாடப் பெறின் இவள் 10
பனியும் தீர்குவள் செல்கஎன் றோளே!

தோழி! நின் மேனியது வாட்டத்திற்குக் காரணம், நீ தலைவனைப் பிரிந்திருத்தலால் உண்டாய காமநோய்தான் என்று அன்னையிடம் கூறுதற்கு அஞ்சினேனாக, யானும், அவள் பலகாற் கேட்பவும், அதனை மறைத்தே நின்றேன், 'வானத்தைப் பொருந்துமாறு போல மிக்குயர்ந்த பெரு மலைப் பக்கத்தே மிக்க இடியோசையையுடைய மேகமானது மழை பெய்யத் தொடங்கிற்று. நள்ளிருட் போதிலே அது பெரும் பெயலாகவும் பொழிந்தது. அதனால், கற்களையுடைய காட்டாற்றிடத்தே புதுவெள்ளம் வருகின்றது. மரங்கள் கழித்த காய்ந்த இலைகளோடு, அவற்றின்பால் முகிழ்த்திருந்த பூங்கொத்துக்களையும் அடித்துக் கொண்டு வருவதான. அந்தப் புதுவெள்ளத்தின் இனிய நீரானது இவளது நோய்க்கு மருந்தும் ஆகும். குளிர்ச்சியுண்டாக அதனைப் பருகியும், கண்ணால் நோக்கிக் களித்தும், வெறுப் பின்றி நெடுநேரம் ஆடியும் வந்தால், இவள் தன் மெய் நடுக்கமும் தீர்ந்தாளாவள். அதனால், இவளுடன் ஆங்குச் செல்வாயாக என்றனள், அன்னை. அவள் அவ்வாறு உரைத்தது எதனாலோ? தான் நமது ஒழுகலாற்றை அறிந்து கொண்டதனாலோ? அல்லது, அருளினாலோதான் சொன்னாளோ? எதனால் அவ்வாறு கூறினாள்? அவள் எண்ணியதுதான் யாதோ?

கருத்து : 'இவளது வாட்டத்தை அன்னையும் அறிந்தளள்: இனி இவள் இச்செறிக்கப்படுதல் நிகழும். அதனாலே, விரைந்து மணந்து கொள்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : ஆர்கலி வானம் பேராரவாரத்தைக் கொண்ட மேகம்; ஆரவாரம் இடிக்குரலால் உண்டாவது. முளிஇலை – காய்ந்த இலை. முனியாது – வெறுக்காது.

விளக்கம் : வரைவு நீட்டித்தமையினாலேதான் இத்துணையும் துயரம் ஏற்படலாயிற்று எனக் குறிப்பால் உணர்த்துகின்றாள் தோழி. இனி 'அன்னை அறிந்தனள் கொல்லோ' என்று கூறியதனால், அவள் அறிந்தால் களவிற் கூட்டம் வாயாது என்பதும் ஆம். 'அறிந்தனள் கொல்லோ' என்றது, அவனுக்குரிய மலைநாட்டினின்று இழிந்துவரும் காட்டாறு அதுவாதலால், 'தாம் அவ்விடத்திற்கு வந்திருப்பது அவ்வாறு கூறிய அன்னையின் அருளினாலே தான்' என்றதாம். அவள் அன்புடையாள் ஆதலின், தலைவன் வரைந்துவரின் மறாது மணத்திற்கு இசைதலும் நேர்வள் என்பதுமாம் 'மருந்தும் ஆகும்' 'பனியும் தீர்குவள்' என்றாள் எனச் சொல்லியவாற்றால், வுறவை அன்னை அறிந்தனள் என்பதைப் பெறவைத்தனள்.

54. குருகே கூறாய் !

பாடியவர் : சேந்தங் கண்ணனார்.
திணை : நெய்தல்.
துறை : காமமிக்க கழிபடர் கிளவி.

[(து–வி.) தலைவனை நெடுநாட் கண்டு இன்புறப் பெறாது. நோய்மிகுந்த தலைவி, கடலிலே இரைதேடிப் பின் அவனூர்ப் பக்கமாகப் பறந்து செல்லும் நாரையை விளித்து, இவ்வாறு கூறுகின்றாள்.]

வளைநீர் மேய்ந்து கிளைமுதல் செலீ இ
வாப்பறை விரும்பினை ஆயினும், தூச்சிறை
இரும்புலால் அருந்தும்நின் கிளையொடு சிறிதிருந்து
கருங்கால் வெண்குருகு! எனவ கேண்மதி:
பெரும்புலம் பின்றே, சிறுபுன் மாலை; 5
அதுநீ அறியின் அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, உன்குறை
இற்றாங்கு உணர உரைமதி – தழையோர்
கொய்குழை விரும்பிய குமரி ஞாழல்
தெண்திரை மணிப்புறம் தைவரும் 10
கண்டல் வேலிநும் துறைகிழ வோற்கே!

கரிய கால்களையுடைய வெண்ணிறக் குருகே! நின் சுற்றத்தோடும் சென்று கடல் நீரிடத்தே மேய்ந்துவிட்டு, தாவிப் பறத்தலினை விரும்பினையாய் உள்ளனை. ஆயினும், தூய சிறகுகளையுடையவும், மிக்க புலவைத் தின்னுபவும் ஆகிய நின் சுற்றத்தோடும் சிறிது நேரம் தங்கியிருந்து, என் சொற்களையும் கேட்பாயாக. சிறுமையும் புன்மையும் கொண்ட இந்த மாலைக் காலமானது எனக்குப் பெருவருத்தத்தைத் தருகின்றது. அதனை நீ அறிந்தால், என்பால் அன்பு மிகவும் உடையையாவாய். என்னை வேறாகக் கருதுகின்ற மனப்போக்கினைக் கொள்ளாதே, இதனைக் கேட்பாயாக; தழையுடுப்பவர் கொய்தற்குரிய குழையானது தழைத்திருக்கின்ற இளைதான ஞாழலானது, தெளிந்த சடலலையின் நீல வண்ணப் புறத்தினைத் தடவிக் தொடுக்கும், தாழைமரங்களை வேலியாகவுடைய நும்முடைய துறைக்கு உரிமையுடையவர்க்கு, என் குறைதான் சென்று இத்தன்மைத்தென அவர் உணரும்படியாகச் சென்று சொல்வாயாக.

கருத்து : 'நாரையே’ நீ யேனும் சென்று, என் குறையை அவர் உணரும் வண்ணம் கூறுவாயாக' என்பதாம். ,சொற்பொருள் : வளைநீர் – வளைந்த தன்மை; எழுந்தும் தாழ்ந்தும் தோன்றும் அலைகளால் உண்டாகும் நீர்ப்பரப்பின் தோற்றம்; அதனையுடைய கடலைக் குறித்தது. வளைநீர் – வளைகளையுடைய நீரும் ஆம்; வளை – சங்கு. வாப்பறை – தாவிப்பறத்தல். நொதுமல் – அயன்மை; வேறுபட்ட தன்மை. குமரி – இளமை. ஞாழல் குங்கும மரம்; கோங்க மரம்; மயிர்க்கொன்றை முதலாயின. கண்டல் – தாழை; நீர் முள்ளியும் ஆம்; இது தனி மரவகை என்பாரும் உளர்,

விளக்கம் : 'கிளையொடு சென்று மேய்ந்து அந்த இன்பச் செவ்வியினாலே தாவிப் பறந்து களித்தலை நினைக்கும் குருகாதலால்' அது கிளையான தன்னைப் பிரிந்து வாழும் தலைவனது செயலின் கொடுமையை உணரும் எனக் கருதினாள், அவ்வாறு அதனை விளிக்கின்றாள். 'புலாலுண்ணும் நின் கிளையோடிருந்து கேண்மதி' என்றது, 'நீதான் மறப்பினும், பெண்மைத் துயரைக் கேட்கும் நின் கிளைகள், தாம் மறவாதே நினக்கு நினைப்பூட்டும்' எனக் கூறியதாம். 'அது நீ அறியின்' என்றது, கிளையோடிருக்கும் அது அதனை அறியமாட் டாமையால், அறிய உணர்த்துவதாம். மெல்லியலாரான மகளிர்க்குப் பெருவருத்தம் தருதலால், மாலையைச் 'சிறு புன் மாலை' என்றனள். 'நொதுமல் நெஞ்சம் கொள்ளாது' என்றது, தன்னையும் அதற்கோர் உறவுபோலக் கருத வேண்டும் என்றதாம்.

'கொய்குழை அரும்பிய குமரி ஞாழல், தெண்திரை மணிப்புறம் தைவரும் துறைகிழவோன்' என்றது, அவ்வாறே என்னை அணைத்துக் கிடந்து அவன் அவன் துயில, அவன் முதுகைத் தைவரும் இன்பத்தால் யான் என் வருத்தந் தீர்வேன்' என்றதாம்.

55. சந்தனக் கொள்ளி!

பாடியவர் : பெருவழுதி.
திணை : குறிஞ்சி,
துறை : வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவிக்குச் சொல்லியது.

[(து–வி.) வரைவுக் காலம் நீட்டித்துக் கொண்டே போகக் களவுறவை விரும்பி வந்து குறியிடத்தே தலைவி பொருட்டாகக் காத்து நிற்கின்றான் தலைவன். அவனைக் கண்ட தோழி, தான் தலைவியை ஆற்றுவித்திருந்த தன்மையை அவனுக்குக் கூறுகின்றாள்]

ஓங்குமலை நாட! ஒழிகநின் வாய்மை!
காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி,
உறுபகை பேணாது, இரவில் வந்து, இவள்
பொறிகிளர் ஆகம் புல்லத் தோள்சேர்பு, 5
அறுகாற் பறவை அளவுஇல மொய்த்தலின்
கண்கோள் ஆக நோக்கிப் 'பண்டும்
இனையையோ!'யென வினவினள், யாயே;
அதன்எதிர் சொல்லா ளாகி, அல்லாந்து
என்முகம் நோக்கி யோளே: 'அன்னாய்!'
"யாங்குஉணர்ந்து உய்குவள்கொல்?" என, மடுத்த 10
சாந்த ஞெகிழி காட்டி—
ஈங்குஆ யினவால்' என்றிசின் யானே.

ஓங்கிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவனே! நின் வாய்மைகள் எல்லாம் இனி ஒழிவனவாக! மூங்கில்கள் நெருங்கிய கற்பாறை நெறியாகிய சிறு வழியிடத்தே, நின்னை வந்தடையும் மிக்க பகையினைப் பொருட்படுத்தாதே, இரவுப் போதிலே, நீயும் வந்து தலைவியது திருவிளங்கும் மார்பைத் தழுவிச் செல்வாய். அந்த மணத்தை விரும்பியவாய், இவள் தோள்களிடத்தே சார்ந்து, அளவற்ற வண்டினங்கள் ஒரு சமயம் மொய்த்துக் கொண்டன. அதனைக் கண்ட அன்னை, கண்களாற் கொல்வாள்போல இவளது மார்பினை நோக்கினாள். 'மகளே! நீ முன்பும் இந்த மணத்தை உடையையோ?' எனவும் வினவினாள். அதற்கு எதிருரை சொல்லமாட்டாத நிலையளாகி வருத்தமுற்று இவளும் என் முகத்தை நோக்கினாள். 'அன்னையைத் தெளிவிக்கும் வகையை எப்படி அறிந்து இலள் பிழைக்கப் போகின்றாளோ!' என யானும் கலங்கினேன். அடுப்பிலிட்டிருந்த சந்தன விறகின் கொள்ளியைக் காட்டியவாறே, இதனை அடுப்பிலிட, இதன்பாலிருந்த வண்டுகள் அகன்று போய், இவள் தோள்களிலே மொய்த்தன, அன்னாய்' என்றும் கூறினேன்.

கருத்து : 'இனியும், இவளது பிரிவுத் துயரையும் களவு உறவையும் அன்னைக்கு மறைத்தல் அரிது' என்பதாம்.

சொற்பொருள் : வாய்மை – வாய்மை தோன்றக் கூறிய சொற்கள்; அதனை அவன் பொய்த்து ஒழுகலின் 'ஒழிக' என்றனள். காம்பு – மூங்கில். பொறி திருமகள்; அழகு; தேமற்புள்ளிகளும் ஆம். கோள் – கொல்லுதல். ஞெகிழி – கொள்ளி.

விளக்கம் : ஒழிக நின் வாய்மை' என்றது, பன்னாளும் வரைந்து வருவதாகக் கூறிய உறுதிமொழிகளைப் பொய்த்ததனால். 'பண்டும் இனையையோ? என வினவியது, அவள் பெற்ற புதுமணத்தைக் கண்டு வினவியதாம் அது சந்தனச் சாந்தின் மணம் என்பதும் விளங்கும். அல்லாந்து – வருந்தி, இவற்றாற் களவு பற்றிய ஐயம் அன்னைக்கு உண்டாயிற்று எனவும், அதனால் இற்செறிப்பு நிகழும் எனவும், இனி வரைந்து கொண்டாலன்றித் தலைவியைப் பெறமுடியாதெனவும் உணர்த்துகின்றாள் தோழி. இவற்றைக் கேட்பானாகிய தலைவன் 'இனியும், வாய்மை தவறாது' வரைதலிலே முற்படும் திண்மையன் ஆவான்' என்பதாம்.

மேற்கோள் : செவிலி வினாவியமையைத் தோழி கொண்டு கூறினாள்' என இச்செய்யுளைக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 115. உரை), இதனால் செவிலி வினவியதாகச் சொன்னது படைத்து மொழிதல் என்றறிக.

56. நெஞ்சம் எங்கே!

பாடியவர் : பெருவழுதி.
திணை : பாலை.
துறை : வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது.

[(து–வி.) தலைவன், குறித்தபடி வரைந்து வராதானாக, தலைவி பெரிதும் மெலிவடைகின்றாள். அவளை ஆற்றுவிக்கும் வகையால், 'அவன் வருவான்' எனத் தோழி வலியுறுத்த, தலைவி தோழிக்குச் சொல்லுவது இது]

குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ
வண்டுதரு நாற்றம் வளிகலந்து ஈயக்
கண்களி பெறூஉம் கவின்பெறு காலை
எல்வளை ஞெகிழ்த்தோற்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா 5
ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ?
அருளான் ஆதலின், அழிந்திவண் வந்து,
தொல்நலன் இழந்தஎன் பொன்நிறம் நோக்கி,
"ஏதிலாட்டி இவள்' எனப்
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே 10

தோழி! குறியதாக நிற்கும் குராமரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்த நறுமலர்களிலே வண்டுகள் மொய்த்துக் கிளைத்தலாலே எழுந்த நறுமணத்தைக், காற்றுப் புகுந்தடுத்துக் கொணர்ந்து வீசுதலாலே, கண்கள் களிப்பினைப் பெறுகின்ற அழகினைப் பெற்றிருந்த போதிலே, என் ஒள்ளிய வளைகளை நெகிழ்வித்துச் சென்றவரான தலைவரைக்கருதித் துன்பங்கொண்டதாய் என் நெஞ்சம் சென்றது. அப்படிச் சென்ற நெஞ்சமானது, அவர் செய்யும் வினைக்குத் தளர்வு ஏற்படாவாறு, அவரோடு ஒருங்கே திரும்பி வருதலான விருப்பத்தோடு, அவ்விடத்திருந்தே வருந்தியிருக்கின்றதோ! அன்றி, அவர்தாம் அருளாதார் ஆதலினாலே கலங்கியழிந்து இவ்விடத்துக்குத் திரும்பிவந்து, நோய் மிகக் கொண்டு அதனாலே பழைய அழகினை இழந்துவிட்ட எனது பொன்னிறமான பசலை நிறத்தைப்பார்த்து, 'இவள் நமக்கு அயலாள் ஆவள்' என, முன் தான் கண்டறிந்த என்னைத் தேடியபடியே யாண்டுப் போயிருக்கின்றதோ?

கருத்து : பிரிந்த அன்றைக்கே என் நெஞ்சமும் அவருடன் சென்றுவிட்டது; யான் என் செய்வேன்?' எனத் தன் ஆராத் துயரத்தைத் தலைவி உணர்த்துகின்றாள் என்பதாம்.

சொற்பொருள் : குறுநிலை – குறுகிய நிலை: மரத்தின் குறுமையைக் கூறியது. இரவு – குராமரம். அசாவா – தளரா, பொன்நிறம் – துத்தி படர்ந்ததாலே வந்துற்ற நிறம்.

விளக்கம் : குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ, வண்டுதரு நாற்றம் வளிகலந்து ஈயக் கண் களி பெறூஉம் கவின்பெறு காலை' என்றது, முன்பு தலைவன் வரைவிடை வைத்துத் தன்னைத் தெளிவித்தகன்ற குறியிடத்தின் செவ்வியை நினைத்து கூறியதாம். 'கண் களிபெறூஉம் கவின் பெற்றது' காட்டிடம் எங்கணும் என்க. 'அவரைப் பிரிய மாட்டாது' அவருடனே சென்ற நெஞ்சம், என்னை முற்றவும் மறந்ததாய், அவரோடு தானும் வருதலைக் கருதினதாய், அங்கேயே இருக்கின்றதோ; அன்றி என்பால் வந்தும் என் மேனி வேறுபாட்டால் என்னை யாளென அறியாதே போய் என்னைத் தேடித் திரிகின்றதோ?' இப்படி நோகின்றாள் தலைவி.

மேற்கோள் : 'பிரிந்த வழிக் கலங்கினும்' என்னும் துறைக்கு இச் செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளனர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 111 உரை).

57. உள்ளம் மருளும்!

பாடியவர் : பொதும்பில் கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.

[(து–வி.) பகற்குறியிலே வருகின்றோனா தலைவனுக்கு, இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் என அறிவுறுத்தி வரைந்து கொள்ளுமாறு தூண்டுகின்றாள் தோழி.]

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி
வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால் 5
கல்லா வன்பறழ்க் கைக்நிறை பிழியும்
மாமலை நாட! மருட்கை உடைத்தே—
செங்கோல், கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்

கொய்பதம் குறுகும் காலை, எம்
மைஈர் ஓதி மாண்நலம் தொலைவே 10

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்படி ஒன்று, சிங்கம் முதலாய விலங்குகளின் கூட்டம் நிரம்பியிருந்ததான குன்றிடத்தே, ஓர் வேங்கை மரத்தடியிலே தன் கன்றோடும் தங்கியிருந்தது. அந்தப் பசு தூங்குகின்றதான தன்மையைக் கண்டு பஞ்சுபோன்ற தலையுடைய ஒரு மந்தியானது, கல்லென்று ஒலித்தபடியிருந்த தன் சுற்றத்தைக் கையமர்த்திவிட்டு, அந்தப் பசுவிடத்தே நெருங்கச் சென்றது. பால் நிரம்பிப் பருத்திருந்த அப் பசுவினது மடிக்காம்பினை அழுந்தும்படி பற்றி இழுத்து, இனிதான அந்தப் பாலினைத் தன் குலத்தொழிலையும் கற்றறியாத வலிய தன் குட்டியின் கைந்நிறையப் பிழிந்து தந்தது. அத்தன்மையுடைய பெரிய நாட்டைச் சார்ந்தவனே! சிவந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினைப் பயிரையுடைய அகன்ற புனமானது, கதிர்கொய்யும் பருவத்தை நெருங்கும் காலத்தே, எம்முடைய கரிய ஈரிய கூந்தலை உடையவளின் மாட்சிமைப்பட்ட நலமானது கெட்டொழிவது உறுதியாகும். அதனை எண்ணியபோது, என் நெஞ்சமும் மருட்சியுடையதாய் ஆகின்றதே!

கருத்து : 'அவள் இற்செறிக்கப்படுவாள்? அவள் நலமும் தொலைந்துபோம்; ஆகவே, அவளை வரைந்து மணந்து கொள்ளற்கு முனைவாயாக' என்பதாம்.

சொற்பொருள் : தடங்கோடு – வளைந்த கொம்பு. ஆமான் – காட்டுப் பசு, மடங்கல் – சிங்கம்; கூற்று. துஞ்சுபதம் தூங்கும் செவ்வி. துய் – பஞ்சு. ஞெமுங்க – அழுந்த.

விளக்கம் : 'கொடுங்குரல்' என்றது, தினைக் கதிர் முற்றியமை கூறியதாம். அதனாற் பகற்குறியும் வாயாது என்பதாம். 'கொய்பதம்' என்றது, தினைக் கதிர்களைக் கொய்து கொள்ளும் பருவத்தினை. 'அது நெருங்கத் தலைவி நலனழிதல்' அவள் இல்லிடத்தளாகித் தலைவனை பிரிந்து மெலிதலால் உண்டாவதாம்.

உள்ளுறை : 'துஞ்சு பதம் பெற்ற மந்தியானது; ஆமானின் பாவைக் கறந்து தன் குட்டிக்கு ஊட்டும் நாட' என்றது. தலைவியும் அவ்வாறே புதல்வனைப் பெற்று வாழும் இல்லற வாழ்வினை விரும்புகின்றனள்' என்பதாம்.

58. குதிரைகள் துன்புறுக!

பாடியவர் : முதுகூற்றனார்.
திணை : நெய்தல்.
துறை : பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு நோக்கித் தோழி மாவின்மேல் வைத்துச் சொல்லியது.

[(து–வி.) பகற்குறிக்கண் தலைவியைக் கூடியின்புற்றுத் தன் ஊர்க்குத் திரும்பும் தலைவனிடம், தலைவியின் பிரிவாற்றாமையற்றிக் கூறுவாளான தோழி, 'இற்றைக்குத் தங்கிப் போக' என, அவனது தேரின் குதிரைகள்மேல் வைத்துச் சொல்லுகின்றாள்]

பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக்
கோல்கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ—
வீரை வேண்மான் வெளியன் தித்தன் 5
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து,
நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன்
ஓடுதேர் நுண்நுகம் நுழைந்த மாவே! 10

வீரை வேண்மானான வெளியன் தித்தனது, முரசு முதலியவற்றோடு வெள்ளிய சங்குகளும் ஒலிமுழக்காநிற்க மாலைப்போதும் வரும் அவ்வேளையிலே, ஏற்றிக் கொள்ளப்பட்ட மாலை விளக்குகளின் ஒளியோடு, நுண்ணிய பனித்துளிகளும் அரும்பத் தொடங்கும். தலைவரைப் பிரிந்த தலைவியர் செயலறும்படியாக வந்த அந்த மாலைப் பொழுதோடு, உடல் சோர்வுற்றேமாய், அவலங்கொண்ட நெஞ்சினமாக, யாம் இவ்விடம்விட்டு இல்லத்திற்கு நீங்கிச் செல்வோம். உயர்ந்தெழும் அலைகளையுடைய நெடுங்கடற் பாங்கின் கண்ணுள்ள குளிர்ந்த கடற்றுறைத் தலைவனது. ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டப்பெற்றுச் செல்லும் குதிரைகள் தாம்—

பெரிதான முதிர்ந்த செல்வத்தைப் பெற்றோரது பொன்னணிகளையுடைய புதல்வர்கள் பிறிதான தோளிலே கோத்துக்கொண்டு செல்லும், செவ்வையாக ஒலிக்கும் பறையினது கண்ணகத்தே எழுதப்பட்டுள்ள குருவியானது அடிக்கப்படுதலைப்போலப், பாகனாற் கோல்கொண்டு அடித்து வருத்துதலினாலே துன்பப்படுவன வாக!

கருத்து : 'நீ போகத் தலைப்படினும், நின் குதிரைகள் அடித்து ஓட்டப்படினும் செல்லாவாகுக' என்பதாம்.

சொற்பொருள் : பெரு முது செல்வர் – பழைதாகவரும் பெருஞ்செல்வத்தை உடையோர். அரிப்பறை – அரித்தெழும் ஓசையைக் கொண்ட சிறுபறை. கண்ணகம் – அடிக்கப்படும். இடம். வேண்மான் – வேளிர்குலத் தலைவன். வெளியன் தித்தன் – வெளியனின் மகனாகிய தித்தன். கோடு – சங்கு. கையற – செயலற.

விளக்கம் : பகற்போதிலே தலைவனோடிருந்து இன்புற்ற தலைவி, இரவிலே தனிமையால் பெரிதும் வாடி நலிவாள் எனவும், அதனால் தலைவன் இரவிலும் தங்கிப்போதல் வேண்டுமெனவும் வற்புறுத்துவாள் போலத், தோழி இவ்வாறு கூறுகின்றாள். இரவில், அவளூரில் அவன் தங்கிச் செல்வதென்பது அவளை மணந்து கொண்டதன் பின்னரன்றி இயலாது ஆயினமையின், வரைவினை வேட்டுக் கூறுகின்றாள் எனவே கொள்ளல் வேண்டும்.

மாலைப்போதிலே நுண்பனி அரும்புதலைக் கூறியதால், கூதிர்ப்பொழுது என்பதும், இரவிடை முயக்கம் அதுகாலை இன்றியமையாதாய்த் தோன்றும் என்பதும் பெறவைத்தனள். 'மெய் சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர' என்றது, அவனைப் பிரிதலால் தாமுறும் தளர்வைச் சுட்டிக் கூறியதாம். 'மா கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்' என்றது, அவை தாம் செல்லாவாகுக என்பதாம்; அவை செல்லாவாக, அவனும் வேறு போதற்கு வழியின்றி இரவில் தங்குதலை நேர்வான் என்பதாம். 'கண்ணகத்து எழுதிய குரீஇ' என்பது, பறைக்கண்ணகத்தே தீட்டப்பெறும் ஓவியமாம்.

மேற்கோள் : ‘பகற்குறி வந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவி குறிப்பறிந்து, மாவின் மேல் வைத்து வற்புறுத்தது என, இச் செய்யுளை மேற்கோளாகக் கொண்டனர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 114 உரை.)

பிறபாடம் : 'பெறுமுது செல்வர்"—நல்லூழாற் பெற்ற பழைமையாக வரும் செல்வத்தை உடையோர்.

59. இனி வருந்தும்!

பாடியவர் : கபிலர்.
திணை: முல்லை.
துறை : வினைமுற்றி மீள்வாள் தேர்ப்பாகற்கு உரைத்தது

[(து–வி.) சென்ற வினையை முடித்துவிட்டு மீண்டு வருவானாகிய தலைவன்: தேரினை விரையச் செலுத்துமாறு தன் பாகற்குச் கூறியது இது.]

உடும்பு கொலீஇ வரிநுணல் அகழ்ந்து
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி
எல்லுமுயல் எறிந்த வேட்டுவன், சுவல
பல்வேறு பண்டத் தொடைமறந்து, இல்லத்து
இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும்; 5
வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண்முகை அவிழ்ந்த புறவின்
பொறைதலை மணந்தன்று; உயவுமார் இனியே. 10

உடும்பினைக் கொன்று எடுத்துக்கொண்டும், மண்ணை அகழ்ந்து வரிகளையுடைய தவளைகளைப் பிடித்துக் கொண்டும். நெடிய உச்சிகளையுடைய புற்றுக்களிலே தோண்டி அங்குள்ள ஈயலை வாரிக் கொண்டும், முயலினைக் கொன்று அதனைத் தூக்கிக்கொண்டும், தோள் மேலாகப் பல்வேறான இப்பண்டங்களைக் கொண்ட மூட்டையோடு, வேட்டுவன் ஒருவன் தன் வீடு சேர்வான். இல்லத்தில் இரவுப்போதிலே, அந்த மூட்டையை அறவே மறந்தவனாக, மிகுதியாகக் கள்ளைப் பருதியவனுமாக, அதன் இனிய கணிப்பிலேயே அவன் செருக்கியும் கிடப்பான். அத்தகைய வன்புலமாகிய –காட்டு நாட்டிடத்ததாக உள்ளது. அன்பு கலந்து நம்மிடத்தே விருப்புற்ற கோட்பாட்டினோடு, நெஞ்சத்து நம்மையே நினைந்தாளாயிருக்கும் தலைவியானவள் இருக்கின்ற ஊர். முல்லையின் நுண்ணிய அரும்புகள் பிணிப்பவிழ்ந்து மலர்ந்த புறவினிடத்ததாகிய அந்த ஊரிலிருந்தாளானாலும் அவளுள்ளம் பொறுத்தலையே மேற்கொண்டதாய் இருக்கும். இன்று மாலைக்குள் நாம் 'செல்லாவிடிலோ, அது தான் பெரிதும் வருந்தா நிற்குமே! கருத்து : 'ஆதலின் தேரினை விரையச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : கொலீஇ – கொன்று. நுணல் – தவளை. தொடை – தொடுத்த மூட்டை. இருமடைக்கள் – பெரிய மடுத்துச் செய்யப் பெற்ற கள். கொள்கை – கோட்பாடு. பொறை பொறுத்துப் பிரிவாற்றியிருக்கும் தன்மை.

விளக்கம் : பொறை தலைமணந்தன்று: உயவுமார் இனியே' என்றது, தான் மீள்வதாகக் குறித்து வந்த நாளெல்லை அற்றைப் பொழுதோடும் கழிந்து போவதனைக் கருதிக் கூறியதாம். அதனால், அதுவரை பிரிவைப் பொறுத்திருக்குமவள், அவ்வெல்லை கழியின் அவன் பொய்த்தனன் எனக் கருதித் துன்புறுவாள்' என்றான். பகற்போதில் காடெல்லாம் சுற்றியலைந்து வேட்டமாடிவரும் வேட்டுவன், மாலையிலே வீடு திரும்பியதும், அந்த முட்டையை மனைவியின் பொறுப்பிலே விட்டுவிட்டுத் தான் கள்ளயர்ந்து செருக்கிக் கிடக்கின்றான். 'அத்தகைய காட்டு நாட்டது'. எனவே, தானும் கொணர்வன அனைத்தையும் தலைவியின் பொறுப்பிலே விட்டுவிட்டுக் களிப்பிலே திளைத்துக் கவலையின்றி வாழ்வான் என்பதாம். முல்லை நுண்முகை அவிழ்தல் காரின் தொடக்கத்தே ஆதலின்' அதுகண்டும். குறித்தபடி வருவேமென்ற நம்பிக்கையால் நம் வரவை எதிர்பார்த்துப் பொறுத் திருப்பாள்" என அவளது கற்புத் திண்மையையும் கூறுகின்றான்.

மேற்கோள் : முல்லைக்கு உரிய ஒழுக்கம் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆம். அவள் பெரிதும் இரங்குவாளாயிருப்பாள் எனக் கூறாதே, 'வன்புலக் காட்டு நாட்டதுவே' என நிலத்தை உரைப்பதன் மூலம் ஒழுக்கத்தையும் பெற வைத்தனர் (தொல். பொருள், சூ 5. நச். உரை)

பிறபாடம் : உடும்பு கொரீஇ உடுப்பைக் குத்திப்பிடித்து.

60. சாயும் நெய்தலும்!

பாடியவர் : தூங்கலோரியார்
திணை : மருதம்
துறை : சிறைப்புறமாக உழவற்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பறிவுறீஇயது.

[(து–வி.) தலைவன் சிறைப்புறமாக நிற்பதறிந்த தோழி, அவனுக்குத் தலைவியின் இற்செறிப்பினை உணர்த்தக் கருதுகின்றாள். உழவர்க்கு ஆணையிடுவது போல நுட்பமாக இப்படிச் சொல்லுகின்றாள்.]

மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநெற் பல்கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண்புலர் விடியல்,
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ்சோறு 5
கவர்படு கையை கழும மாந்தி,
நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த நின்
நடுநரொடு சேறி ஆயின், அவண
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில்
மாஇருங் கூந்தல் மடந்தை
ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே. 10

மலையினைக் கண்டாற்போலத் தோன்றும் நிலையினைப் பொருந்திய, உயர்ச்சிகொண்ட பல நெற்கூடுகளை ஒருங்கே சேரக் கட்டி வைத்திருக்கின்ற தலைவியது வீட்டாரின் பொருட்டாக, எருமையை ஓட்டியபடி உழுதற்குச் செல்லுகின்ற உழவனே! இரவெல்லாம் உறக்கங் கொள்ளாயாய்க், குளிர்ச்சிகொண்ட இருள் நீங்கும் விடியற்பொழுதிலே, கருங்கண்களையுடைய வராஅலின் பெரிதான ஊன்துண்டுகளின் மிளிர்வையோடு கூடிய உணவுக்குரிய அரிசியாலே சமைத்த மிக்க சோற்றுத் திரளைகளை, விருப்பமிக்க கையை உடையையாய்த் திகட்டுமளவுக்கு வாங்கி உண்டதன் பின்னர், நீர்மிகுந்த வயற்புறங்களிலே நாற்றுமுடிகளை நடுதற் பொருட்டாக, நடுதற்கு உரியவரான நின் உழத்தியரோடுஞ் செல்வாயானால், நீ உழுதலைச் செய்யும் அவ் வயல்களிடத்தேயுள்ள கோரைகளையும் நெய்தற் பூக்களையும் களைந்து எறிந்துவிடாது பேணிக்கொணர்வாயாக. எம் இல்லிடத்தேயுள்ள மிக்க கரிய கூந்தலையுடையாளான தலைவிக்கு, அழகிய வளைகளாகவும், உடுத்தும் ஆடையாகவும் அணிந்து கொள்ளற்கு உரியன அவைதாம்!

கருத்து : 'தலைவி இற்செறிக்கப்பட்டாள்; விரைவிலே மணந்து கோடற்கு முயலுக' என்பதாம்.

சொற்பொருள் : நெற்கூட்டு – நெற்கூடுகளையுடைய. நிவப்பு – உயர்வு மிளிர்வை – ஒளி செய்து விளங்கும் தன்மை. புகர்வை அரிசி – உணவுக்கு உரித்தான அரிசி. கழும மாந்தல் - திகட்டுமளவுக்குத் தின்னல். நடுநர் – உழத்தியர். சாய் – கோரைப்புல்.

விளக்கம் : 'விடியலில் உழச்செல்லும் உழவனைக் காணவரும் தோழி, 'கண்படை பெறாது' என்றது, தலைவியும், தானும் இரவு முற்றவும் கண்படை பெறாதிருந்த வருத்தத்தின் மிகுதிப்பாட்டைக் கூறியதாம். 'கழும மாந்தி நடுநரோடு சேறியாயின்' என்றது. 'அம்மயக்கத்தாலும், நடுநரோடு பேசிக்களிக்கும் இன்ப மயக்கத்தாலும் பேணாது போகாதே, கருத்துடன் சாயும் நெய்தலும் பேணுக' என்றதாம். "எம்மில் மாயிருங் கூந்தல் மடந்தை" என்றதால், தலைவி இற்செறிக்கப்பட்டதனையும் உணர்த்தினள். 'உழுங்காலத்து அவற்றைப் பிடுங்கிப் பேணிவைத்திருந்து இல்லிற்குக் கொண்டுவர வேண்டும்' என்பது தோழியின் உரையாகும். கோரையை வளையாகக் கையிற்கூட்டுவதும், நெய்தலின் தழையைத் தழையுடையாகக் கொள்வதும் அந்நாள் மருதநில மகளிரது வழக்கமாகும்.

உள்ளுறை : உழத்தியர் ஆக்கிய வராற் கறியோடு சோற்றையுண்டு தொழிற்குச் செல்லும் உழவனைக் கூறியது. அவ்வாறே தலைவியும் தலைவனை மணந்து இல்லத்தலைவியாகத் திகழ்தலிலே நாட்டமிகுந்தனள் என்பதற்காம்.

61. கண்ணும் உறங்குமோ!

பாடியவர் : சிறுமோலிகனார். திணை : குறிஞ்சி. துறை : தலைவன் வரவுணர்ந்து தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.

[(து–வி.) தலைவன் களவுறவை வேட்டுவந்து நிற்பதனை அறிந்தாள் தோழி. தலைவிக்குச் சொல்லுவாளாகத் தலைவனும் கேட்டு வரைந்து கோடற்கு முனையுமாறு, கூறுவது இது.]

கேளாய் எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏமான் பிணையின் வருந்தினெ னாகக்
துயர்மருங்கு அறிந்தனள் போல அன்னை

'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், 5
சொல்வெளிப் படாமை மெல்லஎன் நெஞ்சில்
'படுமழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல்வாய் உற்ற தளவின், பரல்அவல்
கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. 10

ஏடீ தோழி! யான் சொல்லும் இவற்றையும் கேட்பாயாக: நேற்றிரவுப் போதிலே மிக்க ஆசையானது வருத்த வெய்துயிர்த்தேனாக, அம்புபட்ட மான் பிணையினையொப்ப வருத்தியிருந்தேன். அன்னையும், யானுற்ற துயரமிகுதியை அறிந்தாள்போல 'என் இளைய மகளே! தூங்காயோ?' என்றனள். அவளுக்கு என் நிலையைக் கூறக்கருதிய யான், கூறின் ஏதமாகும் என, எழுந்த சொல் வெளிப்படாதவாறு அடக்கிக் கொண்டேன். என் நெஞ்சிற்குள்ளாகவே, 'மிக்க மழை பொழிந்த கற்பாறைப் பக்கத்தே பூத்த, சிச்சிலிப் பறவையின் மூக்குப் போன்ற அரும்புகளையுடைய முல்லையும், பருக்கைக் கற்களை உடைய பள்ளங்களும் விளங்கும் காடு சூழ்ந்த நாட்டினை உடையானாகிய தலைவனைக் கருதியிருக்கும் என் போன்றோர்க்குக் கண்ணும் உறங்குமோ?' என்று சொல்விக்கொண்டேன்.

கருத்து : 'ஐயுற்றவளான அன்னை, முற்றவும் அறியின் இச்செறிப்பு நேரும்; எனவே, அவர் விரையவந்து மணந்து அழைத்துப் போகமாட்டாரோ?' என்பதாம்.

சொற்பொருள் : வேணவா – வேட்கையால் உண்டாகிய பேரவா. ஏ – அம்பு. துயர் மருங்கு – துயரத்தின் நிலை. குறுமகள் – இளைய மகள். படுமழை – பெருமழை, சிரல் – சிச்சிலிப் பறவை.

விளக்கம் : 'அங்கல் ஏமான் பிணையின் வருந்தினெனாக' என்று, தான் இரவு முற்றவும் துயருற்றுக் கண்படுதலின்றி வாடியழிந்ததனைக் கூறினாள். அன்னை அறிந்தளள் போல' என்று, அன்னை அறிந்தனளாயின் நேரிடும் இற்செறிப்பையும் உணர்த்தினான். 'படுமழை பொழிந்த' என, அவன் வரும் வழியது ஏதத்தை நினைந்து கவலையுற்றதனைக் கூறினாள். இதனால், இனி இரவுக்குறியே வாயாதென்பதும் விரைய மணந்துகொன்னலே செய்யத் தக்கதென்பதும் தலைவனுக்கு வலியுறுத்தினாளாம்.

'அல்கல் வேணவா நலிய, வெய்ய உயிரா, ஏமான்பிணையின் வருந்திவெளாக' என்றது, பகற்குறி பெற்று இன்புறும் தலைவி, இரவு முற்றவும் தலைவளை நினைத்தபடியே பெரிதும் வருந்தியிருந்த நோய்மிகுதியை உணர்த்தியதாம். இதனால், இரவுக்குறி வேட்கின்றாளோ எனின், அதுவும். இன்றென்பாள். அன்னை தன்னுடைய நோயைக் குறிப்பாக அறிந்ததையும், அதுகுறித்து வினவியதையும் கூறினாள். களவுக்காலத்துச் சில நாள் வாராது போயின தலைவனது செயலை நினைந்து வருந்திக் கூறியதெனவும் கருதலாம்.

மேற்கோள் : இனி இச் செய்யுளைத் தலைவி தோழிக்குக் கூறுவதாகக் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல்.பொருள். சூ. 111 உரை). இதனுள் 'துஞ்சாயோ' எனத் தாய் கூறியவழி மனைப்பட்டுக் கலங்கியவாறும். 'படர்ந்தோர்க்கு' என மறை உயிர்த்தவாறும், கண்படாக்கொடுமை செய்தானெனப் பரத்தமை கூறியவாறும் காண்க' எனவும் அவர் கூறுவர்.

62. எம் திங்கள்!

பாடியவர் : இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்துவந்த தலைவன்,

பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச், சொல்லிச் செலவழுங்குவித்தது.

[(து–வி.) பொருள்பாற் சென்ற தன் நெஞ்சிற்கு, முன்பு பிரிந்துசென்ற காலத்துத் தானுற்ற துயரத்தைக் கூறியவனாக, அந்த நினைவைக் கைவிடச் சொல்லுகின்றான், தலைவன் ஒருவன்]

வேய்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை
கந்துபிணி யானை அயாஉயிர்த் தன்ன
என்றூழ் நீடிய வேய்பயில் அழுவத்துக்
குன்றூர் மதியம் நோக்கி, நின்றுநினைந்து
உள்ளினென் அல்லெனோ, யானே—முள்ளெயிற்றுத் 5
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
எமதும் உண்டுஓர் மதிநாட் டிங்கள்
உரறுகுரல் வெவ்வளி எடுப்ப; நிழல்தப
உலவை ஆகிய மரத்த
கல்பிறங்கு உயர்மலை உம்பரஃது எனவே? 10

வேர்கள் ஒன்றோடொன்று பிணிப்புத்த மூங்கிற் புதரிடத்தே காற்று மோதிச் செல்லும். காற்றுச் செல்லுதவாலே தறியிடத்தே கட்டப்பெற்றிருக்கும் யானையொன்று அயாவுயிர்த்தாற் போன்ற இனிய ஓசையும் அதனின்றும் எழுந்துகொண்டிருக்கும். கோடை நீடியதும், மூங்கில்கள் நிரம்பியதுமான அத்தகைய காட்டகத்து வழியிலே, மலையிடத்து மறையப்போகின்றதான பௌர்ணமித் திங்களை யானும் நோக்கினேன். நோக்கியதும், மேலும் நடைதொடர மாட்டாதே நின்று தலைவியை நினைந்தேன். முட்போல கூரியலான பற்களையும், திலகமிட்டிருக்கப்பெற்ற இனிமை கமழும் அழகிய நெற்றியையும் கொண்ட நாள் நிரம்பிய திங்களொன்று, எம்முடைய உரிமைப் பொருளாகவும் உண்டென்று கருதினேன். முழங்குகின்ற குரவையுடைய வெங்காற்று இலைகளை எடுத்துச்செல்லுதலால் நிழவிடும் தன்மையிழந்து, உலர்ந்த கொம்புகளாகவே நிற்கின்ற மரங்களையுடையதும், கற்கள் விளங்குவதுமான உயர்ந்த மலைக்கு அப்பாலுள்ள ஊரிலிருப்பது அத் திங்கள் என்றும், அவ்விடத்து யான் எண்ணினேன் அல்லெனோ!

கருத்து : காட்டு வழியில் நடக்கும்பொழுதும், இரவு முற்றவும். இவள் நினைவாலேயே வருந்தினேன் என்பதாம்.

சொற்பொருள் : பிணி – பின்னிக்கிடத்தல். வெதிரம். மூங்கில். நரல் இசை – ஒலிக்கும் இசை. கந்து – கட்டுத் தறி. என்றூழ் – கோடை. தேம் – இனிமை.

விளக்கம் : 'குன்றூர் மதியம் நோக்கி, நின்று நினைந்து' என்றதனால், முழுநிலாத் திங்களையுடைய இரவு முற்றவும் வழிநடந்து கொண்டிருந்தவன், அதிகாலை வேளையினோ திங்களை மலைவாயிடத்துக் கண்டு, இப்படி நினைந்தான் என்று கொள்க. 'நின்று' என்றது, உடன் நடப்பாருடன் சேரச்செல்லாமல் தனியாக 'நின்று' என்றதாம். 'எமதும் உண்டு ஓர் மதிநாள் திங்கள்' என்றது. தலைவியின் திருமுகத்தை வியந்து கூறிக்கொண்டதாம். 'உயர்மலை உம்பரஃது' என்பதற்கு, 'உயர்மலையின் அப்பாலுள்ள ஊரிடத்தேயுள்ளது' என்று கொள்ளல் வேண்டும். 'அழுவத்து, கல்பிறங்கு உயர்மலை உம்பரத்து, குன்றூர் மதியம்' எனக் கூட்டிப் பொருள் காணினும் பொருத்தும்.

மேற்கோள் : 'நிகழ்ந்தது நினைத்தற் கேதுவுமாகும்' என்னும் சூத்திரத்திற்கு (தொல், பொருள். 42. உரை.)

இச் செய்யுளை எடுத்துக்காட்டி, 'இவை தலைவிகண் நிகழ்ந்தனவும், அவள் தன்மையும், பின்னர்த் தலைவன் நினைந்து செலவழுங்குதற்கு நிமித்தமாயவாறு காண்க' எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் இளம்பூரண அடிகளும், இச்செய்யுளை இச்சூத்திரத்திற்கே மேற்கோளாகக் காட்டியுள்ளனர் (தொல். பொருள். இளம்.சூ.46 உரை)

63. தொடர்பும் பசலையும்!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : அலர் அச்சத்தால் தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீ இயது.

[(து–வி.) தலைவன் சிறைப்புத்தானாகத் தோழி தனக்குத் தானே சொல்விக் கொள்வாளாய், அவனும் கேட்டுத் தெளிவுற்றுத் தலைவியை விரைந்து வரைந்து கொள்ளற்கு முனையுமாறு இவ்வாறு உரைக்கின்றாள்.]

உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண்
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவுநாறு விளங்கிணர் அவிழ்ந்துடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால் 5
அறன்இல் அன்னை அருங்கடிப் படுப்பப்
பசலை ஆகி விளிவது கொல்லோ?
புள்ளுற ஓசிந்த பூமயங்கு அள்ளல்
கழிச்சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளித்
திரைதரு புணரியின் கழூஉம் 10
மலிதிரைச் சேர்ப்பனொடு அமைந்தநம் தொடர்பே?

பெருவலையினைக் கொண்டோராக, வலியுடைய கடலிடத்தே சென்று வருந்தியவரான பரதவர்கள், மிகுதியான மீன்வேட்டத்தோடு சேரிக்குத் திரும்புவார்கள். அம்மிகுதியான மீன்களை உணக்கியபடியே நாம் காத்திருக்கும் புதுமணற்பாங்கான அவ்விடத்தே, கல்லென்னும் ஆரவாரத்தையுடைய நம் சேரியை அடுத்திருக்கும் புலவுநாற்றத்ததான புன்னை மரமும் நிற்கும். அதனின்றும், விழவுக்குரிய நறுமணம் பெற்று விளங்கும் பூங்கொத்துக்கள் ஒருசேர இதழவிழ்ந்து மணம் கமழ்ந்துகொண்டிருக்கும். ஆயின், அலருரை ஆரவாரத்தைக் கொண்ட நம் ஊரோ, பெரிதும் அறனற்றதாயிற்று. அதனாலே—

புட்கள்வந்து அமரவும், அதனால் ஒடிந்த பூக்கள் உதிர்ந்து கலந்திருக்கும் சேற்றினையுடைய கழிப்பாங்கான இடத்தின் மீதாக ஓடிவரும் பெரிய வார்ப்பிணிப்பையுடைய திரைகள், அலைகள் கொண்டுதரும் கடல் நீராலே கழுவப்படும் தன்மையினையுடைய, அலைமிகுந்த கடல் நாட்டானோடு அமைந்த நம் தொடர்புதானும், அறநினைவு இல்லாதே போயின. அன்னையானவள் கடத்தற்கரிய காவலுள் படுத்துதலினாவே, பாலைநோயினைப் பற்றும்படியாகச் செய்து, இறந்துபோதலைத்தான் கொண்டுவிடும் போலும்!

கருத்து : 'தலைவியின் துயரைத் தீர்ப்பதற்கு, அவளை மணந்து கொள்ளுதலே செயத்தக்கது என்பதாம்.

சொற்பொருள் : உரவு – வலிமை. புலவல் – புலால் நாற்றம். இது கடற்புட்கள் அமர்ந்து புவாலைத் தின்று போதவால் வந்தது. விழவு நாற்றம் – புதுமணப் பொலிவு. கடி – காவல். அள்ளல் – சேறு. இவுனி - குதிரை. புணரி – கடல்.

விளக்கம் : 'உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர்' தலைவியின் தமராகவே, அவர் அறியின் தலைவற்குப் பெரிதும் 'ஏதமாம் என்பதனைக் கூறினளாம். உனர் அறனின்று, ஆயது, களவுமணமும் அறனொடு பட்டதென்னும் மரபினை நினையாதாய்ப் பழித்துரை பேசி ஆரவாரித்தலால், 'அறனில் அன்னை' என்றது, தலைவனைப் பிரிதலால் தலைவி இறந்துபடுவாள் என்பதனை அறிந்தும், தன் குடும்பப் பெருமை நோக்கி அவளைக் காவற்படுத்தியதனால்.

உள்ளுதை : 'கழியது கருஞ்சேற்று வழியே செல்லும் குதிரைகள்மேற் படிகின்ற சேற்றினை, அவைதரு கடல்நீர் சழுவிச் செல்லும் சேர்ப்பன்' என்றது, 'அவன் உறவினாலே தலைவிபால் வந்துற்ற பழியினை, அவனை வரைத்து கோடலின் மூலமாசு அவணே தீர்த்தல் வேண்டும்' என்பதாம்.

இறைச்சி : 'மிகுமீன் உணக்குதலால் எழுகின்ற புலவு நாற்றத்தைப் புன்னையின் புதுமலரிடத்திலிருந்து எழுகின்ற புதுமணம் போக்கும்' என்றது. களவுறவினாலே ஏற்பட்ட அலரினைத் தலைவனோடு நிகழ்வதான ஊரறி மணவிழாவின் வருகையானது போக்கி, நல்லதோர் இல்லற வாழ்விலே அவர்களை இணைக்கும் என்பதாம். இதனால், வரைந்துவரின் தமர் மறாது உடன்படுதலையும் குறிப்பாகக் கூறினளாம்.

64. நினைவு ஒழிக!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : குறிஞ்சி.
துறை : பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.

[(து–வி.) தலைவனது பிரிவினாலே, தலைவியின் துன்பம் மிகுதிப்பட்டு, . அவளது நிலை நாளுக்குநாள் கவலைப்படத் தக்கவிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தோழி, 'தலைவனுக்குத் தூது அனுப்பியாவது நினது துயரத்தைமாற்ற முயலுவேன்' என்கின்றாள். அதனைக் கேட்டதும், அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

என்னர் ஆயினும் இனிநினைவு ஒழிக!
அன்ன வாக இனையல் தோழியாம்
இன்ன மாகநத் துறந்தோர் நட்புஎவன்?
மரல்நார் உடுக்கை மலையுறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் 5
வறனுற்று ஆர முடுக்கிப் பையென
மரம்வறி தாகச் சேர்ந்துஉக் காங்கென்
அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்றென,
வறிதால், இகுளைஎன் யாக்கை; இனியவர்
வரினும், நோய்மருந்து அல்லர்; வாராது 10
அவணர் ஆகுக, காதலர்! இவண்டும்
காமம் படர்அட வருந்திய
நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே!

தோழி! நம் தலைவராகிய அவர்தான் எத்தகைய நிலையினராயினும், இனிமேல் – அவரது நினைவானது நம்மிடமிருந்தும் ஒழிந்துபோவதாக! அஃதன்றி, அவருக்குத் தூதுவிடுத்து உரைப்போமா என்னும் இவைபோல்வன பற்றி எண்ணி வருந்தாதிருப்பாயாக! யாம் இத்தன்மையேமாக, நம்மைக் கைவிட்டு அகன்றாரது நட்புத்தான். 'இனி நமக்கு எதற்காகவோ? மரற்கள்ளியது நாரினாலே பின்னப்பெற்ற ஆடையினை உடுப்பவர், மலைக்கண் வாழும் குறவர்கள். அவர்கள், தம் அறியாமையாலே சிறியிலைச் சந்தனமரத்தினை ஒருபுறத்தே வெட்டிவிடுவர். அதனால், அம்மரம் வாடிப் போதலைத் தொடங்கும். மிகவும் கேடடைந்ததாய் மெல்லென வறிதாகுமாறு சோர்வுற்று. முடிவிலே மரமே பட்டுப் போய்விடும். அவ்வாறே என் அறிவும் உள்ளமும் அவரிடத்தே சென்று ஒழிந்தனவாதலினாலே, என் உடம்பும் உயிராற்றவற்றதாய் வறிதாயிற்று. இனி, அவர் நம்பால் அருளுற்று வந்தனராயினும், நம் நோய்க்குரிய மருந்தாக ஆகமாட்டார். அதனால், வாராது அவ்விடத்தராகவே அவர் ஆவாராக! இவ்விடத்தே, நம் காமமும் அதளாலுண்டாகிய நினைவும் நம்மைப்பற்றி வருத்துதலினாவே, வருத்தமிகுந்த நோய்மிக்க நம் வருத்தப்பாட்டினை, நம் சுற்றத்தாரும் காணாது போவாராகுக!

கருத்து : 'இனி, இறப்பொன்றே எனக்கு உரியதாகும்' என்பதாகும்.

சொற்பொருள் : இனைதல் – வருந்துதல். எவன் – என்னபயனோ? ஆரமுருக்கி – மிகவும் கெடுத்து; கெடுதல் – அறுவாய் வழியே அதன் சாரமனைத்தும் வடித்துபோய்க் கெடுதல்.

விளக்கம் : 'என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக' என்ற சொற்கள் வேதனைப் பெருக்கத்தின் வெளிப்பாடாகும். 'யாம் இன்னமாகத் துறந்தோர் நட்பு எவன்?' என்பது, அந்த வேதனை மிகுதியோடு அவனோடு நட்புச் செய்ததன் அறியாமையை நினைத்துங் கூறியதாகும். 'நோயும் முற்றி இறந்து படுவதொன்றையே வேண்டிருந்த நிலையினள்" என்பாள், 'வரினும் நோய் மருந்து அல்வர்' என்கின்றாள். அறிவு அவன்பாற் சென்றமையின் ஆராய்ந்து தெளிவுறும் ஆற்றலை இழந்தாள்; உள்ளமும் அவன்வயிற் சென்றமையின் அதுவும் தனக்குத் துணையில்லாத நிலையினள் ஆயினாள்; இனிச் சாவொன்றே அவளாற் கருதத்தக்கது என்பதாகும்.

உள்ளுறை : அறியாமையினாலே குறவர் அனுப்பினும் அந்த அறுப்பின் காரணமாகத் தன்னுடைய ஜீவசத்தியை முற்றவும் இழந்ததாய்ச் சத்தனமரம் பட்டுப்போவதுபோல, பிரிவினால் தலைவிக்குத் துன்பம் நேரும் என்பதை அறியாதேயே தலைவன் பிரித்தனனாயிலும், அந்தப் பிரிவாகிய துயரத்தால் அவள் நாளுக்குநாள் நலிவுற்று முற்றவும் வாட்ட முற்றனன் என்று கொள்க.

மேற்கோள் : இச்செய்யுளை 'வழிபாடு மறுத்தலின்கண்' தலைவி தோழிக்குத் கூறியதாகக் காட்டுவர் நச்சினார்க்கினியர்– (தோல். பொருள். சூ. 111. உரை மேற்கோள்.) அவ்வாற கொள்வதாயின், பிரிவை நீட்டித்த தலைவன், மீண்டுவந்து தலைவியை வழிபட்டு நின்று அவளது ஊடலைத் தீர்த்துச் கூடுதற்கு முயன்றானாக, அவ்வேளையில் அதனை ஏற்க மறுத்துத் தோழிக்கு உரைப்பாள்போல, அவனுக்கு உரைத்ததாகக் கொள்க.

65. அயலிலாட்டிக்கு அமுதம்!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி, தலைமகட்குச் சொல்லியது.

[(து–வி.) குறித்த பருவத்து வந்தருளாத தலைவனது செயலால் பெரிதும் நோயுற்று நலிந்திருந்தாள் ஒரு தலைவி. அவளுக்குத் தான் கேட்ட நற்சொல்லைக் கூறி அவன் விரைவிலே வந்தடைவான் என்று தேற்றுகின்றாள் தோழி]

அமுதம் உண்க, நம் அயல்இ லாட்டி
கிடங்கில் அன்ன இட்டுக்கரைக் கான்யாற்றுக்
கலங்கும் பாசி நீர்அலைக் கலாவ
ஒளிறுவெள் அருவி ஒண்துறை மடுத்துப்
புலியொடு பொருத புண்கூர் யானை 5
நற்கோடு நயந்த அன்புஇல் கானவர்
விற்கழிப் பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடிஇடி கரையும்
பெருமலை நாடனை 'வரூஉம்'என் றோளே.

அகழியைப் போன்றதாக இருசாரும் கரையமையப் பெற்று விளங்குகின்ற காட்டாற்றின் கண்ணே, கலங்கும் பாசியை நீரின் அலைகள் அலைத்தவாலே, அது எங்கும் பரவிக்கிடக்கும். ஒள்ளிய வெள்ளருவியையுடைய, ஒளி கொண்ட நீர்த்துறையிடத்தே பாய்ந்து, புலியோடு போரிட்டது ஒரு யானை. அதனால் புண்பட்டு நலிந்த அந்த யானையின் நல்ல கொம்புகளைப் பெற விரும்பிய அன்பற்ற வேட்டுவர்கள், அதன்மேல் அம்புகளை ஏவினார்கள். வில்லினின்றும் புறப்பட்டுக் சென்று தைத்த அம்புகளின் தாக்குதல் காரணமாகச் சுழன்று வீழ்ந்துவிட்ட அந்த யானையினது, அச்சத்தை விளைவிக்கும் அவலக்குரலானது இடித்தல் மிகுந்த காலத்தே இடையில் எழுந்து பேரிடியினைப் போன்று, காடெங்கணும் ஒலித்துக்கொண்டிருக்கும். அத்தகைய பெருமலை நாட்டிற்கு உரியவனான நம் தலைவன், 'வரூஉம்' என்றாள் நம் அடுத்த வீட்டிலிருக்கும் பெண். அப்படிச் சொன்ன அவள்தான், பெறற்கரிய அமுதத்தைப் பெற்று இன்புற்றுச் சிறப்பாளாக!

கருத்து : 'நற்சொல்லைச் சொன்னவள் அமுதம் உண்க; அவள் சொற்போல் தலைவரும் நம்பால் வருக!' என்பதாம்.

சொற்பொருள் : கிடங்கில் - அகழி; அகழி சூழ்ந்த 'கிடங்கில்' எனப் பெயரிய ஊரும் ஆம். இட்டுக் கரை - இடப்பெற்றாற் போன்று செவ்விதாக அமைந்த கரை. சுழி – சுழற்சி, நாமப்பூசன் – அச்சத்தைத் தருகின்ற அவலக் குரல்; கேட்பார் உளத்தும் அச்சந் தோன்றச் செய்யும் சோகக் குரல்.

விளக்கம் : நற்சொல் – ஒன்றை நினைத்துக் கவலையுற்றாரின் காதுகளில் ஏதும் தொடர்பற்ற அயலாரது பேச்சு நடுவே எழுந்தாக வந்துபடும் சொல்; இதனை 'விரிச்சி' என்பர். 'இதனைச் சொன்னார் அமுதுண்டு இறக்க என வாழ்த்துதல், கேட்பாரது மரபு (குறுந். 83 பார்க்க.)

'புலியால் தாக்கப்பட்ட புண்களையுடைய யானையது வருத்தத்தை நோக்கி, அதற்கு இரங்கும் அன்பிலராய், அதன் கொம்பினைப் பெறவிரும்பி அதனைக் கொல்பவர் வேட்டுவர். அதுகாலை, அந்த யானையின் அவலக் குரல் காடெங்கணும் ஒளிக்கா நிற்கும். அத்தகைய மலைதாடன் தலைவன்' என்றனள். அவ்வாறே தலைவனும், பிரிவினாலே தாக்கப்பட்டு நலிந்த தலைவிக்கு அருள் கொண்டிலனாய், அவளை மணந்து இன்புறுத்த நினையானாய்த், தான் பெறும் இன்பமே கருதினனாய், அவட்கு நலிவையே செய்பவனானான்' என்பதாம். அத்தகையோனை 'வரூஉம்' என்ற நற்சொல் கேட்டனம். அச்சொல்லைச் சொன்னவள் அமுதம் உண்க; அவள் 'வாக்கும் நிறைவேறுக' என்பதாம்.

புறப்பொருள் துறையினே இப்படி 'விரிச்சி கேட்டல்' சிறந்த வெற்றிச் சகுனமாகக் கருதப்படும். அகத்துறையிலேயும் அந்த மரபு விளங்கிற்றாதலை இதனாற் காண்கிறோம்.

'கிடங்கில்' ஓய்மான் நல்லியக் கோடனின் ஊரும் ஆகும்.'கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்' என்னும் சான்றோர், நற்றிணை 364 ஆவது செய்யுளைப் பாடியவர். 'கிடங்கிற் குலபதிக் கண்ணன் என்னும் சான்றோர் குறுந்தொகையின் 252 ஆவது செய்யுளைச் செய்தவர்.

66. கண் சிவந்தவோ?

பாடியவர் : இனிசந்த நாகனார்.
திணை : பாலை.
துறை : மனை மருட்சி.

[(து–வி.) உடன்போக்கிற் சென்ற தன் மகளது செயல் அறத்தோடு பட்டதென்று தேறினும், மெல்லியளாய அவள் தான் வெஞ்சுரத்தை எப்படிக் கடந்து செல்வாளோ?' என்ற ஏக்கம் தாய்க்கு மிகுதியாகிறது. அவள் தன்மகளை நினைந்து இப்படிப் புலம்பிக் கூறியபடி கலங்குகின்றாள்.]

மிளகுபெய் தன்ன சுவைய புன்காய்
உலறுதலை உகாஅய்ச் சிதர்சிதர்ந்து உண்ட
புலம்புகொள் நெடுஞ்சினை ஏறி, நினைந்துதன்
பொறிகிளர் எருத்தம் வெறிபட மறுகிப்
புன்புறா உயவும் வெந்துகள் இயவின் 5
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளிமழுங்கி அமர்த்தன கொல்லோ
கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும்,
காழ்பெயல் அல்குற் காசுமுறை திரியினும்,
மாண்நலம் கையறக் கலுழும்என் 10
மாயக் குறுமகள் மலர்ஏர் கண்ணே!

கூந்தலிற் சூட்டியிருந்த மாலையானது சிக்குண்டாலும், குறிய வளைகள் நெகிழ்ந்து சரியினும், பரல்கள் பெய்தலைக் கொண்ட அல்குலிடத்தே விளங்கும் மேகலையானது தன்னிற் பொருத்தப்பெற்ற பொற்காசுகள் முறைதிரிந்து கிடப்பதாய்ப் போனாலும், மாட்சிப்பட்ட தன் அழகெல்லாம் அழிந்தொழியுமாறு கண்கலங்கும் பேதைமை உடையவள், என் அழகிய இளமகள் ஆவாள்.

மிளகினைப் பெய்தாக்கியதுபோன்ற சுவையினையுடைய புல்லிய காய்களையும், காய்ந்த கிளைகளையும் கொண்ட உகர் மரத்தின், வண்டினம் சிதைத்து உண்டதனாலே வருத்தமுற்றிருந்த நெடிதான கிளை யொன்றின்மேல் ஏறியிருந்தபடி, காட்டின் வெம்மையை நினைந்ததாய்த், தன்னுடைய புள்ளி விளங்கும் பிடரிடம் வெறிபடுமாறு புல்லிய புறவும் வருந்தியபடி தங்கியிருக்கும் வெம்மையான புழுதியையுடையது காட்டுவழி. தான் விரும்பிய காதலனோடு கூடிச் சென்றனளானாலும், என் மகளது குவளைமலர் போன்ற அழகிய கருங்கண்கள் அவ்விடத்தே சிறப்புற்றவையாய்த் தம்முடைய ஒளியும் மயங்கிப்போயினவாய்க் கலக்கம் அடைந்தனவோ?

கருத்து : 'அதனை நினைந்தே என் வருத்தம் மிகுதியாகின்றது' என்பதாம்.

சொற்பொருள் : சிதர் – மரவண்டு. சிதர்ந்து உண்ணல் – துளைத்து உண்டல். எருத்தம் – பிடரி. உயவும் - வருந்தும். காசு – பொற்காசு. முறை திரிதல் – முறை பிறழ்தல். மாயக் குறுமகள் – அழகிய இளமகள்.

விளக்கம் : 'நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்' என்றது, தான் அந்தப் போக்கினையே அறமெனக் கொண்டு அவளை அவனுடன் முறையாக மணவினையாற் கூட்டிவைக்காத அறியாமையை எண்ணி வருந்திக் கூறியதாம். தன் அணிகள் முறைபிறழின் அவற்றைச் சரிசெய்து கொள்ளவும் அறியாதே கண்கலங்கும் பேதைமை கொண்டவள், எவ்வாறுதான் தன் காதலனுடன் சென்று இவ்லறத்தை நடத்துவாளோ?' என எண்ணுகின்றாள் தாய். 'அணிகளின் சிதைவுக்கே கலங்கும் அவள், வெம்மையும் கொதிப்பும் புழுதியும் வருத்தி நலிவிக்குங் கானத்தே, அதனைப் போக்கவும் வழியற்ற இடத்தே, கண்கலங்கிப் பெரிதும் புலம்புவாள் அல்லளோ?' என்றும் நினைக்கின்றாள்.

'எருத்தம் வெறிபட மறுகி' என்றது, வெறியுற்றாடும் வெறியாடி, தன் கழுத்தை அசைத்தாடும் தன்மைபோல அசைத்துக்கொண்டு என்பதாம். 'மாயக் குறுமகள்' என்றது தன் உறவை மறைத்து ஒழுகியதையும், உடன் போக்குச் குறிப்பைக் காட்டாதே வஞ்சமாக மறைத்ததையும் நினைந்து வருந்திக் கூறியதாம்.

உள்ளுறை : 'பட்டுப்போன உகாயின் நெடுஞ்சினையிடத்து ஏறியமர்ந்து வருந்தும் புறவினையுடைய வெந்துகள் இயவு' என்றனள்; வானிற் பறத்தலையே உடைய புறவும் வெம்மைக் காற்றாதாய் வருந்துமாயின், வம்புழுதியிடை நடந்துபோகும் தன் மகளது நிலைமைதான் என்னாகுமோ?' எனக் கலங்கியதும் இதுவாகும்.

67. தங்கினால் என்னவோ?

பாடியவர் : பேரி சாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : பகற்குறி வந்து நீங்குந் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.

[(து–வி.) பகற்குறி வந்தொழுகும் தலைவனை இரவின்கண் எம்மூரில் தங்கிச் செல்க' எனக் கூறுவாளாய், அஃது இயையாமையின் மணந்து கொள்ளலே தக்கதென உணருமாறு இவ்வாறு கூறுகின்றாள் தோழி.]

சேய்விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறையத் துறைபுலம் பின்றே
இறவுஅருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரையக்
கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே; 5
கணைக்கால் மாமலர் கரப்ப, மல்குகழித்
துணைச்சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை
எல்லிமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்,
தங்கின் எவனோ தெய்ய; பொங்குபிசிர் 10
முழவுஇசைப் புணரி எழுதரும்
உடைகடற் படப்பைஎம் உறைவின் ஊர்க்கே?

செவ்வானத்தே ஊர்ந்து செல்லும் செழுமையான கதிர்களைக்கொண்ட ஞாயிற்று மண்டிலம், பெரிதான மலைப்பின்னாகச் சென்று மறைய, அதனால் மக்களியக்கம் அற்றுப்போன கடற்றுறையும் தனிமையுடையதாய் ஆயிற்று. இறாமீனைத் தின்று வானில் எழுந்த கருங்கால்களையுடைய வெண்மையான நாரைகளும், வெள்ளிய மணற்குன்றின் மேலமர்ந்து தம் அரிய சிறைகளை வீசிப் புலர்த்தியபின்னர், கரையிடத்துள்ள கருங்கிளைகளையுடைய புன்னை மரங்களிலே சென்று தங்குவன ஆயின. திரண்ட தண்டினைக்கொண்ட கரிய மலரானது மறையும்படியாக, நீர் பெருகும் கழியிடத்தே சுறா மீன்கள் தத்தம் துணையோடும் கூடியவாய் இயங்குதலையும் மேற்கொண்டன. அவ்விடத்தே, இரவின்கண்ணே ஒலிக்கும் குளிர்ந்த கடலினிடத்தே, மிக்க பந்தங்களைக் கொளுத்திக் கொண்டவராக, எம் ஐயன்மாரும் மீன் வேட்டையின் பொருட்டாகப் போயுள்ளனர், அதனாவே, பொங்கியெழும் பிசிரையும் முழவொத்த ஒலியையும் கொண்டவாக அலைகள் எழுத்து மோதி உடைகிள் கடற்கரைப் பாங்கிலேயுள்ள, தங்குதற்கினிய எம் ஊருக்கு எம்முடன் வந்தீராய்த் தங்கியிருப்பீரானால், எதுவும் குறை உண்டாகுமோ?

கருத்து : 'இரவிலே எம்மூரிலுள்ள எம் இல்லிடத்துத் தங்கிப் போதலாம்' என்பதாம்.

சொற்பொருள் : செழுங்கதிர் – செழுமையான கதிர்கள்; செழுமை ஒளியின் செழுமையையும், வெப்பத்தின் செழுமையையும், அதனால் உலகுக்கு உண்டாகும் நன்மையின் செழுமையையும் குறிக்கும். மால் வரை – பெருமலை; மேற்கு மலை. வெண்கோடு – வெண் குன்று; மணற்குன்று; உப்பின் குவையும் ஆம். இறை கொள்ளல் – தங்குதல், மாமலர் – கரியமலர். கரப்ப – மறைய. 'சுடர்' - தீப்பந்தங்கள். பிசிர் – நுண் திவலை.

விளக்கம் : 'குருகு இறைகொண்டன' என அவையும் தம் உறைவிடத்துச் சென்று தங்குமாறு போலத் தலைவனும் தங்குதற்குரியன் என அவனது கடமை உணர்த்துகிறாள். 'எமரும் வேட்டம் புக்கனர் எனக் கூடுதற்கான செவ்வியும், 'உறைவின் ஊர்' என ஊரது இனிமைச் செறிவும் உரைத்து அவனைத் தங்கிபோக என்கின்றாள். மணந்த பின்னரன்றி அவளுரில் அவளில்லிடத்து அவளோடுங்கூடி இன்புறுதல் வாயாது ஆதலின், அவன் மனம் விரைய மணந்து கோடலிற் செல்லும் என்பதாம். "துறை புலம்பின்றாதலின் நீ செல்லுதலை அனைவரும் அறிவர். கழியிடைச் சுறாவழங்குதலின் நின் குதிரைகட்கு ஏதமாம். தங்கும் குருகிணம் கலைந்து ஆர்ப்பரித்தலால் அலருரை உண்டாதல் கூடும். வேட்டம் புக்க எமர் நின்னைக் காண நேரின் துன்புறுத்தலையும் செய்வர்' என அச்சுறுத்தி இவைபற்றி எண்ணாது இவளுடன் கூடியின்புறுவதற்கு ஏற்ற வகையால் இவளை மணந்து கொள்க" என்கின்றாள்.

மேற்கோள் : 'இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது' என் நச்சினார்க்கினியர் காட்டுவர். (தொல். பொருள், சூ 114 உரை.)

68. நெஞ்சுண ஆடுவோம்!

பாடியவர் : பிரான் சாத்தனார். திணை : குறிஞ்சி. துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.

[(து–வி.) இரவுக் குறியிடத்தே வந்து ஒருசார் தலைவன் நிற்கின்றான். அதனையறிந்து தோழி, 'தலைவி இற்செறிக்கப்படுதல் உறுதி; இனி இவளை வரைதவே செய்யத்தக்கது' என உணர்த்தக் கருதினளாகத் தலைவிக்குச் சொல்லுபவள்போல அவனும் கேட்கச் சொல்லுகின்றாள்.]

'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது.
இளையோர் இல்லிடத்து இற்செறித் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்' எனக்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்தி
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுஉண ஆடுகம்
வல்லிதின் வணங்கிச் செல்லுநர்ப் பெறினே
'செல்க' என விடுநள்மன் கொல்லோ? எல்லுமிழ்ந்து
உரவுவரும் உரறும் அரை இருள் நடுநாள்
கொடிநுடங்கு இலங்கின மின்னி
ஆடுமழை இறுத்தன்று, அவர் கோடுஉயர் குன்றே.

சிகரங்கள் உயர்ந்திருக்கும் அவருடைய குன்றம், இரவின் நடுயாமப் போதிலே, ஒளியை உமிழ்ந்தபடி எழுகின்ற வலிய இடிக்குரலை எங்கணும் முழங்கச் செய்தபடி, கொடி அசைந்தாடுமாறுபோல மின்னலிட்டதாய், மழையையும் பெய்யா நின்றது. இதனைக் காணும் அன்னை, நாளைக் காலையிலே, விளையாட்டுத் தோழியருடனே கூடி ஓரையாடி இன்புறாமல், இளம் பெண்கள் வீட்டிடத்தே அடைத்துக்கிடத்தல் அறமும் ஆகாது அதனால் செல்வமும் தேய்ந்துபோம்' எனக் கருதுவாளோ? அவள் கருதாள் ஆகலின், வலியச் சென்று வணக்கமுடன் எடுத்துச் சொல்பவரைப் பெறுதல் வேண்டும். பெற்றனமானால், குறிய நுரைகளைச் சுமந்தபடியும் நறுமண மலர்களை இழுத்துத் தள்ளிக் கொண்டதாயும் பொங்கி வருகின்ற புதுவெள்ளத்திலே, யாமும் எம் நெஞ்சம் களிப்பெய்த ஆடாநிற்போம்.

கருத்து : 'அதுதான் வாயாதாகலின், யாம் புதுவெள்ளத்தே ஆடிக் களித்தலும் இயலாமற்போம்' என்றதாம்.

சொற்பொருள் : ஆயம் – ஆயமகளிர், ஓரை – ஒருவகை மகளிர் விளையாட்டு! பஞ்சாய்ப் பாவைகோண்டு நீரிடத்தே கூடியாடுவது. இளையோர் – இளையோராகிய மகளிர். ஆக்கம் – ஆகிவரும் செல்வம். எல் – ஒளி. உரவு – வலிமை. ஆடுமழை - பெய்யும் மழைமேகம்.

விளக்கம் : 'புதுநீராடிக் களிக்கும் பிற மகளிரைப் போலாது, அவன் மலையிடத்திலிருந்து வரும் நீராதலால் அதனையே கருதிப் பெரிதும் தாம் களிப்போம் என்பாள் 'அவர் குன்றிடத்திலிருந்து வரும் நீர்' என்றாள். 'செல்கென விடுநள் மன்' என ஐயுற்றதனால் இற்செறித்தல் நிகழும் என்பதனையும், இனிக் கண்டின்புறுதல் வாயாதென்பதனையும் கூறி வரைவு வேட்டனளும் ஆயிற்று. அரையிருள் நடுநாள் குன்றிடத்துப் பெய்யும் பெருமழையைச் சுட்டி, அதனைக் கடந்துவரும் தலைவனை நினைந்து வழியின் ஏதப்பாட்டிற்குத் தாம் அஞ்சினமையும் உணர்த்தினாள். 'சொல்லுநர்ப் பெறின்' என்றாள். தாம் அதுகாறும் மறைத்த களவினை.

மேற்கோள் : நச்சினார்க்கினியர், இச் செய்யுளை. 'வரைவு நீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையுைம் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்' எனக் கூறித் தோழி வற்புறுத்ததாகக் காட்டுவர். (தொல். பொருள் சூ. 114 உரை.)

பிறபாடங்கள் : 'நறுமலர் அருந்தி', 'இலங்க மன்னி'.

69. மாலை தோன்றினால்!

பாடியவர் : சேகம் பூதனார்.
திணை : முல்லை.
துறை : வினைவயிற் பிரிதலாற்றாளாய தலைவி சொல்லியது.

[(து–வி.) வினைவயிற் பிரிந்து சென்ற கணவன் குறித்த பருவத்தே வாரானாதலை நினைத்து தலைவியின் பிரிவுத் துயரம் பெருகுகின்றது. அதனால் மிக வாடிய அவள், மாலையின் வரவைக் கண்டதும், தன்னுள் கூறிப் புலம்புவது இச் செய்யுள்.]

பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி
சேய்உயர் பெருவரைச் சென்றுஅவண் மறையப்
பறவை பார்ப்புவயின் அடையப் புறவில்
மாஎருத்து இரலை மடப்பிணை தழுவ
முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் 5

தோன்றி தோன்றுபு புதல் விளக்கு அறாஅ
மதர்வை நல்ஆன் மாசுஇல் தெண்மணி
கொடுங்கோற் கோவலர் குழலோடு ஒன்றி
ஐதுவந்து இசைக்கும் அருள்இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் 10
இனைய வாகித தோன்றின்
வினைவலித்து அமைதல் ஆற்றலர் மன்னே!

பலவான கதிர்களையுடையது ஞாயிற்று மண்டிலம். அம் மண்டிலமானது பகற்பொழுதினைச் செய்து தன் கடமையை முடித்தது. அதன்பின், மிகவுயர்ந்த பெருமலைக்கண் சென்று, அவ்விடத்தே மறைதலையும் செய்தது. பறவைகள் தம்முடைய குஞ்சுகள் இருக்கும் கூடுகளிற்சென்று அங்கே அடைந்தன. காட்டிடத்துள்ள பெரும் பிடரியையுடைய கலைமானானது தன் இளைதான பிணையைத் தழுவியபடியே இன்புறலாயிற்று. முல்லை அரும்புகளும் இதழ் அவிழ்ந்தவாய் மலர்ந்தன. பலவிடங்களிலும் தோன்றிப் பூக்கள் தோன்றின. அவை புதர்கள்தோறும் விளக்கேற்றினாற்போல் விளங்கலாயின. செம்மாப்பையுடைய நல்ல பசுக்களின் குற்றமற்ற தெளிவான மணியோசையானது, வளைந்த கவைக்கோலையுடைய கோவலரது குழலிசையோடும் கலந்ததாய் மெல்லென வந்து இசைக்கின்றது. பிரித்து வருந்தியிருப்பவர்பால் அருளற்றதான இத்தகைய மாலைக்காலமானது. பொருளீட்டிவரும் முயற்சிப் பொருட்டாகப் பிரிந்துபோயின தலைவர் சென்றுள்ள நாட்டினிடத்தேயும் இத் தன்மையுடைத்தாகித் தோன்றினால் நன்றாயிருக்கும். அவரும் வினைக்கண்ணே உறுதி கொண்டு அவ்விடத்துத் தங்கியிருப்பவர் ஆகார். அவ்வாறு இம் மாலை அங்குத் தோன்றாமையாலேதான் என் வாணாளும் இப்படிக் கழிகின்றது போலும்!

கருத்து : மாலை செய்யும் நோயினை அவரும் உணர்ந்திருப்பின், குறித்த பருவத்திலே தவறாது மீண்டிருப்பார் அல்லரோ, என்பதாம்.

சொற்பொருள் : பார்ப்பு –– பறவைக் குஞ்சு. இரலை - கலைமான். தோன்றி – தோன்றிப்பூ; செங்காந்தட்பூ. மதர்வு – செம்மாப்பு. கொடுங்கோல் – முனைக்கண் வளைவுடைய கவைக்கோல்; கோடுதல் – வளைதல்.

விளக்கம் : "பகலெல்லாம். கடமையாற்றிய கதிர் மண்டிலமும் மாலைக்கண் சென்று மறைகின்றது; பறவையினங்கள் குஞ்சுகளைச் சென்று சேர்கின்றன: மான் பிணையைத் தழுவி இன்புறுகின்றது; மாடுகளும் அவற்றை மேய்ப்பாரும் வீடு திரும்புகின்றனர்; அவர்மட்டும் என்னை மறந்தனர்" என வருந்துகின்றாள் தலைவி. 'புதரிடத்து மலர்ந்த செங்காந்தட் பூக்கள் விளக்கு ஏற்றினாற்போலத் தோன்றும் என்றது, அதுவும் மனைவிளக்கு விளங்கும் இல்லத்து நினைவை எழுப்பாதோ' என்றதாம். 'குவியிணர்த் தோன்றி ஒண் பூ அன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்' எனவரும் மதுரைக் கண்ணனாரின் குறுந்தொகைப் பாட்டடிகளும் (குறு. 107, 1-2) தோன்றியின் செவ்வொளிச் சிறப்பைக் காட்டும். 'அருளில் மாலை' என மாலைக் காலத்தைக் குறை கூறினள்; 'அவர்தாம் அருளிலராயினார். உலகுக்கெல்லாம் வாழ்வளிக்கும் இந்த மாலைக் காலமுமோ எனக்கு அருளற்றதாகிக் கொடுமை செய்தல் வேண்டும்" எனக் கூறினளாய் வருந்துகின்றாள் தலைவி.

70. அன்போ? மறதியோ?

பாடியவர் : வெள்ளி வீதியார்.
திணை : மருதம்.
துறை : காமம் மிக்க கழிபடர் கிளவி.

[(து–வி.) தலைமகனின் பிரிவினாலே காமநோய் மிகுதியுற்றாளான தலைவியொருத்தி, நாரையை நோக்கித் தன் துயரைக் கூறுகின்றாள். இதனை வெள்ளிவீதியாரின் சொந்த அநுபவமாகவும் கொள்ளலாம்.]

சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!
துறைபோகு அறுவைத் தூமடி அன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே!
எம்ஊர் வந்துஎம் உண்துறைத் துழைஇச்
சினைக்கெளிற்று ஆர்கையை அவர்ஊர்ப் பெயர்தி; 5
அனையஅன் பினையோ, பெருமற வியையோ,
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல்ஊர் மகிழ்நர்க்குஎன்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?

வெள்ளிய சிறு குருகே! வெள்ளிய சிறு குருகே! நீர்த்துறையிடத்தே ஒலித்தற்குப் போய்வந்த வெள்ளாடையின் தூய மடியினைப்போல விளங்கும், வெண்ணிறம் ஒளிசெய்யும் சிறகினையுடைய வெண்மையான சிறு குருகே! அவருடைய ஊராகிய அவ்விடத்து இனிதான புனலே இவ்விடத்தும் வந்து பரக்கின்ற, கழனியையுடைய நல்ல ஊரிடத்தாராகிய என் காதலருக்கு, என்னுடைய கலன்கள் நெகிழ்ந்து வீழ்கின்ற துன்பத்தை இதுகாறும் சொல்லாத குருகே ! அவரூரிடத்திருந்து எம் ஊரிடத்திற்கு வந்து, எம்முடைய உண்ணும் நீரினையுடைய பொய்கைத் துறையிடத்தே புகுந்து துழாவிச் சினைகொண்ட கெளிற்றுமீனைத் தின்றாயாய், மீண்டும் அவரது ஊருக்கே நீயும் செல்கின்றாய். அவரைப் போலவே பெற்ற உதவியை மறக்கும் அன்பினை நீயும் உடையையோ? அல்லது, பெரிதும் மறதியை உடையையோ?

கருத்து : 'இன்றேனும் அவரிடத்து என் குறையை எடுத்துக் கூறுவாயாக' என்பதாம்.

சொற்பொருள் : துறை – ஒலித்தல் துறை. மடி – மடிக்கப் பட்ட ஆடை. உண்துறை – உண்ணு நீர்ப் பொய்கையின் துறை. மறவி – மறதி. இழை – கலன்.

விளக்கம் : 'ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும் கழனி நல்லூர் மகிழ்நர்' என்றது இவ்வூரின் நீர்வளத்திற்கு உதவும் ஊரனாயிருந்தும் எனக்கு மட்டும் உதவும் அருளற்ற கொடுந்தன்மையினன் ஆயினனே என்றதாம். 'மகிழ்நன்' மகிழ்வைத் தருபவன், காதலன். 'இழை நெகிழ் பருவரல்' உடல் மெலிதலால் வந்துற்ற துன்பம்; இதனால் தன் மேனியது நலிவைக் கூறுகின்றனள். 'இவ்வூர் வந்து சினைக் கெளிற்றை உண்டு போகும் நீதான், பெண்களைத் துன்புறுத்திச் சாகச்செய்து இன்புறுதலன்றி எனக்கு உதவும் அத்தகைய அன்பினை உடையை ஆவையோ?' என அதன்பாலும் நொந்து கொள்ளுகின்றாள். 'அது, தன்னை நுகர்ந்து இன்புற்றுக் கைவிட்டுப்போகிய தன் இன்ப நுகர்வையன்றிக் காதலியின் நலனைக் கருதாத தலைவனின் ஊரினின்றும் வந்ததால் உண்டாகிய தன்மையோ?' என்று குறித்தனளும் ஆம். 'பெருமறவியை’ என்றது. அவனும் என்னை மறந்தனன்; அவ்வாறு நீயும் மறதி உடையையோ?' என்றதாம்.

குருகு மீனுண்ணும் இயல்பிற்றாயினும் தன் ஆற்றாமையினாலே அது சினைக்கெளிற்றை உண்ணக் கண்டதும் அதன்பால் இப்படிக் கூறி நொந்து உரைக்கின்றாள் தலைவி. ' துறை போகு அறுவைத் தூமடி அன்ன நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே' என்றது. 'உடலிடத்துத் தூய்மை உடையையாயினும் நின் உள்ளத்திடத்தே தூய்மையை உடையை அல்லை' என்றதுமாம்.

மேற்கோள் : 'காப்புச் சிறைமிக்க கையறு கிளவி' என்னும் துறைக்கு இச்செய்யுளை மேற்கோளாகக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 111 உரை) பிற பாடங்கள் 'ஒண்துறை துழைஇ'

71. பிரிதல் வல்லீரோ?

பாடியவர் : வண்ணப்புறக் கந்தரத்தனார்.
திணை : பாலை.
துறை : தலைவனைத் தோழி செலவழுங்குவித்தது.

[(து–வி.) தலைவனது பொருள்வயிற் பிரிவினை அறிவிக்க கேட்ட தோழி தலைவியது பிரிவாற்றா நிலையை உரைத்தவளாக அந்தச் செலவைத் தடுக்க முயலுகின்றாள்.]

மன்னாப் பொருட்பிணி முன்னி 'இன்னதை
வளைஅணி முன்கைநின் இகுளைக்கு உணர்த்து'எனப்
பன்மாண் இரத்திர் ஆயின், 'சென்ம்' என
விடுநள் ஆதலும் உரியள், விடினே
கண்ணும் நுதலும் நீவி முன்நின்று 5
பிரிதல் வல்லிரோ–ஐய! செல்வர்
வகைஅமர் நல்இல் அகஇறை உறையும்
வண்ணப் புறவின் செங்காற் சேவல்
வீழ்துணைப் பயிரும் கையறு முரல்குரல்
நும்இலள் புலம்பக் கேட்டொறும் 10
பொம்மல் ஓதி பெருவிதுப் புறவே?

ஐயனே! நிலையற்றதான பொருளினைத் தேடும் ஆசை நோயினை அடைந்தீர். அதனையே கருத்திற்கொண்டு 'இக்காரியத்தை வளையணிந்த முன்னங்கைகளை உடையாளான நின் தோழிக்கு உணர்த்துவாயாக' என்று, பலவாக மாட்சிப்பட இரந்தும் கூறுகின்றீர். செல்வர்களது வகையமைந்த நல்ல நுமது வீட்டின் உள்ளிறைப்பில் தங்கியிருந்து வாழும் வண்ணப் புறாக்கனின் செங்கால்களை உடைய சேவலானது தான் விரும்பிய பெண்புறாவைக் கூட்டத்திற்கு அழைத்திருக்கும் செயலறவு தோன்ற எழுகின்ற அந்தக் குரலொலியை, நும்மை அருகிலற்றாளாய்த் தனிமையுற்றிருக்கும் காலத்தே வருத்தத்துடன் கேட்ட பொலிவு பெற்ற கூந்தலை உடையாளான இவள் பெரிதும் ஆசையுற்று நலியுமாறு பிரிந்துபோதற்கு வல்லீரோ? 'நீர் போவதனை யான் உரைப்பின் 'செல்வீராக' என நும்மைப் போகவிடுதற்கான சுற்புடையாளாகும் பொறுப்பிற்கும் இவள் உரியவள் ஆவாள். எனினும், அவ்வேளை, இவள் முன்பாக நின்று, கலங்கிய இவள் கண்களையும் பசந்த நெற்றியையும் தடவிவிட்டு, அந்நிலையே இவளை நலியுமாறு விட்டுப்பிரிவதற்கு நீர் தாம் வன்மை உடையவரோ?

கருத்து : 'இவளைப் பிரியும் வன்கண்மை கொண்டீரோ?' என்பதாம்.

சொற்பொருள் : பிணி – நோய் ; மனத்தைப் பற்றிப் பிணித்திருத்தலால் 'பிணி' ஆயிற்று. வகையமை நல்லில் – பவ வகுப்புக்கள் அமைந்த நல்ல வீடும் ஆம்; வகுப்பு – கட்டு. கையறு முரல் குரல் – காமத்தால் செயலற்று அது தோன்ற ஒலிக்கும் குரல், பொம்மல் ஓதி – பொலிவு பெற்ற கூந்தலை யுடையாள். விதுப்பு – ஆசை நோய்.

விளக்கம் : 'அவள் சென்மென விடுநளாதலும் உரியள்; ஆயின், நீர் பிரிதல் வல்லீரோ?, எனக் கேட்கும் சொற்செறிவை அறிதல் வேண்டும். 'துயரைப் பொறுத்திருக்க அவள் துணிந்தாலும், அவள் துயருற்று நலிவதனை நீர்தாம் பொறுக்கலாற்றீர்' என, அவனது காதன்மை மிகுதியைப்போற்றிச் செலவழுங்குவிக்கின்றாள் தோழி. 'செல்வர் வகையமர் நல்லில் அகவிறை உறையும் வண்ணப்புறச்சேவல்' பொருளை நாடாது தன் துணையைக் கூட விரும்பியதாய் அழைக்கும். குரலைக் கேட்டதும், தலைவி தன்னருகே இல்லாத தலைவனின் செயலை நினைந்து வருத்தமுற்று நலிவாள்' என்பதாம். 'செல்வர் வகையமை இல்' என்றது, தலைவனது வளமனையைக் குறித்தது ஆம். 'புலம்புதரு குரல புரவுப் பெடை பயிரும்' (குறுந். 79) எனப் புறவுச்சேவல் பெடையை அழைப்பதனைப் பிறரும் குறிப்பிடுவர்.

72. நட்பு மறையுமோ?

பாடியவர் : இளம்போதியார்.
திணை : நெய்தல்
துறை : தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி.) தலைவன் சிறைப்புறமாக. அவனைத் தலைவியை வரைந்துகொள்ளத் தூண்டக் கருதினனாகிய தோழி, இவ்வாறு தலைவிக்கு உரைப்பாள் போல், அவனும் கேட்குமாறு கூறுகின்றாள்.]

'பேணுப பேணார் பெரியோர்' என்பது
நாணுத்தக் கன்றுஅது காணுங் காலை
உயிர் ஓரன்ன செயிர்தீர் நட்பின்
நினக்குயான் மறைத்தல் யாவது? மிகப்பெரிது
அழிதக் கன்றால் தானே கொண்கன் 5
யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான்எற்
பிரிதல் சூழான் மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், 'ஆனாது,
அவர்வந் தன்றுகொல்?' என்னும்; அதனால்
'புலர்வது கொல்அவன் நட்பு'எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே! 10

தோழி! 'பேண வேண்டுவன எனப் பிறர் கருதும் பொருள்களைப் பெரியோர் விருப்பமுடன் பேணமாட்டார்கள்' என்பார்கள். அவரது அந்த நிலைதான் ஆராயுங்காலத்தே பெரிதும் வெட்கத்தைத் தருவதாகின்றது. இருவரும் ஓர் உயிரேயாய் அமைந்தாற்போலும் குற்றமற்ற செறிந்த நட்பினை உடையவளான நினக்கு, யான் ஒன்றை மறைத்தல் என்பதும் எத்துணைக் குற்றமாகும்? முன்காலத்தே, யான் "தாய் அறிதல் கூடுமென யான் அஞ்சுகின்றேன்' எனக் கூறினாலும், தான் என்னைப் பிரிந்திருத்தலைக் கருதானாய் உடனிருத்தலையே நாடியவனாக இருந்தனன். இதுகாலை அதுதான் கழிந்தது. கானலிடத்து விளையாட்டயர்கின்ற ஆய்மகளிர் அறிந்தாலும், இக்களவு மறைகடந்து வெளிப்பட அதனால் பழிச்சொற்களும் வந்தடையுமோ?' என்று கூறி அகன்று போகின்றான். அதனால், அவன் நட்புத்தானும் இல்லையாகிப் போகுமோ என்று கருதி, யானும் என் உள்ளத்தே அஞ்சா நிற்பேன். அந்த அச்சந்தானும் மிகப்பெரிதாக எனக்கு அழிவைத் தருகின்றதாயுள்ளதே?

கருத்து : 'அவனது நட்புச் செறிவினே தளர்ச்சியைக்கண்டேன்' என்பதாம்.

சொற்பொருள் : பெரியோர் – பெருந்தகுதி உடையோர்; என்றது, தலைவனைக் குறித்துக் கூறியதாம். செயிர் – குற்றம். சூழல் – கருதல். கானல் – நெய்தலங்கானல்.

விளக்கம் : இத்துறைக்கு இயையக் கொள்வதாயின், தோழி, தலைவியின் கருத்தைத் தன்னுடைய கருத்தாகக் கொண்டு, தலைவனுக்கு வரைதல் வேண்டுமென்பதை அறிவுறுத்தக் கருதினளாய்ச் சொன்னதாகக் கொள்க. 'உயிரோர் அன்ன செயிர்தீர் நட்பு' என்பது, நட்பினிற் சிறந்த நிலை: உடலால் இருவராயினும் உயிரால் ஒருவரேயாகிப் பிறரது இன்பதுன்பங்களைத் தமதாகவே கொள்ளும் கலப்பு இது. இதனால் 'மறைத்தல் யாவது?' என்கின்றாள், 'தாயறியின் ஏதமாம்' என்றபோதும் பிரியக்கருதாத பேரன்பினன், 'தோழியர் அறிவர்' எனக் கூறிப் பிரிந்துபோதலை, அவனது அன்பின் தளர்வாகக் கொண்டு கூறுகின்றாள். இந்த அச்சம் நீங்கவும், சூளுரைத்த சொற் பேணவும். அவன் தலைவியை முறையாக மணந்து கொள்ளவே விரைய மேற்கொள்ளுதற்கு உரியதென்பதாம்.

மேற்கோள் : 'தலைவி, தலைவனோடு தன் திறத்து ஒருவரும் ஒன்று உரையாதவழித் தனது ஆற்றாமையால், தன்னொடும் அவனோடும் பட்டன சில மாற்றம் தானே கூறுதலும் உள' என்னும் விதிக்கு மேற்கோளாக, இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர்- (தொல். பொருள். சூ. 111 உரை.)

இனி, 'வேற்று வரைவுவரின் அது மாற்றுதற்குக் கூறிய தலைவியின் கூற்றாக இச் செய்யுளைக் காட்டி, அச்சத்தின் அகறற்குச் செய்யுள்' என உரைப்பர் இளம்பூரணனார். (தொல்.பொருள். சூ. 109 உரை.).

இவையிரண்டும், இச் செய்யுளைத் தலைவி கூற்றாகக் கொள்ளவே சிறப்புடைத்தெனக் காட்டும். அவ்வாறு பொருத்திக் கண்டும் பொருளுணர்ந்து இன்புறுக.

73. பசலையும்! அம்பலும்!

பாடியவர் : மூலங்கீரனார்.
திணை : பாலை.
துறை : செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.
[(து–வி.) தலைவன் பிரிந்து செல்லுதற்கு நினைந்தானாதலைக் குறிப்பினால் உணர்ந்து, நலனழிந்தாளான தலைவி, தன்னை வினாவிய தோழிக்குக் கூறுகின்றனள்.]

வேனில் முருக்கின் விளைதுணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீ இய
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம்இவண் ஒழியச் 5
செல்ப என்ப தாமே—செவ்வரி
மயிர்நிரைத் தன்ன வார்கோல் வாங்குகதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்னஎன்
நுதற்கவின் அழிக்கும் பசலையும்,
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. 10

முருக்க மரத்தினிடத்தெ காய்ந்து முற்றிய நெற்றுக்கள் வேனிற்காலத்தே தோன்றும் தோற்றத்தைக் கொண்ட மாண்பற்ற விரல்களையுடையது, வலிய வாயினை உடையதான பேய் ஆகும். அதுதான், வளமுடைய பழைய ஊரினிடத்தே தனக்கிடப்பெறும் மலர்ப்பலியினை உண்ணும் பொருட்டாகத் தனக்குரிய மன்றிடத்தே, அந்த மன்றத்தையும் மோதியபடியாக எழுந்து தோன்றும். அத்தகைய புன்கண்மை கொண்ட மாலைக்காலம் இது. தம்மோடு கூடியிருப்பினும் பிரிவை நினைந்தேமாய் அச்சங்கொள்ளும் நாம் இவ்விடத்தாகக் கழிந்துகிடக்க, அவர்தாம் நம்மைக் கைவிட்டுச் செல்கிற்பர் என்கின்றனர். செந்நிறங் கொண்டமென்மயிரை வரிசைப்படுத்தி வைத்தாற்போன்ற நெடியதண்டினையுடைய வளைந்த நெற்கதிர்கள் விளங்கும் செந்நெற்பயிரைக் கொண்ட அழகான வயலினிடத்தே அன்னப் புள்ளானது உறக்கங்கொண்டிருக்கும். மலர் வகைகள் நிரம்பிய தோட்டக்கால்கள் சூழ்ந்த பேரூர் 'திருச்சாய்க்காடு' ஆகும். அதனைப் போன்ற என் நுதலது அழகினை அழியச் செய்யும் பசலை நோயினையும், அதனைக்கண்டு நம்மைப் பழிதூற்றும் அயலிலாட்டியரது பழிச்சொற்சுளையும் நமக்குக் கைம்மாறாக அளித்தவராக, அவர்தாம் செல்கிற்பர் என்கின்றனரே! இனி, யான் யாதாவேனோ?

கருத்து : 'அவர் பிரியின், யான் அழிவேன்' என்பதாம்.

சொற்பொருள் : வேனில் – முதுவேனில். விளைதுணர் – விளைந்த நெற்று. மல்லல் – வளமை. மலர்ப்பலி – மலரும் பச்சூனும் கலந்து படைக்கும் பலி. மன்றம் – பேய் மன்றம். செவ்வரி மயிர் - செவ்விய மென்மயிர்; செவ்விய வரியின் மயிரும் ஆம். வார்கோல் – நெடிய தாள். 'சாய்க்காடு' – திருச்சாய்க்காடு என்னும் ஊர்.

விளக்கம் : பேய் வந்து மன்றம் பிளக்கும்படியாக ஆரவாரித்துப் பலியேற்று உண்ணும் மாலைப் போதிலே, அவரருகிருக்கவும் அஞ்சுவேன் யான்; அவரின்றேல் என்னாவேனோ என்பதாம் மாலைக் காலத்துப் பேய்க்குப் பலியூட்டு ஊட்டுதல் பண்டைய மரபாகும். 'புன்கண் மாலை என்றது, பிரிவால் நலிந்த மகளிரை மேலும் அது வருத்துதலால்.

இறைச்சிகள் : (1) பேய் மலர்ப்பலியை உண்ணுதற் பொருட்டாக மன்றத்தைப் போழும் குரலோடு ஆர்ப்பரித்து வருதலைப் போலத் தலைவியின் நலத்தை உண்ணும் பொருட்டாகப் பசலையும் ஆர்த்தெழும் என்பதாம். அதனால், பலரும் அறிய அலரும் மிகும் என்பதுமாம்.

(2) கதிரரிவாரைப் பற்றி நினையாதே செறுவிலே அன்னம் துஞ்சிக் கிடந்தாற்போல, யானும் அவர் பிரிவைப்பற்றிக் கருதாதே அவரது செஞ்சாந்து பரந்த மார்பிடத்தே துயின்று கிடந்தேன் என்பதாம்.

74. அவன் பெண்டு!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைவி பாணற்கு வாயின் மறுத்தது.

[(து–வி) தலைவியை மறந்து பரத்தைபால் மயங்கிக்கிடந்த தலைவன், அவள் புதல்வனைப் பெற்று வாலாமை கழிந்தனளாதலைக் கேட்டதும், அவளை விரும்பியவனாகப் பாணனைத் தூது விடுக்கின்றான். அந்தப் பாணனுக்குத் தலைவி கூறுவதாக அமைந்தது இது.]

வடிக்கதிர் திரித்த வல்ஞாண் பெருவலை
இடிக்குரற் புணரிப் பௌவத்து இடுமார்
நிறையப் பெய்த அம்பி காழோர்
சிறைஅருங் களிற்றின் பரதவர் ஓய்யும்
சிறுவீ ஞாழற் பெருங்கடற் சேர்ப்பனை 5

'ஏதி லாளனும்' என்ப; போதுஅவிழ்
புதுமணற் கானல் புன்னை நுண்தாது
கொண்டல் அசைவளி தூக்குதொறும், குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும், தெண்கடல்
கண்டல் வேலிய ஊர் 'அவன்
பெண்டு'என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!

திருத்தமாக வடிக்கப்பெற்ற சுதிரினையிட்டு முறுக்கிய வலிய கயிற்றைக் கொண்ட பெருவலையினை, இடிக்குரலைப்போல ஆர்த்தெழும் அலைகளையுடைய கடலிடத்தே இடும் பொருட்டாக. தோணி நிறைந்துபோமாறு பெய்யப்பெற்ற வலையைக் கொண்ட தோணியினை, அடக்குதற்கரிய களிற்றினை அடக்கிச்செலுத்தும் பரிக்கோற்காரர் தன்மைபோலப் பரதவர் கடலினிடையே செலுத்திச் செல்வர். சிறுபூக்களையுடைய ஞாழல் மரங்களைக் கொண்ட அத்தகைய பெரிய கடற்கரை நாட்டினனாகிய நம் தலைவனை, நமக்கு அயலானாயினான் என்றும் ஊரார் கூறுவர். புதுமணற்பரப்பிலேயுள்ள கானலிடத்துப் புள்னையினது மலர்ப்போது, இதழவிழ்கின்றதனாலே அமைந்த நுண்ணிறப் பூந்தாதினை வீசுகின்ற கீழ்காற்று மோதி எடுக்குந்தொறும், குருகினனது வெள்ளிய முதுகுப்புறமானது மூடி நிறையுமாறு சொரிந்திருக்கும் தெளிந்த கடற்பரப்பிடத்தேயுள்ள, தாழை மரங்களை வேலியாகக் கொண்ட இவ் ஊரானது. அப்பரத்தையினையே அவன் கிழத்தியென அறிந்ததாயும் இருக்கின்றது. இந்தச் சொற்களை இனி மாற்றியமைத்தல் என்பது எவர்க்கும் அரிதாகும். ஆதலால் இனி அவருறவை யாமும் ஒருபோதும் விரும்பேம் என்பதாம்.

கருத்து : 'இனி அவர் அவளுடனே யாயினும் இன்புற்று வாழ்க' என்பதாம்.

சொற்பொருள் : கதிர் – வலையை முறுக்கும் கம்பி. வன்ஞாண் – வலிய நூற்கயிறு. காழோர் – பரிக்கோற்காரர்; குத்துக்கோற்காரர். சிறையருங் களிறு – அடக்கிக் கட்டுப்படுத்துதற்கரிய மதகளிறு. குருகு – நாரை. கண்டல் – தாழை. பெண்டு – இற்கிழத்தி

விளக்கம் : 'பெருவலை நிரையப் பெய்த அம்பியை ஒடக்கோவிட்டுச் செலுத்தும் பரதவரது தோற்றம், காழோர் சிறையரும் களிற்றினை அடக்கிச் செலுத்தினாற்போலும் முயற்சியது என்க. மீன் வேட்டமே கருத்தாகக் கொண்ட பரதவர், அதற்கு உதவியாகும் வலையினைத் தோணியிலிட்டபின் அந்தத் தோணியை முயற்சியுடன் செலுத்திச் செல்லுமாறுபோல, நின் தலைவனும் என்னை வயப்படுத்தக் கருதினனாய் நின்னைச் செலுத்தியவனாகத் தான் பின்னிருந்து சூழ்ச்சி செய்கின்றான் என்பதாம். கடலிடை ஓடம் மதகளிறுபோல இயக்கம் பிறழ்ந்து போகா வண்ணம், குத்துக்கோற்காரர் களிற்றை அடக்கிச் செலுத்துவதுபோலச் செவ்விதாக இயக்கிச் செலுத்தும் பரதவரைப் போல, நின் தூதுமொழி தடம் பிறழாவாறு அவனும் சிறைப்புறமாக நிற்பதனை யானும் அறிந்தேன்" என்பதுமாம். ஏதிலான் – அயலான்.

உள்ளுறை : பரதவர் தலைவனுக்கும், வலைசுமந்த தோணி பரத்தையரை வசப்படுத்தித்தரும் ஆற்றல்மிக்க பாணனுக்கும், வலைப்படும் மீன்கள் அவன் பேச்சால் மயங்கித் தலைவன் வலையிற் சிக்கித் துயருற்று நலியும் பரத்தையருக்கும் கொள்க. 'எம்மையும் அவ்வாறு அகப்படுத்தக் கருதினையோ?' என்று கூறி மறுத்ததாம்.

இறைச்சி :' புன்னையின் பூந்தாதுகளைக் காற்றெடுத்துத் தூற்றி வெண்குருகின் புறத்தை வேற்று நிறமாக மாற்றி மயக்கியதுபோலப், பொருளினை வாரியிறைத்துத் தலைவன் தலையளி செய்ததன் காரணத்தாலே, புல்லியளான பரத்தையும் அவனது மனைவியேபோலத் தோற்றிப் பிறரை மயங்கச் செய்கின்றாள் என்பதாம். 'பிரிவால் பசலை மூடி மறைக்கப்பட்ட உடலினமாகிய எம்மை, அவன் ஏதிலாட்டியெனப் பிறழ நினைந்தான் போலும்' என்றதும் ஆம்.

ஒப்பு : 'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள் : இனி, எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும், வருஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன், ஒல்லென ஒலிக்குந் தேரொடு, முல்லை வேலி நல்லூரானே' எனக் கண்ணகி கூறியதாக வரும் பரணர் பாட்டையும் இதனோடு ஒப்பிட்டு இன்புறுக (புறம். 144.).

75. உள்ளம் உடையும்!

பாடியவர் : மாமூலனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.

[(து–வி.) தலைவி நினக்குச் கிடைப்பாளல்லன்' எனத்தன்னை உரைத்துப் போக்கிய தோழியிடம் தன் நோயின் மிகுதியை உரைத்தாளாகத் தலைவன் கூறுகின்றான்.]

நயன் இன் மையின், பயன்இது என்னாது
பூம்பொறிப் பொலிந்த, அழல்உமிழ் அகன்பை
பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்குஇது
தகாஅது வாழியோ குறுமகள்! நகாஅது
உரைமதி; உடையும்என் உள்ளம்—சாரல் 5
கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போலச்
சேயரி பரந்த மாஇதழ் மழைக்கண்
உறாஅ நோக்கம் உற்றான்
பைதல் நெஞ்சம் உய்யு மாறே. 10

இளமை உடைய பெண்ணே! நீதான் நெடிதுகாலம் வாழ்வாயாக! 'நின்பால் எமக்கு விருப்பந்தருகின்ற நயப்பாடு யாதும் இல்லைமையினாலே, நின் முயற்சிக்குப் பயன் 'அகன்று போதலே' என்று கூறினையாயினும் பொருந்தும். அவ்வாறு கூறுதலையும் செய்யாதே, பொலிவுற்ற புள்ளிகள் பொருந்திய அழலைப்போலும் நஞ்சைக் கக்கும் அகன்ற படத்தையுடைய பாம்பானது உயிர்களைக் கடித்து வருத்தினாற்போல, என்னை நகையாடும் இதுதான் நின் செவ்விக்குத் தக்கதாகாது. மலைச்சாரலிடத்துக் கொடிய வில்லினனான சானவன் ஒருவன், கோட்டினையுடைய விலங்காகிய களிற்றைக் கொன்று, அதன் பச்சூனைக் கொண்ட பகழியை உருவி எடுத்தால் அது விளங்குமாறு போலச் செவ்வரி பரந்த கரிய இமைகளையுடைய தலைவியின் குளிர்ச்சிகொண்ட கண்களது பொருந்தாத நோக்கத்தாலே தாக்குதலுற்றது என் நெஞ்சம். அதுதான் அழியாது பிழைக்குமாறு, என்னை நகையாடிப் போக்க நினையாதே, நின் தலைவிபாற் சென்று, என் குறையினை எடுத்து உரைப்பாயாக. அங்கனம் நீ செய்யாயேல் என் வருத்தமுற்ற உள்ளம் உடைந்துபோக யானும் அழிந்தே போவேன்.

கருத்து : 'நீதான் என் குறையை முடித்து என் உயிரைக்காத்தல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : பூம்பொறி அழகான புள்ளிகள், அழல் – அழலைப்போலும் நஞ்சு, பை – படம்; நச்சுப்பை, கோட்டுமா – களிறு; பன்றி, பச்சூன் – பசிய ஊன். பைதல் – வருத்தம்.

விளக்கம் : 'நயனின்மையின் இது பயன் என்னாது' என்றது, தலைவன் தலைவிக்கு ஏற்புடைத் தகுதியாளன் அல்லனாகாமையின், அவன் வருந்தி அழிதலே அவனது காமத்தின் பயனாகும் என்று சொல்லிப் போக்காது என்றதாம். நயன் – நன்மைப்பாடு.

'பூம்பொறிப் பொலிந்த அகன்பைப் பாம்பு அழல் உமிழ்ந்து உயிரணங்கி யாங்கு' என்றது, தோற்றத்தால் அழகும் மென்மையும் கொண்ட நின் வாயிடத்தினின்றும், கடுவனைய கடுஞ்சொற்களைக் கூறினது தகாது' என்றதாம். 'சிறிதான அம்பினைக் கொண்டேவிப் பெரிதான கோட்டு மாவைக் கொன்ற வேட்டுவனின் செயலைப்போல, தன் கண் பார்வையினாலே தன்னைத் தாக்கித் தளர்வித்தனள் தலைவி' என்கின்றான். சேயரி பரந்த ஆயிதழ் மழைக்கண் உறாஅ நோக்கம்' என்றது, அந்தக் கண்ணின் தன்மைக்கும் பொருந்தாத நோக்கம் அதுவென உரைத்து, 'அவளும் உள்ளத்தே தன்பாற் காதலுடையாளே' என்கின்றான். செவ்வி வாயாமையின் தன்னை வெறுத்து நோக்கினள் எனவும் கூறுகின்றான். உறா.அ நோக்கம் உயிரை வாட்டுதலால் அவன் கொண்ட தளர்ச்சியும் இதனாற் காணப்படும்.

ஒப்பு,

              'சிலைமாண் கடுவிசைக் கலைநிறத்து அழுத்திக்
               குருதியொடு பறித்த செங்கோல் வானி
               மாறுகொண்டன்ன உண்கண்' (குறு. 372)

எனக் கடைசிவந்த மகளிரது கண் குருதிக்கறை தோய்ந்த பகழி முனைக்குப் பிறரானும் உவமிக்கப்படும்.

76. மெல்லடி உய்தற்கு!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : பாலை.
துறை : புணர்ந்து உடன் போகாநின்ற தலைவன், இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.
(து–வி) தலைவியை உடன் போக்கிலே அழைத்தேகும் தலைவன், இடை வழியில், வழிக்கடுமை தோன்றாதபடி. இனியன பலவும் கூறியவனாகச் செல்லுதல் இது.]

வருமழை கரந்த வால்நிற விசும்பின்
நுண்துளி மாறிய உலவை அம்காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ
வருந்தாது ஏகுமதி வால்இழைக் குறுமகள்! 5
இம்மென் பேர்அலர் நும்ஊர்ப் புன்னை
வீமலர் உதிர்ந்த தேன்நாறு புலவின்
கானல் வார்மணல் மரீஇக்
கல்லுறச் சிவந்தநின் மெல்அடி உயற்கே!

ஒள்ளிய கலன்களை அணிந்தானான இளைய மகளே! இம்மென்று எழுகின்ற பேரலர் தானும் பொருந்துதலையுடைய, நும் ஊரது புன்னையின் காம்பு கழன்ற மலர்கள் மிகுதியாக உதிர்ந்து கிடப்பதனாலே தேன் மணம் வீசுகின்ற, புலவினையுடைய கழிக்கரைச் சோலையிடத்தே, நெடிதான மணற்பாங்கிலே, நின்னடிகள் மெல்லென நடந்து பழகியன! இப்பொழுதோ, கற்களிற் பதிதலினாலே அவை வருத்தமுற்றவாய்ச் சிவப்புற்றன. அத்தகைய நின் மெல்லடிகள் உய்தலின் பொருட்டாக வருகின்ற மேகமும் பெய்யாது போகிய வெளிய நிறத்தையுடைய வானத்தினின்றும் நுண்ணிய மழைத்துளிகளும் இல்லாது போகிய, காற்றுச் சுழன்றடிக்கும் அழகான காட்டுவழி யிடத்தேயுள்ள ஆலமரத்து நிழவிடத்தே தங்கி, நீயும் இளைப்பாறிக்கொள்சு! அஞ்சத்தக்க வழியிடமேனும் அதற்கு அஞ்சாயாய் எவ்விடத்துத் தங்க நினைப்பினும் அவ்விடத்தே தங்கினையாய்ச், சிறிதும் வருத்தமுறாமற் படிக்குக் கவலையின்றிச் செல்வாயாக!

கருத்து : 'வழிநடை வருத்தத்தைப் போக்கினையாய், அஞ்சாதே என்னோடும் உடன் வருக' என்பதாம்.

சொற்பொருள் : வரும் மழை – வருகின்ற மேகம். வால் நிறம் –வெண்ணிறம். நுண்துளி – நுண்ணிய மழைத்துளி; பெருமழையின்றேனும் சிறுதூறல்தானும் இல்லாதே போகிய வெங்காடென்பது கருத்து. உலவை – ஒருவகை மரமும் ஆம். இம்மென் பேரவர் – இம்மென்று எழுந்த பேரவர். இந்த மெல்லிய பேரவரும் ஆம்; மென்பேரலராவது, பலரும் காதொடு காதாகத் தம்முட் கலந்து பேசுதலினாலே பரவிய பழிச்சொற்கள்.

விளக்கம் : 'வரு மழை சரந்த வால்நிற விசும்பு' என்றது, அவ்விடத்தேயாக வரும் மேகத்தையும் கோடை வெம்மை நீர்வற்றச் செய்துவிட்டதாக, அதுவும் வெண்ணிறம் பெற்றதாய், அதனால் வானமும் வெண்ணீற வானமாயிற்று' என்பதாம். 'நுண் துளி மாறிய' என்பதும் இது. மேகத்தின் நுண்துளிகளும் தரைக்கண் வீழா முன்னரே இடைக்கண் ஒழிந்தன என்பதாம். 'அம் காடு' என்றது. அப்படிக் கொடிய வெம்மை கொண்டிருப்பினும், அவள் உடன் வருதவானே அழகிதாயிற்று என்பதாம். 'ஆல நீழல்' அப்படிப்பட்ட கோடையிலும் ஆலமரம் நிழல் தருதலைப் போல, அவளும் தனக்கு இனிமை தருகின்றாளாயினாள் என்பவன், 'ஆலநீழல் அசைவு நீக்கி' என்கின்றான். 'வாலிழைக் குறுமகள்' என்றது, அவளது செல்வச் செழுமையினையும், அவளது மென்மைத் தன்மையினையும் சுட்டிக் கூறியதாம். 'புன்னை வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலலின்' என்றது, 'புலவினை உணக்கலால் எழுகின்ற புலால் நாற்றத்தையும் அடங்கச் செய்தபடி புன்னைப் புதுமலரின் புதுமணம் பரவி நிற்கும் என்றதாம்'. அவ்வாறே, தலைவியது உடன்போக்கால் எழுந்த பழிச்சொற்கள்தானும் தலைவி தலைவனுடன் அவனூரிலே மணம் பெற்று வாழ்கின்றாள் என்னும் செய்தியான் அடங்கிவிடும் என்பதாம். 'கல்உறச்சிவந்த மெல்லடி' என்றது, அவளது நடை வருத்தத்தைக் கண்டு அதனை மாற்றக் கருதினனாகிய மனநெகிழ்வால் எழுந்ததாம். "அஞ்சுவழி அஞ்சாதே" என்றது, தன் ஆண்மையின் உறுதுணையாகும் திறனைக் காட்டிக் கூறியதாம்; அவளைக் காக்கும் கடனைத் தான் மேற்கொண்டதான உரிமையினைச் சுட்டிக் காட்டிக் கூறியதுமாம். புன்னை பூத்து மணம் பரப்பும் காலம், நெய்தற் பாங்கிடத்து இளமகளிர்க்கு மணம் நிகழ்த்தற்குரியதான காலம், என்பதனையும், அது குறித்துக் கூறியதனாலே அவர்களின் மணம் விரைவில் அவனூரிடத்தே நிகழும் என்பதனையும் அறிதல் வேண்டும்.

77. மகிழ் மட நோக்கம்!

பாடியவர் : கபிலர்
திணை : குறிஞ்சி.
துறை : பின்னின்ற தலைவன் நெஞ்சிற்கு உரைத்தது

(து–வி.) தலைவன் ஒருவன் தலைவியைக் கண்ணுற்றுச் செயலிழந்த நெஞ்சினனாயினான். அவளைத் தனக்குக் கூட்டுவிக்குமாறு அவளது தோழியை இரந்து வேண்டியும் நிற்கின்றான். அவ்வேளையில், அவனது தகுதிப்பாடுமேலெழ, அவன் அதனை அடக்குவானாகத் தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறியவனாக அமைகின்றான்.]

மலையன் மாஊர்ந்து போகிப் புலையன்
பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கு,அவர்
அருங்குறும்பு எருக்கி, அயாஉயிர்த் தாஅங்கு
உய்ந்தன்று மன்னே நெஞ்சே! செவ்வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின் 5
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலிவெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள்அரம் பொருத கோள்நேர் எல்வளை
அகன்தொடி செறித்த முன்கை, ஒள்நுதல், 10
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ்மட நோக்கே!

நெஞ்சமே! சிவந்த வேர்களாகிய உறுப்புக்கள்தோறும் தொங்கிக் கொண்டிருக்கும் பழங்களைக் கொண்டதாய்ப் பயனால் நிறைந்திருப்பது முன்றிற்கண் நிற்கும் வேர்ப்பலாமரம். அதன் பழத்தைத்தின்று எஞ்சிய சுளைகளை அவ்விடத்தேயே போட்டிருக்க, அம் முற்றம் வேர்ப்பலாச்சுளை யுடைய முற்றமாகவும் விளங்கும். இரவுப்போதிலே, அம் முற்றத்திடத்தே வீட்டுத் தலைவியானவள் ஒலித்தலைக் கொண்ட வெள்ளிய அருவியின் ஒலியைக் கேட்டு இன்புற்றபடியே உறங்கியிருப்பாள். இடையூறு ஏதுமற்ற அத்தகைய அழகிய சேரிகளையுடைய சிற்றூர் தலைவியது ஊராகும். அவ் விடத்தே, கைவினையில் வல்லோனாகிய ஒருவன், வாளரத்தால் அராவிச் செய்து தந்த அழகிய ஒளிகொண்ட வளைகளையும், அகன்ற தொடிகளையும் செறிவோடு அணிந்திருக்கும் முன்னங்கைகளை உடையவளாகவும், ஒளிபரக்கும் நெற்றியை உடையவளாகவும். தேமற் புள்ளிகளையுடைய அல்குல் தடத்தை உடையவளாகவும் தோன்றிய, இளமகளாகிய அவளை யானும் எண்டேன். குவளை மலர் மையுண்டு சிறந்தாற் போன்ற அவளது கண்கள், என்னைக் கண்டதும் மகிழ்ச்சியுற்றதனாலே செய்த நோக்கினையும் நோக்கி அறிந்தேன் மலையமான் தன் குதிரைமீது அமர்ந்தானாகச் சென்று, புலையனது பெருந்துடிப்பறையானது முழக்கமிட, வேற்று நாட்டிடைப் புகுந்து அந்நாட்டவரது கடத்தற்கரிதான காட்டரணை அழித்து வெற்றிகொண்டு, அந்நிலையே அயாவுயிர்த்தாற் போல எழுந்த அவளது மடநோக்கமும் என்னைத் தோழிபாற் செலுத்தா நின்றது! அதனாற் குறையேதும் நினக்கில்லை காண்.

கருத்து : 'தலைவியது நோக்கிற் பட்டு தளர்வுற்றயாம். அவளது தோழியைப் பணிந்து இரந்து நிற்றல் இழிவானதன்று' என்பதாம்.

சொற்பொருள் : மலையன் – தேர்வண் மலையனாகிய மலையமான் திருமுடிக்காரி; இவனது மா 'காரிக் குதிரை' என்பது, 'காரிக்குதிரை காரியொடு' என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் விளங்கும்; இவனைப் பாடியோருள் கபிலரும் ஒருவர். குறும்பு – காட்டரண். எருக்கி –அழுத்தி வென்று. வேர்ச்சினை – வேராகிய உறுப்பு. வாளரம் – வாளாகிய அரம். கோல் நேர் எல்வளையிடத்துக் கொள்ளுதற்கு நேரிதாகச் செய்யப்பட்ட ஒளி கொண்ட வளை.

விளக்கம் : தலைவியின் மகிழ்மட நோக்கம். 'மலையன் பகையரணை வென்று, வெற்றிக் களிப்பால் அயாவுயிர்த்தாற் போன்று. தன்னை வெற்றி கொண்டு அடிப்படுத்திய மகிழ்வினாலே செருக்கிய தன்மைத்தாயிராநின்றது' என்பதாம். வேர்ப்பலாவின் கனியைப் பறித்துத் தின்று கழித்துப் போட்ட களைகள் முற்றத்திடத்தே கிடக்கும் என்றதும், அவ்விடத்தே இரவில் அருவியொலியின் இன்னிசையைக் கேட்டபடியே மனையோள் தூங்கும் என்றதும், தலைவியது வளமனையைப் புகழ்ந்து கூறியதாம். 'மகிழ்மட நோக்கு' என்றது, அவளும் தன்னை விரும்புதலின், தோழியைக் குறையிரந்து நிற்றல் தவறாதே பயன் தரும் என்பதனாலாம்.

'சுளையுடை முன்றில்' என்பதற்குப், பறிப்பாரற்றுத்தானே முதிர்ந்து வெடித்துச் சிதறிக் கிடக்கும் பலாச்சுளைகளைக் கொண்ட முற்றம்' என்று உரைத்தலும் பொருத்தமாக அமையும்.

இறைச்சி : 'புறத்தே முட்களை உடைத்தேனும், உள்ளே இனிதான சுளைகளையும் உடைத்தான பலாப்பழம் என்றது. அவ்வாறே புறத்தே கடிதல் போன்று வெறுத்து நோக்கினும் உள்ளே இன்பந்தரும் அருள் கொண்ட நெஞ்சினள் தலைவி என்பதாம்.

78. நாம் பிழைத்தோம்!

பாடியோர் : கீரங்கீரனார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவு மலிந்தது.

[(து–வி.) வரைவிடை வைத்துப் பொருள் தேடி வருவதற்குப் பிரிந்து சென்றோனாகிய தலைவன். வருவதாகக் குறித்துச் சென்ற பருவத்தின்கண் வராமையினால், தலைவியின் வருத்தம் மிகுதியாகின்றது. அவ்வேளை, அவன் வரைவொடு வருதலை அறிந்த தோழி, தலைவிபாற் சென்று, மகிழ்வோடு அதனைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

கோட்சுறா வழங்கும் வாட்கேழ் இருங்கழி
மணிஏர் நெய்தல் மாமலர் நிறையப்
பொன்னேர் நுண்தாது புன்னை தூஉம்;
வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல்,
படர்வந்து நலியும் சுடர்செல் மாலை 5
நோய்மலி பருவரல் நாம்இவண் உய்கம்;
கேட்டிசின் வாழி, தோழி! தெண்கழி
வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்,
புள்ளுநிமிர்ந் தன்ன பொலம்படைக் கலிமா
வலவன் கோல்உறல் அறியா, 10
உரவுநீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!

தோழி ! நீதான் இனி இன்பமுற்று வாழ்வாயாக! வலிமை வாய்ந்த தேர்ச் சக்கரத்தின் உள்வாயளவுக்கு தெளிந்த கழியிடத்தே அழுந்தப்பெறினும், பறவை பறந்து சென்றாற்போலச் செல்லும் தன்மையினையுடையவும். பொன்னணிகளைப் பூண்டு செருக்கியவுமான குதிரைகள் தம்மைச் செலுத்தும் பாகனின் தாற்றுக்கோல் தம்மேற்பொருந்துதலை அறியாவாய்ச் செல்லும் தன்மையுடைய, வவிய கடல்நீர்ச் சேர்ப்பனது. தேர் வந்துகொண்டிருப்பதை அறிவிக்கும் மணியினது குரலினை, அதோ நீயும் கேட்பாயாக கொல்லும் இயல்பினவான சுறாமீன்கள் திரிந்தபடியிருக்கும் ஒள்ளிய நிறத்தையுடைய கருங்கழியிடத்தே, நீலமணியின் அழகினைக் கொண்ட நெய்தலது சுருமலர்கள் நிறைந்திருக்கும். அம்மலர்கள் நிரம்புமாறு, பொன்னொத்த நுண்ணிய பூந்துகள்களைக் கரையிடத்திருக்கும் புன்னை மரங்கள் தூவிக் கொண்டிருக்கும். விழுதூன்றிய தாழையின் பூக்கள் மணம் கமழ்ந்தபடி விளங்கும் கடற்கரைச் சோலைபிடத்தே மென்மேலாகத் துன்பம் வந்து வருத்துகின்றதான ஞாயிறு சென்று மறையும் மாலைப் பொழுதிலே, காமநோய் மிகுதலாகிய பெருந்துன்பத்தினின்றும் நீங்கினமாய், நாம். இனி இவ்விடத்தே பிழைத்திருந்து வாழ்வோம்—காண்பாயாக!

கருத்து : 'தலைவனின் வரவினாலே இனி நின் பிரிவு நோயாகிய துன்பம் முற்றவும் தீரும்' என்பதாம்.

சொற்பொருள் : கோட்சுறா – கொல்லுதலில் வல்ல சுறாமீன். வழங்கும் – திரியும். வான் – ஒளி. கேழ் – நிறம். வீழ்தாழ் – விழுதுகள் தாழ்ந்த. வள் வாய் – வலிமை வாய்ந்த. புள்ளு நிமிர்ந்தன்ன - பறவை மேலெழுந்து பறத்தலைப்போல பொலம்படை – பொற்படை; குதிரைக்கு அணியும் கண்டையும் பிறவும். கலிமா – செருக்குள்ள குதிரை. கோல் – தாற்றுக்கோல்.

விளக்கம் : 'மாலைப்பொழுதிலே தலைவனது வரவை எதிர்நோக்கியபடி கானற்சோலையிலே காத்திருந்து தளரும் பெருந்துயரம் இனித் தீர்ந்தது; அவன் அதோ வரைவொடு வந்தனன்' என்கின்றாள். 'வள்வாய் ஆழி உள்வாய் தோயினும் புள்ளு நிமிர்ந்தன்ன பொலம்படைக் கலிமா' என்றது. 'தேரின் இயக்கத்தைத் தடுக்கும் தடை உண்டாயினும், அதனையும் பொருட்டாக்காது தம் வலிமையால் நீங்கிப் பறந்து வந்து சேரும் செருக்குடைய குதிரைகள்' என்றதாம். இவ்வாறே தலைவனும் வரைதற்கு இடையிட்ட இடுக்கண்களை எல்லாம் ஒதுக்கிக் குறித்தபடியே வந்து சேரும் தகைமையாளன் ஆயினான் என்றதும் ஆம்.

'வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்' என்று கூறுவன, அவனைக் கொணர்ந்துதந்த தேரினை வலித்துவந்த குதிரைகளின் உதவிச்செயலை வியந்து போற்றியபடியும் ஆம்.

இறைச்சிகள் : கழியிடத்து நெய்தல் மலரிடைக் கரைக்கண் நின்ற புன்னை பொன்னிறத் தாதினைச் சொரிந்தாற்போலத், தலைவியின் இல்லத்தார் உவக்கத் தலைவனும் வரைபொருளை மிகுதியாகச் சொரிந்து வழங்குவான் என்பதாம்.

(2) அவ்வேளை, வீழ்தாழ் தாழைப்பூக் கானலிடைக் கமழ்தலைப் போலத் தலைவியின் மணச்செய்தியும் ஊர் முழுக்கப் பரந்து சிறப்பெய்தும் என்பதுமாம்.

(3) 'கோட்சுறா வழங்கும் வாட்கேழ் கருங்கழி' என்றது தலைவியைக் காவலுட்படுத்திக் காத்திருக்கும் ஐயன்மாரின் வன்செயலை நினைந்ததாம். அவ்விடத்து, நெய்தல் மலரிடைப் பொன் சொரியும் புன்னை போன்று, தலைவனும் அவரால் ஏதும் துன்புறாதே வந்து தகப்பன்பாற் பொருள் தந்து தலைவியை அவன் கொடுக்க அடைவான் என்பதாகும்.

79. எப்படித் தடுப்போம்?

பாடியவர் : கண்ணகனார்.
திணை : பாலை.
துறை : பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள், தோழிக்குச்

சொல்லியது.

[(து—வி.) தலைவன் தன்னைப் பிரிந்து போதற்கு நினைந்தானாதலை அறிந்து வருந்தி நலனழிந்தாள் ஒரு தலைமகள். அவள், தன்னைப்பற்றி உசாவிய தோழிக்குத் தன் வருத்தத்தை இப்படிக் கூறுகின்றாள்.]

'சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீக்
கூரை நம்மனைக் குறுந்தொடி மகளிர்
மணல்ஆடு கழங்கின், அறைமிசைத் தாஅம்
ஏர்தர லுற்ற இயக்குஅருங் கவலைப்
பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?'
என்றுநாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று—
அம்ம! வாழி, தோழி!—
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே?

தோழி! நீதான் வாழ்க! "மனைக்கு வேலியாக அமைந்துள்ளன ஈங்கை. அந்த ஈங்கையின் தேன்துளிகளை மிகவுடைய திரண்ட நாள் மலர்கள், கூரையிட்ட நல்ல மனைக்கண்ணே வாழ்வோரான குறுந்தொடியணிந்த இள மகளிர் மணல்பரந்த முற்றத்திடத்தே ஆடியிருக்கும் கழங்குக் காய்களைப் போலப் பாறைகளின் மேலிடமெல்லாம் உதிர்ந்துகிடக்கும். அத்தகு அழகினைப் பொருந்தியதும். இயங்குதற்கு அரியதுமான கவர்த்த நெறியிலே முற்படப் பிரிந்து சென்றோராயினும், அவர்தாம் வந்து நம்மோடுங் கூடியிருத்தற்கு வேண்டியதாகிய காலம் இதுவாகும். இக் காலத்தே, நம்மோடுங் கூடியிருக்கும் நீவிர் நம்மைப் பிரிந்து செல்லுதலைக் கருதுதலினாலே, இனி இதனினும் செயற்கரிதான கொடுமையும் யாதும் உண்டாமோ?" என்று, நம் தலைவரிடம் நாம் எடுத்துக் கூறினேமாக, நமது காமநிலையைச் சொல்லுவோம். அங்ஙனம் சொல்லாது, அவரைப் போதற்கு விட்டேமாயின், நம் உயிரோடும் முடிதற்குரிய துன்பமும் நம்பால் வந்தடைவதாகும். அன்றி, வேறு முயற்சியினால் நம் காதலரின் செலவினைத் தடுப்பேம் எனக் கருதினையானால், அதனையும் எனக்கு உரைப்பாயாக.

கருத்து : 'காதலரது பிரிவுச் செலவினை எவ்வாறேனும் தடுத்தாகவேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : சிறை–வேலி. நாள் வீ –அன்றைக்குப் பூக்கும் புதுமலர். உறை–தேன்துளி. ஏர் – அழகு. கவலை – கவர்த்த நெறி; மயக்கந்தரும் நெறியும் ஆம்.

விளக்கம் : ஈங்கை பூத்து உதிர்தல் கூதிர்க்காலமாகிய ஐப்பசி புரட்டாசித் திங்களில் ஆகும். முற்படப் பிரிந்தாரும், கார்காலத்தே மீண்டும் வந்து கூதிர் முன்பனிக் காலத்துத் தலைவியருடனே கூடியிருப்பர். இதுவே நாட்டின் மரபாகப் பிரிதற்கு உரியதல்லாத கூதிரின்கண்ணே பிரிய நினைக்கும் தலைவனின் கருத்தினை நினைந்து தலைவி பெரிதும் மன வேதனையடைகின்றாள். ஈங்கை கூதிர்ப்பருவத்தே உதிரும் இயல்பினதாதலை, 'ஈங்கை செவ்வரும்பு ஊழ்த்த வண்ணத் தூய்ம்மலர் உதிரத், தண்ணென்று இன்னாது எறிதரும் வாடை' (குறு 110) என வருவதனாலும் அறியலாம். காமம் – காம விருப்பம்.

'காமம் செப்புதும்' என்றது. அதுதான் கற்புடை இல்லத் தலைவியருக்குப் பொருந்தாத ஒரு மரபாயிருப்பினும், பிரிவைத் தாங்கி உயிரோடும் இருத்தற்கு இயவாத உழுவலன்பால் வந்தமைந்த உள்ளக்கலப்பினது செறிவை நினைந்து, அந்த மரபையும் ஒதுக்குவமோ? என்று கேட்பதாம்; இதுவே கருத்தாதல், 'செப்பாது விடினே, உயிரோடும் வந்தன்று' என்பதனாலும் வலியுறும்.

இறைச்சி : 'தேன் நிறைந்த ஈங்கைமலர், வண்டால் உண்ணப்படாதே பாறைமிசை உதிர்ந்து வீழ்ந்து கெடும்' என்றாள். அவ்வாறே தானும் தலைவனுக்கு இன்பந் தருதலின்றி, வறிதே உயிரிழந்து அழிவதனை உறுதியாகக் கொண்டதனால்.

80. நோய்க்கு மருந்து!

பாடியவர் : பூதன் தேவனார்.
திணை : மருதம்.
துறை : சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

[(து–வி.) தோழியால், தலைவியைக் கூட்டுதற்குப் பெரிதும் மறுத்து ஒதுக்கப்பட்ட தலைவன், தன் பெருங்காதலை அறிந்து தனக்கு உதவாது தன்னை அவள் அவ்வாறாக ஒதுக்குதலை நினைந்து, அவள் கேட்குமாறு, தன் நெஞ்சிற்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது]

'மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன்தீம் பாற்பயம் கொண்மார், கன்றுவிட்டு,
ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன், இவன்' என, 5
இழைஅணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள் அல்லது,
மருந்துபிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கு

"மன்றிடத்தேயுள்ள எருமைகளுள், அகன்ற தலையினை உடையதான காரெருமையின் இனிய தீம்பாலாகிய பயனைக் கறந்து பெறும் பொருட்டாகக், கன்றினைக் குடிக்கவிட்டுப் பாலைக் கறந்து கொள்வார்கள் ஆயர்கள். அதன் பின்னர், ஊரிடத்துள்ள மாடுமேய்க்குஞ் சிறுவர்கள், அதன் மேலே ஏறிக்கொண்டவராக, அதனை மேய்த்து வருவதற்கும் செல்வர் அத்தகைய, பேரிருள் நீங்கும் விடியற்காலத்திலே, விருப்பத்தோடு இவன் வந்தான்; உடுக்குந் தழையும் சூட்டும் தாரும் நமக்குத் தந்தான்" என்று கருதினாள். கழலணிந்து விளங்கியவரான பிற ஆயமகளிரோடு, தகுதி கொண்ட நாணமும் தன்னைத் தடை செய்யத் தைத்திங்களின் முதல்நாளிலே, குளிர்ந்த பொய்கையிடத்தே சென்று நீராடும் பெருத்த தோள்களையுடைய இளமகள் அவள். அவளல்லாது, யான் அடைந்த இந்த நோயினைப்போக்குதற்கான மருந்து தானும் பிறிது யாதொன்றும் இவ்வுலகிலே இல்லை. நெஞ்சமே! இனி யாம் யாது செய்வோமோ?

கருத்து : "எம் இந்த நோயின் தகைமையை அவள் தோழியும் உணர்ந்தாளில்லையே?" என்பதாம்.

சொற்பொருள் : மன்றம் – வீட்டு முற்றம். குறுமாக்கள் - மாடு மேய்க்குஞ் சிறார்; பால் கறந்ததன் பின்னர்க் கன்றுகளை வீட்டிலே விட்டுவிட்டு, மாடுகளை மேய்த்தற்கு ஓட்டிச் செல்வர் என்க. பெரும்புலர் விடியல்–பேரிருள் புலர்கின்ற விடியல்: அதிகாலை இருளுக்குப் பேரிருள் என்பது பொருத்தமாதலின் இப்படிக் கூறினான். தகுநாண்–தகுதி கொண்ட நாணம்; போலியாக நாணமுடைமை காட்டும் தோற்றம் அன்று என்பதாம். குறுமகள் - இளையோளாகிய தலைவி.

விளக்கம் : 'மன்றம்' என்றது, வீட்டின் தொழுவிடத்துப் பொதுவிடத்தைக் குறிக்கும். அவளால் வந்துற்ற நோயாதலினாலே, இதற்கு மருந்தும் அவளேயன்றிப் பிறிதொன்றும் இல்லை' என்பான், 'மருந்து பிறிதில்லை" என்கின்றான். தைத்திங்களில் நீர் குளிர்ச்சிமிகக் கொண்டதாயிருப்பது பற்றித் 'தைத்திங்கள் தண்கயம்' என்றான். 'பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்த், தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' என வரும் குறுந்தொகையடிகளும் (196), 'தைஇத் திங்கள் தண் கயம்போல' என வரும் புறநானூற்று அடியும் (70-6) இதனை வலியுறுத்தும். 'தமக்கு நல்ல கணவனை வேட்டு நோன்பு பூண்ட மகளிர், தைமுதல்நாள் நோன்புகழித்து நீராடச் செல்வர்; அவ்வேளை இவனைக் கண்டாள். 'இவனே தனக்குத் தெய்வந்தந்த காதலன்' எனக் கருதி ஏற்றாள்' என்க. அதனையுணர்ந்து உதவுங் கடப்பாடு உடையவளான தோழி, அதனை மறுத்து, அவனை ஒதுக்குதற்கு நினைதல் பொருத்தமற்றதாகும் என்பதும் கூறப்பட்டது.

இறைச்சி : 'மன்றத்து எருமைகளுள் பாற்பயனுடைய கார் ஆனிடத்துப் பாற்பயனைக் கொண்டு ஊர்மக்கள் இன்புறுதல் போல, ஆயமகளிர் கூட்டத்துள் வந்த தலைவியின் காதற்பயனைப் பெற்று இன்புறத் தலைவலும் விரும்பினான்' என்க. ஊர்க் குறுமாக்கள் பாற்பயனை அளித்தபின் அதனையும் பிற எருமைகளைப்போல மேய்ச்சற்குக்கொண்டு செல்வதுபோன்று, தோழியும் தனக்குத் தலைவியை இன்புறக் கூட்டியபின். இல்லிற்குத் தம்முடன் அழைத்தேக வேண்டும்' என்று கூறுகின்றானும் ஆம்.

81. நகை காண்போம்?

பாடியவர் : அகம்பன் மாலாதனார்.
திணை : முல்லை.
துறை : வினைமுற்றிய தலைவன், தேர்ப்பாகற்கு உரைத்தது.

[(து–வி.) அரசவினைப் பொருட்டாகத் தலைவியைப் பிரிந்த தலைவன், தான் கார்காலத்துத் திரும்புவதாக உறுதி கூறிச் சென்றிருந்தான். வினை முடிந்தபின், கார்ப் பருவத்தின் தோற்றத்தைக் கண்டதும், அவள் தன் தேர்ப்பாகனிடம் இவ்வாறு உரைப்பானாகத் தேரைப்பூட்டி விரையச் செலுத்துமாறு அவனை ஏவுகின்றாள்.]

இருநிலங் குறையக் கொட்டிப் பரிந்தின்று
ஆதி போகிய அசைவுஇல் நோன்தாள்
மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி
கொய்ம்மயிர் எருத்தில் பெய்ம்மணி ஆர்ப்பப்
பூண்கதில் பாக! நின் தேரே; பூண்தாழ் 5
ஆக வளமுலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம்மா அரிவை
விருந்துஅயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன்நகை காண்கம்!—
உறுபகை தணித்தனன்! உரவுவான் வேந்தே. 10

பாகனே! வலிய வாளினைக் கொண்டோனான நம் வேந்தனும், நம்பால் வந்தடைந்த பகையினைத் தணித்து விட்டனன். பெரிதான நிலப்பரப்புக் குழியும்படியாகக் கொட்டி விரைய நடந்து போகும். ஆதிகதியிலே செல்லுதனைக் கொண்ட, தளர்வற்ற வலிய கால்களையுடைய, மன்னரும் மதிக்கும் மாட்சிமிக்க நடைத்தொழிலைக் கொண்டவான குதிரைகளை, கொய்யும் பிடரிமயிரையுடைய எருத்திலே பூட்டிய மணிகள் ஆரவாரிக்க, நின் தேரிடத்தே நீயும் பூட்டிச் செலுத்துவாயாக. பூண்கள் தளர்ந்து தாழ்ந்த வனப்புடைய மார்பகங்களின் முகட்டிலே நீர்த்துளிகள் தெறித்து வீழுமாறு அழுதவளாக, அழகிய மாமையினையுடைய தலைவியானவள், வீட்டிலேயிருந்தபடி வருந்தியிருப்பாள். அவள், நமக்கு விருந்து செய்கின்ற விருப்பத்தோடும் வருந்தினளாகத் தளர்ந்தபடியே நம்மை நோக்கி முறுவலிக்கும் அந்த இனிதான நகையினை யாமும் கண்டு மகிழ்வேமாக!

கருத்து : 'பிரிவுத் துயரால் வருந்தியிருக்கும் தலைவியிடத்தே அது நீங்கித்தோன்றும் முறுவலைக் கண்டு இன்புறுதற்கு விரும்பினேம். அதற்கு உதவுமாறு நீயும் நின் தேரை விரையச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : குறைய – பள்ளமாக, கொட்டிப் பரிந்து - கொட்டி நடந்து. 'ஆதி' – 'ஆதி' என்னும் நடையமைதி. நோன்மை – வலிமை. எருத்து – பிடர். கரை வலம் – முகட்டுப் பாங்கு. அம்மா – அழகிய மாமை நிறம்.

விளக்கம் : 'பெய்ம்மணி ஆர்ப்ப' என்றது. தேரின் வரவை முற்படவே கேட்டறிந்து, அவள் வரவேற்று விருந்து செய்தற்கு முற்படுவாள் என்றதனாலாம். 'வேந்தன் உறுபகை தணித்தனன்' என்றது, தன்வினை முடிவுற்றது என்பதுடன், தலைவிபால் உற்ற பகையான பசலை படர்தலைத் தான் சென்று தணித்தலை விரும்பினதை அறிவுறுத்தியதுமாம். 'மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி' என்றது, குதிரையினது தகுதி மேம்பாட்டை உரைத்ததாம், 'அழுதனள் உறையும் அவள் விருந்தயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன்னகை காண்கம்' என்றது நம்மைக் கண்டதும் அவள் துயர் முற்றவும் நீங்கினளாய்ப் பெரிதும் மகிழ்ச்சி கொள்வாள் என்பதாம். இதனால், தலைவிக்குத் தன்பாலுள்ள அளவு கடந்த காதற்செவ்வியையும், தன்னைப் பிரியின் கொள்ளும் துயர மிகுதிப்பாட்டையும். தன்னைக் காணின் அந்தவளவே தீர்கின்ற அதன் செவ்வியையும் நயம்படக் கூறுகின்றான் தலைவன். இவற்றை அடைதற்கு வாய்ப்பாகத் 'தேரை விரையச் செலுத்துக' என்கின்றான். 'ஆதி' என்பது குதிரைக் கதியுள் ஒன்று. குதிரையோட்டம் ஐவசைப்படும் என்பர்; அவற்றுள் ஒன்று இது.

82. வருத்தம் அறிகின்றாயோ?

பாடியவர் : அம்மள்ளனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழியிற் புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.

[(து–வி) தோழியின் உதவியோடு தலைவியைக் களவிற் கூடிய தலைவன், தன்னுடைய மனநிலை தலைவிக்குத் தோன்றுமாறு, அவள் நலத்தைப் பாராட்டி உரைத்தது இதுவாகும்.]

நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த
வேய்வனப் புற்ற தோளை நீயே,
என்உயவு அறிதியோ, நல்நடைக் கொடிச்சி!
முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போலநின்
உருவுகண் எறிப்ப நோக்கல்ஆற் றலெனே— 5
போகிய நாகப் போக்குஅருங் கவலை
சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
சேறுஆடு இரும்புறம் நீறொடு சிவண,
வெள்வசிப் படீஇயர், மொய்த்த வள்புஅழீஅக்
கோள்நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறுகுடி யானே. 10

யான் கொண்டிருக்கும் இந்தக் காமநோயும், அதனால் என்பால் வந்துற்ற உடலின் தளர்ச்சியும். என்னைவிட்டு முற்றவும் அகலுமாறு என்னைத் தழுவிக்கிடந்த, மூங்கிலின் வனப்பினை அடைந்திருக்கின்ற தோள்களை உடையவளே! நல்லதாகிய நடைப்பாங்கினை உடையானான குறவர் மகளே! வானில் உயரப்போகிய நாகமரங்களை உடையது, கடத்தற்கரியதான கவறுபட்ட காட்டுவழி. அதனிடத்தே. சிறுத்த கண்களைக் கொண்ட பன்றியது பெருஞ்சினத்தையுடைய ஆணானது சேற்றிடத்தே புரண்டதனால் தன்னுடைய கரிய முதுகுப்புறம் புழுதியோடு விளங்கச் சென்று கானவர் கண்ணியிட்டுள்ள வெறும் பிளப்பிடைச் சென்று விழுந்துபட்டது. அங்ஙனம் படுதலும், வேட்டை நாய்கள் அதன்பாற் சென்று மொய்த்தவாய், வாரை அழித்து அதனைப் பற்றிக் கொன்றுகொண்டன. கானவர் சென்று அந் நாய்களை விலக்கிப் பன்றியைத் தாம் எடுத்துக்கொண்டு சென்றனர். அத்தகைய சிறுகுடியிருப்பினது நின் ஊராகும். அதனிடத்தே, முருகனைக் கூடியபின் செல்லுகின்ற வள்ளி நாயகியைப்போல நின் உருவம் கண்ணைப் பறிக்கும் பேரொளியுடன் விளங்குகின்றது. அதனால் நின்னைக்காண்பதற்கு விருப்பம் மேலெழுந்தாலும், காணும் ஆற்றலிலேனாய் நிற்கின்றேன். நீதான் என்னுடைய அந்த வருத்த மிகுதியினை அறிகின்றாயோ?

கருத்து : 'நின் மேனி வனப்பு என் கண்களையும். மழுங்கச் செய்கின்றது' என்பதாம்.

சொற்பொருள் : நோய் – காம நோய். நெகிழ்ச்சி – உடலின் தளர்ச்சி, வீட – விட்டகல. உயவு – பெருவருத்தம். கொடிச்சி – குறவர்மகள். முருகு – முருகவேள். கண் எறிப்ப – கண்ணினைத் தாக்கி மழுங்கச் செய்ய. நாகம் – நாகமரம்; நாவல்மரம். வெள்வசி – வெறும் பிளப்பு: இதனிடைப் படும் விலங்குகளின் கால்கள் இதன்கண் மாட்டிக் கொள்ளும். வள்பு – வார்; வலையின் வார். கோள் நாய் – பற்றிக் கொள்ளும் வேட்டை நாய். கொள்ளை – வேட்டைப் பொருளான பன்றித் தசை.

விளக்கம் : 'நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த தோளை' என்றான், தோள் முயக்கம் பெற்றுத்தான் உயிர் பிழைத்த களிப்பினைக் காட்டுவானாக. 'நல் நடை' என்றது, நல்லதான ஒழுக்கத்தையுமாம், அது காதலனை அடைந்து அவனது நலிவு தீர்ப்பதான களவற ஒழுக்கமும் ஆம். 'உருவு கண் எறிப்ப' என்றது, கலவியால் அவள் மேனியில் தோன்றிய புதுப்பொலிவினைப் பெரிதும் வியந்து பாராட்டியதாம். 'முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோவ' என்றது. குறவர் மகளான வள்ளி தன் காதலனான செவ்வேள் முருகைக் கூடியதும், தெய்வத் தன்மை பெற்றுத் தெய்வமேயாகிச் சிறந்தமைபோல' என்று பாராட்டியதாம்.

உள்ளுறை : சேறாடிப் புழுதிபடிந்த பன்றியேறு வலையிற் சிக்கியதும், வேட்டை நாய்கள் மொய்த்துப் பிடுங்குவதும், அவற்றை விலக்கிக் கானவர் பன்றி இறைச்சியைக் கொண்டுபோதலும் நிகழும்; அதனால் சிறுகட்பன்றியுடைய பன்றியின் துணையது துயரமும் மிகுதியாகும். அவ்வாறே, நின் ஊர் அலவற்பெண்டிர் அறியின் பழியுரை மிகுதிப்பட்டு வருத்துவதும், நின் ஐயன்மார் காணின் உயிரழிவே உண்டாவதும் கூடும்; அதுகண்டு நீயும் மிக வருந்துவாய்; ஆதலின், இப்போது யான் நின்னையகன்று போய்வருவேன் என்பதாம்

மேற்கோள் : 'பரிவுற்று நலியினும்' என்னுந் துறைக்கு நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர் – (தொல். பொருள். சூ.103. உரை). புணர்ந்து நீங்கும் தலைவன், பிரிவதற்கு ஆற்றானாய்க் கூறியதாகப் பொருள் கொள்க.

பிறபாடம் : 'என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி; 'கானவர் பெயர்கஞ் சிறு குடியானே.'

83. குழறாய் கூகையே!

பாடியவர் : பெருந்தேவனார்.
திணை : குறிஞ்சி
துறை : இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) இரவுக்குறி வந்த ஒழுகுதலிலே மனஞ் செல்லுபவனாகித் தலைவியை வரைந்து மணந்து கொள்ளுதலில் ஈடுபடாத ஒரு தலைவனுக்கு அறிவு கொளுத்தக் கருதிய தோழி, அவன் வந்து சிறைப்புறத்தானாக இவ்வாறு கூறுகின்றனள்.]

எம்ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூர்உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலிமுந்து கூகை!
மைஊன் தெரிந்த நெய்வெண் புழுக்கல், 5
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கைஎம் காதலர் வரல்நம்சைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே.

எம் ஊரது முன்பக்கத்தேயுள்ள உண்ணுநீர்ச் சுனையின் அருகிலே பருத்த அடியையுடையதும் கடவுள் வீற்றிருப்பதுமான முதிய மரம் நிற்கும். அம் மரத்தினிடத்தே இருப்பாயாய், எம்முடன் ஓரூரிலே தங்கியிருந்து பழகிய கூகையே! தேயாத வளைந்த வாயினையும், தெளிவான கண்பார்வையினையும். கூரிய நகங்களையும் உடையாய்! வாயாகிய பறையின் முழக்கத்தாலே பிறரை வருத்துதலைச் செய்யும் வலிமிக்காய்! ஆட்டிறைச்சியுடனே தெரிந்து தேர்ந்த நெய்யினையும் கலந்து சமைத்த வெண்சோற்றை, வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு நிறையத் தந்து நின்னைப் போற்றுவோம். அன்பிற் குறைபடாத எம் காதலர் எம்மிடத்து வருதலை விரும்பினமாய்த் துயிலிழந்து, யாம் உளஞ் சுழல வருந்தியிருக்கும் இந்த இரவுப்பொழுதிலே யாவரும் அஞ்சினராக விழித்துக்கொள்ளும்படியாக, நீதான் நின் கடுங்குரவை எடுத்துக் குழறாதிருந்தனையாய், எமக்கு உதவுவாயாக!

கருத்து : கூழை குழற, இல்லத்தார் விழிப்பர்; களவும் வெளிப்பட்டு அலராம்; அதனால் இற்செறிப்பும் நிகழலாம்' என்பதாம்.

சொற்பொருள் : வாயில் முன்பக்கம். உண்துறை – உண்ணுநீர் எடுத்தேகற்கு என அமைந்த நீர்த்துறை, தடை இய – பருத்த. கடவுள் முதுமரம் – கடவுள் ஏறியிருக்கும் முதிய மரம். வாய்ப்பறை – வாயாகிய பறை. வலிமுந்து – வலிமிக்க மை – ஆட்டுக்கிடாய். புழுக்கல் – சோறு. சூட்டு – சூட்டிறைச்சி. எஞ்சாக் கொள்கை – அன்பிற் குறையாத கோட்பாடு. அலமரல் – உள்ளஞ் சுழன்று வருந்துதல்.

விளக்கம் : 'எம்மூர் வாயில்' என்றமையால், ஊரின் முன்புறத்துள்ள பொழிலகத்து இரவுக்குறி நேர்ந்தாராக அவர் காத்திருந்தமை புலப்படும். கூகை குழற, அதனால் உறங்குவார் விழித்தெழத், தலைவியின் களவுறவு வெளிப்பட்டு அலராகும் என்பதும், அதனால் அவன் இற்செறிக்கப் படுதலுற இரவுக்குறியும் அதன்பின் வாயாதாகும் என்பதும் இதனால் உணர்த்தி, வரைவு கடாயினாள் என்று அறிக. 'உடனுறை பழகிய' என்றது, உரிமை காட்டிப் பேசுவது ஆகும். கூகைக்கு வெள்ளெலி விருப்பமான உணவாதலின், 'எலிவான் சூட்டோடு மலியப் பேணுகம்' என்கின்றனள். கூகை – பேராந்தை; இது குழறக்கேட்ட இளமகளிர் அஞ்சுவர் என்பது, 'குன்றக் கூகை குழறினும் ... அஞ்சும்' என வரும் குறுந்தொகையடியிற் கபிலர் பெருமான் கூறுமாற்றாலும் அறியப்படும். 'மன்ற மராஅத்த கூகை குழறினும், நெஞ்சழிந்து அரணம் சேரும்' என்னும் அகநானூற்றுத் தொடர்களும் (அகம் 158) இதனைக் காட்டும். முதுமரம் பொந்துடைத்தாதலின் கூகைக்கு வாழும் இருப்பிடமாயிற்று.

'உண்துறைத் தடைஇய' என்பதற்கு உண்ணுநீர் முகந்து கொண்டு போதற்கென ஒதுக்கப்பட்ட நீர்த்துறையிடத்தே அதனைக் கிளைகளால் தடவியபடி வளர்ந்து படர்ந்திருக்கும் எனலும் பொருந்தும். 'கடவுள் முதுமரம் ஆதலின் அவர்கள் அடிக்கடி சென்று தம் காதல் கைகூடி வருதலை வேண்டிக் கடவுளைத் தொழுதமையும் அறியப்படும்.

மேற்கோள் : இஃது இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது என்பர். நச்சினார்க்கினியர் (பொருள். தொல். சூ. 114 உரை).

பிறபாடம் : வாயில் ஒண் துறை – முன்னிடத்து ஒள்ளிய நீர்த்துறை.

84. ஏகுவர் என்பர்!

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : பிரிவிடை ஆற்றாளாய தலைவி, தோழிக்குச் சொல்லியது.

[(து–வி.) தலைவனைப் பிரிந்திருத்தலால் ஆற்றாமை மிகுந்தாளான தலைவி, தன் ஆற்றாமை மிகுதி புலப்படத் தன்னைத் தேற்றுவாளான தோழிக்கு இவ்வாறு கூறுகின்றாள்.]

கண்ணும் தோளும் தண்ணறுங் கதுப்பும்,
திதலை அல்குலும் பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே.
பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர்
மரன்இல் நீள்இடை மான்நசை யுறூஉம், 5
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்புஇடந் தன்ன
உவர்எழு களரி ஓமைஅம் காட்டு
வெயில்வீற் றிருந்த வெம்புஅலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப, தாமே — தம்வயின் 10
இரந்தோர் மாற்றம் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லா தோரே

. தோழி! தம்மிடத்தே வந்து இரந்து நின்றோரது துன்பத்தினை மாற்றுததற்கு இயலாத வறுமையுடைய இல்லிடத்து, வாழ்க்கையின்கண் கூடியிருக்க மாட்டதார் நம் தலைவர். எம்முடைய கண்களையும், தோள்களையும், தண்ணிய நறிய கூந்தலையும், தேமற் புள்ளிகள் நிரம்புதலுற்ற அல்குல் தடத்தையும் பலபடப் பாராட்டி எம்மை இன்புறுத்தினாராக, அவர் நேற்றைப் பொழுதினும் இல்லிடத்தினராய் எம்முடனே கூடி இருந்தனரே! இன்றோ அதுதான் கழிந்தது! பெரிதான நீர்ப்பரப்பை ஒப்பத்தோன்றும் வெளியதான பேய்த்தேரை, மரங்களற்ற நெடிதான பாலை நிலத்திடையேயுள்ள மான்கள் உண்ணு நீரென மயங்கி, அதனை நோக்கிச் செல்லாநிற்பதும், சுட்டமண் தயிர்த்தாழியிலே மத்திட்டுக் கடையும்போது வெண்ணெய் திரளாது சிதறிக்கிடக்கும் அத்தன்மைபோல உப்புப்பூத்துக் கிடப்பதுமான களர் நிலத்தைக்கொண்டதும், ஓமை மரங்கள் அழகிதாக விளங்கும் காட்டிடத்தும், வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிட்டு எழுந்தபடியிருக்கும் கடத்தற்கரியதுமான சுரநெறியிலே, பொருளீட்டி வருதலின் பொருட்டாகத் தாமே தனியராகச் செல்வார் என்பார்களே!

கருத்து : 'இதனை, எவ்வாறு பொறுத்து யானும் வருத்தமுறாது ஆற்றியிருப்பேன்?' என்பதாம்.

விளக்கம் : 'வல்லாதோர்' என்றது, இரந்தோர்க்கு ஈத்து உவக்கும் கடப்பாட்டினைப் பேணிவந்த பெருங்குடினராய தலைவர் என்று, அவனது குடிப் பெருமையை வியந்து கூறியதாம். இதனால், இல்வாழ்விற்குப் பொருளற்ற வறுமையால் அகன்றானல்லன் அவன் என்பதும் விளங்கும். ஏதிலரான பிறர்க்கு உதவும் பொருட்டாகத் தான் தனக்கு வருகின்ற துன்பத்தைப் பாராட்டாது, பொருள் தேடி வருவதற்குச் சென்றானாகிய அவன், உறுதுணையாகிய தன்னைப் பிரிவுத் துயரிடைப் படுத்தினனாகத் துன்புறச் செய்தனனே என நினைந்து நொந்ததும் ஆம். 'பல பாராட்டி நெருநலும் இவணர்' என்றது, அங்ஙனம் அவன் பாராட்டியது பிரிவினைக் கருதியதனாலே என்பதைத் தான் அறியாது போயினதை நினைந்து கலங்கிக் கூறியதாம். இதனாலேயே, 'என்ப' என அவன் பிரிவைத் தன் அணுக்கரால் அறிவிக்கப்பெற்ற பின்னரே, தான் அறிய நேர்ந்த தன்மையையும் கூறுகின்றனள்.

'களர் நிலம் உப்புப் பொரிந்து காணப்படுதற்குச் 'சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன உவர் எழு களரி' என்ற உவமை, நயமுடையதாகும்.

உள்ளுறை : 'பேய்த் தேரை நீரென நசைஇச் சென்று வருந்தும் மானைப்போல, என்பால் அன்பற்றவராயினாரை அன்புடையாரென எண்ணி அடைந்து யானும் ஏமாற்றமுற்று வாட்டம் அடைகின்றேன்' என்பதாம். 'பேய்த்தேர்' தலைவனது அன்பிற்கும், 'நசைஇச் செல்லும் மான்' தலைவிக்கும் பொருத்திக் காணற்கு உரியவாம். அகலத்தோன்றும் பேய்த்தேரை நீரென மயங்கித் தொடர்ந்து போகும் மானைப்போல, நிலையாமை கொண்ட பொருளை நிலையுள்ளதென மயங்கினராய்த் தலைவரும் தேடிச் செல்வாராயினர்" என்பதும் பொருந்துவதாம்.

85. நின் நசையினான்!

பாடியவர் : நல்விளக்கனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைவன் வரவுணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.

[(து–வி ) இரவுக் குறிக்கண் தலைவனின் வரவினை அறிந்தனள் தோழி; தலைவனைத் தலைவியை வரைந்து மணந்து கொள்ளுதற்குத் தூண்டக் கருதினள்; தலைவிக்குச் சொல்வாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு இப்படிக் கூறுகின்றனள்.]

ஆய்மலர் மழைக்கண் தெண்பனி உறைப்பவும்
வேய்மருள் பணைத்தோள் விறல்இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறுவரி இரும்புலி அஞ்சிக் குறுநடைக்
கன்றுடை வேழம் நின்றுகாத்து அல்கும், 5
ஆர்இருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி
வாரற்க தில்ல—தோழி—சாரல்
கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை
தேம்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தன்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்குமலை நாடன் நின் நசையி னானே! 10

தோழி! மலைச்சாரலிடத்தே வேட்டமாடும் கானவன், அம்பினை எய்து வீழ்த்திக் கொன்று, முட்பன்றியின் கொழுவிய தசையினைக் கொணர்ந்தனன். அதனைத் தேன்மணங் கமழுகின்ற கூத்தலை உடையாளான அவன் மனைவியானவள், தான் தோட்டத்திலிருந்து கிண்டிக் கொணர்ந்த கிழங்குகளோடும் சேர்த்துக், காந்தள் மலர்கள் நிரம்பியிருக்கும் அழகுடைய சிறுகுடியிடத்தே உள்ளவர் அனைவருக்கும் பகுத்துத் தருவாள். அத் தன்மைகொண்ட உயர்ந்த மலைநாட்டினன் நம் தலைவன். அவன், நின்பால் விருப்பத்தையும் உடையவன். அழகான குவளை மலர் போன்ற குளிர்ச்சியான நின் கண்களிடத்தே தெளிந்த நீர்த்துளிகள் மிகுதியாகத் துளிர்ப்பவும், மூங்கிலையொத்த பருத்த நின் தோள்களிடத்து விளங்கிய வெற்றித்தொடிகள் சுழன்று நெகிழவும், அவற்றை நோக்கிப் பழிபேசும் இயல்பையுடைய இப் பழைய ஊரிடத்தே பெரிதும் அலரெழுதலும் நிகழும். ஆயினும், குறுகிய கோடுகளையுடைய பெரிய புலிக்கு அஞ்சியதாய்க், குறுக நடக்கும் நடையினதான கன்றினையுடைய பிடியானையானது, தான் அசையாதே நின்றபடி அதனைக் காத்துத் தங்கியிருக்கின்ற தன்மையினையுடையதும், மிகுந்த இருள் சூழ்ந்து செல்வார்க்கு அச்சத்தை தந்துகொண்டிருப்பதுமான சிறுநெறியின் வழியாக, அவன் இனியும் வாராதிருப்பானாக!

கருத்து : 'இரவுக்குறி வேட்டு வருதலைத் தலைவன் கைவிட்டு, நின்னை மணந்து கொள்ளுதலிலே கருத்தைச் செலுத்துவானாக' என்பதாம்.

சொற்பொருள் : ஆய்மலர் – அழகிய குவளை மலர். 'தெண்பனி' தெளிந்த கண்ணீர்த்துளி. விறல் – வெற்றி. அம்பல் – அலர். இருள் கடுகிய – இருள் செறிந்து சூழ்ந்துள்ள. முளவு மான் – முட்பன்றி; முள்ளம்பன்றி. கிழங்கு – மனைப் படப்பைக்கண் பயிரிட்டிருந்த கிழங்கு.

விளக்கம் : 'விறல் இழை' என்றது. 'முன்னர்ப் பூரிப்பால் தலைவனைத் தன்பால் ஈர்த்த வெற்றிமிடுக்கோடு விளங்கிய இழை' எனச் சுட்டி, அதுதான் தற்போது நெகிழ்ந்துபோயின வாட்டத்தைக் குறித்துக் கூறியதாம். அம்பல் – சிலரே அறிந்து, அங்கங்கே தம்முட் கூடிக்கூடி நின்று மறைவாகப் பேசும் பழிச்சொற்கள். இதனைச் 'சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்லுவது என்று விளக்குவர் இறையனார் களவியலுரைகாரர்—(சூ. 22 ன் உரை.). 'அம்பலூரும் அவனாடு மொழிமே' எனக் குறுந்தொகைக்கண் (51) வருவதும் காண்க. கண்ணீர் வடிதலையும் தோள்பணை நெகிழ்தலையும் கூறினாள், தன்னாலும் தேற்றவியலாத துயர மிகுதியைப் புலப்படுத்தற்கு. இதனால் இரவுக்குறி மறுத்து வரைவுவேட்டு வற்புறுத்தினள் ஆயிற்று.

உள்ளுறை : 'கானவன் கொணர்ந்த பன்றித் தசையைக் கிழங்கோடு சிறுகுடிக்குப் பகுத்துக் கொடுத்துக் கொடிச்சி மகிழுமாறு போலத், தலைவன் பெற்ற களவு மணத்தை, மணவிழவோடு ஊரினர் அறியும் பலரறி மணமாகச் செய்து களிப்புறக் கருதினள் தோழி' என்பதாம். 'தானும் புவிக்கு அஞ்சுமாயினும், அகலாதே நின்று தன் கன்றைக் காத்து நிற்கும் பிடியினைப் போலப், பழிக்குத் தான் அஞ்சினும் தலைவியைப் பழிசூழாதே நின்று காக்கும் கடப்பாட்டினள் தான்' என்று தோழி தன் அன்பினை உணர்த்தியதுமாம்.

இறைச்சி : 'புலியை அஞ்சிய பிடியானை, அதனையுணராத தன் இளங்கன்றைப் பேணி நிற்றலைப் போலப் பிரிவால் தலைவிக்கு வரும் துயரத்திற்கு அஞ்சிய தோழி, அதனை அறியாதே களவு உறவில் திளைக்கும் தலைவியைப் பேணிக் காத்து நிற்கின்றனள்' என்பதாம்.

இதனைக் கேட்கும் தலைவன், இரவுக்குறி வாயாது போம் என்றறிபவனாகத் தலைவியை விரைந்து மணந்து கொள்ளுவதற்கான முயற்சிகளிலே ஈடுபடுவான் என்பதாம்.

86. அறவர் வாழ்க!

பாடியவர் : நக்கீரர்.
திணை : பாலை.
துறை : குறித்த பருவத்தின் வினை முடித்து வந்தமை கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.

[(து–வி) 'இளவேனிற் பருவத்தே வருவேன்' எனக்கூறிப் பிரிந்து சென்ற தலைவன், சொன்னபடியே வந்ததறிந்த தோழி, தலைவிபாற் சென்று இவ்வாறு அவனைப் போற்றுகின்றாள்.]

அறவர், வாழி தோழி! மறவர்
வேல்என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும்பனி அற்சிரம், நடுங்கக் காண்தகக்
கைவில் வினைவன் தையுபு சொரிந்த 5

சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவிமுகை அவிழ ஈங்கை
நல்தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னிவந் தோரே!

தோழி! வீரமறவரது கையிடத்துள்ள வேற்படையினைப்போல, விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய வெள்ளி வட்டிலைப் போன்ற வெள்ளிய மலர்களைப் பகன்றையானது மலர்ந்திருக்கும், கடிய முன்பனியை உடையது அற்சிரக்காலம். அக்காலத்தே, நாம் நடுக்கங் கொள்ளுமாறு நம்மைப் பிரிந்து போயினவர் நம் தலைவர். கண்டினபுறத்தக்கபடி சமைக்கும் கைவினைத் தொழிலிலே வல்லானாகிய தொழில் வல்லான் ஒருவன். கற்களையிட்டு இழைத்துச் செய்த பொன்னாலாகிய சுரிதகத்தின் வடிவத்தை உடையவாகிப் பெரிய கோங்கினது குவிந்திருந்த முகைகள் மலர்ச்சி கொள்ளும். ஈங்கையது நல்ல தளிர்கள், கண்டார் விருப்புறும் வண்ணம் நுடக்கம் பெற்று விளங்கும். இத்தகைய முதிராத இளவேனிற் காலத்தினைக் கருதினராக, நம் தலைவரும் நம்பால் வந்து சேர்ந்தனர். அவர்தாம் அறநெறியாளர்! அவர் நெடிது வாழ்வாராக.

கருத்து : 'சொன்ன சொற் பிழையாராய் அவரும் குறித்த காலத்தே வந்தனர்; இனி நீயும் நின் வாட்டத்தைக் கைவிட்டுக் கூடி மகிழ்ந்திருப்பாயாக' என்பதாகும்.

சொற்பொருள் : அறவர் – அறநெறியாளர்; வாய்ம்மை தவறாதவர். கதுப்பு – பூவின் புறவிதழாகிய மேல் தோடு. பாண்டில் – வட்டில்; பகன்றைப்பூ வட்டிலைப் போல்வதென்பது, 'பகன்றை, நீலுண் பச்சை நிறமறைத் தடைச்சிய, தோலெறி பாண்டிலின், வாலிய மலர' (அகம். 217:6–8) என்பதனாலும் விளங்கும். அற்சிரம் – முன்பனி; மார்கழி தை மாதங்கள். தையுபு சொரிந்த – இட்டு இழைத்துச் செய்த. சுரிதகம் – தலையணி; முறுக்கிட்டுச் செய்யப்படும் கற்பதித்த ஒரு நகை. நுடக்கம் – தள்ளாட்டம்; மெல்லென அசைந்தாடுதல். முன்னி – கருதி.

விளக்கம் : மார்கழி தையாகிய முன்பனிக் காலத்தே வினைமேற் பிரிந்து சென்றானாகிய தலைவன் இளவேனிற் பருவத்தே மீண்டு வந்ததனால், குறித்தபடி வந்த மகிழ்வைத் தோழி கூறிப் பாராட்டுகின்றாள். கோடையிற் பிரிந்து கார்த் தொடக்கத்தில் மீள்வதே பொதுமரபாக, இது காலமல்லாக் காலத்துப் பிரிதலாக இருத்தலின், இதனை அரசவினை கருதிப் பிரித்த பிரிவாகக் கொள்க. இது குறித்தே, 'மறவர் வேலென விரிந்த கதுப்பின் தோல் பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம்' என்று, அது காலைப் பிரிவாற்றாமையால் தலைவி துயருற்ற தன்மையினைக் கூறினளாம்.

87. அதுவும் கழிந்ததே!

பாடியவர் : நக்கண்ணையார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாகிய தலைவி கனாக்கண்டு தோழிக்கு உரைத்தது.

[(து–வி) வரைவினை இடைவைத்து. வரைபொருளின் பொருட்டாகப் பிரிந்து சென்றிருந்தான் தலைவன். பிரிவாற்றாமையினோலே தளர்ந்த தலைவி, ஒரு நாட் பகலிலே, தான் கண்ட கனாவினைத் தன் தோழிக்கு உரைத்து, இவ்வாறு புலம்புகின்றாள்.]

உன்ஊர் மாஅத்த முள்எயிற்று வாவல்
ஓங்கல் அம்சினைத் தூங்குதுயில் பொழுதின்
வெல்போர்ச் சோழர் அழிசிஅம் பெருங்காட்டு
நெல்லிஅம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு
அதுகழிந் தன்றே தோழி; அவர்நாட்டுப் 5
பனிஅரும்பு உடைந்த பெருந்தாட் புன்னைத்
துறைமேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந்தண் கானலும் நினைந்தஅப் பகலே.

தோழி! அத் தலைவரது நாட்டிடத்தேயுள்ள பெருத்த அடியையுடைய புன்னையினது குளிர்ந்த அரும்புகள் தலையுடைந்தவாய் மலர்ச்சி பெற்றன; அவற்றினின்றும் உதிர்கின்ற பூந்தாதுகள் கடற்றுறையிடத்தே மேய்ந்தபடியிருக்கும். இப்பியினது குளிர்ச்சிகொண்ட மேற்பக்கத்தே வீழ்ந்து அதனை அழகுபடுத்தின; அத்தகைய பெரிதான குளிர்ச்சியைக் கொண்ட கானற் சோலையினையும், அக்காட்சியைக் கண்டு இன்புறும் சிறுகுடியினரான பரதவரின் மகிழ்ச்சியையும் நினைத்தபடியே யானும் உறங்கிப் போயினேன். அப்படி நினைந்த அந்தப் பகற்போதிலேயே,

ஊரிடத்தே உள்ளதாகிய மாமரத்திலிருக்கும். முட்போன்ற பற்களையுடைய வாவலானது, உயரமான அழகிய ஒரு கிளையினிடத்தே தொங்கியபடி துயில் கொண்ட பொழுதிலே. போர் வெல்லும் சோழர்க்கு உரித்தான அழகிய பெரிதான காட்டினிடத்தேயுள்ள நெல்லியது இனிய புளிச்சுவையினைத் தான் நுகருவதாகக் கனாக்கண்டாற்போன்று, எனக்கு இனிதாயிருந்த அந்தக் கனவின்பமும் சுண் விழித்ததும் நீங்கிப் போயிற்றே!

கருத்து : 'கனவிற் பெற்ற அந்த மகிழ்வையும் விழிப்பில் யான் இழந்திருக்கிறேன்' என்பதாம்.

சொற்பொருள் : மா – மாமரம். வாவல் – வௌவால், ஓங்கல் அஞ்சினை – உயரமான அழகிய கிளை. தூங்குதுயில் – தொங்கிக் கிடந்து துயிலுதல். அழிசி – ஆர்க்காட்டுத் தலைவன். இப்பி – சிப்பி.

விளக்கம் : துறையிடத்தே மேயும் இப்பியினது ஈரிய புறத்தைப் புன்னையின் பூந்தாது உதிர்ந்து அழகுபடுத்தினாற்போல, அவரைப்பற்றிய கனவு நம்மையும் அழகு படுத்தலாயிற்று' என்றனள். 'அதுவும் கழிந்தது' விழித்து பொழுதிற் கனவு மறைதவால். மாங்கிளையிலே தொங்கியபடி தூங்கும் வௌவால், நெடுந்தொலைவிலுள்ள ஆர்க்காட்டுக் காட்டினிடத்துப் புளிப்பான நெல்லிக் கனியை அருந்தினதாகக் கனவு கண்டாற்போலத் தலைவியும் தொலைநாட்டிலுள்ள தலைவனோடு இன்புற்றுக் களித்தாற் போலக் கனாக் கண்டனள் என்க. 'அது கழிந்தன்றே' என்றது, 'அந்தக் கனவு தானும் இல்லாது போயிற்று' என்று கூறிப் புலம்பியதாம். வரை பொருட் பிரிவிடத்துத் தலைவியர் இப்படிக் கனாக் காணுதல் குறுந்தொகைச் செய்யுளினும் கூறப்பட்டுள்ளது (குறுந். 30). 'பொய்வலாளன் மெய்புறன் மரீஇய, வாய்த்த கைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்து, அமளி தைவந் தனனே' என வருதல் காண்க.

உள்ளுறை : 'துறை மேய் இப்பியது ஈர்ம் புறத்தே புன்னையின் பூந்துகள் வீழ்ந்து அழகுறுத்திய எதிர்பாரா இன்ப நிகழ்ச்சியைப் போன்று, தலைவன், எதிர்பாரா வகையிலே மீண்டுவந்து தன்னைத் தழுவித் தன் துயரத்தை மாற்றானோ?' என்பதாம்.

88. குன்றம் அழும்!

பாடியவர்: நல்லந்துவனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி.) வரைதற்கு முயலானாகிக் களவுறவினையே வேட்டுவரும் தலைமகன் குறியிடத்து ஒரு பக்கமாக வந்து நிற்பதறிந்த தோழி, அவன் மனத்தை வரைகலிற் செலுத்த நினைத்தாளாய்த் தலைவிக்கு உரைப்பாள்போன இப்படிக் கூறுகின்றாள்.]

யாம்செய் தொல்வினைக்கு எவன்பே துற்றனை?
வருந்தல்; வாழி! தோழி!– – யாம்சென்று
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்
கடல்விளை, அமுதம் பெயற்குஏற் றாஅங்கு. 5
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்
தம்மோன் கொடுமை நம்வயின் எற்றி
நயம்பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி யாக
அழுமே, தோழி! அவர் பழம்முதிர் குன்றே.

தோழி! யாம் செய்த பழிவினைப் பயன் இவ்வாறாயிருக்கவும், இதுகுறித்து நீ எதற்காகவோ மயங்குகின்றனை? வருத்தம் கொள்ளாதிருப்பாயாக! நெடிது வாழ்வாயாக! நம் துன்பத்தினை நாமே சென்று அவருக்கு எடுத்துக் கூறிவருவோம்; எழுவாயாக. பொருந்திய அலைகளை உடையதான கடலிடத்தே விளையும் அமுதமான உப்பானது, மழையிடத்துப் படின் உருகி ஒழிதலைப்போல, நீயும் இத்துன்பத்திற்கு ஆற்றாயாய் உருகியழிதலைக் கண்டு யான் அச்சமுறுகின்றேன். தன் தலைவன் நம்பாற் செய்த கொடுமையினை நினைந்ததாய், அவர்க்கு உரியதான பழங்கள் உதிர்ந்துகிடக்கின்ற வளத்தையுடைய குன்றமானது, நம்பாற் பெரிதும் அன்புடைமை கொண்டதாதலினாலே, நம் வருத்தத்தைப் பொறுக்கமாட்டாதாய்க், கண்ணீரை அருவியாகச் சொரிந்தபடியே அதோ அழுதபடியிருக்கின்றது. அதனையும், நீயே காண்பாயாக!

கருத்து : 'தலைவரது அன்பினைத் தவறாதே பெறுவோம்; அதனால் நீயும் ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : தொல்வினை – பழவினை: ஊழ்வினை. பேதுறல் – மயங்கியழிதல், புணர்திரை – பொருந்திய அலைகள். கடல்விளை அமுதம் – உப்பு. உருகி உகுதல் - கரைந்து அழிந்து போதல். தம்மோன் – தம்மை உடையானாகிய தலைவன். எற்றி – நினைந்து. நயம் – அன்பு. பழமுதிர் குன்று – பழம் உதிரும் குன்றம்: பழம் உண்பாரற்று மரங்களிடத்தேயே முதிர்ந்து கிடக்கின்ற வளமுடைய குன்றமும் ஆம்; ஆசிரியர் நல்லந்துவனாரின் பாடலாதலின், இச்சொற்கள் பழமுதிர் சோலைக் குன்றத்தைக் குறிப்பவும் ஆகலாம்.

விளக்கம் : 'கூட்டிய தொல்வினையானது விரைந்து வரைந்து கோடலைச் செய்யுமாறு தலைவனைத் தூண்டாதுபோயின். அதற்கு யாம் மயங்குவது எதற்காகவோ' என்பாள், 'யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?' என்கின்றாள். கூட்டிய அது மீளவும் மணவினையால் ஒன்றுபடுத்துதலையும் தவறாதே நிகழ்த்தும் என்பதாம். மழைவாய்ப்பட்ட உப்புக் குன்றம் கரைந்து ஒழிதலைப் போலக் காமநோயின் வாய்ப்பட்ட தலைவியின் உடலும் சோர்ந்து அழிகின்றது என்கின்றார். 'குன்றம் அருவியாக அழும்' என்றது, அதற்குரிய அன்பு தானும் அவர்பால் இல்லாதாயிற்றே என வருந்தியதாம். இவற்றைக் கேட்கும் தலைவன். விரைய மணந்து கொள்ளற்கான முயற்சிகளைக் கடிதாக மேற்கொள்வான் என்பதும் தெளிவாகும்.

உப்பு மழையிலே 'அழிதலைக் காமநோயால் நெஞ்சழியும் தலைவியரது நிலைக்குப் பிறரும் உவமிப்பர். 'உப்பியல் பாவை உறையுற்றதுபோல, உக்கு விடும் என் உயிர்' (கலி 138) எனவும், 'சுடும்புனல் நெருங்க உடைந்து நிலையாற்றா, உப்புச் சிறைபோல் உண்ணெகிழ்ந்துருகி (பெருங்.3.20)' எனவும், 'உப்பு ஒய் சகடம் பெரும்பெயல் தலைய வீழ்ந்தாங்கு' (குறுந் 165) எனவும் வருவன காண்க.

'கண்ணீர் அருவியாக, அழுமே தோழி, அவர் பழம் முதிர் குன்றே' என்பதனாற் குறித்த கார்காலத்தினது வரவினைக் காட்டி உரைப்பதும் ஆகும்.

மேற்கோள் : இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் – (தொல். பொருள்.சூ.114. உரை மேற்கோள்.)

பாட பேதங்கள் : உருகி அல்குதல் அஞ்சுவல்; நம்வயின் ஏற்றி; சுழலுமே தோழி.

89. வாடை வருமே!

பாடியவர் : இளம்புல்லூர்க் காவிதி.
திணை : முல்லை.
துறை : 'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.

[(து–வி.) பொருனீட்டி வருதற் பொருட்டாகப் பிரிந்து சென்றானாகிய தலைவன் மீண்டு வந்தானாதலைக் கேட்ட தோழி, தலைவிபாற் சென்று மகிழ்வுடன் இவ்வாறு கூறுகின்றாள்.]

கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடுகந்து ஏறி
நிரைத்து நிறைகொண்ட கமஞ்சூல் மாமழை
அழிதுளி கழிப்பிய வழிபெயற் கடைநாள்
இரும்பனிப் பருவத்த மயிர்க்காய் உழுந்தின் 5
அகலிலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயாஉயிர்த் தாஅங்கு
இன்னும் வருமே தோழி! வாரா
வன்க ணாளரோடு இயைந்த 10
புன்கண் மாலையும் புலம்பும்முந் துறுத்தே!

தோழி! கீழ்க்காற்றானது செலுத்துகையினாலே விண்ணிடத்துச் செறிவுற்றெழுந்து, அலையிடத்துப் பிசிரைப்போலத் தோற்றும் வெண்மேகமாக மலைமுகடுகளில் விருப்பத்துடனே ஏறிச்சென்று, ஒழுங்குபட அமைந்து நிறைவுற்ற நிரம்பிய சூலினையுடைய கார்மேகமானது. பெருமழையைப் பெய்து நீங்கியதாகத் தோன்றுவது கார்ப்பருவத்தின் இறுதியாகும். அதனிடத்தே மிக்க முன்பனிப் பருவத்தில், மயிர்கள் அமைந்த காய்களைக் கொண்ட உழுந்தினது அகன்ற இலைகள் எல்லாம் அகன்று போகும்படி வீசியதாக, நீங்கிப்போதலைச் செய்யாமல் நின்று நாள்தோறும் நம்மை அன்பு செய்யாத வாடைக் காற்றானது வருத்துதலைச் செய்யும். அத்தகைய வாடையானது, பருமத்தைப் பூண்டிருக்கும் யானையானது நெடுமூச்சு எறிந்தாற்போல வீசியபடி இனியும் வருமோ? இதுகாறும் வாராதிருந்த வன்கண்மையினை உடையவரான தலைவரொடு, ஒருங்கே பொருந்திய துன்பத்தைக் கொண்டதான மாலைக்காலத்தையும் நின் வருத்தையும் முற்பட விட்டுக்கொண்டதாக, அதுதான் இனியும் நின்னிடத்திற்கு வருமோ? வாராதுகாண்' என்பதாம்.

கருத்து : 'தலைவரது வரவினாலே, இனி நின்னது துயரம் முற்றவும் நீங்கிப்போகும்' என்பதாம்.

சொற்பொருள் : கொண்டல் – கீழ்க்காற்று. முகடு – மலையுச்சி. நல்கா வாடை – அன்பு செய்யாத வாடைக் காற்று. பருமம் – யானைமேல் இடும் அம்பாரம், புலம்பு – வருத்தம். புன்கண்மை - துன்பஞ்செய்யும் தன்மை.

விளக்கம் : கார்ப்பருவத்தே மீள்வதாகக் கூறிச்சென்ற தலைவன், முன்பனிப் பருவத்தும் வாராதுபோகப் பெரிதும் வாடித் தளர்ந்திருந்தாள் தலைவி. அவ் வேளையிலே அவனும் வந்தானாக, அப்போது தோழி தலைவிபாற் சென்று, அவள் துயரனைத்தும் தீர்ந்ததென்னும் களிப்பினாலே இவ்வாறு கூறுகின்றாள். இனி, இதனைத் தலைவன் வருவதாகக் குறித்த பருவத்தின் இறுதிவரையினும் வாராதானாகப் பெரிதும் நலிவுற்றிருந்த தலைவி, ஆற்றுவிக்க முயன்றாளான தோழிக்குத் தன் ஆற்றாமை மிகுதியைப் புலப்படுத்தினளாகக் கூறியதெனவும் கொள்ளலாம்.

'உழுந்து முன்பனிப் பருவத்தில் முதிரும்' என்பதனை 'பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும், அரும்பனி அற்சிரம்' (குறுந். 68) எனவும், 'பற்றுவிடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப அற்சிரம் நின்றன்றாற் பொழுதே' எனவும் (அகம்.339) கூறுவர்.

பிறபாடம் : அழிபெயல் – வழிபெயல்.

90. அவை பயனற்றது!

பாடியவர் : அஞ்சில் அஞ்சியார்.
திணை : மருதம்.
துறை : தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயில் மறுத்தது.
[(து–வி.) பரத்தையிற் பிரிந்தானாகிய ஒரு தலைவனுக்கு வாயிலாக வந்து, தலைவியின் உறவினைத் தலைவன் விரும்பினமை கூறி நின்றனன் பாணன் ஒருவன். அவன் பேச்சைக் கேட்ட தோழி, தலைவிக்கு உரைப்பாள் போல அவனை மறுத்துக் கூறுகின்றாள்.]

ஆடுகியல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடையோர் பன்மையின் பெருங்கை தூவா.
வறன்இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப் 5
பெருங்களிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா
நயன்இல் மாக்களொடு கெழீஇப் 10
பயன்இன்று அம்ம இவ் வேநதுடை அவையே!

கூத்தாட்டு நிகழ்கின்ற விழாக்களின் ஒலியைக் கொண்டிருப்பது இம் மூதூர். இதனிடத்தே ஒலிப்பதற்குரிய உடைகளையிடுவோர் பலராதலினாலே, பெரிதும் கை ஓயாதாளாகத் தொழில் செய்திருப்பாள் ஆடையொலிப்பவள். அவள்தான், இரவிலே தோய்த்துக் கஞ்சியிட்டுப் புலர்த்தித் தந்த சிறு பூத்தொழிலையுடைய மல்லாடையுடனே, பொன்னரிமாலையும் தன்பாற் கிடந்து அசைந்தாடுமாறு ஓடிச்சென்று, கரிய பனையினது பெரிதான கயிற்றுப் பிணையலிலே பிணைக்கப்பட்டுத் தொங்கும் ஊசலிலே ஏறினாள். ஏறியிருந்தவள், பூப்போலும் கண்களை உடையவரான தன் ஆயமகளிர் தன்னை ஊக்கிச் செலுத்தவும் தான் ஊசலமர்ந்து ஆடாளாயினள். அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மனைமாண்பிற் குறைபாடுடைய பரத்தையொருத்தியின், சிலவாகிய வளைகளை அணிந்த ஓர் இளமகள் அவள். அவள் அதன்பின் அழுதபடியே அவ்விடம் விட்டு அகன்று போதலையும் செய்தாள். அதுகண்டும். இவ்வேந்தனைத் தலைவனாக உடைய அவையானது. அவளை மீண்டும் ஊசலயரும் தொழிலிடத்தே செலுத்தி. ஆரவாரத்தை உண்டாகுமாறு செய்யாத அன்பற்ற மக்களோடும் கூடி நிறைந்ததாயிருந்ததே! அதனால், அது நமக்குப் பயனுடைத்தாகாது காண்பாயாக!

கருத்து : 'குறுமகள் மீதே அன்பற்று வாளாவிருந்தவன் அவள் ஊடிய அதனாற்றான் இவ்விடத்து நம்பாலே வந்தனன் போலும்' என்பதாம்.

சொற்பொருள் : அழுங்கல் – ஆரவாரம். கைதூவா – கை ஓயாத, புகாப்புகர் – கஞ்சிப் பசை, வாடாமாலை – பொன்னரி மாலை. நல்கூர் பெண்டு – வறுமையுற்ற பெண்: பரத்தையின் தாயைக் குறித்தது.

விளக்கம் : உடையோர் – உடையினை ஒலித்தற்குப் போடுவோர். இவர் மிகுதிப்படுதலால், புலைத்தி இரவினும் கைஒயாளாய் ஒலிக்கவாயினாள். அப் பரத்தைபால் தொடர்புடையவன் தலைவன்: 'அன்று அவள் ஊடி அகன்று போதலினாலே, இன்று மனைநாட்டம் பெற்றோனாக வந்து தலைவியைக் கருதினான் போலும்?' என்கின்றாள். 'ஆடியல் விழாவின் அழுங்கல் மூதூர்' என்றது, மருத நிலத்தின் வளமைச் சிறப்பினையும், அதன்கண் வாழ்வோரது இன்ப நாட்டங்களையும் காட்டுவதாம். 'ஆயம் ஊக்க ஊங்காள்' என்றது, அவள் தான் தலைவன் வந்து தன்னை ஊக்குவதனை எதிர்பார்த்தமையும், அவன் வராதுபோயினனாகவே, தான் ஊசலாட விருப்பம் இல்லாதாளாய் வெறுப்புற்று அழுதுகொண்டே அகன்றமையும் கூறியதாம்.

'சில்வளைக் குறுமகளாகிய அவளையே, அவள்பால் அருளின்றிக் கலங்கியழச் செய்த கன்னெஞ்சினன், புதல்வனைப் பெற்றுத் தளர்ந்திருக்கும் தலைவிபாற் காதலுற்று வருதல் என்பது பொருத்தமற்றது' என்றனள். அன்றி, 'அவளையும் வெறுத்து மனந்திரும்பி வருகின்ற சிறப்பினன்' என, வாயில் மறுப்பாள்போலத் தலைவனை ஏற்குமாறு தலைவிபால் வற்புறுத்தியதாகவும் கொள்க.

மேற்கோள் : 'தலைவனோடு ஊடியிருக்கும் தலைவி, வாயில் வந்த பாணனைக் குறித்துக் கூறியது இது' எனக்கொள்வர் நச்சினார்க்கினியர்—(தொல். பொருள்.சூ.147 உரை .) ஆசிரியர் இளம்பூரணனாரும் 'இது பாங்கனைக் குறித்துத் தலைவி கூறியது' என்பர் (தொல். பொருள். 145. உரை).

91. நீ உணர்ந்தாயோ!

பாடியவர் : பிசிராந்தையார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.

[(து–வி.) வரைபொருட்குப் பிரிந்து சென்றான் தலைவன், அத் தலைவனின் பிரிவாலே, தலைவி மிகவும் வருத்தமுற்று நலிந்திருந்தனள். ஒரு நாட் பகல் வேளையிலே பலருங்காண அவனை இல்லிடத்து வரக்கண்டாள் தோழி. அவன் வரைந்து வருதலான செய்தியை யூகித்தாளாகத் தலைவிபாற் சென்று இவ்வாறு கூறுகின்றாள்.]

நீ உணர்ந் தனையே தோழி! வீஉகப்
புன்னை பூத்த இன்நிழல் உயர்கரைப்
பாடு இமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையொடு
உடங்கிரை தேரும் தடந்தாள் நாரை
ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் 5
மேக்குஉயர் சினையின் மீமிசைக் குடம்பைத்
தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்
கானலம் படப்பை ஆனா வண்மகிழ்ப்
பெருநல் ஈகைநம் சிறுகுடிப் பொலியப்
புள்ளுயிர்க் கொட்பின் வள்ளுயிர் மணித்தார்க் 10
கடுமாப் பூண்ட நெடுந்தேர்
நெடுநீர்ச் சேர்ப்பன் பகல்இவண் வரவே?

தோழி! ஒலி முழக்கினையுடையதும் குளிர்ச்சியானதுமான கடலிடத்தே சென்று துழாவித், தன் பெடையோடுங் கூடியதாக ஒருங்கே இரை தேடி வருகின்ற நெடுங்கால்களையுடைய நாரையானது. மெல்வியதாய்ச் சிவந்த சிறிய கண்களைக் கொண்ட சிறுமீனைப் பற்றியதும், இனிதான நிழற்பரப்பைக் கொண்ட உயரமான கரையிடத்தேயுள்ள மலருதிரப் பூத்திருக்கும் புன்னை மரத்திடத்து, மேலோங்கி உயர்ந்துள்ள கிளையின் மேலுள்ள கூட்டிலேயிருந்தவாறு, பசியினாலே தாயை அழைத்தபடி கூவியிருக்கும் குஞ்சினது வாயுள் வீழுமாறு கொண்டு சொரிதலைச் செய்யும். அத்தன்மையதான கடற்கரைச் சோலையினையும், அழகிதான கொல்லையினையும். கெடாத வளமிக்க உணவினையும், பெரிதான நல்ல ஈகைப் பண்பினையும் உடையதான நம் சிறு குடியிருப்பும் அழகு பெற்றது. அங்ஙனம் அழகு பெறுமாறு, புள்ளினம் ஒலித்தாற்போலச் சுழன்று முழக்கும் வளவிய ஒலியையுடைய மணிமாலையினை அணிந்த, கடிதாகச் செல்லும் குதிரை பூட்டிய நெடுந்தேரிணை ஊர்ந்தானாக, நெடிதான கடற்கரைக்குரிய தலைவனான நம் சேர்ப்பனும், பசுற்போதிலேயே இவ்விடத்து விரைந்து வருகின்றனன். இதனை நீயும் உணர்ந்தனையோ?

கருத்து : 'ஊரறிய நின்னை வரைந்து கொள்ளற் பொருட்டுத் தலைவன் இங்கே வருகின்றனன்' என்பதாம்.

சொற்பொருள் : உடங்குஇரை தேரும் – ஒருசேரச்சென்று இரைதேடும். பிள்ளை – நாரைக் குஞ்சு. கொட்பு சுழற்சி. கடுமா – கடிதாக ஓடும் குதிரை.

விளக்கம் : 'புன்னை பூத்து மலர் சொரியும்' என்றது, மணத்துக்கு உரியதான காலத்து வரவைக் கூறியதாம்; நெய்தல் நிலத்திற் புன்னை பூப்பதைக் கூறுவது போலக் குறிஞ்சி நிலத்தில் வேங்கை பூப்பதைக் கூறுவது மரபு. 'வண் மகிழ்' என்றது, தலைவியது வீட்டுப் பெருவளனைச் சுட்டியது. அவர் தாம் தலைவன் அளிக்கும் பெரும் பொருளினைப் பாராட்டுவதினும், அவனது தகுதியையும் உழுவலன்பையுமே பெரிதும் கருதுவர் என்றதாம். அவரும் மறாதாராய்க் கொடை நெர்வர் என் குறிப்பாகக் கூறுவாள், 'பெருநல் ஈகை' உடையாரென, அவரது ஈத்துவக்கும் இயல்பினைக் கூறினாள். 'பகல் வரவு' என்றது, களவை ஒதுக்கி வரைதற்குரிய தகைமையோடு பலரும் காணுமாறு வருகின்ற தன்மையைக் கண்டு கூறியதாம்.

உள்ளுறை : 'கூட்டிலிருந்தபடி தாயைக் கூவியழைக்கும் குஞ்சுக்குத், தாயோடு கடலிடத்து இரைதேடச் சென்ற நாரையானது, சிறுமீனைக் கொணந்து வாயிடத்தே சொரியும் கானல்' என்றது, தாயாற் காக்கப்படும் தலைவியது காதலைத் தந்தை நிறைவேற்ற முற்பட்டனனாய்த் தலைவனை அவளோடும் மணங்கூட்டி மகிழ்விப்பான் என்பதாம். வரைபொருட்குச் சென்ற தலைவன், தலைவியின் வீட்டார் விரும்பிய பொருளைத் தந்து தலைவியைப் பெறுவானாகி, அவள் நலிவைத் தீர்ப்பான் என்பதும் ஆம்.

92. நம்மை நினையாரோ?

பாடியவர் :......
திணை : பாலை.
துறை : பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.


[(து–வி.) தலைமகனின் பிரிவினாலே நலனழிந்தவளாயினாள் தலைவி. அவளது துயரத்தை மாற்றக் கருதிய தோழி, தலைவனை இயற்பழித்தாளாக இவ்வாறு கூறுகின்றனள்.]

உள்ளார் கொல்லோ தோழி; துணையொடு
வேனில் ஓதிப் பாடுநடை வழலை
வரிமரல் நுகும்பின் வாடி அவண
வறன்பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅன்
வேட்டச் சீறூர் அகன்கண் கேணிப் 5
பயநிரைக்கு எடுத்த மணிநீர்ப் பத்தர்,
புன்தலை மடப்பிடி கன்றோடு ஆர
வில்கடிந்து ஊட்டின பெயரும்
கொல்களிற்று ஒருத்தல சுரன்இறந் தோரே?

தோழீ! வேனிலின் கொடுமையினாலே வருந்திய நடையைப் பெற்றது ஓந்தி. அது கருவழலைப் பாம்பைப்போலத் தோற்றும் வரிகளையுடைய மரற்கள்ளியின் இளமடலைப் போல வாட்டமுற்றதாகிக் கிடக்கும் அவ்விடத்ததாகிய, வறட்சிபொருந்திய குன்றத்தின் உச்சியது ஒரு பக்கத்தே, வேட்டுவக்குடியினரின் சிற்றூரும் இருக்கும். அகன்ற வாயையுடைய கிணற்றினின்றும், பாற்பயனைத் தருகின்ற நமது ஆனிரை உண்ணுமாறு, இச் சிற்றூரினர் தெளிந்த நீரை எடுத்துப் பத்தரிலே நிரப்பி வைப்பர். புல்லிய தலையையுடைய தன் இளம்பிடியானது கன்றோடும் நீருண்டு வேட்கை தீருமாறு. அதனை மூடியிருக்கும் விற்பொறியை முறித்துப் போட்டு, அவற்றுக்கு நீருட்டிய பின்னர்த் தன் வழியே அவற்றுடன் செல்லாநிற்கும், கொல்லும் சினத்தையுடைய களிற்றுத் தலைவன் ஒன்று. அத்தகைய களிற்றையுடைய சுரநெறியைக் கடந்து போயினவரான தம் தலைவர் தாம், அந்தக் களிற்றது மனைவியையும் கன்றையும் பேணுகின்ற ஈடுபாட்டை நினைத்தாராய், நம்மையும் நினைக்க மாட்டாரோ?

கருத்து : 'அவர் நினைத்திலர்; ஆகலின் அன்பற்றார்; அவர் குறித்து நீ ஏங்கியழிதல் வேண்டா' என்பதாம்.

சொற்பொருள் : ஓதி – ஒந்தி பாடுநடை –மெலிந்தநடை. வழலை –கருவழலைப் பாம்பு. மரல் – மரற்கள்ளி. நுகும்பு – இளமடல். ஒருத்தல் – தலைமை கொண்ட ஆண் விலங்கு.

விளக்கம் : காட்டு வழிச் செல்வார், விற்பொறியை முறித்துப் போட்டுத் தன் பிடியையும் கன்றையும் நீர் உண்பித்துச் செல்லும் களிற்று ஒருத்தலைக் கண்டிருப்பர்; கண்டிருந்தும், அதற்குள்ள மனைமாண்பு தம்பால் இல்லாதாராய் நம்மை மறந்தனரே! ஆதலின், அவர் மிகுதியும் அன்பற்றார் என்று பழிக்கிறாள் தோழி.

பிடியினது வேட்கையைக் களிறு தணிக்கும் செவ்வியைச் சான்றோர் பலரும் காட்டுவர். 'பிடி பசி களைஇய பெருங்கை வேழம், மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின, தோழி! அவர் சென்ற ஆறே' எனக் குறுந்தொகையுட் பாலைபாடிய பெருங் கடுங்கோ கூறுவர். (குறு.37.2-4), களிறு தன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி, வெண்ணார் கொண்டு கைசுவைத்து, அண்ணாந்து அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் (குறு. 307); புன்றலை மடப்பிடி உணீ இயர் அங்குழை நெடுநிலை யாஅம் ஒற்றி, நினைகவுள் படிஞிமிறு கடியும் களிறே' (அகம். 54) எனவும் வரும்.

93. பிரிந்தோர் இரங்கும் நாடு!

பாடியவர் : மலையனார்.
திணை : குறிஞ்சி.
துறை : கடாயது

[(து–வி.) தலைவியை வரைந்து மணக்கக் கருதானாய்ப் பலகாலும் பகற்குறியே வேட்டு வருவானாகிய தலைவனுக்கு, வரைந்துவந்து தலைவியை மணந்து போகுமாறு அறிவுறுத்துகின்றாள் தோழி.]

'பிரசம் தூங்கப் பெரும்பழம் துணர்
வரைவெள் அருவி மாலையின் இழிதரக்
கூலம் எல்லாம் புலம்புஉக நாளும்
மல்லற்று, அம்ம இம் மலைகெழு வெற்'பெனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட; 5
செல்கம்; எழுமோ: சிறக்கநின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்துஇழைப் பணைத்தோன்
நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள்
பூண்தாழ் ஆகம் நாண்அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; லழங்குகுரல் 10
மயிர்க்கண் முரசினோரும் முன்
உயிர்க்குறி யெதிர்ப்பை பெறல்அருங் குரைத்தே.

"தேனிறால்கள் எம்மருங்கும் தொங்கிக் கொண்டிருக்கும்; பெரிதான பழவகைகள். குலைகுலையாகப்பழுத்துக் கிடக்கும்; வெள்ளிய அருவியானது வரையிடத்திருந்து மாலைபோன்ற தோற்றத்தோடு இழிந்துவரும்; மலைத்தானியவகைகள் எல்வாம். கொள்வாரற்றுத் தனித்து வருந்தி உதிர்ந்து கிடக்கும்; இம்மலை பொருந்திய வெற்பிடம் எந்நாளும் இத்தகைய வளப்பத்தை உடையதாகும்." எனச் சொல்வாராக, அதனைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் சென்றோர் இரங்கிப் புலம்புவார்கள்; அத்தகைய பெரிதான மலைநாட்டுத் தலைவனே! இனியாம் செல்லுகின்றோம் நீயும் செல்லுவதற்கு எழுவாயாக! நின் வாழ்நாளும் சிறப்புடையதாகுக! பக்கங்களை மறைத்துக் கிடக்கும் திருந்திய ஆபரணங்களை அணிந்தோள்; பணைத்த தோள்களையும், நுணுகிய இடையினையும், மெல்லிய சாயலையும் உடையோள்; இவ் இளமகள் இவளது பூண் தளர்ந்த மார்பகமானது, நாணமானது துன்புறுத்தலினாலே வருத்தமுற்றப் பழங்கண்ணாகிய மாமையினையும் உடையதாகும். முழக்கும் குரவையுடைய மணமுரசின் ஒலியைக் கேட்டறிவதற்கு முன்பாக, இவளது உயிர் இவளுடலிலேயே இருக்கும்படியான ஒரு குறிப்புத் தோன்றக் காணப்பெறுதலும் இனி அரிதாகும்!

கருத்து : 'கனவிடைப் பிரிவுக்கே பொறாத இவளை, விரைய வந்து மணந்து காப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : மல்ல்ல் – வளம். மருங்கு – பக்கம். பழங்கண் – துன்பம். குறி எதிர்ப்பை – குறித்த எதிர்ப்பை; அறம் குறித்து வாங்கி, வாங்கியவாறே கொடுப்பது இது (குறள் 221). கூலம் – பதினாலுவகைத் தானியமும் ஆம். மயிர்க்கண் முரசம் – மயிர் சீவாத கோலாற் கட்டப் பெற்றிருக்கும் முரசம். இது மண முரசம்; பிற முரசங்கள் வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு போன்றவை.

விளக்கம் : 'பிரசம்' – தேனிறால்; மலையிடைத் தேனிறால்கள் தூங்கும் என்பதனைத் 'தும்பிசேர் கீரனார்' 'பிரசந் தூங்கும் மலைகிழவோற்கு" (குறு.392) எனக் கூறுவர். 'தென் தூங்கும் உயிர் சிமைய மலை' (மதுரை 3–4} எனவும், 'பிரசந் தூங்கும் சேட்சிமை வரையக வெற்பன்' (அகம் 242) எனவும் வரும். நம்மைப் பிரிவுத் துயரத்தால் நலியுமாறு வருத்தும் கொடுமையினையுடையரான அவரது வெற்பும் பிரிந்தோர் இரங்கும் வளமுடைத்தாதல்' என்ன அறமோ? என்று கேட்பாள், 'பிரித்தோர் இரங்கும் பெருங்கல் நாட!' என்றாள் 'நாண் அடுதல்' களவுறவைப் பிறாறியின் பழிப்பரெனப் பிரிவுத் துயரத்தை உள்ளடக்கியே மறைத்து ஒழுகுமாறு வற்புறுத்தல். ஆதனால் களவு, வெளிப்படுதல் இல்லை எனினும், 'பூண் தாழ் ஆகம்' பழங்கண் மாமையினை உடைத்தாதலினின்றும் தப்பிற்றில்லை' என்பதாம்.

94. என்ன ஆண்மகனோ?

பாடியவர் : இளந்திரையனார்.
திணை : நெய்தல்
துறை : தலைமகன் சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி) தலைவன், தன் பேரன்பையுணர்ந்து, பிரியாத இல்லற வாழ்விலே செலுத்தும் மணவுறவினை நாடானாயிருத்தலை நினைந்து, வருந்துகின்றாள் தலைவி. அவள், தன் துன்பம் புலப்படத் தோழிக்குக் கூறுவாள்போலச் சிறைப்புறமாக வந்து நிற்கும் தலைவனும் கேட்டறியுமாறு கூறுகின்றாள்.]

நோய்அலைக் கலங்கிய மதன்அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக்
கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ
மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவிஇணர்ப் 5
புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்
என்னை மகன்கொல் தோழி! தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்புஅணங் குறுநரை அறியா தோனே?

தோழி! காயநோயானது பற்றியலைப்பக் கலங்கியதான வலியழிந்த பொழுதிலே, தான் கொண்ட காமநோயை எடுத்துச் சொல்லி, அதற்கு ஒரு வழியைக் கண்டறிதல் என்பது ஆண்மகனுக்குப் பொருந்துவதாகும். யானோ, என்னிடத்துள்ள பண்பு தடுத்தலினாலே, யான் கொண்ட காமநோயினை வெளிப்படுத்தாதவாறு, நுண்ணியதாகத் தாங்கியிருந்தே நலிகின்றேன். தன்னிடத்தே பேரன்பினை உடையவராகித், தன் மார்பினைத் தழுவுதலையே விரும்பினராக வருத்தமுற்றிருக்கும் மகளிரது தன்மையினைத் தலைவனோ அறியாதோனாய் உள்ளனன். கைவினைத்திறனிலே வல்லானாகிய பொற்கொல்லன் கவின்மிகுமாறு கழுவித் தூய்மை செய்யாத, கழுவாத பசுமுத்தைப்போலக் குவிந்த பூங்கொத்துக்களையுடைய புன்னையானது, அரும்பியிருக்கின்ற தன்மை கொண்ட, புலவுநாற்றத்தையுடைய கடற்கரை நாட்டுச் சேர்ப்பனாகிய நம் தலைவன்தான், என்ன தன்மையனாகிய ஓர் ஆண்மகளோ?

கருத்து : 'குறிப்பாகப் பலபட உரைத்துக் காட்டியும், துயரத்தைத் தீர்த்தற்கு முற்படாத தலைவன், என்னவோர் ஆண்மகனோ?' என்பதாம்.

சொற்பொருள் : அலைக்கலங்கிய – அலைத்தலாலே கலக்கமுற்ற. மதன் – வலிமை. தட்ப – தடை செய்ய. கம்மியன் – பொற்கொல்லன். கவின் – பெருவனப்பு. மண்ணா – கழுவாத.

விளக்கம் : தான் பெற்றுத் துய்க்கும் இன்பத்திலேயே நினைவாயிருக்கும் தலைவனது அன்பற்ற தன்மையினை நினைந்தானாய், இப்படி வருந்திக் கூறுகின்றாள் தலைவி, இதனைக் கேட்கும் தலைவன், விரைய வரைந்து சென்று மணம் பெறுதற்கு முயல்வான் என்பதாம் புன்னைய பூவரும்புகள் கழுவாத பசுமுத்தைப்போலத் தோற்றுவன. புன்னை முகை விரிந்து மணம் பரப்பத் தொடங்கின், கடற்கரையின் புலவு நாற்றமும் மறையும். அதுபோலத், தலைவன் தன்னை வரைந்து மணம்புணரின், களவும், அதனாற் பெறும் அவரால் வரும் துயரமும் அகன்றுபோம் என்பதும் ஆம்.

மேற்கோள் : இச்செய்யுளை, 'ஏமஞ்சான்ற உவகைக் கண்ணும்’ தலைவிக்குக் கூற்று நிகழ்தற்கு எடுத்துக்காட்டுவர், நச்சினார்க்கினியர் – (தொல். பொருள். சூ. 111 உரை). அதன் கண், 'மண்ணாப் பசு முத்தேய்ப்ப நுண்ணிதின் தாங்கி பெண்மை தட்ப' வென மாறிக், கழுவாத பசிய முத்தம் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல, யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புறத்தோர்த்குப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப் பெண்மையாம் தகைத்துக் கொள்ளும்படியாகத், தன் மார்பால் வருத்தமுற்றாரைக் கண்டு அறியாதோனாகிய சேர்ப்பனை என்ன மகனென்று சொல்லப்படும் என மகிழ்ந்து கூறினாள், ஆர்வமுடையவராக வேண்டி மார்பணங் குறுநரை அறியாதோன் என்க. 'அலராமற் குவிந்த கொத்தையுடைய புன்னைக்கண்ணே புலால் நாற்றத்தையுடைய நீர் தெறித்தரும்பிய சேர்ப்பன்' என்றதனால், புன்னையிடத்துத் தோன்றிய புலால் நாற்றத்தைப் பூவிரிந்து கெடுக்குமாறு போல, வரைந்து கொண்டு, களவின் வந்த குற்றம் வலிகெட ஒழுகுவன் என்பது உள்ளுறை" என இச்செய்யுளுக்கு நல்லதொரு விளக்கமும் அவர் தருவர்.

95. நெஞ்சம் பிணித்தவள்!

பாடியவர் : கோட்டம்பலவனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.

[[து–வி.) இயற்கைப் புணர்ச்சி பெற்றானாகிய ஒரு தலைவன், பின்னர்ப் பாங்கனின் உதவியினை நாடியவனாக அவனுக்குத் தன் காதல்பற்றி அறிவிப்பதாக அமைந்தது இச் செய்யுள்.]

கழைபாடு இரங்கப் பல்லியம் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்து எழுந்து, 5
குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்அக்
குன்றகத் ததுவே, குழுமிளைச் சீறூர்
சீறூரோளே, நாறுமயிர்க் கொடிச்சி,
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்தஎன் நெஞ்சே. 10

மூங்கிற் குழலினது இனிய இசையானது ஒலிக்கவும், மற்றும் பலலகையான வாச்சியங்களின் ஒலிமுழக்கமும் முழங்கவுமாகக் கூத்தாடுகின்றாள் ஆடுமகள். அந்த ஆடு மகளானவள், முறுக்கமைந்த புரியையுடைய வலிய கயிற்றின் மேலாகவும் நடந்து செல்வாள். அந்தக் கயிற்றின் மேலாக அத்திப்பழத்தின் இனிய கனியைப்போன்ற செம்முகத்தையும், பஞ்சுத் தலையையுமுடைய மந்தியது வலிய குட்டியொன்று தூங்கியபடி ஆடிக்கொண்டிருக்கும். அதனைக் காணும் குறக்குலத்துச் சிறுவர்கள், அப்பெருமலையிடத்துள்ள மூங்கிலை வளைத்து, அதன் முற்பக்கத்து ஏறிக்கொண்டவராக விசைத்து அதனோடும் மேலெழுந்தபடியே கைத்தாளம் கொட்டி மகிழ்வார்கள். குழுமிய காவற் காட்டை உடையதான தலைவியிருக்கும் சிற்றூரானது அந்தக் குன்றகத்தே உள்ளதாகும். நறுமணக் கூந்தலாளான அந்தக் குறமகள்தான், அச் சிற்றூரிடத்தே வாழ்கின்றாள். அவளுடைய கையகத்தேதான் அவளன்றிப் பிறரானே விடுவித்தற்கு ஏலாதபடி அவளாற் பிணித்துக் கொள்ளப்பட்ட என் நெஞ்சமும் உள்ளதாகும்.

கருத்து : 'என் நெஞ்சம் பிணித்தாளை என்னால் மறத்தற்கு இயலாது' என்பதாம்.

சொற்பொருள் : கழை – மூங்கிற்குழல். இயம் – வாத்தியக் கருவி. இரங்கல் – மெல்லென இசையொலி எழுப்புதல். கறங்கல் – ஒலிமிக்க இசையின் எழுச்சி. பல்லியம் கறங்கல் – கூட்டிசை ஒலித்தல். ஆடுமகள் – கயிற்றில் நடந்து கூத்தாடி மகிழ்விக்கும் ஆடன்மகள்; கழைக்கூத்தி. அதவம் – அத்தி.

விளக்கம் : "ஒன்றைக் குறித்து அமைத்த கயிற்றிடத்தே மற்றொன்று ஆடிநின்று நகைப்பதற்கு இடமாயின தன்மைபோன்று, என் உள்ளத்தே நிழலாடும் தலைவியைக் குறித்து நான் கண்டிருக்கும் காதற்கனவுகளிலே அவளையன்றிப் பிறள் ஒருத்தியை ஏற்றிவைத்து ஆட்டுவித்துக் சுண்டுகளிக்க நீயும் விரும்பினாய் போலும்?" எனப் பாங்கன் தலைவனது நோயது பொருந்தாமையைத் தகுதி காட்டிப்பழிக்கத் தலைவன் கூறுவதாக நுண்பொருள் காணலாம். 'கழை முனையிலேறி விசைத்து மேலெழுந்து ஆடிக்களிக்கும் குறச்சிறாரைப்போலக், கண்வழி உள்ளத்தினுள் ஏறி நின்று அவள் ஆடிக்களிக்க யான் நோகின்றேன். அதுகண்டு நீயும் மகிழ்கின்றாயோ' என்பதும் ஆம்.

இறைச்சி : கூத்தி நடந்த கயிற்றில் மந்தி வன்பறழ் தூங்கியாடுமாறு போல, ஒழுக்கத் தகுதியான் என்னை திண்மையாக்கிக் கொண்டிருந்த நிலையினும், என்னுளத்தே அவள் புகுந்து ஆட்டமிடுகின்றாள் எனவும், அது கண்டு நகைத்துக் களிக்கும் குறச்சிறு மகாரைப்போல. நீயும் என் துயரை அறியாயாய்ச் சிரித்தனை எனவும் சொல்வதாகக் கொள்க.

மேற்கோள் : 'நின்னாற் காணப்பட்டாள் எவ்விடத்தாள்? எத்தன்மையாள்?' எனப் பாங்கன் வினவுதலும், அதற்குத் தலைமகன் இடமும் உறவும் கூறுதல்' எனக் 'குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்' என்னும் துறைக்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணனார் (தொல். பொருள். சூ. 99 உரை). இதற்கே ஆசிரியர் நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் (தொல். பொருள். சூ. 102 உரை.)

96. பைஇப் பையப் பசந்தனை!

பாடியவர் : கோக்குளமுற்றனார். திணை : நெய்தல். துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது.

[(து–வி ) சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்டு வரைந்து கோடலிலே தன்னுள்ளத்தைச் செலுத்துமாறு, தலைவிக்குச் சொல்லுவாள் போல, அவனும் கேட்குமாறு தோழி சொல்லுகின்றாள்.]

'இதுவே, நறுவீ ஞாழல் மாமலர் தாஅய்ப்
புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறைப்
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே;
பொம்மற் படுதிரை நம்மோடு ஆடிப்
புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 5
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல்
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇத்
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு 10
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி,
பைஇப் பையப் பசந்தனை பசப்பே!

தோழீ! நறுமணங்கொண்ட ஞாழலது சிறந்த மலரும். புன்னையது சிறந்த மலரும் ஒருங்கே உதிர்ந்து பரவிக் கிடக்கின்ற வெண்மணற் பாங்கின் ஒருபக்கத்தே. புதிதாகத் தலைவனோடு கூடிப்பெற்ற இன்பத்திற்கு இடமாயிருந்த பொழிலும் இதுவேயாகும் என்றும்,

பொலிவுடைய கடற்றுறையிடத்தே என்னோடும் சேர்ந்து கடல்விளையாட்டினை அயர்ந்தபின், என் முதுகுப்புறத்தே தாழ்ந்து இருண்டு விளங்கிய ஐம்பகுதியாகப் பகுத்து முடித்தற்குரிய கூந்தலை ஈரம்போகத் துவர்த்தினராக, எனக்கு அவர் அருளிச்செய்த கடற்றுறையும் உதுவே ]யாகும் என்றும்,

வளைந்த கழியிடத்தே உயர்ந்து தோன்றும் நெடிய தண்டையுடைய நெய்தலின், அழகாக மாறுபட்ட நெறிப்பையுடைய தழையினைக் கொய்து தொடுத்து எனக்கு அணி பெறுமாறு உடுப்பித்துவிட்டு, அவர் என்னை நீங்கித் தனியராகச் சென்ற கடற்கானலும் அதுவேயாகும் என்றும்,

அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளம் உருகினாயாய், மெல்ல மெல்லப் பசப்பினையும் அடையப்பெற்று, இவ்வேளை முற்றவும் பசலையால் மூடப் பெற்றனையே!

கருத்து : 'இனி நீ உய்யும் வழிதான் யாதோ?" என்பதாம்.

சொற்பொருள் : மாமலர் – சிறந்த மலர். 'புதுவது புணர்ந்த' – இயற்கைப் புணர்ச்சியிற் கலந்த, பொம்மல் – பொலிவு. திரையாடல் – திரையிடத்து மூழ்கியும் மேலெழுந்தும் கடல்விளையாட்டு அயர்தல். கொடுங்கழி – வளைந்த கழியிடம். பகைத்தழை – மாற்று நிறம் பெறத் தழைகளை இட்டுத் தொடுத்த தழையாடை.

விளக்கம் : 'புணர்ந்த பொழில் இது; அருளிய துறை உது; சென்ற கானல் அது' என நினைந்து நினைந்து தளர்தலால், மேனி பசந்தனள், எனக் கூறினாளாய்க், 'களவிடைச் சிறு பிரிவுக்கே இத்தன்மை நலியும் இவள்தான் இனியும் என்னாவளோ?' என இரங்கினான் தோழி. இதனைக் கேட்கும் தலைவன் தலைவியின் நலிவுக்குத் தன் பிரிவே காரணமாதலை அறிந்து வருந்துவானாய், அவளைப் பிரியாதேயிருந்து வாழ்கின்ற இல்லறவாழ்வினைத் தரும் வரைந்து கோடலிலே மனஞ்செலுத்துவான் என்று கொள்க. தலைவியர் தலைவருடன் கடலாட்டயர்வது. 'கடலுடன் ஆடியும், கானல் அல்கியும்' என வரும் குறுந்தொகை (294) யடிகளாலும் விளங்கும்.

97. பூவிற்பாள் கொடியவள்!

பாடியவர் : மாறன் வழுதி.
திணை : முல்லை.
துறை : பருவங்கண்டு ஆற்றாளாய தலைவி, தோழிக்கு உரைத்தது.

[(து–வி.) பிரிந்து சென்றானாகிய தலைவன், குறித்துச் சென்ற பருவத்தும் வாராதானாக அதனாற் பெரிதும் வருத்தி நலிந்த தலைவி, தனது துன்பத்தைத் தன் தோழிக்கு உணர்த்துகின்றாள்.]

அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகுஎறிந் தாங்குப்
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே!
அதனினும் கொடியள் தானே, 'மதனின் 5
துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு
பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோ?'என
வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனிமட மகளே!

தோழீ! என் பக்கலிருந்து பிரிந்துபோகாதாய்ப் புலம்பிக் கூவும் குயிலினது குரலைக் காட்டினும். தெளிவான நீர் நிரம்பியபடி வருகின்ற ஆறானது, அழுந்தப்பட்ட பெரிய புண்ணினது வாயிடத்துள்ள நிணம் காயப்பெறாததனாலே துன்புற்றிருக்கும் மார்பினிடத்தே. வேற்படையினையும் எறிந்து மேலும் புண்படுத்தினாற் போலாயிற்று. அதனைக் காட்டினும், 'அழகான இனிய பஞ்சுபோன்ற புறவிதழ்களை உடையவான பசிய குருக்கத்தி மலருடனே விரவிய பித்திகையது மலரையும் விலைக்குக் கொள்ளீரோ?' எனக் கூறியவளாக, வண்டினம் சூழ்ந்து வட்டமிட்டபடியிருக்கும் வட்டப் பூக்குடலையோடு தெருவிலே திரிபவளான, நீர்ப்பாங்கான குளிர்ந்த இடத்திலே உள்ளவரான உழவரது ஒப்பற்ற இளமகள் பெரிதும் கொடுமை செய்பவள் ஆகின்றாளே!

கருத்து : 'இனி யான் எவ்வாறு உய்வேனோ?' என்பதாம்.

சொற்பொருள் : அழுந்து படல் – ஆழமாகப் படுதல். வழும்பு – புண். எஃகு – வேற்படை. 'புலம்பி நுவலும் குயில் – தன் காதலனை நினைந்து புலம்பியபடி கூவியிருக்கும் குயில்'.

விளக்கம் : இளவேனித் காலம் காமத்தை மிகுவிப்பது. ஆதலினாலே, குயிலின் கூவுதலைக் கேட்டதும்' அழுந்துபடு விழுப்புண் பட்டாரைப் போலத் தலைவி துன்புற்றனள். இவ்வாறு தலைவியர் குயிலின் குரலினைக் கேட்டுத் துன்புறுதலைக் குறுந்தொகை 182ஆவது செய்யுளானும், நற்றிணை 118, 157 செய்யுட்களானும் அறிக. 'அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச், செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் இன்னிளவேனிலும் வாரார்; இன்னே வருதும் எனத் தெளித்தோரே' என வரும் அகநானூற்றுச் சீத்தலைச் சாத்தனாரின் சொற்களும் இதனை வலியுறுத்துவதாம்.

உள்ளுறை : "வண்டு சூழ் மலர் வட்டியளாகத் திரிகின்றவளைக் காண்பேன்; ஆயின், என்னை இன்புறுத்துதற்கான காதலரைத்தான் வரக்காணேன்" என்பதாம்.

98. கண்ணும் நெஞ்சும் கொடிது!

பாடியவர் : உக்கிரப் பெருவழுதி.
திணை : குறிஞ்சி.
துறை : இரவுக்குறி வந்து ஒழுகும் தலைவனைத் தோழி வரைவு கடாயது.

[(து–வி) இரவுக்குறியிலே தலைவியைக் கூடிப் பெறுகின்ற இன்ப நாட்டத்தினனாக வந்தொழுகும் தலைவனைத் தலைவியை மணந்து இல்லிடத்திருந்து கூடி வாழும் அறவாழ்வு முயற்சியிலே செலுத்த நினைந்த தோழி, இவ்வாறு கூறுகின்றாள்.]

எய்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறுகட் பன்றி
ஓங்குமலை வியன்புனம் படீஇயர், வீங்குபொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, 5
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல்லளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியனகர்த்
துஞ்சாக் காவலர் இகழ்பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே— 10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாராஎன் நார் இல் நெஞ்சே!

முட்பன்றியின் முள்ளைப்போலத் தோற்றும் பருத்தமயிரடர்ந்த பிடரையும், சிறுத்த கண்களையும் உடையதான பன்றியொன்று, வயலிடத்துச் சென்று உணவுதேடும் விருப்பமுற்று எழுந்தது. ஓங்கிய மலையிடத்துள்ள அகன்ற தினைப்புனத்தை அடைந்தது. அவ்விடத்தே இட்டிருந்த பெரிதான பொறியமைக்கப் பெற்ற புழைவழியிலே புகும் பொழுது, தீயபக்கத்தே பல்லி ஒலிக்கக் கேட்டது. அதனால், தனக்கு ஊறுவருமென அச்சமுற்று, மெல்லமெல்லப் பின்னாகவே சென்று. தன்னுடைய கல்முழையிடத்தேயுள்ள பள்ளியிடத்தே போய்த் தங்குவதாயிற்று. இத் தன்மையுடைய நாடனே! எந்தை காத்துவரும் காவலையுடைய அகன்ற மாளிகைக்கண் தூங்காது காத்திருக்கும் காவலாளர் அயர்ந்திருக்கும் பருவத்தை நோக்கினாயாய், இரவின்கண்ணே நீயும் வருகின்றாய்! அதனைக் காட்டினும், நாள்தோறும் வழியிடை நினக்கு ஏதமுண்டாகுமோ எனக் கலங்குவதனாலே இமை பொருந்துதலைப் பெறாத கண்களோடு, நின்பாற் சென்று என்பால் மீண்டும் வராதுபோயின அன்பற்ற எம் நெஞ்சத்தின் செயலும் மிகக் கொடிதாயிருப்பன காண்!

கருத்து : 'இரவிடை வாராயாய், இவளை வரைந்து கோடலிலேயே நின் மனத்தைச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : நூழை – நுழையும் சிறு வழி, பிறக்கே – பின்பக்கமாக: வந்த வழியே மீளவும். கடிப்பு – காவல். நார் – அன்பு.

விளக்கம் : 'செய்' என்றது, தினைக் கொல்லையை, விலங்கினம் கவராமல்படிக்குப் பொறியிட்டுக் காத்தல் வழக்கம் என்பதனை, 'வீங்குபொறி நூழை' என்பதால் அறியலாம், 'தனக்கு ஊறுநேருமென்றால், தான் உண்ணு தலையும் கைவிட்டுப் பாதுகாப்பான தன் அளையிடத்தே சென்று பதுங்கும் பன்றியையுடைய நாடனாயிருந்தும், காவலையுடைய கடிமனைப் புறத்தே இரவுப்போதில் துணிந்து வருகின்றனனே' என்பதாம். இதனால், இரவுக்குறி வருதலைக் கைவிடுதல் நன்றென்பதைக் குறிப்பாகக் கூறினாள்.

உள்ளுறை : உணவு வேட்டுச் சென்ற பன்றி, தீய பக்கத்தே பல்லியொலிக்கக் கேட்டதும் உணவை மறந்து அளைநோக்கிப் போயினதைப்போலத், தலைவனும் தலைவியை வேட்டுவந்தவன், துஞ்சாக் கோவலரது ஆரவாரத்தைக் சேட்டதும் அகன்றுபோதல் நேரும் என்பதாம். இரவுக்குறி இடையீடுபடுதல் நேருமென்பதை இப்படி உரைக்கின்றாள். காவலரால் ஏதம் நேரும்' எனத் தாம் அஞ்சியதும் இதனாற் கூறுகின்றனளாம்.

99. மடவ மலர்ந்தன!

பாடியவர் : இளந்திரையனார்.
திணை : முல்லை.
துறை : பருவங்கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.

[(து–வி) தலைவன் சொன்னபடி வாராது காலந்தாழ்த்த நினைவால், தலைவியது காமநோய் பெருகத் தொடங்குகின்றது. அதனைக் கண்ட தோழி அவளது துயரத்தை மாற்றுதற்கு முயலுகின்றாள்.]

"நீர்அற வறந்த நிரம்பா நீள் இடைத்
துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?' என்றிசின் மடந்தை–மதிஇன்று, 5
மறந்துகடல் முகந்த கமஞ்சூழ் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
'கார்' என்று அபர்ந்த உள்ளமொடு, தேர்வில
பிடவமும், கொன்றையும், கோடலும்
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே! 10

மடந்தையே! நெறியானது முற்றவும் நீரற்றுப்போனதாகவும், வறட்சியுற்றதாகவும், கடக்க இயலாததாகவும் காணப்படுவதாம். வெண்ணிற ஆடையினை விரித்துப் போட்டிருந்தால் ஒப்ப, அதனிடத்து வெயிலானது மிக்குப்படர்ந்து பரவியும் நிற்கும். காண்பாரை அச்சமடையச் செய்து நடுக்கத்தை உண்டாக்கும் அத்தகைய வெம்மை மிகுந்த சுரத்தினைத் தலைவரும் கடந்து சென்றுள்ளனர். அழகு பொருந்தும்படியாக நம்மைத் தெளிவித்து மீண்டும் வருவதாக அவர் குறித்துச் சென்ற பருவமும் இதுதானோ என்று நீயும் வினவுகின்றனை. முகத்தற்குரிய பருவத்தை மறந்ததால் அறிவுணர்ச்சி இல்லாது போயின மேகமானது, கடனீரைச் சென்று முகந்துகொண்டதாய் நிறைசூலுற்றுக் கார்மேகமாகவும் ஆயிற்று. மேலும், நீர்ச்சுமையினைத் தாங்கமாட்டாமையினாலே வளமான மழையாகப் பெய்தும் அதனைக் கழித்தது. அதனையே நீயும் நோக்கினை இதுவே 'கார்ப்பருவம்' என்று கருதித் தாமும் மறதிகொண்ட உள்ளத்தவாய்ப் பிடவும் கொன்றையும் காந்தளும் இன்ன பிறமலர்களும், தாமும் அறிவற்றன ஆதலினாலே, பலவாக மலர்களைத் தோற்றுவித்துள்ளன! அதனையும் காண்க!

கருத்து : 'தலைவர் குறித்துச் சென்ற கார்ப்பருவம் இஃதன்று, இஃது ஒரு வம்ப மாரிகாண்' என்பதாம்.

சொற்பொருள் : வறந்த – வறட்சியுற்ற. உருப்பு – வெப்பம். பனிக்கும் – நடுக்கஞ் செய்விக்கும். கமஞ்சூல் – நிறைசூல், மாமழை – கார்மேகம். அயர்தல் – மறத்தல். கோடல் – காந்தள். மடவ – அறிவற்றன.

விளக்கம் : வந்தது காரெனினும், தலைவியது வருத்த மிகுதியைப் போக்கக் கருதின தோழி, இவ்வாறு மறுத்து உரைக்கின்றாள். 'மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை; கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த வம்பமாரியைக் காரென மதித்தே' என வரும் குறுந்தொகைச் செய்யுளும் (66); 'பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே (குறுந். 94) என்பதும், இவ்வாறு வழங்கும் தோழி கூற்றைக் காட்டுவனவாகும். பருவம் அன்றென வற்புறுத்தலின், இதனை இருத்தல் நிமித்தமான முல்லைத்திணைச் செய்யுளாகக் கொண்டனர். கொன்றை கார்காலத்து மலரும் என்பதைக் 'கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்" எனவரும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தால் உணர்க. 'கொன்றை ஒள் வீ தா அய். செல்வர் பொன்பெய் பேழை மூய்திறந்தன்ன கார் எதிர் புறவு' (குறு. 233:2.4) என்பதும் இதனைக் காட்டும். 'தலைவர் வாய்மை தவறார்; குறித்தபடி வருவார்' எனக் கூறித் தேற்றுபவள், இவ்வாறு காரின் தோற்றத்தையே மறுத்தாள்போலக் கூறுகின்றாள் என்றும் கொள்க.

100. நகுவேன்!

பாடியவர் : பரணர்.
திணை : மருதம்.
துறை : பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப விறலிக்கு உடம்படச் சொல்லியது.

[(து–வி) தன்னைவிட்டுத் தலைவன் தலைவிபாற் சென்றதனால், அவனுறவு பெற்றிருந்த பரத்தையின் ஆத்திரம் மிகுதியாகின்றது. தன் தோழியாகிய விறலியிடம் கூறுவாள் போலத், தலைவியின் தோழியரும் கேட்குமாறு, இப்படித் தலைவனைப் பழித்து உரைக்கின்றாள்.]

உள்ளுதொறும் நகுவேன்—தோழி!—வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டுநீர் ஆம்பற் றண்துறை ஊரன்
தேன்கமழ் ஐம்பால் பற்றி, என்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல் 5
சினவிய முகத்துச் சினவாது சென்று,நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின்,
பல்ஆ நெடுநிறை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தை, பேர்இசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின் 10
மண்ஆர் கண்ணின் அதிரும்,
நன்ன ராளன் நடுங்கஞர் நிலையே!

தோழி! மாரிக்காலத்திலே நீரிடத்தே உலாவும் நெடிதான நகங்களை உடைய கொக்கினது கூர்மையான மூக்கையொத்தபடி விளங்குவது, ஆழ்ந்த நீரிடத்தே காணப்படும் ஆம்பற்பூக்களது தோற்றம். அத்தகைய தன்மையுடைய நீர்த்துறைகளைத் கொண்ட ஊரினைச் சார்ந்தவன் நம் தலைவன். ஒருநாள், அவன்தான் நெய்ம்மணம் கமழுகின்ற என்னுடைய கூந்தலைப்பற்றி என்னை இழுத்தான். என் கையிடத்தே உள்ளவான கோற்றொழில் அமைந்த வெளிய ஒளியுடைய வளைகளைக் சுழற்றிக் கொள்ளலையும் தொடங்கினான். அதனாற் சினங்கொண்ட நான், என் முகத்திடத்தே சினக்குறிப்பினைக் காட்டாது, 'இச் செயலை நின் மனைவியிடத்தே சென்று யான் உரைப்பேன்' என்றேன். அதனைக் கேட்டதும்—

பகைவரது செருமுனையிடத்து, ஊர்க்கண்ணே உள்ள பலவான நெடிதான ஆனிரைகளையும், தன் வில்லின் ஆற்றலினாலே வென்று தன் நாட்டிற்கு ஓட்டிவருபவன் இரவலர்க்குத் தேரீந்து மகிழும் வண்மையாளனாகிய மலையமான். அவனுடைய திருவோலக்கத்தின் முன்பாக, வேற்று நாட்டிலிருந்து வந்தாரான பேரிசைவன்மை கொண்ட கூத்தர்கள், தமக்கு நன்மையைப்பெரு விரும்பினராய் முழக்குகின்ற முழவின் மார்ச்சனை வைத்த கண்ணிடம் அதிர்வதனைப்போல அதிர்ச்சி அடைந்தான். நன்மையை விரும்புவோனாகிய அவன், அவ்வாறு நடுங்கிநின்ற அந்த நிலையினை நினைக்குந்தோறும், யானும் என்னுள்ளேயே நகை கொள்வேனடீ!

கருத்து : 'அவன் என்னை மறந்திருக்க மாட்டாதான்' என்பதாம்.

சொற்பொருள் : வள் உகிர் – நெடிய நகம். மாரிக்கொக்கு – மாரிக் காலத்தே காலத்தே காணப்படும் கொக்கு; ஆம்பலின் முகைகட்குக் கொக்கின் மூக்கு உவமையாயிற்று. கூரல் – கூரிய அலகு, குண்டு நீர் – ஆழமான நீர், வான் – வெண்மை. எல் வளை – ஒளி கொண்ட வளை. தேம் – நெய்; தேன்மணமும் ஆம். ஐம்பால் – கூந்தல். மலையன் – மலையமான் திருமுடிக்காரி. முந்தை – முன்னிடத்தாக. வயிரியர் – கூத்தர்.

விளக்கம் : 'குண்டு நீர்' ஆழமான நீர் நிலை என்பதனைத் 'தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை' என வரும் கபிலர் வாக்கால் அறியலாம் (புறம் 116 : 1.). இரவலர்க்குத் தேரீந்து சிறப்பிக்கும் வள்ளல்களுள் ஒருவனாதலின், 'தேர்வண் மலையன்' என்றனர். இவ்வாறே, 'தேர் வண் பாரி' (புறம் 118) எனப் பிறர் உரைப்பதனையும் ஒப்பிட்டுக் காண்க. 'ஐம்பால் பற்றி வவளவௌவிய பூசலை மனையோட்கு உரைப்பல்' என்றதும், அவன் நடுங்கியது, அவள் தன்னை அத்துணைக் கொடியவன் என்று கருதக்கூடுமே என்பதனால். இதனால் அவனுக்குத் தன் மனைவிபால் இருந்த மதிப்பும் அறியப்படும். இச்செய்தியைத் தோழியர்வழிக் கேட்கும் தலைவி, தலைவன்பால் ஊடினவளாக ஒதுக்குதலைச் செய்வாள் எனவும், அதன்பின் அவன் தன்பால் வருவான் எனவும், பரத்தை கனவு காண்கின்றாள்.

மேற்கோள் : 'இது மனையோட்கு உரைப்பல் என்றலின் நடுங்கினான் என்றது' என்னும் குறிப்புடன், கற்பியல் 151ஆம் சூத்திர உரையிடத்து மேற்கோளாகக் காட்டினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். 'ஒருபாற் கிளவி' என்னும் பொருளியல் சூத்திர உரைக்கண் ஊடல் குறித்து வந்ததற்கு இச்செய்யுளை இளம்பூரணவடிகள் காட்டுவர்.

பிற பாடங்கள் : கூரலகன்ன, எம்வயின் சினவிய முகத்தம், புலம்பிரி வயிரியர், நெடுநெறி.

101. தங்குதற்கு இனிது!

பாடியவர் : வெள்ளியந் தின்னனார்.
திணை : நெய்தல்
துறை : பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.

[(து–வி.) நங்கை நல்லான் ஒருத்தியைக் கண்டு காமுற்று நலிந்தானாகிய ஒரு தலைவன், அவளைத் தனக்குக் கூட்டுவித்து உதவுதற்கு வேண்டியவனாக, அவளுடைய தோழிபாற் சென்று தன் குறையைத் தெரிவித்து இரந்து நிற்கின்றான். அவன் அதற்கிசைய மறுக்கவே, அவன், அவள் கேட்குமாறு தன் நெஞ்சுக்குக் கூறுவான்போல இப்படிக் கூறிக்கொள்ளுகின்றான்.]

முற்றா மஞ்சட் பசும்புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்குதிறன் நோக்கிப்
புன்னைஅம் கொழுநிழல் முன்உய்த்துப் பரப்பும்
துறைநணி இருந்த பாக்கமும் உறைநனி 5
இனிதுமன்; அளிதோ தானே—துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதுஅமை நுசுப்பின்
மீன்எறி பரதவர் மடமகள்
மான்அமர் நோக்கம் காணா ஊங்கே!

அவள் தான் முற்றவும் வருத்தம் தீர்ந்ததாய் அகன்று பரந்திருக்கின்ற அல்குல் தடத்தினள்; மெல்லிதாக அமைந்திருக்கும் இடையினள்; மீன் வேட்டமாடி வாழ்வோரான பரதவரது மகள்; இளமைச் செவ்வியினையும் உடையவள்; மானின் நோக்கோடும் மாறுபாடுடையதான அமர்ந்த கண்களின் நோக்கில் யானும் படுவதற்கு முன்பாக, முற்றாத இளமஞ்சளது பசிய மேற்புறத்தைப்போல தோன்றும் சருச்சரையினைக் கொண்ட இறாமீனினது கூட்டங்கொண்ட தொகுதிகள் சூழ்ந்த கழியிடத்தே மிகுதியாகக் காணப்படும்; அவற்றை வேட்டம்கொண்டு, புன்னைக் கொழுநிழல் அழகிதாக விளங்கும் இடத்திற்கு எதிர்ப்படவிருக்கும் வெயிற்புறத்தே காயவிட்டிருப்பர். இறாமீனின் குவியல் காய்வதை ஆராய்ந்தபடியே நிழலிடத்தே காவலுமிருப்பர் இப்பாக்கத்துப் பெண்கள். இத் தன்மைகொண்ட துறைக்கு அண்மையிடத்ததான இப்பக்கமும் இனிதாயிருந்தது. அவளாற் பெற்ற காமநோயினாலே, அதுவும் இப்போது இரங்கத்தக்க தாயிற்றே! இனி எங்ஙனம் யானும் உய்வேனோ?

கருத்து : 'இயற்கையின் இன்பத்தையும் என்னுள்ளம் இதுகாலை வெறுப்பதாகின்றது' என்பதாகும்.

சொற்பொருள் : முற்றா மஞ்சள் – இள மஞ்சள்! பசு மஞ்சள் எனவும் உரைப்பர். பிணர் – சருச்சரை. ஐது, மெல்லிது; நுண்ணிதுமாம்.

விளக்கம் : இறாமீன் குவியலைக் காயவைத்திருக்கின்றதனாலே எழுகின்ற புலால்நாற்றம் புன்னைப் புதுமலரது நறுநாற்றத்தாலே அகன்று போகின்றாற்போல, என் காம நோய்மிகுதியினாலே வந்துற்ற நலிவும், அவளோடு கூடி மணம் பெறுவதனாலே நீங்கிப் போம்' என்கின்றான்.'தாம் நிழலிடத்திருந்தபடி, இறாலின் குவியல் வெயிலிற் கிடந்து காய்வதை ஆய்ந்தபடி, அவற்றது உயிர்நீக்கத்தைப் பற்றிச் சற்றேனும் கவலையுறாது வாழ்கின்ற கொடிய இயல்பினரான பரதவரது மகளிராதலின், தன் துயரத்தைப்பற்றியும் கவலைகொள்ளாராய்த் தனக்கு அருள்செய்யாராய்த் தன்னையும் வெறுத்துப் போக்குகின்றனர்' எனக் கூறினனுமாம். வளைந்து வளைந்து நெடுகக் கிடக்கும் கழியாதலின் 'சூழ்கழி' என்றனர். கழியில் இறாமீன் உளவென்பது. 'அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு' (குறு. 320:2) என்பதனாலும், தெண்கழி சேயிறாப் படூஉம் (ஐங்.196:2) என்பதனாலும் உறுதிப்படும். தலைவியைத் தலைவன் கண்டு காமுற்ற இடம் அதுவெனக் குறியிடத்தை உணர்த்தியதும் ஆம்.

இதனால், தலைவி அவனோடு பண்டே களவுறவினைப் பெற்றவள் என்றறியும் தோழியும், தலைவனது வேண்டுகோளுக்கு இசைவாள் என்பதாம்.

மேற்கோள் : 'வரைதற் பொருட்டுத் தலைவர் வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி, சிறைப்புறமாகக் கூறியது' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். அகத் 22 உரை. மேற்கோள்.) இங்ஙனமாயின், இச் செய்யுள் தோழி கூற்றாக அமையும். அதற்கேற்பப் பொருளுரைத்துக் கோடலும் பொருந்துவதாகும். தலைவியை விரைய வரைந்து வந்து மணந்துகொண்டு, ஊரிடத்து எழுந்துள்ள அவருரையினைப் போக்குக என அவள் அறிவுறுத்தியதாகக் கொள்க.

பிற பாடம் : 'மாணமர் நோக்கம்'

102. காவலாயினாள்!

பாடியவர் : செம்பியனார்.
திணை : குறிஞ்சி.
துறை : காமம் மிக்க கழிபடர் கிளவி.

[(து–வி.) வரை பொருட்குப் பிரிந்தானாகிய காதலனின் வரவு குறித்த எல்லையைக் கடந்து நீட்டித்தலால், காதலியின் காமநோய் வரைகடந்து பெருகுகிறது; நலிவும் பெரிதாகின்றது. அவள் கிள்ளையை நோக்கித் தன் குறையைச் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

கொடுங்குரற் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்சல் ஓம்பி, ஆர்பதம் கொண்டு,
நின்குறை முடித்த பின்றை, என்குறை
செய்தல் வேண்டுமால்; கைதொழுது இரப்பன்:
பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு 5
நின்கிளை மருங்கின் சேறி ஆயின்,
அம்மலை கிழவோற்கு உரைமதி—இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனக் காவல் ஆயினள் எனவே.

முற்றினமையாலே தலைவளைந்த தினைக்கதிர்களைக் கொய்து உண்ணுகின்ற சிவந்த வாயினையுடைய பசிய கிளியே! நின் களவினாலே நினக்கு இடருண்டாமோ என்னும் அச்சத்தை விட்டனையாய், நினக்கு வேண்டுமளவுக்குத் தினையை உண்டுபோவாயாக, பசியாகிய நின் குறையினை அங்ஙனமாக முடித்துக்கொண்ட பின்னர். என் குறையினைத் தீர்த்தற்கான ஒன்றனையும் நீ செய்தல் வேண்டும். அதற்காக நின்னைக் கைதொழுது வேண்டுகின்றேன். பலவான காய்களைக் கொண்ட பலாமரங்கள் மிகுந்த சாரலையுடைய அவரது நாட்டிடத்தேயுள்ள, நின் சுற்றத்தின் பக்கலிற் செல்வாய் ஆயின். 'இம் மலைக்கண்ணுள்ள கானக்குறவரது இளமகளாகிய நின் காதலி, மீட்டும் தினைப்புனம் காக்கும் நிலையினளாக ஆயினாள்' என்று அம் மலைக்கு உரியவராகிய அவரிடத்தே சென்று சொல்வாயாக!

கருத்து : 'எனக்காகக் கிளியே நீயும் அவரிடத்தே தூது செல்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : கொடுங் குரல் – வளைந்த தினைக் கதிர். குறைத்த – ஒடித்துக்கொண்ட, செவ்வாய் – சிவந்த அலகு. 'குறை' கிளிக்குப் பசியும். தலைவிக்குப் பிரிவுப் பெருநோயும். ஆர்பதம் கொள்ளல் – வேண்டுமளவுக்கு உண்டு பசிதீர்த்தல்.

விளக்கம் : 'ஏனல் காவல் ஆயினள்' எனச் சொல்க என்றதனால், பகற்குறி இடையீடுபட்டதனால் உண்டாய பெருநோய் என்பது விளங்கும். 'அஞ்சல் ஓம்பி, ஆர்பதம் கொண்டு, நின் குறை முடித்த பின்றை' என்றது, கிளிக்குத் தான் செய்யும் உபகாரத்தைக் கூறியதாம். 'கை தொழுது இரப்பல்' என்றது. நன்றிக் கடனாக அல்லாமல், தன் பொருட்டு இரக்கமுற்றேனும் சென்று உரைத்தல் வேண்டுமெனக் கூறுவதாம். 'நின் கிளை மருங்கின் சேறியாயின்' என்றது, 'செல்லுங் காலத்து அவரது கிளையாகிய தன் நினைவு எழுமாதலின், மறவாது சென்று உரைத்தல் கூடும்' என்பதற்காம். 'பல்கோட் பலவின் சாரல் அவர் நாட்டு' என்றது, அங்குச் சேறின் நினக்குப் பலாப்பழம் உண்ணக் கிடைத்தலும் வாய்ப்பதாகும் என ஆசை காட்டியதாம்.


இறைச்சி : 'பல்கோட் பலவின் சாரல்' என்றது, "கலந்தாரை மறந்து கைவிட்ட கொடியாரது நாட்டுச் சாரலாயிருந்தும், அதுதான் வளமுடைத்தாகித் தோற்றுவது எதனாலோ?" என்ற வியப்பினை உள்பொருளாக்கிக் கூறியதாம்.

மேற்கோள் : 'பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது தோழிக்குக் கூறியது' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். களவு.சூ. 111 உரை மேற்கோள்). இங்ஙனமாயின், கிளியை நோக்கி உரைப்பாள் போலத் தோழிக்குத் தன் துயரத்தைக் கூறி, அவளது உதவியை விரும்பித் தலைவி கூறியதாகக் கொள்க.

வேறு பாடம் : சொல்லல் வேண்டுமால்!

103. தெரிந்து கூறுக!

பாடியவர் : மருதனிளநாகனார்.
திணை : பாலை.
துறை : பொருள்வயிற் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக் கழறியது.

[(து–வி.) பொருளீட்டுதலை மேற்கொண்டானாகத் தலைவியைப் பிரிந்து செல்பவனாகிய தலைவன், இடைவழியில் தலைவியை மறக்கவியலாது கவலும் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது]

ஒன்று தெரிந்து உரைத்திரின்—நெஞ்சே! புன்காற்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅம் செருக்கிய கடுஞ்சின முன்பின்
களிறுநின்று இறந்த நீர்அல் ஈரத்துப்
பால்அழி தோல்முலை அகடுநிலம் சேர்த்திப் 5
பசிஅட முடங்கிய பைங்கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவுநினைந்து இரங்கும்
விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே;
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் 10
மீள்வாம் எனினும் நீதுணிந் ததுவே.

நெஞ்சமே! புல்லிய கம்புகனிற் சிற்றிலைகளைக் கொண்டிருக்கும் வேம்பினது பெருங்கிளைகளை முறித்து, மதவெறியினாலே செருக்குற்றலைந்த, கடுங்கோபத்தையும் வலியையும் கொண்ட களிற்றியானையானது நின்று நீங்கிப்போயின இடத்தே தோன்றும், நீரற்றதான ஈரங்கொண்ட இடத்திலே, பாற்சுரப்புக் கழிந்துபோய்த் தோற்பட்ட முலையையுடைய தன் அடிவயிற்றை ஈரநிலத்தொடும் சேரவைத்துக் கொண்டதாய்ப் பசிநோய் வருத்துதலினாலே சோர்வுற்று முடங்கிக்கிடந்தது பசுங்கண்களையுடைய செந்நாய் ஒன்று. தப்பாத வேட்டையினைக் குறித்ததாகக் காட்டிடத்தே அதனை நீங்கிச்சென்ற அதன் கணவன், தன்பாற்கொண்ட அன்பிலே பொய்த்தலில்லாத மரபினையுடையதான தன் பிணவினை நினைந்ததாய்ப் பெரிதும் இரக்கங்கொள்ளும். இத் தன்மையுடைய புதுவழியான வெங்காட்டிடத்தே நின்று யாமும் அவளை நினைந்து வருந்துகின்றேம். பொருள் தேடுதலான முயற்சியினைக் குறித்து மேற்கொண்டு செல்வோம் என்றாலும், அல்லாதே அதனைக் கைவிட்டு இல்லிற்கே மீள்வோம். என்றாலும், நீ முடிவுசெய்தது எதுவோ அந்த ஒன்றனையே ஆராய்ந்து எனக்கும் கூறுவாயாக.

கருத்து : 'அவளை இப்போது நினைவூட்டிக் கலக்கமுறச் செய்யும் நீதான், எதற்காகப் பொருளார்வத்தைத் தூண்டினையாய், இக் காட்டுவழியிடை என்னைச் சேர்த்தனை?' என்பதாம்.

சொற்பொருள் : 'பெரிய' – பெருங்கிளை; பெருமரமும் ஆம். முன்பு – வலிமை 'நீரல் ஈரம்' என்றது. களிறு தான் நின்றவிடத்துச் சிறுநீர் கழித்ததனாலே உண்டாகிய ஈரமாகும். மாயா வேட்டம் – தப்பாத வேட்டை. பிணவு – செந்நாயின் பெட்டை, 'விருந்தின் காடு' – பழகிய வழியில்லாதாய்க் கிடக்கும் காடு.

விளக்கம் : 'பாலவி தோல்முலைப் பிணவு' என்றது. கோடையின் வெம்மை மிகுதியை விளக்குதற் பொருட்டு. அதன் கணவன் அதனை நினைந்து இரங்குதலைக் காணும், தன்பாலும் தலைவிபாற் சென்று சேர்தற்கான நினைவு எழுதலை இவ்வாறு கூறுகின்றான். இனி 'வேட்டம் போகிய கணவனை நினைந்தபடி பெண்நாய் இரங்கும்' என்று கொண்டு, 'அவ்வாறே தன்னைப் பிரிந்த தலைவியும் வருந்தி நலனழிந்திருப்பாள்' என்பதுமாம். பைங்கட் செந்நாயினத்தின் பசியட முடங்கிய பொய்யாமரபின் பிணவானது, தன் துயரத்தை நினையாதாய்த் தன் கணவன் வேட்டம்போகிய விடத்து, வெம்மையால் துன்புறும் துயரத்தை நினைந்து இரங்குமாறுபோலத் தலைவியும் பிரிவால் நலிந்தழிந்த தன் நிலையைக் கருதாளாய்த், தலைவனது வழியிடை உண்டாகும் நலிவை நினைந்தே கலங்கியிருப்பாள் என்று கூறுவதாகவும் கொள்க.

உள்ளுறை : 'செந்நாயின் ஆணும் தான் பிரிந்துவந்த பிணவினை நினைந்து இரங்கும் வெங்காடு' என்றது. அதற்குள்ள காதற் பாசமும் இல்லாதே தான் தலைவியை நீத்துப் பிரிந்துவந்த கொடுஞ்செயலை நினைந்து கூறியதாம்.

பிறபாடம் : சிறியிலை வேலம்: வேலம் – கருவேலம் : முள்மர வகையுள் ஒன்று

104. நினைவோர் உளரோ!

பாடியவர் : பேரிசாத்தனார்.
திணை  : குறிஞ்சி
துறை : தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.

[(து–வி.) இரவுப்போதிலே, கொடிய காட்டு வழியூடு தலைவன் வருந்துகின்றதனை நினைந்த தலைவி, அவன் வரும் வழியது ஏதத்தை நினைந்து கவலையுற்று நலிகின்றாள். அந்த வழியை நினைத்தபடி அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது]

பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை,
தேம்கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்
குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது 5
பைந்தாட் செந்தினைப் படுகிளி ஒப்பும்
ஆர்கலி வெற்பன் மார்புநயந்து உறையும்
யானே அன்றியும், உளர்கொல் — பானாள்,
பாம்புடை விடர ஓங்குமலை மிளிர,
உருமுச் சிவந்து எறியும் பொழுதொடு, பெருநீர் 10
போக்குஅற விலங்கிய சாரல்,
நோக்குஅநஞ் சிறுநெறி நினையு மோரே?

தேன் மணம் கமழ்த்து கொண்டிருப்பதான புதுமலர்களையுடைய காட்டினிடத்தே, அழகான கோடுகளையும் அகன்ற வாயினையும் கொண்ட புலியேறானது. தன்னை எதிர்ப்பட்ட களிற்றோடும் போரிடுதலைத் தொடங்கும். அவற்றால் தமக்குத் துன்பம் விளையுமென நினைத்து அஞ்சாதாரான குறவரது இளஞ்சிறார்கள், அவ்விடத்தேயுள்ள பெரிதான பாறைக்கல்லின் உச்சிமேலாக ஏறி நின்ற படி, மனச்செருக்கோடு தம் கையகத்துத் தொண்டகப் பறையினை அடித்து முழக்கியபடியே, அந்தப் போரைக் கண்டு இன்புற்றிருப்பர். அப் பறைமுழக்கின் ஒலியானது, அவ் விடத்துக்கு அயலேயுள்ள பசுந்தாட்களையுடைய தினைப் பயிரது சிவந்த கதிர்களிடத்தே வந்து படியுங் கிளிகளை அச்சுறுத்தி ஓட்டுதலைச் செய்யும், நிரம்பிய ஆரவாரத்தைக் கொண்ட அத்தன்மை கொண்ட வெற்புக்கு உரியவன் தலைவன். அவனுடைய மார்பினைத் தழுவிப்பெறுகின்ற அந்த இன்பத்தை விரும்பியவளாக, இவ்விடத்தே வந்து தங்கியிருப்பவள் யான்.

பாம்புகளைக் கொண்ட மலைப்பிளப்புகளையும். உயர்ந்த கொடுமுடிகளையும் கொண்ட மலையிடமெல்லாம், இரவின் நடுமயாமத்தும் ஒளிகொள்ளும்படியாகச் சினத்து முழக்கும் இடியோடுங்கூடிய மின்னலும் இதுகாலை எழுகின்றது. இத்தகைய மழைக்காலப் பொழுதோடு பெய்யும் மழையாற் பெருகிய பெருவெள்ளம் கடந்து போகாமற்படிக்குத் குறுக்கிட்டுக் கிடப்பது மலைச்சாரல். இத்தகைய சாரலின் கண்ணே நோக்குதற்கும் அரிதான உச்சியிடத்தே அமைந்த சிறிதான நெறியினை நினைந்திருப்பவர் என்னையன்றியும், பிறரும் எவரேனும் இவ்வுலகில் உளராமோ?

கருத்து : 'வரும் வழியது கொடுமையை நினைந்து என் மனம் பெரிதும் கலங்குகின்றது; இதுதீர அவர் என்னை மணந்து கொள்ளாரோ?' என்பதாம்.

சொற்பொருள் : பேழ்வாய் – அகன்ற வாய். துறுகல் – வட்டக்கல்லாகத் தோன்றும் பாறை. சிலம்பு – மலைச்சாரல். புகற்சி – மனச் செருக்கு. தொண்டகம் – பறை வகையுள் ஒன்று: குறிஞ்சிக்கு உரியது. பெருநீர் – பெரு வெள்ளம்; மழையினாலே ஏற்பட்டது. விலங்கல் – குறுக்கிட்டுக் கிடத்தல்.

விளக்கம் : புலியும் களிறும் எதிர்ப்பட்ட ஞான்று தம்முட்போரிடும் இயல்பின. 'வரிவயம் பொருத வயக்களிறு போல' (புறம் 100:7) என்பது, இதனை வலியுறுத்தும் குறச்சிறாரின் அஞ்சாமைச் செயலைக் கூறினாள், தலைவன் ஆற்றது ஏதத்திற்கு அஞ்சானாய் வருகின்ற திண்மை கொண்டவன் என்பதனை நினைந்து. 'தொண்டக முழக்கினைக் கேட்டுத் தினையிற்படியும் கிளிகள் அஞ்சி அகலும்' என்றாள், வழியேகத்தினை நினைந்து களவின்பத்தை நாடிவந்து இரவுக் குறியிடத்தே இருக்கின்ற தான் அஞ்சும் அச்சத்தினை நினைந்து.

இங்ஙனம் தோழிபாற் சொல்லும் தலைவியது பேச்சைக் கேட்கும் தலைவன், இரவுக்குறியினை நாடிவருதலைக் கைவிட்டானாகத் தலைவியை மணந்து கொள்ளும் இல்லற வாழ்வினை விரைய மேற்கொள்ளுவதற்கான முயற்சிகளைச் செய்யத் தொடங்குவான் என்பது இதன் பயனாகும்

உள்ளுறை : புலியும் களிறும் பொருதக்கண்டு இன்புறும் குறச்சிறாரைப் போலத் தானும் தலைவனும் கொண்ட உறவை அறியாத பெற்றோர் வேற்றான் ஒருவனுக்குத் தன்னைத் தருதற்குக் கூறியதனால், உளப்போர் பெற்று நலியும் தன்னைக் குறித்தும் சுற்றத்தார் மணவிழா வந்ததென்று ஆரவாரிப்பர் என்பதாம். அந்த ஆரவாரமானது தன் உயிரை உடலினின்றும் அகன்றுபோகச் செய்யும் கொடுமையது என்பதுமாம்.

105. நெடுஞ்சேண் பட்டனை!

பாடியவர் : முடத்திருமாறன்.
திணை : பாலை,
துறை : இடைச்சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.

[(து–வி.) பொருள் தேடிவருதலை விரும்பினனாகத் தலைவியைப் பிரிந்து வேற்றுநாட்டினை நோக்கி வழிநடந்து கொண்டிருக்கின்றான் தலைவன். வழியிடையிலே, அவன், மனத்தெழுந்த தலைவியது நினைவினாலே வாட்டமுற்றுத் தன் நெஞ்சுக்குக் கூறிக்கொள்வதாக அமைந்த செய்யுள் இது.)

முளிகொடி வலந்த முள்ளரை இலவத்து
ஒளிர்சினை அதிர வீசி விளிபட
வெவ்வளி வழங்கும் வேய்பயில் மருங்கில்
கடுநடை யானை கன்றொடு வருந்த
நெடுநீர் அற்ற நிழலில் ஆங்கண் 5
அருஞ்சுரக் கவலைய என்னாய்; நெடுஞ்சேண்
பட்டனை, வாழிய—நெஞ்சே!—குட்டுவன்
குடவரைச் சுனைய மாஇதழ்க் குவளை
வண்டுபடு வான்போது கமழும்
அஞ்சில் ஓதி அரும்படர் உறவே. 10

நெஞ்சமே! காய்ந்த கொடிகள் சுற்றிக்கொண்டிருப்பதான, முட்கள் விளங்கும் கிளைகள் அதிர்ச்சி கொள்ளுமாறு வீசியதாகவும். அக்கிளைகளுட் சில முறிந்து வீழுமாறு மோதியதாகவும் வெங்காற்று வழங்கிக் கொண்டிருக்கும் மூங்கில்கள் அடர்த்திருக்கும் வழிப்பக்கத்திலே—

கடிய நடையுடைய யானை தன் கன்றோடும் சேரநின்று வருந்தியிருக்க, நெடுகிலும் நீரற்றும் நிழலற்றும் கிடக்கின்றதான அவ்விடத்திலே, கடத்தற்கரிதான சுரநெறிதான் கவர்த்த பல வழிகளை உடைத்தாயிருக்கும். அதனையும் நீ கருதமாட்டாய்.

குட்டுவனது மேற்குமலையிடத்துச் கனைக்கண்ணுள்ள கரிய இதழ்களையுடைய குவளைமலர்களது வண்டுமொய்க்கும் பெருமலரைப்போல நறுநாற்றம் கமழும், அழகிய சிலவாக முடித்த கூந்தலையுடைய காதலியானவள் தீர்த்தற்கரிதான துன்பத்தைப் பொருந்துமாறு, நெடுத்தொலைவுக்குப் பிரிந்து செல்வதற்கும் துணிந்தனை. அத்தகைய நீதான் நெடிது வாழ்வாயாக!

கருத்து : 'பொருளாசை காட்டி அவளைப் பிரியச்செய்த நீதான். இடைவழியிலே அவளாசையை எழுப்பி என்னை நலிவிப்பதேனோ! அதனைவிட்டு என்னைப் பொருளின் பாலேயே செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : முளி – காய்ந்த. வலந்த – சுற்றிப் படர்ந்தேறிய. ஒளிர்சினை – விளங்கும் கிளைகள்; விளக்கம் விளங்கும் மலர்களால் வருவது. கவலை – கவர்த்த நெறி. குட்டுவன் – சேர நாட்டுள் ஒரு பகுதிக்கு உரியவன். குடவரை – மேற்கு மலை.

விளக்கம் : 'அவள் அரும்படர் உறுமாறு நெடுஞ்சேண் பட்டனை; இந்நாள் எனக்கேனும் உறுதுணையாகாதே அவள்பாற் செல்லலுற்றாயாய் என்னையும் கைவிட்டனை; இத்தகைய நீதான் வாழ்க' என்கின்றாள். 'கவலைய என்னாய்' என்றது, 'கவர்த்த வழிகளுள் எதனைப்பற்றிச் செல்வதென்பதைக் கருதாயாய்' என்றதாம். 'யானை கன்றொடு வருந்த' வழங்கும் கோடையைக் காண்பவனின் உள்ளத்தே, புதல்வனோடு தன்னை நினைந்தபடி துயருற்றுச் சாம்பி இல்லிடத்திருப்பவளான தலைவியின் நினைவு தோன்றுகின்றது. இலவம் கோடையிற் செந்நிறப் பூக்களுடன் தோன்றும் அழகினையும் செய்யுள் காட்டுகின்றது.

இறைச்சிகள்: (1) அழகனைத்தும் வீழத் தலைவி பிரிவின் தாக்குதலால் நலிவுற்றிருக்கும் நிலையை நினைப்பானாய், இலவத்தின் ஒளிர்சினை வீழ்ந்துபடக் காற்று வீசும் கொடுமையைக் கூறுகின்றனன்.

(2) புதல்வனைப் பெற்றிருக்கும் தலைவியைப் பேணாது பிரிந்துவந்த கொடுமையைக் கருதினனாய், அவளை நினைந்து, யானை கன்றொடு நின்று வருந்தும் வருத்தத்தைக் கூறுகின்றான்.

106. அறிதலும் அறிதியோ?

பாடியவர் : தொண்டைமான் இளந்திரையன்.
திணை : நெய்தல்.
துறை : பருவரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்புணர்ந்து தலைவன், அதனைக்கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச் சொல்லியது.

[(து–வி.) சென்ற வினையினை முடித்ததன் பின்னர்த்தன் நாட்டினை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கின்றான் தலைவன் ஒருவன். அவன் மனத்தே, அவளோடு உறவு கொண்ட காலத்துத் தலைவிபால் தோன்றிய குறிப்புகளுள் ஒன்று எழுகின்றது. அதனை உரைத்தானாகத் தேரினை விரையச் செலுத்துமாறு பாகனிடம் கூறுகின்றான்.]

அறிதலும் அறிதியோ—பாக!—பெருங்கடல்
எறிதிரை கொழீஇய எக்கர் வெறிகொள
ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது
அசைஇ, உளஒழிந்த வசைதீர் குறுமகட்கு
உயவினென் சென்று யான், உள்நோய் உரைப்ப, 5
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறுமலர்
ஞாழல் அம்சினைத் தாழ்இணர் கொழுதி
முறிதிமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவுஅஞர் உறுவி ஆய்மட நிலையே?

பாகனே! பெருங் கடலிடத்தினின்றும் மோதுகின்ற அலைகள் குவித்துச் சேர்த்த மணல்மேட்டிடம் மிகுமணம் கொள்ளுமாறு விளையாடியிருந்த புள்ளிகளைக் கொண்ட நண்டானது ஓடுதலைப் பின்தொடர்ந்து ஓடிப்பற்றி விளையாடுதற்கு மாட்டாதாளாய்ச் சோர்வுற்று நின்றனள். அவ் விளையாட்டையும் உள்ளத்திருந்து அகற்றி நின்றாளான, குற்றமற்ற அவ்விளையோளுக்கு வருத்தமுற்றேனாய் யானும் அவள்பாற் சென்றேன். சென்ற யான், என் உள்ளத்து எழுந்து வருத்தும் காமநோயைப் பற்றிக் கூறினேன். கூறவும் அதற்கு எதிருரை சொல்வதற்கும் அவள் ஆற்றாதாளாயினள். நல்மலர்களையுடைய ஞாழலது அழகான சினைக்கண்ணே தாழ்ந்து தொங்கிய ஒரு பூங்கொத்தினைக் கோதலுமாயினள். இளந்தளிர்களோடு அம் மலரிதழ்களையும், உதிரச் செய்த கையினளாக, அறிவு மயக்கத்தை அடைந்தவளாக, அவள் அருகே நின்றாள். ஆராய்ந்து இன்புறுதற்கு உரித்தான அத்தகைய மடப்பஞ் செறிந்த நிலையினைப், பாகனே! அனுபவித்து அறிதலான அறிவுப்பாட்டினை நீயும்கண்டு அறிவாயோ?

கருத்து : 'அவள்பால் விரைந்து சென்றடைதற்கு உதவியாகத் தேரினை இன்னும் விரையச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : கொழீஇய – கொழிக்கப்பட்ட; கொண்டு குவிக்கப்பெற்ற. வெறிகொள்ளல் – மிகுதியான மணத்தினைக் கொள்ளல்; எக்கர் – மணல் மேடு. ஆடு – விளையாடு. அசைஇ – சோர்வுற்றுக் கலங்கி. வசை – குற்றம்; பழியும் ஆம். உயவு – வருத்தம். முறி – தளிர் அஞர்உறுதல் – மயக்கம் அடைதல்.

விளக்கம் : 'எக்கர் வெறி கொண்டது', அவள் உதிர்த்த ஞாழற் பூக்களினின்றும் எழுந்து பரவிய நறுமணத்தால் என்று கொள்க. 'ஆடுவரி அலவன் ஓடுவயின் ஆற்றாது அசைஇ' என்றது, நண்டலைத்து விளையாடும் நெய்தல்நில மகளிரது சிறுபருவ விளையாட்டினை. 'பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்று" (குறு : 303] எனவும், 'ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட ஆய்ந்த அலவன் (குறு : 316: 5.6) எனவும், 'திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி' (அகம்: 208.3) எனவும் வருவன பிறவற்றாலும் இவ் விளையாட்டினது இயற்கை விளங்கும். 'வசைதீர் குறுமகள்' என்றது, குறைப்படாத கற்புத் தன்மையினள் என்பதனாலாம். அவளை விரையச் சென்றடைதலை விரும்பினமாதலின், தேரினை விரையச் செலுத்துக என்கின்றனன். இனி, நண்டலைத்து விளையாடும் பருவத்தேயே அவளைக் காதலித்த தன்னுடைய காதற்செறிவினைக் கூறினனுமாம்.

107. நினைக்குந்தோறும் நகுவேன்

பாடியவர் : .........
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.

[(து.வி.) தலைவனது பிரிவினுக்கு ஆற்றாதாளாய் நலிவுற்றிருந்த தலைவியைத் தேற்றும் பொருட்டாகத் தோழி சில கூறவும், அவளுக்குந் தலைவி தனது நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது]

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்ளுகிர்ப்
பிடிபிளந் திட்ட நார்இல் வெண்கோட்டுக்

கொடிறுபோல் காய வால்இணர்ப் பாலை
செல்வளி தூக்கலின் இலைநீர் நெற்றம்
கல்லிழி அருவியின் ஒல்லென் ஒலிக்கும் 5
புல்லிலை ஓமைய புலிவழங்கு அத்தம்
சென்ற காதலர் வழிவழிப் பட்ட
நெஞ்சே நல்வினைப் பாற்றே; ஈண்டு ஒழிந்து
ஆனாக் கௌவை மலைந்த
யானே தோழி! நொய்ப்பா லேனே. 10

தோழீ! பெருத்த நகங்களைக் கொண்ட பிடியானது பிளந்து போட்ட நாரற்ற வெள்ளிய கிளைகள் பற்றுக் குறடுகளைப் போலக் காய்ந்து கிடக்க, வெள்ளிய பூங்கொத்துக்களையுடைய வெள்ளிலைப் பாலை மரமானது. செல்லுந்தொழிலதான காற்று அசைத்தலினாலே தன்னிடத்துள்ள இலைகளற்றுப்போய்க் காணப்படும். தன் நெற்றுக்களை, மலையிடத்திருந்து வீழ்கின்ற அருவியைப்போல ஒல்லென்ற ஒவியுடன் ஒலித்துக் கொண்டுமிருக்கும், புல்லிய இலைகளைக் கொண்ட ஓமை மரங்களைக் கொண்டதும், புலியினது நடமாட்டத்தைக் கொண்டதுமான அத்தகைய காட்டு வழியிலே சென்றவரான நமது காதலரது வழியிடத்தேயே, தானும் தொடர்ந்து போயினதான நம் நெஞ்சமே நல்வினைப் பேற்றைப் பெற்றதாகும். இவ்விடத்தேயாக அவரை நீங்கிக் கிடந்து, அடங்காத பழிசொற்களால் சூழப்பெற்ற யான் மட்டுமே நோய்ப்பட்டுத் தீவினைப் பாலினள் ஆயினேன். இதனை நினைக்குந்தோறும் யான் நகுவேன்!

கருத்து : 'எனதான நெஞ்சமும் என்னைக் கைவிட்டு அவரோடு சென்றது; இனி யான் எங்ஙனம் உய்வேன்?' என்றதாம்.

சொற்பொருள் : வள்உகிர் – பெரிதான நகம். கொடிறு –குறடு. செல் வளி – செல்லும் தொழிலதான காற்று. செற்றம் - நெற்று, கௌவை – பழிச்சொல்; 'இவள் நலியத் தீவினையாற்றிளான் கொடியனே காண்' என்றெழும் சொல். 'நோய்' என்றது பிரிவினாலே வந்தடைந்த காமநோயினை.

விளக்கம் : தன்னையும் தன் நெஞ்சையும் வேறுபடுத்தி, 'நெஞ்சம் நல்வினையாற்றும்' எனவும், 'தான் தீ வினையாட்டி' எனவும் கூறும் காதற்பாங்கு சிறப்புடையதாகும். வெட்பாலை, யா ஆகிய மரத்தின் பட்டைகளை உரித்துத் தின்பது யானையது இயல்பு இதனைப், 'பிடி பசிகளை இய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்' (குறு-37 2-3) எனவரும் சான்றோர் கூற்றாலும் அறியலாம். வாகை நெற்றுப் போன்றே வெட்பாலை தெற்றும் ஒலிக்கும் என்பதனையும் இதனால் உணரலாம். பாலை நெற்றினது ஒலியானது அருவியின் இன்னொவி போலத் தொலைவிலுள்ளார்க்கு மயக்கந் தருவதுபோல், தன்னுடைய நெஞ்சத்துயரையும் தோழி சரிவர உணராளாய் மயங்கிக் கூறுபவளாயினள் என்பதுமாம்.

தன் நெஞ்சமே தனக்குத் துணையாக இராதபோது. தோழியோ தனக்குத் துணையாகித் தன் வருத்தத்தை மாற்றக்கூடியவுள் எனத் தோழியை நொந்துகொண்டதுமாம். 'நல்வினை செய்தார் நலமுறுவர்' என்னும் விதியினைக் காட்டுவாளாகித் தன் நெஞ்சினையும் தன்னையும் வேறுபடுத்திக்கூறி வருந்துகின்றாள் தலைவி.

உள்ளுறை : பிடி பாலையை உரித்து உண்டு கைவிட்டுப் போனதுபோலத் தலைவனும் தலைவியது நலத்தையுண்டு அவள் வாடி மெலிந்தழியுமாறு கைவிட்டுப் போயினன் என்பதாம். வளி தாக்க ஒலிசெய்யும் நெற்றத்தின் தன்மை போலக் காமநோயால் அலைக்கப்பட்டுப் புலம்பும் தன் புலம்பலும் பிறரால் இன்னொலியாகக் கருதப்படும் மயக்கத்தைத் தருவதாயிற்று என்பதுமாம். இதனைக் கற்புக்காலத்துப் பிரிவாகவும் கொள்வர்; கொள்ளல் சிறந்த பொருள்நலம் தருவதுமாகும்.

108. யான்தான் நோவேன்!

பாடியவர் : .........
திணை: குறிஞ்சி.
துறை : வரையாது நெடுங்காலம் தந்து ஒழுகவாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

[(து–வி) களவின்பத்தை மட்டுமே விரும்பியவனாகக் காதலன் நெடுங்காலம் வந்து போகத், தலைவியை மண வாழ்விலே ஈடுபடச் செய்து மனையறத்திலே ஒன்றுபடுத்தக் கருதிய தோழி, அதனை அவனுக்கு அறிவுறுத்தக் கருதிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

மலையயற் கலித்த மையார் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம்குடிக் குறவர்

கணையர், கிணையர், கைபுனை கவணர்,
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட! 5
பழகிய பகையும் பிரிவுஇன் னாதே;
முகையேர் இலங்குஎயிற்று இன்னகை மடந்தை
சுடர்புரை திருநுதல் பசப்பத்
தொடர்புயாங்கு விட்டனை? நோகோ யானே!

அழகிய குடியிருப்புக்களிலே வாழ்வோரான குறவர்கள் மலைக்கு அயலிடத்தே தழைத்திருந்த கருதிறங்கொண்ட தினைப்புனத்திடத்தே, துணையினின்றும் பிரிந்த கொடிய யானையானது வந்தடையக் கண்டனர். கணைகளை உடையவரும், கிணைப்பறைகளை உடையவரும், கையிடத்துச் சேர்ந்த கவணிணை உடையவரும், பிறரையும் வருமாறு அழைக்கும் கூப்பீட்டினரும் ஆகக் குடிப்புறத்தே திரண்டு ஆரவாரித்தலைச் செய்யலாயினர். அத்தகைய நாட்டினனாகிய தலைவனே! தொடர்ந்து பழகிய பகையானாலும் அவரைப் பிரிவதென்பது துன்பந்தருவதாய் இருக்கும். இருப்பவும், முல்லை முகைகளைப்போன்று விளங்கு அழகிய பற்களைக் கொண்ட இனிதான மென்னகையினளான தலைவியது. ஒளிகொண்ட அழகிய நெற்றியானது பசலைகொள்ளுமாறு இவளுடைய தொடர்பினை நீதான் எவ்விடத்துக் கைவிட்டனையோ? அதனை எண்ணி நோகின்றாளும் யானே யாவேன்.

கருத்து : 'களவுக் காலத்து இடையீடுபட்டு வருகின்ற, வருகின்ற சிறுபிரிவுக்கே இவள் கலங்கிப் பசந்தாள்; இவளைப் பிரியாதிருக்கும் மணவுறவினைப் பூண்டு இவனைக் காப்பாற்றுக' என்பதாம்.

சொற்பொருள் : களித்தல் – கிளைத்துப் பெருகுதல். மை - எருமை. கடுங்கண்மை – கொடுமை. கணை – அம்பு. கிணை – கிணைப்பறை, விளி – கூப்பீட்டொலி, புறக்குடி – ஊர்ப்புறம். சுடர் – ஒளியெறியும் தன்மை, திரு நுதல் – அழகிய நெற்றி.

விளக்கம் : 'மலையயற் கலித்த மையார் ஏனல்' என்றது தலைவி பகற்குறி பெற்றுக் கூடியதான குறியிடத்தை நினைவுபடுத்திக் கூறியதாம். துணை யானையின் துணையாகிய பிடி; நிறையினின்றும் தனித்து வழிதப்பிய யானையாகக் கொள்ளின், 'துணை' பிற யானைகளையும் குறிப்பதாகலாம்.

யானை புனத்தை அடையக் காணும் குறவர் அதனை அழிக்கும் கருத்துடன் புறப்படுதலைக் கூறினாள், அத்தகைய நாடனாயிருந்தும் தலைவியின் நலனைத்தானே அழித்தற்குக் காரணமாயினதுடன். அதனை நீக்குதற்குத் துணியாமையும் எடுத்துக் காட்டுதற்கு. 'முகை' என்றது, முல்லைமுகையினை. 'சுடர்புரை திருநுதல்' பிறையொத்த அழகிய நுதலும் ஆம். 'யாங்கு விட்டனை? என்றது, விடாதேயிருக்கும் காலத்தும் நெற்றியிற் பசலை படர்ந்ததெனின் விடின் என்னாகுமோ என்று கவலையுற்றதைக் காட்டியதாம். 'பழகிய பகையும் பிரிவு இன்னாதே' என்பது, அங்ஙனமாயின் இயல்பாகப் பழகிய நட்பிடத்துப் பிரிவு எத்துணைக் கொடியதாகும் என்று கூறுவாளாகப் பழமொழியை நயம்படக் குறிப்பிடுகின்றனள்.

உள்ளுறை : துணையின் தீர்ந்த கருங்கண் யானையானது ஏனலை அணைந்தாற்போலத், தலைவனும் தன் சுற்றத்தினின்றும் நீங்கினனாகி வந்து தலைவியைத் தழுவினான் என்க. யானையை அழிக்கக் கருதிக் குறக்குடியினர் புறப்படுமாறு போலத், தலைவியின் நலனைக் களவாக கவர்ந்த தலைவனையும் அவர் அறியின் அழித்தற்கு முனைவர் என்பதுமாம்.

109. கழியும் பொழுது!

பாடியவர் : மீளிப் பெரும்பதுமனார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை ஆற்றாளாய தலைமகளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

[(து–வி.) பிரிவுக் காலத்தினிடையே தலைமகளது துன்ப நிலையினைக் கண்டு கலங்கிய தோழிக்கு, அத் தலைமகள் தன்னுடைய இடர்மிகுந்த நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

'ஒன்றுதும்' என்ற தொன்றுபடு நட்பின்
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று
'அன்ன வோஇந் நன்னுதல்?' நிலை என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென 5
இரைக்கும் வாடை இருள்கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்

நிலைஎன ஒருவேன் ஆகி
உலமர, கழியும்இப் பகல்மடி பொழுதே! 10

"ஒன்றுபட்டே வாழ்வோம்' என்றுரைத்துக் கூடிய தொன்மைப்பட்ட நட்பினுக்குரியவர் நம் காதலர். அவர் நம்மைப் பிரிந்தார் என்று கலங்கி மயக்கமுற்று, இந்த நல்ல நெற்றியையுடையாளின் நிலைதான் என்னவாகுமோ?" என நினைத்துக் கேட்கின்றாளான புனைத்த இழைகளைப்பூண்டுள்ள தோழியே! இதனையும் கேளாய்:

இம்மென்று ஒலித்து வந்தடையும் வாடைக்காற்றோடு இருளும் மிகுதியாகின்ற பொழுதிலே, மழைத்துளிகளாற் சேறுபட்ட தொழுவிடத்தினின்றும் பெயர்த்துக் கட்டுதற்கு உரித்தான எல்லையிலே, உச்சிப்பக்கமாத் தலைக்கயிற்றைக் கட்டியிருக்கப் பெற்றதாகிய கூழைப்பசுவினது துயரநிலையினைப்போல், யானும் தனிமையாட்டியாக இருந்து வருத்தமுறுமாறு, இந்தப் பகலானது சென்று மடிதலான அந்திப் பொழுதும் இனிக் கழிந்துபோகும். இனி, இரவிடையே எடுத்துச் சொல்லுதற்கும் முடியாதபடியான துன்பமும் என்னை வந்தடையுமே! அதற்கு யான் யாது செய்வேனோ?

கருத்து : 'இரவின் வருகையோடு மிகுதியாக வந்தடையும் பிரிவுத்துயருக்கு எப்படி ஆற்றியிருப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : தொன்றுபடு நட்பு – பிறவிதோறும் தொடர்ந்து வருகின்றதான நட்பு பேதுறல் – மயக்கங்கொள்ளுதல். இரைக்கும் - இரைச்சவிட்டு வீசும். இருள்கூர் பொழுது – இருள் மிகுதியாகும் பொழுது. துளி – நீர்த்துளி. துணிதல் அற்றம் – கட்டவிழ்த்துப் பெயர்த்துக் கட்டுதற்குரிய நேரத்தின் எல்லை.

விளக்கம் : துளியுடைத் தொழுவென்றது மழைத்துனிகளின் வீழ்ச்சியால் ஈரமிகுந்த தொழுவத்து தரையினையும், தன்மையையும், அதனிடத்து ஆவிற்கு இருப்புக் கொள்ளதென்பது வெளிப்படை. 'உச்சிக் கட்டிய' என்றது, அதன் தலைக்கயிறு உச்சிப்புறத்தே அசையாது கட்டியிருப்பதனை. இதனால், மழைத்துளிக்கு ஒதுங்கும் வாய்ப்பும் அதற்கில்லை. 'துணிதல் அற்றத்து நிலை' என்றது, மாட்டிற்கு உடையான் அதனை அவிழ்த்துப் பெயர்த்துக் கட்டுதற்கு உரித்தாகிய பொழுதினை அவன் வரவினை அது எத்துணை ஆவலுடன் எதிர்பார்த்துத் துடித்துக் கதறுமோ, அப்படிப்பட்ட நிலையிலே புலம்பி வாடியிருந்தவள் தலைவியென்பது அறியப்படும். குறித்த காலத்து வந்து துயரைத் தீர்த்தற்கு உரியான் வாராது போயதன் காரணத்தாலே, அவளது உயிரானது நிலைத்தற்கு இயலாதாய் மெலிவுற்று, உடற்கூட்டினைவிட்டு அகலுதற்கும் வழியற்றுத் துடிக்கின்றது என்பதும் இதனால் உணரப்படும். 'ஒருவேன் ஆகி உலமர' என்றது, அதுபோது துணையாயமைந்த தோழியும் தன்னில்லிற்குப் போய்விடத் தான் தனித்திருந்து அலமருதற்கு நேரிடும் என்பதனை துளியுடைத் தொழு – ஒழுக்கமுடைய தொழுவும் ஆம். 'நன்னுதல்' என்றது, பண்டிருந்த அழகுச் செவ்வியைச் சுட்டியது. 'ஒன்றுதும்' என்ற சொல், இயற்கைப் புணர்ச்சி பெற்ற காலத்து, அவளைத் தெளிவிப்பானாய், அவன் கூறிய 'சூளுரை' யாகும். 'உரைக்கல் ஆகா எவ்வம்' என்றது, சொல்லால் சொல்லிக்காட்டவியலாதபடி மிகுதிப்பட்ட துயரம் என்பதாம்.

தனிமைத் துயராலே நைந்து வாட்டமுறும் தன்னுடைய துயரநிலைக்கு, 'உச்சிக்கட்டிய கூழை ஆயின்' துயரநிலையினைக் கூறும் உவமைத்திறம் சிறப்பு உடையதாகும்.

110. சிறு மதுகை!

பாடியவர் : போதனார்.
திணை : பாலை.
துறை : மனை மருட்சி; மகள்நிலை உரைத்தலும் ஆம்.

[(து.வி.) (1) மனை மருட்சியாவது, உடன்போகிய மகளது விளையாட்டுப் பருவம் மாறாத தன்மையை எண்ணி, 'அவள் எப்படித் தன் காதலனுடன் இல்லறமாற்றுவாளோ' எனத் தாய் இல்லிடத்திருந்தபடியே உளங் கலங்குவது. (2) மகள் நிலை உரைத்தது என்பது, தலைவியின் இல்லற மாற்றும் செவ்வியினை உவப்புடன் கண்டு உவந்த செவிலித்தாய், அதனை நற்றாயிடம் வந்து பாராட்டி உரைப்பது.]

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
'உண்' என்று ஓக்குபு பிழைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று 5
அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் 10
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே!

தேனிட்டுக் கலந்த தூய சுவைகொண்ட இனிதான பாலைக் கதிரொளி பரக்கும் பொற்கிண்ணத்தே ஒரு கையில் ஏந்திக்கொண்டு, அடிக்குங்கால் மேனியிற் சுற்றிப் படியும் மெல்லிய நுனியுடைய சிறு கோலினை மற்றொரு கையிடத்தே எடுத்துக்கொண்டு, 'இதனை உண்க' 'என்று கோலினை ஓங்குதலும், அதனின்றும் தப்பிப்போதற்கு நினைவாள் அவள். தெளிவான நீர்மைகொண்ட முத்துக்களைப் பரவலாக இட்டிருக்கின்ற பொற்சிலம்பானது ஒலிமுழக்கஞ் செய்ய, அவள் தத்திதத்திப் பிடிபடாது ஓடுவாள். மென்மையும் நரையும் கொண்ட கூந்தலினரும், செவ்விதாக வயதும் அதுபவமும் முதிர்ச்சி பெற்றவருமான செவிலித் தாயரும் அவளைத் தொடர்ந்து சென்று பற்றிப் பாலூட்டுதற்கு இயலாதாராய் மெலிவுற்று, அத்த முயற்சியையே கைவிட்டுவிடுவர். முற்றத்துப்பந்தர்க்கீழ் இப்படி ஓடியோடிச் செவிலியருடைய ஏவலை மறுக்கும் சிறு விளையாட்டைச் செய்பவள் ஆயிற்றே! அவள்தான், இதுகாலை இல்லறமாற்றுதற்கு உரித்தான அறிவையும் ஒழுக்கத்தையும் எவ்விடத்தே உணர்ந்துகொண்டனளோ? தன்னை மணந்து கொண்ட கணவனது குடியானது வறுமை அடைந்ததென்று, தந்தை கொடுத்த கொழுவிய சோற்றினையும் நினையாளாயினளே! நீர் ஒழுகும் பாங்கிலே வளைந்து வளைந்து உருவாகிக்கிடக்கும் கருமணலைப் போலப், பொழுதிற்கு உண்பதையும் கைவிட்டுத் தன் கணவனது குடியின் நிலைக்கேற்றபடி ஒழுகுவாளாய்த், தானும் ஒரு பொழுதுணவைக் கைவிட்டு உண்டு வாழும் சிறிதான மதுகை கொண்டவளாகவும் விளங்குவாளாயினனே!

கருத்து : 'இத்துணை மதுகையுடன் கூடிவாழும் செவ்வியினை எங்குத்தான் அவள் கற்றோளோ?' என்பதாம்.

சொற்பொருள் : பிரசம் – தேன். வெண் சுவை - தூய்தான சுவை; விருப்பந்தரும் சுவையும் ஆம். புடைத்தல் - அடித்தல். பிழைப்ப – தப்பியோட தௌநீர் – தெளிந்த நீர்மை: குற்றம் அற்றதாய தன்மை. தத்துற்று – தத்திச் செல்லலை மேற்கொண்டு; தத்துதல் - துள்ளித் துள்ளி நடத்தல். பரி – பற்றுதல். நுணுக்கம் - வளைவாந்தன்மை; அது நீர்ப்போக்கிற்கு ஏற்ப மாறிமாறி அமையும் இயல்பு. மதுகை – மனத்தின் எக்களிப்பு.

விளக்கம் : 'உண்ணற்கு எளிதான தீம்பாலையும் மறுத்து அச்சுறுத்துதற்கும் அஞ்சிப் பணியாது மறுத்தோடும் சிறுபருவப் பண்பினள்' என்றது, அவளது விளையாட்டுப் பருவத்தை நினைந்து வருந்துவதாம். அவள், 'கொழுநனின் குடி வறனுற்றதெனத் தன் பரியையும் மறுத்துப் பொழுதிற்கு உண்ணலையும் நீக்கிவிடும் மதுகையளாயினளே' என, அவள் படும் துயரத்தை நினைந்து பெரிதும் ஏக்கமுற்றதுமாம். மகள் நிலை உரைத்தாகக் கொள்ளின், அதனை வியந்து பாராட்டியதாகக் கொள்க. 'அறிவு' நன்மை தீமைகளை ஆய்ந்து நடக்கும் ஆற்றல். ஒழுக்கம் – ஒழுகும் முறைமை.

பெண்கள் தம் கணவரது வருவாய்க்கு ஏற்ப வாழ்ந்து இல்லறம் பேணும் சிறந்த செவ்வியினராகத் திகழ்தலே பண்டைக்கால மரபு. அதனை இச் செய்யுளால் அறியலாம். தாய்வீட்டுப் பெருவாழ்வையும் மறந்து கணவன் வீட்டு நிலையோடு ஒன்றிக் கலந்துவிடும் உயரிய கற்புநெறியே போற்றத்தக்க தமிழ்நெறி ஆகும்.

மேற்கோள் : மனையறங் கண்டு மருண்டு உவந்து செவிலி கூறியதெனக் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல். சூ -153 உரை). 'குடி வறனுற்றென நல்குரவு கூறியும் காதலைச் சிறப்பித்தது' என, மீண்டும் காட்டுவர் அவர் (தொல். சூ. 244 உரை.) வாயில்கள் தமக்குள் தலைவியது செவ்வியைக் கூறி மகிழும் கூற்றுக்கு மேற்கோள் காட்டுவர் இளம்பூரண அடிகள் (தொல். சூ. 151. உரை).

பிற பாடம் : 'ஓக்குபு புடைப்ப'

111. கல்லென வருமே!

பாடியவர் : .......
திணை : நெய்தல்.
துறை : விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
[(து.வி) பிரிவுத் துயராலே நலிவுற்றிருந்தாளான தலைவியிடம் சென்று தான் கேட்ட நற்சொல்லின் பயனாகத் தலைவனின் தேரும் விரைய வருமெனச் சொல்லி, அவளைத் தெளிரிக்க முயலுகின்றாள் தோழி.]

அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த்தலை இறவொடு தொகையீன் பெறீஇயர்
வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்
மரன்மேற் கொண்டு மான்கணம் தகைமார்
வெந்திறல் இளையவர் வேட்டுஎழுந் தாங்கு 5
திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி
வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி
நிணம்பெய் தோணியர் இதமணல் இழிதரும்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி! கொண்கன் தேரே. 10

தோழி! பரதவர் வரிந்த வலையைக் கொண்டு மீன் வேட்டம் கொள்பவர். அப் பரதவரின் வலிமிகுந்த தொழிலாண்மையினைக் கொண்டிருக்கும் அவரது சிறுவர்கள், மான் கூட்டத்தை அகப்படுத்தக் கருதும் வேட்டுவரது வெவ்விய ஆற்றலையுடைய இளையர்கள். மரனிடத்தே தங்குதலை மேற்கொண்டாராய் வேட்டைக்கு எழுந்தாற்போல, மீன்பிடி படகின்மேல் ஏறிக்கொண்டாராய்க் கடற்கண் புகுவாராயினர். சுரத்திடத்துள்ள இருப்பைப் பூவினைப் போன்றதான துய்யுடைத் தலையினைக் கொண்ட இறால் மீனொடு, மற்றும் தொகுதியான மீன்களையும் பெற்றுவரக் கருதி, அவர்கள் எழுந்தனர். கடற்பரப்பாகிய சுரத்தினைச் கடந்துபோய், வாள்போன்ற வாயையுடைய சுறாமீன்களோடு மற்றும் கொழுமையான வலிய மீன்களையும் பற்றி வாரிக்கொண்டு வருவர். அவற்றின் நிணம் பெய்யப்பெற்ற தோணியராக அவர்கள் திரும்பிவரும் கடற்கரைப் பகுதியிலே, மணலைக் காற்றுச் சொரிந்தபடியிருக்கும் பெரிதான கழியிடத்துப் பாக்கமானது, கல்லென்னும் ஒலியோடு ஆரவாரிக்குமாறு, நம் தலைவனது தேரும் இனி விரைவில் வாரா நிற்கும்.

கருத்து : 'மணவினை விரைவிற் கைகூடுமாதலின் நீதான் அதுவரை பொறுத்து ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : அத்தம் – சுரநெறி. துய்த்தலை – துய்யையுடைய மேற்பகுதி, தொகைமீன் – தொகுதி கொண்ட மீன்கள். கருவினை – வலியோடு தொழிலாற்றும் திறன். மரன் – மரம்: 'மரல்' எனவும் பாடம்; மரல் – மரற்களனி. நிணம் - ஊன். இகுமணல் – காற்றாற் சொரிந்து குவிக்கப் பெறும் மணல். திமில் – மீன்பிடி படகு. திரைச் சுரம் – அலையுடைய கடற்பரப்பாகிய சுரநெறி. கெண்டி நிரம்பப் பற்றிக்கொண்டு. நிணம் – ஊன்: திமிலிடத்துப் போடப்பெற்ற மீன்கள் உயிரற்றுப் போவதனால் 'நிணம்' எனக் குறித்தனர்.

இறைச்சிப் பொருள் : பரதவர் குடிச் சிறுவர் மீன்பிடி படகுகனிற் கடல்மேற் சென்று வேட்டமாடிக் கொணரும் மீன்நிணங்களை இகுமணற் பாங்கிலே குவித்தாற் போலத், தலைவரும் சுரநெறியினைக் கடந்துசென்று தாமீட்டிய பெரும்பொருளைத் தலைவியது தந்தை முன்பாகக் குவித்துத் தலைவியை வரைந்துகொள்வர் என்பதாம்.

விளக்கம் : வேட்டுவச் சிறுவர் மரங்களினடியில் மான்கட்காக வலைவிரித்து வைத்தாராய், மான்கள் வந்துவிழும் செவ்விநோக்கி மரங்களின்மேற் சென்றமர்ந்து காத்திருப்பர். இவ்வாறே படகுகளிற் சென்று வலைவிரித்துப் படும் மீன்தொகுதிகளை நோக்கிக் காத்திருப்பர் பரதவர் சிறுவர். இருசாராரும் குறித்த வேட்டம் வாய்த்ததும், இல்லத்தினை நாடித் திரும்புவர். இவ்வாறே வரைபொருளினை நாடிப் பிரிந்த தலைவனும் அதனைத் தேடிக்கொண்டதும் திரும்பிவிடுவான் எனபதாம். 'தேர், பாக்கம் கல்லென வரும்' என்றது. அதனால் வரும் அலருரைகளை அவன் கருதமாட்டான் எனவுணர்த்தி, அவனது வரவு வரைவினைவேட்டு வருதலாக அமையும் என்று காட்டுவதாம். வாள்வாய்ச் சுறா – வான்போல் எதிர்த்தாரை வெட்டி அழிக்கவல்ல உருப்பினை வாயிடத்துப் பெற்றிருக்கின்ற சுறாமீன். வேட்டமாடுவோர் வேட்டைப் பொருட்டு நேரும் உயிர் இழப்பினைக் கருதாராய்த் தாம் அதனாற் பெறுகின்ற பயனையே கருதுமாறுபோலத், தலைவரும் தாம் தலைவியை அடைந்து பெறுகின்ற பயனையே கருதினராய்ப் பொருளீட்டி விரையைத் திரும்புவர் என்றதுமாம்.

112. என்ன விருந்து செய்வோம்?

பாடியவர் : பெருங்குன்றூர் கிழார்.
திணை ; குறிஞ்சி.
துறை : பருவ வரவின்கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

[(து–வி) பிரிந்து போயின தலைவன், தான் மீள்வதாகக் குறித்துச் சென்ற பருவமானது வந்துற்றதும், குறித்தபடி வராதானாயினான். அவனை நினைந்தானாகிய தலைவி பெரிதும் துயருற்று நலிகின்றாள் அவளுக்கு, வாய்மையாளனாகிய தலைவன், சொற்பிழையானாய் வந்துசேர்வாள் என வலியுறுத்திக் கூறுவதன் மூலம், அவளது பெருகும் காமநோயினைத் தீர்த்தற்கு முயல்கின்றாள் தோழி.)

விருந்துஎவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பற பலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு
உரும்பில் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் வரவறிந்து, விரும்பி, 5
மாக்கடல் முகந்து, மணிநிறத்து அருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்துபடப் பாஅய்,
மலைஇமைப் பதுபோல் மின்னி,
சிலைவல் ஏற்றொடு செறிந்தவிம் மழைக்கே?

தோழி! சாரற் பகுதிகளிலே, அரும்புகள் முற்றவும் மலர்ச்சியுற்றவாய் விளங்கும் கரிய அடியையுடைய வேங்கையிடத்தே, வண்டினம் மொய்த்து ஆரவாரித்தபடி இருக்கும். பக்கமலையிடம் அச்சமடையுமாறு களிற்றினைச் கொன்றதாய், அச்சமற்ற உள்ளத்தைக்கொண்ட சிங்கவேறானது திரிந்து கொண்டிருக்கும். அத்தகைய பெரிதான மலைப்பகுதியைச் சார்ந்த நாட்டினன் நம் தலைவன். அவன் வரவினை அறிந்து, அதனை விரும்பி, மேகங்களும் வானத்தே செறிவுற்றன. இருண்ட கடலிடத்து நீரினை முகந்துகொண்டு நீலமணியின் நிறத்தைக் கொண்ட, அருவி நீர் தாழ்கின்ற இயல்பையுடைய அகன்ற இடமெல்லாம் மறைந்துபடுமாறு பரவியதாய், மலை கண்ணிமைப்பதுபோல மின்னலிட்டதாய், ஒலித்தவிலே வன்மைகொண்ட இடியேற்றோடும் செறிவுற்று விளங்கும் இம் மேகங்கட்கு, நாம்தாம் என்ன விருந்தினைச் செய்வேமோ?

கருத்து : 'கார் மேகங்களின் வரவு அவரது வரவினை முற்படவே அறிவிப்பது கண்டேனும் நின் துயரினை ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : கருங்கால் – கரிய அடிப்புறம். அரிமா – சிங்கவேறு. புலம்ப – அச்சமுற்றுத் தனிமைப்பட; இது சிங்க முழக்கிற்கு அஞ்சிய பிற விலங்கினமெல்லாம் வழக்கொழிந்ததனால் உண்டாயது. மணி – நீலமணி. நனந்தலை – அகன்ற இடம். உரும்பு – அச்சவுணர்வு. மாக்கடல் – கருங்கடல்; பெருங்கடலும் ஆம். தாழ் நீர் – ஒழுகும் தன்மை. இமைப்பது – ஒளிபரப்புவது; கண்ணிமைப்பதுமாம்.

விளக்கம் : 'கார்மேகம் அவன் வரவினை அறிவித்தபடி, நம்மைத் தெளிவிப்பதனால், அதற்கு என்ன விருந்தினைச் செய்வோம்?' என்பதாம். அதற்கே அவன் வாய்மொழியில் நம்பிக்கையுள்ளபோது, நீதான் நம்புதலின்றி ஐயுற்று நலிவது பெரிதும் வருந்துதற்கு உரியது என்பதுமாம். வேங்கையின் மலர்ச்சி மணம்கொள்ளுதற்குரிய காலமாதலினாலே, அவன் தவறாது வந்தடைவான்; நின்னை விரைந்து மணந்து கொள்வான் என்பதும் ஆம்.

'மாக்கடல் முகந்து மணிநிறத்து அருவித் தாழ்நீர் நனந்தலை அழுந்துபடப் பாய வந்துள்ள மழையினைப்போல வேற்றுநாட்டிற் சென்று பெரும் பொருளினை ஈட்டிக் கொண்டானாய் வருகின்ற தலைவன், அதனைப் பரிசமாகத் நின் தந்தைமுன் சொரிந்து, நின்னை மணந்து இல்லற வாழ்வினை இனிதாற்றி இன்புறுத்துவன்' என்பதுமாம்.

இறைச்சி : களிறட்டு உரும்பில் உள்ளத்து அரிமா வழங்கும் பெருங்கல் நாடன்' என்றது, அவன் எதிர்ந்த பகையினை அழித்து வெற்றியுடன் மீள்வான் என்பதனைக்காட்டி, அவனது பிரிவு வேந்துவினைப் பொருட்டாயது என்பதனைப் புலப்படுத்துவதாம். நின்னைப் பற்றிய பசலையாகிய பகையினையும் ஒழித்து அவன் நின்னையும் காத்துப் பேணுவான் என்றதுமாம்.

113. எய்த வந்தன!

பாடியவர் : இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : இடைச்சுரத்து ஆற்றானாகிய தலைவன் சொல்லியது.

[(து–வி) பொருளார்வத்தின் மிசையினாலே, தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டினை நோக்கிச் செல்வானாகிய தலைவனின் உள்ளம், சுரத்திடையே தலைவியை நாடிச்செல்லத் தொடங்குகின்றது. அவ்வேளை, அவன் தனக்குள் சொல்லிக் கொள்வதாக அமையும் செய்யுள் இது.]

உழைஅணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப்
புல்லரை இரத்திப் பொதிப்புறப் பசுங்காய்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்

பெருங்காடு இறந்தும் எய்தவந் தனவால்
'அருஞ்செயல் பொருட்பிணி முன்னி, யாமே 5
சேறும், மடந்தை!' என்றலின், தான்றன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்
பின்னிருங் கூந்தலின் மறையினள், பெரிதழிந்து,
உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் 10
ஆம்பலம் குழவின் ஏங்கி.
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே!

'மடந்தையே! செயற்கரிய செயலை என்பாற் செய்கின்ற பொருளார்வமாகிய பணியினை எண்ணினமாய், யாம் அதனை நாடிச் செல்வதற்கும் கருதுகின்றோம்' என்றேம். என்றதும், தன்னுடைய நெய்தல்மலர் மையுண்டாற்போலும் இருட்சிகொண்ட கண்கள் வருத்தத்தை அடைய, பின்னப்பட்டுத் தாழ்ந்திருக்கும் கரிய கூந்தலுக்குள்ளாகத் தன் முகத்தை அவள் மறைத்துக் கொண்டனள். பெரிதும் நெஞ்சழிந்த நிலையினளும் ஆயினள். உதியனானவன் சினந்து சென்ற அடர்ந்த பேரொலி கொண்ட போர்க்களத்தினது தலைப்பகுதியிடத்தே, இம்மென்னும் ஒலியோடே பெருங்களத்துக் குழலூதவோர் ஊதுகின்ற அழகான ஆம்பற்குழவினது இசையினைப் போல ஏங்குவாளும் ஆயினள். கலங்கித் துன்பத்தை அடைவோனாய அவளது தனிமை வருத்தத்தை மேற்கொண்டதான பார்வைகள்தாம் மறக்கற்பாலன அன்று!

மான், தன் தலையினை மேலெடுத்து வளைத்து உண்ணுதலினாலே, ஒரு பக்கமாக வளைந்து கிடக்கும் உயர்ந்த கிளைகளையும் புல்லிய அடியையுமுடைய இலந்தையினது. பொதிந்த புறத்தையுடைய பசிய காய்கள், கற்கள் பொருந்திய சிறுவழியிடத்தே, அவ்வழி நிரம்புமாறு உதிர்ந்துகிடக்கும் பெருங்காட்டினைக் கடந்து வந்தேம் வந்தும். அப் பார்வை எல்லாம் எம்பாலடையுமாறு வந்து சேர்ந்தனவே!

கருத்து : 'பிரிவினைக் கேட்டபோதே கலங்கிய அவளது நிலைதான், பிரிந்தபின் என்னாயிற்றோ?' என வருந்துவதாம்.

சொற்பொருள் : உழை – மான். அணந்து – தலையை மேலாக உயர்த்து நின்று; அண்ணாந்து. இறை வாங்கு – பக்கத்தே சிறிது வளைத்து. பொருட் பிணி – பொருளாசையாகிய நோய். உதியன் – சேரன்; உதியன் சேரலும் ஆம். ஆம்பல் அம் குழல் – ஆம்பல் தண்டினாலே அமைந்த அழகான குழல்; 'ஆம்பல்' மூங்கிற்கும் பெயர்: அதனால் மூங்கிலினாலாய ஊதுகொம்பு எனக் கொள்ளுதலும் பொருந்தும். இரத்தி – இலந்தை. ஞாட்பு – போர்க்களம்.

விளக்கம் : 'வழியனுப்புங் காலத்துக் கண்கலங்குதல் நன்னிமித்த மாகாமை உணர்ந்தாளாயினும், பிரிவினைப் பொறுத்தற்கும் ஆற்றாளான அவள், தன் கலங்கிய கண்கள் எதிர்தோன்றாவாறு கூந்தலிடைத் தன் முகத்தை மறைத்துக் கொண்டனள் என்கின்றனன். அவளது கற்பும் காமமும் இணைந்து ஒன்றையொன்று மிகுதற்கு முயலும் நிலையினை இது காட்டுவதாகும். 'ஆம்பலங் குழலின் ஏங்கி' என்றது. ஏக்கத்தால் எழும் அழுகைக் குரலினது தன்மையே அத் துணைச் சுவையுடைத்தாயின், அவள் குரலினிமை எத்துணை இனிதாயிருப்பதெனப் பழகிய அதன் செவ்வியை நினைந்து கூறுவதாம். 'நோக்கு எய்த வந்தன' என்றது, 'அவள்தான் வரவியலாளாய்க் கிடந்து துயருறுகின்றனள்' என அவளுக்கு இரங்கியதாம்.

இறைச்சி : 'மானினத்தால் உண்ணப்பட்டு நலிந்த போதும், தன்பால் நிறைந்த கனிகளை வழிமல்க உதிர்த்திருக்கும் இலந்தை மரத்தைப்போலப், பசலையால் உண்ணப்பட்டுத் தளர்வுற்றபோதும், அவளது பெண்மை ஒளியுடைத்தாய் நின்று சிறக்கின்றது' என்பதாம்.

மேற்கோள் : 'பிரிந்த தலைவன் இடைச்சுரத்துத் தலைவியின் உருவு வெளிப்பட்டுழி மீண்டுவருதலை ஆராய்ந்த கூறுபாட்டின்கண், தனக்குள் சொல்லிக் கொள்வதற்கு, மேற்கோளாக இச்செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர். (தொல். சூ 140. உரை).

பிற பாடங்கள் : விரை வாங்கு உயர்சினை – விரைவாக வளைந்து மேலுயர்ந்து போகும் கிளை. இரத்திப் பசுங்காய் பொற்ப.

114. யாறு அஞ்சுவல்!

பாடியவர் : தொல் கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆறு பார்த்து உற்ற அச்சத்தால், தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து–வி) தலைமகன் இரவுக்குறியை விரும்பினனாக வருகின்ற வழியினது தன்மையை நினைந்து வருந்துவாள்போலச் சிறைப்புறத்திருக்கும் தலைவன் கேட்குமாறு இவ்வாறு தோழி கூறுகின்றனள். இரவுக்குறி மறுத்து வரைவு வேட்டல் இதன் கருத்தாகும்.]

வெண்கோடு கொண்டு வியலறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள்ளுகிர் முணக்கவும்
மறுகுதொரு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந் திசினே;
அளிதோ தானே தோழி! அல்கல் 5
வந்தோன் மன்ற குன்ற நாடன்
துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்
பொருதிரை நிவப்பின் வரும்யாறு அஞ்சுவல்
ஈர்ங்குல் உருமின் ஆர்கலி நல்லேறு
பாம்புகவின் அழிக்கும் ஓங்குவரை பொத்தி 10
மையல் மடப்பிடி இணையக்
கையூன்றுபு இழிதரு களிறுஎறிந் தன்றே.

தோழீ! நேற்றிராப் போதிலே, மலைநாட்டானாகிய தலைவனும் வந்தனன்காண். துளிகளாகப் பெய்த பெயலானது பொறித்த புள்ளிகளோடே விளங்கும் பழங்கரையினைப் பொருதும் அலைகளோடு மேலெழுந்து பெருகிவருகின்ற யாற்றினை நினைந்து யானும் அஞ்சுவேன். ஈரிய குரலினதான இடியின் பேராரவாரத்தைக் கொண்ட நல்ல ஏறானது, பாம்பின் கவினாக விளங்கும் அதன் தலையினை அழிக்கின்ற தன்மையுடைய உயர்ந்த வரையிடத்தே பொருந்திநின்றபடி, தன்பாற் காதலுடைய இளம்பிடியானது வருத்திப் புலம்ப, அதற்கு ஆதரவாகத் தன் கையை ஊன்றியபடியே களிறானது இறங்கிவர, அந்தக் களிற்றைக் கொன்று இழுத்துச் சென்றது அவ்யாறு. வெள்ளத்தோடு வந்த அதனது வெள்ளிய கோட்டினை வெட்டி எடுத்துக்கொணர்ந்து, அகன்ற பாறையிடத்தே வைப்பார்கள் குன்றவர் சிலர். அதன் பசிய ஊனைக் கிளைத்துத் தோண்டிப் பெரிதான அதன் நகத்தினைக் கொண்டு வந்து புதைத்து வைப்பார்கள் சிலர். இதனால், தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் தன்மைத்தாயிருந்தது நம் சிறுகுடி. அதனிடத்து, அதுகாலை எழுந்த ஆரவாரத்தினை இவ்விடத்திலிருந்து கேட்டவாறு, தலைவனை நினைந்து யானும் வருத்தமுற்றிருந்தேன். அதுதான் பெரிதும் இரங்குதற்குரியது அல்லவோ!

கருத்து : 'இரவுக் குறியைக் கைவிட்டுத் தலைவியை மணந்து கூடிவாழ்தலே நன்றாகும்' என்பதாம்.

சொற்பொருள் : வியல் அறை – அகன்ற பாறை. கெண்டி – கிளைத்துத் தோண்டி. முணக்கல் – புதைத்தல். மருகு – தெரு. சிறுகுடி – சிறிதான குடியிருப்பு; சிற்றூர். பையாப்பு – வருத்தம். அல்கல் – இரவு. பொறித்த – புள்ளியுண்டாக்கிய. நிவப்பு – உயர்வு. ஈர்ங்குரல் – ஈரியகுரல்; ஈரிய – இரண்டாகப் பிளந்து சென்ற.

விளக்கம் : ஆற்றிலிறங்கிய பிடியானது. ஆற்றின் இழுப்பினாலே தளர்வுற்றுப் பாறையைப் பற்றி நிற்க, அதனைக்காத்தற்கு இறங்கிய களிற்றினை ஆறு அடித்துச் சென்றது. என்பது, தலைவியது பிரிவாகிய கலக்கத்தைத் தீர்க்கக் கருதிய தலைவன், தன் துயரைப் பொருட்டாக்காது இரவுப்போதில் வருவானாயினும், அவனுக்கு இடையூறு நேருமோவெனத் தாம் கலங்குவேம் என்பதனை உணர்த்துவதாம். இரவுக்குறி நாடி வருதலை நினைந்தும் வருந்துவோம்; பிரிதலையும் பொறுக்கேம்; ஆதலின், இனி வரைந்து மணந்து கொள்ளுதலில் அவன் உளஞ் செலுத்துதலே செயத்தகுந்தது என்கின்றாளுமாம். 'வைகித் கேட்டு' என்றது, தான் துயிலொழிந்திருந்த நிலையைக் கூறியதாம். இதனால், இவர்களது மனப்பாங்கை அறியலுறும் தலைவன் தலைவியை மணந்து பெறும் இல்வாழ்வினை நாடுபவனாவான் என்பதும் விளங்கும். ஆற்றுப் புதுவெள்ளத்தைக் கண்டு அடைந்த அச்சத்தினாலே தோழி இப்படி உரைப்பதாகவும் கொள்ளலாம். இரவுக்குறி இடையிடுபட்ட காலத்துப் பிற்றை நாளிலே உரைத்ததாகவும் கொள்க.

'மையல் மடப்பிடி இனையக் கையூன்றுபு இழிதரு களிற்றைப்போலக் காமநோயாலும் பிரிவுத்துயராலும் வழியின் ஏதத்திற்கு நடுங்குதலானும் நலிந்திருக்கும் தலைவிக்கு உதவுமாறு தலைவன் விரைந்து மணவினையின் நாட்டஞ்செலுத்தி, அவளுக்கு உறுதுணையாக அமைதல் வேண்டும், என்பதுமாம்.

பிற பாடம் : புலாவம் சிறுகுடி; மையின் மடப்பிடி.

115. பேரன்பினர்!

பாடியவர் : ......
திணை : முல்லை.
துறை : பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறுத்தியது.

[(து–வி.) பிரிதற்காலையிற் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தினது வரவைக் கண்டதும், தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. அவளைத் தேற்றுவாளாகத் தலைவனின் பேரன்பை எடுத்துக் கூறுகின்றாள் தோழி.]

மலர்ந்த பொய்கைப் பூக்குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண்இனிது படீஇயர்
அன்னையும் சிறிதுதணிந்து உயிரினள்;இன்நீர்த்
தடங்கடல் வாயில் உண்டுசில் நீர் என
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி 5
மனைநடு மௌவலொடு ஊழ்முகை அவிழக்
கார்எதிர்ந் தன்றால், காலை; காதலர்
தவச்சேய் நாட்டார் ஆயினும், மிகப்பேர்
அன்பினர் வாழி, தோழி! நன்புகழ்
உலப்பின்று பெறினும் தவிரலர்; 10
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?

தோழீ! பொய்கையிடத்து மலர்ந்திருக்கும் பூக்களை நாளும் கொய்ததன் தளர்ச்சியால் சோர்வுற்ற ஆயமகளிர் அனைவரும் இனிதாகக் கண்ணுறங்குமாறு, அன்னையும் சிறிது சினந்தணிந்து உயிர்ப்பான் ஆயினள். இனிதான நீர்மையினைக் கொண்ட பரந்த கடலினது நீரை வாயினாலே உண்டு. அதுவும் சிறிதளவான நீரே என்னுமாறு பொழியும் கார்மேகங்களும் வானத்தே எழுந்தன. மயிற்பாதம் போன்ற இலைகளைக் கொண்ட கருங்கதிர்களையுடைய நொச்சிப் பூவானது, மனையது நடுமுற்றத்துள்ள முல்லையோடுஞ் சேர்ந்து தம்பால் முகிழ்த்திருந்த மொட்டுக்கள் இதழவிழ்ந்து மலருமாறு கார்காலமும் இந்நாள் காலையிலே எதிர்ப்பட்டுள்ளது. காதலர் மிகவும் தொலைவான நாட்டிடத்தே உள்ளாராயினும், நின்பால் மிகப்பெரிதும் அன்புடையவராவர். நல்ல புகழினைக் கெடுதலன்றிச் சென்றுள்ளவிடத்தே பெற்றனராயினும், நம்பாற் கூறிச் சென்ற உறுதிமொழியினைத் தவிர்பவர் அல்லர். அவரது வரவை அறிவிக்கும் வானத்து அருள் முழக்கத்தினை யானும் இன்று கேளா நின்றேன் அல்லனோ!

கருத்து : 'குறித்த காலத்து வருதலில் அவர் ஒரு போதும் பிழையார்' என்பதாம்.

சொற்பொருள் : குறுதல் – பறித்தல். கண்படுதல் – உறங்குதல். உயிரினள் – உயிர்ப்பாளாயினள். மாக்குரல் – கரிய பூங்கொத்து; இது கருநொச்சி. ஊழ்த்தல் – தோன்றுதல். தவச்சேய் நாட்டர் – மிகத் தொலைவான நாட்டிலுள்ளார். உலப்பின்றி – கெடுதலின்றி; உலப்பு – ஒழிபு.

இறைச்சி : முற்றத்து முல்லை வேலியிடத்து நொச்சியிற் படர்ந்து கிடக்கிறது; காரின் எதிர்வினால் நொச்சியும் முல்லையும் ஒருசேர மலர்ந்திருக்கும் காட்சியைக் கூறினர்; அவ்வாறே இல்லிடத்திலிருந்து வருந்தும் தலைவியும் தலைவனைத் தழுவி மகிழ்வள். இருவரும் மகிழ்ச்சியடைவர் என்றற்காம். இவர்களது இல்லற வாழ்வு மலர்ச்சி பெற்று விளங்கும் என்பதுமாம்.

விளக்கம் : முல்லையும் நொச்சியும் மலர்ந்திருப்பக் கண்டதனால், அன்னை, பொய்கையிடத்துச் சென்று பூக்கொய்து தளரும் ஆய்மகளிரை அதிகாலையில் எழுப்பிப்போதற்குத் துண்டாளாயினள்; அவர்கள் இனிதாகக் கண்ணுறங்குமாறும் விட்டிருந்தனள்' என்பதாம். 'மனைநடு மௌவல் – மனையிடத்தே நட்டுப்பேணும் முல்லை: பூக்க மணம் வாய்க்கும்' என்பது மரபு. 'விசும்பின் தகவாவது தலைவியையும் தலைவனையும் ஒன்று சேர்ப்பதற்குக் காரினைத் தோற்றுவித்தது.

'சேய் நாட்டாராயினும். மிகப் பேரன்பினராதலின் சொற்பிழையாராய்த் திரும்பி வந்து அருள்வர்' என்பதாம்.

ஒப்பு : முல்லை மலர்த்து கார்காலத்தைத் தெரிவிக்கும் என்பது குறுந்தொகை 3: 8.126 முதலாய செய்யுட்களானும், 'ஆர்கலியேற்றொடு கார்தலை மணந்த, கொல்லைப் புதைத்த முல்லை மென்கொடி எயிறென முகைக்கும்' (குறு. 186) என்பதனாலும் அறியப்படும்.

116. இன்னும் கைவிட்டார்!

பாடியவர் : கந்தரத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.

[(து–வி.) வரைபொருளுடன் விரைவிலே வந்துவிடுவதாகக் கூறிக் காதலன் பிரிந்து சென்றான். அவன் சொன்ன நாளின் கெடுக்கழிந்தபின், தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. 'அவன் சொற்பிழையான்; விரைய வந்து சேர்வான்' என வற்புறுத்திக் கூறித் தெளிவுபடுத்த முயலுகின்றாள் தோழி. அவளுக்குத் தலைவி உரைப்பதாக அமைந்திருப்பது இச் செய்யுள்.]

'தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க' என்ப மாதோ;
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இருவெதிர் ஈன்ற வேல்தலைக் கொழுமுனை
சூல்முதிர் மடப்பிடி நாள்மேயல் ஆரும் 5
மலைகெழு நாடன் கேண்மை பலவின்
மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம்
விடர்அளை வீழ்ந்துஉக் காஅங்கு தொடர்பறச்
சேணும் சென்றுஉக் கன்றே; அறியாது
ஏகல் அடுக்கத்து இருள்முகை இருந்த
குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிர் 10
இன்னும் ஓவார் என்திறத்து அலரே!

'தீமையே இயல்பாகக் காணப்படுவாரது வகையிலும், நாம் அவற்றின் கூறுபாடுகளை முற்றவும் ஆராய்ந்து அறித்ததன் பின்னரே, அவரைத் தீயவரென உணர்தல் வேண்டும்' என்று சான்றோர் கூறுவார்கள்.

சூல் முதிர்ந்த இளம்பிடியானது, தனது அறியாமையினாலே இறுமாப்புற்றதாய்த் தன் வயிற்றுக் கருப்பிண்டம் வழுவி வீழுமாறு, பெருமூங்கில்களிலே துளிர்த்திருக்கும் வேல்முனை போன்ற கொழுமையான முளைகளை, விடியற்காலை வேளையிலே சென்று தின்னும். அத்தகைய மலைப்பகுதி விளங்கும் நாட்டிற்கு உரியோன் நம் தலைவன். அவனிடம் நாம் கொண்ட நட்பானது—

பலாலினது பெரிதான கிளையினை விட்டு நீங்கிய காய் முதிர்ந்த பெரும்பழமானது, மலைப்பிளப்புக்களின் இடைக்கண் உள்ள சுனையிடத்தே வீழந்து அழிந்தாற் போல முற்றவும் தொடர்பு அறுமாறு நெடுநாட்களும் சென்று ஒழிந்தது. அதனைத் தாம் அறியாராய்,

பெரிதான மலைச்சாரலிடத்தே அமைந்த இருளடர்ந்த குவட்டிடத்தேயுள்ள இக் குறிஞ்சிச் சிற்றூராகிய நல்ல ஊரிடத்துப் பெண்கள், எம் திறத்துக் கூறப்படும் பழியுரைகளை இன்னும் கைவிடாதிருக்கின்றனரே!'

கருத்து : 'அவர் நட்புப் பிழைத்தனர்; அதனை யான் மறக்க முயலினும், அவரையும் என்னையும் சார்த்தி இவ்வூரவர் கூறும் பழியுரைகளால் என் நோய் மிகுதிப்படுகின்றதற்கு யான் என்செய்வேனோ?' என்பதாம்.

சொற்பொருள் : தீமை – தீய தன்மை; குளுரை பொய்த்தல். பிண்டம் – முதிராத சூல். நாள்மேயல் –விடியற் காலத்துச் சென்று மேய்தல். மாச்சினை – பெரிய கிளை: கருமையான கிளையும் ஆகும்; கிளைக்கணுக்களிலே பலாக் காய்ப்பதாகிய உண்மையும் இதனால் அறியப்படும். கோள் முதிர் – காய் ஊழ்த்து முதிர்தல்.

விளக்கம் : 'நட்பானது உயர்வான நோக்கத்தோடு பிறந்து முதிர்ந்ததாயினும், பலாப்பழம் விடர் அளை வீழ்ந்து அழிந்தாற்போலப் பயனற்றுக் கழிந்தது' என்கின்றாள் தலைவி, 'தீமை கண்டோர் திறத்தும், பெரியோர் தாமறிந்து உணர்க' என்பது அறவிதி. இங்ஙனமாகத் 'தீமையற்ற என்பாலேயும் இவ்வூரவர் அறியாது பழி கூறுகின்றனர்' என்கின்றாள்.

'வாய்ச்சுவையே கருதி வயிற்றுச்சூலை வீழச்செய்யும் மூங்கில் முளையைத் தின்னும் பிடியினைக் கொண்ட மலை நாட்டான்' என்றது, அவனும் 'பொருள்கருதி நிலையான இன்பத்தை இழக்கும் அறியாமை உடையவனாயினான், என்பதாம். தன் நோயின் மிகுதியைத் தான் மறைத்தற்கு முயன்றாலும், ஊரவர் உரைக்கின்ற அலருரைகளின் மிகுதியினாலே அதுதான் நாளும் நாளும் பெருகி வளருகின்றது என்பதுமாம்.

உள்ளுறை : 'சூல் முற்றிய யானை, தன் வயிற்றுப் பிண்டம் கலைந்து விழுமென்பதை அறியாதாய்ச் சென்று மூங்கில் முளைகளைச் சுவை கருதித் தின்னும்' என்றது, அவ்வாறே என் உயிரானது அவர் உறவினது பயனாலே உடலை விட்டு வழுவிப்போம் என்பதனை அறியாராய், இவ்வூரவர் அலர் எடுத்துத் தூற்றுவர் என்கின்றாள்.

117. பன்னாள் வாழலென்!

பாடியவர் : குன்றியனார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும் ஆம்.

[(து–வி.) வரைந்து வருவதாகத் தலைவன் குறித்துச் சென்ற நாளின் எல்லை கழிந்துபோகத், தலைவியின் காமநோய் மிகுதியாகின்றது. அதனைத் தணிக்கக் கருதிய தலைவியின் தோழி, 'அவர்தான் சொற்பிழையாராய் விரைய வருவர்' என வற்புறுத்திக் கூறுகின்றாள். அவளுக்குத் தலைவி கூறுவதாக அமைந்தது இது. (2) தலைவன் சிறைப்புறத்தானாகக் கேட்டு வரைவுக்கு விரையுமாறு கூறுவது சிறைப்புறம் ஆகும்.]

பெருங்கடல் முழங்கக் கானல் மலர
இருங்கழி ஓதம் இல்இறந்து மலிர
வள்ளிதழ் நெய்தல் கூம்பப் புள்ளுடன்
கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேரச்
செல்சுடர் மழுங்கச் சிவந்துவாங்கு மண்டிலம் 5
கல்சேர்பு நண்ணிப் படர்அடைபு நடுங்கப்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னார் உன்னார் கழியின் பல்நாள்
வாழலென் வாழி தோழி! என்கண்
பிணிபிறி தாகக் கூறுவர்;
பழிபிறி தாகல் பண்புமார் அன்றே 10

தோழீ, நீ வாழ்வாயாக! பெரிதான கடலும் முழக்கம் இடுகின்றது. கானற் சோலைகளுள் எம்மருங்கும் புதுப்பூக்கள் மலர்ந்திருக்கின்றன. கரிய கழியிடத்தினது நீர்ப்பெருக்கம் நம்முடைய வீட்டின் எல்லையைக் கடந்தும் வந்துள்ளது. வளவிய இதழ்களை உடையவான நெய்தல் மலர்களும் குவிந்துவிட்டன. கடற்புட்கள் ஒருசேர மணங்கமழும் மலர்ச்சோலையிடத்தே உள்ளவான தத்தம் கூடுகளிற் சென்று சேர்கின்றன. மறைகின்றதான மாலைக் கதிரவனும் தன் ஒளிமழுங்கச் சிவப்புற்றனனாய், வளைவான வானமண்டிலத்திடத்தே மலைப் பின்னாகச் செல்லுதலை நெருங்கினனாகத் துன்பமடைந்து நடுங்குகின்றனன். என்றன் தனிமைத் துயரோடு துயரைச் சேர்ப்பதாக வந்துள்ள புன்கண்மையினையுடைய மாலைப் பொழுதும் இதுவாகும். நம்மைப் பிரிந்து அவ்விடத்தினராயிருப்பவரான நம் தலைவர்தாம், இனியும் என்னை நினையாதவராகி அவ் விடத்தவராகவே பிரிந்திருப்பாராயின் அதனைப் பொறுத்து யான் இனியும் பலநாட்கள் வாழ்ந்திருக்க மாட்டேன். என்கண் வந்துற்ற பிணியினைப் பிறிதொன்றாகச் கருதிப் பலரும் பலவாறாகக் கூறுவர். அங்ஙனம் பழிதான் ஒன்றிருக்கப் பிறிதாகக் கூறப்படுவதற்கு நாமே காரணமாகுதல் நம் பண்புக்குப் பொருந்துவது ஆகாதல்லவோ?

கருத்து : 'தலைவரை விரைந்து மீளவும் அடைந்தாலன்றி, என்னைப்பற்றிய நோய் தீராது' என்பதாம்.

சொற்பொருள் : பெருங்கடல் – பெரும்பரப்பினதாகிய கடல். கானல் –கடற்கரைச் சோலை. மலிர – நிறைந்து பெருக. வள்ளிதழ் – வளவிய இதழ். கூம்புதல் – குவிதல். புள் – கடற்புள். பொதும்பர் – பூஞ்சோலை. வாங்கு மண்டிலம் – வளைந்த வான மண்டிலம். கல் – மலை. நண்ணி – அடைந்து. புன்கண் – சிறுமை.

விளக்கம் : 'தொழிலாற்றிய கதிரும் மாலையில் அத்தமன கிரியைச் சென்றடைகின்றது. கடற்புட்களும் கூடுகளைச் சென்று சேர்கின்றன; அவர்தாம் என்பால் வந்தனரில்லை' எனப் பேதுற்றுப் புலம்புகின்றாள் தலைவி. 'கானல் மலர' எனவும், 'கழி ஓதம் இல்லிறந்து பெருக' எனவும், குறித்துச் சென்ற கார்காலம் வந்துற்றதனைக் கூறுகின்றனள். 'படர் அடைபு நடுங்கப் புலம்பொடு வந்த புன்கண் மாலை' எனத் தலைவிக்கு உரைப்பினும் பொருந்தும். இரு துறைகட்கும் பொருத்திப் பொருள் கொள்க. பழி பிறிது ஆகல் பண்பன்று என்றது, தம்முடைய மறைப்பினாலே அணங்குதலைச் செய்யாத முருகிற்குப் பழியுண்டாதலைக் கருதிக் கூறுவதாம். 'அன்னார்' என்றது. பிரிவுத் துயரைப் பொறாளாய், அவன்பால் அயன்மை காட்டிக் கூறியதாகும். 'பன்னாள் வாழலென்' என்றது, 'இன்னாள் வாழ்வல்; அதற்குள் அவனை என்பால் வரச்செய்க' என வேண்டுவதுமாகும்.

118. பூவிற்பாள் நோகச் செய்வாள்!

பாடியவர் : பாலை பாடிய பெருங் கடுங்கோ.
திணை : பாலை.
துறை : பருவங் கண்டு ஆற்றாளாய்த் தலைவி சொல்லியது.

[(து–வி.) வருவதாகக் குறித்துச் சென்ற பருவத்தின் வரவினைக் கண்டு, வாராத அவனை நினைந்து ஏங்கி துயறுருகின்றாள் தலைவி. அவள், தன்னைத் துயராற்ற முயலும் தோழியிடத்தே, தன் நிலைமையை விளக்கிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

அடைகரை மாஅத்து அலங்குசினை பொலியத்
தளிர்கவின் எய்திய தண்நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில்
புகன்றுஎதிர் ஆலும் பூமலி காலையும்
'அகன்றோர் மன்றநம் மறந்திசி னோர்' என 5
இணர்உறுபு, உடைவதன் தலையும் புணர்விலை
ஓவ மாக்கள் ஒள்ளரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி
வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொரு நுவலும் 10
நொதும லாட்டிக்கு நோம்என் நெஞ்சே!

தோழீ! யாற்றை அடுத்த கரையினிடத்தே நிற்கும் மாமரங்களினது நெருங்கியிருக்கும் கிளைகளெல்லாம் அழகு கொள்ளும்படியாகத் தளிர்கள் தோன்றியுள்ளன. அதனால் அழகமைந்ததாகிக் குளிர்ந்த நறிய சோலைகளும் விளங்குகின்றன. அவற்றிடத்தே, சிவந்த கண்களை உடையதான கரிய குயிற்பேடும் தன் சேவலொடு பொருந்தியிருந்ததாகக் கூவியவண்ணம் எதிரிட்டு ஆரவாரிக்கின்றது. இவ் வண்ணமாகப் பூக்கள் மலிந்திருக்கின்ற இளவேனிற் காலத்தினும் நம்மைப் பிரிந்து போயிருப்பாரான காதலர் நம்மை மறந்திருக்கின்றனர். இங்ஙனம் எண்ணி யானும் நொந்திருப்பேன். அதன்மேலும், பூங்கொத்தினை எற்றவாகக் கட்டு அவிழ்வதன் முன்பும் தொழில் வல்லாரான ஓவியமாக்கள் ஒள்ளிய அரக்கினைத் தோய்த்து எடுத்த துகிலிகையின் தலையினைப் போன்றலான பஞ்சினையுடைய பாதிரியினது வெள்ளிய இதழ்களையுடைய மலர்கள் அழகுறத் தோன்றும். வண்டுகள் மொய்க்கும்படியாக அவற்றை வட்டியில் ஏந்திக்கொண்டாளாக, அப் புதிய மலர்களைத் தெருத்தோறும் கூவி விற்றபடி வருவாள் பூவிலை மடந்தை. ஏதிலாட்டியாகிய அவளைக் காணும்போது, என் நெஞ்சம் மிகுதியும் நோவா நிற்கின்றது. யான் இனியும் எவ்வாறு ஆற்றியிருப்பேன்?

கருத்து : 'பிரிவைப் பொறுத்து ஆற்றியிருக்க இனியும் என்னால் அறவே இயலாது' என்பதாம்.

சொற்பொருள் : அடைகரை – யாற்றை அடுத்திருக்கும் கரை. மாஅத்து – மாவினிடத்து. அலங்கு சினை – நெருங்கிய கிளைகள்: அசையும் கிளைகளும் ஆம். பொதும்பு – பூம் பொழில் புகற்சி – விருப்பம். ஓவ மாக்கள் – ஓவியர்கள். துகிலிகை – தூரிகை. தூய் – பஞ்சு.

விளக்கம் : மாப் பூத்துக் கவினுடன் தோன்றுவது இளவேனிற்காலத்து; ஆதலின், தலைவன் அதுகாலை உடனிருக்கும் பேற்றினைப் பெறாத தலைவி பெரிதும் நோகின்றனள். 'செங்கண் கருங்குயிலானது, சேவலொடு கூடியிருந்த போதும், மேலும் கூட்டத்தை விரும்பிக் கூவியழைக்கும் காலம்' என்கின்றது, பிரிந்திருக்கும் தன் மனத்தது வேதனை பெருகும் நிலையினைக் காட்டுதற்காம். அஃதன்றியும், பாதிரிப்பூவினை விற்கும் பூவிலை மடந்தையது குரலைக் கேட்குந்தோறும், அதனைச் சூட்டிக் களிப்பதற்கு இயலாமையினை நினைந்து மனம் மேலும் துன்புறும் என்கின்றனள். இதனால் தலைவியது ஆற்றாமை மிகுதியும் உணரப்படும்.

119. மலையினும் பெரிது!

பாடியவர் : பெருங்குன்றூர் கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

[(து–வி) தலைவியது கூட்டத்தை வேண்டி வந்து ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான் தலைவன். அவனது உள்ளத்தை விரைய வரைந்து கொள்ளுதலிற் செலுத்துதற்குத் தோழி கருதுகின்றாள். அவன் கேட்டு உணருமாறு தனக்குள் சொல்வாள்போல இப்படிக் கூறுகின்றாள்.]

தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர்
ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன்
ஆர்தர வந்தனன் ஆயினும், படப்பை
இன்முசுப் பெருங்கலை நன்மேயல் ஆரும் 5
பன்மலர்க் கான்யாற்று உம்பர், கருங்கலைக்

கடும்புஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெருவரை நீழல் வருகுவன் குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்; 10
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே.

புனத்திற்கு உரியோனாகிய குன்றவன், தினையுண்ணும் விலங்குகளை அகப்படுத்தக் கருதி அமைத்துவைத்த சிறிய பொறியிடத்துள்ள பெருங்கல்லின் கீழாகத், தினைப்பயிரை உண்டுகொண்டிருக்கும் காட்டுப் பன்றிகள் அஞ்சியோடுமாறு, ஒள்ளிய நிறத்தையும் வலிமையையும் கொண்ட புலியானது வந்து அகப்பட்டுக் கொள்ளுகின்ற நாட்டினன் தலைவன். அவன், யாராலே தரப்பட்டு நம்பால் வந்தனனாயினும் ஆகுக! இனிய முசுவினது பெரிதான ஆணானது கொல்லையிடத்தே நல்ல உணவினைப் பெற்று உண்பதான, பல்வகை மலர்களோடும் வரும் காட்டாற்றினது மேற்புறத்தை, கரிய கலைமானானது வருடைமானின் கூட்டத்துடனே தாவிக் குதித்தபடி செல்லாநிற்கின்ற, பெரிய மூங்கிற்புதரின் நிழலினிடத்தே அவன் வருவான்! அவன் மலைப் பச்சையுடனே கூதளத்து மலரையும் சேர்த்துக் கட்டிய கண்ணியுடனும் திகழ்வான்! ஆயினும், எவ்வளவேனும், தலைவியது முயக்கத்தை இனிப் பெறுவான் அல்லன். தன் மலையினுங் காட்டில் பெரிதாக அவன் புலந்து கொள்ளினும் கொள்ளுக!

கருத்து : 'இனி, அவள் மணந்து கொண்டன்றித் தலைவியைக் களவானே அடைவது இயலாது' என்பதாம்.

சொற்பொருள் : கேழல் – பன்றி. புனவன் – புனத்திற்கு உரியோன். பொறி – எந்திர அமைப்பு. கேழ் – நிறம், மேயல் – மேய்ச்சல். சுடும்பு - கூட்டம்; ஆட்டு மந்தை, வரை – மூங்கில். மலைப்புறமும் ஆம். குளவி – காட்டு மல்லிகையும் ஆம்; மலைப் பச்சை – கூதளம் - கூதளம் பூ; 'கூவிளம்' என்றும் பாடம்; பொருள் வில்வம்'.

இறைச்சி : (1) 'கருங்கலை கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும் நீழல் வருகுவன்' என்றது, வேற்று வரைவு நேரின் அதற்கு ஒத்திசையாது வேறுபடத் தோன்றுவாளாகிய தலைவியை அவன் நினையானாயினன் என்பதாம்.

(2) 'முசுப் பெருங்கலை நன் மேயல் ஆரும்' தகைமை போல, வரைந்து மணந்து கொள்ளின் அவனும் தலைவியோடு பேரின்பம் துய்த்துக் களித்தல் வாய்க்கும் என்பதாம்.

உள்ளுறை : தினை கவரும் கேழலை அகப்படுத்தவைத்த பொறியுள்ளே வயப்புலி சிக்கினாற்போல, விரும்பிய இவனை இழப்பினும், இவனினும் சிறந்தானாகிய தலைவன் ஒருவன் தலைவியை வரைந்து மணத்தலைக்கருதி வந்தனன் என்பதாம்.

விளக்கம் : அவன் வரைந்து கொள்ளுதலில் முயலாததன் பயனே, அவன் இன்பமிழப்பதும், தலைவிக்குத் துயரிழைப்பதும் ஆதலின், அவனது புலவியை அது எத்துணைப் பெரிதாயினும் யாம் பாராட்டேம் என்பதாம்.

மேற்கோள் : "தினையுண் கேழல் இரிய என்னும் நற்றிணையுள், 'யாவது, முயங்கல் பெறுகுவன் அல்லன், புலவிகோள் இறீயதன் மலையினும் பெரிதே' என்பது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது" எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். பொருளியல் சூ. 16 உரை மேற்கோள்.) 'குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன்' எனவும், 'பன்மலர்க் கான்யாற்று உம்பர்' எனவும் வருதல், கார்காலம் வந்ததைக் காட்டுவதாம்.

120. முறுவல் காண்கம்!

பாடியவர் : மாங்குடி கிழார்.
திணை : மருதம்.
துறை : விருந்து வாயிலாகப் புக்க தலைவன் சொல்லியது.

[(து–வி.) பரத்தை உறவிலே நாட்டமுற்றுப் பிரிந்து சென்ற தலைவனிடத்தே தலைவி பெரிதும் ஊடல் கொண்டிருந்தனள். ஒருநாள் வீட்டிற்கு விருந்தி வரக்கண்ட தலைவன், தானும் அவர்களோடு கலந்து கொண்டான். விருந்தினர் நடுவே அவனை வெறுத்து நோக்க விரும்பாத அவளும், ஏதும் கூறாளாய் விருந்து சமைப்பதிலேயே ஈடுபட்டுவிட்டனள். அவளது அந்த அமைதியை வியந்து தலைவன் தன் நெஞ்சோடு கூறிக்கொள்வதுபோல அமைந்தது இது]

தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை

சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் 5
புகையுண்டு அமர்த்த கண்ணள், தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையில் துடையினள், நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை!
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பு ஆன்று, 10
சிறுமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே!

வளைந்த கொம்பினையுடைய எருமைகளின் இளநடையினையுடைய கன்றுகளைத் தூண்கள்தோறும் கட்டியிருக்கின்ற காணத்தகுந்த சிறப்பினையுடையது எமது நல்ல மனையாகும், இவ்விடத்தே, வளைந்த குண்டலங்களைக் காதுகளிலே இட்டிருப்பாளான, செழுமைகொண்ட செவ்விய பேதைமையினையும் உடையாளான எம் காதலியானவள், சிறிதான மோதிரம் செறிந்த தன் மெல்விரல்கள் சிவக்கும்படியாக வாழையினது நீர்மைகொண்ட இலையினை மிகவும் சிரமப்பட்டுக் கொய்து வகிர்ந்து கொணர்ந்து பரிகலம் இட்டனள். அட்டிலாக்கியபோது புகைபடிந்ததனாலே அமர்த்த கண்களை உடையாளான அவள், தகைமைபெறத் தன் பிறைபோன்ற நெற்றியிடத்தே துளிர்த்திருந்த சிறிய நுண்மைகொண்ட பலவான வியர்வுத் துளிகளைத், தன் அழகிய துகிலின் நுனியிலே துடைத்துக் கொண்டாளாக, நம்மீது புலவிகொண்டு, அட்டிற் சாலையிடத்தாளாகவும் ஆயினள். இது காலை விருந்தாய் வந்தாரும் எம்முடன் இல்லிடத்தே வருவாராக வந்தனராயின் அழகிய மாமை நிறத்திறத்தினையுடைய அரிவையாளான அவளின் கண்சிவப்பு மறைந்துவிடும். சிறு முட்களைப் போன்ற பற்கள் வெளிப்பட்டுத் தோன்ற இளமுறுவலைக் கொண்ட முகத்தினளும் ஆகிவிடுவாள். கை கொண்ட அம்முகத்தினை நாமும் காண்போமாக.

கருத்து : 'தலைவியது ஊடற்சினத்தை விருந்தினர் வந்ததால் இன்றேனும் மாறக் காண்போம்' என்பதாம்!

சொற்பொருள் : தடமருப்பு – வளைந்த கொம்பு: பெரிய கொம்பும் ஆம். மடநடை – இளநடை; தளர்ந்த நடை செய் – செய்ய: செவ்விதாம் பண்பு கொண்ட. சிறுதாழ் – சிறிய மோதிரம். வாழை ஈர்ந்தடி – வாளையிலிருந்து கிள்ளிக் கொண்ட இலை. வகைஇ - வகுந்து. துகில்தலை – துகிலின் முனை; முந்தானை.

விளக்கம் : விருந்தினரோடு புகுந்த தலைவன், அட்டிற் சாலையிடத்தினின்றும் விருந்தினரை வரவேற்க வந்து திரும்பிய தலைவியைப் பின் தொடர்கிறான். அவனைப் புலந்தாளாகப் புகைபடிந்து சிவந்த கண்களை முந்தானையால் துடைத்தபடியே, அவன் அட்டிலறையுட் புகுந்து கொள்கின்றனள். அப்போது தலைவன் இப்படிக் கூறிக்கொள்கின்றான். தலைவனோடு புலப்பினும் விருந்து பேணுதலாகிய தன் கடமையில் திண்மையுடையளாதலின், அவர் முன்பாக இளமுறுவலுடன் தலைவனை நோக்கினாள் என்க. 'வாளை ஈர்ந்தடி' எனக் கொண்டு, வாளை மீனை அறுத்துத் துண்டுபடுத்தினள் எனவும் கொள்க.

மேற்கோள்: விருந்தோடு புக்கோன் கூற்றுக்கு மேற்கோளாக அகத்திணையியல் 24 ஆம் சூத்திர உரைக்கண் இச் செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர்.

121. புறவிற்று !

பாடியவர் : ஒருசிறைப் பெரியனார்
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மறுத்தரும் தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.

[(து–வி) வினை முடித்தவனாகத் தேர்மீது அமர்ந்து வருகின்ற தலைவன், தலைவியின் நினைவாற் சோர்வு அடைகின்றான். அவனைத் தேற்றுவானாகப் பாகன் உரைப்பது போல அமைந்த செய்யுள் இது]

விதையர் கொன்ற முதையல் பூமி
இடுமுறை நிரப்பிய ஈர்இலை வரகின்
கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
அரலைஅம் காட்டு இரலையொடு வதியும்
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே; 5
'எல்லிவிட் டன்று வேந்து' எனச் சொல்லுபு
பரியல்; வாழ்க நின் கண்ணி! காண்வர
விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா
வண்பரி தயங்க எழீஇத், தண்பெயற்
கான்யாற்று இகுமணற் கரைபிறக்கு ஓழிய 10

இல்லிருந்து அயரும் மனைவி
மெல்லிறைப் பணைத்தோள் துயில்அமர் வோயே!

அழகுபெற விரிந்த தலையாட்டம் அமைத்ததும், விரைந்த செலவினையும் கனைத்தலையும் கொண்டதுமான வளமையான பரிமாவானது விளங்க எழுந்து, தண் பெயலினாலே பெருகிய காட்டாற்றினது சொரியும் மணற்கரையானது பிற்படச் செல்லும்படியாகச் சென்று, இரவுப் போதிலே நின் புதுவரவை விரும்பி ஏற்றளாகக் களிக்கும் நின் மனைவியது. மென்மையான சந்தினைக் கொண்ட பணைத்த தோளிடத்தே கிடந்து துயில்கொள்ளுதலை விரும்புவோனாகிய தலைவனே! நம் வேந்தன் நேற்றிரவு தான் வினைமுடித்த நினக்கு விடைதந்தனன் எனச் சொல்லி வருந்தல் வேண்டா! நின் கண்ணி வாழ்வதாக! நீ விரும்புகின்ற தலைவியது ஊரானது, விதையிடுவார் அழித்த பழங்கொல்லைப் புழுதியிடத்தே முறையே இடப்பெற்று நிரம்பிய ஈரிய இலைகளைக் கொண்டே வரகுப் பயிரினது கவைத்த கதிர்களைத் தின்ற விருப்பம் வருகின்ற இளைதாகிய மான்பிணையானது, மரல்வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டிடத்துத் தன் கலையோடு சேர்ந்து தங்கியிருக்கும் இப் புறவத்தின் கண்ணேதான் உள்ளது.

கருத்து : 'நின் மனையிடத்தே விரைய நின்னைச் சேர்ப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : விதையர் – விதை விதைப்பாராகிய ஆயர். கொன்ற – கொன்று அழித்த. முதையல் – பழங் கொல்லை. எல்லி – நேற்றிரவு. வேந்து – வேந்தன். உளை – தலையாட்டம். கண்ணி – தலைமாலை, கலி – கனைத்தலாகிய ஆரவாரம். பரி – பரிமாவாகிய குதிரை. இகுமணல் – சரியும் மணல்.

விளக்கம் : தேரினை விரையர் செலுத்தும் பாகன், அதனிலும் விரையச் சென்று தலைவியைக் காணத்துடித்த தலைவனது குறிப்பைக் கண்டு இவ்வாறு கூறுகின்றான்.

இறைச்சி : 'கவைக்கதிர் கறித்த பிணை இரலையோடு வதியும் புறவிடத்து அவளூர்' ஆதலின், நின் இல்லிடதிருந்து வாழும் அவளும் நின்னொடு கலந்து இந்நாளிரவின் கண், இன்புறுவாள்' என்பதாம்.

122. நீயே ஆராய்க!

பாடியவர் : செங்கண்ணனார்.
திணை : குறிஞ்சி
துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது.

[(து–வி.) களவுப் புணர்ச்சியை விரும்பிவந்த தலைவன் குறியிடத்தின் ஒரு பக்கமாகச் செவ்வி நோக்கி ஒதுங்கி நிற்கின்றான். அவனது வரவை அறிந்தாளான தோழி, தலைவிக்கு உரைப்பாள் போல, அவனும் கேட்டு உணருமாறு கூறுவது இது]

இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங்காற் செந்தினை கடியு முண்டன
கல்லக வரைப்பில் கான்கெழு சிறுகுடி
மெல்லவல் மருங்கின் மௌவலும் அரும்பின
'நரைஉரும் உரறும் நாம நள்ளிருள் 5
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என
நின்று, மதிவல் உள்ளமொடு மறைந்தவை ஆடி,
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னோடு
நீயே சூழ்தல் வேண்டும்; 10
பூவேய் கண்ணி; அது பொருந்து மாறே.

கருங்குவளைப் பூவினைப் போலத் தோற்றும் கண்களை உடையவளான தலைவியே! பெரிதான மலையின் சாரற்புறத்தே, என் தமையன்மார் உழுது வித்திய கரிய அடித்தண்டினை உடைய செந்தினையின் கதிர்கள் முற்றவும் கொய்யப்பட்டன. மலைகள் சூழ்ந்த இடத்திலே இருக்கின்ற காட்டுப்பகுதி நிறைந்த சிறுகுடியிருப்பின் மென்மையான பள்ளப் புறங்களிலேயுள்ள மல்லிகையிடத்கே, அரும்புகளும் தோன்றியுள்ளன. வெள்ளிய மின்னல்களோடு இடிகள் முழக்கஞ்செய்யும் அச்சத்தையுடைய நள்ளிருட்போதிலே. 'குன்றக நாடன்' வருவான் என்பது உண்மையாமோ? உண்மையன்றோ? ஆயின், இவளது நலிவிற்குக் காரணந்தான் யாதோ?' என, நிலையாக ஆராயும் ஆய்வுத்திறனைக் கொண்ட உள்ளத்துடனே, மறைவாக நின் நோயினது காரணத்தை ஒற்றாடியறிய முயன்றவளாக, அன்னையும் கொடுமை தோன்றும் முகத்தினளாக, உறக்கமின்றி இருப்பாளாயினள். ஆதலின், நீ மேற்கொள்ளும் களவாகிய ஒழுக்கம், நின் தகுதிக்குப் பொருந்துவதாமோ என்னும் நிலையினை நின் உள்ளத்தோடு ஆராய்ந்து, நீயே முடிவுக்கு வருதல் வேண்டும்.

கருத்து : 'இனி அவனை மணந்து இல்லறமாற்ற முனைதலே நினக்குச் சிறப்பாகும்' என்பதாகும்.

சொற்பொருள் : இருங்கல் அடுக்கம் – பெரிதான மலைச் சாரல். கடியுண்ணல் – கொய்யப்படுதல். அவல் – பள்ளம். நரை – வெண்மை; மின்னொளியைக் குறித்தது. பெருமையும் ஆம். நாமம் - அச்சம் – அமரா முகம் – சினந்தோன்றும் முகம்.

விளக்கம் : தினை கடியுண்டனவாதலால், இனிப் பகற்குறிக் கூட்டம் வாயாதென்றனள். மௌவல் அரும்பின என்றதால், வரைந்து கோடற்கு உரியதான காலத்தின் வரவை உணர்த்தினள். அன்னையும் அமரா, முகத்தினள் என்றதனால், அன்னை ஐயுற்றமை கூறி இரவுக்குறி வாயாமையும் சொல்லினள். இதனால் வரைந்து வந்து மணத்தலே செய்யத்தக்கது என்பதனைக் குறிப்பாக உணர்த்தினனாம் 'நரை' – பெருமை: இதனைக் 'சுருநரை நல்லேறு' என வரும் குறுந்தொகை அடியானும் உணர்க (குறுந் 317), முல்லை மலர்ந்து கார் காலத்தைத் தெரிவித்தலை, 'சொல்லுப வன்ன முல்லை மென்முகையே' என்னும் குறுந்தொகை யடியானும் அறிசு – (குறுந் 358.4.7).

123. நோயினைக் கூறாய்!

பாடியவர் : காஞ்சிப் புலவனார்.
திணை : தெங்கல்.
துறை : தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

[(து–வி.) களவொழுக்கப் பிரிவினாலே கலங்கி வருந்தும் தலைவியது தன்மையைத் தலைவனுக்கு உணர்த்தி, விரைய வந்து அவளை வரைந்து கொள்ளுதற்குத் தூண்டுதலை நினைக்கின்றாள் தோழி. ஒரு சமயம் அவன் சிறைப் புறத்தானாதலை அறிந்தவள், தலைவிக்குச் சொல்லுவாள் போல அவனும் கேட்டுணருமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

உரையாய் வாழி, தோழி! இருங்கழி
இரைஆர் குருகின் நிரைபறைத் தொழுதி

வாங்குமடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
கானல் ஆயமொடு காலைக் குற்ற 5
கள்கமழ் அலரத் தண்நறுங் காவி
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ
வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஓடித்
புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்
சேர்ப்புஏர் ஈர்அளை அலவன் பார்க்கும் 10
சிறுவிளை யாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந்துயர் ஆகிய நோயே!

தோழீ! வாழ்வாயாக! சருங்கழியிடத்தே இரைதேடி உண்பவான கடற்புட்களின் நிரையாகிய பறவைக் கூட்டம், வளைந்த பனைமடற்கண்ணே தாம் கட்டியுள்ள கூடுகளிற் சென்று, நிறைந்த இருட்போதிலே நெருங்கி உறைந்திருக்கும். அத்தகைய பனைமரங்கள் உயரமாக வளர்ந்திருக்கும் வெண்மையான மணற்கொல்லையைச் சூழ்ந்த கானலிடத்தே நின் விளையாட்டுத் தோழியரோடுஞ் சென்று. காலையில் கொய்து கொணர்ந்த தேன் கமழும் இதழ்களையுடைய தண்ணிய நறிய காவிமலர்களை, மாறுபட்டு அழகுதரும் நெறிப்பையுடைய தழைகளுடன் அழகுபெறத் தொடுத்து உடுத்திருப்பாய், கோலமிழைத்த சிற்றிலை இழைத்துப் பின் சிறப்பாக விரைந்து ஓடியும் செல்வாய். புலவு நாற்றத்தையுடைய அலைகள் மோதிய வளைந்த கால்களையுடைய கண்டலது வேரின் கீழாக, அளையிடத்து இரண்டிரண்டாக அழகுடனே இருக்கின்ற நண்டுகளைப் பார்த்தும் மகிழ்வாய். அத்தகைய நின் சிறுவிளையாடலையும் கைவிட்டு விடும்படியாக, நீ நினைவிற்கொண்டு அடையும் பெருந்துயரத்திற்குக் காரணமாகிய நோய்தான் யாதென எனக்குக் கூறாயோ?

கருத்து : 'நின் களவுறவால் நின் செயலிடத்துப் பல மாற்றங்கள் தோன்றுவதனைப் பிறர் அறியின் அலராகுமே?' என்பதாம். விளையாடலையும் மறந்து பிரிவுப் பெருநோயால் நலிகின்றனள் என்பதுமாம்.

சொற்பொருள் : குருகு – கடற்புள்: நாரையும் ஆம். பறைத் தொழுதி – பறவைக் கூட்டம், துவன்றும் – நெருங்கி உறையும். குறுதல் – பறித்தல். காவி – செங்கழுநீர் மலர்; நெய்தல் மலரும் ஆம். நெறித்தழை –நெறிப்பையுடைய தழை; நெறிப்பு – புத்திகமது சுருண்டு விளங்கும் மெருகு. பரிதிறந்து ஓடி – ஓடுதலிற் சிறப்பாக ஓடிச்சென்று.

விளக்கம் : நெய்தனிலத்து இளமகளிர் அலவனாட்டி மகிழ்தலை உடையராவர் என்பதனை, 'பொன்வரி அலவன் ஆட்டியஞான்றே' (குறு 303:7) என்பதனாலும், மற்றும் வருவன பிறவற்றானும் அறிக (குறுந். 316 5-6, பட். 101, நற் 363:10; ஐங் 197:1), பரி – நடக்கும் கதியுள் ஒன்று. 'சிற்றிலாடிய பருவத்தேயே காதலித்து உளநிறைந்த தலைவன் உடனுறையும் இல்லற வாழ்வில் நின்னைப் பிரியாதிருந்து இன்பந்தருதலை நாடினன் அல்லனென வருந்தினையோ' என்பதாம். இவற்றைக் கேட்கலுறும் தலைவன், தலைவியின் துயரத்தை மாற்றக் கருதுவானாகப் பிற்றை நாளிலேயே வரைந்து வருவான் என்பதும் ஆம்.

124. நீங்கல் ஐய!

பாடியவர் : மோசி கண்ணத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.

[(து–வி) தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, அவனது எண்ணத்தை மாற்றக் கருதினளாக, 'அவன் பிரியின் தலைவி பெரிதும் துயருறுவாள்' என, இவ்வாறு கூறுகின்றனள்.]

ஒன்றில் காலை அன்றில் போலப்
புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்; அது தானும்வந் தன்று
நீங்கல்; வாழியர்; ஐய!—ஈங்கை
முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர்
நவ்பி நோன்குளம்பு அழுந்தென வெள்ளி 5
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத்
தெண்ணீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

துணைசேர்ந்த இரண்டனுள் ஒன்று அருகாமையிலே இல்லாத காலத்து, மற்றொன்றாகிய அன்றிலானது தனிமை தாளாதாய்ப் பெரிதும் வருந்தி இறந்து போய்விடும். அதனைப் போலத் தனிமையுற்று வாழ்ந்திருக்கும் சிறுமை கொண்ட வாழ்க்கையினை யானும் ஆற்றியிருந்து வாழ மாட்டேன். ஈங்கையின் முகையும் புனமல்லிகையின் மலரும் மணல் மேட்டினிடத்தே உதிர்ந்து கிடப்பனவாம். மானினத்தின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துமையினாலே அவை சிதையும் வெள்ளியைக் குறையிலிட்டு உருக்குதற்கமைந்த கொள்கலத்தைப்போலக், காண்பார்க்கு விருப்பஞ் செய்யும்படியாக அவற்றினின்றும் தெளிவான நீர் குமிழியிட்டு வடியும். அவை தண்ணீரைப் பெற்றுநின்ற பொழுதாகிய கூதிர்ப்பருவமாகிய அதுவும் வந்துவிட்டது. ஐயனை! இது காலை எம்மைத் தனித்து உறையவிட்டு நீதான் நீங்காதிருப்பாயாக!

கருத்து : 'நீ பிரியின் நின் காதலியும் இறந்துபடுவாள்' என்பதாம்.

சொற்பொருள் : புலம்பு – தனிமைத் துயரம். புன்கண் – சிறுமை. ஈங்கை – ஈங்கைச் செடி. அதிரல் – புனமல்லிகை. நெளவி – மான். ததைஇ – பெற்று.

விளக்கம் : அன்றிலானது இணையுள் ஒன்றை ஒன்று பிரிந்த காலத்துப் பெரும் புலம்புகொண்டு கூவிக் கூவி இறந்துபடும். அவ்வாறே பிரிவைத் தாங்காத தலைவியும் நைந்துபுலம்பி இறந்துபடுவாள் என்பதாம். தலைவிகூற்றைத் தன் கூற்றாகக் கொண்டு தோழி கூறுவது இது. உதிர்ந்த மலர்கள் மான்குளம்பால் மிதிபட்டு அழிதலுறுதலைப் போலப் பிரிந்துறையும் தலைவியும் வாடைக்கு ஆற்றாளாய் நலிந்து அழிவள் என்பதுமாம். மயங்கி இன்புற்று வாழுங்காலத்துத் துயர்செய்யாத கூதிர் பிரிவின் வாட்டத்தால் நலிவுற்றிருக்கும் காலத்துக் கொடிதாக வருத்திச் சாகடித்துவிடும் என்று கூறுவாள்; அதன் வரவைக் கூறி, அவன் பிரிவைக் கைவிடுதற்கு வேண்டுகின்றாள்.

125. மெல்லச் செல்வர்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி,
துறை: வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவியைக் தோழி வற்புறுத்தியது.
[(து–வி) தலைவன், வரையாது, இரவுங் குறியிடைத் தலைவியைப் பெற்று இன்புறுதலே சுருத்தினனாக ஒழுகி வருகின்றான். அதனை நினைத்து வருந்தும் தலைவிக்கு, அவன் அவளை விரைந்து வந்து மணந்துகொள்வான் எனக் கூறி, அவ் வருத்தத்தை மாற்றுதற்கு முயலுகின்றாள் தோழி.]

'இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடுவரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி.
நல்லரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊதுலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, 5
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம்மலை
நல்நாள் வதுவை கூடி நீடுஇன்று
நம்மொடு செல்வர்மன் தோழி! மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருதுஎறி களமர்
நிலம்கண் டன்ன அகன்கண் பாசறை 10
மென்தினை நெடும்போர் புரிமார்
துஞ்சுகளிறு எடுப்பும்தம் பெருங்கல் நாட்டே.

தோழீ! இரையினை விரும்பித் திரிகின்ற அகன்ற வாயையுடைய ஆண்கரடியானது, வளைந்த வரிகளைக் கொண்ட புற்றத்தினை வாய்ப்பாகப் பெயர்க்கும். அப்புற்றத்தினுள்ளே குடியிருக்கும் நல்லபாம்பு நடுக்கங் கொள்ளுமாறு முழக்கமிடும் கொல்லனது ஊதுகின்ற உலையினது மூக்கைப்போலச் கடுமூச்செறிந்தபடி தோண்டிக்கொண்டுமிருக்கும். அத்தகைய இரவின் நடுயாமத்தே, நீயிரும் அவ் வழியூடு வருவீர், 'அங்ஙனம் வருதலை நினைத்து யாம் பெரிதும் அஞ்சுகின்றோம்' என்று கூறி, இனி வரைந்து வருதலை அவனிடத்தே நாமும் வேண்டுவோம். அங்ஙனம் வேண்டுவோமாயின், நம் மலையிடத்தே, நல்ல நாளிலே, நம்மோடு வதுவை கூடுதலையும் அவர் நிகழச் செய்வர். அதன்பின், மேலும் காலத்தை நீட்டிக்கவிடாதாராய், வேங்கைமலர்ச் கண்ணிகளைச் சூடியவரான குறவர்கள், எருதுகளை ஓட்டிக் கதிர்களைத் துவைக்கும் உழவர்களது வயற்புறத்திற் காணுமாறுபோல, அகன்ற இடத்தையுடைய பாறையிடத்தே மென்தினையின் நெடிய போரினைத் துவைக்கும் பொருட்டாகத், தூங்கியிருக்கும் களிறுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தன்மையுடைய தம்முடைய பெரிதான மலைநாட்டிடத்திற்கு, நம்மோடும் மெல்லச் சென்று சேர்தலையும் செய்வர் காண்!

கருத்து : 'நின்னை மணந்து தம்முடன் தம் வீட்டிற்கும் அழைத்துக் கொண்டு செல்வார் தலைவர்; ஆதலின் வருத்தமுறாதே' என்பதாம்.

சொற்பொருள் : எண்கு – கரடி. பகுவாய் – அகன்ற வாய்; பிளத்த வாயுமாம். புற்றம் – புற்று வாய்ப்ப. வாங்கல் – இரை வாய்க்குமாறு பெயர்த்துத் தள்ளுதல். உரறல் – முழங்குதல். நடுநாள் – இரவின் நடுயாமம். வதுவை – திருமணம். வேங்கைக் கண்ணி – வேங்கைப் பூக்களால் தொடுக்கப்பெற்ற கண்ணி.

விளக்கம் : 'நடுநாள் வருதல் அஞ்சதும் யாம்' என்று கூறுதல், இரவுக்குறியினாள் வரும் ஏதத்திற்கு அஞ்சினேம் எனப் புணர்வுமறுத்தல் ஆகும். 'நீடு இன்று என்றது' நாளையே எனவும், அடுத்துவரும் நன்னாளில் எனவும் பொருள் தரும். 'தினையைப் போர் அடித்தற்குக் குறவர்கள் தூங்கும் களிறுகளை எழுப்புகின்ற நாடு' என்றது, தலைவனது நாட்டின் பெருவளத்தைக் கூறியதாம். 'நல் நாள் வதுவை கூடி' என்றது, நல்ல நாளினைத் தேர்ந்தே வதுவைக் கூட்டும் வழக்கத்தை உணர்த்தும்.

உள்ளுறை : 'தூங்கும் களிறுகளை எழுப்பிப் பணி கொள்ளும் குறவர்களைப்போல, யாமும் வரைதலிற் கருத்துச் செல்லாதிருக்கும் தலைவனிடத்து, அக் கருத்தினை எழச் செய்து, மணமாகிய நற்பயனைப் பெறுவேம் என்பதாம்.

இறைச்சி : கரடி புற்றிடத்துப் பாம்பினை நடுங்கி ஓடச் செய்து, தான் விரும்பிய புற்றாஞ்சோறாகிய இரையினைக் கைக் கொண்டு இன்புறுதலைப் போல, அவனோடு மணம்பெற்றுக் கூடியதும், நின் பசலை நோயை மாற்றி, நின்னைக் கூடி அவனும் இன்புற்று, நினக்கும் இன்பரு செய்வான் என்பதாம்.

126. வாய்க்க நின் வினை!

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
[(து–வி.) பொருனின் பொருட்டுத் தலைவியைப் பிரித்து வேற்றுநாடு செல்ல நினைத்தான் தலைவன் ஒருவன். ஆனால், தலைவியைப் பிரிவதற்கும் மனமில்லை! ஆகவே, தன் நெஞ்சிடம் இப்படிக் கூறியவனாகத் தன் போக்கினை நிறுத்தி விடுகின்றான்.]

பைங்காய் நல்லிடம் ஓரீஇய செங்காய்க்
கருங்கனி ஈந்தின் வெண்புறக் களரி
இடுநீறு ஆடிய கடுநடை ஒருத்தல்
ஆள்பெறல நசைஇ நாள்சுரம் விலங்கித்
துனைதரும் வம்பலர்க் காணாது அச்சினம் 5
பனைக்கான்று ஆறும் பாழ்நாட்டு அத்தம்–
இறந்துசெய் பொருளும் இன்பம் தரும்எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை, வளமை
காமம் தருதலும் இன்றே, அதனால் 10
நில்லாப் பொருட்பிணிச் சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்கநின் வினையே!

நெஞ்சமே! ஈந்தின் நல்ல மேற்புறத்து எம்மருங்கும் விளங்கிய பசுங்காய்கள் காலத்தால் முதிர்ந்து செங்காய்களாகிப், பின் கருங்கனியாய் முதிர்ந்து உதிர்தலையும் செய்யும். அத்தகைய ஈந்த மரங்களை உடையது வெளிய புறத்தினை உடையதான களர் நிலம். கடிய நடையை உடைய களிறொன்று, அக் களரிடத்தே நடந்து வருதலாற் படிந்த வெண்புழுதியை உடையதாயிற்று. அஃது அதன்பின் வழிவருவாரைக் கொல்லுதலை விரும்பியதாய், விடியற் காலத்தே அச்சுரத்தின் கண்ணே குறுக்கிட்டுச் சென்றது. விரைய வந்தபடியிருக்கும் புதியவர் எவரையும் காணாதாய்ச் சினமிகுந்ததாயிற்று. அங்குக் கண்ட பனைமரத்தை மோதிச் சாய்த்துச் சினம் தணிந்தது. பாழ்த்த நாட்டிடத்தான வழியின் தகைமை அத்தகையது! அதனைக் கடந்து சென்று நாம் ஈட்டிவரும் பொருளும் நமக்கு ஓரளவிற்கு இன்பந் தருவதுதான். எனினும், இளமைப் பருவத்தினைக் காட்டினும் காமநுகர்ச்சிக்குரிய வளமான பருவம் யாதுமில்லை. இளமை கழிந்ததன் பின்னர்ப் பொருளினது வளமையானது காமலின்பத்தைத் தருதல் கூடும் என்பதோ கிடையாது. அதனாலே, நிலையற்றதான பொருளாசையென்னும் பிணியின்பாற் கடிதாகச் செல்லுகின்றனையாகிய நீயும், அங்ஙனமே, அதன்பாலேயே செவ்வாயாக! நின் செயல் நினக்கு வந்து வாய்ப்பதும் ஆகுமாக!

கருத்து : 'நிலைநில்லாப் பொருளின்பாற் பற்றோடு செல்லுதலைக் கைவிட்டு விடுவாயாக' என்பதாம்.

சொற்பொருள் : பைங்காய் – பசுங்காய். நல்ல இடம் – நல்ல மேலிடம். கருங்கனி – ஈந்தின் பழம் சுனிந்து திரைந்து தோன்றும் தன்மை. ஒருத்தல் – களிற்றுத் தலைவன், பனைக்கான்று – பனையை மோதிச் சாய்த்து. களரி – உப்புப் பூத்த பாழிடம்.

விளக்கம் : 'ஈந்தின் பசுங்காய் முதிர்ந்து செங்காயாகிப் பின் கனிந்து களிப்பட்டு உதிர்தலைப் போன்றே உடலது தன்மையும் முதிர்ந்து தளர்ந்து அழியும்' என, யாக்கையது நிலையாமை கூறினன். பொருள் வளமை சேர்ப்பதாயினும் காட்டது கடுமையும், காட்டிடை வந்துறும் கொடுமையும் இடைக்கண்ணும் யாக்கையை இழக்குமாறு செய்து, பொருளினைத் தேடவியலாதும், அதனாலே வந்தடையும் இன்பத்தை நுகரவிடாதும் இரண்டனையுமே அழிவுறச் செய்தலும் கூடும் என்பான், 'பொருள் தானும்தேடிப் பெறுவதற்கு அரிதாகும்' என உரைத்தனன் தனால் இளமையில் இன்புற்றுப் பருவநலத்தை நுகர்தலே தக்கதென்பானாய், பொருள் தேடிவரலிற் சென்ற தன் நெஞ்சத்து நினைவையும் நோகின்றான் என்று கொள்க.

ஒப்பு : 'வளமையான் ஆகும் பொருளிது என்பாய் இளமையும் காமமும் நின் பாணி நில்லா, என வரும் கலித்தொகை யடிகளும் (கலி: 12:11-2) இளமை நிலையாமையினை வலியுறுத்தும். ஆனால், 'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்' எனக் குறுந்தொகை (குறு- 126:1) கூறுவது, சிலர், இவ்வாறு மனவுறுதியினராய்ச் செல்லுதற்குத் துணிவர் என்பதையும் காட்டும்.

127. வந்தால் பயனென்ன?

பாடியவர் : சீத்தலைச் சாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : பாணற்குத் தோழி வாயின் மறுத்தது.

[(து–வி.) பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வருகின்றான் அவனது பாணன். அவனிடத்தே, தலைவி தலைவனை ஏற்பதற்கு விரும்புகின்றனள் என்பதனை இப்படித் தோழி உரைக்கின்றாள்]

இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை
இறஎறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன்வரின் எவனோ? பாண! பேதைக்

கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த
கல்லாக் கதவர்தன் ஐயர் ஆகவும் 5
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்
'மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம்' என்னும், 'கான லானே'

பாணனே! கொழுமையான மீன்களை உண்ணுதலையுடைய பெரிதான மாளிகையிடத்தே நிறைந்திருப்போர் இப்பேதையது தமையன்மார்கள். அவர்கள் கல்வியினாலே தெளிவுபெறாத சினத்தைக் கொண்டிருப்போரும் ஆவர். அங்ஙனமாகவும். முற்காலத்தே வண்டலிழைத்து விளையாடிய தன் ஆய மகளிரோடுஞ் சேர்ந்து, தான் பாவை விளையாட்டு அயர்ந்த ஈனாப்பாவையினைத் தலைக்கீடாகக் கொண்டாளாக, 'மெல்லிய கடற்கரைச் சேர்ப்பனான நம் தலைவனை அல்லாதேயும், யாம் கானற்சோலையிடத்திற்குச் செல்வோம்' என்பாள் அவள். அதனாலே, கரிய கழியினைத் துழாவிய ஈரிய புறத்தையுடைய நாரையானது, இறாமீனைப் பற்றுங்காலத்தே எறிகின்ற திவலையினாலே நடுக்கங்கொள்ளும் நமது பாக்கத்திலே, அத் தலைவன் வருதலினாலேதான் யாது பயனோ? அவன், இனி இவ்விடத்து வாராதேயே இருப்பானாக!

கருத்து : 'தலைவனைத் தலைவி அறவே வெறுத்துவிட்டாள்' என்பதாம்.

சொற்பொருள் : துழைஇய – துழாவி மீன் தேடிய. ஈர்ம் புறம் – ஈரமாகிய புறத்தையுடைய நாரை. இற – இறாமீன். செழுநகர் – வளமான மாளிகை. கதம் – சினம்; கதவர் – சினத்தை உடையோர். ஈனாப் பாவை – பஞ்சாய்க் கோரையினாலே புனைந்த பாவை. புலம்பன் – நெய்தனிலத் தலைவன்.

விளக்கம் : "தலைவன் பண்டு பாவை விளையாட்டு ஆடிய காலத்தேயே தலைவியால் காதலிக்கப் பெற்றவன்; அவள் கல்லாக் கதவரான தன் ஐயன்மார் வீட்டிலிருப்பவும், தலைவனை நாடிக் கானற்சோலையிடத்துத் துணிந்துவந்த களவினை உடையவள்; அந்த நன்றிதானும் மறந்த அவனை அவளும் மறந்தாள்; இல்லிலிருந்து கூடி இன்புறுதற்குரிய இக்காலத்தேயும், முன்போற் சிறுமியான பருவத்து விளையாட்டு நினைவால், கானற்சோலைக்குச் செல்வாளும் ஆயினாள்" என்கின்றாள் தோழி.

உள்ளுறை : கழியைத் துழாவி இரைதேடும் நாரை, தன் மேனிப்புறமெல்லாம் நனைந்திருப்பவும், இறவெறிதிவலையாற் பனிக்கும் தன்மைத்தாகும் பாக்கம் என்றாள்; பரத்தையின் இன்பத்தை நாடித்திரியும் தலைவனது புதிய உறவைக் குறித்தெழுந்த பழிச்சொற்கள் பாக்கமெல்லாம் நிறைந்ததாக, அதனைக் கேட்ட யாமும் நடுங்கினேம் என்கின்றாள்.

128. நினைந்த நெஞ்சம்!

பாடியவர் : நற்சேந்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) குறைநேர்ந்த தோழி தலைவி குறைநயப்பக் கூறியது. (2) தோழிக்குத் தலைவி அறத்தோடு நின்றது.

[(து–வி) (1) தலைவனுக்குத் தலைவியை இசைவிக்கச் செய்வதற்கு உதவுவதாக வாக்களித்த தோழி, தலைவிபால் வந்து, அவள் மனம் தலைவன்பாற் செல்லுமாறு கூறுவது; (2) வேற்று வரைவுக்கு அஞ்சினளான தலைவி, தன் களவினைத் தோழிக்குப் புலப்படுத்தித் தனக்கு உதவுமாறு கேட்டல்.]

'பகல்எரி சுடரின் மேனி சாயவும் பாம்புஊர் மதியின் நுதல்ஒளி கரப்பவும் எனக்குநீ உரையா யாயினை; நினக்குயான் உயிர்பகுத் தன்ன மாண்பினேன் ஆகலின் அதுகண் டிசினால் யானே என்றுநனி 5 அழுதல் ஆன்றிசின் ஆயிழை! ஒலிகுரல் ஏனல் காவலி னிடையுற்று ஒருவன் கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச் சிறுபுறம் கவையின னாக, அதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு 10 இஃதுஆ கின்று, யான் உற்ற நோயே,

"ஆராய்ந்து அணிந்த அணிகளை உடையாய்! பகற்போதிலே எரிகின்ற சுடர்விளக்கின் ஒளியானது குன்றிக் காணுமாறு போல நின் மேனியின் ஒளியும் இதுபோது ஒளி குறைந்தது. பாம்பினாலே கவ்விக்கொள்ளப்பட்ட மதியினது தன்மைபோலப் பசலையாற் கொள்ளப்பெற்ற நின் நெற்றியது ஒளியும் மறைந்தது. ஆயினும், எனக்கு நீ அதன் காரணத்தை உரையாய் ஆயினை. நினக்கு யான்', 'ஒரே உயிரை இரண்டுடலின் கண்ணே பகுத்துவைத்தாற் போன் ஒன்றுகலந்த அன்புமாட்சியினை உடையவளாதலினாலே அந்த மாற்றங்களைக் கண்டேன்' எனக் கூறியவளாக மிகவும் என்னைக் குறித்து வருந்தி அழுகின்ற அதனைக் கைவிடுவாயாக!

தலைசாய்ந்து முற்றிய கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காத்திருந்த காவற்போதிலே, ஒருவன் ஒருநாள் என்முன் வந்தடைந்தான். தலையிற் கண்ணி சூடியவனாகவும், கால்களிற் கழல்களைக் கொண்டோனாகவும், மார்பில் தாரினை அணிந்தோனாகவும், என் உள்ளம் தண்மை அடையுமாறு என் முதுகை அணைத்தும் நின்றான். அது முதற்கொண்டு அந்த இன்பத்தையே நினைந்த நெஞ்சத்தோடு யான் அடைந்த நோயும் இத்தன்மைத்தாக ஆகிவிட்டது!

கருத்து : இது தோழி கூற்று. இதனைக் கேட்டலுறும் தலைவி தலைவனுக்கு அருள்செய்ய இணங்குவாள் என்பதாம்.

சொற்பொருள் : சுடர் – சுடர் விளக்கு. சாய்தல் – ஒளி குன்றுதல். பாம்பு – இராகு கேதுக்கள். கரப்பவும் – மறைக்கவும். உயிர் பகுத்தன்ன மாண்பு – ஈருடலும் ஓருயிருமாய் ஆயின நட்பின் செவ்வி. அழுதல் ஆன்றிசின் – கழுதலைக் கைவிடுக. தண்ணென்று – குளிருமாறு. சிறுபுறம் – முதுகு.

விளக்கம் : தோழி கூறியதாகக் கொள்ளின், அவள் ஒருவன் வந்து தன்னைத் தழுவியதாகக் கூறியமையும் பிறவும் படைத்துமொழிதலே எனக் கொள்க. புனத்தயல் வருபவன் தன் காதலனே யாதலின், தலைவி, தன்பால் கொண்ட காதற் பெருக்கினாலே அவன் பிற மாதரை அணையான் என்பதனை உணர்ந்து, அவன்பாலே நெகிழ்ந்து செல்லும் உள்ளத்தினளாவாள் என்பதாம்.

அறத்தோடு நிற்றலாகக் கொள்ளின் தலைவி கூற்றாகும். அப்பொழுது தன்னை அதுகாறும் மறைத்தமைக்கு நாணியவளாக, அவள் தோழிக்குத் தன் களவுறவைக் குறிப்பாகப் புலப்படுத்தினளாகவும், தன்னையர்க்கு அறிவித்து அறத்தொடு நிற்றற்கு வேண்டினளாகவும் கொள்க.

மேற்கோள் : 'தோழி வினாவிய வழித் தலைவி கூறியதற்கு மேற்கோளாகத் தொல்காப்பியக் களவியற் சூத்திர உரையுள் (சூ. 21) இச்செய்யுனை நச்சினார்க்கினியர் காட்டியுள்ளனர்.

129. வாழ்தும் என்ப!

பாடியவர் : ஔவையார்.
திணை : குறிஞ்சி.
துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது.

[(து–வி.) தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகள்பாற் சென்று, ஏதிலார் உரைப்பத் தான் கேட்டது போல இப்படிச் சொல்லி, அவள் தனக்கு எதிராக முகத்தைத் திருப்புமாறு முயல்கின்றனள். முகத்தை எதிராகத் திருப்பியதும், அவனது பிரிவுக்கு உடன்படுதலே மனைவியது கடனென உணர்த்தி இசைவிப்பது அவள் கருத்தாதலும் அறியப்படும்.]

பெருநகை கேளாய், தோழி! காதலர்
ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம்
பொம்மல் ஓதி! நம்இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே; சென்று
தம்வினை முற்றி வரூஉம்வரை நம்மனை 5
வாழ்தும் என்ப நாமே; அதன்தலை
கேழ்கிளர் உத்தி அரவுத்தலை பனிப்பப்
படுமழை உருமின் உரற்றுகுரல்
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே

தோழி! காதலர் ஒருநாட் பொழுதின் அளவுமட்டுமே நின்னைப் பிரிந்து சென்றாராயினும், நின்னுயிரது தன்மையிலே அந்தப் பிரிவையும் தாங்காதே வேறுபாடுற்று நலிகின்ற, பொலிவுற்ற கூந்தலை உடையவளே! யாவரும் பெரிதும் நகை கொள்ளத்தக்கதான செய்தி ஒன்றனையும் கேட்பாயாக! 'நம்மை இவ்விடத்தே தனித்திருக்குமாறு விட்டுப்பிரிந்து அவர்தாம் வேற்றுநாட்டிற்குச் செல்வார்' என்பார்கள். அதற்கும் மேலாக, 'நிறம் விளங்கிய படத்தினையுடைய பாம்பினது தலை நடுங்கும்படியாகப் பெய்கின்ற மழை இடையிட்ட இடியினது முழங்கும் முழக்கத்தை, இரவின் நடுயாமத்தும் கேட்டபடியே அங்ஙனம் அவர் சென்று தம்முடைய செயலை முடித்து வருகின்றதன் வரைக்கும், நாம்தம் மனையிடத்திருந்து அவர் பிரிவைப் பொறுத்தேமாய் வாழ்ந்திருப்போம்' என்றும் கூறுவார்கள். இஃதென்னவோ?

கருத்து : 'தலைவர் பொருள் செய்தற்கு நெடுநாட் பிரிந்து போயினராயின், அப் பிரிவைப் பொறுத்திருத்தல் நம் கடன்' என்பதாம்.

சொற்பொருள் : நகை – நகைத்தற்கு உரிய செய்தி. பொம்மல் ஓதி – பொலிவான கூந்தல்; பொலிவு – நீண்டடர்ந்து கருமையுடன் திகழ்தல். கேழ் – நிறம். உத்தி – பாம்புப் படம். தமியம் – தமியராயிருத்தற்கு நேர்ந்த யாம்.

விளக்கம் : 'பிரிந்தால் நாம் அவர் வரும்வரை உயிரைப் பொறுத்து ஆற்றியிருப்போம்' எனக் கருதினராயின் அவர் நினைப்பு நகைத்தற்கிடமாகும் என்கின்றனள். கூடிமுயங்கியிருப்பார்க்கும் அச்சம் விளைக்கும் மழைக்காலத்து இடியோசையைத் தனித்திருந்து கேட்பின் உயிர்துறப்போம் அல்லேமோ என்கின்றனள். தம் நிலைமை இஃதாயினும் அவர் பிரிவர் என்றும், தாம் வாழ்வோம் என்றும் கூறும் ஊரவரது பேச்சு நகைத்தற்கு உரியதாகும் என்றும் கூறுகின்றாள். இதனால் தெளிவுற்றுத் திரும்பும தலைவியை மெல்ல மெல்ல ஆடவர்க்குரிய கடமைப்பாட்டினை எடுத்துக் கூறுதல் மூலம், பிரிவைப் பொறுத்தற்குரிய நிலைக்குப் பக்குவப் படுத்துதலே தோழியின் கருத்தாகும்.

ஆடவர் வினைவயிற் பிரியும் காலத்து மனைவியரும் உடன்போகும் வழக்கம் அக்காலத்தே நிலவவில்லை: அவர் மனைக்கண் இருந்து ஆற்றியிருப்பதே கடமையாகக் கருதி வாழ்ந்தனர்; இதனை 'நம் மனை வாழ்தும்' என்ற சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன.

130. உயவுத் துணை!

பாடியவர் : நெய்தல் தத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது.

[(து–வி.) 'தலைவனது பிரிவினாலே மெலிவுற்ற தலைவி, தன்னைப் பொறுத்திருக்க' எனக்கூறி வற்புறுத்திய தோழிக்குத் தன் துயரநிலைமையை விளக்குவாளாக இவ்வாறு கூறுகின்றாள்.]

வடுவின்று நிறைந்த மான்தேர்த் தெண்கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பக்
கோலின் எறிந்து காலைத் தோன்றிய

செந்நீர்ப் பொதுவினைச் செம்மல் மூதூர்த்
தமதுசெய் வாழ்க்கையின் இனியது உண்டோ? 5
எனை விருப் புடையர் ஆயினும் நினைவிலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி, நீடாது
எவன்செய் தனள்;இப் பேர்அஞர் உறுவி?' என்று
ஒருநாள் கூறின்று மிலரே; விரிநீர் 10
வையக வரையளவு இறந்த
எவ்வ நோய்பிறிது உயவுத்திணை இன்றே.

மடித்துப் போர்த்த தோலாகிய முகப்பையுடைய தெளிவான ஓசைகொண்ட தண்ணுமையானது நடுநடுவே ஆர்ப்பரிக்கக், குற்றமின்றி எல்லா நல்லிலக்கணமும் நிரம்பிய குதிரைகள் பூட்டிய தேரிலேறியமர்ந்து, குதிரைகளைக் கோலால் எறிந்து செலுத்தியபடி, நாட்காலையிலே நம் இல்லின் புறத்தேயும் தோன்றினார் அவர். செவ்விய நீர்மை கொண்ட பொது நன்மைக்கான செயலைச் செய்யும் தலைவராகிய அவர்க்கு, இம்மூதூரிடத்தே தமதாகச் செய்யும் இல்வாழ்க்கையினுங் காட்டில் இனியதொரு பொருளும் உண்டாகுமோ? நம்பால் எவ்வளவோ விருப்புடையவர் ஆயினும், அவர் அந்த நினைவே இல்லாதாராயினர. அவரையே துணையாக வரித்த என் நெஞ்சத்து உறுதியையும், பிரிவால் நெகிழ்ந்துபோன என் தோள்களையும், என் வாடிய மேனியின் இரேகைகளையும் நோக்கி நீட்டியாது, விரையத் திரும்பி வந்தவராய், 'இப் பெரும் துன்பத்தினை அடைந்தவள் என்ன காரியத்தைச் செய்தனள்?' என்று ஒரு நாளேனும் இரக்கத்தோடு கூறினவரும் அல்லர். விரிந்த கடலால் சூழப்பெற்றுள்ள வையத்தின் எல்லையளவுக்கும் கடந்துபோயினதான இத் துன்ப நோய்க்குப், பிறிதாக அமையும் உசாவுத் துணையாகக் கூடியதும் உலகிடத்து யாதுமில்லையே!

கருத்து : 'அவர் பிரிவை இனியும் தாங்குவதற்கு என்னால் இயலாது' என்பதாம்.

சொற்பொருள் : வடு – குற்றம்; குதிரைகட்குக் கூறப்படும். தீய மச்சக்குறிகளும் ஆம். மான் – குதிரை. தெண் – தெளிந்த, நடுவண் – இடையிடையே கோல் – குதிரையைச் செலுத்தும் தாற்றுக்கோல். செந்நீர்ப் பொதுவினை செவ்விய நீர்மை கொண்ட பொதுக் காரியம் வரி – ரேகை கள் உயவுதல் –உசாவுதல்.

விளக்கம் : அன்புடையராதலின் விரைந்து மீள்வர்'– எள வலியுறுத்தினாளுக்கு, 'எனை விருப்புடையர் ஆயினும் இது காலை நினைவிலர்' என்று எதிருரைக்கின்றனள். "நினைவினராயின் ஒரு நாட்கூட, எவன் செய்தனள்; இப் பேரஞர் உறுவி" எனக் கூறின்று மிலரே" எனத் தன்னைப் பற்றி அறிந்து வருவதற்குத் தூதேனும் விடுக்காமையைக் காட்டிப் புலம்புகின்றனள், 'பிறிது உயவுத்துணை இன்று' என்றது, தோழிதான் தூதுரைத்து விரையத் திரும்புமாறு அவரைத் தூண்டினாளும் அல்லள்' என்ற மனக்குறையைக் காட்டுமுகத்தான் ஆம்.

'செந்நீர்ப் பொதுவினைச் செம்மல்' என்றது, தலைவன் பொதுவினையாகிய நாட்டின் காவலைக் கருதிச் செல்லும் தலைமைப்பாட்டினை உடையவன்' என்பதனால், அதன்கண் செந்நீர்மை கொண்டொழுகுவான் தன்னளவில் அதனைக் கைவிட்டதுதான் எதனால என்பாள், தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?!' என்கின்றனள்.

131. ஊடல் உடையமோ?

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : மணமனையிற் பிற்றைஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது சிறப்பு. பெரியனுக்குரிய பொறையாற்றுப் பட்டினத்தின் சிறப்பு.

[(து–வி) மணம் பெற்றதன் பிற்றை நாளில், 'இதுகாறும் தலைவியை நீதான் நங்கு ஆற்றுவித்துக் காத்து தந்தாய்; நீ மிகவும் பெருந்தகைமை உடையை' எனத் தலைவன் தோழியைப் பாராட்டுகின்றான். அவனுக்குத் தலைவியின் அளப்பரிய காதன்மையை உரைத்து, அதுதான் அதனாலேயே இயல்வதாயிற்று என்கின்றாள் தோழி]

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவுநெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர்மணற் சேர்ப்பர்!
திரைமுதிர் அரைய தடந்தாட் தாழைச்
சுறவுமருப்பு அன்ன முட்தோடு ஒசிய 5

இரவுஆர் இனக்குருகு இறைகொள இருக்கும்
நறவுமகிழ் இருக்கை நல்தேர்ப் பெரியன்
கள்கமழ் பொறையாறு அன்னஎன்
நல்தோள் நெகிழ மறத்தல் நுமக்கே?

உயரமான மணல் மேடுகளைக் கொண்ட கடற்கரை நாட்டிற்குரிய தலைவனே! வளைந்த அடிமரத்தையுடைய தாழையானது திரைத்தல் பொருந்திய அடிமரத்தைக் கொண்டதாகவும் விளங்கும். சுறாமீனின் கொம்பினைப் போல இருபுறமும் முட்களையுடைய அதன் இலைகள் முறிந்து சாயும்படியாக, இறாமீனைத் தம் இரையாகக் கொள்ளும் நாரைக்கூட்டம், தங்குதல்கொள்ள அதன்மேல் வீற்றிருக்கும். அத்தகையதும், கள்ளை உண்ணுதலானே களிப்பு மிகுந்திருப்பதுமான ஊரிடத்தே இருக்கை கொண்டிருப்பவன். நல்ல தேரினைக் கொண்டவனான 'பெரியன்' என்பவன். கள்மணம் மணந்தபடியிருக்கும் அவனுடைய 'பொறையாறு' என்னும் ஊரைப்போன்ற, நலம்வாய்ந்தன எம் தோள்கள். அவற்றை மறுத்தல் நுமக்குத்தான் பொருந்துமோ? விளையாட்டயர்ந்து களித்த தொழிற்பாட்டினையும், தங்கியிருந்து இன்புறுதற்குரிய பொழிலினையும் நினைத்தற்கு இயலாதபடி பெருகிய வருத்தமிகுந்த நெஞ்சத்துடனே நும்பால் ஊடுதலையும் யாம் உடையேமோ?

கருத்து : 'நின்பாற் கொண்ட எமது காதன்மையும், அதனை மறவாது பேணிய நின் பெருந்தன்மையுமே தலைவியை இதுகாறும் ஆற்றியிருக்கச் செய்தது' என்பதாம்.

சொற்பொருள் : ஆடியதொழில் – விளையாட்டயர்ந்த தொழிற்பாடு. உயவு – வருத்தம். திரை – திரைத்தல். தடந்தாள் – வளைந்த அடி; பெருத்த அடியுமாம். சுறவு – சுறா மீன். முள்தோடு – முட்களையுடைய இலை; தாழையின் இருபுறமும் விளங்கும் முட்கள் கொண்ட இலை சுறவின்கோட்டை ஒப்பாகக் காட்டுவதாம்

விளக்கம் : 'நீரும் எம்மை மறந்திலீர், யாமும் நும்பால் ஊடினமாய்ப் பிறவற்றால் எம் பிரிவுத்துயரை மாற்றுதற்கு முயலாது, நும் வாய்மையே துணையாகக் கொண்டு ஆற்றியிருந்தேம்' என்பதாம் ஆடிய தொழிலையும் அல்கிய பொழிலையும் இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் வாய்த்த களவுப்புணர்ச்சியும் பெற்ற குறியிடத்து நினைவினாற் கூறினளாகலாம். 'ஊடலும் உடையமோ?' என்றது. சொற்பிழையானாய் வருவன் என்ற உறுதியினால் ஆற்றியிருந்தமை கூறியது. இதனால், 'ஆற்றியிருந்த அவர்களினுங் காட்டிற் சொற்பிழையானாய் வரைவொடு வந்து மணந்து கொண்ட அவனே பெரியவன்' என்றனளுமாம்.

உள்ளுறை : 'தாழைத் கோட்டின்மீது இறவார் குறுகினம் இறைகொள இருக்கும்' என்றது, அவளுடைய பிரிவுத்துயர் நிரம்பிய உள்ளத்திலே நீயிர் கணப்பொழுதும் பிரியாது வீற்றிருந்திர்' என்பதாம்.

132. இன்றே போலும்!

பாடியவர் : ......
திணை : நெய்தல்,
துறை : காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

[(து–வி) இற்செறிக்கப்பட்டுக் காவலும் மிகுதியாயிற்று. அதனாலே தலைவனைச் சந்திக்க இயலாமற் போயின தலைவியது ஆற்றாமையும் மிகுதியாகின்றது. அவள் துயரத்தை மாற்றக் கருதிய தோழி, இவ்வாறு அவளுக்குக் கூறுகின்றன.]

பேர்ஊர் துஞ்சும் யாரும் இல்லை
திருந்துவாய்ச் சுறவம் நீர்கான்று ஓய்யெனப்
பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண்வளி
போர்அமை கதவப் புரைதொறும் தூவக்
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல்நகர்ப் 5
பயில்படை நிவந்த பல்பூஞ் சேக்கை
அயலும் மாண்சிறை யதுவே; அதன்தலை
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும்
யாமம் கொள்பவர் நெடுநா ஒண்மணி
ஒன்றுஎறி பாணியின் இரட்டும் 5
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?

இப் பேரூரின்கண் உள்ளார் யாவருமே துயில்கின்றனர். எமக்கு உசாத்துணை யாவாரும் எவரும் இலர். திருந்திய வாயை உடையதான் சுறாமீனானது நீரைச் கக்குதலால் முழக்கம் எழுகின்றது. 'பெருந்தெருவின்கண் பெயலும் மழைத்துளிகளை உதிர்க்கின்றது. குளிர்ந்த காற்றானது அந்த நீர்ப்பெயலைத் தன்னோடும் சேர்த்துக்கொண்டு, பொருந்துதல் அமைந்த வாயிற் கதவிடத்துள்ள துளைதோறும் கொண்டு தூவுகின்றது. அத்தூவல் நீர் படவும், கூரிய எயிற்றவான காவல் நாய்கள் நடுங்குகின்றன. இத் தன்மைப்பட்ட பொழுதிலே, நம் நல்ல மாளிகையிடத்தே துயிலுதற்காகப் பலவடுக்கு மலர்மெத்தைகளால் அமைக்கப் பெற்றுள்ள உயர்த்த படுக்கையிடத்தின் அயலிடத்தும், மாட்சிப்பட்ட சிறைக்காவலாக உள்ளது. அதற்கும் மேலாகக், 'காவலையுடைய முன்புற வாயில்களைப் பாதுகாத்திருங்கள்' என்று கூவாநின்ற, யாமந் தோறும் காவல் மேற்கொள்ளும் காவலரது நெடிய நாவினையுடைய ஒள்ளிய மணியினை ஒன்றி எறிதலால் தாளத்தோடு ஒலிக்கும் ஓசையும் கேட்கின்றது. இரங்கத் தக்காளான யான்தான் இறந்தொழிதற்குரிய இறுதிநாளும் இன்றுதானோ?

கருத்து : 'இன்று தலைவரைக் காணமாட்டோம்' என்பதாம்.

சொற்பொருள் : பேரூர் – பெரிய ஊர்: பெருமை கொண்ட ஊரும் ஆம். யாரும் இல்லை – தெருவில் எவரது நடமாட்டமும் இல்லை. நீர் கான்று – நீரைக்கக்கி. எகினம் – நாய். நகர் – அரண்மனை. சிவந்த – உயர்ந்த, மாண்சிறை – மாட்சிப்பட்ட சிறை காவல். யாமங்கொள்பவர் – இராக் காவலர். இவர்கள் யாமத்தை அறிவிக்கக் கோட்டைவாயிற் காவலர்கட்கு மணியொலிமூலம் நாளிகை தோறும் எச்சரிக்கை செய்வர் என்பதாம். பாணி – தாள அமைதி; இரட்டும் – ஒலிக்கும். பொன்றுதல் – இறந்து ஒழிதல்

விளக்கம் : 'ஊர் உறங்கியிருக்கும் நேரத்தினும், சுறாவின் ஆரவாரம் அவரது வருகையைத் தெரிவிக்கின்றது. நாய்கள் நடுங்கிப் பதுங்கினவாதலால் அவற்றாலும் தொல்லையில்லை. நாம் அவரிடத்தே செல்வேமென்றால் படுக்கைக்கு அயலிலேயே சிறைகாவல் மிகுதியாயிருக்கிறது. அவர்தாம் நம் மாளிகைக்குள் வருவதும் காவலரது விழிப்புக் குரலாலும் பிறவற்றாலும் இயலுமாறில்லை ஆதலின், இரங்கத்தகுந்த யான் இன்று அவரை அடையப் பெறாதேயே இறந்தே போவேன் போலும்' என்கின்றாள். தோழிதான் இப்படிக் கூறத், தலைவி அவளது துயரினை ஆற்றுவதற்கு முயல்வாளாகத், தன் துயரை மறந்திருப்பாள் என்பதாம்.

133. சிறிது பாதுகாவல்!

பாடியவர் : நற்றமனார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரைவிடை வைத்துப் பிரிவாற்றாளாய் தலைவி வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.

[(து–வி) வரைவிடை வைத்து வரைதற்குரிய பொருளை ஈட்டிவருதற் பொருட்டாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கின்றான். அந்தப் பிரிவினுக்கு ஆற்றாளாய்த் தலைவி வருந்த, "அவன் சொற்பிழையானாய் வருவன்" என்று வற்புறுத்துகின்றாள் தோழி. அவளுக்குத் தலைவி சொல்வது இது.]

'தோளே தொடிகொட்பு ஆனா; கண்ணே
வாள்ஈர் வடியின் வடிவுஇழந் தனவே
நுதலும் பசலை பாயின்று திதலைச்
சில்பொறி அணிந்த பல்காழ் அல்குல்
மணிஏர் ஐம்பால் மாயோட்கு' என்று 5
வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற
நாம்உறு துயரம் செய்யலர் என்னும்—
காமுறு தொழி! காதல்அம் கிளவி,
இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
தோய்மடற் சில்நீர் போல 10
நோய்மலி நெஞ்சிற்கு ஏமம்ஆம் சிறிதே.

என்பால் விருப்பமிகுந்தாளான தோழியே! "தேமலின் சிலவாய புள்ளிகளை அழகாகப் பெற்றிருக்கின்ற பலவாகிய வடங்களையுடைய காஞ்சியை அணிந்த அல்குல் தடத்தையும் நீலமணி போன்ற கூந்தலையும், மாமை நிறத்தையும் உடையவளான இவளுக்குத் தோள்கள்தாம் சுழன்று கழலப் பெற்ற வளைகளை உடையவாயின; கண்களும் வாளாற் பிளந்த மாவடுவைப் போன்ற தம்முடைய வடிவை இழந்தன; தெற்றியும் பசலை படர்ந்ததாயுள்ளது" என்று, இவ்வண்ணமாகக் கொடியன பேசும் வாயினரான அலவற் பெண்டிர்கள் பழிச்சொல் எடுத்துத் தூற்றுகின்றனர். அங்ஙனமாகவும், நாம் 'அடையும் துயரத்தை நம் தலைவர் செய்வார் அல்லர்'. என்று காதற்கியைந்த அழகிய பேச்சினை நீயும் கூறுகின்றனை. இதுதான், இரும்புத் தொழிலைச் செய்கின்ற கொல்லனது வெம்மைமிக்க உலையிடத்தே பனைமடலிலே தோய்த்துத் தெளித்த சிலவாகிய நீர்த்துளிகளைப் போலக், காமநோய் மிகுந்த என் தெஞ்சிற்குச் சிறிதளவு பாதுகாவலாய் இராநின்றது காண்!'

கருத்து :'நின் பேச்சுச் சிறிது ஆறுதல் தருகின்றது; அவரை அடைந்தாலன்றி என்னுறு நோய்தான் நீங்காது' என்பதாம்.

சொற்பொருள் : 'தொடி – தோள் வளை. கொட்பு ஆனா – சுழன்று சுழலுதலின் நீங்கிற்றில. வடி – மாவடுவின் பிளப்பு, பசலை – பசலைநோய். திதலை – தித்தி; தேமற் புள்ளிகள். ஐம்பால் – ஐவகையாகப் பகுத்து முடிக்கப்பெறும் கூந்தல். மாயோள் – மாமை நிறத்தை உடையாள்; கரு – நிறத்தை உடையாளும் ஆம். கெளவை – பழிச்சொற்கள்

விளக்கம் : 'கொல்லனது உலைச்சூடானது, பனைமடலில் தோய்த்துத் தெளிக்கும் சிலநீராற் சிறிததளவேனும் தணிவது போலத், தலைவரின் பிரிவினாலே உற்ற காமநோயானும் ஊர்ப்பெண்டிரது பழிச்சொற்களானும் கொதிப்படைந்த என் நெஞ்சிற்கு நின் ஆறுதலுரைகள் சிறிது ஆறுதலைத்தருகின்றன' என்கின்றாள் தலைவி. தோழியின் அன்புறு கிளவியைப் பாராட்டினாலும், தலைவர் வந்தடைந்து ஊரவரது பழிச்சொற்களும் நிற்குங் காலத்தேதான் தன்மனம் முற்றவும் அமைதியடையும் எனவும் குறிப்பாகத் தன் நிலையினைப் புலப்படுத்துகின்றாள்

மேற்கோள் : 'தோழி கூற்றினை நன்கு மதியாது கூறினள்' எனத் தொல்காப்பியக் களவியல் இருபதாம் சூத்திர உரையுள் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர். 'நன்கு மதியாமை', சொல்லிய உவமானத்தால் புலப்படுகின்றது.

134. இனிது தலைப்படும்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : 'இற்செறிப்பார் என ஆற்றாளாய தலைவியை, 'அஃதிலார்' என்பதுபடத் தோழி சொல்லியது.
[(து–வி) தலைவன் பிரிவு நீட்டிக்கத் தலைவியின் மேனி வேறுபாடு அடைகின்றது அதனைத் தாய் அறிந்து இற்செறிப்பாளோ எனத் தவைவி அஞ்சுகின்றபோது, அவ்வாறு செறிப்பாரிலர் எனத் தோழி கூறுவதாக அமைந்தது இதுவாகும்.]

'இனிதின் இனிது தலைப்படும்' என்பது,
இதுகொல்? வாழி, தோழி! காதலர்
வருகுறி செய்த வரையகச் சிறுதினைச்
செவ்வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி!
அவ்வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, 5
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர்,
அம்மா மேனி நிரைதொடிக் குறுமகள்!
செல்லா யோ:நின் முள்எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், யான்அஃது
ஒல்லேன் போல உரையா டுவலே! 10

தோழீ. வாழ்வாயாக! காதலர் வருவதற்கான குறியீனைச் செய்த, வரையகத்தேயுள்ள சிறுநினைப் பயிரினைச் செவ்விய வாயினையுடைய பசுங்கிளிக் கூட்டம் கவர்ந்து போகா வண்ணம், அவற்றை ஓட்டும் பொருட்டாகக் 'கொடிச்சி! அழகமைந்த கிளிகடி கருவியாகிய தட்டையை எடுத்துக் கொண்டளையாய், நீயும் அவ்விடத்திற்குச் செல்வாயாக' என்று, அன்னையும் மிகுதியாகப் பன்முறை ஏவினள். தந்தையும் 'நீ புனத்திற்குச் சென்றிலையோ? அழகிய மாமை நிறத்தைப் பெற்ற மேனியினையும், நிறைத்த தொடிகளையும் கொண்ட இளமகளே! நீ வாழ்க! நின் முள் எயிற்றிடத்தே முத்தங் கொள்வேன்' என்று, மெல்லிதான இனியபல சொற்களைக் கூறினன் அதனாலே யான் அதற்கு இசையமாட்டேன் போலவும், பொய்யாகப் பலவும் உரையாடினேன். ஆகலின், இனித் தினைப்புனங்காவல் நமக்கு இனிமை தருவதாக இனிதாக வந்தெய்தும் என்று நாம் நினைத்துக் கொண்டதும் இப்படி வாய்ப்பதுதானோ?

கருத்து : 'இற்செறிப்புச் செய்யார் இல்லத்தார்' என்பதாம்.

சொற்பொருள் : இனிதின் இனிது – இனிதினும் இனிது; மிகவினிது. தலைப்படும் – வந்தெய்தும். பாசினம் – பசிய கிளியினம். தட்டை – கிளிகடி கருவி, ஏயள் – ஏவினள். முள் எயிறு – முள்ளனைய சிறுபல். இனிய – இனிய சொற்களை. ஒல்வேன் போல – காவற்கு ஏகமாட்டேன் போல.

விளக்கம் : பன்முறை ஏவினதால் தாய் ஐயுற்றிலள்: தந்தை மெல்லிய இனிய கூறலால், அவனும் ஐயுற்றிலன் என்பது விளங்கும், தினை கவரும் கிளியை ஓட்டுதற்குச் செல்க என ஏவியதனால்.

135. சீறூர் இனிது!

பாடியவர் : கதப்பிள்ளையார்.
திணை : நெய்தல்.
துறை : 'வரைவு நீட்டிப்ப அவர் ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து–வி.) 'வரைந்து வருவதாகத் தலைவன் குறித்துச் சென்ற காலம் நீட்டிப்பதாயிற்று. ஊரார் பழிதூற்று வரோ?' என்று அஞ்சுகின்றாள் தோழி. தலைவன் குறியிடத்து ஒருசார்வந்து செவ்விநோக்கி ஒதுங்கி நிற்கின்றான். தம் நிலையை அவன் அறியுமாறு உணர்த்தக் கருதியவளாக அவள் இப்படிச் சொல்லுகின்றாள்.]

தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
மாஅரை புதைத்த மணல்வலி முன்றில்,
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தண்குடி தாழ்நர் அம்குடிச் சீறூர்
இனிதுமன் றம்ம தானே; பனிபடு 5
பல்சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்குதிரைப் புதுமணல் அழுந்தக் கொட்கும்
வால்உளைப் பொலிந்த புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.

தொங்குகின்ற ஓலைகளையும் நீண்ட மடல்களையும் உடையது பனை. அதன் கரிய அடிமரம் புதையுமாறு மூடிக்கிடக்கும் மணல்மிகுந்தது வீட்டின் முற்றம். அளவுபடாத உணவுப் பொருள்களை இல்லிடத்தே வரும் விருந்தினர்கட்குப் பகுத்தளித்து வாழும் தண்ணிய குடிவாழ்க்கை உடையவர் நம் ஊரவர். அழகிய குடிகளையுடைய அச்சீறூரது வாழ்வும், முன்னர் நமக்கு இனிதாகவே இருந்தது.

குளிர்ச்சி பொருந்திய பலவாய கடத்தற்கரிய சுரநெறிகளில், வருத்தத்தோடு வருதலாலுண்டாகிய குறைந்த செலவினை உடையவாய் முழங்கும் அலைகள் கொணர்ந்து கொழிக்கும் புதுமணலிற் சக்கரங்கள் அழுந்துதலினாலே மேலும் மனஞ்சுழலும் வெள்ளிய பிடரிமயிரால் அழகுற்ற குதிரைகளை பூட்டிய தேரினரான நம் காதலர், நம்மோடு நகையாடி மகிழாததன் முன்பாக, நம் சீறூரும் நமக்கு இனிதாயிருந்தது காண்!

கருத்து : 'அவர் அருகே இன்மையினால்' இனிதாயிருந்த அதுவும் இன்னாதாகத் தோன்றுகிறது' என்பதாம்.

சொற்பொருள் : தூங்கல் – தொங்குதல். ஓங்கு – உயர்ந்த; நெடிய. பெண்ணை – பனை, மாஅரை – கரிதான அடிமரம். தாரம் – உணவுப் பொருட்கள். தண்குடி – தண்மைமிக்க குடிவாழ்க்கை: தண்மை – வறியவர்க்கு உதவும் தண்ணளி உடைமை. கொட்கும் – சுழலும். உளை – பிடரி மயிர்.

விளக்கம் : 'நகாததன் முன்பு இனிதாயிருந்த சீறூகும். அவரைப் பிரிந்த காரணத்தால் இன்னாதாயிருக்கின்றது' என்பதாம். ஊரும் இன்னாதாயிரா நின்றது, அவளது உள்ளத்துப் பெருநோயினாலே என்று கொள்க. ஊரவர் அலர்கூறிப் பழித்தலால் ஊர் இன்னாதாயிற்று என்றனளும் ஆம்.

136. அறவோன் என்னை!

பாடியவர் : நற்றங் கொற்றனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைத்தது.

[(து–வி.) களவுக்காலத்து இடையிடையே சேர்கின்ற பிரிவுக்கு ஆற்றாது நலிந்தாள் தலைவி. அவள் தலைவனிடம் அவளை விரைய மணந்து வாழும் வாழ்வினைப் பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தக் கருதுகின்றாள். குறியிடத்து, அவன் வந்து சிறைப்புறமாக நிற்பதறிந்தவள், தன் தோழியிடத்துக் கூறுவாள்போல, அவனும் கேட்டு உணருமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல
என்னை வாழிய, பலவே; பன்னிய
மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய 5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின்வரை அமைந்து
தோள்பழி மறைக்கும் உதவிப்
போக்கில் பொலந்தொடி செறீஇ யோனே

திருத்தமான கோற்றொழில் அமைந்த ஒளிபொருந்திய கோள்வளைகளை அணிந்திருந்தவை விரும்பித், தலைவனைப் பார்த்தவால் மெலிவுற்ற தோள்களினின்றும் கழன்று வீழ்ந்த வளைகளை நினைந்து யானும் அழதேன். தீர்த்தற்கு அரிதான நோயினை அடைந்தவர்க்கு, அவர் விரும்பியதனைத் தின்னக்கொடாது, அந்நோய் தீர்தற்குரிய மருந்தினையே ஆராய்ந்து கொடுத்து நோயினைப் போக்குகின்ற அறிவாளனைப்போல, என் தந்தையும் ஒரு செயலைச் செய்தனன். அவன் வாழ்வானாக! அனைவராலும் போற்றிப் பேசப்படுகின்ற மலையினைச் சேர்ந்த நாட்டினனான நம் காதலனுக்கும் நமக்கும் இடையே சிற்றளவான பிரிவு ஏற்பட்டு வருதலாகிய உண்மையினைத் தானும் அறிந்தவனைப்போல, அவன் நடந்தனன். தலைவன் பிரியுங்காலத்து உண்டாகும் மெலிவாலும் கழன்றுபோகாது, அவன் வருங்காலத்து அமையுஞ் செறிவுக்கும் ஏற்றபடியாக அமைந்து, தோள்களால் நமக்கு வந்தடையும் பழியினை மறைக்கின்ற தன்மை கொண்ட, எக்காலத்தும் கழன்று போகாத நுட்பமுடைய பொற்றொடிகளைச் செய்யச்செய்து என் தோள்கட்குச் செறித்து, என் துயரையும் மாற்றினன். அதனால், அவன்தான் பலகாலம் வாழ்வானாக!

கருத்து : 'களவுறவு தந்தையால் அறியப்பட்டது; தலைவன் வரைந்துவரின் அவனும் மணவினைக்கு இசைவான்' என்பதாம்.

சொற்பொருள் : எல்வளை – ஒளியெறிக்கும் தோள் வளை. அறவோன் – அறவாளன்; நீங்காத நோயையும் நீக்கும் மருத்துவன். சிறிய தவைப்பிரிவு – நெடுநாட் பிரிவின்றிக் களவுக்காலத்து நிகழும் சிறு பிரிவு.

விளக்கம் : சிறு பிரிவுக்கும் மெலிவுறும் தன் தோள்களது தன்மையைக் கூறுவதன்மூலம், அப்பிரிவும் நேராதிருக்கும் வகையால் அமையும் மணவினை நாட்டத்தைப் புலப்படுத்துகின்றாள். வரைவுக்குத் தன் தந்தையும் உடன்படுவான் என்பதைக் குறிப்பாக உணர்த்துவாள், தந்தை புதுவளை செய்து தந்த சிறப்பினைக் கூறினாள். 'பழி மறைக்கும்' என்றது. மெலிவு பிறருக்குத் தோற்றாதே மறைக்கும் தன்மைகொண்ட வளைகள் என்றனன்!

137. அறியது எய்தினை போலும்!

பாடியவர் : பெருங் கண்ணனார்.
திணை : பாலை,
துறை : தலைவன் செலவு அழுங்கியது.

[(து–வி.) வினைவயிற் செல்லுமாறு தூண்டிய தன் நெஞ்சிற்குத் தலைவன் தலைவியது அருமை கூறியவனாக அறிவு தெருட்டித் தன் செலவை நிறுத்துகின்ற முறையில் அமைந்த செய்யுள் இது.]

தண்ணிய கமழும் தாழிருங் கூந்தல்,
தடமென் பணைத்தோள்; மடநல் லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்நினை வாழிய நெஞ்சே! செவ்வரை
அருவி ஆன்ற நீர்இல் நீள் இடை, 5
கயந்தலை மடப்பிடி இயங்குபசி களைஇயர்,
பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை
அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம்
சென்றுசேண் அகறல் வல்லிய நீயே! 10


நெஞ்சமே! செவ்விதான மலையிடத்திருந்து வீழும் அருவியிடத்துப் பொருந்திய நீர் இல்லாதே போயிருக்கும் தன்மையுற்ற நெடிதான நெறி; அந்நெறியிடத்தே, மென் தலையினை உடைய தன் இளம்பிடி வருத்தமுறுகின்ற பசி நோயினைப் போக்கும் பொருட்டாகப் பெரிய களிற்று யானையானது, வளைந்த அடியைக் கொண்ட ஓமை மரத்தை முறித்துத் தள்ளியிருக்கும். அத் தன்மை கொண்ட செல்லற்கரிய சுரநெறியிடத்தே, அவ்வோமை மரங்களே செல்வார்க்குத் தங்கும் நிழலாகவும் விளங்கும். இடையிடையே குன்றுகளைக் கொண்ட அத்ததைய காட்டுவழியாகச் சென்று, நெடுந்தொலைவுக்கு அகன்று போதற்கும் நீதான் வலிமையுற்றனை. அத்தகைய நீதான், தண்மணம் கமழ்கின்றதும், பிடரியிடத்துத் தாழ்ந்து கிடப்பதுமான கருகூந்தலையுடையாளும், பருத்த மென்மை கொண்ட தோள்களையும் இளமைப் பருவத்தையும் உடையாளுமான நம் தலைவியைப் பிரிதற்கும் கருதினை. அஃது உண்மையாயின், அவளிலுங் காட்டில் எமக்குப் பெறுதற்கு அரிதான ஒன்றனை நீதான் அடைந்தனை ஆவாய். அங்ஙனம் அடைந்த அதனோடேயே நீயும் சென்று இனி வாழ்வாயாக!

கருத்து : 'நீ விரும்பும் பொருள் தான் இவளினும் சிறந்தது அன்று' என்பதாம்.

சொற்பொருள் : செல்வரை – செவ்விய மலை: செங்குத்தான மலை. ஆன்ற நீர் – அமைந்த நீர், சூழ்ந்தனை – கருதினை. கயந்தலை – மென்மை கொண்ட தலை. ஓமை – ஓமை மரம். அல்குதல் – தங்குதல். வல்லிய –வன்மையுற்ற.

விளக்கம் : ஒன்றை இழக்கத் துணிவதென்றால், அதனினும் சிறந்த மற்றொன்றை அடைதல் வேண்டும். தலைவியை நீத்துச் செல்லத் துணியும் நீயோ, அருவிகள் நீரொழிந்தவையாகத் தோற்றுவதும், ஓமையின் புள்ளி நீழலன்றி நறுநிழல் இல்லாதிருப்பதும், கடத்ததற்கரியதும், களிறுகளை உடையதுமான காட்டுவழியினைக் காட்டுகின்றாய். இவளை விட்டுப் பெறுவன அவையாயின், யாம் அவற்றை விரும்பேம். நீயே சென்று பெறுக. இப்படிச் சொல்லுவதாக அமைத்துக்காண்க.

தண்ணிய கமழும் தாழிருங் கூந்தற்குச் செவ்வரை ஆன்ற நீரில் அருவிதான் இணையாமோ? தடமென் பணைத்தோளின் இனிமைக்கு முடத்தாள் ஓமையின் நிழல்தான் ஒப்பாமோ? அந்த நிழலும் பிடியின் பசியைப் போக்கக் களிறு சிதைத்த மரத்து நிழலாக, அதன் பாசத்துச் செவ்வி தலைவியை விட்டுப் பிரிந்து வருத்தத்திற்கு உட்படுத்திய பொருந்தாச் செயலை நினைவூட்டுமன்றோ? இப்படியெல்லாம் கேட்பதாகவும் தொடர்புபடுத்திக் கருதுக.

உள்ளுறை : 'மடப்பிடியது துயரைப் போக்குதற்கு ஓமையை முறித்து உண்ணத் தருகின்ற களிற்றது பெருந்தன்மை போல, நாமும் பெருந்தன்மை கொள்வதற்கு மாறாக, நாமே அவட்கு வருத்தத்தை உறுவிப்பது எவ்வளவு பொருத்தமற்றது', என்பதாம். 'நீரற்ற அருவிபோலவும், நிழலற்ற கானம்போலவும், அவளும் தன் நலனிழந்தஉயிர் கெடுவாள்' என்பதுமாம்.

138. கண்ணறிவு!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : அலராயிற்றென ஆற்றாளாய தலைமகளுக்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) "பிரிவாலே மேனியிடத்துத் தோன்றிய மாற்றங்களைக் கண்ட பிறர் பழித்துப் பேசத் தொடங்குவர் என ஐயுறுகின்றாள் தலைமகள் அவளது அத்துயரம் நீங்குமாறு வரைந்துவருதலை வற்புறுத்துவாளாகச் சிறைப்புறமிருக்கும் தலைமகன் கேட்குமாறு. தோழி இப்படிச் சொல்லுகின்றாள்]

உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை
கணம்கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண்அழி பழம்பார் வெண்குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன்நாள் நம்மொடு 5
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇக்
கண்அறி வுடைமை அல்லது நுண்வினை
இழைஅணி அல்குல் விழவுஆடு மகளிர்
முழங்குதிரை இன்சீர் தூங்கும் 10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.

ஓரிடத்தே தங்கியிருந்தபடி வாழ்கின்ற நிலையான வாழ்க்கை முறையினை இல்லாதவர்கள், உவர்நிலத்து விளையும் குன்றங்களைப்போன்ற உப்புக்குவியல்களை மலை நாட்டகத்துக் கொண்டு சென்று விலைமாறிப் பொருளீட்டி வாழும், கூட்டங் கொண்ட உப்பு வாணிகர்கள். அவர்கள், தங்கள் வண்டிகள் முறிந்துபோன இடத்திலே. அதனைப்போட்டுப் போயினதனாலே தன் பண்பழிந்தவாய்ப் போயின பழைதான பாரினிடத்தே, வெளிய நரையானது கூடுகட்டித் தன் சினையை ஈன்றிருக்கும். அத்தகைய தண்ணிய கடற்றுறையினைச் சார்ந்தவன் தலைமகன். அவன், முன்னை நாளிலே, பசிய இலைகளின் இடைநின்றும் மேலெழுந்து வெளித்தோன்றிய திரண்ட தண்டினையுடைய நெய்தல் மலருடனே, நெறிப்பைத் தருகின்ற தழைகளையும் இடையிட்டுத் தொடுத்த மாலையினை நினக்குச்சூட்டினன். அதனைக் கண்ணாற் கண்டறிந்த அறிவுடைமை ஒன்றையன்றி, நுண்மையான வேலைப்பாட்டினாலே சிறந்த அணிகலனை அணிந்த அல்குல் தடத்தையுடையரான, விழாக்களத்துத் துணங்கைத் கூத்தினை ஆடுகின்றவரான இளமகளிரினுடைய, இனிதான தாள அறுதியுடனே முழங்கும் திரையொலியும் சேர்ந்துபரவிநிற்கும் ஆரவாரத்தையுடைய இவ்வூர் மகளிர், பிறிதொன்றனையும் கண்டு அறிந்தவர் அல்லர்காண்!

கருத்து : அங்ஙனமாகவும் தான் வருத்தமுறுவதுதான் எதற்காகவோ?' என்பதாம்.

சொற்பொருள் : குன்றுபோல் குப்பை – குன்றைப்போலத் தோற்றும் உப்புக் குவியல்கள். உயங்குவயின் ஒழித்த - வண்டி முறிந்தவிடத்துப் போட்டுப் போயின; பசி வருத்திய விடத்து உணவாக்கி உண்டுவிட்டுக் கழித்துப்போயின அடுப்பும் பிறவும் எனலும் ஆம். பண் – பண்பு; அது அழிதல், மாறித் தோன்றுதல். குருகு ஈனுதல் – குருகு முட்டையிட்டிருத்தல். பாசடை – பசிய இலை. நெறிதருதல் – நெறிப்பைத் தருதல். நெறிப்பு – சுருளுதல். தொடலை – தழை மாலை. கண் அறிவு – காட்சியறிவு. விழவு – துணங்கை; கடற்றெய்வத்தைப் பராவும் வும் விழவும் ஆம்.

உள்ளுறை : உமணர் ஒழித்த பழம்பாரிலே குருகு சினை ஈனும் என்பதுபோலத் தலைவனால் நலனுண்டு கழிக்கப்பட்டு அழகிழந்த தலைவியின் மேனியிலே பசலை நோய் பற்றிப் படரும் என்பதாம்.

இறைச்சி : 'தாளவறுதி அலையோசையோடு சேர்ந்து பரவும் ஆரவாரத்தையுடைய ஊர்' என்றது, அவ்வாறே பழிச்சொற்களும் எழுந்து பரவுதல் உற்றது என்பதாம்.

விளக்கம் : இதனைக் கேட்டலுறும் தலைவன், தொடலை கண்டு பழித்த அலகுரைக்கே பெரிதும் வருந்தும் இவள், களவுக்கூட்டத்தைப் பற்றி ஊர் பழிக்கத் தொடங்கிற்றாயின் செத்தொழிவாளோ எனக் கலங்குவான். அதனால் விரைவிலே அவளை ஊரறிய மணந்து பெறுகின்ற இன்பத்திலே கருத்தினனாவான் என்பதாம். நலனழிந்த தலைவியது எழிலுக்குப் 'பண்ணழி பழம்பார்' சிறந்த உவமையாகும்.

139. பொருந்தி உலாவுக!

பாடியவர் : பெருங் கௌசிகனார்.
திணை : முல்லை.
துறை : தலைவன், வினைமுற்றி வந்த பள்ளியிடத்தானாகப் பெய்த மழையை வாழ்த்தியது.

[(து–வி.) தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்றிருந்த தலைவன், வினைமுடித்தானாகத் திரும்பிவந்து தலைவியுடன் கூடி இன்புற்றிருக்கின்றான். அவ்வேளை, உலகுய்யப் பெய்யும் மழையினன் நோக்கி இப்படி வாழ்த்துகின்றான்.]

உலகிற்கு ஆணி யாகப் பலர்தொழப்
பலவயின் நிலைஇய குன்றின் கோடு தோறு
ஏயினை உரைஇயரோ! பெருங்கலி எழிலி!
படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு
எழீஇ யன்ன உறையினை முழவின் 5
மண்ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்துஒலி கூந்தல் மாஅ யோளோடு
புணர்ந்தினிது நுகர்ந்த சாரல் நல்ஊர்
விரவுமலர் உதிர வீசி
இரவுப்பெயல் பொழிந்த உதவி யோயே! 10

பேராரவாரத்துடன் முழங்கி வருகின்ற மேகமே! மத்தளத்தின் மார்ச்சினை வைத்த கண்ணிடத்தைப்போல இம்மென்னும் ஒலியோடு முழங்கும் இடிகளை உடையாய்! கடைகுழன்று தாழ்ந்த கூந்தற் செவ்வியையுடைய மாமை நிறத்தாளான இவளோடும் கூடியிருந்து, இனிதாக யான் அநுபவித்த இன்பத்தினைத் தந்த மலைச்சாரலிடத்ததான இந்த நல்ல ஊரிடத்தே, பலவண்ண மலர்கள் பலவும் உதிரும்படியாக மோதி, இரவுப்போதிலே பெயலைப் பொழிந்த உதவியையும் உடையோயே! நிலைபெறுதலையுடைய நல்ல யாழினது வடித்தலைப் பொருந்திய நரம்புகளிடத்திருந்து, 'படுமலைப் பாலை' என்னும் பண் எழுந்து வந்தாற்போல. ஒலியோடு வீழும் துளிகளையும் கொண்டோயே! உலகிற்கு ஆதாரமாகக் கொண்டு பலரும் தொழுது போற்ற, ஆங்காங்கே பற்பல இடங்களிலுமாக நிலைநிற்கின்ற குன்றுகளின் கொடிமுடிகள் தோறும் சென்று சென்று பொருந்தினையாய் நீயும் உலாவருவாயாக!

சொற்பொருள் : ஆணியாக ஆதாரமாக, கடையாணியாக, பலவயின் – பலவிடத்தும். கோடு – கொடுமுடி; சிகரம் – உரைஇயரோ – உலவுவாயாக. படுமலை – படுமலைப்பாலைப்பண், வடிநரம்பு – வடித்தல் பொருந்திய நரம்பு. உறை – துளி, முழவு – மத்தளம். மண்ணார் கண் – மார்ச்சனை வைத்த கண். இமிரும் – ஒலிக்கும். விரவு மலர் – கலப்பான பன்மலர்.

கருத்து : 'மழையே! எனக்கு உதவிய நின்னைப் போற்றுவேன்' என்பதாம்.

விளக்கம் : உலகை உருளாகவும், அந்த உருளிற் பொருந்தி ஆதாரமாக விளங்கும் கடையாணியாக மழையினையும் கொள்ளுக. 'பலர்' என்றது, பற்பல நாட்டினரையும் ஆம். மழையைப் பலரும் தொழுதல், அதனாற் பெற்று வாழ்கின்ற பெரும்பயனுக்கு நன்றிகடனாக கார்காலத்தே மீண்டுவந்து இன்புற்றிருக்கும் தலைவனும் தான் பெறுகின்ற இன்பத்தை நினைந்து மழையை வாழ்த்துகின்றான் எனலாம். 'முழவின் மண்ஆர் கண்ணின் இமிரும்' என்ற நினைப்புத் தலைவன் அரசவினையினை மேற்கொண்டு சென்று வெற்றி முழக்கோடு திரும்பியவன் என்பதனைக் காட்டுவதாகும்.

உள்ளுறை : உலகிற்கு ஆணியாக விளங்கும் மழையினது தன்மைபோலத் தன் வாழ்விற்கு ஆதாரமாக விளங்குவது தலைவியது தண்ணளியோடு கூடிய கூட்டம்' என்பதாம்.

140. இன்னும் இரப்பாம்!

பாடியவர் : பூதங்கண்ணனார்;
திணை : குறிஞ்சி.
துறை : துறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.

[(து–வி.) தோழிபாற் குறையிரந்து நின்று, அவளால் மறுத்துரை கூறப்பெற்றுத் தளர்த்த தலைவன், தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்தது இச்செய்யுள்.]

கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை 5
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
அருளினும் அருளாள் ஆயினும், பெரிதழிந்து
பின்னிலை முனியல்மா!—நெஞ்சே—என்னதூஉம்
அருந்துயர் அவலம் தீர்க்கும்
மருந்துபிறிது இல்லை, யான்உற்ற நோய்க்கே. 10

பெருமை கொண்ட நெஞ்சமே! கடனீரை முகந்துகொண்டு எழுந்து வருகின்ற கார்மேகமானது, மேற்கு மலையிடத்தே கவிந்து மழையினைப் பொழியும். சிறுசிறு கிளைகளிலே பூங்கொத்துக்களைக் கொண்டு விளங்கும் பெருந் தண்மையினைக் கொண்ட சந்தனமரங்கள், அதனால் தழை மிகுந்தவாயிருக்கும். அந்தச் சந்தனத் தேய்வுடன் பற்பல நறுமணப் பொருட்களையும் வகைபடச் சேர்த்து ஊட்டிய கூந்தலைத் தகைமைபெற வாரிக் கொள்பவர் பெண்கள். அந்தச் சாந்தமானது காய்ந்தவிடத்து உதிர்க்கப்பட்ட துகள்படிந்த கூந்தலையும் பெரிதான கண்களையும் உடையவர் தலைவியின் தோழிப்பெண்டிர்கள். அவர்கள் உவப்படையுமாறு தன் தந்தையது நெடிய தேரானது செல்லுகின்ற சிறப்பையுடைய நிலவுபோன்ற வெண்மணல் விரித்துக்கிடக்கும் முற்றத்திடத்தே, பந்தோடும் விளையாடுதற்குச் செல்லுகின்ற தலைவி, நம்மேல் அன்பற்றவளாயினாள். அவள் நமக்கு அருளிச் செய்பவளானாலும், அருளாதாள் ஆயினும், பெரிதும் மனச்செருக்கு அழிந்தனையாய் இரந்து வழிபட்டு நிற்றலை மட்டும் வெறுக்காதே கொள். யானடைந்த இந்தக் காமநோயாகிய போக்கற்கரிய துயரத்திற்கு அதனைப் போக்கும் மருந்தாக அமையக் கூடியவள் அவளேயன்றிப் பிறிது யாரும் இல்லை. ஆதலின், நீதான் தளர்தல் கூடாது காண்!

கருத்து : 'இனியும் வேண்டுதலைத் தொடர்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : கொண்டல் – கடனீரை முகத்து எழுவதாகிய மேகம்; கீழ்க்காற்றுமாம். குடகு – மேற்கு. குழைத்து – தழைத்த. இணர – பூங்கொத்துக்களையுடைய. துகள் – பொடி. கூழை – கூந்தல், பரிவு – அன்பு. பின்னிலை - இரந்து பின்னிற்றலை.

விளக்கம் : 'தன் நோய்க்குத் தானே மருந்தாவாள்: ஆதலின், தோழியின் மறுப்பிற்குத் தளர்ந்து திரும்பாது இனியும் இனியும் முயன்று நோய்க்குரிய மருந்தினை அடைதற்கு முயலுக' என்கின்றான். நிலவு மணல் முற்றம் –நிலவனைய மணல் பரப்பித் கிடக்கும் முற்றம்; நிலவொளி பரக்கும் முற்றமும் ஆம். 'பெருங்கண் ஆயம்' என்றது, அவளையே நோக்கியபடி கண்ணாற் காத்திருக்கும் ஆயம் என்பதாம்.

மேற்கோள் : 'பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுப்பினும்' என்றபடி தலைவி கூற்று நிகழுவதற்கு இச்செய்யுளை இளம்பூரண அடிகள் உதாரணமாகக் காட்டுவர் (தொல். களவு. சூ. 99 உரை). 'அருளினும் அருளாளாயினும்' என்றமையால் கூட்டம் இன்மையும், 'பின்னிலை முனியல்' என்றமையால் இரந்து பின்னிற்பானாகத் துணிந்தமையும் தோழியிற் கூட்டத்து இயற்கைப் புணர்ச்சிக்கு ஒருப்பட்டமையும் உணர்க" எனவும் உரைப்பர்.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'தண்டாது இரப்பினும்' என்னும் துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளனர் (தொல். களவு 11 உரை).

141. யான் அமைகலன்!

பாடியவர் : சல்லியங் குமரனார்.
திணை : பாலை.
துறை : பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.

[(து–வி.) பொருள் தேடிவருதலின் பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து போவதற்குத் தூண்டிய நெஞ்சிற்குத் தான் முன்னர்ப் பெற்ற அநுபவத்தைச் சொல்லியவனாகத் தலைவன் போக்குத் தவிர்வதாக அமைந்த செய்யுள்.]

இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள் கயவாய்
மாரி யானையின் மருங்கில் தீண்டிப்
பொரியரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை
நீடிய சடையொடு ஆடா மேனிக்
குன்றுறை தவசியர் போலப் பலவுடன் 5
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ்சுரம் எளியமன் நினக்கே; பருந்துபடப்
பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை
ஏந்துகோட்டு யானை இசைவெங் கிள்ளி
வம்பணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த 10
அரிசில்அம் தண் அறல் அன்ன இவள்
விரிஒலி கூந்தல் விட்டு அமை கலனே.

நெஞ்சமே! அரிதான சேற்றிடதே கிடந்து புரண்டதனால் மேனியெங்கணும் சேறு படிந்ததும், வளைந்த கவுளையும் அகன்ற வாயையும் உடையதுமான, கார்மேகத்தைப் போல விளங்கும் யானையது. விவாப்புறத்தால் உராயப்படுதலினாலே அடிப்பக்கம் பொரிந்துள்ள உட்டுளை பொருந்திய காய்களையுடைய கொன்றை மரங்கள் காட்டிடையே விளங்கும். அவை, குன்றிடத்தின் கண்ணே வாழ்பவரான நெடிய சடைக்கற்றையினையும் அசைவற்ற உடலினையுங் கொண்ட தவசியர்களைப் போலவும் தோன்றும். அவை பலவும் உடன்சேர நிற்பவாகவும். கோடை நெடிது நீடிய இடங்களிலே அழகு செய்த வண்ணமும் நிற்கும், செல்லுதற்கு அரிதான அத்தகைய சுரநெறியும் நினக்குக் கடத்தற்கு எளியதாகும் போலும்!

பட்ட பகைவரது பிணங்களைப் பருந்தினம் மொய்த்துத் தின்னுமாறு, பகைவரது தேர்ப்படையோடு பொருதி வெற்றி கொண்டவன், பலவாய சருச்சரையை உடைய பெரிய கைகளைக் கொண்ட, தலையேந்திய கொம்புகளோடு விளங்கும் யானைப்படைக்கு உரியோனாகிய புகழை விரும்பும் கிள்ளி வளவன். அவனது, புதுவதாக அணிசெய்யப் பெற்ற உயர்ந்த கொடியானது விளங்கும் அம்பர் நகரைச் சூழ்ந்த அரிசிலாற்றின் அழகிய தெளிந்த அறல்மணலைப் போன்றது, இவளது விரிந்து தழைத்த கூந்தல். இதன்கண் துயிலுதலைக் கைவிட்டு, யானும் பிரிந்து வாழ்வேன் அல்லேன்!

கருத்து : இவளைப் பிரிதலை யான் மேற்கொள்ளேன்' என்பதாம்.

சொற்பொருள் : இருஞ்சே – கரிய சேறு கொடுங்கவுள் – வளைந்த கவுள்: கவுள் – மோவாய். கயவாய் – அகன்ற வாய். மாரி யானை – கரிய யானை. மருங்குல் – விலாப்புறம். ஞெமிர்தல் – பரத்தல். ஆடா மேனி – அசையாத உடல்; நீராடுதலையும் நீத்திருக்கும் புழுதி படர்ந்த உடலுமாம். என்றூழ் – கோடை. பொற்ப – அழகுதிகழ. பாண்டில் – தேர்ப்படை. பிணர் – சருச்சரை; செதிள் செதிளாக விளங்கும் தன்மை.

விளக்கம் : அரிசிலாற்றங்கரையில் இருந்த 'அம்பர்' எனும் நகரைச் சோழன் கைப்பற்றிய வெற்றிச் இச்செய்யுள் காட்டுகின்றது. அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடிய புறப்பாட்டு 'காவிரியணையும் தாழ்நீர் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன்' என்கின்றது. (புறம் 385). இவளைக் கூடிப்பெறுகின்ற இல்லறஇன்பத்தை விட்டுச் சென்று துறவறத்தை மேற்கொள்ளத் தூண்டுவையோ' என்பவன், காட்டிடத்துக் கொன்றை மரங்களின் தோற்றம் தவசியரைப் போன்றிருக்கும் என்கின்றான். நீரற்ற காட்டுக் கொடுவறட்சியைக் கூறுவான், யானை இருஞ்சேறு ஆடிய தென்கின்றான். 'எளியமன் நினக்கே' என்றது, நினக்கே எளிதாயின் நீதான் செல்க என, அயன்மை தோன்றக் கூறியதாம்.

142. ஊர் புறவினது!

பாடியவர் : இடைக்காடனார்.
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

[(து–வி) வினை முடித்து வீடு திரும்பலுறும் தலைமகன், தலைமகளை விரையச் சென்று சாணும் ஆர்வமானது மிகுதியாக எழுந்து வருத்தத், தேர்ப்பாகனிடம் கூறுவதாக அமைந்தது.]

வான் இகுபு சொரிந்த வயங்குபெயற் கடைநாள்
பாணி கொண்ட பல்கால் மெல்லுறி
ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப்
பறிப்புறத்து இட்ட பால்நொடை இடையன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத் 5
தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே—பொய்யா யாணர்
அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் 10
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே.

இரவுப் பொழுதாகவே இருந்தபோதிலும், விருந்தினர் வந்தனராயின் அவரை உபசரிக்கும் வாய்ப்பு நேர்ந்தமைக்கு உவப்படைபவள்: இல்லிலிருந்து நல்லறம் பேணும் கற்புச் செவ்வியையுடையவள்; மென்மையான சாயலையும் உடையவள் என் தலைவியாகிய இளமகள்! அவள் தங்கியிருக்கும் இனிதான, ஊராவது, என்றும் பொய்ப்படாத புதுவருவாயினை மிகுதியாக உடையதாகும். அதுதான்— மழை காலிட்டுப் பொழிவதாய்ச் சொரிந்த, வளமான பெயலினது இறுதிநாளிலே, கையிற் கொண்ட பலவான காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியும் தீக்கடைகோலும் இட்டுவைத்த தோற்பையினை ஒருசேரச் சுருக்கிக் கட்டிப் பனையோலைப் பாயினோடும் முதுகிற் கட்டியிட்ட பால்விலை பகர்வோனாகிய இடையன், நுண்ணிய பலவாகிய மழைத்துளிகள் தன்மேனியின் ஒரு பக்கத்தை நனைப்பத் தண்டினை ஊன்றி, அதன்மேல் ஒரு காலை மடித்து வைத்தபடியே ஒடுங்கி நின்றவனாக, வாய்குவித்து ஊதும் வீளையொலியானது, சிறிய தலையை உடையவான யாட்டின் தொகுதிகளைப் பிறபுலம் போகாவாறு மயங்கச் செய்து, அவ்விடத்தேயே தங்கியிருக்கச் செய்யும் காட்டுப்பகுதியின்கண் இருப்பதுமாகும்!

கருத்து : 'இரவுப்போதுக்குள் ஊருக்குச் சென்றடைதல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : வயங்கு பெயல் – விளங்கும் பெயல். பாணிகொண்ட – கையிடத்துக் கொண்ட. பல்கால் – பலவாகக் காலிட்டுப் பின்னிய ஞெலிகோல் – தீக்கடை கோல். பறிப்புறத் திட்ட – பனையோலைப் பாயினை முதுகின் கண்ணே இட்டுக்கொண்ட. விளி – வீளையொலி. முல்லை - இல்லொழுக்கம்.

விளக்கம் : கார்காலத்தின் தொடக்கத்திற்கு முன்பேயே வருவதாகக் கூறிப் பிரிந்தவனாதலின், அதன் கடைநாளும் வந்துற்றதனை, இடையனது குளிரால் நடுங்கியிருக்கும் நிலைபற்றி உரைப்பதனாலே உணர்த்துகின்றான். இதனால் தலைவியது பெருந்துயரமான நிலையையும் நினைந்து வருந்தினன் எனலாம். 'அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும். முல்லை சான்ற கற்பின்' என்றது. இரவுப் பொழுதாயினுங்கூட. வீட்டை அடைந்ததும் நல்ல விருந்தயர்தல் வாய்க்கும் என்றதாம். இரவினும் அவன் கண்ணுறக்கமின்றிக் காத்திருப்பாள் என்பதுமாம்.

உள்ளுறை : 'குளிரான் நடுங்கினும், இடையனது வீளையொலிக்குக் கட்டுப்பட்டவாய் யாட்டினம் எல்லை கடவாது நிற்றலைப் போன்று. பிரிவினாலே வருந்தினும் தன் சொற்குக் கட்டுப்பட்டாளாய்த் தலைவியும் ஆற்றியிருப்பாள் ஆவள்' என்பதாம். 'புறபுலம் புகுதாது யாட்டினத்தை ஒரு நிலைப்படுத்தியிருக்கும். இடையனின் வீளையொலியைப் போலவே, தேர் செல்லும் ஒலியும் தன் மனத்தைப் பிற காரியங்களினின்றும் நீக்கித் தலைவிபாற் செலுத்துறலாயிற்று' என்பதுமாம்.

143. காமம் வியத்தற்குரியது!

பாடியவர் : கண்ணகாரன் கொற்றனார்.
திணை : பாலை.
துறை : மனை மருட்சி.

[(து–வி) தன் மகளாய தலைவி, தன் காதலுடனே உடன்போக்கிற் சென்றனள் என்பதை அறிந்ததும், நற்றாயின் மனம் பலவகையாகப் பேதலிக்கிறது. அவளுறவை முன்னரே குறிப்பாக அறிந்தும், அதனை நிறைவு செய்தற்கு அதுகாறும் முயலாத தன் அறியாமைக்கு நொந்து, வீட்டிலிருந்தவாறே இப்படிக் கூறி மருட்சி அடைகின்றாள்]

ஐதேகாமம் யானே ஒய்யெனத்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்
நீர்வார் கண்ணேன் கலுழும்; என்னினும்
கிள்ளையும் 'கிளை' எனக் கூஉம்; இளையோள் 5
வழுவிலள் அம்ம தானே: குழீஇ
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்ட சில்நாள்
அறியேன் போல உயிரேன்
'நறிய நாறும்நின் கதுப்பு' என் றேனே. 10

அழகான மாளிகையின் முற்றத்திடத்தே ஏவலாளர் கொணர்ந்த மணல் பரப்பப் பெற்றிருக்கின்றது. அவ்விடத்தே ஓரை விளையாட்டயர்தற்கு வந்து நின்றழைக்கும் அவளது நோழியர் கூட்டத்தினையும் காண்பேன். ஆடிடமாகிய நொச்சிவேலி சூழ்ந்த இடத்தையும் தொடர்ந்து நோக்குவேன். விரைய நீர்வழிகின்ற கண்களை உடையேனாகி அழுதலையும் தொடங்குவேன். என்னினும் காட்டில், அவள் வளர்த்துவந்த கிள்ளையும், அவளைத் தன் உறவெனவே உரிமையுடன் விரைய அழைத்துக் கூவாநிற்கும். இளம் பருவத்தினளாகிய மகள்தான் குற்றம் உடையாளும் அல்லள், அம்பலுரை மிகுந்ததான இந்த மூதூரிடத்துள்ளாரான அலருரைக்கும் வாயினரான பெண்டிர்கள் பலரும் ஒருங்கே கூடிநின்றாராய்ச் சொல்லியபடியிருந்த கொடிதான இனிய பேச்சையும் கேட்டிருந்தேன். கேட்டதன்பின் சில நாட்களளவும் யாதும் அறியாதேன்போல மூச்சுவிடாதாளாகவும் இருந்தேன். பின்னும் அவர்தான் மிகுதியாக, 'மகளே! நின் கூந்தல் யானூட்டும் மணத்தையன்றி மேலும் புதிதான நறுமணத்தையும் கமழ்வதாக இருக்கின்றதே! அதுதான் எதனாலோ?' என்று அவளை வினாவினேன். அதற்கே அவள், தன்னுறவினை யானறிந்தமையை உணர்ந்தாளாய்த், தன் காதலனுடன் சென்றுவிட்டனள். அவள் கொண்ட காமந்தான் மிகவும் வியப்புடையது!

கருத்து : 'அவளுக்கு யானே அவனை மணமுடித்து வைத்தற்கான ஏற்பாடுகளைச் செய்தேனில்லையே' என்பதாம்.

சொற்பொருள் : ஐது – வியப்புக்குரியது. ஒய்யென – விரைய. தருமணல் – கொணர்ந்திட்ட மணல். ஞெமிர்தல் – பரவுதல். நகர் - மாளிகை. ஓரை – மகளிர் விளையாட்டுள் ஒன்று.

விளக்கம் : 'காமம் ஐது' என வியந்தது, பிறந்து வளர்ந்த வீட்டையும், பழகிய தோழியரையும், வளர்த்த கிளியுைம் விட்டுநீங்கிப் புதுவனாகிய ஒருவனுடன் செல்லற்குத் துணிவுதந்த சிறப்பினால். ஆயமகளிர் அவளது

பேரைச் சொல்லி அழைக்கத் தாய் அவ்விடத்தை நோக்கி, அகன்று போகிய தன் மகளை நினைந்து அழுதலைத் தொடங்குகின்றாள். அவள் பேரைக் கேட்டதும், அவள் வளர்த்த கிளியானது தாயினும் விரைவாக அவளை அழைத்துக் கூவத்தொடங்குகின்றது. தாயின் மனம் அலருரையால் தலைவியது களவு உறவை அறிந்திருந்தும், அதுகுறித்துத் தான் ஏதும் செய்யாதிருந்த தன் அறியாமையை நினைந்தும், தலைவியது அறம் பேணும் உறுதியை வியந்தும் இப்படி மருள்கின்றது. இன்னா இன் உரை என்றது, அவருரை கூறுவாரது நோக்கம் இன்னா தாயினும் அதுதான் தன் மகளது வாழ்வுபற்றிய இனிய செய்தியையே அறிவித்தவால், தனக்கு இனிதாகவும் இருந்தது என்பதனால். 'கதுப்பு நறிய நாறும்' என்றது, தலைமகன் தன் நாட்டிடத்து மலரினைக் கொணர்ந்து சூட்டியதனைக் குறித்து வினவியதாம். அம் மலர் தலைவியின் ஊரிடத்து இல்லாததென்பதும் அறியப்படும்.

144. பேதை நெஞ்சம்!

பாடியவர் : கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆற்றது ஏதத்திற்குக் கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.

[(து–வி.) மழைநாள் இரவிலும் இரவுக்குறி வேட்டு வருதலை உடையானாகிய காதலனின் செயலை நினைந்து பெரிதும் கவலைகொண்டாள் தலைவி. அவன் குறியிடத்துச் சிறைப்புறமாக நிற்பதறிந்தவள், தன் தோழியிடம் கூறுவாள் போல இப்படிக் கூறுகின்றாள்]

பெருங்களிறு உழுவை தாக்கலின், இரும்பிடிக்
கருவிமா மழையின் அரவம் அஞ்சுபு,
போதுஏர் உண்கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்குஆ கின்றால் தோழி! பகுவாய்ப் 5
பிணவுப்புலி வழங்கும் அணங்களுங் கவலை
அவிர் அறல் ஒழுகும் விரைசெலல் கான்யாற்றுக்
கரையருங் குட்டம் தமியர் நீந்தி
விரவுமலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியா தேற்கே. 10

தோழி! அச்சத்தை மிகக்கொண்ட கடத்தற்கரிய வழியிடையே பிளந்த வாயினைக்கொண்ட பெண்புலி இரை தேடியதாய் உலவியபடியிருக்கும். அவ்விடத்தே, விளங்கிய விரைந்த செலவையுடையதும் கரைகாணற்கு அரிதாமாறு பெருவெள்ளத்தை உடையதுமாகிய காட்டாறும் சென்றபடியிருக்கும். அதனைத் தமியராக நீந்திக் கடந்த, வெள்ளத்து வந்த கலப்பான மலர்கள் படிந்த தோளினராய், நம் காதலரும் இந்த இரவில் வருபவராவார். அப்படி அவர் வருவார் என்பதனை ஆய்ந்தறியாத பேதைமை உடையவளாயினேன் யான். புலியானது பெருங்களிற்றைத் தாக்குதலினாலே கலங்கிய அதன் கரிய பிடியானது தொகுதி கொண்ட கார்மேகத்தைப்போல முழக்கமிட்டுக் கதறுகின்ற ஒலியைக் கேட்டு அஞ்சினேன், நீலமலர் போன்று மையுண்ட கண்கள் கலங்கிக் கண்ணீரைச் சொரியவும், ஆதரவற்ற பேதை நெஞ்சும் கவலையால் பேதுறவுமாக யான நடுங்கியிருப்பேன். 'இரவின் வாராதே கொள்' என அவர்க்குக் கூறாத என் அறியாமையினாலேதான் என் நிலைமை இங்கு இவ்வாறாயிற்று!

கருத்து : 'அவர் வரும் வழியை நினைந்து அதன் கொடுமைக்கு நடுங்கிக் கலங்குவேன்' என்பதாம்.

சொற்பொருள் : கருவி மா மழை – தொகுதி கொண்ட கார்மேகம். அரவம் – மழையது இடியொலி. போது – நீலப்போது. கவிழ்தல் – கலங்குதல். கவலை கவற்ற - கவலையாற் சுழற்சி கொள்ள. பிணவுப் புலி – பெட்டைப்புலி, பகுவாய் – பிளந்த வாய், பசிக்கு உணவுதேடித் திரியும் கொடுமையைச் சுட்டியது. குட்டம் – ஆழம். அறல் – நீர் ; புது வெள்ளமாதலின் அறல்பட்ட மணலது தோற்றத்தை உடைத்தாயிருந்தது.

விளக்கம் : 'விரவு மலர் பொறித்த தோளர்' என்றது, அவன் மார்பிடத்து விளங்கிய பன்மலர்களானே, அவன் காட்டாற்றையும் நீந்திக் கடந்தவந்த துணிவுச் செயலை அறிந்து, அதற்குக் குறிநேர்தலே காரணமாயினதனால் அதற்கிசைந்த தன் பேதைமைக்கு வருந்தித் தலைவி கூறுவதாகும்! காட்டிய கண் கலுழ்தல் இயல்பேனும், யாதுமறியாத நெஞ்சத்தும் கவலை சூழ்கின்றதுதான் எதனாலோ? எனச் சோர்கின்றாள், இரவுக்குறி வருதலின் ஏதமிகுதியை உணராதிருந்த 'அவளுக்குக்' களிற்றைப் புலி தாக்கக்கண்டு நடுங்கிப் பெருங்குரலெடுத்துப் பிளிறிய பிடியின் குரலும், காட்டாற்றை நீந்திவந்த தலைவனின் துணிவுச் செயலும் அச்சத்தை எழுப்பின என்று கொள்க. இதுபற்றியே, 'அறியாதேற்கே' என்கின்றனள்.

உள்ளுறை : 'புவியால் தாக்கப்படும் களிற்றது நிலைக்கு நடுங்கிப் பெருங்குரல் எடுத்துப் புலம்பும் பிடி' என்றது, இவ்வாறே தலைவனுக்கு வழியிடையே ஓர் இடையூறாயின் தானும் கலங்கிப் புலம்பும் தன்மையினள் என்று உணர்த்துதற்காம். 'இதனால், தலைவன் இரவுக்குறி வருதலைக் கைவிட்டானாகித் தலைவியை வரைந்து கொள்ளுதலிலே மனஞ் செலுத்துவானாவன்' என்பதாம்.

ஒப்பு : 'இரவுக்குறி வரின் ஊனும் அஞ்சுவல்' எனும் குறுந்தொகைச் செய்யுளடியும் (குறுந்: 216,22) இவ்வாறு தலைவியர் அஞ்சுதலை உணர்த்தும். புலியும் களிறும் தம்முள் எதிருற்ற ஞான்று பொருதும் இயல்பின. களிறு புலியைத் தாக்குதல் 'சிறுகட் பெருங் களிறு வயப்புலிதாக்கி' (குறு 88.2) என்பதனால் அறியப்படும். புலி களிற்றை அடப் பிடிபுலம்பும் என்பது, 'குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை, பூநுதல் இரும்பிடர் புலம்பத் தாக்கித், தாழ்நீர் நனத்தலைப் பெருங்களிறு அடுஉம்' எனவரும் சீத்தலை சாத்தனாரின் வாக்காலும் அறியப்படும் (நற்:361–3).

145. என் செய்வேன்?

பாடியவர் : நம்பி குட்டுவன்.
திணை : நெய்தல்.
துறை : இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி வரைவு கடாயது.

[(து–வி.) தலைவன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகுதலை அறித்த தோழி, இவ்வாறு தலைவிக்குக் கூறுவதன் மூலம் விரைவிலே தலைவியை மணந்துகொள்ளுதற்குத் தலைவனைத் தூண்டுதற்கு முற்படுகின்றாள்.]

இருங்கழி பொருத ஈர வெண்மணல்
மாக்கொடி அடும்பின் மாஇதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன் நாமவெங் கேண்மை
ஐதுஏய்ந் தில்லா ஊங்கும் நம்மொடு 5
புணர்ந்தனன் போல உணரக் கூறித்
'தான் யாங்கு'? என்னும் அறன்இல் அன்னை
யான்எழில் அறிதலும் உரியள், நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ 10
அம்ம வாழி! அவர் தேர்மணிக் குரலே!

தோழி! நெடிது வாழ்வாயாக! கண்டவர் விருப்பமுறும்தகைமை உடையோன் நம் காதலன். கரிய கழியிடத்து நீர் மோதுதலானே ஈரமாகிய வெண்மணலிடத்தே படர்ந்திருக்கும் பெருங் கொடிகளையுடையது அடும்பு. அதன் பெரிய பூவிதழ்களைக் கொய்து கொணர்ந்து மகளிரது கூந்தலிடத்தே சூட்டலுறும் தலைமாலைக்கு அணிகூட்டும் தன்மையாளன் அவனாவான். அவனுடைய அச்சந்தரும் வெய்ய நட்பானது பண்டு பொருந்தியிருந்தது. இவ் வேளை அவனுக்கும் நமக்கும் யாதொரு தொடர்பும் சிறிதேனும் இல்லை. இருந்த போதிலும் அறனுணர்வற்ற நம் அன்னை நம்மோடும் அவன் கூடியிருந்தானேபோல வெளிப்படக் கூறினளாக, 'அவன் எவ்விடத்தே உள்ளனன்?' என்றும் கேட்பாளாயினள். அன்றி, நீயும் நின்னது மேனி எழிலது மாற்றத்தினாலே யானே நின் உறவை அறிதற்கு உரியளாகவும் தோன்றுகின்றனை. பருத்த அடியினவான புன்னை மரங்கள் விளங்கும் நம் சேரிக்கண்ணே, அவனது தேர் வருவதனாலே எழுகின்ற மணியினது குரல்தான், நள்ளென்னும் இரவின் நடுயாமத்தினும் மெல்ல வருவதாகுமே? அதனை அன்னையும் கேட்டாளாயின் யான் என் செய்வேனடீ?

கருத்து : 'நின்னை வரைந்து கொண்டு போதலே தலைவனுக்கு இனிச் செய்யத்தகுவது' என்பதாம்.

சொற்பொருள் : இருங்கழி – கரிய கழி. மாக்கொடி – பெருங்கொடி; கருங் கொடியும் ஆம். மாவிதழ் – பெரிதான பூவிதழ்: கரிய பூவிதழும் ஆம். அலரி – அலர்ந்த பூக்கள். கோதை – தலைமாலை. காமர் – கண்டார் விருப்புறும் அழகு நாமம் – அச்சம், ஐது – சிறிதளவு ஏய்ந்தில்லா – பொருந்தியிராத. உணர – கேட்பார் அறியுமாறு வெளிப்பட. எழில் –களவொழுக்கத்தாலே வந்துற்ற புதிய அழகு நலம்.

விளக்கம் : 'மணிக்குரல் வரும்' என்றாள்; வரின் அன்னை ஐயன்மாருக்கு, உணர்த்த அதனால் தலைவனுக்கு ஏதமுண்டாதலும் கூடுமென அஞ்சியதனால். 'காமர் கொண்கன்' என்றது, அவனைக் காணின் தாயும் அவனைத் தலைவிக்கு ஏற்றவனேயெனக் கொண்டு விரும்புவாள் என்பதனாலாம். 'நீயும் யான் எழில் அறிதலும் உரியன்' என்றது, தன் காவல் பொய்ப்பட்டதென்ற குறைச்சொல் தனக்கு உண்டாகாதபடி காத்தற்கு வேண்டி உரைப்பதாம். இதனைக் கேட்டலுறும் தலைவன் தலைவியை விரைய வரைந்து வந்து மணமுடித்துக் கொள்ளுதலிலே மனஞ்செலுத்துவான் என்பதும் ஆம்.

உள்ளுறை : 'அடும்பின் மாவிதழ் அலரி கூந்தன் மகளிர் கோதைக்கு ஊட்டும் காமர் கொண்கன்' என்றது, அவன் முன்னர்த் தலையளி செய்தாற்போல இனியும் பலரறிய மணந்து தலைவியின் கூந்தலிற் பூச்சூட்டி மணக்கும் வாய்மையன் ஆவான் என்பதாம்.

ஒப்பு : அடும்பின் மலரைப் பெண்கள் சூட்டிக் கொள்வர் என்பதனை, 'அடும்பின் ஆய்பாலர் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்' என வருவதானும் அறியலாம்.—(குறு, 401,1-2). இது கடற்கரைப் பாங்கிலே வளரும் கொடி. இதன் இலைகள் மானடித் தடம் போல விளங்கும் என்பர். 'அடும்பின் அலர்கொண்டு உதுக்காண் எம் கோதை புனைந்த வழி' (கலித் 144, 30-31) என்பதும், மகளிர் அடும்பின் மலரிட்டுக் சுட்டிய கோதையினை அணிதலைப் புலப்படுத்தும்.

146. இழிந்து இருந்தனை சென்மோ?

பாடியவர் : சுந்தரத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : பின்னின்ற தலைவன் முன்னிலைப் புறமொழியாகத் தோழி கேட்கச் சொல்லியது.

[(து–வி.) தோழியை இரந்தும் தன் குறையைத் தீர்ப்பதற்கான வாக்குறுதியைப் பெறாமற்போன தலைவன், அவள் கேட்டுத் தன்பால் இரக்கங்கொள்ளுமாறு தனக்குட் கூறுவான் போல, இப்படிக் கூறுகின்றான்.]

வில்லாப் பூவின் கண்ணி சூடி
'நல்ஏ முறுவல்' எனப் பல்லூர் திரிதரு
நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே!
கடனறி மன்னர் குடைநிழல் போலப்
பெருந்தண் ணென்ற மரநிழல் சிறிது இழித்து 5
இருந்தனை சென்மோ —'வழங்குக சுடர்!' என
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண்தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே! 10

சித்திரங் காண்பதிலே ஆர்வமுடைய மக்கள் பலரும் அன்போடும் ஒருங்கேகூடிப் பாராட்டிய புகழ்ச்சொற்களின் மிகுதியினாலே 'நல்ல ஓவியன் தான்' என்னும் சொல்லினைப் பெற்றவனாகிய தன்னாண்மை வல்லான் ஒருவன், தன் திறன் எல்லாம் சேர்த்து எழுதிவைத்தாற் போன்ற, காணத் தகுந்த வனப்பினையுடைய சித்திரப் பாவையொத்த அழகினள் அவள்! மாமை நிறங்கொண்ட அவளாலே வருத்தப்பெற்று மையல்கொண்ட நெஞ்சமே! விலைக்கு விற்றற்காகாத பூளைப்பூவின் தலைக்கண்ணியைச் சூடிக்கொண்டு, 'யான் நன்கு பித்தேறினேன்?' எனப் பிறர் கூறுமாறு காட்டியபடி பல ஊர்களிலும் திரிகின்ற நெடிய கரிய பனைமடற் குதிரையினைக் கருத்திற் கொண்டோய்! என் பேச்சையும் நீ ஏற்றுக் கொள்வையாயின், 'தம் கடமைப்பாட்டை அறிந்து காக்கும் மன்னவரது குடைநிழலிடத்தே நாட்டுமக்கள் குளிர்ச்சி பெறுமாறு' போலப் பெரிதும் தண்ணென்றிருக்கும் மரநிழலினிடத்தே இறங்கிக் களைப்பாற்றிக் கொண்டு சிறிதளவு இருந்தனையாய், 'ஞாயிறுதான் தன் செலவைத் தொடர்வதாக' என அதுகாறும் பொழுதைக் கழித்த பின்னர், மீண்டும் நின் செலவைத் தொடர்வாயாக!

கருத்து : 'மடலேறி மன்றம் போந்தாயினும் அவளை, அடைவேன்' என்பதாம்.

சொற்பொருள் : வில்லாப்பூ – விலையிடற்காகாப் பூ; பூளைப் பூ முதலியன; இவற்றை மக்கள் இயல்பாகச் சூடார் என்பதாம். 'ஏம் உறுவல்' - பித்தேறினம் ஆவேம். மடல்மான் – மடலாற் செய்த குதிரை. கடன் – அரசநெறி. குடை – வெண் கொற்றக் குடை. ஐயள் – அழகினள். மையல் நெஞ்சம் – மயங்கிய நெஞ்சம்.

விளக்கம் : 'மாயோள் அணங்கிய மையல் நெஞ்சம்' என்றான், அவளை அடைந்தாலன்றித் தன் உயிர்தான் நிலை பெறுதல் இல்லை எனத் தன் நிலையை உணர்த்துதற்கு, 'அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து (கலி.139)' என்று வரும் கலியடிகள், மடலேறுவார் சூடும் பல்வகைப் பூக்களாலாகிய கண்ணி பற்றிக் கூறுவது காண்க.

'கடனறி மன்னர் குடைநிழற்போலப் பெருந்தண் மர நிழல்' என்று கூறியது தன் கடனறிந்து குறைதீர்த்து அருளாளாய்த், தன்னை ஒதுக்கும் தோழியது கொடுமையை நினைந்து, அவட்கு அறிவுதெருட்ட உரைத்ததாகும். 'மடலேறி மன்று பட்டவழித் தமராயினார் மகட்கொடை நேரலே சால்பு' என்பது மரபாதலின், தான் அதற்கும் துணிந்தமை உரைக்கின்றான்.

தலைவன் மடலேறி வருகின்ற மரபினை,
'மாவென மடலும் ஊர்ப: பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப; காமம் காழ்க்கொளினே'

எனவரும் குறுந்தொகைப் பாட்டானும் அறியலாம்.(குறுந்: 17).

147. எவ்வண்ணம் உய்வேம்?

பாடியவர் : கொள்ளம் பக்கனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) தலைவன் தலைவியை ஊரறிய மணந்து கொள்ளுதலைத் தூண்டுதற்கு நினைந்த தோழி இவ்வாறு தலைவிக்குக் கூறுவாள்போல அவனும் கேட்டு உணருமாறு கூறுகின்றனள்.]

யாங்குஆ குவமோ அணிநுதற் குறுமகள்!
'தேம்படு சாரற் சிறுதினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவரநீ மற்று
எவ்வாய்ச் சென்றனை அவண்?' எனக் கூறி,
அன்னை ஆனாள் கழற முன்னின்று 5
'அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே
வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து
சுனைபாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
பொய்யல் அந்தோ! வாய்த்தனை? அதுகேட்டுத் 10
தலைஇறைஞ் சினளே அன்னை;
செலவுஒழிந் தனையால், அளியை நீ, புனத்தே?

அழகான நெற்றியைக் கொண்ட இளமகளே! 'தேன் மணம் பரவுகின்ற மலைச்சாரலிடத்தே பொருந்திய சிறுதினைப் பயிரிடத்துப் பெருங்கதிரினைச், சிவந்த வாயினவான பசிய கிளிகள் கவர்ந்து போகவும். நீதான் மற்று அங்கே எவ்விடத்துக்குச் சென்றனையோ?' என்று, மனம் அமையாளாகிய அன்னை கேட்டனள், கேட்டலும், நீதான் அவள் முன்னர் நின்றபடி 'மூங்கிலாற்செய்த கிளிகடி தட்டையையுடைய யான், மலர்ந்த பூக்களைக் கொய்ததும், சுனைபாய்ந்து ஆடியதும் செய்தவள் அல்லேன்' என்றனை. 'அருவிகள் ஆரவாரிக்கும் பெருமலைநாட்டைச் சார்ந்தவனாகிய தலைவனை யான் பிறராற் கூறக் கேட்டவளும் இல்லேன்: கண்ணாற் காணக் கண்டவளும் இல்லேன்' எனவும் கூறினை. சற்றும் நினைவோட்டம் இல்லாதாய்! யாதும் பொய்புகலாது உண்மையை உரைத்தனையே! நீ உரைத்த அதனைக்கேட்டதும் அன்னையும் தன் தலையைக் கவிழ்ந்து கொண்டனளே! நீயும் புனத்திற்குச் செல்லும் செல்வினைப் போக்கிக் கொண்டனையே! நீ இரங்கத்தக்கவளாயினை! இனிமேல் நாம் எவ்வண்ணம் ஆவேமோ?

கருத்து : இனி மணந்தாலன்றித் தலைவனை அடைதற்கு வழியில்லை' என்பதாம்.

சொற்பொருள் : அணிநுதல் – அழகிய நுதல்; நெற்றிச் சுட்டிபோலும் அணிகள் திகழும் நுதலுமாம். தேம்படு சாரல் – தேன்மணம் பரந்திருக்கும் சாரல்; தேன் துளிகள் சொரிந்தபடி விளங்கும் சாரலும் ஆம். வெதிர் – மூங்கில். மலர்பூ – மலர்ந்திருக்கும் பூக்கள். வாய்த்தனை – வாய்மையே கூறினை. அளியை – இரங்குதற்கு உரியாய்.

விளக்கம் : தலைவனையே நினைவிற் கொண்டிருந்த தலைவியின் தன்மையினாலே, தாய் கிளிகளாற் கவரப்பட்டுக் கதிரிழந்து விட்ட தினைப்பயிருட் சில கண்டு வினவலும், தலைவி 'பெருவரை நாடனை அறியலும் அறியேன்; காண்டலும் இலனே' என வாய்சோர்ந்தாளாக உரைத்துத் தன் களவுறவைத் தானே காட்டிக் கொடுத்தனள் என்க. தாய் தலை இறைஞ்சினது, தன் குடிப்பெருமையின் சிறப்புக்குப் பழிவந்து எய்தியதென நினைத்ததனால் ஆம். களவுறவைத் தாய் அறிந்தமை இதனால் தலைவனுக்குப் புலப்படுத்தினளாம். 'செலவொழிந்தனை' என அடுத்து நேரும் இற்செறிப்பையுங் கூறினள். இதனால், தலைவியைக் குறியிடத்தே பெற்றுக் கூடுதல் இனி வாயாதென உணரும் தலைவன், அவளை முறையாக மணந்து கொள்ளுதலிலேயே கருத்தைச் செலுத்துபவனாவான் என்றறிதல் வேண்டும். தினைக் குரலைக் கிளி கவராமைப் பொருட்டுக் காவல் பூண்டவள், தானே களவிலே இன்பத்தை நாடிச் சென்றவளாயதும், அதனையுணர்ந்த தாயின் வருத்தமிகுதியும் இச் செய்யுளால் விளங்கும்.

மேற்கோள் : ஆசிரியர் இளம்பூரணனார், 'களவு அறிவுறினும்' என்னும் துறைக்கு மேற்கோளாகத் தலைவி கூற்றாகக் கொள்வர். அப்போது, தோழியால் களவு வெளிப்பட்டமை கூறித் தலைவி சொல்வதாகக் கொள்ளல் வேண்டும்.

148. வருந்தமாட்டேன்

பாடியவர் : கள்ளம்பாளனார்: கருவூர்க் கண்ணம் பாளனார் எனவும் பாடம்.
திணை : பாலை.
துறை : பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.

[(து–வி.) 'தன்னைப் பிரிந்து வேற்றூர்க்குத் தலைவன் செல்ல நினைக்கின்றான்' என்பதனை, உய்த்துணர்ந்தாள் ஒரு தலைவி. அவள் மேனி நாளுக்குநாள் நலியத் தொடங்கிற்று. தலைவியது தளர்வைத் தோழி காணுகின்றாள். அவள் மனத்தைத் தெளிவிக்கத் தோழி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]

வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும்
'நீஅவண் வருதல் ஆற்றாய்' எனத்தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே
நெடுங்கயம் புரிந்த நீர்இல் நீள் இடைச்
செங்கால் மராஅத்து அம்புடைப் பொருந்தி 5
வாங்குசிலை மறவர் வீங்குநிலை அஞ்சாது
கல்லளைச் செறிந்த வள்ளுகிர்ப் பிணவின்
இன்புனிற்று இடும்பை தீரச் சினம்சிறந்து.
செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை
உயர்மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும் 10
அருஞ்சுரம் இறப்ப என்ப
வருந்தேன் தோழி! வாய்க்க அவர் செலவே!

தோழி! என் மேனி வண்ணத்தினது சிறப்பினைப் பல படியாகப் பார்த்துப்பார்த்து இன்பமடைந்தனர்; மென்மையான சொற்கள் பலவற்றைப் பேசி என்னை மகிழ்வித்தனர்; நீதான் அவ்விடத்திற்கு எம்முடனே கூடியபடி வருதலை ஆற்றமாட்டாய் என்பார். தாம் தொடங்கிச் செய்யும் முயற்சியினை மேற்கொண்டவராய் நம்மைப் பிரிந்து போதலையும் செய்வார். நெடிதான பொய்கையிடத்தும் பொருந்திய நீரில்லாதாய்க் காணப்படும் நெடிதான சுரநெறியிலே, சிவப்பான அடிமரத்தையுடைய மராவினது அழகிய பக்கத்திலே பொருந்தியிருந்தபடி, வழிவருவாரின் வருகையினை எதிர்பார்த்தபடியாக, வளைந்த வில்லினைக் கையிடத்தே கொண்டோரான ஆறலை கள்வர்கள் மிகுதியாயிருப்பர். அவர்கட்கும் அவர் அஞ்சமாட்டார். மலைக் குகையிலே சேர்ந்து கிடந்த பெரிதான நகங்களையுடைய தன் பெண்புலியானது இனிதான குட்டிகளை ஈன்றதனாலே கொண்ட நோயும் பசியும் தீரும் பொருட்டாகச், சினமிகுதியாற் சிவந்த கண்களைக் கொண்டதும், வேட்டை கொள்ளுதலிலே வல்லமையுடையதுமாகிய பெரிதான ஆண் புலியானது. உயர்ந்த கொம்புகளைக் கொண்ட களிற்றது புள்ளிகளையுடைய மத்தகத்தே பாய்ந்து அதனைக் கொல்லும். அத்தன்மைத்தானதும் கடத்தற்கு அரிதானதுமான சுரநெறியையும், 'இன்றைக்கே யாம் கடந்து செல்வேம்' எனவும் கூறுவார். இதற்காகவும் யான் வருந்தமாட்டேன். 'அவர் சென்று முயலுகின்ற செயல்தான் இனிதாக வாய்ப்பதாகுக' என்று வாழ்த்தி, அவரை வழியனுப்பிவைத்து, அவரைப் பிரிந்த துன்பத்தையும் தாங்கிப் பொறுத்திருப்பேன்.

கருத்து : 'இல்லத் தலைவியான நீயும் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருத்தலே கடமையாகும்' என்பதாம்.

சொற்பொருள் : 'வண்ணம்' என்பது தலைவியின் இயல்பான நிறத்தையும், புனைவால் அமைகின்ற வண்ணங்களையும் குறிக்கும். புரிந்த – பொருந்திய. வீங்குநிலை – மிக்கிருக்கின்ற நிலை. ஆள்வினை – முயற்சி; ஆணின் செயலாதலின் ஆள்வினை என்றனர். கயம் – ஆழமான குளம். கல்லளை –மலைக்குகை; பாறையிடுக்கு. வாங்குசிலை – வளைவான வில். புனிற்று இடும்பை – ஈன்றதன் அணிமை காரணமாக ஏற்படும் நோவு. ஒருத்தல் – களிற்றுத் தலைவன்,

இறைச்சிப் பொருள் : 'பிணவின் புனிற்றிடும்பை தீரப் பெரும்புலி களிற்றைக் கொன்று இழுத்துக்கொண்டு போதலைப்போலத் தலைவனும் இல்லத்து வறுமை அகலப் பொருளினை மிகுதியாக ஈட்டிக்கொண்டு வருவான்' என்பதாம்.

விளக்கம் : 'வண்ணம் நோக்குதல்' பிரிந்தால் அதுதான் வேறுபடுமே என்னும் ஆற்றாமையினால். 'மென்பொழி கூறல்' அவள் மனம் புண்படாவாறாம். நீரற்ற நெடுவழியினை, அதன்கண் மறைந்திருக்கும் ஆறலை கள்வர்க்கும், கொடும்புலிக்கும் அஞ்சாது கடந்துசென்று பொருளீட்டி வருதல், இல்லத்தில் தலைவியுடனிருந்து அதனால் அறம்பல செய்து இன்புறுதற்கே என்று கொள்ளல் வேண்டும். 'வருந்தேன்' என்றது இவ் வுண்மையினை உணர்தலால்.

ஒப்பு : ஆண்புலியைக் 'கோள்வல் ஏற்றை' எனக் குறுந்தொகைச் செய்யுளும் (141), அகநானூற்றுச் செய்யுளும் (171) உரைப்பதனால், புலியின் ஆற்றலை அறியலாம். இவ்வாறே ஆள்வினையை முடித்துவரும் ஆற்றலையுடையவன் தலைவன் என்பதுமாம். 'மராஅம்'– செங்கடம்பு மரம்; முருகன் கோயில் கொள்ளும் மரம்!

149. அலர் சுமந்து ஒழிக!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம்.

[(து–வி.) (1) தலைவனுடன் போய்விடுவதற்குத் தலைவியை வற்புறுத்திக் கூறுவது; (2) சிறைப்புறம் நிற்கும் தலைவன் கேட்டுணர்ந்து மணவினைக்கு விரைதற் பொருட்டுத் தோழி கூறுவது]

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி! கானல் 5
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்
கடுமாப் பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவுஅயர்ந் திசினால்; யானே;
அலர்சுமந்து ஒழிகஇவ் அழுங்கல் ஊரே! 10

தோழீ, வாழ்வாயாக! நம்மூர்த் தெருக்களிலே, சிலரும் பலருமாகக் கூடி, நின்று தம் கடைக்கண்ணாற் பார்த்து, மூக்கின் உச்சியிலே சுட்டுவிரலைச் சேர்த்துக் கொண்டாராகப் பழி தூற்றித் திரிவாவாராயினர். அவரது பழியுரைகளைக் கேட்டறிந்த நம் அன்னையும், சிறுகோல் ஒன்றைக் கைக்கொண்டு சுழற்றியபடியே என்னை. அடிப்பாளாயினள்! இவற்றால் யானும் மிகவும் துயர் உற்றேன். காண்பாயாக! இத் துன்பமெல்லாந் தீரும்படியாக.

கானலிடத்தே விளங்கும் புதுமலர்களைத் தீண்டியதனாலே பூமணம் கமழும் நிறங்கொண்ட பிடரி மயிரையுடைய, கடிதாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றிருக்கும் நெடிய தேரை விரையச்செலுத்தியபடி, இரவின் நடுயாமப் பொழுதிலே வருகின்ற அழகிய தேரினனான கொண்கனோடு, நீயும் சென்றுவிடுதற்கு யான் உடன்படா நின்றேன். அங்ஙனம் நீதானும் சென்றனையானால், ஆரவாரத்தையுடைய இவ்வூர்தான், யாது செய்யும்? பழிச்சொற்களைக் கூறுதலைச் சுமந்ததாய் இதுதான் ஒழிந்து போவதாக!

கருத்து : 'ஊர்ப் பழியினின்றும் பிழைத்ததற்குத் தலைவனுடனே உடன்போக்கிற் சென்று விடுதலே நன்று' என்பதாம்.

சொற்பொருள் : கடைக்கண் நோக்கம் – ஒருக்கணித்த பார்வை ; கரவான பார்வை. மறுகு – தெரு. வலந்தனள் – சுழற்றி அடித்தனள். பூநாறு – பூமணங் கமழும். குரூஉ – நிறங்கொண்ட. கடுமான் – விரையச் செல்லும் குதிரைகள். இயல் தேர் – அழகிய தேர்; இயலுகின்ற தேரும் ஆம்.

விளக்கம் : 'தலைவியது குடிமாண்பின் உயர்ச்சி பெரிது; அதனால் நேரடியாகப் பழிக்க அச்சமுற்ற அலவற் பெண்டிர்கள், கடைக்கண் சார்த்தியும், மூக்கு நுனியில் விரலைச் சேர்த்தியும், தமக்குள் கரவாகப் பேசியபடி அலர் உரைப்பார் ஆயினர்' எனலாம். அன்னை தன் மகளை ஐயுற்றனள் என்பதன்றேனும், பிறர் சுட்டிப் பழித்ததற்குக் காரணமாயின தன்மை குடிக்குப் பழியெனக் கொண்டு, மகளை அடித்தனள் எனக. 'அலருரையாற் காமஞ்சிறக்கும் எனினும் அன்னை அறிந்தாளாதலின், இனி இற்செறிப்பு நிகழ்தல் கூடும் என்பதாம். அதன் பின்னர்த் தலைவனோடு சேர்தல் வாயாதாகலின், அன்றிரவே போய்விடுதல் நன்றென்கின்றாள்.

இனிச் சிறைப்புறமாகச் சொல்லியதென்று கொள்ளின், இவற்றைத் தோழி படைத்து மொழித்தாளாகக் கொள்க. இதனைக் கேட்கும் தலைவன், இனித் தலைவியை முறையாக மணந்துகொள்ளுதலே செயத்தகுந்த தென்று கொள்வான்; அதனால் விரைவில் மணவினைக்கும் முயல்வான் என்றறிக. தோழி, தலைவிக்குக் கூறுவாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு இங்ஙனம் கூறினள் என்றும் கொள்ளுக.

மேற்கோள் : 'இச் செய்யுள் அலர் அச்சம் நீங்கினமை கூறியது' எனக் (அகத். 42) காட்டித் தலைவி கூற்றாகக் கொள்வர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். தலைவர், தேர் முதலியவற்றை ஏறிச்சென்று தலைவியரைக் கூடுதற்கும் உரியரெனப் புலவர் கூறுதற்கும் மேற்கோளாகக், 'கடுமான் பரிசுடைஇ, நடுநாள் வரூஉம்' என்பதனையும் அவர் காட்டுவர்.

ஆசிரியர் இளம்பூரணனார், 'உடன்போக்கு ஒருப்பட்டதற்குச்' செய்யுளாகக் காட்டுவர் (தொல். அகத். சூ. 45 உரை). பொருளியலுள், 'போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும் என்பதற்கு உதாரணமாகவும் காட்டுவர். அலர் மிகாமைக் கூறும் கூற்றினும் கற்புக்கடம் பூண்டு கூறுதலுக்கு, 'நடுநாள் வருஉம்....... 'அழுங்கலூரே' என்ற பகுதியையும் இவர் காட்டுவர்.

பிற பாடங்கள் : சிறுகோல் வலத்தள் அன்னை; 'கடுமான் பரிய கதழ்பரி கடைஇ'; 'புதுமலர் தீண்டிய பூண்நாறு குரூஉச் சுவல்.'

150. தாயின் சினம்!

பாடியவர் : கடுவன் இளமள்ளனார்.
திணை : மருதம்.
துறை : தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது...
[(து–வி.) தலைமகன் ஒரு பரத்தையோடு உறவு வைத்திருந்தான். சில காலம் சென்றதும், அவளை மறந்து மற்றொருத்திப்பாற் சென்றான். இதனால். முதற்பரத்தை சினங் கொள்ளலானாள். அதனைத் தணிவிக்கக் கருதிய தலைவன், பாணனை அவள்பாற் செல்லுமாறு பணிக்கின்றான். சென்ற பாணனிடம், அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நகைநன்கு உடையன் பாண! நும் பெருமகன்
'மிளைவலி சிதையக் களிறுபல பரப்பி
அரண்பல கடந்த முரண்கொள் தானை.
வழுதி வாழிய பலஎனத் தொழுது ஈண்டு
மன் எயிலுடையோர் போல, அஃதுயாம் 5
என்னதும் பரியலோ இலம்எனத் தண்நடைக்
கலிமா கடைஇ வந்துஎம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்சக்
கண்ணுடைச் சிறுகோல் பற்றிக்
கதம்பெரிது உடையள்யாய் அழுங்கலோ இலளே. 10

பாணனே! நம் பெருமகனாவான் இதுகாலைப் பிறரால் நகையாடப்படுதலைப் பெரிதும் உடையானாயினான். "காவல் அரண்களது வலிமை சிதைந்துபோமாறு பல போர்க் களிறுகளை நாற்புறமும் பரப்பி வைத்துப், பகைவரது அரண்கள் பலவற்றையும் வென்று கைக்கொண்டவன், வலிமிகுந்த சேனைகளை உடையோனான பாண்டியன். 'இன்னும் பலகாலம் வாழ்வானாக' என்று தொழுது நின்று, அடையப் பெற்ற நிலையான அரண்களை உடையராயிருக்கும் சிலரைப் போல, அதன்பொருட்டு யாம் எவ்வளவேனும் வருந்துதல் இலராவோம்' என்று கூறித், தண்ணிய நடைகொண்ட கனைக்கும் குதிரையைச் செலுத்தியவனாக வந்து, எம் சேரியிடத்தே தன்னுடைய தாரினையும் தலைக் கண்ணியையும் எமக்குக் காட்டி, ஒருமைப் பாட்டைக் கொண்டதான என் நெஞ்சத்தையும் அப்போதே கவர்ந்து கொண்டான். அந்தத் தொடர்பானது என்றைக்கும் இனி என்னை விட்டுப் போகுமோ? ஆனால், யாவரும் அஞ்சுமாறு, கணுக்களையுடைய சிறு மூங்கிற்கோலைத் தன் கையிற் பற்றிக்கொண்டவளாக நிற்கும் அன்னையோ, பெரிதும் சினமுடையாளாய் உள்ளனள்; சிறிதேனும் என் நிலைக்கு வருத்தம் கொள்ளுதலும் இல்லாதாளாய் உள்ளனள்!

கருத்து : 'அவரோடு எனக்குள்ள உறவு வீட்டுப் போகாது எனினும், இதுகாலை அன்னையின் சினம் பெரிதாயிருக்கின்றது' என்பதாம்.

சொற்பொருள் : மிளை – காவலரண்; காவற்காடும் ஆம்; யானைகளாற் காவற் காட்டை அழித்துப் பின் அரணைக் கைப்பற்றினதாகக் கொள்ளலும் பொருந்தும். 'களிறு பல பரப்பி' என்பதும் இதனை வலியுறுத்தும். முரண்கொள் தானை – மாறுபாடு கொள்ளும் தானையும் ஆம்; மாறுபாடாவது பகைவரை அழிகின்ற உறுதிப்பாடு. ஒருமைய நெஞ்சம் – ஒன்று கலந்துவிட்ட நெஞ்சம்.

விளக்கம் : தலைவன் வழுதிக்குத் திறை செலுத்திவாழும் குறுநிலத் தலைவனாதலை, 'மிளை வலி...... பரியலோ இலம்' என்பதனாற் காணலாம். 'தண்டைக் கலிமா கடைஇ வந்து' என்றது, பரத்தையர் சேரியுள் தன்மனம் கவர்வாள் ஒருத்தியைத் தேடியபடி குதிரையை மெல்லச் செலுத்தி வந்தான்' என்பதனால். 'ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ' என்றது, தான் பொருளாசையாலன்றி, மெய்யாகவே அவன்பாற் கலந்த நெஞ்சினளாதலைக் கூறி, அதனால் தன் தொடர்பு விட்டுப் போகாத உறுதியுடைத்து என்பதற்காம். 'தாரும் கண்ணியும் காட்டி' என்றது, 'அவள் அவனுக்கே உரியள்' என்பதனைத் தாரணிவித்தும் கண்ணி சூட்டியும் உறுதிப்படுத்தியதை. ஆயின், 'அன்னை வருந்திலள்' என்றது, தான் பிரிவுக்கு வருந்தி வரவை எதிர்நோக்கினும், தன் தாய் அவனை உள்ளே வரவொட்டாளாய்ச் சினத்தோடு வாயிலிடத்தே அவனை எதிர்நோக்கி இருப்பதைக் கூறியதாம். சிறுகோல் பற்றி இருக்கும் யாய் அவன் வரின் அவனை அடித்தலும் கூடும்; நின்னைக் காணின் புடைத்தலும் கூடும்; ஆகவே அவன் வருநல் வேண்டா: நீயும் உடனே இவ்விடத்திலிருந்தும் அகன்றுபோக' என்றும் உரைக்கின்றனள்.

உள்ளுறை : 'களிறு பல பரப்பி, மிளைவலி சிதைத்து, அரண் பல கடந்த வழுதி' என்றது, அவ்வாறே பொருள் பல கொணர்ந்தளித்து அன்னையின் காவலைப் போக்கி, என்னையும் இனி அவர் அடைதற்கு உரியரென நுட்பமாகப் புலப்படுத்தற்காம்.

151. இரவில் வாரற்க!

பாடியவர் : இளநாகளார்.
திணை : குறிஞ்சி,
துறை : இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

[(து–வி.) இரவுர் குறிந்தண் வந்து சிறைப்புறமாக நிற்கின்றான் தலைவன், அவனுக்குத் தாம் வரைவு வேட்டலைப் புலப்படுத்தக் கருதிய தோழி, அவனும் கேட்குமாறு, தலைவிக்குச் சொல்வாள்போல இப்படிக் கூறுகின்றனள்.]

நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும்
கொன்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச்
செம்மறுக் கொண்ட வெண்கோட் டியானை
கன்மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்க தில்ல தோழி! கடுவன், 5
முறிஆர் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்துக் களவினிற் புணர்ந்த
செம்முக மந்தி செய்குறி கருங்கால்
பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்,
குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன் 10
புன்றலைப் பாறுமயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவி னானே!

தோழி! மிளகுக் கொடிகள் வளர்ந்து படர்ந்திருக்கின்ற மலைச்சாரற்புறத்தே ஒரு கடுவனோடு களவுப்புணர்ச்சியிலே கூடி இன்புற்றது சிவந்தது முகத்தையுடைய மந்தி ஒன்று. புணர்ச்சியாலே தன்மேனியிடத்துத் தோன்றிய வேறுபாடுகளைத், தளிர்களைத் தின்றபடி இருக்கின்ற தன் பெரிய சுற்றமெல்லாம் அறிந்து கொள்ளுமோவென அஞ்சியது. அதனால், பொன்போன்ற பூங்கொத்துக்களையுடைய வேங்கையினது பூக்கள் மலிந்திருக்கும் ஒரு கிளையின்மீது ஏறிச்சென்று அமர்ந்ததாய், ஆழமான நீர்நிலையை உடையதான நெடிய சுனையை நோக்கிக் கவிழ்ந்து, தன்னுடைய புல்லிய தலையிடத்துக் கலைந்திருக்கும். மென்மயிரைத் திருத்திக்கொள்ளலையும் செய்தது. அத் தன்மையுடைய நாட்டினன் தலைவன். அவன்தான், நினது அழகான நெற்றியிடத்தே பசலை படர்ந்ததாயினும், நின்னது பெருந்த தோள்கள் வளை நெகிழப் பெற்றவானாலும், இரவுப் போதில் நின்பால் வாராதிருப்பானாக. எதிர்ப்பட்டாரைக் கொல்லுதலான மாறுபாட்டையுடைய பெரிய புலியினைப் புகுதற்கு அரிதான முழையருகே தாக்கிக் கொன்று, அதனாற் சிவந்த குருதிக் கீறையாகிய மறுவினைக்கொண்ட வெண்கோட்டு யானையானது, மலைமேனின்று வீழும் அருவியிடத்தே சென்று அக்கறையினைக் கழுவிக்கொள்ளும். அத்தகைய கொடிய காட்டு வழியைக் கடந்து, இரவில் இனி அவன் வாராதிருப்பானாக!

கருத்து : 'அவன், இனி நின்னை வரைத்துவந்தானாகி மணம்பெற்று வாழ்தலே செய்தற்கு உரியது' என்பதாம்.

சொற்பொருள் : முரண் – மாறுபாடு. கழூஉம் – கழுவும். கறி – மிளகுக் கொடி. முறி – தளிர், செய்குறை – செய்த புணர்குறி; இது தலைமயிர் கலைந்ததைக் குறித்ததாம். புன்தலை – புல்லிய தலை. பாறு மயிர் – கலைந்த மயிர்.

உள்ளுறை : 'மந்தியும் தலைமயிர்க் கலைவினைத் தன் கிளைகட்கு அஞ்சி ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நாடன்' என்றது, அவ்வாறே தலைவியும் தன் களவொழுக்கத்தாலே உண்டாகும் புதுப்பொலிவுகளை மறைத்து வாழ்கின்ற இக்கட்டான நிலையிலே உள்ளனள்: அது தீர்தற்கேனும் அவளை மணந்துகோடலே தக்கது என்பதாம்.

இறைச்சி : 'இரும்புலியைக் கொன்றழித்த களிறு அருவி நீரிலே தன் குருதிக்கறை படிந்த வெண் கொம்புகளைக் கழுவும்' என்றது, வழியது ஏதத்திற்குத் தாம் அஞ்சியதனைக் கூறினாலும், அவ்வாறே, தலைவிக்குக் களவாலே வந்துற்ற பழிதான் நீங்குதற்கு தானே காரணமாதலை அறிந்த தலைவன் அவளை விரைய மணந்து கொள்வானாக' என்பதுமாம்.

விளக்கம் : நுதல் பசத்தலும், தோள்வளை நெகிழ்தலும், களவின்கண் இடையீடுபட்டு வருகின்ற சிறுபிரிவையும் பொறுத்தற்காற்றாத தலைவினது தன்மையைச் சுட்டிக் கூறியனவாம். 'கொன் முரண் இரும்புலி' என அதன் ஆற்றலைக் கூறியது. அதனையும் குத்திக்கொன்ற களிற்றது ஆற்றலை வியந்து பாராட்டுதற்காம். 'அருவியிற் கழுவும்' என்றது, அவ்வழியே

வரும் தலைவனைக் காணின், அஃது அவனைத் தாக்குதலும் கூடும்' எனத் தாம் அஞ்சியது கூறியதாம். அதுவும் தான் கொண்ட கறையைக் கழுவுமாறுபோலத் தலைவனும் தன் பழியைப் போக்கவேண்டும் என்பதுமாம். 'பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினை' எனச் சொன்னது, அதுதான் மணத்திற்குரிய நற்காலமென அறிவுறுத்தற்காம்.

152. யானே அளியேன்!

பாடியவர் : ஆலம்பேரி சாத்தனார்.
திணை : நெய்தல்,
துறை : மடல் வலித்த தலைவன் முன்னிலைப் புறமொழியாகத் தோழி கேட்பச் சொல்லியது.

[(து–வி) தோழிபாற் குரையிரந்து நின்றான் தலைவன். அவள் உதவ மறுத்தனள். அதனால் நெஞ்சழிந்த அவன், அவள் கேட்குமாறு, தான் தன் நெஞ்சுக்குக் கூறுவானே போலத் தன் முடிபை இப்படிக் கூறுகின்றான்.]

மடலே காமம் தந்தது; அலரே
மிடைபூ எருக்கின் அலர்தந் தன்றே
இலங்குகதிர் மழுங்கி, எல்விசும்பு படரப்
புலம்பு தந்தன்றே புகன்றுசெய் மண்டிலம்;
எல்லாம் தந்ததன் தலையும் பையென 5
வடந்தை துவலை தூவக் குடம்பைப்
பெடைபுணர் அன்றில் உயங்குகுரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று;
யாங்குஆ குவென்கொல் அளியென் யானே?

யான் தலைவிபாற்கொண்ட காமமானது இங்ஙனம் மடலேறி மன்றுபடும் இழிவினையும் எனக்குத் தந்துவிட்டது. ஊரவர் எடுத்துத் தூற்றும் பழிச்சொற்களோ, பன்மலர் இட்டுக் கட்டிய எருக்கம்பூவினது மாலையினையும் தந்துவிட்டது. அனைத்துயிரும் விரும்பி வரவேற்றுத் தொழில் செய்திருந்ததற்குக் காரணமான ஞாயிற்று மண்டிலமோ விளங்கிய கதிர்கள் மழுக்கமுற்றதாய் மேற்றிசை வானத்தையும் சென்றடைந்தது. இவை எல்லாம் எனக்குத் துன்பத்தைத் தந்தன. அதன்மேலும், மெல்லென வாடைக்காற்றும் மழைத் துளிகளைத் தூவத் தொடங்குகின்றது. கூட்டிடத்துப் பெடையைப் பிரியாது கூடியிருக்கும் அன்றிற் பறவைகளும், வாடைக்கு ஆற்றாவாய் வருந்தும் குரலொடு தமக்குள் அளவளாவியபடி இருக்கின்றன. இத்தகைய இராப்பொழுதும் என் செயலனைத்தும் ஒடுங்கும்படியான கையறவைத் தந்தது. இனி, யானும் எவ்வண்ணம் உயிர் வாழ்வேனோ? யான் இனி இரங்குதற்கே உரியனாவேன்!

கருத்து : 'என் சாவிற்குக் காரணமாயினாள் இவளே என்னும் பழி இவளைச் சூழும்' என்பதாம்.

சொற்பொருள் : மிடைபூ – இடையிட்ட பல பூக்கள்; ஆவிரை, பூளை உழிஞை என்பன. எல் – கதிரவன். விசும்பு - இங்கே மேற்றிசை வானம். புலம்பு – தனிமைத் துயரம். புகற்சி – விருப்பம். வடந்தை – வாடைக் காற்று. துவலை – துளிகள். கையறவு - செயலறுந் தன்மை

விளக்கம் : 'காம நோயானது வயிரமுற்றதனால், மடலேறியாயினும் அவளைக் கொள்வேன்' எனத் துணிந்தான் அவன். நலிவாரைக் காத்துப் பேணுகின்ற மரபினை உடையாரான பெருங்குடியினைச் சேர்ந்தவளாயிருந்தும், அவள்தான் தன்னை நலியச் செய்தல் பெரிதும் பழிக்கத் தகுந்ததென்பதையும் உணர்த்துகின்றான். மாலையில் வந்தடையும் தனிமைத் துயரோடு, வாடையின் தூவலும் அதற்காற்றாவாய்ப் புலம்பும் அன்றில்களது கூக்குரலும் சேர, அவன் துயரம் பெரிதும் பெருகுவதாகும் என்று கொள்க. அன்றில் இரவிடத்து நரலுதலைக் குறுந்தொகை, 160, 177, அகநானூறு 50 ஆகிய செய்யுட்களாலும் அறியலாம்.'கூடியிருப்பாரையும் வருத்தும் வாடையானது, கூடப்பெறாதிருக்கும் நலிவுடையாரைப் பெரிதும் மனந்தளரச் செய்தல் உறுதி' என்பதுமாம்.

பிற பாடம் : 'அன்றில் இயங்கு குரல் அளைஇ'

153. பாழ்காத்த தனிமகன்!

பாடியவர் : தனிமகனார்.
திணை : பாலை
துறை : பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது.

[(து–வி.) தலைவனின் பிரிவினாலே மெலிவுற்ற தலைவி, தன் துயரமிகுதியை இப்படிக் கூறுகின்றாள்.]

குணகடல் முகந்து குடக்குஏர்பு இருளி
மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர்
செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்றுஅற் றாங்கு, 5

நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டுஒழிந்து
உண்டல் அளித்துஎன் உடம்பே விறல்போர்
வெஞ்சின வேந்தன் பகைஅலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர்ஊர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே.

கீழைக் கடலினிடத்தே நீரை முகந்துகொண்டு, மேற்றிசைக் கண்ணே சென்று இருண்டு, அணுச்செறிந்த இந்த உலகமானது இருட்சியினின்றும் விடுபட்டு விளக்கம் அடையுமாறு, கம்மியர்கள் செப்புப்பானையைக் கடையுங் காலத்தே எழுகின்ற பொறிகளைப்போல மின்னலிட்டு, எங்கும் தன் தொழிலாகிய பெய்தலை மேற்கொள்ளும் இனிய இடிக்குரலைக் கொண்ட மேகம்; அம் மேகமானது, தன் தொழிலை முடித்த பின்னர்த் தென்புலப் பக்கமாகச் சென்று ஒழிவெய்தும். அதுபோல, என் நெஞ்சமும் 'அவர்பாற் சென்றதனாலே, இவ்விடத்தே என் உடம்பும் உண்ணுதலாலே காக்கப்படும் ஒரு தன்மைத்தாய் ஆகிவிட்டது. வெற்றிப்போர் செய்தலிலே வல்லவனான வெஞ்சினத்தையுடைய வேந்தனது பகைப்படை வந்து வருத்துதலினாலே கலங்கி, ஊரிடத்தே வாழ்வோரான பலரும் வெளியேறிப் போகிய பேரூரின் பாழிடத்தைக், காவல்காத்து நின்றிருக்கும் ஓர் தனியான வீரனைப் போன்று. உயிர்ப்பு ஒடுங்கிப் பாழ்பட்ட என் உடலையும், உணவானது இதுகாலையில் அழிவடையாதே காத்து நிற்கின்றதே!

கருத்து : 'என் உடலும் இனி அழிந்துபோகும்' என்பதாம்.

சொற்பொருள் : குணகடல் – கீழைக்கடல், இருளி – இருண்டு: கார்மேகமாகி. இன்குரல் – இனிதான குரல்; குரல் இனிதானது அது தலைவனின் வருகைக்கு உரித்தான கார்காலத்தை அறிவித்தலால் பாழ் – பாழிடம்; வாழ்வோர் போகியதால் பாழ்பட்ட ஊர் பாழிடம் என்று சுட்டப் பெற்றது.

விளக்கம் : முகந்து, இருளி மின்னித் தன் தொழிலாற்றிய மேகமானது, இறுதியிலே தென்புல மருங்கிற்சென்று அற்றுப் போயினாற்போலக், கண்டு காதலித்துக் கூடியின்புற்ற உடலும், நெஞ்சத்தைப் போகவிட்டுத் தான் இல்லாது போகும் நிலையதாயிற்று என்க.

பேரூர்ப் பெருமையெல்லாம் வாழ்வோர் போகியதும் குன்றிப்போக, அதுதான் பாழிடமாயினாற்போல, தலைவியும் தன் எழிலனைத்தையும் இழந்தாளாகச் சோர்ந்தனள் எனவும் கருதுக. தனிமகன் – ஒருவனேயாக நின்ற வீரன்; ஒப்பற்ற வீரமகனும் ஆம். 'தனக்குரிய நெஞ்சமும் தன் துன்பத்திற்கு உரிய துணையாகாதபோது வேறு எவர்தான் உதவித் தன்னைக் காக்க வியலும்' என்று கருதிச் சோர்ந்ததும் ஆம்.

ஒப்பு : 'மழை தென்புலம் படர்தல்' வாடைக் காலத்தாகும். இதனை, வடபுல வாடைக்கு அழிமழை தென்புலம் படரும் தண்பனி நாள்' என வரும் குறுந்தொகை (317) யானும்; எழிலி தெற்கேர்பு இரங்கும் அற்சிரக் காலையும் எனவும். 'எழிலி தென்புல மருங்கிற் சென்றற்றாங்கு' எனவும் வரும் நற்றிணைச் செய்யுட்களாலும் அறிக— (நற்,5;153). 'வாடை வைகறை, விசும்புரிவதுபோல் வியலிடத்தொழுக, மங்குன் மாமழை தென்புலம் படரும்' எனவரும் அகநானூற்றுச் (24) செய்யுளும் இதனை வலியுறுத்தும்.

154. நிலம் பரந்த நெஞ்சம்!

பாடியவர் : நல்லாவூர் கிழார்.
திணை : குறிஞ்சி
துறை : இரவுக்குறித் தலைவன் சிறைப்புறமாக வரைவு கடாயது.

[(து–வி.) இரவுக் குறியை நாடிவந்த தலைவன், செவ்வி நோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான். தலைவியை வரைந்துகொள்ளுதற்கு விரைதலை வற்புறுத்த நினைத்த தோழி, இவ்வாறு தலைவியிடம் கூறுவாள் போலக் கூறுகின்றாள்.]

கானமும் கம்மென் றன்றே; வானமும்
வரைகிழிப் பன்ன மையிருள் பரப்பிப்
பல்குரல் எழிலி பாடுஓ வாதே;
மஞ்சுதவழ் இறும்பில் களிறுவலம் படுத்த
வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை 5
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதி யோஇல தூவி லாட்டி!
பேர் அஞர் பொருத புகர்படு நெஞ்சம்
நீர்அடு நெருப்பின் தணிய இன்றுஅவர்

வாரார் ஆயினோ நன்றே; சாரல் 10
விலங்குமலை ஆர்ஆறு உள்ளுதொறும்
நிலம்பரந்து ஒழுகும்என் நிறைஇல் நெஞ்சே!

ஏடீ! சற்றேனும் வலிமை இல்லாதவளே! காடும் கம்மென்று ஒலி அடங்குவதாயிற்று. வானமும் மலைப் பிளப்பைப் போன்று விளங்கும் காரிருளைப் பரப்பிக் கொண்டு, பலவான இடிக்குரலைச் செய்யும் மேகத்தின் முழக்கத்தினைக் கைவிட்டதாயில்லை. வெண்மேகம் தவழ்கின்ற குறுங்காட்டிடத்தே, களிற்றினை வெற்றி கொண்ட வெஞ்சினத்தையும் பிளந்த வாயையுமுடைய புலியேறானது, யாவரும் அச்சங் கொள்ளுமாறு முழங்குதலையும் செய்கின்றது. இவ்வோசைகள் அனைத்தையும் கேளாதே நீயும் இதுகாலைத் துயில்கின்றனையோ? பெருந்துன்பம் வந்து மோதியதனாலே குற்றப்பட்ட நெஞ்சத்தினது வெம்மையெல்லாம், நீரைப் பெய்தலாலே அவிகின்ற நெருப்பைப் போலத் தணியுமாறு, இன்று மட்டும் அவர்தாம் வாராதிருந்தனராயின் நன்றாயிருக்கும். நிலையில்லாததான என் நெஞ்சமானது, சாரலிடத்துக் குறுக்கிட்ட மலைக் கண்ணே செல்லும் நெறியை நினையுந்தோறும் எங்கணும் பரவிச் செல்கின்றதே! இனி யான் யாது செய்வேனோ?

கருத்து : 'அவர் வரும் வழிக்கண். அவர்க்கு ஏதம் நேருமோவென யான் அஞ்சுவேன்' என்பதாம்.

சொற்பொருள் : கம்மென்றல் – ஒலியவிந்து போதல், மை இருள் – அடர்ந்த இருட்டு, இறும்பு – குறுங்காடு, வலம் படுத்த – வெற்றி கொண்ட; வலப்புறமாக வீழுமாறு வீழ்த்திய, தூவில் – வலிமை இல்லாத.

விளக்கம் : அஞ்ச வேண்டுமவற்றைக் கேட்ட ஞான்றும் அஞ்சாதே, வாளாவிருந்த நிலையினைக் காண்பாள், 'துஞ்சுதியோ? என்கின்றாள். அவனை இரவுக்குறியின்கண் பெற்று இன்புறுதல் இன்பமே எனினும், மழை நாளின் இரவையும் வழியது கொடுமையையும் நினையும்போது வராதிருத்தலே நன்றாகுமென்னும் எண்ணமே மிகுதியாகின்றது என்க. 'கம்மென்றன்று' என்பதற்குக் கம்மென்னும் மண்மணத்தை உடையதாயிற்று எனலும் பொருந்தும்; மண் மணம் புதுப்பெயலால் எழுவது என்று கொள்க.

155. பனி பரந்தன!

பாடியவர் : பராயனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) இரண்டாங் கூட்டத்துத் தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது: (2) உணர்ப்புவயின் வாரா ஊடற் கண்ணே தலைவன் சொற்றதூஉம் ஆம்.

[(து–வி.) (1) இயற்கைப் புணர்ச்சி பெற்றதன் பிற்றை நாளிலே, குறியிடத்தில் தலைவியைச் சந்திக்கும் தலைவன், அவளைப் பேசவைக்கும் விருப்பினனாக இப்படிக் கூறுகின்றனன். (2) வெள்ளணி நாளிலே தலைவிபால் வந்துற்ற தலைவன், தான் இரந்து நின்று பலவாறு உணர்த்தியதன் பின்னரும் ஊடி நின்றாளை நோக்கி, "இவள்தான் யாவளோ?" என வேற்றாள்போலப் பாவித்துக் கூறுதலாக அமைந்தது]

'ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்
வள்ளிதழ் நெய்தல் தொடலையும் புனையாய்
விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய்!.
யாரை யோநிற் றொழுதனெம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண்திரைப் 5
பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ;
இருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ?
சொல்லினி, மடந்தை!' என்றனென்; அதனெதிர்
முள்எயிற்று முறுவல் திறந்தன;
பல்லிதழ் உண்கணும் பரந்தவால் பனியே. 10

"ஒள்ளிழையரான நின் ஆயமகளிரோடுங் கூடிக்கலந்து பாவை புனைந்தாடும் ஓரையாடலையும் செய்யபாட்டாய். வளவிய இதழ்களையுடைய நெய்தற் பூக்களைத் தொடுத்து அமைத்த தொடலை மாலையினையும் புனையமாட்டாய். விரிந்த பூவையுடைய கானற்சோலையிடத்து ஒருபுறத்தே தனியாகச் சோர்ந்து நிற்பவளும் ஆயினை! நோக்கினாராலே நெருங்கமுடியாத நலத்தினை உடையவளே! மடந்தையே! நின்னைத் தொழுதேமாக நின்று வினவுகின்றேன். தெளிந்த அலைகளைக் கொண்ட பெருங்கடற் பரப்பினிடத்தே விரும்பி உறைகின்றவொரு நீரரமகளாமோ? கரிய கழியிடத்தே வந்து நிலைகொண்டு உறைகின்ற தேவமகளாமோ? நீதான் யாராவையோ? அதனைச் சொல்வாயாக" என்றேம். என்றலும், அதற்கு விடையாக, முட்போன்ற கூரிய பற்களிடையே நின்றும் முறுவற்குறிப்புப் பிறந்தது; ஈரிமைகளை உடைய மையுண்ட கண்களும் முயங்கற் குறிப்பைக் காட்டியவாய்ப் பனிபரந்தன!

கருத்து : 'முயங்கற் குறிப்பினை உடையாள் எனினும், நாணம் துறந்தாள் அல்லள்' என்பதாம்.

சொற்பொருள் : ஓரை – 'ஓரை' என்னும் மகளிர் விளையாட்டு. தொடலை – தழையும் பூவும் கலந்து தொடுத்த பெரிய மாலை. விரிபூங்கானல் – இதழ்விரித்த பூச்களையுடைய கானற்சோலை. 'கண்டோர்' என்றது, தனக்கு முன்பேயும் கண்டோரான இளைஞர் பலரையும் சுட்டிக் கூறியதாம். 'நீரர மகளாகிய நீதான் கருங்கழி மருங்கு நிலை பெற்றனையோ?' என்றலும் பொருந்தும்.

விளக்கம் : முறுவலித்தலும் கண்கலங்குதலும் புணர்ச்சி நாட்டத்தையும், நாணத்தால் கவிழ்ந்த தலை அச்சத்தையும் காட்டுவனவாகும். இரண்டாவது துறைக்கேற்பக் கொள்வதாயின், முறுவல் இசைவையும், கண்கலங்கல் பிரிவுத் துயரினை நினைத்து வருந்திய வருத்தத்தையும் காட்டுவனவாம். 'நின்னைத் தொழுதேமாகக் கேட்பேம்' என்றது. அவள்தான் கற்பு மிகவுடையாளாதலின், அவனை ஒதுக்கற்கு நினையாள் ; அவனை ஏற்று அருள்வாள் என்பதனாலாம்.

மேற்கோள் : 'நாணமும் அச்சமும் மீதூர வேட்கைக் குறிப்பு இல்லாதாளைப் போலத் தலைவி நின்றவழி, அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதலுக்கு' இச் செய்யுளைக் காட்டுவர் இளம்பூரண அடிகள் (தொல். களவு. 10 சூ. உரை).

மதியுடம்பட்ட தோழி 'நீர் கூறிய குறையை யான் மறந்தே'னெனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னோடு கூடாமையால் தலைவி மருங்கிற் பிறந்த வேட்கையும், அவள் அதனை ஆற்றியிருந்த பெருமையும், தலைவன் கூறுதற்கு இச்செய்யுளைக்காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். கள. 11. சூ உரை).

156. பகற்போதிலேயே வருவாயாக!

பாடியவர் : கண்ணன் கொற்றனார்.
திணை : குறிஞ்சி,
துறை : இரவுக்குறி மறுத்தது.

[(து–வி) இரவுப் போதிலே வந்து தலைவியைக் களவிற் கூடிச் செல்லும் களவொழுக்கத்தினனாக இருக்கின்றான் தலைவன், அவனிடம், அவ்வாறு இரவிலே வருதலை மறுத்துத் தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

நீயே அடியறிந்து ஒதுங்கா ஆரிருள் வந்தெம்
கடியுடை வியல்நகர்க் காவல் நீவியும்
பேரன் பினையே பெருங்கல் நாட!
யாமே, நின்னும்நின் மலையும் பாடிப் பல்நாள்
சிறுதினை காக்குவம் சேறும் அதனால் 5
பகல்வந் தீமோ பல்படர் அகலி!
எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்
பாடிமிழ் விடர்முகை முழங்க.
ஆடுமழை இறுத்ததுஎம் கோடுயர் குன்றே. 10

பெருமலை நாட்டைச் சார்ந்தவனே! வழியது தன்மையினை அறிந்து அடிவைத்து ஒதுங்கிச் செல்லுதற்கும் இயலாதபடி இருள் நிரம்பியிருக்கும் இரவுப்பொழுதிலே, நீதான் அதனைக் கருதாயாய் வருவாய் ஆயினை! காவன் மிகுந்த எமது பரத்த மாளிகையிடத்தே பொருந்திய காவலையும் கடந்து வந்தனை! இவற்றால், எம்மிடத்தே பேரன்பு உடையவன் தீயாதலைக் கண்டேம். கொருக்கச்சி அடர்த்தியாக விளங்கும் பெரிய மனைப்பக்கத்தே வாழ்கின்றவரான சிறுகுடியினர் யாம் ஆவேம். கள்னினை மிகவுண்டு கனிப்பேறினராயினும் எம் ஐயன்மார் சினம் மிகுந்தவராகவே உள்ளனர். வானத்தே இயங்கும் மேகங்களும் இடிமுழக்கினைச் செய்கின்றன. மலைமுழைக்கண் சென்று மோதிய இடியொலியின் எதிரொலியும் எழுந்தபடியேயிருக்கின்றது. கொடுமுடி உயர்ந்த எம் குன்றத்தினிடத்தே மேகங்களும் வந்து தங்கியுள்ளன. இதனால், இனி இரவின் கண் எம்மை

நாடி நீதானும் வாராதிருப்பாயாக. நின்னையும் நின் மலையையும் பாடியவராக, பல நாட்களும், சிறுதினை முற்றியிருக்கும் எம் புனத்தைக் காவல் செய்வதன் பொருட்டாக யாமும் செல்பவராவேம். பலவாய நம் துன்பங்கள் எல்லாம் தீரும்படியாகப் பகற்போதிலேயே புனத்தயற்கண் நீயும் இனி வருவாயாக!

கருத்து : 'இவளை விரைந்து மணந்து கொள்ளுதலே இனிச் செய்தற்கு உரியது' என்பதாம்.

சொற்பொருள் : ஆர் இருள் – அடர்ந்த இருட்டு. கடி – காவல். நகர் – மாளிகை. பல்படர் – பலவான துன்பம். பலவாகப் படரும் காமநோயாதலின் 'படர்' என்றனள்; எருவை – கொருக்கச்சி; ஒருவகைச் செடி; குருக்கத்தி என்பர். அரியல் – கள்; நாரால் அரிக்கப்படுதலை உடையதனால் இப் பெயர் பெற்றது. இமிழ் – முழக்கம். மழை -மேகம்.

விளக்கம் : வழிபிழைக்கச் செய்யும் ஆரிருளையும், சினம்மிக்காரது காவலையும், மழை வரவையும் உரைத்து, இடிக் குரலையும் காட்டி, இரவுக்குறி மறுத்தனள். 'நின்னும் நின் மலையும் பாடி' என்றது, இரவுக்குறி மறுப்பினும், தாம் அவன்பாற் காதற்பெருக்கினம் என்றற்காம். ஐயன்மாரைப் பற்றிக் கூறியது, அவரால் துயர் வரக்கூடுமென அஞ்சி இரவுக் குறியை மறுத்து வரைவு வேட்டதாகும். தலைவனைப் பழியொடு வருவன செய்யாது நீக்குதற்கு அறிவுறுத்துவதும் ஆம். 'மணந்து கூடுதலே இனிச் செய்யத்தக்கது' என்று இதனால் புலப்படுத்துகின்றனள்.

157. நினையும் நெஞ்சம்!

பாடியவர் : இளவேட்டனார்.
திணை : பாலை.
துறை : பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.

[(து–வி.) செய்வினை முடிதலுக்கு முன்பேயே குறித்த கார்ப்பருவம் தோன்றக் கண்டவனாகிய தலைவன் தன் நெஞ்சுக்கு இவ்வாறு கூறிக் கொள்ளுன்றான். தலைவியின் அவலம் மிகுதியாகும் நிலையை நினைந்து வருந்திக் கூறுவதாகவும் கொள்க.]

இருங்கண் ஞாலத்து ஈண்டுதொழில் உதவிப்
பெரும்பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப்
பல்பொறி அரவின் செல்புறம் கடுப்ப
யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில்
இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் 5

நம்வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்
கேட்டொறும் கலுமுமால் பெரிதே காட்ட
குறும்பொறை அயல நெடுந்தாள் வேங்கை
அம்பூந் தாது உக்கன்ன
நுண்பகல் தித்தி மாஅ யோளே. 10

இவ்வுலகமோ பெரியதாய் இடமகன்றதாய் இருப்பது. இதனிடத்தே வந்து சேர்கின்ற தொழில்கள் பலவற்றையும் செய்வதற்கு உதவுவது மழையாகும். அதுதான் பெரும் பெயலாகப் பொழிந்து உதவியதன் பிற்றைநாளும் இதுவாகும். இந்நாளின் காலைப்பொழுதிலே, பல புள்ளிகளையுடைய பாம்பொன்று ஊர்ந்து செல்லுங் காலத்தே அதன் மேற்புறமானது தோன்றுமாறுபோல, ஆற்றின் அறல்பட்ட நீரொழுக்கமும் தோன்றுகிறது. இச்செவ்வி அமைந்த இளவேனிற் பருவத்திலே, மாமரங்களும் பூங்கொத்துக்களை நிரம்பப் பெற்றவாய் விளங்குகின்றன. அம் மரங்களிலே தங்கியிருக்கும் குயில்களும் குரலெடுத்துக் கூவுகின்றன. அக் குரலைக் கேட்குந்தோறும் நம்மையே நினைக்கின்ற நெஞ்சத்தினளாவாள் அவள். காமநோயானது எல்லை கடந்து பெருகக் கண்கலங்கியவளாக வருந்துதலையும் செய்வாள். காட்டகத்தேயுள்ள குறிய பொற்றையினது அயலாக, நெடிய அடியைக் கொண்ட வேங்கை மரத்தினது அழகான பூந்துகள்கள் உதிர்ந்து படிந்து கிடந்தாற்போல, அவள் மேனியிடத்தே நுண்ணிய பலவாகிய தேமற் புள்ளிகளும் தோன்றும் மாமை நிறத்தை உடைய அவளும் இப் பருவதைக் கண்டதும் வருத்தம் மிகுந்தவளாவாளே! யாம் என் செய்வேம்?

கருத்து : 'வினையை மிக விரைவாக முடித்துவிட்டு அவளைச் சென்றடைதல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : இருங்கண் - பெரிதும் இடமகன்ற. ஈண்டு தொழில் – பொருந்தும் தொழில். பெரும்பெயல் – பெருமழை. வழிநாள் – பிற்றைநாள். அறல் – கருமணல் படியச் செல்லும் நீர். பதம் – செவ்வி. துணங்குதல் – நெருங்குதல், புணர் குயில் – சேர்ந்திருக்கும் குயில். வேனில் – இளவேனில், கலுழும் – கலங்கி அழும். குறும் பொறை – குன்றிய பொற்றை, தித்தி –தேமற் புள்ளிகள்.

விளக்கம் : உலகத்துத் தொழில் முயற்சிகட்கெல்லாம் ஆதரவாக உதவுகின்ற தன்மையுடையது மழையே ஆதலின், அதன் தொழிலை 'ஈண்டு தொழில் உதவி' என்றனர். 'ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங் குன்றிக்கால்' என்னும் வள்ளுவர் வாக்கும் இதனை வலியுறுத்தும். கருமணற் பாங்கிலே மழைநீர் ஓடிச்செல்வதனைப் 'பல்பொறி அரவின் செல்புறம் போலத் தோற்றும்' என்று உரைப்பது கற்பனை நயமுடையதரம். மாப் பூத்தலும், குயில் கூவுதலும் இளவேனிற் காலத்தாகலின், தலைவன் மீள்வதாகக் குறித்த பருவம் இளவேனிற் பருவம் என்று கொள்ளலாம்.

158. யானோ காணேன்!

பாடியவர் : வெள்ளைக்குடி நாகனார்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப் புறமாகச் சொல்லியது.

[(து–வி.) இரவுக் குறிக் கண்ணே தலைவனும் வந்தானாதலை அறிந்த தோழி, இரவுக்குறியை மறுத்து வரைந்து கோடலை வலியுறுத்த நினைக்கின்றாள்; தலைவிக்குச் சொல்லுவாள் போலத் தலைவனும் கேட்டு அறியுமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

அம்ம வாழி, தோழி! நம்வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல்லதர் மன்னும் கால்கொல் லும்மே;
கனை இருள் மன்னும் கண்கொல் லும்மே
விடர்முகைச் செறிந்த வெஞ்சின இரும்புலி 5
புகர்முக வேழம் புலம்பத் தாக்கிக்
குருதி பருகிய கொழுங்கவுட் கயவாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்குமலை நாடன் வரூஉம் ஆறே.

தோழீ; வாழ்வாயாக! யான் கூறுவதான இதனையும் கேட்பாயாக: மலைப்பிளப்பான குகையிடத்தே பதுங்கியிருந்த வெய்ய சினத்தையுடைய பெரிய புலியானது, புள்ளிகள் அமைந்த முகத்தையுடைய வேழமானது வருந்துமாறு அதன் களிற்றைத் தாக்கிக் கொல்லும்: அக்களிற்றது குருதியையும் பருகும்; கொழுமையான கவுளைக் கொண்ட தன் பெரிய வாயினை வேங்கை மரத்தின் அடிப்பாகத்தே துடைத்துக்கொள்ளும்; உயர்ந்த மலைகளைக் கொண்ட நாட்டிற்கு உரியோனாகிய தலைவன் வருகின்ற மலையகத்து நெறியின் தன்மை அத்தகையது போலும்! அவ்வழிதான் வழியிடைக்கண் மறைவாகக் கிடக்கும் நிறைந்த கற்களைக் கொண்டமையினால் நடக்கும் கால்களைக் கொன்றுவிடுமே! மிக்க இருளால் நிரம்பிய இரவுப் பொழுதும் கண்களைக் கொன்று விடுமே! இதனின்றும் அவனைக் காத்தற்கு நம்மிடத்ததாய ஒன்றனை யானும் காணேனே!

கருத்து : 'இரவுக் குறிக்கண் வருதலைக் காட்டினும் வரைந்து மணந்து கொள்ளுதலைச் செய்யானோ?' என்பதாம்.

சொற்பொருள் : கனையிருள் - மிக்க இருள். புகர் – புள்ளி. 'வேழம்' என்றது பிடியினை: களிற்றைப் புலி தாக்குதலைக் கண்டதும் அதன் பிடியானது புலம்பித் துடிப்பதாயிற்று என்க.

விளக்கம் : கல்லதர் – கற்கள் பொருந்திய வழி: நடப்பாரின் கால்களைச் சிதைத்து வருத்துவதனால் 'மன்னும் கால் கொல்லுமே' என்றனர். இவ்வாறே, இருள்தான் தன் செறிவு மிகுதியினாலே கண்ணினது பார்வையைக் கெடுக்கும் என்பதாம். 'காடு புலியுடையது; கற்கள் பொருந்தியது; நேரமோ கண்கொல்லும் இருட்டு; அவர் அவ்வழி வருதலை நினைந்து யாமும் வருந்துவோம்; அவர் இனி வராதிருப்பின் நன்று' என்பதாம். இதனைக் கேட்கும் தலைவன் வரைவுவேட்டலிலே மனஞ்செலுத்துவான் என்பதாம்.

உள்ளுறை : "புலி களிற்றைத் தாக்கிக் குருதியைப் பருகி வேங்கையின் அடிமரத்திலே சென்று தன் வாயைத் துடைக்கும்" என்றது, ஐயன்மார் தலைவனைத் தாக்கிச் சிதைத்துத் தகப்பனின் முன்பாகக் கொண்டு போய் நிறுத்துவர் என்பதாம். இதனாலும், இரவுக்குறி மறுத்து வரைவுவேட்டமை தெளிவாகும்.

159. அவளும் ஒல்லாள்!

பாடியவர் : கண்ணம் புல்லனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி வரைவு கடாயது.

[(து–வி.) பகற்குறிக்கண் தலைவனும் தலைவியும் கூடி வருகின்ற காலம்; மாலையிலே பாக்கஞ்சேரும் தலைவி தலைவனைப் பிரிந்திருக்க ஆற்றாளாய்த் துயருறுகின்றனள் என்று கூறி, அதனால் தம் பாக்கத்து வந்து இரவுப்போதிற்குத் தங்கிப் போகுமாறு தோழி கூறுகின்றாள். தலைவன் இதனை ஏற்கானாய், வரைந்து கோடலிலேயே மனஞ்செலுத்துபவனாவன் என்பதாம்.]

மணிதுணிந் தன்ன மாஇரும் பரப்பின்
உரவுத்திரை கெழீஇய பூமலி பெருந்துறை
நிலவுக்குவித் தன்ன மோட்டுமணல் இடிகரைக்
கோடுதுணர்ந் தன்ன குருகுஒழுக்கு எண்ணி
எல்லை கழிப்பினும் ஆயின் மெல்ல 5
வளிசீத்து வரித்த புன்னை முன்றில்
கொழுமீன் ஆர்கைச் செழுநகர்ச் செலீஇய
'எழு'எனின் அவளும் ஓல்லாள்: யாமும்
'ஒழி'என அல்லம் ஆயினம்; யாமத்து
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலிகடற் 10
சில்குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!

கரிய பெருங் கடலானது, நீலமணியைக் குற்றம் அற்றதாய்த் தெளிந்து கொண்டாற்போன்ற நீர்ப்பரப்பைக் கொண்டிருப்பதாகும். அதன் வலிய அலைகள் கொணர்ந்து குவித்த மணலிடத்தே பூக்கள் நிறைந்து கிடக்கும் அழகினைக் கொண்டது பெரிதான கடற்றுறை. அத் துறைக்கண் நிலவைக் குவித்து வைத்தாற்போன்ற முகடுயர்ந்த மணல்மேட்டினது இரந்துசரியும் கரையிடத்தே யாமும் நிற்பேம். சங்குகளை இணையாகத் தொடுத்துப் போட்டாற்போல வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் கடற் குருகுகளை எண்ணிக் கண்டபடி நின்னோடும் பகலினைப் போக்கினோம். ஆயின், 'காற்றடித்துக் கோலஞ் செய்த புன்னைமரம் நிற்கும் முற்றத்தையுடைய கொழுவிய மீனுணவை உண்ணும் செழுமையான மனையகத்துச் செல்வதன் பொருட்டாக எழுவாயாக' என்று மெல்லச் சொன்னேமாயின், அவளும் அதற்கு இசைவாள் அல்லள். யாமும், 'வாராதே இவ்விடத்தேயே ஒழிவாயாக' என்றுரைக்கும் நிலையினம் அல்லேம். அதனால், சேர்ப்பனே! நின் தேர்தான் நடுயாமத்தே உடையும் அலையினது ஒலியினைக் கேட்டபடியே உறக்கங் கொள்ளும் கடல்வளம் சிறந்த எம்பாக்கம் ஆரவாரிக்கும்படியாக இரவுப்போதிற்குத் தங்குவதாக!

கருத்து : 'இரவில் வந்து எம் இல்லத்து விருந்தினனாகத் தங்கிச் செல்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : மணி – நீலமணி. துணிதல் – ஆய்ந்து தெளிதல். ஒழுங்கு – வரிசை. வரித்தல் – கோலஞ்செய்தல் கொழுமீன் – கொழுமையான மீன். நகர் – மனை. அல்குதல் – தங்குதல்.

விளக்கம் : "நீதான் அகன்றதற்பின் இவள் நின்னோடும் கூடிய இடனையும், ஆடிக்களித்த துறையையும் நோக்கி நோக்கி மெலிந்து இரங்கியிருப்பாளேயன்றி, இல்லிற்கு எழுதற்கும் இசையாள்: நீதான் பாக்கம் புகுந்தனையாயின், இவளும் நின்னைத் தொடர்ந்தாளாக வருவாள்" என்று கூறுவாளாகத், தலைவியின் பிரிதற்கு இசையாத பேரன்பினைத் தோழி தலைவனுக்கு உரைக்கின்றாள். வரைந்தாலன்றித் தலைவியை அவளூரில் அவளில்லத்திலேயே முயங்குதல் வாயாதாகலின் இது வரைவுகடாய தாயிற்று.

'கடலுள் சென்று மீனார்ந்த குருகினமும் கரைக்கண் திரும்பின; அவள்தான் தன் இல்லத்திற்குத் திரும்புங் கருத்திலள்' என்பதும் ஆம்.

160. கண்டதும் இழந்தேன்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : கழற்றெதிர் மறை

[(து–வி.) 'தலைவனின் களவுறவினாலே அவனது பண்பு நலன்கள் கெட்டன' என்று பாங்கன் பழித்துக் கூற, அவனுக்கு எதிருரையாகத் தன் மனநிலையைத் தலைவன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நயனும் நண்பும் நாணுநன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்-மன்னே; கம்மென
எதிர்த்த தித்தி எர்இள வனமுலை
விதிர்த்துவிட் டன்ன அந்நுண் சுணங்கின், 5

ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொறித்
திருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே. 10

விரைய எதிர்ப்பட்டுத் தோன்றிய தித்தியை உடையவள்; எழுச்சிகொண்ட இளைதான அழகிய முலைகளைக் கொண்டவள்: அவற்றின்பால் அள்ளித் தெளித்தாற்போல விளங்கும் அழகிய நுண்மையான தேமற் புள்ளிகளையும் பெற்றுள்ளவள்; ஐம்பகுதியாக வகுத்து முடிக்கப்பெற்ற கூந்தலைக் கொண்டவள்; சிவந்த புள்ளிகளைக் கொண்ட அழகிய நெற்றியிடத்தே அழகுறப் படிந்த தேன்பாய்கின்ற ஓதியைப் பெற்றிருப்பவள்; நாட்பட்ட நீரினைப்பொருந்திய பொய்கையிலே பூத்திருக்கும் குவளை மலர்களை எதிர் எதிராக வைத்துத தொடுத்தாற்போன்ற, செவ்வரிபரந்த மதர்த்த கண்களை உடையவள்; இவள்! இவள் கண்களைக் காண்பதன் முன்பாக நயனும், நண்பும், நாணம் நன்றாக உடைமையும், பயனும், பண்பும், பாடறிந்து ஒழுகுதலும் ஆகிய எல்லாமே நும்மினுங் காட்டில் அறிந்தொழுக வல்லவனாக யானும் இருந்தேன்! இவளைக் கண்டதன் பின்னர், அனைத்துமே இழந்தேன்; இனி இரங்கிப் பயன்யாது கொல்லோ?

கருத்து : 'இனி அவளை அடைதல் ஒன்றே நின்னாற் செயத்தகுவதான ஒரு காரியம்' என்பதாம்.

சொற்பொருள் : நயன் – நற்பண்பு: அனைவருடனும் கலந்து பழகும் நயப்பாடு நண்பு – அடைந்தாரது நட்பைப் போற்றலும், பகைத்தாரை வசப்படுத்தி நட்பாக்கலும், நாணம் – தகுதியிற் குறைந்தன செய்தற்கு முற்படாவாறு தடுக்கும் குணம். பயன் – ஈத்து உவத்தல். பண்பு – நன்மை தீமையறிந்து ஒழுகுதல். பாடறிந்து ஒழுகுதல் – உலக வழக்கத்தை அறிந்து ஒழுகுதல். தித்தி – அடிவயிற்றுப் பகுதியில் தோன்றும் அழகுத் தேமல். சுணங்கு – முலைகளிடைத் தோன்றும் பொன்னிறப் புள்ளிகள். ஏர் – அழகு; எழுச்சி. வனமுலை – வனப்புக்கொண்ட முலைகள். விதிர்த்தல் – தெளித்தல். ஓதி – கூந்தல்; கூந்தல்ஓதி - இருபெயர் ஒட்டு. முதுநீர் – முதிர்ந்த நீர். இலஞ்சி – பொய்கை, அரி – செவ்வரி, சிவப்பான இரேகைகள்.

விளக்கம் : இவள் மழைக்கண் காணா ஊங்கே நயனும்..... உடையேன்' என்றலின், கண்டதன்பின் உடையேனல்லன் என்றதுமாம், இவனையன்றிப் பிறர்பாற் பழகுதற்கு மனம் பொருந்தாமையின் நயன் அற்றான்; இவளது நட்பையன்றிப் பிறர் நட்பினை நாடாமையின் நண்பு அற்றான்; பெண்பால் இரத்தற்கும் துணிந்து தாழ்ந்தமையின் நாணம் இழந்தான்; பிறருக்காகவன்றி இவளுக்காகத் தன் உயிரையும் கொடுத்தற்குத் துணிந்தமையால் பயன் இவளென்றே கருதிப் பிற பயன்களை ஒதுக்கினான்; களவு உறவின் பழியுடைமை அறிந்தும் மேற்கொண்டானாதலின் பண்பு மறந்தான்; உலக வழக்கம் மணந்து வாழ்தலே என்றறிந்தும் அதனை மேற்கொள்ளாது களவிலே துய்க்கத் துணிதலின் பாடறிந்து ஒழுகுதலையும் கைவிட்டான்" என்று கொள்க.

மேற்கோள் : 'நிற்பவை நினைஇ நெகிழ்பவை உரைப்பினும்' என்னும் துறைக்குக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். களவியல். சூ.11. உரை மேற்கோள்). உலகத்து நிலைபேறாகக் கருதப்படுவனவாய் நற்குணங்களையும் காதலியைக் கண்ட போதிலேயே இழந்துவிடும் தலைவனது மனப்போக்கை இச் செய்யுள் காட்டுவதாகும்.

161. புள் அறிவித்தவோ?

பாடியவர் :...
திணை : முல்லை
துறை : வினைமுற்றிப் பெயரும் தலைவன், தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.

[(து–வி) வேந்துவினைமேற் சென்றானாகிய தலைவன் அவ்வினையை முடித்தபின்னர் வீடு நோக்கி மீண்டும் வருங்காலத்தே. தேரினை விரையச் செலுத்துமாறு தோப்பாகனுக்கு உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

இறையும் அருந்தொழில் முடித்தெனப் பொறைய
கண்போல் நீலம் சுனைதொறும் மலர
வீத்தர் வேங்கைய வியல்நெடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டுகிளை இரிய
நெடுந்தெரு அன்ன நேர்கொள் நெடுவழி 5

இளையர் ஏகுவனர் பரிப்பு வளையெனக்
காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்பத்
தோள்வலி யாப்ப ஈண்டுநம் வரவினைப்
புள்அறி வுறீஇயின கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள், ஏதில் 10
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேமொழி யாட்கே?

நம்முடைய இறையும் அருந்தொழிலாகிய போர் வினையை முடித்தனன். மலையிடத்துச் சுனைதொறும் மாதரது கண்களைப்போலத் தோற்றும் நிலப்பூக்கள் மலந்துள்ளன. அகன்ற நெடிய காட்டிடத்தே மலருதிர்ந்து பரவுகின்ற வேங்கைமரங்கள் விளங்குகின்றன. இம்மென ஒலிமிழற்றும் வண்டுகளினது நெருங்கிய கூட்டமெல்லாம் அஞ்சி ஓடுகின்றன. 'நெடுந்தெரு' என்னும் தெருவைப் போன்ற நேரிதான தன்மை கொண்ட நெடிய வழியிடையே செல்லும் ஏவல் இளையர் பலரும் தங்கிக் களைப்பாறிய பின்னர்த் தம் செலவினை மேற்கொள்வாராக! வெண் காந்தளின் வளவிய இதழ்களைக் குதிரைகளின் கவிந்த குளம்புகள் மிதித்துச் சங்குகள்போலத் தோற்றுமாறு அறுக்குமாக! தோள்களிலே வலிமை பிணித்துக் கொள்ளுமாறு நெருங்கிவருகின்ற நம் வரவினைப் புள்ளினம் நிமித்தங்காட்டி அறிவுறுத்தினவோ? தெளிவாக நம்பாற் காதல் பொருந்திய நலத்தை உடையவளாக, யாதுமல்லாத ஒன்றினைப் புதல்வனுக்குக் காட்டியபடி பொய் கூறி, அவனைத் தேற்றியபடியே இருப்பாள் அவள்! திதலை படர்ந்த அல்குல் தடத்தையும். இனிய சொற்களையும் உடையாளான அவளுக்கு நம் வருகையை முன்னர்ச் சென்று அறிவித்தனதாம் யாவையோ?

கருத்து : 'நம் வரவை எதிர்பார்த்து ஏங்கியிருக்கும் தலைவியிடத்தே விரையச் சென்று சேருமாறு, தேரினை இன்னும் கடிதாகச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : இறை – அரசன் அருந்தொழில் – போர்த் தொழில், பொறை – பொற்றை; மலை. நீலம் – நீலப்பூ; குவளையும் ஆம். வீ - பூ. புறவு – காடு. இளையர் ஏவலிளையர்; போர் மறவரான இளையரும் ஆம். நெடுத்தெரு – நெடிதான தெரு; நெடுஞ்சாலை போல நேரிதாகச் செல்லும் தெரு; ஓர் ஊரும் ஆம்; அவ்வூர் சோணாட்டது என்பர். பரிப்ப – தங்கிச் செல்ல.

விளக்கம் : பிரிவுத் துயரத்தால் மனம் வருந்தினும், அவள் ஆற்றியிருக்கும் திறனுடையாளாய் விளங்குவாள் என்பதனைக் 'காதல் கெழுமிய நலத்தள், ஏதின் புதல்வற் காட்டிப் பொய்க்கும், திதலை அல்குல் தேமொழியாள்' என்றனன். 'பொய்க்கும்' என்றது, 'தந்தை வருவார்; அதோ காக்கை கரைவது காண்' என்றாற்போலச் சொல்லுதல். தன் ஆர்வத்தைப் புதல்வன்பால் ஏற்றிக் காட்டிப் பொய்த்ததும் ஆம். முற்படச் சென்று அறிவிக்குமாறு விடுத்த இளையர் நடுவழியில் களைப்பாறியபடி தங்கியிருக்கத், தான் அவர்கட்கு முன்பாகவே வந்தடைந்த தலைவன், தேரினை அத்துணை விரைவாகச் செலுத்திய பாகனை இப்படிக் கூறிப் பாராட்டுகின்றனன் காந்தட் பூக்கள் உடைந்த சங்குகளைப் போலத் தோற்றுவனவாம்; இதனை 'உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்' எனவரும் (புறம்.90) ஔவையார் பாட்டானும் அறியலாம்.

162. வல்லை அல்லை!

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : உடன் போதுவலென்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.

[(து–வி.) தலைவனுடன் தானும் உடன் வருவதாகத் தலைவி கூறுகின்றாள். அவளுக்கு வழியின் கடுமையைக் கூறியவனாகத் தலைவன் சமாதானம் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

'மனையுறை புறவின் செங்காற் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேரப்
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன்' என்றுநின்
பனிவார் உண்கண் பைதல கலுழ 5
'நும்மொடு வருவல்' என்றி; எம்மோடு
பெரும்பெயர்த் தந்தை நீடுபுகழ் நெடுநகர்
யாயொடு நனிமிக மடவை! முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடுவீழ்
வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் 10
துஞ்சுபிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே?

பெரும் புகழையுடைய தந்தையது நெடிய புகழினைக் கொண்டதாக விளங்கும் நெடிய மாளிகையிடத்தே, நின்னைப் பெற்ற தாயினோடுஞ் செல்வமாக வாழ்கலின், மிக்க மடமையினை உடையாளாகத் திகழ்பவளே! 'மனைக் கண்ணே தங்கியிருக்கும் புறவினது சிவந்த கால்களையுடைய பேடையானது, தான் விரும்பும் அழகிய தன் துணையான சேவலொடும் சேர்ந்திருப்பக் கண்டு, வருத்தமிகுமாறு எழுகின்ற புல்லிதாம் நன்மையுடைய மாலைக் காலத்திலே, தமியளாய் இருத்தலை யான் ஆற்றேன்' என்று, யான் புறப்படுவதற்கு முன்பாகவே சொல்லுகின்றனை. நின் நீர்சோரும் மையுண்ட கண்கள் துன்புற்றவாய்க் கலங்காநிற்ப, நும்மோடு யானும் வருவேன் எனவும் கூறுகின்றனை. வேனிற்காலத்தே, இற்றியினது, நிலத்தில் தோயாவாய்த் தொங்குகின்ற நெடிய விழுதுகள் கோடைக் காற்று அசைத்து ஆட்டுப் போதெல்லாம் நாரிடத்தே கட்டியிடப்பெற்ற ஊசலைப்போல் ஆடியவாய்த் தரையிலே தூங்கியபடி இருக்கும் பிடியானையை வருடியபடி இருக்கும் பாலை வழியிலே என்னுடன் வருவதற்கு, நீதான் வல்லமையுடையை யாதல் பொருந்துவ தாகுமோ?

கருத்து : 'நீதான் பாலையைக் கடந்து என்னோடுந் கூடி வருதற்கு 'ஆற்றாய்' என்பதாம்.

சொற்பொருள் : காமர் துணை – விருப்புறும் அழகினைக் கொண்ட துணை, புலம்பின்று – வருத்தங்கொண்டு. பனி நீர்த் துளிகள். பைதல் கலுழ – வருத்தமுற்றுக் கலங்க. மடவை – மடப்பத்தை உடையாய்; இளமை உடையாய் கோடை – மேல்காற்று. தூக்கல் – எடுத்து அசைத்தல்.

விளக்கம் : மாலையிற் புறவின் பேடை தன் சேவலுடன் கூடியிருத்தலைக் கண்டதும், தன்னுடன் தலைவன் இல்லாத துயராலே தலைவி நலிவுற்று வருந்தினாள் முன்னாள் மாலையில் நிகழ்ந்த இதனைக் கூறிப் பிற்றைநாளின் பகற்போதிலே வந்து கூடிய தலைவனைத் தன்னையும் உடன் அழைத்துப் போகுமாறு தலைவி வேண்டுகின்றனள். 'பெரும் பெயர்த் தந்தையது நீடுபுகழ் நெடுநகரிடத்தே யாயொடு வாழ்வை' யாதலின் நீதான் கோடையிற் பாலைவழியைக் கடத்தற்கு வல்லையல்லை என்பதாம். வீட்டைவிட்டு அகன்றறியாத நின்னாற் பாலை வழியின் கொடுமையை

அறிய வியலாது. பொறுக்கவும் இயலாது என்பதும் ஆம்.

இறைச்சி : 'கோடை தூக்குதொறும் இற்றியின் விழுது மரத்தடியிலே தூங்கும் பிடியினை வருடிவிடுதலைப் போன்று பிரிவுத் துயராலே தவைவி நலியுந்தொறும் அதனைத் தோழி ஆற்றுவித்துத் துயரைத் தெளிவிப்பாள்' என்பதாம்.

163. களைப்பாறுக!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : வரைவு மலிந்து சொல்லியது.

[(து–வி.) தலைவன் வரைவொடு வந்தனன். அதனைக் கண்ட மகிழ்ச்சியினாலே, தோழி தலைவிபாற் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

உயிர்த்தன வாகுக அளிய நாளும்
அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது கல்லெனக்
கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப
நிலவுத்தவழ் மணற்கோடு ஏறிச் செலவர
இன்றென் நெஞ்சம் போலத் தொன்றுநனி 5
வருந்துமன் அளிய தாமே பெருங்கடல்
நீல்நிறப் புன்னைத் தமியொண் கைதை
வானம் மூழ்கிய வயங்குஒளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்துஅகம் கனலி ஞாயிற்று 10
வைகுறு வனப்பின் தோன்றும்
கைதைஅம் கானல் துறைவன் மாவே!

பெருங்கடலின் அருகேயுள்ள ஒரு கருநிறப் புன்னை; அம் மரத்தினது பக்கத்திலே தனித்திருக்கும் தாழையின் ஒள்ளிய மடல்; அம் மடலானது, ஒளிவிளங்கும் நெடிய சுடர்களைக் கொண்ட கதிர்களைக் காய்ந்தபடியே வானத்தே மூழ்கிக்கிடந்த இருளினது செறிவைக்கண்டு, உள்ளே கொதித்து விடியற்காலை வேளையிலே அதனைப் போக்குவதற்கு எழுகின்ற வைகறைப் போதின் வனப்பினோடும் கலந்து தோன்றும். அத்தகைய தாழைகளையுடைய கானற்சோலைக்கு உரிய துறைவன் நம் தலைவன் அவனுடைய தேர்க்குதிரைகள் தாம்—

நுண் மணலாகிய துகளை முகந்து எழுந்த அமையாத வாடைக்காற்றோடு, இரவும் பகலும் என்று கருதாமல், கல்லென்று ஒலிக்கும் இசையமைதியை உடைய மணி இனங்களை ஒருசேரக் கோத்து அணியப்பெற்ற மணிமாலையானது ஒலிசெய்ய, நிலவின் ஒளிதவழ்ந்தபடியே யிருக்கின்ற மணல் மேட்டினிடந்தே ஏறிச் செல்லுதலானே, இன்று களிப்புறும் என் நெஞ்சத்தைப்போல, முன்பாக மிகவும் வருத்தமுறும் போலும்! ஆதலின் இரங்கத்தளவாய அவைதாம் இப்போது களைப்பாறுவன வாகுக!

கருத்து : தலைவன் வரைவொடு வந்தனனாதலின், என் மனந்தானும் களிப்புற்றது' என்பதாம்; நீயும் நின் அழிதுயர் நீங்கினையாய்க் களிப்புறுக' என்பதுமாம்.

சொற்பொருள் : உயிர்த்தன ஆகுக – களைப்பாறுவன ஆகுக. அயிர்த்துகள் – நுண் மணலாகிய துகள். ஊதை – வாடைக் காற்று. மணற்கோடு – மணற்குன்றம். கைதை – தாழை. வைகுறு – விடியல்.

விளக்கம் : 'வாடைக் காற்றோடு சேர்ந்து மணியும் ஒலிப்ப' என்றது, வாடையால் நலியும் உள்ளத்திற்கு மணியொலியானது ஆறுதலைத் தரும் என்பதாம். இரவுநேரத்திலே ஒலிசெய்தபடி வரும் தேர்க் குதிரைகளின் ஆரவாரத்தால், தலைவன் வரைவொடு வந்தமையைத் தோழி அறிந்தாள் என்க. களவினை வேட்டு வருவதாயின், மணியொலியால் எழும் ஊரலர்க்கு அஞ்சினனாய, அதனை ஏழாதபடி அவித்திருப்பன் என்று கொள்க. இருட்செறிவை நீக்கக் கருதிக் கனன்று எழுகின்ற ஞாயிறுபோலத் தம்மைச் சூழ்ந்திருந்த பெரும்படராகிய இருளை அகற்றும் கதிரவனாகத் தலைவனும் விடியற்காலை வேளையில் வந்தனன் என்று கொள்க.

இறைச்சி : 'புன்னையும் தாழையும் ஒன்றியிருக்கும் துறைவன்' என்றது, அவ்வாறே அவன் தலைவியையும் மணந்து கூடி மணம் பெறுவான்' என்பதாம்.

164. தெளிதல் செல்லாய்!

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : பொருள் முடித்து வந்தானென்பது வாயில்கள் வாய்க்கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.

[(து–வி.) தலைவன் பொருளைத் தேடிக்கொண்டு மீண்டனன் என்பதனை ஏவலாட்டியர் வழியாகக் கேள்வியுற்ற தோழி, தலைவியிடம் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள்.]

'உறைதுறந் திருந்த புறவில் தனாது
செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் மண்பக
உலகுமிக வருந்தி உயாவுறு காலைச்
சென்றனர் ஆயினும் நன்றுசெய் தனர்'எனச்
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் 5
செங்கோல் வாளிக் கொடுவில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த்திறம் பெயர்த்தென
வெங்கடற்று அடைமுதல் படுமுடை தழீஇ
உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது
மாறுபுறக் கொடுக்கும் அத்தம்
ஊறுஇல ராகுதல் உள்ளா மாறே. 10


தோழி! மழையினையே பெறாதிருந்த காட்டுப் பகுதியில், அந் நிலத்தினது தெய்வமாகிய சிவந்த கதிர்களையுடைய கதிரவன் காய்தலைச் செய்தனன். அதனால், நிலமும் வெடிப்புடையதாய் மாறிற்று. உலகமும் மிகவும் வருந்தித் துன்புறுவதாயிற்று. இத்தகைய கோடைக் காலத்தே பயணப்பட்டுத் தலைவரும் சென்றனர். ஆயினும் 'இல்வாழ்க்கைக்கு நன்மை யாவதொரு செயலையே செய்தனர்' எனச் சொன்னேன். என் சொற்களால் நின்னையான் தெளிக்கவும், நீயும் தெளிந்தாயல்லை.

செம்மையான கோலின் வடிவைக் கொண்டவாகிய அம்புகளைக் கொண்டவர், கொடிய வில்லினாலே தொழிலாற்றும் ஆறலை கள்வர்கள். அவர்கள், புதியவராக வரும் வழிப்போக்கரது உயிரைப் போக்கிப் பொருள்களைப் பறித்துப் போவர். அங்ஙனம் உயிரிழந்தவாய்க் கிடந்த உடலங்கள் வெம்மையுடைய பாலைவழியின் முற்பக்கத்தேயே முடை நாற்றத்தைப் பரப்பியபடியிருக்கும். அந்த நாற்றத்தைக் கொண்டு, பசியுற்ற குள்ளநரியானது, தானும் அவ்வழியே சென்று, அப் பிணங்களை உண்ணக் கருதாதாய்த் திரும்பி வேறுவழியாகச் செல்லும் அத்தகைய பாலைவழியைக் கடந்து செல்லுங்கால், அவர் தாம் தமக்கொரு இடையூறும் இல்லாதவராகச் சென்று வருவாராக என்று நீதான் கருதினாயல்லை. இதனாலே தான் என் சொற்களைக் கேட்டுத் தெளிந்தாயல்லை போலும்!

கருத்து : 'நின் மனத்துயரைத் தாமும் உணர்ந்தவராக அவரும். விரையச் செயலை முடித்துப் பொருளுடன் மீண்டனர்; காண்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : செங்கதிர் – செம்மையான கதிர்; வெம்மையாற் செம்மையுற்ற கதிர்கள். செங்கோல் வாளி – செவ்விய கோலான அம்பு; எய்யப்பெற்ற குறியிடத்தே குறி தவறாதாய்ச் சென்று தைக்கும் வாளியும் ஆம். கொடுவில் – கொடுந்தொழிலைச் செய்யும் வில்; வளைந்த வில்லும் ஆம். உயிர்த்திறம் – உயிராகிய தன்மை; உயிர்.

விளக்கம் : 'ஊறிலர் ஆகுதல் உள்ளாமாறே' என்றது, பிரிவினை நினைத்து வருந்திய வருத்த மிகுதியினாலே, தன் காதலனின் நன்மையை நினைக்கும் தன்மையினையும் இழந்தனள் என்பதாம். 'நன்று செய்தனர்' என்றது. அவன் ஈட்டிக் கொணர்ந்த பொருளின் மிகுதியை நோக்கிச் சொல்லியதாகும். பிணங்களினின்றும் வீசிய படுமுடை பசியோடிருந்த நரியையும் பிணத்தை உண்பதற்குச் செல்லாவாறு செய்தது என்க. அன்றி, அதுவும் கொலை மறவர்க்கு அஞ்சியதாய் அகன்றது என்பதும் கொள்ளப்படும்; இதனாற் காட்டது கொடுமை மேலும் சுட்டப்பட்டது. நரிகள் பிணந்தின்னும் இயல்பினவாதலைப் 'பிணந்தின் குறுநரி' (புறம்.359) என வருவதனாலும் அறியலாம்.

இறைச்சி : முடைநாற்றத்தால் அறிந்து உயிரிழந்த பிணத்தை தின்னவந்த நரியும் அதனையுண்ண மாட்டாதாய் அகன்றது என்பது, அவ்வாறே தலைவனைப் பிரிந்து தளர்ந்த தலைவியைப்பற்றி உண்ண வந்த பசப்பும், தலைவனை வரக்கண்டதும் அஞ்சிப் பற்றமாட்டதாய் அகன்றது என்பதாம்.

165. தூது பல்கின!

பாடியவர் : .........
திணை : குறிஞ்சி.
துறை : நொது மலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலைபயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.

[(து–வி.) (1) தலைவன் வரைவு நீட்டித்தலான் வேற்று வரைவு வந்துறும் நிலைமை எழுகின்றது. அதுகாலைத் தோழி, தலைவிக்குத் 'தாயிடம் தன் காதலை உரைத்து அறத்தொடு நிற்குமாறு சொல்க' என அறிவுறுத்துவதாக அமைந்தது இது. (2) தலைவன் வரைவொடு வந்தமை தலைவிக்குக் கூறி, அதனை அவள் இல்லத்தார் ஏற்குமாற்றால் அறத்தொடு நிற்குமாறு தோழி வற்புறுத்துவதாக அமைந்ததும் ஆம்.]

அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்குநினைந்து கானவன்
'அணங்கொடு நின்றது மாலைவான் கொள்க' எனக்
கடவுள் ஓங்குவரை பேண்மார் வேட்டுஎழுந்து
கிளையொடு மகிழும் குன்ற நாடன் 5
அடைதரும் தோறும் அருமைதனக்கு உரைப்ப
'நப்புணர்வு இல்லா நயன்இலோர் நட்பு
அன்ன ஆகுக' என்னான்
ஒல்காது ஒழிமிகப் பல்கின தூதே.

தோழி! அமர்த்த கண்களை உடைய ஆமானினது அரிய நெஞ்சிடத்தே பாய்ந்தும் அதனை வீழ்த்தாதாய்க் குறிபிழைத்துத், தான் விடுத்த அம்பானது ஒதுங்கிப் போயினதைக் கானவன் நினைந்தான். 'இம் மலைப்பக்கம் தெய்வத்தால் கவியப்பெற்று நின்றது போலும்' எனத் கருதினான் 'மலைப்பக்கம் மழைப்பொழிவைக் கொள்வதாக' எனக் கடவுளை வேண்டுவதற்கும் முற்பட்டான். தன் சுற்றத்தோடும் கடவுளை வேட்டற்கு விருப்புற்றும் புறப்பட்டான். உயர்ந்த மலைப்பக்கத்தே கோயில் கொண்டிருக்கும் கடவுளாகிய முருகவேளுக்குப் படையலிட்டும் போற்றினான். அதன் பின்னர்த் தன் அம்பு இனிப் பிழையாதெனவும் மகிழ்ந்தான். அந் நன்மை கொண்ட மலைநாட்டிற்கு உரியவன் நம் தலைவன். அவன்தான் நின்னை நாடிவந்து அடையுந்தோறும், நின்னுடைய அருமைப் பாட்டினை அவனுக்கு எடுத்து உரைத்து அவனைப் போக்கினேன். 'நம்மோடு கூடுதல் இல்லாதாரான தன்மைப் பாட்டினை இல்லாதாரது நட்பும் அவ்வாறே கழிந்து போவதாக' என்று, அவன் நின்னை ஒதுக்கினான் அல்லன். நின்பால் பேரன்பினன் ஆதலின் நின்னை விரைய வரைந்து வருபவனாவான். அதற்குள் வேற்று வரைவு குறித்த தூதும் நில்லாது மிகப் பலவாயின காண். அதனால், இனி நீயும் அன்னைக்கு அறத்தொடு நிற்பாயாக; நம்பால் வரும் இத் தூதையும் காலந்தாழ்த்தாது ஒழியச் செயவாயாக!

கருத்து : 'வேற்று வரைவு மிகுதலால், நின் காதலை அன்னைக்கு இப்போதே சென்று உரைப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : அமர்க்கண் – அமர்த்தலையுடைய கண். ஆமான் – காட்டுப் பசு. முள்காது – புகுந்து தங்காது. கடவுள் – குன்றக் கடவுளாகிய குமரவேள். பேண்மார் – பேணும் பொருட்டாக; பேணுதல், வெறியயர்தல்.

விளக்கம் : 'குறிபிழைத்த கானவன், மழை பெய்தால் தெய்வவீறு தணியுமெனக் கொண்டு கடவுளைப் பேணித் தன் குறி வாய்க்கப் பெற்றானாய் மகிழும் நாடன் என்பது, குன்றவரது முருகபக்தியின் செறிவைக் காட்டுவதாகும். அவ்வாறே தான் வரைதற்குக் காலந் தாழ்த்தமையினாலே தனக்கு உரியாளான தலைவியை வேற்றார் வரைதற்கு முற்படுதலை அறியும் தலைவன், தன்னை அவளொடுங் கூட்டிய தெய்வத்தினை நினைந்து வழிபட்டு, அதனருளால் அவளை அடையப் பெறுவான் என்பதாம். 'நப் புணர்வு இல்லா நயனிலோர் நட்பு அன்ன ஆகுக என்னான்' என்றது, அவன் தான் உடலுறவாகிய காமத்தால் நின்னை விரும்பினான் அல்லன்; நின்பாற் கொண்ட உழுவலன்பினன் ஆவன் என்றதாம். அதனால், அவனைக் குறித்து அறத்தொடு நிற்றலும், அவனைத் தருமாறு தெய்வத்தை வேண்டலும் மேற்கொள்ளத் தக்கவென்பதும் ஆம்.

இறைச்சி : 'குறிபிழைத்தலால் தெய்வக் குறை உண்டென உணர்ந்து கடவுட் பேணுவர் கானவர்' என்றது. 'அவ்வாறே நாமும் தலைவனைக் கூட்டி வைக்குமாறு முருகயர்ந்து வேண்டுவோம்' என்றதாம்.

ஒப்பு : ஆமான் அமர்க்கண் உடைத்தென்பதனை 'அமர்க்கண் ஆமான்' எனவரும் (குறு.322) ஐயூர் முடவனாரது வாக்காலும் அறியலாம் 'அமர்க்கண் ஆமான் நெடுநிரை' எனப் புறநானூற்றுள்ளும் வரும் (புறம்.417:4.5.).

166. கடலினும் பெரிது!

பாடியவர் : ......
திணை : பாலை
துறை : செலவுக்குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

[(து–வி.) தலைவன் வினைமேற்கொண்டானாய்த் தன்னைப் பிரிந்து செல்லற்கு நினைத்தானாதலைக் குறிப்பால் உணர்ந்து, அதனால் உடல் வேறுபட்டாள் தலைவி. அவளுக்குத் தலைவன் கூறுவதாக அமைத்த செய்யுள் இது.]

பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழநின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவைகாண் தோறும் அகம்மலிந்து யானும் 5
அறம்நிலை பெற்றோர் அனையேன் அதன்தலை
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத்து இலெனே; நினையின்
யாதனின் பிரிகோ? மடந்தை!
காதல் தானும் கடலினும் பெரிதே! 10

மடந்தையே! நின் நல்லழகு கொண்ட மேனியானது பொன்னைப்போன்று ஒளிவீசுவதாய் இருக்கின்றது. நின் மணங்கமழும் கரிய கூந்தலும் நீலமேனியைப் போல ஒளியுடைத்தாயிருப்பது. அழகிய மையுண்ட நின் கண்கள் குவளைப் போதினைப்போல விளங்குகின்றன; வனப்பு உடையவான நின் தோள்களோ மூங்கிற் போத்தினைப்போலத் தோன்றுவன. இவற்றைக் காணுந்தோறும் யானும் உள்ளம் மகிழ்ந்தேன். அறத்தினிடத்தே நிலைபெற்றார் கொள்ளும் மனக்களிப்பினையும் உடையனாயிருதேன், அதன் மேலும் பொற்றொடி அணிந்தோனாகிய நின் புதல்வனும் பொய்தல் விளையாட்டினை ஆடுதற்குக் கற்றனன் ஆயினன். யான் செய்தற்குரியவொரு செயலும் வேற்று நாட்டிடத்தாக யாதொன்றும் இல்லை. நினையின், எதுகுறித்து யானும் பிரியப் போகின்றேன்? நின்பால் தான் கொண்ட காதலும் கடலைக் காட்டினும் பெரிதாகுமே! ஆதலின், நீதான் என்னைத் தவறாக நினைத்து உடல் வேறுபடுதலைக் கைவிடுவாயாக!

கருத்து : 'யான் பிரிந்து போதற்கு நினைத்திலேன்: ஆதலின், நின் மனத்தளர்வை கைவிடுக' என்பதாம்.

சொற்பொருள் : 'யாய்' என்பது முன்னிலை அசை. மாதர் – அழகிய. அகம் மலிந்து – உள்ளம் மகிழ்ந்து. அதன்தலை – அதற்கும் மேலாக. நினையின் – ஆராயின், பொய்தல் – ஒருவகை மகளிர் விளையாட்டு; இதனைக் 'கண்ணாமூச்சி' என்று இக்காலத்தே வழங்குகின்றனர்.

விளக்கம் : உடல் வேறுபட்டாளை இவ்வாறு பாராட்டிக் கூறித் தெளிவிக்கின்றான் தலைவன். பொருள் ஆசையாற் பிரிவானென ஐயுற்றதன் பொருந்தாமையினைக் கூறுவான், 'பொன்னும் மணியும் மேனியும் கதுப்புமாக நின்னிடத்தேயே அமைந்து கிடக்கின்றனவே' என்கின்றான். அறம் நிலை பெற்றோர் அனையேன் என்றது, அறத்திற்கான பொருள் முட்டுப்பாடு தனக்கு இல்லாமையினைக் கூறியதாம்.

மேற்கோள் : பிரிவின் எச்சத்துப் புலம்பிய மனையாளைப் பிரிவுநீக்கிய பகுதிக்கண் தலைவன் சொல்வதற்கு இச்செய்யுளை இளம்பூரண அடிகள் மேற்கோளாகக் கொண்டனர் (தொல்; பொருள் 144ஆம் சூத்திரம்). 'அஃதாவது பிரியேன் என்றல்' எனவும் அவர் உரைப்பர்.

பிறபாடங்கள் : போதும் மணையும் போலும்: யாதெனிற் பிரிவாம் மடந்தை.

167. பசப்பினைக் களையா!

பாடியவர் :
திணை : நெய்தல்.
துறை : தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.

[(து–வி) (1) பரத்தையிற் பிரிந்த தலைவனின் பொருட்டாகத் தலைவிபால் தூதுவந்த பாணனிடம், தலைவியின் நிலையைத் தோழி கூறிப் போக்குவது இது. (2) வினைவயின் சென்ற தலைவனின் வருகையை அறிவித்து முற்பட வந்த பாணனுக்குத் தோழி சொல்வதாக அமைந்ததூஉம் ஆம்.]

கருங்கோட்டுப் புன்னைக் குடக்குவாங்கு பெருஞ்சினை
விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின் ஆஅய்
வண்மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந்தேர்ப் பாணியின் ஓலிக்கும்
தண்ணந் துறைவன் தூதொடும் வந்த 5

பயன்தெரி பனுவற் பைதீர் பாண!
நின்வாய்ப் பணிமொழி களையா பல்மாண்
புதுவீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம்கமழ் கானல் நாண்நலம் இழந்த
இறைஏர் எல்வளைக் குறுமகள்
பிறைஏர் திருநுதல் பாஅய பசப்பே. 10

புன்னையது மேற்குப்பக்கமாக வளைந்து சாய்ந்திருக்கும் கரிய தண்டினைக் கொண்ட பெருங்கிளையிடத்தே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரையானது ஒலி செய்யுமானால், அவ்வொலியானது ஆஅய் அண்டிரது வள்ளன்மையாலே மகிழ்ச்சிகொண்ட நாளோலக்கத்திலே பரிசில் பெற்ற இரவலர்களது பண்ணுதலமைந்த நெடிய தேரினது ஒலியைப் போல ஒலித்தபடியிருக்கும், தண்ணிய கடற்றுறைக்கு உரியோன் தலைவன். அவனுக்காகத் தூதுரைக்கும் ஏவலோடு வந்துள்ளவனே! பயன் தெரிதலுறும் பனுவல்களை வருத்தமின்றிக் கூறிக் காட்டவல்ல பாணனே! நின் வாயிடத்தாக வழங்கும் பணிவான சொற்களைச் கைவிடுவாயாக. பலவான மாண்புகளைக் கொண்ட ஞாழலின் புதுப்பூக்களோடு புன்னையின் புதுப்பூக்களும் உதிர்ந்து கலந்துகிடந்து மணங் கமழுகின்ற கானற்சோலையிடத்தே, நின் தலைவனோடு கொண்ட நட்பினாலே தன் மாண்பு கொண்ட அழகினையெல்லாம இழந்தவள் தலைவியாவாள். சந்திடத்து அழகுற விளங்கும் ஒள்ளியவளைகளைக் கொண்ட இளையோளாகிய இவளது, பிறைபோலும் அழகிய நெற்றியிடத்தே, பரவிய பசலை நோயானது படர்ந்துள்ளது; அதனை நின்சொற் களையா காண்!

கருத்து : 'நின் சொற்களால் இவளது பசலை தீராது; ஆதலின் நீதான் சென்று வருக!' என்பதாம்.

சொற்பொருள் : குடக்கு – மேற்கு. வாங்கல் – வளைதல். விருந்தின் வெண் குருகு – புதுவதாய் வந்தமர்ந்த வெளிய நாரை. நாளவை – நாளோலக்கம். 'பனுவல்' என்றது, இசை நுட்பங்களை வரையறுத்தும் கூறும் நூல்களை; அவற்றை ஐயமறக் கற்றுத் தெளித்தவன் பாணன் எண்பதாம். பணி மொழி – பணிவான சொற்கள்; பண்ணின் இனிக்கும் சொற்களுமாம். இறை – சந்து. ஏர் – பேரழகு.

விளக்கம் : 'குடக்கு வாங்கு பெருஞ்சினை' என்றலால், இச்செய்யுளைச் செய்தவர் ஆய்நாட்டின் கிழக்குத் திசையிலே உள்ளவரென்பதும், ஆயிடம் சென்று பரிசில் பெற்றவருள் ஒருவரென்பதும் விளங்கும். 'நாளவைப் பரிசில் பெற்ற' என்பது. அரசர்கள் பரிசில் வழங்குதல் தம் நாளவைக்கண் இருந்தே என்பதனையும் காட்டும். 'பயன்' ஏழிசையின் சுறுபாடுகள்; 'பயன்தெரி பனுவல்' என்றது, யாழிசை நுணுக்கங்களைக்குறித்த நூற்களாம். 'கானலிடத்து மாண்நலம் இழந்த' தன்மை கூறியது, முதற்களவுக் கூட்டத்தின் நிகழ்விடத்தைச் சுட்டியதாம்.

இறைச்சிகள் : (1) ‘நாரை நரலுதல் தேர்ப்பாணியின் ஒலிக்குமென்பது, பாணனின் பணிமொழி தானும் தலைவனின் அருண்மைத் தோன்றக் கேட்பதாகும்' என்பதாகும்.

(2) ஞாழற்பூவும் புன்னைப்பூவும் விரவிய மணத்தையுடைய கானல் என்றது, அவ்வாறே தலைவியையும் பரத்தையையும் ஒப்பக் கருதும் மனநிலையினன் தலைவனாயினான என்றதாம்.

இவற்றால் தலைவியது ஆற்றாமை மிகுதியை உரைத்துத் தலைவனை அவளும் ஏற்பாள் என்ற கற்புச் செவ்வியையும் புலப்படுத்தினளாம்.

168. பண்பெனப் படுமோ!

பாடியவர் :
திணை : குறிஞ்சி.
துறை : தோழி இரவுக் குறி மறுத்தது.

[(து–வி.) இரவுவேளையிலே தலைவன் வருதலால், வழியிடையே உண்டாகும் ஏதப்பாடுகளை நினைந்து, அதனை விளக்கித் தலைவியை அவன் மணம் புரிந்துகொள்ளுதலை மேற்கொள்ளுமாறு செய்தற்கு நினைக்கின்றான் தோழி. அதனால், தலைவனிடம் இவ்வாறு உரைக்கின்றனள்.]

சுரும்புண விரித்த கருங்கால் வேங்கைப்
பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல்
புள்ளுற்றுக் கசிந்த தீம்தேன் கல்லலைக்
குறக்குறு மாக்கள் உண்ட மிச்சிலைப்
புன்தலை மந்தி வன்பறழ் நக்கும் 5

நன்மலை நாடர் பண்புஎனப் படுமோ
நின்நயந்து உறைவி இன்னுயிர் உள்ளாய்
அணங்குடை அரவின் ஆர்இருள் நடுநாள்
மைபடு சிறுநெறி எஃகுதுணை ஆக
ஆரம் கமழும் மார்பினை;
சாரற் சிறுகுடி ஈங்குநீ வரலே? 10

கரிய அடியையுடைய வேங்கையின் பெரிய கிளையிலே வண்டுகள் உண்ணும்படியாக மலர்கள் இதழவிழ்ந்தவாய் நிரம்பியிருந்தன. அவ்விடத்தே கொழுலிய கண்களையுடைய தேனிறாலைத் தேனீக்கள் தொடுத்திருந்தன. அத் தேனிறால்கள் வண்டுகள் மொய்த்தலாலே கசியத் தொடங்கின. கசிந்து கல்லின்குழிகளிலே வழிந்த இனிய தேனைக் குறவரின் இளமகார் வழித்து உண்டனர். அவர்கள் உண்டு எஞ்சியதை மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டிகள் தாமும் சென்று நக்குதலைச் செய்யும். இத்தகைய நன்மையுடைய மலைநாடனே! நின்னை விரும்பியவளாக இவ் விடத்தே தங்கியிருக்கும் தலைவியின் இனிய உயிரானது படுகின்ற வேதனையை நினைந்தாயல்லை. அச்சத்தைத் தரும் பாம்புகள் திரிதலையுடைய இருள்மிகுந்த இரவின் நடுயாமப் பொழுதிலே, மயக்கத்தினைத் தருகின்ற சிறுவழியினூடே நின் கைக்கொண்ட வேலே நினக்குத் துணையாக நீ வருகின்றனை! சந்தனத்தின் மணங்கமழுகின்ற மார்பினை உடையையாய்ச் சாரலிடத்துள்ள எம் சிறுகுடிக்கு நீதான் வருதலை உடையாய்! அதுதான் நினக்குப் பண்பு என்று சொல்லத்தகுந்த ஒரு செயலாகுமோ?

கருத்து : 'இரவின்கண் வருதலைக் கைவிட்டுவிட்டு இவளை மணந்துகொள்ளுதலிலே மனஞ் செலுத்துவாயாக!' என்பதாம்.

சொற்பொருள் : சுரும்பு – வண்டு. புள் – வண்டு. அளை – கல்லிடத்துக் காணப்பெறும் குழிகள். குறுமாக்கள் – சிறுவர், பண்பு – தகுதிப்பாடு. அணங்கு – அச்சம். மை – மயக்கம். எஃகு - வேல். ஆரம் – சந்தனம்.

விளக்கம் : 'நீ தனியே இரவின்கண் வருகின்றனை; வழியிடையே நினக்குத் துன்பமுண்டாகுயோ எனக் கருதி இவள்தான் வருந்தி உயிர் நலிவாள்! இவளுயிர் காக்கப்படுதலை நீ கருதாயோ?' என்பாள், 'நின் நயந்து உறைவி இன்னுயிர் உள்ளாய்' என்றனள். 'அணங்குடை அரவு' என்றது கொடிய நாகப் பாம்புகளை. 'ஆரங்கமழும் மார்பினை' என்றது நறு நாற்றத்தால் நின் வரவை எம் மனைக்காவலர் உணர்வர் என்று கூறியதாம். இரவுக்குறி மறுத்து இதனால் வரைவு வேட்டல் பயனாக ஆயிற்று

உள்ளுறை : வேங்கை தவைவியாகவும், சுரும்புணவிரிந்தது அவள் பருவமலர்ச்சி யுற்றதாகவும், அதனிடத்துள்ள இறாவின் தேன் தலைவியிடத்து விளங்கும் இன்பமாகவும் புள் மொய்த்தல் தோழியர் சூழ்ந்திருப்பதாகவும், கசிந்து வீழ்ந்த தேனைக் குறமக்கள் உண்பது மிக்க நலனைப் பசலை படர்ந்து உண்டொழிப்பதாகவும், எஞ்சியது மந்தி வன்பறழ் நக்குதல் தலைவன் ஒரோவொருகால் தலைவியைக் களவிற் கூடுவதாகவும் கொள்க.

169. பல்லி படுமோ?

பாடியவர் : ......
திணை : முல்லை.
துறை : வினை முற்றி மறுத்தரா நின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.

[(து–வி.) வினை முடித்தவனாக மீளும் தலைவனுக்குத் தலைவியின் நினைவு மேலெழுகின்றது. அவன், 'அவ் வேளையில பல்லி சொல்லும் சொல்லைக் கேட்டுத் தன் வரவை அறிந்திருப்பாளோ?' என நினைக்கின்றான்.]

'முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்!
வருவம்' என்னும் பருவரல் தீரப்
படும்கொல், வாழி, நெடுஞ்சுவர்ப் பல்லி!
பாற்றலை போகிய சிரற்றலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை 5
ஆடுதலைத் துருவின் தோடுதலைப் பெயர்க்கும்
வன்கை இடையன் எல்லிப் பரீஇ
வெண்போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுனுடன் கமழும் மாலை
சிறுகுடிப் பாக்கத்துஎம் பெருநக ரானே. 10

நடுரே! 'யாம் சென்று செய்யக் கருதியதனை முடித்தோமானால், நறிய நெற்றியை உடையவளே! அக் கணமே புறப்பட்டு வருவேம்' என்று முன்னர்க் கூறினேம்.

அவ்வேளையிலே, அவன்பால் உண்டாகிய துன்பமோ பெரிது!

பரற்கற்கள் மிகுதியாகக் கிடக்கின்ற பாலைநிலத்திலே சிச்சிலிப் பறவையது தலையைப் போலத் தோன்றும் கள்ளிகள் வளர்ந்திருக்கும். அக் கள்ளிகளின் மேலாக மலர்களிலே நறுமணமுடையவான முல்லையது கொடிகள் பற்றிப் படர்ந்திருக்கும். ஆடுகின்ற தலையை உடையவான ஆட்டின் தொகுதிகளை மேய்க்கச் சென்று திரும்புவானான, வலிய கையினை உடையானுமான இடையன், இரவு மயங்கும் மாலைப்போதிலே அம் முல்லை மலர்களைக் கொய்வான். கொய்து, வெளிய பனங்குருத்தினது ஓலை நறுக்குடனே சேர்த்துத் தொடுத்து, அசைகின்ற அழகிய தழைமாலையாக அணிந்துகொண்டும் வருவான். அம் மாலையின் நறுமணம் அவன் வருங்காலத்தே சிறுகுடிப் பாக்கத்தின் கண்ணுள்ள தெருவனைத்தும் கமழா நிற்கும். அம் மாலைப்போதிலே, எம்முடைய பெரிதான மாளிகையினிடத்தேயுள்ள நெடுஞ்சுவரிலே இருக்கின்ற பல்லியானது, நம் வரவை அறிவித்து அவளுக்குச் சொல்லுமோ?

கருத்து : 'நாம் வருவதனை உணர்ந்தவளாய் அவள் துன்பந் தீர்ந்திருப்பாளோ?' என்பதாம்.

சொற்பொருள் : முன்னியது – செயக்கருதியது. பருவரல் – துன்பம். பல்லி படுதல் – பல்லி ஒலித்தல். சிரல் – சிச்சிலிப் பறவை. துரு – யாடு. தோடு – கூட்டம். தலைப் பெயர்த்தல் - மேய்த்தபின் வீட்டுக்குச் செல்லுமாறு மறித்து ஓட்டுதல். எல்லி – இரவு; இரவின் தோற்றமாகிய மாலை மயங்கும் பொழுது. வெண் போழ் – வெளியே பனை ஓலை நறுக்கு. தொடலை –தழையிட்டுக் கட்டிய மாலை. மறுகு – தெரு. நகர் – மாளிகை.

விளக்கம் : தலைவன் தான் வினைமேற செல்வானாகப் புறப்பட்ட ஞான்று, 'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல் வருவல்' என்று கூறித் தலைவியைத் தெளிவித்துச் சென்றனன்; அதனைக் கேட்டலும் அவளது துன்பம் தீராது போயிற்று என்று கொள்ளுக 'காட்டிடத்துக் கள்ளி மேலாகப் படர்ந்து கிடந்த முல்லையிலே பூத்திருந்த பூக்களை மாலையாகக கட்டி இடையன் அணித்துவரத் தெருவெல்லாம் முல்லை மணம் பரவிற்று" என்றது, அவ்வாறே தான் தொலைவிடங்களுள் சென்று சேர்த்துக் கொணரும் பொருள் மிகுதியால் தெருமுழுதும் தன்னைப் புகழும்: அதனைக் கேட்கும் தலைவியும் பெருமையடைவாள்' என்றதாம். 'பல்லி படுங்கொல்?' என்றது, அக் காலத்தும் பல்லி சொல்லப் பலன்காணும் வழக்கம் இருந்ததனைக் காட்டும்.

இறைச்சி : 'இடையன் தொடுத்தணிந்துவரும் தொடலையினது மணம் தெருவெல்லாம் கமழுமாறு போலத் தலைவியின் உள்ளமும் பல்லி நல்ல பக்கத்திலே சொல்லிய சொற்களைக் கேட்டதனால், தலைவனின் வரவை எதிர் நோக்கிப் பெரிதும் களிப்புக் கொண்டிருக்கும்' என்பதாம்.

மேற்கோள் : கற்பியலுள், 'அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்' தலைவனுக்குக் கூற்று நிகழுமென்பதற்கு இச் செய்யுளைக் காட்டி, 'முன்னிய முடித்தனமாயின் என்னும் நற்றிணையுள் பொதுப்படச் சிறப்புக் கூறியவாறு காண்க' என்பர் நச்சினார்க்கினியர்.

170. எழுமின்! எழுமின் !!

பாடியவர் : .........
திணை : மருதம்.
துறை : தோழி விறலிக்கு வாயின் மறுத்தது.

[(து–வி.) தலைவனைப் பரத்தை யொருத்தியிடம் கூட்டிய விறலி, மீளவும் தலைவன் தலைவியை விரும்புதலினாலே, அவளிடம் தூதாகவும் செல்லுகின்றாள்; அவளுக்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

மடக்கண் தகரக் கூந்தல் பணைத்தோள்
வார்ந்த வால்எயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கின்
பிணையல் அம்தழை தைஇத் துணையிலள்
விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே
எழுமினோ எழுமின்எம் கொழுநற் காக்கம் 5
ஆரியர் துவன்றிய பேர்இசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது.
ஒருவேற்கு ஓடி யாங்குநம்
பன்மையது எவனோ இவள் வன்மைதலைப் படினே?

மடப்பம் விளங்குகின்ற கண்களையும், மயிர்ச்சாந்து பூசி முடிக்கப்பெற்ற கூந்தலையும், பருந்து தோள்களையும், நிரையாக அமைந்த வெளிய பற்களையும், திரட்சியோடும் செறிவுற்று விளங்கும் தொடைகளையும் உடையவன் இவ்விறவியாயிருக்கின்றனள். பிணைத்துக்கட்டிய அழகிய தழையுடையை இடுப்பிலே தரித்தவளாகவும் உள்ளனள். தன்னந் தனியாளாக, விழவயரும் நம் மனையின் இடமெங்கணும் அழகு பெறுமாறு வந்தும் நம்முன் நிற்கின்றனள்.

ஆரியப் படையினர் வந்து தாக்குதலை மேற்கொண்டனர்; பெரும் புகழையுடைய மூள்ளூர்க் களத்திலே மலையமான் அவர்களை எதிர்த்து நின்றான்; அவர்கள் பலராயிருந்தனர்; மலையமானோ தனியனாக நின்று பொருதான்: அவர்கள் உருவிக்கொண்டு வந்த ஒள்ளிய பல வாட்படைகளும் மலையமானின் ஒற்றை வேற்படைக்கு முன்னர் நிற்க மாட்டாவாயின; அவர்கள் தோற்று ஓடினார்கள். இவள் தலைவனுக்குப் புதியளான பரத்தையொருத்தியைக் கூட்டுவித்து நலஞ்செய்வதனை மேற்கொண்டாளென்றால், அங்ஙனமே பலராகவிருக்கும் நம்முடைய பன்மையும், இவளுக்கு எதிராக எதனை செய்ய இயலும்? அதனால், நம் தலைவனுக்கு ஆக்கந் தேடுவோம்; இவள் செயலை ஒழிப்போம்; அனைவரும் ஒருங்கே எழுங்கோள்! எழுங்கோள்!!

கருத்து : 'தலைவனுக்கு வந்துள்ள புதியவொரு இக் கட்டினின்று அவனைக் காப்போம்; எழுக அனைவரும் என்பதாம்.

சொற்பொருள் : மடக்கண் – மடப்பத்தை யுடைய கண்கள்: இளமைச் செவ்வி பொருந்திய கண்கள். தகரம் – தகரச் சாந்து; மயிரது செழுமைக்குப் பூசும் மயிர்ச்சாந்து பணைத்தோள் – பணைத்த தோள்கள்: மூங்கில் தண்டைப் போன்ற தோள்களும் ஆம், வார்தல் – நிரையாக ஒழுங்குற அமைதல். பிணையல் அம் தழை – பிணைத்துக் கட்டிய அழகிய தழையுடை, துணையிலன் – துணைசேர்ந்தாளாகவும் உடையாளல்லள்; இவளோ தலைவனால் கொள்ளப்படும், தகுதியுடையாள் அல்லள். விழவு – வேனில் விழவு, துவன்றிய – நெருங்கிச் செய்த. முள்ளூர் – முள்ளூர்க் கானமும் ஆம்; மலையமான் திருமுடிக்காரிக்கு உரியது: இவன் நடுநாட்டுத் திருக்கோவலூரினன்.

விளக்கம் : பரத்தையர் உறவினனாகிய தலைவன் மீளவும் தலைவிபால் வருதலை நினைந்து விறலியைத் தூதனுப்புகின்றான் அவளது அழகையும், அவளும் மணம் பெறாது கன்னிப் பெண்ணாயிருத்தலையும் கண்ட தலைவியின் தோழிக்கு. விழவில் தன்னுடன் ஆடுதற்குத் தலைவனை எதிர்பார்த்துப் பொய்யாகத் தூதுரைப்பாள் போல வந்தவளோ என்ற கவலை உண்டாகிவிடுகின்றது. அதனால், அவளை இப்படித் தாக்குதற்குத் தொடங்கிவிடுகின்றாள் எனலாம். மலையமான் ஆரியரை வென்ற சிறப்பினைக் காட்டி அவனைப் போல ஒருத்தியானாலும் இவள் நம்மை வென்றுவிடுவாள் என்று உரைப்பது, விறலியது பொலிவுமிகுந்த பேரழகினைக் காட்டுவதாகும்.

மேற்கோள் : அகத்திணையியலுள் கண்டோர் கூற்று நிகழுதற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டி, 'இஃது 'இடைச் சுரத்துக் குறும்பினுள்ளோர் இவரைக் கண்டு கோளிழைப்பு உற்றார்க்கு அவர் பெண்டிர் கூறியது' என, உடன் போக்கிடையில் நிகழ்வதாகக் கூறுவர் நச்சினார்கினியர்.

171. எவ்வாறு துயிலும்?

பாடியவர் :..
திணை : பாலை.
துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைந்தது.

[(து–வி.) தலைமகனாலே பிரிவைப் பற்றி அறிவுறுத்தப் பெற்ற தோழி, தலைமகள் அதனாலுறும் துயரமிகுதியை நினைந்தாளாய், அவளிடத்தே வந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
நிலம்செலச் செல்லாக் கயந்தலைக் குழவிச்
சேரிஅம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர்ஆன் கன்றொடு புகுதும் நாடன் 5
பன்மலை அருஞ்சுரம் இறப்பின், நம்விட்டு
யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர்
வினைப்பூண் தெண்மணி வீழ்ந்தன நிகர்ப்பக்
கழுதுகால் கொள்ளும் பொழுதுகொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ 10
மார்புஉறப் படுத்தல் மரீஇய கண்ணே?

நீருண்ணும் வேட்கைக்குச் செலுத்தப்பெற்ற வருத்தத்தையுடைய யானை ஒன்று, வெப்பமிக்க குன்றுகளைச் சூழவும் கொண்ட வெம்மையுடைய மலைப்பக்கத்திலுள்ள நிலப்பகுதியின் கண்ணே சென்றது; அதனுடன் செல்லமாட்டாத மெல்லிய தலைமையுடைய கன்றானது, சேரியிடத்தேயுள்ள அழகிய பெண்டிர்களது நெஞ்சத்தே அச்சமுண்டாகும்படியாக, ஊரிலுள்ள பசுக்கன்றுகளோடு சேர்ந்து கொண்டு ஊருக்குள்ளேயும் புகுந்துவிட்டது. அத்தகைய நாட்டிற்கு உரியவன் நம் தலைவன். அவன்தான் நம்மை இவ்விடத்தே தனித்திருக்க விட்டானாய்ப் பலவாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய சுரநெறியிலே செல்வானாயின், பேய்கள் நிலை கொண்டவாய் உலவிக் கொண்டிருக்கும் பொழுதினைக் கொண்ட இரவின் நடுயாமப் பொழுதிலே. ஆசைகொண்ட நெஞ்சத்தோடு கலந்து, அவனுடைய மார்பின் மேலாகப் பொருந்திப் படுத்துறங்கலைப் பழகியுள்ள நம் கண்கள் தாம், செய்வினைத் தொழிவாற் சிறப்புற்ற தெளிவான ஓசைகொண்ட மணிகள் கட்டப் பெற்றுள்ள வேற்படையினின்றும், மணிகள் வீழ்ந்தனவாயின் அதன் பின்னர் அவ்வேற்படையானது தோன்றுமாறுபோல, இனி எவ்வாறு துயில் கொள்ளற்கு வல்லன வாகுமோ?

கருத்து : அவன் பிரிந்தானாயின், இனி உறக்கமும் நம்மைவிட்டு அகலும்' என்பதாம்.

சொற்பொருள் : நீர் நகை – நீர் வேட்கை. ஊக்கிய – செலுத்திய. உயவல் – வருத்தம். எறிய – அச்சம் தாக்கும்படியாக. ஞாங்கர் – வேற்படை. கழுது – பேய். அளைஇ - அளவளாவிக் கலந்து. மரீஇய – பொருந்திய.

விளக்கம் : வேற்படைக்கு ஒலிகொண்ட மணிகளைக் கோத்து மாலையாகக் கட்டி, அதன் முனைக்குக் கீழ்ப் பகுதியிலே பூணாகப் பூட்டியிருப்பர். இது வேலுக்கு அழகு தருவதாயிருக்கும். இதனையிழந்த வேல் போன்ற கண்கள் என்றலால், வேலின் இலைப்பகுதி போன்ற கண்கள் என்று கொள்க. அவனைப் பிரிதலால் பொலிவழியும் நிலைக்கு வினைப் பூண் தண்மணி வீழ்ந்தனபோன்ற நிலையைக் கொள்க. மணி வீழ்தல், பகைவருடலில் வேல் தைத்து செல்லுங் காலத்து ஆதலின், வேன்முனையும் செந்நிறக் குருதிக்கறை படிந்ததாய் விளங்கும்; அவ்வாறே உறக்கமிழந்தும் துயருற்றுக் கலங்கியும் செந்நிறம் பெற்ற கண்கள் எனினும் பொருந்துவதாம், 'மார்புறப் படுத்தல் மரீஇய கண்' என்ற இனிமைப் பாட்டை உய்த்துணர்ந்து அநுபவித்தல் வேண்டும். 'ஆர்வ நெஞ்சமொடு அளைஇ' எனத் தனது பெருங்காதலையும் கூறுகின்றனள். மலைப் பகுதிக்கு மேய்தலுக்குச் சென்றவான ஆன் கன்றுகள் வீடு திரும்புங்காலை, அவற்றுடன் தனிமையுற்ற யானைக்கன்றும் சேர்ந்து வரும் என்று கொள்க.

உள்ளுறை : 'வேட்கை மிகுந்த பிடியானையானது மலைகளை ஏறிக் கடந்து, நீருண்டுவர அம் மலைகட்கு அப்புறமாகப் போதலும், அதனுடன் செல்லமாட்டாத கன்று, ஆன்கன்றுகளுடன் ஊருட்புகுந்து, சேரிப்பெண்டிரது நெஞ்சத்தைத் துணுக்குற வைக்கும்' என்றனள். அவ்வாறே பொருள் வேட்கை மிகுந்து தலைவியைத் தனித்து விட்டுச் சுரநெறியினை மேற்கொண்டு சென்றானாகத், தலைவி செயலற்றாளாய்த் தோழியருடன் கூடித் தன் துயரை ஆற்றுதற்கு முயல, அவள் நிலை கண்ட முதுதாயர் பலரும் நெஞ்சந்துணுக்குற்றுக் கலங்குவர் என்க.

172. நகை நாணுதும்!

பாடியவர் : .........
திணை : நெய்தல்.
துறை : (1) பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. (2) குறிபெயர்த்தீடும் ஆம்.

[(து–வி) (1) பகற்குறிக்கண் வந்த தலைமகனை, அக் குறியிடத்துத் தாம் வருதற்கு நாணுவேம் எனக் கூறுதலின் மூலம், தலைவியை வரைந்து கொள்ளுதற்கு முயலுமாறு தூண்டுவாளாகத் தோழி இவ்வாறு கூறுகின்றனள். (2) 'இவ்விடம் எமக்கு ஒத்ததன்று; வேறிடம் ஒன்று குறிக்க' எனச் சொல்வதன்மூலம் வரைவுகடாதலும் ஆகும்.]

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
'நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே 5

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. 10

புதியராய் வந்த பாணர்களது மெல்லிசை முழக்கைப்போல, வலம்புரிச்சங்கினது வெள்ளிய கோடானது ஒலித்துக் கொண்டிருக்கின்ற, நீர் விளங்கும் கடற்றுறை பொருந்திய நாட்டின் தலைவனே!

விளையாட்டயரும் ஆயமகளிரோடு வெண்மணலிடத்தே புன்னைக் காய்களை அழுத்தியபடியாக விளையாடியிருந்தோம். அவற்றுள் ஒன்றை எடுக்க மறந்தும் போனோம். அங்ஙனம் யாம் அழுத்திய புன்னைக்காய் முளைவிட்டுத் தோன்றியது. அதனை நோக்கி மகிழ்வுற்றேம். நெய்பெய்து கலந்த இனிதான பாலினைப் பெய்து அதனை இனிதாக வளர்க்கவும் செய்தோம். அதனைக் கண்டனள் எம் அன்னை, 'நீர் நெய் பெய்த பாலினைப்பெய்து வளர்த்தது இதுவாதலின், நும்மைக் காட்டினும் சிறப்பானது: நுமக்குத் தங்கை போல்வது' என்று கூறினள். ஆதலினாலே, இப் புன்னையின் நிழற்கீழாக நும்மோடும் நகைத்து விளையாடி இன்புறுதற்கு யாமும் நாணமடைகின்றேம். அம்மையோ! நீதான் இவட்கு அருள் செய்வையானால். தங்குவதற்குத் தகுதியான நிழல்மரங்கள் இவ்விடத்துப் பிறவும் பலவாக உள்ளன. காண்பாயாக!

கருத்து : 'இவளை மணந்து கூடுதலே இனி நின்னாலே மேற்கொள்ளத் தக்கது' என்பதாம்.

விளக்கம் : 'காமம் கைமிகினும் கன்னியர் மாட்டு அவர் தமக்கு இயல்பான நாணுடைமை நீங்குவதன்று; அவர்தம் உறவுடையார் அருகிருக்கத் தம் காதலரோடு சிரித்து மகிழ்தற்கும் நாணுவர்' என்னும் சிறந்த பண்பினை இச் செய்யுள் காட்டுகின்றது. இதனாற் பகற்குறிப்புணர்ச்சிக்கு அஞ்சியமையும், அலரெழுதலை நினைந்து நாணுற்றமையும் குறிப்பாகப் புலப்படுத்தி வரைவு வேட்டனள் ஆயிற்று. தாம் வளர்க்கும் மரங்களையும் செடிகளையும் கிளி முதலியவைகளையும் உடன்பிறந்தாரைப் போலக் கருதிப் பாராட்டுகின்ற பழந்தமிழ்ப் பெண்மைப் பாங்கும் இதனானே அறியப்படும்.

மேற்கொள் : ஐவகையான உள்ளுறை உவமங்களைப் பற்றிக் கூறும் தொல்காப்பியப் பொருளியலுரைச் சூத்திரத்தின் உரையுள் (சூ. 238) இச் செய்யுளை உடனுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரண அடிகள் காட்டுகின்றனர். 'இதனுள் புன்னைக்கு நாணுதும்' எனவே அவ்வழித் தான் வளர்த்த புன்னையென்றும், 'பல்காலும் அன்னை வருவள்' என்று உடனுறை கூறியும் விலக்கியவாறு எனவும் கூறுவர்.

களவியலுள், 'நாணுமிக வரினும் தோழிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு இச்செய்யுளைக் காட்டி, 'இதனுள் அம்ம நாணுதும்' எனப் புதிய வந்ததோர் நாணுமிகுதி தோன்றி மறுத்து உரைத்தலின் தன்வயின் உரிமையும், அவன்வயிற் பரத்தமையும் கூறினாள் எனவுரைப்பர் நச்சினார்க்கினியர். உடனுறை உவமத்திற்கும் இச்செய்யுளைக் காட்டி, 'இதனுள் புன்னையை அன்னை நுவ்வையாகும் என்றதனால் இவளெதிர் நும்மை நகையாடுதல் அஞ்சும் நகையாடிப் பகற்குறி எதிரே கொள்ளாமைக் குறிப்பினான் மறைத்துக் கூறி மறுத்தவாறு காண்க' எனவும் உரைப்பர்.

இச் செய்யுளுள், 'நும்மினும் சிறந்தது நுவ்வையாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே' என்பதனை எடுத்துக்காட்டிப், 'புன்னை மரத்தினை 'நுவ்வை' என்றல் மரபன்மையின் வழக்கினுள் மாற்றுதற்கு உரியதாம்' எனக் கூறுவர் பேராசிரியர்.

பிறபாடங்கள் : மணல் அழுவத்து,; பெய்தினிது வளர்ப்பு; புன்னையது நலனே.

173. யான் கேட்பேன்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : (1) தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது. (2) வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலைபயப்பித்த தூஉம் ஆம்.

[(து–வி.) சிறைப்புறமாக வந்து நிற்கும் தலைவன் கேட்டுத் தலைவியை வரைந்து கோடற்கு முற்படுமாறு, தலைவிக்குச் சொல்வாள்போலத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும். (2) அன்னை வெறியாடற்கு ஏற்பாடு செய்தனள் எனக்கூறித் தலைவியை அச்சப்படுத்தி அறத்தொடு நிற்குமாறு அவட்குத் தோழி கூறுவதும் ஆம்.]

கனைப்பூக் குற்றும் தொடலை தைஇயும்
மலைச்செங் காந்தட் கண்ணி தந்தும்
தன்வழிப் படூஉம் நம்நயந் தருளி
வெறிஎன உணர்ந்த அரிய அன்னையைக்
கண்ணினும் கனவினும் காட்டி' இந்நோய் 5
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அம்மலை கிழவோன் செய்தனன் இது' எனின்
படுவண்டு ஆர்க்கும் பைந்தார் மார்பின்
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ?
தொடியோய்! கூறுமதி வினவுவல் யானே? 10

தொடியுடையாய்! நின்னை யொன்று வினவுவேன்? அதனைக் கேட்பாயாக; சுனையிடத்துள்ள மலர்களைப் பறித்து அவைகளை மாலையாகத் தொடுத்தும், மலையிடத்துள்ள செங்காந்தளின் பூக்களைக் கொய்து சூடுங்கண்ணியாகக் கட்டியும், சார்த்தி யாம் குன்றக் குமரனை வழிபடுவோம். தன்னை வழிபாடு செய்கின்ற நம்பால், அவன் அருள்கொள்ளளலும் கூடும். நம் நோயைப்பற்றிய உண்மையைக் கண்ணெதிரேயும், கனவிடையேயும் வெறியயர்தலால் நோய்தீரும் எனக் கருதிய அன்னையும் அறியுமாறு அவன் காட்டலும் கூடும். 'இந்நோய் என்னால் ஒருபோதும் நின்மகட்கு வாராது; நீலமணியினைப் போலத் தோன்றும் அந்த மலைக்கு உரியோனாகிய இளையோன் தான் இதனை நும்மகட்குச் செய்தனன்' என்று, அவன் சொன்னாலும் சொல்வான். பொருந்திய வண்டுகள் ஆரவாரிக்கும் பசிய மாலையணிந்தோனாகிய நெடிய முருகவேளுக்கு அதனாலே ஒரு குற்றம் உண்டாகுமோ? அதனை ஆராய்ந்து எனக்குக் கூறுவாயாக.

கருத்து : 'இனிக் களவுறவு வாயாதாகலின், அன்னைக்கு உண்மையை உரைத்துவிடுக' என்பதாம். இதனைக் கேட்கும் தலைவன், அன்னைக்கு உரைக்கும் முன்பாகத் தானே தலைவியை வரைந்து மணந்து கோடற்கு முற்படுவான் என்பதுமாம்.

சொற்பொருள் : தொடலை – தழை கலந்த மாலை. நீலப் பூக்களோடு பசுந்தழையிட்டுக் கட்டிய மாலையினை முருக வேளுக்கு உடையாக உடுத்தும், செங்காந்தட் கண்ணியைச் சூட்டியும் குறமகளிர் வழிபாடு செய்வர். நெடுவேள் – முருகன்.

விளக்கம் : தொடலை தைஇயும், கண்ணி தந்தும் வழிபடுவர் என்பதனால், முருகனைக் குறிக்கும் உருவச் சிலையைக் குன்றவர் அமைத்து வழிபட்டனர் என்பதும் காணப்படும். அன்றி, வேற்படையையே முருகாகக்கொண்டு நாற்றிவைத்து வழிபாடு நிகழ்த்துவர் எனலும் பொருந்தும். 'நெடுவேட்கு ஏதம் உடைத்தோ?' என்றது, அவனுக்கு ஏதமின்று; நமக்கே ஏதம் வரும் என்பதாம். இவற்றால், தலைவி, இற்செறிக்கப் படுவாளென்பதைத் தலைவன் உணர்ந்து, அவளை மணந்தாலன்றிக் கூடுதற்கு இயலாதெனவும் கருதி, விரைந்து மணந்து கோடலிலே கருத்தைச் செலுத்துவான் என்பதாம்.

இறைச்சி : நம்மைக் கைவிட்டு மறந்த கொடியோனின் மலையாயிருந்தும், அதன்பால் நீலமணிபோல அழகு தோற்றுவது என்னையோ என்பாள், 'மணியின் தோன்றும் அம்மலை கிழவோன்' என்றனள் என்று கொள்ளுக.

174. அன்பற்றவனின் அணைப்பு!

பாடியவர் : ........
திணை : பாலை.
துறை : வினைமுற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய் தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.
[(து–வி.) வினையை மேற்கொண்டு பிரிந்து சென்றவனாகிய தலைவன், அதனை முடித்த வெற்றியோடும் வீடு திரும்பித் தன்னோடும் கூடியிருக்கின்ற செவ்வியைப் பெற்ற பின்னும், தலைவியினது ஆற்றாமை தீராததனைக் கண்டாள் தோழி. அங்ஙனம் இருத்தலின் பொருந்தாப் பேதைமையைப் பற்றி அவள் தலைவிக்குப் பலவாறாகக் கூற, அவற்றைக் கேட்ட தலைவி, தன் மனத்தே மறைத்திருந்த உண்மையான கவலையது காரணத்தை அவளுக்குக் கூறுகின்றாள்.]

'கற்றை ஈந்தின் முற்றுக்குலை அன்ன
ஆள்இல் அத்தத் தாள்அம் போந்தைக்
கோளுடை நெடுஞ்சினை ஆண்குரல் விளிப்பின்
புலிஎதிர் வழங்கும் வளிவழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி 5
பிரியாது ஒருவழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை மடந்தை!' என்றி தோழி!
அற்றும் ஆகும் அஃது அறியா தோர்க்கே
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன் 10
புல்லுமற்று எவனோ அன்பு இலங் கடையே?

தோழி! மக்களின் போக்குவரவே இல்லாத போயின சுரநெறி; அதனிடத்தே. ஈந்தினது காய் முற்றிய குலைகளைப் போலக் கற்றையான குலைகளுடன் விளங்கும் தாளிப்பனை மரம் ஒன்று; பசிமிக்கதாய்க் களிறு ஒன்று அத் தாளிப்பனையின் மடல்களை இழுத்துத் தின்னத் தொடங்கியது. அவ்வேளையிலே அதற்குத் தன் பிடியின் நினைவு தோன்ற அதனை அழைத்துப் பிளிறத் தொடங்கியது; ஆனால், அதற்கு எதிர்க்குரலாகப் பிடியின் குரல் கேட்கவில்லை; மாறாக, அதற்குப் பகையான புவியின் முழக்கமே கேட்டது. கோடைக்காற்று வழங்கும் அத்தகைய கடத்தற்கு அரிதான காட்டுவழியே சென்று பொருள் தேடியவராக நம் காதலரும் வந்தனர். 'மடந்தையே! இனிதாக இருவிரும் தழுவிக் கொண்டு ஒருவரையொருவர் பிரியாத ஒருவழிப்பட்டீராய்த் தங்கியிருக்கும் இந்நிலையிலும், நீதான் பெரிதும் நலனழிந்து வருந்தினையே? இதுதான் முறையோ?' என்று கேட்கின்றனை. உண்மையாதென உணராத நின்போன்றோர்க்கு என் நிலை அத் தன்மைத்தாகவேதான் தோன்றும். தம்மைக்கூடும் ஆடவரை அவர் தரும் பொருளுக்காகவன்றி அவரைத் தம் உளத்தால் விரும்பி ஏற்கும் மரபினை இல்லாதவர்கள் பரத்தையர்கள். இருந்தும், பரத்தை ஒருத்திபால் விருப்புற்று, வளமான தன் மார்பிடத்தே அவளை அணைத்துக் கொண்ட குறிகளுடன் தலைவனும் வருகின்றனன் நம்மிடத்தே. அன்பில்லாத அவனிடத்தே சேர்ந்து, அவனைத் தழுவிக்கொள்வதனாலே நம் துன்பந்தான் மறையுமோ? அதுதான் என்ன பயனை உடைத்தோ? நீயே கூறுக.

கருத்து : 'பிரிந்தவன் மீண்டு வந்தும் என்னைக் கருதானாய்த் தன் காதற்பரத்தையைத் தழுவுவதிலேயே விருப்புற்றுத் திரிகின்றனன்' என்பதாம்.

சொற்பொருள் : கற்றை - அடுக்கடுக்கான செறிவு. தாளம் போந்தை – தாளிப்பனை. கோள் – காய்க் குலைகள். சினை – மடல். உறையினும் – தங்கியிருப்பினும். உயங்கினை – வாட்டமுற்று வருந்தினை. அற்றும் – அத்தன்மைத்தும், வீழாக் கொள்கை – விருப்பமுறாத கோட்பாடு. புல்லு – அணைப்பு.

விளக்கம் : ஈந்தைப்போன்று கற்றைக் குலைகளை உடைத்தாயினும், தாளிப்பனை ஈந்தினுங் காட்டில் தாழ்ச்சியுடையது ஆகும்; இவ்வாறே தலைவியைப் போலப் பரத்தையும் ஒரு பெண்ணாயினும், பண்பாற் குறைந்தவள் என்று கூறுகின்றாள். 'ஆண்' என்றது களிற்றினை. 'பறவை' எனக் கொள்ளின் 'புலியெதிர் வழங்கும்' என்னும் செய்தியாற் பொருள் சிறப்பதில்லை. மல்லல் – வளம்; மல்லல் மார்பு – நறுஞ்சாந்தின் வளமை திகழும் பரந்தமார்பு. அச்சாந்து பரத்தையைத் தழுவியதனாற் கலைந்திருத்தலைச் கண்டு தலைவி ஊடி நலிந்தாள் என்று கொள்க.

இறைச்சி : (1) ஈந்தின் கற்றையான நெற்றுக் குலை போன்றது தாளிப் பனையின் நெற்றுக் குலையும் என்றது, பரத்தையும் தன்னைப் போன்ற பெண்மகள் தானேயன்றி வேறு சிறப்புடையாள் ஆவளோ என்றதாம். வீழாக் கொள்கையாட்டியான அவளினும் அன்புற்ற தான் சிறந்தவள் என்பதும் ஆம். அதனை மறந்தான் அவன் என்பதும் கூறினாள்.

(2) களிறு பிடியை அழைக்கப் புலியானது எதிர்க் குரலெடுத்து வந்தாற் போன்று,தான் தலைவனின் வரவை ஆர்வத்துடன் எதிர் நோக்கியிருக்க, அவன் வந்ததும், அவனுக்கு நன்மை கருதாதாளான பரத்தை முழக்கோடு எதிர்வந்து அவனைத் தன் கையகப்படுத்தினள் என்பதுமாம்.

175. அடுபாலும்! சுடுவானும்!!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து–வி.) சிறைப்புறமாக நிற்கும் தலைமகன் கேட்டுத் தலைவியை வரைந்து மணந்து கொண்டாலன்றி இனி உறவுவாயாதென்று உணருமாறு, தோழி தலைவிக்குச் சொல்லுவாள் போலச் சொல்லுகின்றது இச் செய்யுள்.]

நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்
கொழுமீன் கொள்ளை அழிமணல் குவைஇ
மீன்நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறுதீ விளக்கில் துஞ்சும் நறுமலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை 5
தான்அறிந் தன்றோ இலளே; பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறுசொல் நம்பிச்
சுடுவான் போல நோக்கும்,
அடுபால் அன்னவென் பசலை மெய்யே.

வளைவான படகுகளிலே ஏறிக்கொண்டு, நெடுங்கடலிடத்தே வேட்டம் மேற்கொண்டு சென்றாரான பரதவர்கள், கடலினை வருத்திப் பிடித்துக்கொணர்ந்த கொழுமையான மீன்களைக், கடற்கரையிடத்தே கிடக்கும் நெகிழ்ச்சியான மணற்பரப்பிலே கொணர்ந்து குவித்துவைப்பார்கள். மீன் நெய்யைக் கிளிஞ்சிலிலே வார்த்துச் சிறுசுடர் விளக்கினையும் ஏற்றுவார்கள். காற்று அதனை அணைத்து விடாதிருக்கக் கிளிஞ்சில்களைக் கொண்டு நாற்புறமும் அவ்விளக்கினைப் பொத்தியும் வைப்பார்கள். அதன்பின், அச் சிறுதீ விளக்கின் ஒளியருகேயே படுத்துக் கொண்டாராக உறங்குதலையும் மேற்கொள்வார்கள். அவ்விடத்தே, நறிய மலர்களையுடைய புன்னை மரமும் உயரமாக வளர்ந்திருக்கும். அத்தகைய துறைக்கு உரியவன் நம் தலைவன். அவனோடு நாம் கொண்டுள்ள இக் களவுறவினை நம் அன்னை தானே அறித்துவைத்தாளும் அல்லள். ஆனால், இரவின் நடுயாமத்தே சேரியின்கண்ணுள்ள அலவற் பெண்டிர்கள் சுட்டிச் சுட்டிக் குறிப்பாகப் பேசிக்கொண்ட சிறுமையான சொற்களைக் கேட்டு, அவற்றை உண்மையெனவும் நம்பினாள். அதனாலே கொதிக்கும் பாலைப் போன்று பசலை பரந்துள்ள என் உடலினைச், சுடுகின்ற வானத்தைப் போல மேலும் எரித்து விடுவாளாகவும் நோக்கினாள். இனி, இல்லத்தே சிறையிட்டும் வைத்து விடுவாள் போலும்?

கருத்து : அன்னை களவுறவை அறிந்தனள்: இனி, இவளை மணந்தாலான்றிப் பெறுதல் வாயாது' என்பதாம்.

சொற்பொருள் : அலைத்த – வருத்திய: கடலிலுள்ள மீன்களைப் பற்றிக் கொளலால் வருத்திய. திமில் – மீன்பிடி படகு. கொடுமை – வளைவான தன்மை. மீன்நெய் – மீன் கொழுப்பிலிருந்து இறக்கப் படுவது. சிறுசொல் – சிறுமையுடைய சொல். சுடுவான் – எரிக்கும் கதிரவன். அடுபால் – அடப்பட்டுக் கொதிக்கும் பால்; அதன்பால் தோன்றும் ஆடைபோலத் தலைவியின் மேனியிடத்தும் புள்ளி புள்ளியாகப் பசலை பற்றிப்படர்ந்தது என்க.

விளக்கம் : தலைவனை இடையிடையே பிரிந்திருக்கவும் ஆற்றாளாய்த் துயருறும் தலைவியது பேரன்பினைக் கூறுவாள், அவள் மெய்யிடத்தே 'அடுபால் அள்ள பசலை' தோன்றிற்று என்றாள்; அதனைப் பிறர் அறியாவாறு மறைக்க வியலாமையினைக் கூறுவாள், சேரியம் பெண்டிர் சிறுசொல் பேசியவராக அலர் தூற்றினமை கூறினாள். அன்னை அறிந்தமை சுடுவான்போல் நோக்கினாள் என்றதனாலே உணர்த்தப் பெற்றது.

'மீன் நெய் அட்டி' என்பது சிந்தனைக்கு உரியது. பரதவர் விளக்கு எரிப்பதற்கு மீன்நெய்யைப் பயன்படுத்திய இச் செய்தியால், இத் தொழிலை அவர் அறிந்திருந்தமையும், இந்நெய் பலவற்றுக்கும் பயன்பட்டமையும் அறியப்படுவதாம்.

உள்ளுறை : 'கடல் வேட்டைமேற் சென்ற பரதவர்தாம் ஈட்டிய மீன்களைப் பலரும் காணக் கடற்கரை மணலிடத்தே குவித்துப்போட்டுச் சிறுதீ விளக்கில் துஞ்சுவர் என்றது, அவ்வாறே தலைவனும் பெரும்பொருளை ஈட்டிக் கொணர்ந்து தலைவியின் இல்லத்து முற்றத்திடத்தே குவித்துத் தலைவியை வரைந்து மணந்து இல்லறத்திலே இணை பிரியானாய் வாழ்தல் வேண்டும் என்பதாம்.

176. காதலள் என்னுமோ?

பாடியவர் :
திணை : குறிஞ்சி.
துறை : பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.

[(து–வி) தலைவியால் பூப்பறிவிக்கப் பெற்ற தலைவன், உலகியலை நோக்கிப் பரத்தை வீட்டைவிட்டுத் தன் வீட்டிற்குச் செல்லுகின்றான். தலைவிக்கு அஞ்சித் தான் தலைவனை விடுத்ததாக ஊரார் தன்னைப் பழிப்பரெனப் பரத்தை கருதுகின்றாள். அதனால், தலைவியின் பாங்கிக்கு வேண்டியவர் கேட்டுத் தலைவியிடத்தே சொல்லுமாறு, தான், தன் தோழியாகிய விறலிக்குச் சொல்லுவாள்போல இப்படிக் கூறுகின்றாள்.]

எம்நயந்து உறைவி ஆயின் யாம்நயந்து
நல்கினம் விட்டதுஎன்? நலத்தோன் அவ்வயின்
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கவள்
காதலள் என்னுமோ? உரைத்திசின் தோழி!
நிரைத்த யானை முகத்துவரி கடுப்பப் 5
போதுபொதி உடைந்த ஒண்செங் காந்தள்
வாழையம் சிலம்பின் வம்புபடக் குவைஇ
யாழ்ஓர்த் தன்ன இன்குரல் இனவண்டு
அருவி முழவின் பாடொடு ஓராங்கு
மென்மெல் இசைக்கும் சாரல் 10
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.

தோழி! எம்மை நயந்து கொண்டவளாகத் தலைவியும் இருப்பவளாயினால் யாமும் அவளது நட்பினை விரும்பி, தலைவனை அவள்பாலும் சில நாட்கள் சென்று வருமாறுவிட்டதனாலே தவறு என்னையோ? நம்முடைய நலத்திற் கருத்தாயிருக்கும் அவனை, அவ்விடத்திற்கு நம்முடைய பெருந்தன்மையின் காரணமாக நாம் அளித்துதவியதன் உண்மையினை அறியாதாராய், ஊரார் 'அத் தலைவிக்கு அப் பரத்தைதானும் அன்பினளாயுள்ளாள்' என்றுஞ் சொல்லூவார்களோ?

வரிசைப்பட நிற்கின்ற யானையது முகத்திலே தோன்றும் செங்கோடுகளைப்போல அரும்புகள் பொதுயவிழ்ந்து மலர்ந்த ஒள்ளிய செங்காந்தள், வாழை மரங்களையுடைய சோலைப் பகுதியின் கண்ணே புதுமணம் உண்டாகுமாறு செறிந்திருக்கும்; யாழினை மீட்டி ஒலியெழச் செய்தாலொத்த இனிய குரலினைச் செய்பவான வண்டுக் கூட்டங்கள் அருவியினது முழவொலி போன்ற முழக்கத்தோடு ஒருசேர ஒலித்தனவாய், மெல்ல மெல்ல ஆரவாரித்தபடியிருக்கும்; அத்தகைய மலைச் சாரலிடத்தே, குன்றுகளை வேலியாகக் கொண்ட அவர்கள் இருக்கின்ற ஊரிடத்தே உள்ளவர்கள்தாம் யாது சொல்வார்களோ? அதனை எனக்கும் உரைப்பாயாக!

கருத்து : 'தலைவன் மீளவும் நம்மை நாடி வந்து விடுவான்' என்பதாம்.

சொற்பொருள் : நயந்து – அன்பு செய்து; விருப்பப்படி நடந்து. நலத்தோன் – நலத்தைக் கருதுவோன்; பொருள் நலத்தை உடையோனும் ஆம். சால்பு – பெருந்தன்மை. அளித்தல் – அருளிச் செய்தல். காதலள் – அன்புடையாள். நிரைத்த – நிரையாக நின்ற. வரி – செவ்வரி. போது –அரும்பு, செங்காந்தள் – செந்நிறக் காந்தட் பூ. வம்புபட – புதுமணல் பரவ, ஓர்த்தல் – யாழினை இசைத்தல் முழவின் பாடு – முழவின் முழக்கம். ஓராங்கு – ஒரு தன்மைப்படா குன்றவேலி – குன்றுகளே வேலியாகச் சூழ்ந்த நிலை.

விளக்கம் : பரத்தையின் தோழி 'விறலி' என்பது இயல்பான் உணரப்படுவது. பரத்தை இப்படித் தன் தோழிக்குக் கூறியதைக் கேட்ட தலைவியின் பாங்கிக்கு வேண்டியவர்கள் அதனைப் பாங்கிக்கு உரைக்க, அவளும் தலைவிக்கு உரைப்பள் என்பதாம். தன்னுடைய பெண்மைக் கவர்ச்சியிலும் இளமைச் செவ்வியிலும் பரத்தைக்கு இருந்த நம்பிக்கையின் செறிவும், தலைவனைத் தான் இழந்துவிடலும் நேருமோவென இயல்பாகவே எழுந்த அச்சமும், ஊரவர் குறை கூறுவரோ என்பதனால் உண்டாகிய உணர்வும், அவளை இப்படிக் கூறச் செய்தன என்க.

உள்ளுறை : சிலம்பிற் செங்காந்தள் மலரின் மணம் பரவுதலும், வண்டினம் ஆரவாரித்தபடி அதனை நாடிச் செறுவதனையொப்ப நம்பாலும் பூப்புண்மையை அறிவித்தபடி விறலியாகிய நீதான் பாடியும் ஆடியும் செல்வையானால், தலைவனும் தலைவியைவிட்டு நின்னுடனே இவ்விடத்திற்கு வருபவனாவான் என்பதாம். இதனால் தலைவனது காமத்தில் எளியனாக வண்டுபோல மவருக்குமலர் செல்லும் தன்மையையும் உணர்த்தினாள். தலைவனை அடைதலாலே தலைவி பெரிதும் மகிழ்ந்துவிடுதல் வேண்டா; அவன் பரத்தைமையிலே நாட்டமுடையவனாதலின் அவனோடு நெடுநாள் தங்கி இரான் என்பதுமாம்.

177. நீந்தும் நாள்!

பாடியவர் : .........
திணை : பாலை.
துறை : செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

[(து–வி.) தலைமகன் வேந்துவினை மேற்கொண்டு செல்லற்குரிய ஏற்பாடுகளிலே ஈடுபட்டான்; அதனைக் குறிப்பால் அறிந்த தலைவி தன் தோழியிடத்தே அதனைக் கூறி இப்படிப் புலம்புகின்றாள்.]

பரந்துபடு கூர்எரி கானம் நைப்ப
மரந்தீ யுற்ற மகிழ்தலை அம்காட்டு
ஓதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிலின் யானே நெறிப்பட
வேலும் இலங்கு இலை துடைப்பப் பலகையும் 5
நீலி சூட்டி மணிஅணி பவ்வே
பண்டினும் நனிபல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்துநொந்து
எழுதுஎழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. 10

தோழி! நம் தலைவரின்கீழ்ப் பணியாற்றும் பிறரான படைமறவர் எல்லாரும். பரந்துபட்ட பெருந்தீயானது காட்டினை அழிக்க, மரங்கள் அனைத்தும் தீ வாய்ப்பட்டுகிடக்க, மகிழ்ச்சி நீங்கும் காட்டிடத்தே செல்வார், ஒதுங்கி நிற்றற்கும் நிழலற்ற வெம்மையுடைய சுரத்தின்கண்ணே சென்றுவிட்டார்கள். இவரிடம் தோன்றும் குறிப்புக்களாலே அதனை யாதும் உண்டுகொண்டேன். இவரும், ஒழுங்குபட வேலினையும் அதன் விளக்கங்கொண்ட இலைப்பகுதியினையும் துடைப்பாராயினர்; கிடுகினையும் அதற்கு மயிற்பீலி சூட்டி மணியணிந்து அழகு செய்வார் ஆயினர்; முன்னைக் காட்டினும் மிகப் பலவாக என்பாலும் அன்புகாட்டி அருள் செய்வாராயினர். ஆதலின், இவரைப் பிரிந்து வருந்தி வருந்தி மைதீற்றிய அழகினைக் கொண்ட நம் மையுண்ணும் கண்களிடத்துப் பாவையும் மறையுமாறு, நாம் நம் நலனை அழித்தலைச் செய்கின்ற துயரவெள்ளத்திலே நீந்தி உழலுதற்குரிய நாளும் இனித்தான் வந்துறுவது போலும்? யான் எவ்வாறு அதனைப் பொறுத்து ஆற்றியிருப்பேனோ?

கருத்து : 'தலைவர் என்னைப் பிரிந்தனராயின் என் நிலைதான் யாதாகுமோ?' என்பதாம்.

சொற்பொருள் : கூர்எரி – கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு. ஒதுக்கு – ஒதுக்கிடம். நெறிப்பட – ஒழுங்குபட. எழுது எழில் – எழுதுதற்கும் அரிதான அழகும் ஆம். வந்தன்று – வந்துற்றது.

விளக்கம் : மற்றவர் சென்ற பின்னர், அவரை நடத்திச் செல்லும் தலைமைப் பொறுப்பினரான இவர் தாம் செல்லாதிரார் என்பதாம்; அஃது ஆண்மைக்கு அழகன்று ஆதலினால், 'பலகை" என்றது கேடகத்தை; இதற்கும் வேலிற்கும் களத்திற்குப் போகு முன்பு மாசுபோக்கி வழிப்பாடு செய்தல் பண்டை மரபாகும். அதனைத் தலைவன் மேற்கொண்டான்; அதுகண்ட தலைவியின் உள்ளம் துணுக்குற்றது; அவள் அவன் போர்க்களத்தை நாடிச் செல்லுதற்கு நினைந்தானெனக் கருதிக் கலங்கினான் என்று கொள்க. பண்டினும் நன்பல அளிப்பது, பிரிவை மேற்கொள்ளும் காதலர்க்கு இயல்பான தன்மையாதல் அறியப்படும். பிரிந்துறையும் மகளிர் கண்ணீர் வெள்ளத்தே அழுந்துபவராவர்; இதனை, 'இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கிநோம் என் நெஞ்சே' என வருவதனாலும் அறிக (குறு. 4) 'பலகை' என்பது கேடகம் ஆகும்; 'விளங்கு பொன் எறித்த நலங்கிளர் பலகையொடு எனப் புறநானூற்றுள்ளும் வரும் (15); பலகை அல்லது களத்து ஒழியாதே (புறம்.82) எனவும் வரும். போர்க்கருவிகட்குப் பீலி சூட்டி வழிபடுதல் பண்டைய மரபு; இதனைப் புறநானூற்று 95 ஆம் செய்யுளாலும் அறியலாம்.

178. கண் படை பெறேஎன்!

பாடியவர் :......
திணை : நெய்தல்.
துறை : சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீஇயது.

[(து–வி.) வரைந்து வந்து மணந்துகொள்ளுதலிலே மனமானது பற்றாதாளாய்த் தலைவியைக் களவிலே துய்த்து இன்புறுதலையே விரும்பி வந்தொழுகும் தவைவனுக்கு, வரைவொடு வருதலைத் தாம் விரும்பியதனை அறிவிக்க நினைக்கின்றாள் தோழி. 'அன்னை களவுறவைக் கண்டாளாதலின் தலைவி இனி இச்செறிக்கப்படுவாள்' என உரைப்பதன் மூலமாக, இரவுக்குறியை மறுத்துக்கூறி விரைய வரைந்து வருவதற்குத் தூண்டுகின்றாள்.]

ஆடமை ஆக்கம் ஐதுபிசைந் தன்ன
தோடமை தூவித் தடந்தாள் நாரை
நலன் உணப் பட்ட நல்கூர் பேடை
கழிபெயர் மருங்கில் சிறுமீன் உண்ணாது
கைதைஅம் படுசினைப் புலம்பொடு வதியும் 5
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று மன்னே; நாணி
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன்
புள்ளொலி மணிசெத்து ஓர்ப்ப
விளிந்தன்று மாதுஅவர்த் தெளிந்தஎன் நெஞ்சே. 10

அசையுந் தன்மைகொண்ட மூங்கிலை மெல்லிதாக உரித்துப் பிசைந்து வைத்தாற்போன்ற தொகுதியமைந்த சிறகுகளையும், நெடிய கால்களையும் உடையது நாரை; அதனாலே நலனுண்ணப் பெற்றுக் கைவிடப்பட்ட வருத்தத்தினாலே சோர்வுற்றது நாரைப்பேடை ஒன்று. கழியிடத்துத் தான் பெயரும் இடங்களிலே எதிர்ப்பட்ட சிறுமீன்களை உண்ணலையும் விடுத்தது; தாழையது அழகியதாய் வளைந்து தோன்றும் கிளையிடத்தே சென்றமர்ந்து வருத்தத்தோடும் தங்கியிருந்தது. நாரைப் பேடையும் தன் காதலனைப் பிரிந்த வருத்தத்திற்கு வாடியிருக்கும் தண்ணிய கடற்றுறைவன் நம் காதலன். எனினும், அவனுடைய தேரினைக் கண்ணாற் காணவும் இயலுவதன்றாயிற்று; யானே என் துயரத்தை வெளியே காட்டுதற்கும் நாணினவளாக, நள்ளென்னும் ஒலியையுடைய இரவின் நடுயாமப் பொழுதினும் கண் மூடுதலைப் பெறாதேனாய் வருந்தியிருப்பேன். எழுகின்ற புள்ளொலிகள் அவரது தேர்மணிகளது ஒலிபோலக் கேட்கவும், அவரை, பிரிவுத் துயராலே நம்மை வருத்தமுறச் செய்து கைவிட்டகலாரென முன்னர்த் தெளிந்து ஏற்றுக்கொண்ட என் நெஞ்சமும் அழிவெய்துவதாயிற்று, இனி எவ்வாறு உயிர்வாழ்ந்திருப்பேனோ?

கருத்து : 'பிரியாது வாழும் இல்லற வாழ்வினைத் தருதற்கான முயற்சிகளிலே அவர் ஈடுபாட்டாலன்றி யான் இனி உயிர் வாழ்ந்திரேன்' என்பதாம்.

சொற்பொருள் : ஆடு அமை – அசையுந்தன்மை கொண்ட மூங்கில். ஆக்கம் – மூங்கிலின் செறிவு; உரித்து ஆக்கப்படுவதும் ஆம். ஐது – மெல்லிதான உரி. தோடு – தொகுதி. தடந்தாள் – நெடிய கால். நலன் – பெண்மை நலன். நல்கூர்தல் – வருந்துதல். கழி – கழிக்கால்கள். கைதை – தாழை. படுகிளை – வளைந்த கிளை. கண் படை பெறல் – கண் மூடி உறங்குதல். செத்து – போன்று. ஓர்ப்ப – கேட்க.

விளக்கம் : தலைவியது கூற்றைத் தன் கூற்றாகக் கொண்டு தோழி கூறுவது இதுவாகும். அவன் தழுவிக் கூடுதலை இழந்தேமாயினும், அவன் வரும் தேரினைக் கண்டாயினும் சிறிது தெளிவு கொள்வோம்; இற்செறிப்பு நேர்ந்ததனால் அதுவும் இயலாமற்போக, எம் நெஞ்சம் அழிகின்றது என்பதாம்.

இவற்றால் தலைவியது தனிமை மிகுதியையும், அவள் தன்பாற் கொண்ட காதற்பெருக்கையும் உணரும் தலைவன் அவளைக் காத்தற்குத் துடிப்பானாய், அவளை வரைந்து மணந்துகோடற்கு விரைய முற்படுவான் என்பதாம்.

உள்ளுறை : தன் ஆணினாலே நலனுண்டு கைவிடப்பெற்ற நாரைப் பேடையானது சிறுமீன்களை உண்ணவும் கருதாதாய்த் தாழைக் கிளையிடத்தே வருத்தமுடன் சென்று இருந்தாற்போலத், தலைவனால் நலனுண்டு கழிக்கப்பட்ட தலைவியும் உணவு மறுத்தாளாய் இல்லத்தே தனித்திருந்து வருந்தி நலிந்திருப்பாளாயினாள் என்பதாம்.

179. பொய் புகலாகப் போயினள்!

பாடியவர் : .........
திணை : பாலை.
துறை : மனை மருட்சி.

[(து–வி.) தலைமகனுடன் சென்றுவிட்ட தன் மகளை நினைந்தாள் நற்றாய். தன் இல்லிலிருந்தவாறு பலவாறாகச் சொல்லிச்சொல்லி மனம் மயங்குவதாக அமைந்த செய்யுள் இது. மென்மையும் இளமையும் கொண்டாளான தன் மகள் எவ்வாறு வழி நடப்பாளோ? அவளைப் பிரிந்து எவ்வாறு தானும் ஆற்றியிருப்பதோ? என அவள் புலம்புகின்றாள்.]

இல்லெழு வயலை ஈற்றுஆ தின்றெனப்
பந்துநிலத்து எறிந்து பாவை நீக்கி
அவ்வயிறு அலைத்தஎன் செய்வினைக் குறுமகள்
மானமர்ப் பன்ன மையல் நோக்கமொடு.
யானுந் தாயும் மடுப்பத் தேனொடு 5
தீம்பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள் மன்னே; இன்றே.
மையணற் காளை பொய்புக லாக
அருஞ்சுரம் இறந்தனள் என்பதன்
முருந்தேர் வெண்பல் முகிழ்நகை திறந்தே. 10

இல்லிடத்தே முளைத்துப் படர்ந்திருந்த வயலைக்கொடியினைக் கன்றையீன்ற பசுவானது தின்றுவிட்டது; அதைக் கண்ட அவள் கலங்கினாள்; தான் விளையாடியபடியிருந்த கையிடத்துப் பந்தை நிலத்திலே எறிந்தாள்; தான் வைத்திருந்த பஞ்சாய்ப் பாவையினை ஒருபுறமாகப் போட்டாள்; தன் அழகிய வயிற்றிடத்தே கையால் அடித்துக் கொண்டு புலம்பினாள். செய்யுங் காரியங்களிலே தேர்ந்த என் இளமகளின் தன்மைதான் இத்தகையது ஆயிற்றே! யானும் செவிலித்தாயும் அவளுக்குப் பாலினை ஊட்ட முயன்றபோது, மானின் அமர்த்த நோக்கைப் போன்ற மயங்கிய பார்வையினை யுடையளாய், தேன்கலந்த இனிய பாலினையும் உண்ணாளாய். விம்மி விம்மிப் பெரிதும் அழத் தொடங்கினளே! நேற்றைக்கும் அத்தன்மையளாகவே இருந்தனளே! இன்றோ, கரிய அணலையுடைய காளையாவானது பொய்யுரைகளே தனக்குரிய பற்றுக்கோடாகக் கொண்டவளாக, கடத்தற்கு அரிதான சுரநெறியிடத்தேயும் சென்றனள் என்கின்றனரே! இளங்குருத்துப் போலும் அழகியவான தன் வெண்மையான பற்களிடத்தே இளநகையைத் தோற்றுவித்தபடி, மகிழ்ச்சியோடு செல்வதாகவும் கூறுகின்றரே! அவள்தான் எவ்வாறு நடந்து செல்வாளோ? எவ்வாறு அவனோடு கூடி இல்லறம் நடத்துவாளோ?

கருத்து : 'பிள்ளைமைக் குணம் சற்றும் மாறாத என் மகள் புதியவனாகிய இளைஞனின் பேச்சையே வாழ்விற்குப் பற்றுக்கோடாகக்கொண்டு எவ்வாறு சென்றனளோ?' என்பதாம்.

சொற்பொருள் : வயலை – வயலைக் கொடி. ஈற்று ஆ – கன்றையீன்ற பசு. பாவை – பஞ்சாய்ப் பாவை. அவ்வயிறு – அழகிய வயிறு. குறுமகள் – இளமகள். அமர்ப்பு – அமரிய பார்வை. மையல் நோக்கம் – மயங்கிய பார்வை. அணல் – மோவாயின் கீழுள்ள தாடி. காளை – காளை போல்வான், முருந்து – நாணற் குருத்து; மயிலிறகுக் குருத்துமாம்.

விளக்கம் : 'இல்லிடத்து வளர்ந்த வயலைக்கொடியைப் பசு மேய்ந்ததற்கே வயிற்றிலடித்து வருந்திப் புலம்பியவள் என்மகள். அவள் இல்லைந்துறந்து புதியோனின் பின்னர்ச் செல்லும் துணிவினை எவ்வாறு பெற்றனளோ?' எனத் தாய் ஏங்குகின்றாள். இனிய பாலினை ஊட்டவும் உண்ணாது மறுத்துப்போகும் அவள்தான், எவ்வாறு பொறுப்புடன் இல்லறம் பேணுவாளோ?' எனவும் கவலையடைகின்றாள். 'என் செய்வினைக் குறுமகள்' என்பதற்கு, 'என்னுடைய இல்லத்துச் செய்யும் பணிகளையெல்லாம் உடனிருந்து கண்டறிந்த இளமகள்' எனவும் கொள்ளலாம் அதனால் அவள், தன் இல்லறத்தையும் நன்றாகவே நடத்துவாள் என்ற ஒரு சிறு நம்பிக்கையும் தாய்க்குப் பிறக்கின்றது.

180. புன்னை விழுமம்!

பாடியவர் : ......
திணை : மருதம்,
துறை : தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.

[(து–வி.) பரத்தை மயக்கம் தீர்த்த தலைவன் மீண்டும் இல்லிறகு வருகின்றான்; மனைவியின் உறவையும் நாடுகின்றான்: அவளோ சினந்து ஒதுக்குகின்றாள். அவன் தோழியின் உதவியை நாடுகின்றான் குடும்ப நல்வாழ்வைக் கருதிய தோழி, அவர்களை மீண்டும் ஒன்றுசேர்க்கக் கருதுகின்றாள் அவள் பேச்சுத் தலைவிபால் எடுபடாமற் போயிற்று. அதன்பின், அவள் தன்னை வெறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

பழனப் பாகல் முயிறுமூசு குடம்பைக்
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவுவெள் ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப்பெறல் நசைஇநம் இல்வா ரலனே
மாயோள் நலத்தை நம்பிவிடல் ஒல்லாளே 5
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இருபெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும்இவ் இருவரது இகலே.

வயலிடத்துப் பாகற்கொடியினது இலைகளைத் தாம் வாழ்தற்குரிய கூடாகப் பின்னிக் கொண்டன முயிறுகள். அக்கூட்டுள் முட்டையிட்டும் வாழ்ந்து வந்தன. கழனியிடத்தே இரைதேடியபடி வந்த நாரையொன்று அந்தக்

கூட்டை அலகால் குத்தி அலைத்தது. அதனால் செந்நெல்லும் வெள்ளரிசியும் கலந்து சொரிந்தாற்போல, முயிறுகளும் அவற்றின் முட்டைகளும் சொரியலாயின அத்தகைய ஊருக்கு உடையவன் நம் தலைவன். அவன் பரத்தையர் பலரையும் பெற்று இன்புறுதலை விரும்பியவனாக நம் இல்லத்துள்ளே வருகின்றான் அல்லன். தலைவியை அணைதலை விரும்பியே வருகின்றான். மாமை நிறத்தை உடையளாகிய தலைவியோ அவனைப் பெற்றுப் பெறுகின்ற நலத்தினையே நம்பித தன்னுடைய ஊடற்சினத்தினை விடமாட்டாளும் ஆகின்றனள். அன்னி என்பானும் ஆற்றலால் பெரியவன்; அவனினும் சிறந்தவன் திதியன் என்பவன் இருவரும் குறுக்கைப்பறந்தலை என்னுமிடத்தே கடும் போரிட்டனர். அப் போரினாலே திதியனின் காவன் மரமாயிருந்த புன்னை மரமானது வெட்டுப்பட்டு வீழ்ந்து துன்பத்தை அடைந்தது. அவ்வாறே, இவ்விருவர்களது போராட்டமும் என்னைச் சாகடிப்பதோடுதான் இனித் தீரும் போலும்?

கருத்து : 'இவர்களுடைய உரிமைப் போராட்டம் என் உயிரையே போக்கிவிடும்' என்பதாம்.

சொற்பொருள் : பாகல் – பாகற்கொடி: கழனியின் வரப்புக்களிலே பாகலைப் பயிரிடுவது உழவர் மரபு. முயிறு – ஒருவகை எறும்பு: செவ்வெறும்பு. உரைத்தல் – கோதிச் சிதைத்தல். விழுமம் – பகையுணர்வு.

விளக்கம் : அரசர் இருவரும் தமக்குள் சினந்து போரிடப் புன்னை மரம் தான் வீழ்ந்து அழிவெய்தியதைப் போலத் தலைவனும் தலைவியும் ஊடலால் மாறுபட்டு ஒழுகத் தோழியாகிய தான் துயருற்று அழிகின்றனள் என்பதாம். இருவரும் அன்பும் உறவும் மேற்கொள்வதே தனக்கு மனநிறைவு தருவதாயிருக்கும என்பதும் ஆம். செவ்வெறும்புகளும் அவற்றின் வெளிய முட்டைகளும் சேர்ந்து கீழே கொட்டுவதைச் 'செந்நெல்லும் வெள்ளரிசியும் கலந்து கொட்டுவதைப்போல' என்பது நல்ல உவமையாகும்.

உள்ளுறை : (1) 'நாரை உரைத்தலிற் செந்நெல் விரவு வெள்ளரிசியில் முயிறு மூசு குடம்பை தாஅம்' என்று சொன்னது, அவ்வாறே பரத்தை உறவினாலே தலைவனின் குடும்பவாழ்வும். சிதைந்துபோயிற்று என்பதாம். முயிறு தலைவிக்கும், முட்டை அவர்கள் குழந்தைகட்கும் பொருத்திக் கொள்க.

(2) நாரை உரைத்தலால் குடம்பையுள் முயிறு உதிருமாறு போலத் தலைவியும் தலைவனும் சினமிகுந்து நோக்குதலால் தோழியின் உயிர் உடற்கூட்டினின்று அகலும் என்பதுமாம்.

181. கவின் பிழைத்தது!

பாடியவர் : ......
திணை : முல்லை.
துறை : வினைமுற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
[(து–வி.) வினைமுடித்த தலைவன் மீண்டும் வந்தான். அதனைக் கண்டாள் தோழி. இனித் தலைவியின் துயரம் அனைத்தும் தீருமெனக் கருதி மகிழ்ந்தாள். தனக்குள்ளாகவே இப்படி மகிழ்வோடு கூறிக்கொள்ளுகின்றாள்.]

உள்ளிறைக் குரீஇக் கார்அணற் சேவல்
பிற்புலத் துணையோடு உறைபுலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கிப் பேடை
நெறிகிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறுபல் பிள்ளையோடு குடம்பை கடிதலின் 5
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிதுநினைந்து
ஈர நெஞ்சின் தன்வயின் விளிப்பக்
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின் இன்னொலி இழந்த 10
தாரணி புரவித் தண்பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிரல் தேரே
உய்ந்தன் றாகும்இவள் ஆய்நுதற் கவினே!

உள் இறைப்பிலே குடியிருக்கும் குருவியது கரியமோவாயினையுடைய சேவலானது, வேற்றுப் புலத்தேயுள்ள மற்றொரு பேடையோடுஞ் சென்று கூடியின்புற்றது: அவ் விடத்தேயே சிலநாட்கள் தங்கியிருந்ததன் பின்னர் மீட்டும் தன் பேடையிடத்தேயும் வந்தது. அவ்வாறு வந்த சேவலது மேனியிடத்தே புணர்குறியால் உண்டாயிருந்த மாறுபாடுகளை அப்பேடையும் நோக்கியது. பலமான நெறிப்புக் கிளர்கின்ற ஈங்கைப் பூக்களைப் போலத் தோன்றும் தன் சிறு பிள்ளைகளோடும் கூடியிருந்த கூட்டினுள்ளே புகுதற்கும் விடாதாய், அச் சேவலைத் தடுத்தது. அதனால், மழையிலே நனைந்த புறத்தினை உடையதாகிய அச்சேவலானது கூட்டின் பக்கத்தேயான ஒருபுறத்தே குளிரால் நடுங்கியபடி இருந்தது. அதன் நடுக்கத்தைக் கண்டதும் பேடைக்கு அதன்பால் அருள் தோன்றியது. தான் செய்யத் தகுதியானதைக் குறித்து நெடும்பொழுது நினைந்தது. அதன்மேல் இரக்கங் கொண்ட நெஞ்சினதாகியது. தன், சேவலைத் தன்பால் வருமாறும் அழைத்தது. அதனைக் கேட்ட அக் குருவிச் சேவலும் தன் பிழையை நினைந்து வருந்திச் செயலற்றதாயிற்று. அங்ஙனமாக வந்த மயக்கத்தையுடைய மாலைபொழுதும் வந்திறுத்தது ஆகலின், இனிய ஒலியெழுப்பலை இழந்துபோன மணிகளை அணிந்த குதிரைகள், தண்ணிய பயிர்களை மிதித்துச் சிதைத்தபடியே வந்து கொண்டிருக்கப் பெருவெற்றியை உடைய தலைவரது தேரும் வந்து சேர்ந்தது. இனிமேல், இத் தலைவியது அழகிய நெற்றியிடத்தான பேரழகும் பசலை தீர்ந்ததாய்ப் பிழைத்துவிடும்!

கருத்து : 'தலைவன் வந்தானாதலின் இனி இவளுடைய அழகு கெடாமற் பிழைத்திருக்கும்' என்பதாம்.

சொற்பொருள் : கார் அணல் – கரிய மோவாய். அல்கி – தங்கி. நெறி – நெறிப்பு. பிள்ளை – குருவிக் குஞ்சு. துவலை – சிறு துளி. கூரிருக்கை – மழையால் நனைந்து நடுங்கியபடி இருக்கும் இருப்பு. ஈரநெஞ்சு – இரக்கங்கொண்ட நெஞ்சு. கையறல் – செயலறுதல். விறல் – வெற்றி; அதனையுடைய தலைவனைக் குறித்தது. ஆய் நுதல் – அழகிய நுதல்.

விளக்கம் : தலைவன் முன்பொரு காலத்தேயும் தலைவியைப் பிரிந்து சென்றிருந்தான். அப்போது காரணம் பரத்தையுறவாக இருந்தது. அவன் மீண்டும் வந்தபோது தலைவி அவனைச் சினந்து ஒதுக்கினாள். அவன் வருத்தமுற்றவனாய்ப் புறத்தே நிற்கவும், அவள் மனம் இரக்கமுற்றது. தன் அருள் மேலோங்கித் தன்னைச்செலுத்த அவனைத் தானே வலியச் சென்று அழைத்து ஏற்றுக்கொண்டாள். அந்த நிகழ்வின் எதிரொலி தோழியிடத்தே இப்போதும் தோன்றுகின்றது. ஆனால், இவ்வேளை அப்படிச் சினந்து ஒதுக்கமாட்டாள்; வெற்றி வீரனாக வரும் அவனை எதிரேற்று மகிழ்வோடு வரவேற்பாள். இவ்வாறு நினைத்தும் இன்புறுகின்றாள் தோழி.

உள்ளுறை : தன் சேவலது பரத்தமைச் செவ்வியைக் கண்டு சினமுற்று அதனை ஒதுக்கிய குருவிப்பேடையும், பின்னர் அதற்கு இரங்கியதாய் அதனை ஏற்றுக்கொண்டதைக் கூறினாள்; அவ்வாறே தலைவியும் முன்னர் நடந்துகொண்டாள்: இப்போதோ வினைமேற் சென்று வெற்றியோடு மீள்பவனாகலின், மகிழ்வுடன் விரும்பி ஏற்றுக்கொள்வாள் என்பதாம்.

182. கண்டு வருவோம்!

பாடியவர் : .........
திணை : குறிஞ்சி.
துறை : வரைவு நீட்டிப்பத் தலைமகள் ஆற்றாமையறிந்த தோழி நிறைப்புறவாகச் சொல்லியது.

[(து–வி) வரைந்து வருவதாகத் தலைவன் குறித்துச்சென்ற காலம் கடந்துகொண்டே போயிற்று. அதனால், தலைவி பெரிதும் ஆற்றாமை உடையவளாயினான் அதனைத் தோழியும் அறிந்தாள். அந்த ஆற்றாமையினைத் தீர்க்கும் வகையினை நாடினாள். தலைமகளை விரைந்து வரைந்து வருதற்குத் தூண்டுதற்கும் நினைத்தாள். ஒரு நாள், அவன் குறியிடத்திற் சிறைப்புறமாக வந்து நிற்பதை அறிந்தவள், தான் தலைவிக்குச் சொல்வாளைப் போல, அவன் உள்ளத்திலும் பதியுமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்
பாவை அன்ன நிற்புறங் காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்
கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு 5
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக்
கண்டனம் வருகம் சென்மோ தோழி!
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந்தலைப் பெருங்களிறு போலத்
தமியன் வந்தோன் பனியலை நீயே! 10

தோழி! நிலவும் வானத்தினின்றும் மறைந்துபோயிற்று. அதனால் இருளும் எங்கணும் பரலியுள்ளது. ஓவியமாக எழுதி வைத்தாற்போலத் தோன்றும் அழகிய இடத்தையுடையது நம் இல்லம்; அதன் எல்லைகண்ணே விளங்கும் சித்திரப் பாவைகள் போன்ற நம்மைப் புறத்தே போகாதபடியாகக் காத்திருக்கும் சிறந்த மேம்பாட்டையுடைய அன்னையும் உறங்கிப்போயினள். கீழாக நடத்திச் செல்வாரும் மேலாக அமர்ந்து செலுத்துவாருமாகிய இருவருமே விட்டகன்ற, வறிய தலையையுடைய பெருங்களிற்றைப் போலத் தலைவனும் தமியனாக வந்திருப்பான். பெய்கின்ற பனி வருத்துதலினாலே துன்புற்றிருக்கும் அவனுடைய நிலைதான் இரக்கத்தக்கது. அறியாதே கெட்டுப்போகிய நல்ல அணிகலன் ஒன்றனை மீளவும். கண்டெடுத்துக் கொண்டாற் போல, அவனுடைய நன்மை விளங்கும் மார்பினைச் சேரத்தழுவி எடுத்துக் கொள்வோம்; மெல்லமெல்லச் சென்று அவனைச் கண்டு வருவோம்; செல்வோமோ? நீயும் இனிக் கண்ணீர் பெருக்கி வருந்தாதே கொள்!

கருத்து : 'களவின்பத்திற்கு உண்டாகும் இடுக்கண்களை உணர்ந்து அவன் நின்னை மணத்து கொள்ளானோ?' என்பதாம்.

சொற்பொருள் : இடனுடை – இடத்தையுடைய; இடம் அகன்ற, வரைப்பு – எல்லை: வீட்டின் உட்புறம் பாவை – சித்திரப்பாவை; பேச்சொழிந்திருந்த நிலையைக் குறித்தது. அடைய – சேர: அழுந்த. முயங்கி – தழுவி. வறுந்தலை –அணியிழந்த தலை; சிறிய தலையும் ஆம். பனி – பனித் துளிகள், அலை நிலை – அலைத்த நிலை; அலைத்தல் – வருத்துதல்.

விளக்கம் : 'நிலவிலே வெளிப்போந்தால் பிறர் அறியக் கூடுமென்னும் அச்சத்தை உடையோம்' என்பாள், 'நிலவு மறைந்தன்று' என்று அது நீங்கினமை கூறினாள். 'இருளும் பட்டன்று' எனக் களவிற்கான செவ்வி தோன்றினும் மீண்டுசெல்லும் தலைவனுக்கு வழியிடை ஏதம் வந்துறுமோவெனத் தாம் அஞ்சுவதைக் குறிப்பாகக் கூறினாள். 'ஓவத் தன்ன' என்றது. இல்லத்தவர் அனைவரும் கண்ணுறங்குதலால் விளங்கிய அமைதி சூழ்ந்த நிலையினைக் குறித்துச் சொன்னதாம்.'புறங் காக்கும்' என்றது. சிறை காவலைக் கூறியது. 'சிறந்த செல்வத்து அன்னை' என்றது, குடிப் பெருமையைச் சொன்னதாம். 'கெடுத்துப்படு நன்கலம்' எனக் குறிப்பாக உரைத்தது, மெலிவினாலே தளர்ந்து சோர்ந்த வளைகளை. 'நன்மார்பு' என்றது நலந்தரும் மார்பு என்பதனால்; நலமாவது தளர்வகற்றி மீளவும் பொலிவைத் தருதல். 'மென்மெல' என்றது, உறங்குவார் விழித்துக் கொள்ளாமைப் பொருட்டு. 'கீழும் மேலும் காப்போர்' என்றது, கீழிருந்து நடத்திச் செல்வோனும், மேலிருந்து செலுத்திச் செல்வோனுமாகிய இருவரையும்; 'அவரை நீத்த' என்றமை, யானைக்கு மதம் பற்றியதனை அறிவுறுத்துவதாம். இரவுக்குறி இடையீடுபடுதற்கான பலவகைக் காரணங்களையும் கூறி, அவன்மீது தாம் கொண்டுள்ள மாறாத காதலையும் உரைத்து, அவனை மணவினைக்கு முற்படுமாறு தூண்டுகின்றாள் தோழி.

'கெட்ட நன்கலனை எடுத்துக் கொண்டாற் பெறும் மகிழ்ச்சி போலக் களவு இடையீடுபட்டதனால் இழந்த களவின்பத்தை மீளவும் பெற்றுக் கொள்ளலாம்' என்பது, அவனைப் போன்றே தாமும் அவனைப் பெரிதும் விரும்பியிருக்கும் நிலையினைக் கூறுவதாம்.

'காப்போர் நீத்த களிறு போல்வான்' என்றது. மூத்தோர்க்கு அடங்கி நடப்பவனாயின், வரைந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டிருப்பான்; அஃதன்றிக் களவையே நாடுதலால் 'காப்பார் நீத்த களிறுபோலத் தன் மனப்போக்கின்படியே எதிர்விளைவுகள் எவற்றையும் கருதிப் பாராதே நடப்பானாயினான்' என்பதாம்.

மேற்கோள் : 'நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் தோழிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டுவர் இளம்பூரண அடிகள். களவொழுக்கம் நிகழா நின்றுழித் தலைவன் வந்தான் எனக் கூறியது எனவும் உரைப்பர் (தொல்–களவியல். சூ. 112); மெய்ப்பாட்டியலுள் 'இன்புறலாவது நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதோர் மனநிகழ்ச்சி போல்வது' எனக் கூறி; இச்செய்யுளின், 'கெடுத்துப்படுநன்கலம் எடுத்துக்கொண்டாங்கு' என்பதனையும் இளம்பூரணர் காட்டுவர்.

தொல்காப்பியக் களவியலுரையுள் (சூ. 114) இச்செய்யுளைக் காட்டி, 'இது. தலைவனைக் கண்டு முயங்குகம்வம்மோ" என்றது என்பர் நச்சினார்க்கினியர்(சூ. 114 உரை).

பாடபேதம் : நிற்புறம் காக்கும்

183. மடவை மன்ற!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி கூறியது.]

[(து–வி.) வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்துபோகும் தலைவனிடத்தே, அவனைப் பிரியின் தலைவி உயிர் வாழ மாட்டாள் என்று கூறுவதன் மூலம், அவனை விரையத் திரும்பிவிடுமாறு தோழி இப்படிக் கூறுகின்றாள்.

தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி
அவணுறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து
உமணர் போகலும் இன்னா தாகும் 5

மடவை மன்ற கொண்க வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும்மில் புலம்பின் மாலையும் உடைத்தே
இனமீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த
வறுநீர் நெய்தல் போல 10
வாழாள் ஆதல் சூழா தோயே.

கொண்கனே! தம் நாட்டிடத்தே விளைந்த வெள்ளை நெல்லைக் கொணர்ந்து தருவார்கள்; தந்து, அதற்குமாறாகப் பிறநாட்டிடத்தே விளையும் உப்பின் மிகுதியைக் கொண்டுபோய்த் தம் நாட்டிடத்தே விற்பார்கள்: நெடிய நெறியிலே வண்டிகளுடனே நிலவுக்காலத்திலே மணற்பாங்கான இடங்களைக் கடந்து செல்வார்கள். இவர்களைப் பிரிந்து அவ்விடத்தே இருப்பதை வெறுத்த சுற்றத்தோடும் கூடியவர்களாக வேற்றுப்புலத்திற்கும் போவார்கள்; உப்பு வாணிகர்கள். அவர்கள் அவ்வாறு தம் சுற்றத்தினை உடன்கொண்டு போகுதலும் அவர்க்கு இன்னாமையினை உடையதாகவே விளங்கும். இடங்கள்தோறும் மிகவும் இன்னாதாய் ஊதைக்காற்றும் வந்து வருத்துகின்றது; நின்னை உடனில்லாததனை உணர்கின்ற தனிமைத் துயரமும் பெருகுகின்றது; அவற்றுடன் மாலைக் காலமும் வந்து நலிவை மிகுதிப்படுத்துகின்றது. மீனினத்தை மிகுதியாகத் தின்ற வெளிய நாரையானது மிதித்துச் சிதைத்த நீரற்ற குளத்திடத்தேயுள்ள நெய்தல் மலரைப் போல, இவளும் நின்னைப் பிரிந்து இனி ஒரு கணப்பொழுதும் வாழமாட்டாள்; இவள் இவ்வாறாதலை ஆராய்ந்து காணாத நீயும், திண்ணமாக அறியாமை உடையை காண்!

கருத்து : 'நீ பிரிந்து போவதாயின் இவள் மனம் நலிந்து செத்து ஒழிவாள்' என்பதாம்.

சொற்பொருள் : வெண்ணெல் – வெள்ளைச் சம்பா நெல். 'பிறநாடு' என்றது நெய்தல் நிலத்தை. கொள்ளை – மிகுதி. சாற்றல் – விலைபகர்தல்; விற்றல் ஒழுகை – வண்டித் தொகுதிகள், ஒன்றன்பின் மற்றொன்றாச் செல்லும் முறைமை பற்றி 'ஒழுகை' என்றனர். நிலவு மணல் – நிலவனைய வெண்மணலும் ஆம்;

விளக்கம் : நீர் வற்றியதனால் அழிவை எதிர் நோக்கி நலிந்திருக்கின்ற நெய்தல் மலரினைக் குருகு மிதித்து அழித்தலைப் போலத் தலைவியைப் பிரிவு என்னும் கொடுமைக்கு உட்படுத்தி நீயும் உயிரழியச் செய்வாய் என்கின்றாள். 'வறுநீர் நெய்தல் போல' என்றது, களவுக் காலத்தே இடையீடுபட்டு வருகின்ற பிரிவினாலே நலிவுற்று, வரைந்து மணந்து கொள்வான் என்ற நம்பிக்கையால் மட்டுமே உயிர்வாழ்ந்திருப்பவள் தலைவி; அவளை நீதான் முற்றவும் அழியச் செய்கின்றனை என்றதாம்; அவள் இல்லத்தார் தரவு அவளுக்கு நலனைத் தருவதில்லை என்பதுமாம்.

184. வேகும் உள்ளம்!

பாடியவர்: ......
திணை : பாலை.
துறை : மனைமருட்சி.

[(து–வி.) தலைமகள் தலைமகனுடன் உடன்போக்கிற் சென்றுவிடுகின்றாள்; மகளது பிரிவைப் பொறுக்கமாட்டாத தாய், மனையிலிருந்து மயங்கிப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

ஒருமகள் உடையேன் மன்னே! அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்!
'இனியே தாங்குநின் அவலம்' என்றிர்; அதுமற்று
யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! 5
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னவென்
அணியியற் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

அறிவு உடையவரான பெண்டிர்களே! யானோ பல பெண்களைப் பெற்றவளும் அல்வேன்; ஒரே ஒரு மகளை மட்டுமே உடையவளாக இருந்தேன்; அவளும் இதுகாலைப் போர்க்களத்தே மிக்குச்சென்று போரியற்றும் வலிவுடையானாகிய கூர்மையான வேலினைக் கைக்கொண்டு வந்த காளை ஒருவனோடு, நேற்றிரவுப் போதிலே பெருமலையிடத்தாகிய கடத்தற்கரிய சுரநெறி வழியே சென்றனள். அவளை யிழந்து வருந்தும் என்னிடத்தே, 'அவள் சென்றது அறத்தோடு பட்டது; ஆதலின் நீதான் இனி நின் துயரத்தைத் தாங்கிக் கொள்வாயாக' என்று சொல்லுகின்றீர்கள். அதுதான் என்னால் இயலக்கூடிய தாகுமோ? மையுண்ணும் கண்களிடத்துள்ள மணியிடத்து வாழ்கின்ற பாவையானது வெளிப்போந்து நடைகற்றாற்போல, என் அழகிய சாயலையுடைய இளமகள் விளையாடியிருந்த நீலமணிபோன்ற அழகிய நொச்சியையும் திண்ணையையும் கண்டதும், அவளையே யானும் நினைப்பனே! நினைத்தால், என் உள்ளமும் வேகின்றதே! இதற்கு யான் என் செய்வேனோ?

கருத்து : 'அவளைப் பிரிந்து எப்படி ஆற்றியிருப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : ஒரு மகள் – ஒரே குழந்தையாகத் தோன்றிய செல்வ மகள். மொய்ம்பு – வலிமை, அணி இயல். அழகிய சாயல். நொச்சி – நொச்சி வேலியின் அணித்தான இடம். தெற்றி – திண்ணை; தெற்றியாடும் இடமும் ஆம். தெற்றியாடல் – கழற்சியாடல்.

விளக்கம் : மகளது அருமையை நினைத்துத் தாய் புலம்புகின்றாள். ஒரே மகள் என்பது ஏக்க மிகுதிக்கு மேலும் காரணமாகின்றது. இல்லெனில், பிற புதல்வியரால் அத் துயரம் குறைதற்கு வாய்ப்பு உண்டாகும் எனலாம் 'மணிவாழ் பாவை நடைகற்றன்ன' என்றது, தன் மகளது எழிலையும், தான் அவளைப் பேணிய பெருஞ் செவ்வியையும் எண்ணிக் கலங்கிக் கூறியதாம்.

மேற்கோள் : அகத்திணை இயலுள், நற்றாயின் கூற்று நிகழும் இடங்களை வரையறுக்கும் சூத்திர உரையுள், 'அவ் வழியாகிய கிளவி' என்பதற்கு இச்செய்யுளை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி, இந்நற்றிணை 'தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது என்பர்' (தொல்.அகத். 36 உரை).

உவமவியலுள் 'வினையுவமத்தின் வகை என்னும் பகுதியுள் மணிவாழ் பாவை நடைகற்றன்ன என்னும் பகுதியைச் காட்டி. 'நடைகற்றன்ன' என்புழிக் கற்று என்னும் வினையெச்சம் தன் எச்சவினை இகந்தாயிலும். அஃது உவமப்பகுதியாகலான் அங்ஙனம் வருதலும் 'வகை' என்றதனானே கொள்ளப்படும் (உவம.2) என்பர் பேராசிரியர்.

185. யான் நோவேன்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி,
துறை : (1) பாங்கற்குத் தலைவன் சொல்லியது. (2) சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.

[(து–வி.) (1) சுற்றறிந்தானாகிய பாங்கன், தலைவனது களவுறவின் பொருந்தாமைக்குக் காரணமான பலவற்றையும் கூறி, அவ்வுறவைக் கைவிடுமாறும் வற்புறுத்துகின்றான். அவனுக்குத் தான் தலைவிபாற் கொண்டுள்ள காதற்பெருககினை நயமாக உரைத்து, அவளைத் தனக்குச் கூட்டுவிக்குமாறு கேட்கின்றான் தலைவன். (2) தோழிபால் குறையிரத்து நின்ற தலைவனை, அவள் அவனுக்கு உதவுவதற்கு மறுத்துப் போக்கவே, அவன் தானுற்ற காமநோயினை அவளுக்கு இப்படி உணர்த்துகின்றான்.]

ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கிக்
காமம் கைம்மிகக் கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரியுளை நல்மான்
கவிகுளம்பு பொருத கல்மிசைக் சிறுநெறி 5
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவையின்
அகலிலைக் காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல்கண் இறாஅல்
தேனுடை நெடுவரை தெய்வம் எழுதிய 10
வினைமாண் பாவை அன்னோள்
கொலைசூழ்ந் தனளால் நோகோ யானே.

பாடிச் செல்லும் மரபையுடையவரான பாணர்கள் விரிந்த புறமயிரை உடையவும் நல்ல இனத்தைச் சார்ந்தவுமான குதிரைகளைத் தமக்குரிய பரிசிலாகப் பெற்றுச் செல்வார்கள். அக்குதிரைகளின் கவிந்த குளம்புகள் பொருதுதலானே தடம்பட்டு விளங்குவது மலைமேலிடத்ததான சிறு நெறியாகும். அந் நெறிக்கண்ணே, இரவன்மாக்கள் உள்ளத்தே மெலிவற்றாராய் ஏறிச் செல்வர். கொல்லிக்கு இறைவனை நாடியே அவர்கள் அங்ஙனம் சென்றுகொண்டிருப்பார்கள். அக் கொல்லி மலையானது சான்றோரது வாக்குகளிலே உரைக்கப்பட்ட புகழுடையதாய், உயரமும் பெற்றிருப்பதாய் விளங்குவது. அக் கொல்லிமலையின் மேற்றிசைப் பக்கத்தே அகன்ற இலைகளையுடைய காந்தளது அசைந்தாடும் பூக்குலைகளிலே பாய்ந்துவந்த வண்டினங்கள் இழைந்திருக்கும் பலவாய கண்களைக் கொண்ட தேனடைகள் பலவாக நிறைந்து விளங்கும். தேனையுடயை நெடிதான அம் மலைப் புறத்தே தெய்வத்தாற் செய்துவைக்கப் பெற்றதான செய்வினைத் திறனால் மாண்புடைத்தாக விளங்கும் கொல்லிப்பாவையும் அமைந்திருக்கும். அப்பாவையைப் போன்றாள் என் தலைவியாவாள். என்னைக் கொல்விக்கும் சூழ்ச்சியினை அவளும் அன்று செய்தனள்! அதனாலே, அடங்காப் பெருநோயோடு பலபலவாக எண்ணியெண்ணிக் கழிகின்ற துன்பமிகுதியை யானும் உடையவனாயினேன்; என் நிலை கலங்கியவனுமாயினேன். காமமானது எல்லைகடந்ததாய்ப் பெருகிக்கொண்டு போதலினாலே, என் செயலாவன அனைத்தையும் கைவிட்டேனாய் நலிகின்றேனும் ஆயினேன். என் அந் நிலையைக் கண்டதன் அளவிலேயும், நீதான் அவளை எனக்குத் தருதற்கான முயற்சிகளைச் செய்யாது ஒழிவாயானால், யான்தான் யாது செய்வேன்? ஊழால் வந்துற்ற அழிபாடெனக் கொண்டேனாய், அதனையே நோவா நிற்பேன். வேறு யாது தான் செய்வேன்?

கருத்து : 'தலைவியை அடையப் பெறினன்றித் தனக்கொரு உயிர் வாழ்வென்பதுதானும் இல்லை' என்பதாம்.

சொற்பொருள் : ஆனா நோய். அமையாதாய்ப் பெருகி நிற்கும் நோய்; அது காமம். அழிபடர் – அழிவைத் தருகின்ற படர்; நொடிக்குநொடி படரும் துயரினை விளைத்தலாற் காமமும் 'படர்' எனப்பட்டது. கைம்மிகல் – தடைசெய்யும் ஆற்றலை மீறிப் பெருகுதல்; கைகடந்து போதல். கையறுதல் – செயலறுதல். நல்குதல் – அருளுதல்; அது தலைவியைத் தலைவனோடு கூட்டுவித்தல். மெலியாது – உள்ளம் தளராது; பொறையன்பாற் பெறப்போகும் பெரும்பரிசிலின் நினைவு நடையின் தளர்வைப் பொருளாகக் கொள்ளாமற்படிக்குச் செய்யும் என்க. உரைசால் – புகழுரையாலே மேம்பட்ட. கொல்லி – கொல்லி மலை; சேரர்க்கு உரியது. பொறையன் – சேரன்: இரும்பொறை மரபினனாகிய சேரமானும் ஆம். கொல்லிக்கு இறைவனை 'வல்விள் ஒரி' எனவும் சொல்வர். பறவை – அறுகாற் பறவை; வண்டு. பாவை – கொல்லிப் பாவை. கொலை சூழ்தல் –கொல்லுவதற்குச் சதி புரிதல்.

விளக்கம் : 'கொல்லிப் பாவை' என்பது, தேவத்தச்சனால் சிறப்பாக நிறுமிக்கப் பெற்றது; அம்மலையிடத்து வாழ்வோரை வருத்துதற்கு முயலும் அவுணர் முதலியோரைத் தன் நகையாலும் அழகாலும் மயக்கிக் கொல்லக் கூடியது அது என்பர். நகைத்துக் கொல்லும் பாவை அதுவென்பதைப் பிற்காலத்துச் சான்றோரும், 'திரிபுரத்தைச் செற்றவனும் கொல்லிச் செழும்பாவையும் நகைக்க' என்று கூறுவர் (சித்திர மடல்). இதனாற் குறுநகை தோற்றுவித்துத் தலைவியும் தலைவனைக் கொலை செய்யச் சூழ்ந்தனள் என்று தலைவன் உரைக்கின்றதாகக் கொள்க.

இறைச்சிகள் : (1) 'பாணரின் பரிசிற்பொருளான குதிரைகளின் குளம்படித் தடங்களாற் செப்பமான சிறுநெறியில், இரவலர் மெலியாது ஏறிச் செல்வதைப் போல, நின்னால் இசைவித்துக் கூட்டப் பெறும் தலைவியுடன் யானும் உள்ளம் மெலியாது நெடிது கூடி இன்புறுவேன்' என்பதாம்.

(2) 'காந்தளின் தேனை ஈட்டிக் கொண்டுபோய்க் கொல்லிப் பாவையிருக்கும் வரையிடத்தே இறாலிழைத்திருக்கும் வண்டுகளைப்போல, அழகையெல்லாம் ஒருங்கே கூட்டிச்சமைத்த அவளது நலமும் எனக்கு எட்டாதான ஓர் இடத்தே இருக்கின்றது' என்பதாம்; தலைவியின் அழகுச் செவ்வியும் குடியுயர்வும் இதனால் நன்கு விளங்கும்.

மேற்கோள் : களவியலுள், 'பரிவுற்று மெலியினும். தலைவனுக்கு கூற்று நிகழுதற்கு' இச்செய்யுளைக் காட்டி. 'இது பகற்குறியிற் பரிவுற்றது' என்பர் நச்சினார்க்கினியர். (தொல். களவு 12 ஆம் சூத்திர உரை).

186. அவர் சென்ற வழி!

பாடியவர் : ........
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.

[(து–வி.) தலைவனின் பிரிவினாலே தலைவி நலிவாளெனத் தோழி நினைத்துத் தானும் சோர்வடைகின்றனள். அவளுக்குத் தலைவன் மீண்டும் வருவதற்கான காலத்தினது எல்லைவரைக்கும் தான் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருப்பல் என்பதுபடத் தலைவி இவ்வாறு தேறுதல் கூறுகின்றனள்.]

கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கி
இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்கொண்டு
பெருங்கை யானை பிடியெதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடை
வேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5
பாண்யாழ் கடைய வாங்கிப் பாங்கர்
நெடுநிலை யாஅம் ஏறும் தொழில்
பிறர்க்கென முயலும் பேரருள் செஞ்சமொடு
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற ஆறே! 10

தோழி! கற்பாறையிடத்தே அமைந்துள்ள ஊற்றிலே சேர்ந்திருந்த நீரினைப், பெரிய சருச்சரையையுடைய நெடிதான தன் துதிக்கையினை நீட்டிக், களிறானது அவ்விடத்து நீர் முற்றவும் இல்லாது ஒழியுமாறு மொண்டு கொண்டது. பெருத்த துதிக்கையினையுடைய அக் களிறானது, அங்ஙனம் மொண்டுகொண்ட பின்னர்த் தான் அதனைப் பருகாதாய்த்தன் பிடிக்குத் தருதற்குக் கருதியபடி, அதன் எதிராக ஓடிக்கொண்டிருப்பதுமாயிற்று வெம்மைகொண்ட காட்டிடத்துள்ள வறன்மிகுந்த கற்சுரத்தினது தன்மை அத்தகையதாகும். அத்தகைய காட்டு வழியினிலே,

தன்னுடைய குடும்பத்தினது நல்லாழ்வுக்கு வேண்டுமளவுக்குத் தன்னிடத்தே பொருள் வளமை இருந்தபோதினும், தன்னை நாடிவரும் இரவலரான பிறருக்கு உதவுதற்குப் பொருள் வேண்டுமே எனக் கருதிச்சென்று. அப்பொருளைத் தேடிவருவதற்கான முயற்சியைச் செய்யத் துணிந்த பேரருள் கொண்ட நெஞ்சினனாகத் தலைவனும் ஆயினன். அத்தகைய நெஞ்சத்தோடே விருப்பந்தருகின்ற பொருளாசையும் அவனுள்ளத்தைப் பிணித்தலினாலே, நாம் விரும்புங் காதன்மையினை உடையவனாகிய தலைவனும் நம்மைப் பிரிந்தானாகிப் பொருள்மேற் சென்றனன்.

வேனிலிடையே அகப்பட்டுக் கொண்டு நிறமாறிய ஓந்திப் போத்தானது. அவ்வழியே செல்லும் பாணர்கள் தம் யாழினை மீட்டி இசைப்பக்கேட்டுத் தன் துயரை மறந்ததாய் அருகிலிருக்கும் நெடிய நிலையைக் கொண்ட யாமரத்தின் மேலாக எறுந் தொழிலைச் செய்தபடி இருக்கும். அத்தகைய காட்டினூடாகச் செல்லும் அவனை நினைந்தால், யானும் எவ்வாறு வருந்தாதிருப்பேன்?

கருத்து : 'அவனுக்கு வழியிடை ஏதும் ஏதம் நேரக் கூடுமோ என நினைந்தே பெரிதும் கவலையுற்று வருந்துவேன்' என்பதாம்.

சொற்பொருள் : கல் ஊற்று – கற்பாறையினிடையே தோண்டப்பெற்ற ஊற்று. கயன் – ஊற்றுநிலை. பிணர் – சருச்சரை; செதிள் செதிளாகத் தோன்றும் அடுக்குதலையுடைய அமைப்பு. நொண்டு – மொண்டு. கடைய – செலுத்த. காமர் – விருப்பம். வெங்காதலர் – விரும்பும் காதலர்.

இறைச்சிப் பொருள் : மிகுகின்ற நீர் வேட்கையினாலே உண்டாகும் தன் வருத்தத்தைப் பாராட்டாது, தன் பிடியது வருத்தத்தை முற்படப் போக்கக் கருதினதாய், நீரோடு எதிராகச் செல்லும் களிற்றைப்போன்று, தலைவனும் பொருள் கிடைத்ததும் தலைவியது துயரை முதற்கண் தீர்க்கக் கருதினனாய் விரைய மீள்வன்: அதனால், அவன் வருங்காலத்தளவும் தானும் ஆற்றியிருப்பல் என்பதாம்.

விளக்கம் : 'கல்லூற்று' என்றது, சுனைகளும் நீரற்றவாய் வறண்டதனைக் குறிப்பால் உணர்த்தும்; 'தம் வழிநடை வருத்தத்தை மாற்றக் கருதினராகப் பாணர் யாழிசையை எழுப்பியபடியே செல்ல, அவ் இசையொலி ஓந்தி முதுபோத்தினது துயரைத் தணித்து, அதனை யாமரத்து மேலாக ஏறச் செய்யும்' என்றது. அவ்வாறே தலைவன் ஈட்டிவரும் பெரும் பொருளும் ஏதிலரான இரவலர்கட்குப் பயன்படும் என்பதாம். பொருளார்வம் பிணிபோல்வது எனினும், அது நற்பயனைத் தருதலினாலே 'காமர் பொருட் பிணியாக' உரைக்கப்படுவதாயிற்று.

187. ஊரொடு பொழில்!

பாடியவர் : ஔவையார்.
திணை : நெய்தல்.
துறை : தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கித் தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.

[(து–வி.) தலைமகளைப் பகற்குறி வந்து கூடிய தலைமகன் தன்னூர்க்கு மீண்டுபோக, அப்பிரிவினாலே தலைவியின் மனத்துயரம் பெரிதாகின்றது. அவள் நெஞ்சழிந்தவளாகத் தனக்குள் இவ்வாறு கூறிப் புலம்புகின்றாள்.]

நெய்தல் கூம்ப நிழல்குணக்கு ஒழுகக்
கல்சேர் மண்டிலம் சிவந்துநிலம் தணியப்
பல்பூங் கானலும் அல்கின் றன்றே
இனமணி ஒலிப்பப் பொழுதுபடப் பூட்டி
மெய்ம்மலி காமத்து யாம்தொழுது ஒழியத் 5
தேரும் செல்புறம் மறையும் ஊரொடு
யாங்கா குவதுகொல் தானே தேம்பட
ஊதுவண்டு இமிரும் கோதை மார்பின்
மின்னிவர் கொடும்பூண் கொண்கனொடு
இன்னகை மேவிநாம் ஆடிய பொழிலே? 10

நெஞ்சமே! நெய்தலின் மலர்களும் குவியத் தொடங்கின; மரத்து நிழல்களும் கீழ்த்திசைக் கண்ணே விழுவனவாயின; மேற்குமலையைச் சார்கின்ற கதிர்மண்டிலமும் சிவப்புற்றதாய் நிலத்தின் வெப்பமும் தணியத் தொடங்கிற்று; பலவாய பூக்களையுடைய கானற்சோலையும் இருள்படர்கின்ற தன்மையதாய்த் தன் பொலிவு குன்றியுள்ளது; மெய்யிடத்தே மிகுதிப்பட்ட காமத்தையுடைய யாமும் இவ்விடத்தேயே தொழுதேமாய்க் கழிகின்றனம்; பொழுதுபடலும், மணயினம் ஒலிசெய்யக் குதிரைகள் பூட்டப்பெற்ற அவரது தேரும் தான் செல்லலுறும் பக்கத்தானும் நம்முடைய பார்வைக்கு, மறைவதாகின்றது. ஆதலால், இவ்வூருடனே, தேனைப் பொருந்த ஊதுகின்ற வண்டுகள் ஆரவாரித்தபடியிருக்கும் மாலையணிந்த மார்பினையுடையவனும், ஒளிசெய்யும் வளைந்த கலன்களை யுடையவனுமான தலைவனோடு இனிதாக நகைபொருந்த நாம் விளையாடியிருந்த பொழிலானதும் இனி நமக்கு எவ்வண்ணமாய துயரத்தைத் தருவதாகுமோ?

கருத்து : 'மாலைக்காலம் வந்துற்றதானால் எவ்வாறு துயரம் மிகுமோ?' என்பதாம்.

சொற்பொருள் : 'கல்' என்றது. மேற்றிசைக் குன்றத்தை. மண்டிலம் – ஆதித்த மண்டிலம், நிலம் தணிய – நிலத்தது வெப்பம் தணிய. இமிர்தல் –ஆரவாரித்தல், மின் – ஒளி, கொடும்பூண் – வளைந்த பூண்கள் . நகைமேவ – நகை பொருந்த; நகை – உவகை.

விளக்கம் : காதலன் வருகின்ற ஞான்று அவனை எதிர்தொழுது வரவேற்றலும், மீள்கின்றபொழுது புறந்தொழுது போற்றலும் தலைவியரின் இயல்பாகும். 'மெய்ம்மலி காமம்' என்றது, அவனைப் பிரிதலுற்ற அஞ்ஞான்றே பற்றிப் படர்ந்த பசலை மிகுதியை நோக்கி உரைத்ததாம். 'பல்பூங்கானல் அல்கின்று' என்றது, அவ்வாறே தன் எழிலும் அல்கிய தன்மையைச் சுட்டிக் கூறியதாம். இனி, 'ஊரும் பொழிலும் இன்னாதாகும்' என்பாள், 'ஊரொடு பொழிலே யாங்காவதுகொல்?' என்கின்றனள். 'மார்பின் மின்னிவர் கொடும்பூண்' எனலும் ஆம். 'மார்பிடத்தே மின்னொளி பரப்பும் வளைவான பூண்கள்' அவை என்க. தலைவனோடு உறவு கொள்ளுதற்கு முற்பட இனியதாயிருந்த ஊரும் பொழிலும் அவ்வுறவுக்குப் பின்னர் அவனைச் சிறுபொழுது பிரியலுறும் பொழுதிலே பெருந்துன்பத்தை தருபவாகின்றன. இதனால், அவனைப் பிரியாதே எப்போதும் கூடியிருக்கும் மணந்துகூடி வாழும் இல்லற வாழ்விலே தலைவியின் உள்ளம் முற்றவும் செல்லுகின்றதாதலும் நன்கு அறியப்படும். இதனை உணர்வானாகிய தலைவன், தன் முயற்சிகளை அவளை மணந்துகோடலை நோக்கிச் செலுத்தத் தொடங்குவான் என்பதாம்.

மேற்கோள் : 'பகற்குறிக்கண்... தலைவன் நீங்கியவழிக் கூறியது' என, இச் செய்யுளை 'நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் தலைவிக்குக் கூற்று நிகழுதற்கு' இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர்.

பாடபேதங்கள் : மண்டிலம் சிவந்து சினந்தணிய; மின்னிவர் பெரும்பூண்.

188. நன்மையும் தீமையும்!

பாடியவர் : ........
திணை : குறிஞ்சி.
துறை : பகற்குறி மறுத்து வரைவு கடாயது.

[(து–வி.) பகற் பொழுதிற் கூடிச் செல்லும் ஒழுக்கத்தினனாகத் தலைவன் விளங்குகின்றான். அவனிடத்தே, தலைவியை மணந்து பிரியாதுறையும் இல்வாழ்வினைப் பற்றிய நினைவை எழச் செய்யக் கருதினளாய தோழி, இவ்வாறு சொல்லுகின்றாள்.]

படுநீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடுமடல் ஈன்ற கூர்வாய்க் குவிமுகை
ஒள்ளிழை மகளிர் இலங்குவளைத் தொடூஉம்
மெல்விரல் மோசை போலக் காந்தள்
வள்ளிதழ் தோயும் வான்தோய் வெற்ப 5
'நன்றி விளைவும் தீதோடு வரும்'என
அன்றுநற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத்
தேம்முதிர் சிலம்பில் தடைஇய
வேய்மருள் பணைத்தோள் அழியலள் மன்னே.

மலையின் நீர்வளமுடைய பக்கத்தே வாழைமரங்கள் முளைத்து வளர்ந்திருக்கும்; வாழையின் வளைவான மடலிடையே நின்றும் கூரிய முனையையுடைய குவிந்த முகையானது தோன்றும். ஒள்ளிய கலன்களை அணிபவர் பெண்கள்; அவர்களின் கைவளைகளைத் தொட்டபடியிருக்கும் மெல்விரலினிடத்தே விரலணிகள் அணிசெய்தபடி விளங்கும்; அவ் விரலணியைப் போலத் தோற்றுமாறு வாழையின் முகையானது வளவிய காந்தளின் மலரிதழிடத்தே சென்று தோய்ந்தபடியிருக்கும். வானைச்சென்று தடவுவது போல விளங்கும் அத்தகைய மலைக்கு உரியவனாகிய தலைவனே! ஒருவருக்குச் செய்யும் உபகாரத்தினாலே வந்தடையும் பயனானது பிரிந்து வருந்துவதனாலே நலனழியும். இங்ஙனமாகிய தீமையோடு வந்து முடியும் என்பதனை நின்னை முதற்புணர்ச்சியிற் கூடிய அன்றைப்பொழுதே நன்றாக இவள் அறிந்தனளாதல் வேண்டும். அங்ஙனம் அறிந்திருந்தனளாயின், குன்றிடத்துத் தேன் முதிர்ந்த பக்கமலையிடத்தே முளைத்தெழுந்துள்ள மூங்கிலையொத்த பருத்த இவள் தோள்களின் அழகெல்லாம் அழியப் பெற்றவளாக, இந்நாளிலே இவளும் இங்ஙனம் ஆகாள்காண்!

கருத்து : இவளை விரைய மணந்து கொண்டனையாய் இல்லறம் நிகழ்த்துதற்கு ஆவனவற்றை மேற்கொள்க' என்பதாம்.

சொற்பொருள் : படுநீர் – ஆழமான நீர்; சிலம்பு – பக்கமலை. கலித்த – முளைத்தெழுந்த; தோன்றிய. மோசை – ஒருவகை விரலணி. தேம் – தேன்; தேன் முதிர்தலாவது. தேனடைகளுட் பலநாளிருந்து முதிர்ச்சி பெறுதல். தடை இய – முளைத்து வளர்ந்த. வேய் – மூங்கில்.

விளக்கம் : "சான்றோனைப் போல நின்னை என்றும் பிரியேன் எனக் கூறித் தெளிவித்துக் கூடியின்புற்ற நீ, இது காலை இவளை மணத்தலைக் கருதாயாய், இவள் நின்னைப் பிரிந்து வருந்தும் வருத்தத்தாலே அழிதலையும் நினையாயாய், இன்ப நாட்டமே மிகுதியாகப் பெற்றுள்ள பொய்ம்மையாளன் ஆயினை போலும்?" எனத் தலைவனைப் பழித்து உரைக்கின்றாள் தோழி. "நினக்குத் தன் நலனை அளித்து இன்புறுத்திய இவளுக்கு, அதனால் நலனழிவு வந்துற்றதாகலின் 'நன்றி விளைவும் தீதொடு வரும்போலும்?' என்று கேட்டாளாய் மனம் வருந்துகின்றாள். படுநீர்—பள்ளமான நீர் நிலைகளும் ஆம்; அப்போது பள்ளமான நீர்நிலைகளையுடைய சிலம்பு எனக் கொள்ளுக. வாழைப்பூக் காந்தளைத் தொட்ட படியிருத்தல் தோள்வளையைத் தொடும் மாதரது கைகளிடத்தே விளங்கும் மோசைபோலத் தோற்றும் என்றதனாலே, இவ் விரலணி வாழைப்பூவின் வடிவம் பொருந்திய மேற்புறத்தை உடையதென்பதும் அறியப்படும். மோசை போலத் தோன்றுவதன்றி அதுவே மோசையாகாமை போல, நீயும் அன்புடையானாகத் தோன்றுகின்றனை யன்றி, அன்பினை உடையாயல்லை என்றனளுமாம். 'அழியலள்' என்றது, அன்றே நின் இத் தன்மையினை ஆய்ந்தறித்திருப்பின், நின்னைத் தழுவியிராள். இதுகாலைப் பிரிவால் வருத்தமுற்று அழிதலும் இவட்கு நேர்ந்திராது என்பதாம். இவ்வாறு கூறிப் பகற்குறி மறுத்தனள் என்க. இதனால் வரைவு வேட்டலும் ஆயிற்று.

189. வங்கம் போவாரோ?

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

[(து–வி.) தன்னைப் பிரிந்து தலைமகன் வேற்றூர்க்குப் போயினதனாலே வருந்தி மெலிந்தாள் ஒரு தலைமகள்; அவட்கு 'சொன்ன சொற்பிழையானாய்த் தலைமகன் விரைய மீள்வன்' என வலியுறுத்திக் கூறி, அவளது நலிவைப் போக்குதற்கு முற்படுகின்றாள் தோழி.]

தம்மலது இல்லா நம்நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர்
தெறலருங் கடவுள் முன்னர்ச் சீறியாழ்
நரம்பிசைத் தன்ன இன்குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர் கொல்லோ? 5
எவ்வினை செய்வர்கொல் தாமே? வெவ்வினைக்
கொலைவல் வேட்டுவன் வலைபரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய்நூல்
சிலம்பி யம்சினை வெரூஉம்
அலங்கல் உலவையம் காடிறந் தோரை? 10

கொடிய தொழிலான கொலைத்தொழிலினைச் செய்தலிலே வல்லவனாகிய ஒரு வேட்டுவன்; அவ் வேட்டுவனது வலையிடத்தே அகப்பட்டு அதனை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றது காட்டுப்புறாவின் சேவல் ஒன்று. தன்

வாயிடத்து உண்டாகும் நூலினாலே சிலம்பி கட்டியுள்ள கோட்டையைக் கண்டதும். அப் புறவுச்சேவல் அதனையும் வலைபோலுமெனக் கருதினதாய் வெருவிற்று. சூறைக்காற்றுச் சுழன்று அடிக்கின்றதும். அத்தன்மையுடையதுமான சுரத்தினிடத்தே சென்றுள்ளவர் நம் தலைவர். அவர் தாம் தம்மை உடனில்லாதே வாழ்தலில்லாத நம்மை விரும்பியவராக அருளிச் செய்தலைக் கருதி, இன்னும் நம்பால் வந்திலர். அங்ஙனம் வாராராயினும் "அவர்தாம் குறித்துச் சென்றுள்ள இடத்திற்கு அல்லாதே வேறு பிறிதான எவ்விடத்துக்கும் சென்றிருப்பார் போலும்? பெற்று உண்ணுஞ்சென்னி யென்னும் உண்கலத்தை உடையோரான பாணர்கள் சினந்தணிதற்கரிய தெய்வத்தின் முன்னர்ச் சென்றாராய், அதன் சினந்தணியுமாறு சிறிய யாழினது நரம்புகளைத் தடவி இசை எழுப்புவர்; அத்தகைய இனிய யாழோசையைப் போலும் குரலினைக் கொண்டவான குருகினங்களை உடைய கங்கையாற்றின் கண்ணே வங்கத்தேறிச் செல்வார் போலும்? அல்லாதே வேறு எத் தொழிலைச் செய்வார் கொல்லோ?" என நினைத்து ஏங்காதே. எதனையும் அவர் செய்யார். நின்பால் விரைய மீள்வர். அதுகாறும் நின் துயரத்தை நீயும் ஆற்றியிருப்பாயாக என்பதாம்.

கருத்து : பிரிந்து போயின காதலர் தம் சொற்பிழையாராய் விரைய நின்பால் மீள்வர்; ஆதலின் நீ தான் நின் பெருகும் பிரிவுத்துயரை ஆற்றியிருப்பாயாக என்பதாம்.

சொற்பொருள் : சென்னியர் – சென்னியை உடையோர்; சென்னி – மண்டையோடு போல்வதொரு பிச்சைப் பாத்திரம். இவர் சீறியாழ் இசைத்தனர் என்பதனாற் 'பாணர்' எனக் கொண்டோம். சிலம்பி – சிலந்திப் பூச்சி. வங்கம் – படகு. கங்கை வங்கம் – கங்கை பாயும் வங்க நாடும் ஆம்.

விளக்கம் : 'காதலனும் காதலியுமாகிய தலைவன் தலைவியர் இருவரும் தம்முள்ளே ஒன்று கலந்த உயிரன்பினர்' என்பாள், 'தம்மலது இல்லா நம்', என்றனள். அவனும் தம்மை விரும்புபவன் எனினும், அவன் பிரிவுக்குத் துணிந்தனன் ஆதலின், அவனினும் காட்டில் தம்முடைய காதலன்பே பெரிதென்பாளாக இவ்வாறு கூறினளும் ஆம். 'தெறலருங் கடவுள்' என்றுரைத்தது நெற்றிக் கண்ணோனாகிய சிவபிரானை. சினந்தணியுமாறு இன்னிசை எழுப்புவர் என்றது, இசையின் இனிமைக்குச் சினத்தை மாற்றும் ஆற்றலுண்டு எனக் காட்டுவதாகும்; இராவணன் இசைத்ததை நினைக்க. சீறியாழ் – சிறிய யாழ்; இவற்றை உடையோரைச் 'சிறுபாணர்' என்பர்; பேரியாழை உடையோர் 'பெரும்பாணர்' ஆவர். 'கங்கை வங்கம் போகுவர் கொல்லோ' என்னும் சொற்கள், அவன் அவ்வெல்லையளவுஞ் செல்லான்; அதற்கிடைப்பட்ட நாடுகளிலேயே தன் செய்தொழிலை முடித்துக் கொண்டானாக விரையத் தலைவிபால் மீள்வான்? என்பதை உணர்த்துதற்காம். இதனாற் பிரிந்த தலைவன் வடநாட்டிற்குச் சென்றமை பெறப்படும். பெரிமயத்திற்கு முன்னர்க் கங்கைக் குருகுகள் ஒலி செய்தலைச் சீறியாழ்ப்பாணர் தெறலரும் கடவுள் முன்னர் அவரைப் போற்றி யாழிசைத்த தன்மைக்கு உவமித்தனர்.

இறைச்சி : வேட்டுவனது வலையிலே அகப்பட்டுத் தப்பிச் சென்ற புறவுச் சேவலானது சிலம்பியின் வலை தனக்கொரு கேடுஞ் செய்யாதாகவும், அதனையுங் கண்டு தன்னை முன்னர் அகப்படுத்துக்கொண்ட வலையினது நினைவினாலே அஞ்சினாற் போல, முன்னர்க் களவுக்காலச் சிறுபிரிவுக்கே பெரிதும் நலனழிந்த தலைவியை அறிந்தவனான தலைவன், இதுகாலை மேற்கொண்ட தன் பிரிவை நீட்டியானாய் விரையத் திரும்புவன் என்பதாம்.

உள்ளுறை : தெறலருங் கடவுளின் சினமும் இன்னிசையால் தணியுமாறு போல, நின்னைப் பற்றி வருத்தும் துயரமும் இன்னிசையால் தணியும்; ஆதலின் யாம் யாழிசைப்போம்; பிரிவுத் துயரைச் சற்றே மறப்போம் வருகவென அழைத்ததுமாம்.

190. நகைக்கு மகிழ்ந்தோய்!

பாடியவர் :....
திணை : குறிஞ்சி.
துறை : (1) பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; (2) அல்ல குறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லிய தூஉம் ஆம். (3) இடைச்சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.

[(து–வி.) (1) தோழிபாற் சென்று தலைவியைத் தனக்கு இசைவித்துக் கூட்டுவிக்குமாறு குறையிரந்து நின்று, அவளால் ஒதுக்கப்பட்ட ஒரு தலைவன், இவ்வாறு தன் நெஞ்சிற்குச் சொல்லுகின்றனன்; (2) இரவுக்குறியிடைத் தலைவியை நாடிச்சென்று காணானாக மீள்பவன் ஒருவன் தன் நெஞ்சிற்கு இவ்வாறாக உரைக்கின்றான்; (3) வினைவயிற் சென்ற ஒரு தலைவன் இடைவழியில் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி இவ்வாறு கூறுகின்றனன். இம் மூன்று துறைகட்கும் பொருந்துமாறு பொருள் அமைந்த செய்யுள் இது.]

நோஇனி வாழிய நெஞ்சே! மேவார்
ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேங்கமழ் விரிதார் இயல்தேர் அழிசி
வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும் 5
அரியலம் கழனி ஆர்க்காடு அன்ன.
காமர் பணைத்தோள் நலம்வீறு எய்திய
வலைமான் மழைக்கண் குறுமகள்
சில்மொழித் துவர்வாய் நகைக்குமகிழ்ந் தோயே!

நெஞ்சமே! தன்னுடன் பொருந்தாத பகைவரது கடத்தற்கரிய அரணங்களை எவ்லாம் வென்று கைக் கொண்டவன்; மாரிபோன்ற கை வண்மையினை உடையவன்; கள்ளுண்டு மகிழும் இயல்பினன்; திதலை படர்ந்த வேற்படையினை உடையோனான 'சேந்தன்' என்பவன். அவன் தந்தை 'அழிசி' என்பவன். தேன்மணம் கமழும் இதழ் விரிந்த புதுப் பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலையையும், அழகிய தேரினையும் உடையவன் அவ் அழிசி, அவனுக்கு உரியது 'ஆர்க்காடு' என்னும் பேரூர். வண்டு மொய்க்கும் நெய்தலின் மலர்கள் நெற்பயிரிடையே மலர்ந்திருக்கும் நீர்வளத்தைக் கொண்டதும் அம் மலர்களினின்றும் நறுந்தேன் கழனிகளிற் பெருகிக் கொண்டிருப்பதுமான சிறப்பையுடையது அவ் ஆர்க்காடு ஆகும். அதன் பெருமையைப் போல, விருப்பம் வருகின்ற பணைத்த தோள்களோடு பிற நலன்களும் வீறெய்தி விளங்கும் பெருமையள் தலைவியாவாள்; வலைப்பட்ட மானினது குளிர்ச்சி கொண்ட கண்களைப் போன்ற கண்களையும் அவள் உடையவள். இளமகளாகிய அவளது சில சொற்களே பேசும் செவ்வாயிடத்தே முகிழ்த்த குறு நகையினைக் கண்டதனாலே மகிழ்ச்சி கொண்டோய்! இனி நீதான் அவளையே நினைந்து துன்புற்று நலிவாயாக. அத் துன்பத்துடன் தானே கூடினையாக நெடிது வாழ்தலையும் செய்வாயாக!

கருத்து : "அவளை நின்னால் மறக்கவியலாது; ஆதலின் வருந்தி நலிவாயாக, நெஞ்சமே" என்பதாம்.

சொற்பொருள் : மேவார் – பகைவர். ஆர் அரண் – பிறரால் வென்று கைக்கொள்ளுதற்கரிய காவன் மிகுந்த கோட்டை. மாரி – மழை; அதன் வன்மை கொடைமிகுதிக்கு உவமிக்கப் பெற்றது; அது பிரதியுபகாரத்தை எதிர்பாராதே வழங்கும் தன்மை. எஃகு – வேல்; திதலை எஃகென்றது பகைவரது குருதிக்கறையோடு விளங்கிய எஃகம் ஆதலினால், சேந்தன் தந்தை – சேந்தனின் தந்தை. அரியல் – மது; இங்கே தேன். நலம் வீறெய்தல் – நலம் மேம்பட்டு விளங்குதல், துவர் வாய் – சிவந்த வாய்.

விளக்கம் : அவளைக் கண்டு கொண்டதற்கு அந் நாளிலே மகிழ்ந்த நெஞ்சமாதலின், அவளைப் பிரிந்ததற்கு வருந்துதலும் அதற்கே உரித்தென்பான், 'நோ, இனி' என்றனன். திதலை – தேமற புள்ளிகள்: இது குருதிக்கறை படிந்த வேலின் தோற்றத்தன்மைக்கு ஒப்பிடப் பெற்றது.

வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலர்ந்து கழனியிடத்தே தேனைச் சொரிதலைப் போன்று, தோழியும் தலைவிக்கு இனிமை சேர்ப்பாளாகித், தன்னைத் தலைவியுடன் கூட்டுவித்தற்கு முயலல் வேண்டும் என்று முதல் துறைக்கேற்பப் பொருள் கொள்ளலும் பொருந்தும்.

அழிசியின் ஆர்க்காட்டைக் கைக்கொள்ளல் எத்துணைக் கடினமோ அத் துணைக் கடினம் தலைவியைப் பெற்றுக் கூடுவதும் எனக் குறிப்பாகக் காட்டி, அவளது குடிப்பெருமையையும். அவள் தன்னால் அடைதற்கு அரியளாவள் என்பதனையும் உரைக்கின்றனள்.

'வலை மான் மழைக் கண்' என்றது, மருண்ட அவளது நோக்கத்தைக் கண்டு உனத்தகத்தே கொண்டதனாற் கூறியதாகும்.

'மகிழ்ந்தோய் நோ, இனி' என்றது. அவளை மறத்தற்கியலாத தன் நெஞ்சத்தினது தன்மையைக் கூறியதாம்.

'சின் மொழித் துவர்வாய் நகை' என்றது, தலைவியும் தன்மேற் கொண்ட காதலன்பை உடையவளாவள் என்று தான் அறிந்தமை கூறியதாகும்.

மூன்று துறைகட்கும் ஏற்பப் பொருளை இசைவித்துக் கண்டு இன்புறுக.

191. வறுந்தேர் போதல்!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்
துறை : தோழி தலைமகன் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.

[(து–வி) தலைவியை வரைந்து மணந்து கொள்ளற்கு நினையாதானாய்க் களவின்பத்தையே உளங்கொண்டு வந்து போகும் தலைவனுக்குத் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதனை உணர்த்தி வரைவுக்குத் தூண்டுவாளான தோழி இவ்வாறு உரைக்கின்றாள்.]

'சிறுவீ ஞாழல் தேன்தோய் ஒள்ளிணர்
நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த
வண்டற் பாவை வனமுலை முற்றத்து
ஒண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி 5

எல்லிவந் தன்றோ தேர்?' எனச் சொல்லி,
அலர் எழுந் தன்றுஇவ ஊரே பலருளும்
என்நோக் கினளே அன்னை நாளை
மணிப்பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணிக்கவின் உண்மையோ அரிதே மணிக்கழி 10
நறும்பூங் கானல் வந்துஅவர்
வறுந்தேர் போதல் அதனினும் அரிதெ!

தேன் பொருந்திய ஒள்ளிய ஞாழற் பூங்கொத்துக்களின் சிறுசிறு பூக்கள், அழகிய கலன்களையுடையரான இளமகளிர் நெடிய மணலிடத்து வண்டலாட்டு அயர்ந்திருக்குமிடத்தே விளங்கும் வண்டற்பாவையின் அழகான கொங்கை முற்றத்திடத்தே படர்கின்ற ஒள்ளிய புள்ளிகளையுடைய சுணங்கினைப்போல, அழகு உண்டாகுமாறு உதிர்ந்து பரவா நிற்கும்; கண்டல் மரங்களாலாகிய வேலியை உடையதும் கண்டார்க்கு விருப்பந்தருவதுமான அத்தகைய சிறு குடியிடத்தேயே, 'நேற்றிரவு தேரொன்றும் வந்ததன்றோ' எனச் சொல்லியபடி, இவ்வூரிடத்தே பழிச்சொற்களும் எழுந்துள்ளன. அதனைக் கேட்டாளாகிய அன்னையும், கூடி நின்ற இளமகளிர் பலருள்ளும் என்னையே குறிப்பாக நோக்கினள். நாளைப் பகலில் கழியிடத்தேயுள்ள நீலமணி போலும் முள்ளியது மலரைக் கொய்யேனாயின். அழகுமிக்க என் மேனியது எழில் அழியாது உளதாயிருத்தல் அரிதாகும்; நீலமணி போலத் தோன்றும் கரிய கழிக்கரையிடத்தேயுள்ள நறிய பூக்களையுடைய கானற் சோலையிடத்தே வந்தும், நம்மை அடையாதாராய் வறிதே தேரேறி அவர் மீண்டுபோதலோ அதனைக் காட்டிலும் துன்பந் தருவதாகும்.

கருத்து : இனி வரைந்து கொண்டன்றித் தலைவியை நின்னால் அடைய வியலாது' என்பதாகும்.

சொற்பொருள் : வார் மணல் – நெடிய மணல்; ஒழுங்கு படப் பரந்து கிடக்கும் மணலும் ஆம். வண்டற் பாவை – வண்டலாட்டு அயர்தற்குச் செய்த மணற்பாவை. வனமுலை – அழகிய மார்பகம். முற்றம் – முன்பக்கம். கண்டல் – நெய்தனிலத்து மரவகையுள் ஒன்று. முண்டகம் – கடன் முள்ளி, நறும் பூங்கானல் – நறிய பூக்களையுடைய கானற்சோலை. விளக்கம் : 'பலருளும் அன்னை என் நோக்கினள்' என்றது, தோழியர் பலருள்ளும் தானே தலைவிக்கு உடனுறையும் உயிர்த்தோழியாதலால் தன்னைக் குறித்துத் தலைவியைப்பற்றி வினவுவாள்போல நோக்கினள் என்றனளாம். இதனால், தான் இடைநின்று அவர்களது களவுறவிற்கு உதவுவதற்கு இயலாமையைக் கூறித் தலைவியை வரைந்து கோடற்கு வற்புறுத்துகின்றாளும் ஆம். 'நேற்றுத் தேரொன்று வந்ததென அலரெழுந்தது' என்றமையால், 'இன்று வாரற்க' என்பதும் உணர்த்தினளாயிற்று. அவன் அதுபொழுது தேரிலன்றி நடந்தே வந்தமையும் புலனாயிற்று. 'கொய்யேன் ஆயின்' என்றது, தலைவி இற்செறிக்கப்படுவாளாதலை அறிவுறுத்தியதாம்; இது தலைவியைத் தானாகவே புனைந்து கொண்டு கூறியதும் ஆகும். 'வறுந்தேர் போதல் அரிது' என்றதனால், 'வரைந்து இவளையும் உடன் கொண்டு போதலே சிறந்தது' என்றனள்; அன்றி, 'உடன் போக்காகவேனும் கொண்டு செல்க' என்றனளுமாம். 'கானல் வந்து' என்றது, கானற்சோலையாகிய குறியிடத்தை நினைவுபடுத்தியதாம்.

உள்ளுறை : 'ஞாழலின் ஒள்ளிய பூங்கொத்து பூக்களை உதிர்த்து வண்டற் பாவையை அழகு செய்யும்' என்றது, 'எம்மாற் காக்கப்படும் தலைவிக்கு நின்னருள் புதுப்பொலிவு தரும்', என்பதாம்.

மேற்கோள் : நெய்தனிலத்து இளமகளிர் வண்டற் பாவையையும் பஞ்சாய்ப் பாவையையும் புனைந்து விளையாட்டயரும் இயல்பினராவர் 'ஒண்டொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டியன்ன என்னலம் தந்து' என வரும் குறுந்தொகையடிகளும் (238: 3-4); ஒண்டொடி மகளிர் வண்டலயரும் புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை' எனவரும் குறுந்தொகையடிகளும் (243: 3-4) இதனைக் காட்டுவனவாம். ஞாழலைப் புலிநகக் கொன்றை எனவும் கொள்வர்; ஆரல் மீனின் முட்டையை உவமையாகவும் கொள்வர்; வெண் சிறுகடுகும் தினையரிசியும் உவமைகளாகக் கூறப்படுவதும் உண்டு இவற்றால் இஞ்ஞாழலென்பது நெய்தனிலத்து மரவகையுள் ஒன்றென்பது விளங்கும். 'வறுந்தேர் போதல் அரிது' என்பதற்கு, 'ஊரலர் எழுந்தது; அன்னையும் அறிந்தனள்: இனி அவன் வரின் எம்மவர் அவனைப் பற்றிக் கொடுமை செய்வர்; அதனால் அவன் தேர் வறிதே மீளலும் உண்டாகலாம்; அங்ஙனம் நேர்வது காணின் எம்முயிர் நிலைத்தல் அரிது' எனவும் பொருள் கொள்ளலாம்.

192. எமக்கு ஏமம் ஆகும்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : இரவுக் குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

[(து–வி.) இரவுக்குறி வந்தொழுகுவானாகிய தலைவனிடம், 'அவன் வரும் நெறியிடையே அவனுக்கு நேரக் கூடிய ஏதத்திற்கு அஞ்சினேம்' எனச் சொல்வதன் மூலம். இரவு குறியை மறுக்கின்றாள் தலைவி, அவளுக்குத் தலைவன் 'அதற்கு அஞ்சாதே கொள்' எனக் கூறித் தெளிவிப்பானாக இவ்வாறு கூறுகின்றான்.

'குருதி வேட்கை உருகெழு வயமான்
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும்
மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவின் நாள்மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை 5
நீநயந்து வருதல் எவன்? எனப் பலபுலந்து
அழுதனை உறையும் அம்மா அரிவை!
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயில் தோன்றி அன்னநின் 10
ஆய்நலம் உள்ளி வரின் எமக்கு
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே.

'இரத்தத்தைக் குடிக்கும் வேட்கையினாலே சினமிகுந்த வலிய ஒரு புலியேறானது, வளமிகுந்ததும் ஆற்றலுடையதுமான இளைய களிற்றினை எதிர்நோக்கியபடியே, புதரிடைப் பதுங்கியிருக்கும் கொடுமையினைக் கொண்டதும், மரங்கள் நிரம்பிய சோலைகளால் மலிந்திருப்பதும், பூழி நாட்டாரது நிறத்தையுடைய யாட்டு மந்தைகள் வைகறைப் போதிலே புல்லை மேய்வனவாகப் பரந்து விளங்குமாறுபோல மாரிக் காலத்து இரவிலே கரடிகள் பரவிக்கிடக்கும் தன்மை கொண்டதுமான, மலைவழியாகிய நெடிய பாதையூடே நீயும் எம்மை விரும்பியவனாக வருபவனாகின்றனை! அதுதான் என்னையோ?' என்று கூறினையாகப் பலவாக வருந்தி அழுதனையாக இருக்கின்ற, அழகிய மாமை நிறத்தை உடையவளான அரிவையே! கொல்லிமலைச் சாரல் பயன் மிகுந்த பலாமரங்களை மிகுதியாக உடையதாகும். அதன் மேற்குப் புறத்தேயாகத் தெய்வம் இயற்றிவைத்த புதுமையோடு இயலுகின்ற கொல்லிப் பாவையின் உருவம் இருக்கும். அப்பாவையானது கதிரவனின் கதிர்விரிந்து பரவுகின்றதான இளவெயிற் காலத்திலே தோன்றினா லொத்தது நின்னது அழகிய மேனியின் வனப்பாகும். அதனை நினைத்தபடியாக வருகின்ற காலத்தே, எமக்கு மலையினது அடிப்புறத்தே விளங்கும் அவ்வழியே பாதுகாவலாக அமைந்துவிடுகின்றது. ஆதலின் நீதான் வழியின் ஏதத்தைப் பற்றிய நின் கவலையைக் கைவிடுவாயாக!

கருத்து : 'நின் நினைவு எதனையும் எமக்கு எளிதாகச் செய்யும்' என்பதாம்.

சொற்பொருள் : குருதி வேட்கை – இரத்தங் குடிக்கின்ற வேட்கை. உரு – சினம்; பசியினாலே உண்டாயது. வயம் – வலி. முன்பு – ஆற்றல். மழகளிறு -இளங்களிறு. பூழியர் – பூழி நாட்டார்; தமிழ்நாட்டுப் பகுப்புக்களுள் ஒன்று பூழி. துரு – யாடு. மாரி – மாரிக்காலம். எண்கு – கரடி. பூதம் – பூதமாகிய தெய்வம். புதிதியல் பாவை – புதிதான ஆற்றலோடு இயங்கும் பாவை; தன் ஒளியால் பிறரை மயக்கியழிக்கும் சக்தி. ஏமம் – பாதுகாவல்.

விளக்கம் : களிற்றை எதிர்பார்த்திருக்கும் பெரும் புலியும், யாட்டு மந்தைபோலப் பரவிக்கிடக்கும் கரடி மந்தைகளும், மாரிக்காலமும் அம் மலை வழியே வரும் அவனுக்கு ஏதம் தருவதாகுமெனத் தலைவி எண்ணிக் கவலையடைகின்றாள். அவளுக்கு, அவள்பால் அவன் கொண்டுள்ள தெய்வீகக் காதல் அவ்வழியையும் அவனளவிற் காப்புடையதாகச் செய்துவிடுமெனத் தலைவன் கூறி, அவள் கவலையை மாற்றுகின்றான்; அவளை மறந்து தன்னால் இருக்கவியலாத தன்மையையும் கூறுகின்றான்.

இறைச்சி : 'புலி களிற்றைக் கொன்று குருதியுண்பதற்குப் பதுங்கியிருக்கும் காட்டிடையே யாடுகள் அச்சமின்றி மேய்ந்திருக்கும் என்றது, அவ்வாறே துன்பங்கள் பலவும் சூழ்ந்திருப்பினும் தான் ஏதமின்றி வருதல் கூடும் என்பதற்காம்.

மேற்கோள் : தலைவியும் தோழியும் வருவழியருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழுமென்பதற்குத் தொல்காப்பியக் களவியல் உரையுள் இச் செய்யுளை ஆசிரியர் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி, தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியதென்று உரைப்பர்.

தொல் களவியல் சூத்திர உரையுள் (100) இச்செய்யுளை எடுத்துக் காட்டி, 'இந் நற்றிணைப் பாட்டுத் தலைவி ஆற்றினது அருமை செப்பத் தலைவன் செப்பியது' என்று இளம் பூரண அடிகள் உரைப்பர்.

'தலைவி கண்புதைத்தவழித் தலைவனுக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு, இச் செய்யுளை ‘வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்' என்னும் துறைக்கு மேற்கோளாகவும் எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர்.

பாடபேதம் : நாள்மேயல் பரக்கும், அழுதனள் உறையும், மாண்நலம்.

193. வருத்தாதே!

பாடியவர் :........
திணை : பாலை.
துறை : பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.

[(து–வி) தலைவன் பொருள்வயிற் பிரிந்தான்; குறித்த பருவத்து வாரானுமாயினான்; அதனால் தலைவியின் வருத்தம் மிகுதியாகின்றது. தன்னை மேலும் வருத்தும் வாடையை விளித்து அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

அட்டரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கைத்
துய்த்தலைப் புதுமலர்த துளிதலைக் கலாவ
நிறைநீர்ப் புனிற்றுப்புலம் துழைஇ ஆனாய்
இரும்புறம் தழூஉம் பெருந்தண் வாடை!
நினக்குத் தீதுஅறிந் தன்றோ இலமே! 5

பணைத்தோள் எல்வளை ஞெகிழ்த்தவெம் காதலர்
அருஞ்செயல் பொருட்பிணிப் பிரிந்தன ராக
யாருமில் ஒருசிறை இருந்து
பேரஞர் உறுவியை வருத்தா தீமே!

ஈங்கையின் மொட்டுக்கள் உருக்கிய அரக்கைப்போன்ற நிறத்தையும், வட்ட வடிவையும் கொண்டன. அவற்றோடு விளங்கும் பஞ்சுபோன்ற தலைப்புறத்தையுடைய புதுப்பூக்களினின்றும் தேன்துளிகள் வீழ்ந்து நின்பால் கலக்கவும், புதுமழை பெற்றமையாலே நீர் நிறைந்து ததும்பியபடியிருக்கும் புலங்களுள்ளே புகுந்து, அவ்வீரத்தை அளைந்தும், அத்துடனும் அமையாயாய், எம்முடைய பெரிதான ஊரினது புறத்தேயும் எங்கணும் வந்து தழுவிக்கொள்ளும் பெருங்குளிர்ச்சியையுடைய வாடைக் காற்றே! நினக்கு யாம் ஒருபொழுதேனும் தீதுசெய்வதற்கு நினைத்தேமும் அல்லமே! பணைத்த எம் தோள்களிடத்தே செறிவாக விளங்கிய ஒள்ளிய வளைகளை நெகிழச் செய்தவர் எம் காதலர்; அவர் செயற்கருஞ் செயலான பொருளீட்டிவரும் செயலிடத்தே தம் உள்ளம் பிணிப்புக்கொள்ள எம்மைப் பிரிந்தும் போயினர். அதனாலே, எவரும் துணையற்றேமாய், எவரும் வழங்குதல் அற்ற ஒருபக்கத்தே தனித்திருந்து பெருந்துன்பத்தை யாமும் அடைந்துள்ளேம். அத்தகைய எம்மை நீயும் வருத்தாதே கொள்வாயாக!

கருத்து : 'நின்னால் யாம் வருத்தமுறலையேனும் அறிந்து அவர்தாம் எனக்குத் துணையாமாறு வந்திலரே' என்பதாம்.

சொற்பொருள் : வட்டு – வட்டம்; உருளும் ஆம். புளிற்றுப் புலம் – நாளேரிட்டு உழுதுள்ள கழனி; புது நீர் தேங்கி நிற்கின்ற வயற்புறமும் ஆம். இரும்புறம் – ஊரது பெரிதான பக்கம்; தலைவியது கருமயிர் தாழ்ந்து தொங்கியபடியிருக்கும் பின்பக்கமும் ஆம். பணைத்தோள் – மூங்கிலனைய தோள்கள்; பணைத்த தோள்களும் ஆம்; பணைத்தல் – பெருத்தல். எல் – ஒளி.

விளக்கம் : 'சங்கை மலர்களினின்றும் வழிந்த தேனொடு கலந்தும், புதுவெள்ளம் நிரம்பிக் கிடக்கும் வயற்புறங்களிலே அளைந்தாடியும், பெருங் குளிர்ச்சியுடையையாய் வந்து, பிரிவுத்துயராலே வெம்மையுற்றிருக்கும் என் இரும்புறத்தைத் தழுவுகின்ற வாடையே!' என்கின்றாள்; அக்குளிரால் தன்னுடல் நடுங்கும் என்பது இதன் பொருள். 'பேரஞர் உறுவிக்கு உதவுதலே அருளின்பாற் பட்டதாகும்; உதவாதொழியினும் வருத்துதல் எத்தகைய பெருந்தவறு ஆகும்?' என்றும் வினவுகின்றாள். பகையெனின் தளர்ந்த செவ்வி நோக்கிச் சென்று வெற்றிகொள்ளல் பொருந்தும்; நினக்குத் தீதறிந்திலமாகிய எம்பாற் பகையும் நினக்கில்லை; பின்னரும் எதனாலோ எம்மை வருத்துகின்றனை என்பதுமாம். 'பொருட்பிணிப் பிரிந்தனர்' என்றது, தன்னினுங்காட்டில் பொருளையே பெரிதாக உளங்கொண்டமைக்கு வருந்திக் கூறியதுமாகும். அஞர் – துன்பம். உறுவி என்பது தன்னையே படர்க்கையிடமாகக் கூறிக்கொண்டது; இடவழுவமைதி. 'தீதறிந்தன்றோ இலம்' என்றலால், 'யாம் நட்பாவோம்; ஆதலின் எம்மை வருத்தலைக் கைவிட்டு எமக்கு இது செய்த அவரைச் சென்று வருத்துக' என்பதாம். வருத்தின், அவரும் எம்பால் விரைய மீள்வர்; எம் துயரமும் தீரும்; நின்னையும் யாம் குறைகூறோம் என்கின்றனள்.

ஈங்கை கூதிர்காலமாகிய ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலே மலரும் தன்மையது; அதன் மலர் துய்யுடையது. இச் செய்திகளைப் பிற சங்கச் சான்றோரும் தம் செய்யுட்களுள் உரைத்துள்ளனர் — (குறு: 380, 110 ஆம் செய்யுட்கள்.)

194. யாது செய்வோம்?

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : குறிஞ்சி
துறை : சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது.

[(து–வி.) இரவுக் குறியிடத்தே செவ்விநோக்கியவனாகத் தலைவன் ஒருசார் ஒதுங்கி நிற்கின்றான். அவன் வரவைத் தோழி அறிகின்றாள்; களவு நாட்டத்திலிருந்து தலைவியை மணந்து வாழ்தற்கான இல்லறவாழ்வினை மேற்கொள்ளும் எண்ணத்தை நோக்கித் தலைவனின் உள்ளத்தைத் திருப்புதற்கு நினைக்கின்றாள். தலைவியிடம் கூறுவாள் போல் இப்படித் தலைவனும் கேட்டுணருமாறு கூறுகின்றாள்.]

அம்ம வாழி தோழி கைம்மாறு
யாதுசெய் வாங்கொல் நாமே கயவாய்க்
கன்றுடை மருங்கின் பிடிபுணர்ந்து இயலும்
வலனுயர் மருப்பின் நிலம்ஈர் தடக்கை
அண்ணல் யானைக்கு அன்றியும் கல்மிசைத் 5

தனிநிலை இதணம் புலம்பப் போகி
மந்தியும் அறியா மரம்பயில் ஒருசிறை
குன்றக வெற்பனொடு நாம்விளை யாட
இரும்புகவர் கொண்ட ஏனற்
பெருங்குரல் கொள்ளாச் சிறுபசுங் கிளிக்கே? 10

தோழி, வாழ்வாயாக! யான் சொல்லப்போகும் இதனையும் கேட்டறிவாயாக. பெரிய வாயினை உடையதும் தன் பக்கத்தே கன்றினைக் கொண்டிருப்பதுமான பிடியோடும் சேர்ந்து சென்ற, வலிமிகுந்த கொம்புகளையும், நிலத்தின்கண் தொடுதலையுடைய நெடிய கையினையும் உடைய பெருமைமிக்க களிற்றினுக்கு யாம் யாது கைம்மாறு செய்வேமோ? அன்றியும், மலைமேலே அமைக்கப்பெற்ற தனித்த நிலை கொண்ட கட்டுப்பரணானது தனிமையுற்று வறிதாகும்படி அகன்றுபோய் மந்திகளும் புகுந்தறியாத செறிந்த மரங்கள் விளங்கும் ஒரு பக்கத்தே சென்று குன்றுகளையுடைய வெற்பனோடுங் கூடினேமாய் நாம் விளையாட்டயரக், கரிய கவர்த்தலைக் கொண்ட தினையது பெரிதான கதிரைக் கவர்ந்து கொண்டுபோகாத சிறிய பசிய கிளிக்கும் யாது கைம்மாறு செய்வேமோ?

கருத்து : 'யானைக்குள்ள பாசமும், கிளிக்குள்ள அருளும் அவனிடமில்லையே?' என வருந்தியதாம்.

சொற்பொருள் : கைம்மாறு – பெற்ற உதவிக்குப் பிரதியாக உதவி செய்தல். கயவாய் – பெரியவாய். வலன் – வெற்றி. நிலன் ஈர் தடக்கை – நிலத்தை அறுத்தபடி செல்லும் தடக்கை. அண்ணல் – தலைமையுடைய நிலை. கல் – மலை. இதணம் – பரண். இரும்பு – கருமை, இரும்பைப் போன்ற எனினும் ஆம்.


விளக்கம் : 'புனங் காவலை மறந்தும் அவனுக்கு உதவினேமாகிய எம்மை, மறந்து கைவிட்ட கொடியனாயினான்' அவன் என்பதாம்; கைவிட்டது களவிடைப் பிரிவினாலே துயரப்படுமாறு பிரிந்து சென்றது; காவலொழிந்தமை அறிந்தும் தினைகவராத கிளியின் பண்பைப்போல், அவரும் எம் களவு வெளிப்பட்டு அலராகாவண்ணம் எமக்கு உதவினர் அல்லரே என்பதாம். 'மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை' என்றது, பிறர் அறிந்து அலருரைத்தற்கு ஏதுவில்லை எனினும், அவளுடலில் தோன்றிய மாற்றங்களே அதனைப் பிறருக்கு அறிவித்து அலரெழச் செய்வதாகும் என்பதற்காம்.

கிளிகள் அன்று கதிர்களை அழித்திருந்தனவேல் பயிரழிவு கண்ட தந்தை ஐயுற்றுக் களவை அறிதலும், அதனைத் தடுத்தற்கு முயல்தலும் நேர்ந்திருக்கும் என்பாள் 'பெருங்குரல் கொள்ளாச் சிறு பசுங்கிளி' என்றனள். ஆனால், அவைதாம் இதுகாலை அழிவுசெய்யும் என்கின்றனளும் ஆம்.

இறைச்சி : 'கன்றை மருங்கிலுடைய பிடியைக் களிறு புணர்ந்து இயலும்' என்றது, தலைவியை மணந்து இல்லறம் மேற்கொண்டு, புதல்வனைப் பயந்து, புதல்வன் மருங்காகத் தலைவன் தன்னை இடையறவுபடாது முயங்கி இயங்குவானாக என்றதாம்.

'யானைக்குக் கைம்மாறு யாது செய்வாங்கொல்?' என்றது, முன்னர்த் தலைவனுடன் தலைவி பெற்ற முதற்கூட்டமாகிய களிறுதரு புணர்ச்சியை நினைந்து கூறியதாகும்; அதனைத் தலைவனுக்கு நினைவுபடுத்தியது மாகும்.

195. அருளாதது கொடிதாகும்!

பாடியவர் : ........
திணை : நெய்தல்.
துறை : களவின் கண் நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.

[(து–வி.) தலைவன் தலைவியைக் களவாகப் பெற்றுத் துய்ப்பதிலேயே கருத்தினனாயிருக்கின்றான். களவு நீட்டித்தலை அறிந்த தோழிக்குக் கவலை மிகுதியாகின்றது. அவன் உள்ளத்தைத் தலைவியை வரைந்து மணந்து வாழ்தலில் செலுத்துதற்கு நினைப்பாளாக இவ்வாறு கூறுகின்றனள்.]

அருளா யாகலோ கொடிதே!—இருங்கழிக்
குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தித்
தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப! யான்கண் டிசினே
கல்லென் புள்ளின் கானலம் தொண்டி, 5

நெல்லரி தொழுவர் கூர்வாள் உற்றெனப்
பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீரலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும்நீ நயந்தோள் கண்ணே.

கரிய கழியிடத்தே வாழும் நீர்நாயின் இளங் குட்டியானது, அவ்விடத்தேயுள்ள கொழுமையான மீன்களைப் பற்றித் தின்றுவிட்டுக் கழிக்கரையிடத்தேயுள்ள தில்லை மரப் பொந்திலே சென்று படுத்து உறக்கங்கொள்ளுகின்ற, மென்மையான கடற்கரை நாட்டின் தலைவனே! கல்லென ஒலிக்கும் குருகினங்களைக் கொண்ட அழகிய கானற் சோலையினையுடைய தொண்டிப்பட்டினத்தே, நெற்கதிரை அரிகின்ற உழவரின் கூரிய அரிவாளினாலே அறுக்கப்பட்ட பலவிதழ்களோடும் கூடிய குவியாத நெய்தல் மலர்கள் நீரிடத்தே அலைப்புண்டு வருந்தும் தோற்றத்தைப்போல, நீ விரும்பும் தலைவியின் கண்களும் ஈரியவாய்க் கலங்கி அழா நிற்கும். அதனைக் கண்டிருந்தும் அவளுக்கு அருளிச் செய்யாயாக வாளாவிருத்தல் மிகமிகக் கொடிதானதுகாண்!

கருத்து : 'அவளை வரைந்து நின்னுடன் நின்னூர்க்குக் கொண்டு சென்றாலன்றி அவளது மனத்துயரம் தீராது' என்பதாம்.

சொற்பொருள் : குருளை நீர் நாய் – நீர் நாயின் இளங்குட்டி. தில்லை – ஒருவகை மரம்; கழிக்கரை யோரங்களிலே பொந்துகளோடு கூடிய இம் மரங்கள் காணப்படும். பொதும்பு – பொந்து. புள் – கடற்புள். தொண்டி – தொண்டிப் பட்டினம்; இது சேரர்க்கு உரியது. தொழுவர் – பணியாளர். கூம்பா நெய்தல் – குவியாத நெய்தல். நயந்தோள் – விரும்பியோளான தலைவி.

விளக்கம் : நெல் வயல்களிலே கிளைத்துப் படர்ந்திருந்த நெய்தற்கொடிகளிலே பூத்துக்குலுங்கிய மலர்கள், நெல்லரிவார் அக்கொடிகளையும் அரிந்துவிடத், தாம் அக்கழனி நீரிடத்தே அலைப்புண்டு வருந்துமாறு போலத், தலைவியின் கண்கள் தலைவனின் வரவை எதிர்பார்த்துப் பார்த்துக் காணாவாய்ச் சிவப்புற்றுக் கலங்கி அழும் என்பதாம். நெற்பயன் கொள்ளலே உழவரின் செயலாகவும், அதனிடைப்பட்ட நெய்தல் மலர்கள் துன்புற்றனபோலத், தலைவியைக் கூடியின்புறலே தலைவனின் கருத்தாகத் தலைவியின் நிலையும் தன் இல்லத்து நின்றும் அறுப்புண்ட நெய்தலைப்போலாகி, அவள் கண்களும் கலங்கியழுவனவாயின என்று கொள்க.

உள்ளுறை : நீர்நாயின் குருளையானது தன்னலம் ஒன்றே பெரிதாக நினைந்ததாய்க் கழியிடத்துக் கொழுவிய மீன்களைப்பற்றி நிறையத்தின்று தன் பசியாறிய பின்னர்க் கரையருகேயுள்ள தில்லைமரப் பொந்திற்சென்று படுத்து உறக்கங்கொள்ளும் என்றனள். அவ்வாறே தலைவனும் தலைவியைத் துய்த்து இன்புற்றபின்னர், அவளை மறந்தானாய்த் தன்னூரின் கண்ணுள்ள தன் இல்லிடத்துச் சென்று உறங்குவன் என்பது இதுவாகும். ஆயின், தலைவியோ கண்ணுறக்கம் சற்றேனும் இல்லாதாளாய் வருந்தி நலனழிவள் என்பதாம்.

தொண்டிப் பட்டினம் சேரர்க்கு உரியது என்பதனைத் 'திண்தேர்ப் பொறையன் தொண்டி' (குறு. 128: 2) எனப் பரணர் கூறுமாற்றால் அறியலாம். நற்றிணை எட்டாம் செய்யுளும், 'கண்போல் செய்தல் போர்வில் பூக்கும் திண்தேர்ப் பொறையன் தொண்டி' என்று குறிப்பிடும். பதினெட்டாம் செய்யுளுள் 'கானலம் தொண்டிப் பொருநன், வென்வேல் தெறலருந் தானைப் பொறையன்' எனவும் வரும்.

196. மதியமே தேய்க!

பாடியவர் : வெள்ளைக்குடி நாகனார்.
திணை : நெய்தல்.
துறை : நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள், திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.

[(து–வி.) தலைவனோ நெடுந்தொலைவிடத்தே உள்ள நாட்டிற்குப் பொருள் தேடி வருதலின் பொருட்டாகப் பிரிந்து சென்றிருந்தனன். அவனது பிரிவினைப் பொறுக்க மாட்டாதாளாகத் தலைமகள் பெரிதும் வருந்தி வாடியிருந்தனள். திங்களின் வரவால் அவ்வருத்தம் மேலும் மிகுதியாகின்றது. அப்போது அவள் தன்னுள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

பளிங்குசெறிந் தன்ன பல்கதிர் இடைஇடைப்
பால்முகந் தன்ன பசுவெண் நிலவின்
மால்பிடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற்கரந்து உரையும் உலகம் இன்மையின் 5
எற்கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற்கவின் இழந்தவென் தோள்போற் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே?

பளிங்குகள் பலவும் ஒன்றாகச் செறிந்து விளங்கினாற் போலத் தோற்றும் பலவாய கதிர்களின் இடையிடையே, பாலை முகந்துவைத்தாற் போல விளங்கும் பசுமையான வெண்ணில வொளியையும் உடையையாய்! மலைக்குறவர் தேனிறாலைப் பெறுவதற்காக இட்டிருக்கும் ஏணியாலும் இடரப்பட்டு அறியாயாய் விளங்கும். எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே! நீதானும் நிறைவும் நேர்மையும் உடையை ஆவாய். ஆதலினாலே, நினக்கு மறைந்து வாழ்கின்றவொரு உலகமொன்றும் இவ்விடத்தே இல்லையாகும். ஆகவே, என்னைவிட்டுப் பிரிந்து எனக்கு மறைவுற்றவராக வாழும் காதலர் தங்கியுள்ள இடம் இதுவென எனக்குக் காட்டாயோ! (திங்கள் காட்டாதிருப்ப, அவளது வெறுப்பு மிகுதியாகின்றது; மேலும் கூறுகின்றாள்.) நல்லழகினை இழந்துபோய்ச் சாம்பிய என் தோள்களைப் போல, நீயும் இனிச்சிறுகச்சிறுக அழிந்தனையாய்க், 'கண்டறிந்த ஒன்றைக் காணோம்' எனப் பொய்த்தலால் உண்டாகிய பொய்க்கரியின் பழியினாலே அழிவுறும் அந்நிலைதான் இனி நினக்கும் உண்டாகுமோ?

கருத்து : ‘அவரை எனக்குக் காட்டாயாகிய நீயும் சிறுகச்சிறுக நின் நலனழிந்து கெடுவாய்' என்பதாம்.

சொற்பொருள் : பளிங்கு – கண்ணாடித் துண்டுகள். பசு நிலவு - பசிய தண்ணிய நிலவு. மால்பு – தேனெடுப்பார் பயன்படுத்துகின்ற நெடிய நூல் ஏணி, இதனால், நிலவு மேற்கு மலையைச் சார்ந்து மறையும் வரை விழித்திருந்தாளாய்த் தலைவி துன்பத்தில் உழன்றனள் என்பதும் விளங்கும். மால் + பிடர் = 'மால்பிடர்' எனக் கொண்டால் மேகத்தின் முதுகுப்புறம் என்று கொள்ளலாம். சால்பு – தகுதிப்பாடு; செம்மை – செவ்விய நேர்மை; குன்றிடை மறையுங் காலத்துக் தோன்றும் செவ்விதான செம்மைத் தன்மையுமாம். செரீஇ-குறைவுற்று. அறிகரி - அறிந்த ஒன்று; அறிகரி பொய்த்தல் – தானறிந்த உண்மையை மறைத்துப் பொய்ச் சான்று கூறுதல். இதனை, 'அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை' என்னும் குறுந்தொகை (குறு 184:11) யாலும் அறியலாம்.

விளக்கம் : உலகிடம் யாங்கணும் அறிவோய் ஆதலின் அவருள்ள இடத்தையும் அறிவை; அழிந்திருந்தும் எனக்கு அவரைக் காட்டித் தராயாய்ப் பொய்த்தலின் நீதான் சிறுசிறுகத் தேய்வுற்றனையாய் அழிவுற்றுக் செடுக என்கின்றனள் 'எற் கரந்து உறைவோர்' என்றமையின், தலைவன் நெட்டிடைக் கழிந்தோனாதலும் விளங்கும்; நெட்டிடையாவது நெடுந்தொலை இடைப்பட்டுக் கிடக்கின்றவொரு நாடு. இனித் தலைவனைப் பற்றிய செய்திகளைத் தூதுமூலங் கூடத் தலைவி பெற்றிவளாதலின், 'எற்சரந்து உறைவோர்' என்றனள் எனினும் பொருந்துவதாகும். அவரைப் பிரிந்துறையும் என்னைக் காய்ந்து வருத்துவதுபோல, என்னைக் கரந்து வாழும அவருள்ளவிடத்து அவரையும் இவ்வாறே வருத்துக; வருத்தின், அவர் என்னை நினைந்தாராய் என்பால் மீள்வர் என்றதும் ஆம்.

197. மழை தவழும்!

பாடியவர் : நக்கீரர்.
திணை : பாலை,
துறை : வரைவு நீள ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.
[(து–வி.) வரைந்து கொள்ளுதற்குரிய பொருளோடு வேந்துவினை முடித்ததும் வருவதாகக் கூறிச் சென்றவனாகிய தலைவன், வருவதாகக் குறித்தகாலத்தே வாரானாயினான். அதன்பின்னரும் நாட்கள் பல கழிந்தன. அதனால் தலைவியின் பிரிவாற்றாமை மிகுதியாகின்றது. அதனைக் கண்ட தோழி, இவ்வாறு கூறித் தலைவியது பெருகிய துயரை மாற்றுதற்கு முயல்கின்றனள்.]

'தோளே தொடிநெகிழ்ந் தனவே நுதலே
பீரிவர் மலரின் பசப்பூர்ந் தன்றே
கண்ணும் தண்பனி வைகின அன்னோ!
தெளிந்தனம் மன்ற தேயாஎன் உயிர்' என
ஆழல் வாழி தோழி! நீ நின் 5
தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டுபடு புதுமலர் உண்துறைத் தரீஇய
பெருமட மகளிர் முன்கைச் சிறுகோல்
பொலந்தொடி போல மின்னிக் கணங்கொள்
இன்னிசை முரசின் இரங்கி மன்னர் 10
எயிலூர் பல்தோல் போலச்
செல்மழை தவழும் அவர் நன்மலை நாட்டே.

தோழி! "தோள்கள், தம்பாற் செறிக்கப்பட்டிருந்த தோள்வளைகள் நெகிழ்ந்துபோகத் தாம் வளையிழந்து வறியவாயின; நெற்றியோ பீர்க்கிடத்துப் பரந்துள்ள மலர்களின் தன்மையைப் போன்றதாய்ப் பசலைபடர ஒளியிழந்துள்ளது; கண்களும் தண்ணிய துளிகளை நீங்காவாய்ப் பெற்றிருப்பவாயின. ஐயகோ! இவை இங்ஙனமாதலின் எம் உயிரும் இனித் தேய்ந்தொழியும் என்பதனைத் தெளிவாக யாமும் அறிந்துகொண்டோம்" எனக் கூறினையாய் நீயும் அழாதிருப்பாயாக! இத் துயரம் முற்றவும் நீங்கினையாய் நீயும் நெடுங்காலம் வாழ்வாயாக! நினது தாழ்ந்து தழைத்த கூந்தலது மயிர்க்கால்களைப் போன்று காலிறங்கியும், வண்டு பொருந்திய புதுமலர்களை உண்ணுநீர்த் துறையிடத்தே நின்று கொய்தும் கொணர்வாரான பெரிதான மடப்பத்தைக் கொண்ட மகளிரது, முன்னங் கைகளிடத்தே விளங்கும் சிறிதான கோற்றொழிலையுடைய பொன் வளைகளைப்போல மின்னலிட்டும், கூட்டங்கொண்ட இன்னிசை எழுப்பும் முரசங்களின் முழக்கத்தைபோல இடிமுழக்கியும், மன்னர்களது கோட்டை சூழ்ந்த ஊரிடத்துக் கோட்டை மதில்களின் மேலாகக் காவலயரும் வீரர்களது கையிடத்து விளங்கும் பலவாகிய கிடுகுகளைப் போலத் தவழ்ந்தபடியும், அவருடைய நல்ல மலை நாட்டிடத்தே மேகங்கள் வானிடத்தே செல்பவாயின; அதனையும் காண்பாயாக. அவர் இனிக் காலம் தாழ்த்தாராய் விரைய நின்பால் மீள்வர் காண்!

கருத்து : 'காரும் அதோ தொடங்கிற்று; தலைவரும் சொற்பிழையாராய் மீள்வர்; அதுவரை நீயும் ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : தொடி – முன்னது தோள்வளை; பின்னது கைவளை . பனி – நீர்த் துளி. ஒலிதல் – தழைத்தல். கதுப்பு – கூந்தல். கால் – காலிட்ட தோற்றம். உண்டுறை – உண்ணு நீர் எடுக்கும் நீர்த்துறை. கணங்கொள்ளல் – கூட்டங் கொள்ளல். எயில் – கோட்டை. தோல் – கிடுகு; கேடயம். செல் மழை – செல்பவாய மேகங்கள்.

விளக்கம் : தலைவன் படைத்தலைமை பூண்டோன் ஆதலின், எயின்மேற் காவலர் கிடுகுகளுடன் காத்திருக்கும் அசைவினை மேகத்தின் தவழ்தலுக்கு உவமையாகக் கூறினள் என்று கொள்க. ஆகவே, அவன் சென்றவினை முடிவுற்றதென்பதும், பகைவரது கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனன் என்பதும் விளங்கும். காரின் வரவுக்குத் தலைவியது கூந்தலையும். மின்னலுக்குக் கைவளைகளின் ஒளியையும் கூறியது, அவற்றைக் காணும் அவனது உள்ளத்தே தலைவியின் நினைவு மேலெழுவதாகும்; ஆதலின் அவனும் விரைய மீள்வான் என வற்புறுத்தியதாம். 'எயில் ஊர்' என்பதனை, 'எயிற் பட்டினமாகவும்' கொள்ளலாம்; எயிற்பட்டினம் 'ஆந்தை' என்னும் பாண்டிநாட்டுக் குறுநிலத் தலைவனுக்கு உரியது; இதனைப் புறநானூற்று 71ஆம் செய்யுளுள் வரும் 'மன்னெயில் ஆந்தையும்' என்னும் பூதப்பாண்டியன் வாக்கால் அறியலாம். 'எயிற்கோட்டம்' தொண்டைநாட்டுக் கோட்டங்களுள் ஒன்றாதலும், 'எயில்' என்னும் ஒரூர் தொண்டை மண்டிலத்து இருந்ததையும் நினைக்க.

198. பெயர் பொலிக!

பாடியவர் : கயமனார்.
திணை : பாலை.
துறை : பின் சென்ற செவிலி இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.
[(து–வி) தலைமகன் தலைமகளையும் உடன்கொண்டானாகத் தன்னூர்க்குச் சென்றனன் அவரைத் தேடிச் சென்ற செவிலித்தாய், எதிரே வருவாரான தலைவனும் தலைவியுமாகிய வேற்றார் இருவரைக் கண்டு, தன் உள்ளத்துயரம் மேலெழ, அவர்க்கு உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

சேயின் வரூஉம் மதவலி! யாஉயர்ந்து
ஓமை நீடிய கானிடை அத்தம்
முன்நாள் உம்பர்க் கழிந்த வென்மகள்
கண்பட நீர்ஆழ்ந் தன்றே தந்தை
தன்னூர் இடவயின் தொழுவேன் நுண்பல் 5
கோடேந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்திலங்கு வாலெயிற்று பொலிந்த தாஅர்
சில்வளை பல்கூந் தலளே அவளே
மையணல் எருத்தின் முன்பின் தடக்கை
வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த் 10
தந்தை தன்ஊர் இதுவே
ஈன்றேன் யானே! பொலிகநும் பெயரே!

சேய்மைக்கண்ணிருந்து வாராநின்ற பெருவலிமையினை உடையோனாகிய தலைவனே! யாமரங்கள் உயரமாக வளர்ந்தும், ஓமை மரங்கள் மிக நெடிதாக வளர்ந்தும் இருக்கின்ற காட்டிடையே செல்லும் வழியினூடாக, நேற்றைப் போதிலே அப்பக்கமாக என் மகளும் சென்றனள். அந்தக் காட்சி என் கண்ணுள்ளே தோன்ற, என் கண்கள் கண்ணீர் வெள்ளத்துள்ளே அமிழா நின்றன. நுண்ணிய பலவாகிய வரிகளோடு பொருந்திய அல்குல் தடத்தினையும், அதனிடத்தே தோன்றிய தேமற்புள்ளிகளையும் உடையாள் அவள். நேர்மையுற்று விளங்கும் வெள்ளிய பற்களையும் அவள் பெற்றுள்ளவள். அழகுசெய்யும் மாலையையும், சிலவாகிய வளைகளையும், பலவாகத் தழைத்த கூந்தலையும் அவள் உடையவள். அவளை வழியிடைக் கண்டீராகிய நும்மை அவளது தந்தையது இல்லத்திடத்தே அழைத்துச் சென்று விருந்தூட்டித் தோழுதும் போற்றுவேன். மைபோலும் கரிய அணலினையும் வளமிகுந்த பெரிய கையினையும், வலி செறிந்த வில்லிடத்தே அம்பினை வைத்துக் குறிபிழையாது எய்யும் ஆற்றலையும், வளவிய மகிழ்வைத் தரும் கள்ளுணவையும் உடைத்தான அவள் தந்தையது ஊர்தானும் இதுவேயாகும். அவளை ஈன்று காத்தவளும் யானே யாவேன். அவர்களை எதிர்கண்டு பேசிய வகையை எனக்குச் சொல்லீராயின் நும் பெயர் என்றைக்கும் புகழுடன் விளங்க வாழ்வீராக!

கருத்து : 'என் மகளைக் காணாது அலமரும் எனக்கு அவளது பேச்சினை நீவிர் சொல்வீராக; சொன்னால் நும்பெயர் புகழ்பெறும்' என்பதாம்.

சொற்பொருள் : சேயின் – தொலைவிடத்திருந்து, மதவலி – பெருவலிமை. யா – யாமரம் ஒமை – ஓமை மாம். தந்தை தன் ஊர் (முன்னது) இல்லம்; (பின்னது) ஊர். கோடு – வரை, தார் – மாலை.

விளக்கம் : 'மதவலி' எனச் சிறப்பித்துக் கூறிய செவ்வியினால். எதிர்வந்தவன் ஓர் தலைவன் எனக் கொள்ளலும் பொருத்தம் உடையதாகும். தன் மகளது பிரிவாற்றாமையினாலே வருந்தும் தாய், அவளை எதிரே கண்டு வருவாரது வாய்ச் சொற்களைக் கேட்டு மனவமைதி பெறுவதற்கு முயலுகின்றாள். வயதிற் சிறியராயினும் 'தொழுவேன்' என்றது, அவர் வாய்மொழியாலே பெறும் மனவமைதி பெரிதாதலான். 'அணல்' என்பது மோவாயிடத்தே விளங்கும் மயிர்; தாடியும் ஆம். எய்யா வண்மகிழ் – குறைதலற்ற வளவிய மகிழ்ச்சிப் பெருக்கம்: இது கள்ளூணால் வந்தடைவது 'ஈன்றேன் யானே' என்றது, பிறருக்காயின் அவர்தாம் கண்டாரைப்பற்றி யாதும் கூறார் ஆதலினால், பெற்ற தாயாகத் தன்னைப் படைத்துக் கூறியதும் ஆம்.

199. உள்ளுடைந்து உளேன்!

பாடியவர் : பேரிசாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : வன்பொறை எதிரழிந்தது.

[(து–வி) தலைமகனின் பிரிவினாலே வருத்தம் மிகுதியாக, அதனால் நலிவுற்றிருந்தாள் தலைவி. அவனைக் காணப் பொறுக்காத தோழி துயரத்தை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்திக் கூறித் தலைவியைத் தேற்ற முயல்கின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை
வீங்குமடல் குடம்பைப் பைதல் வெண்குருகு
நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி
அள்ளல் அன்னவென் உள்ளமொடு உள்ளுடைந்து
உளெனே வாழி தோழி! வளைநீர்க் 5

கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்
வாங்குவிசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி
வளிபொரக் கற்றை தாஅய் நளிசுடர்
நீணிற விசும்பின் மீனொடு புரைய
பைபய இமைக்கும் துறைவன் 10
மெய்தோய் முயக்கம் காணா ஊங்கே!

தோழீ, வாழ்வாயாக. சங்கினங்களையுடைய கடல் நீரிடத்தே விரையச் செல்லும் சுறாமீனைப் பிடிப்பதைக் கருதித் தூண்டிலை எறிந்தவரான, வளைவான மீன்பிடி படகுகளை உடையவரான பரதவர்கள், இழுக்கும் விரைவையுடைய தூண்டிற் கயிற்றின் இடையிடையே அமைந்து காற்று மோதுதலினாலே கற்றை சாய்ந்து போகிய நெருங்கிய விளக்கொளியானது நீல நிறத்தையுடைய வானத்திடத்தே தோன்றும் விண்மீன்களைப் போலத் தோற்றியவாய், மெல்லமெல்ல ஒளிவீசா நிற்கும் துறைக்குரியவன் தலைவன். அவனது உடலிடத்தே தழுவியிருக்கும் அணைப்பினைப் பெறாதவிடத்து, உயரமான மணல்மேடுகளாற் சூழப்பெற்ற நெடிய கரிய பெண்ணையினது பருத்த மடலிடத்தே கட்டியுள்ள கூட்டின்கண்ணே வருந்தியபடியே இருக்கின்ற வெளிய நாரையானது, நள்ளென்னும் ஒலியையுடைய இரவின் யாமப்பொழுதிலே நரலுந்தோறும் உள்ளம் உருகினேனாய், அள்ளலாகிய சேறுபோன்ற என் உள்ளத்தோடும் கூடிய மனமும் உடைந்துபோயின நிலையினளாக, யானும் உயிர் வாழ்ந்திருக்கின்றேனே!

கருத்து :'யான் ஆற்றியிருப்பினும் என் உள்ளம் தானே வருந்தித் தளரும்' என்பதாம்.

சொற்பொருள் : ஒங்கு மணல் – உயரமான மணல்மேடு. பெண்ணை – பனை. வீங்கு – பருத்த. குடம்பை – கூடு. பைதல் – துன்பம். உயவுதல் – நரலுதல்; ஒலித்தல், வளைநீர் சங்கினங்களைக் கொண்ட கடல். கடுஞ்சுறா – கடியச் செல்லும் சுறாமீன். திமில் – மீன்பிடி படகு. கற்றை - கிடேச்சுக் கட்டையால் ஆக்கப்பெற்ற மிதவை. நளி சுடர் – நெருங்கிய சுடர் விளக்குகள்

விளக்கம் : பிரிவுத் துயராலே நலிவுற்றிருந்த உள்ளத்தை 'அள்ளலன்ன உள்ளம்' என்றனள்; அதுவும் கெட்டுத் தான் இறத்தலுக்குப் பைதல் வெண்குருகின் நரலுதல் காரணமாகும் என்றது, இரவுப்போதினும் கண்ணுறக்கமில்லாதே வருந்தியிருந்த நிலையைக் காட்டுதற்காம்.

உள்ளுறை : காற்றாலே அலைக்கப்பட்டும் ஒளியவியாது சுடர்விடும் விளக்கையுடைய துறை என்றது, அவ்வாறே பிரிவுத்துயரால் அலைக்கப்பட்டு வருந்தியிருந்தும், அவர் வருவர் என்னும் நம்பிக்கையினாலே தான் உயிரோடு வாழ்ந்திருத்தலை உரைத்ததாம்.

200. இதுவும் உரைக்க!

பாடியவர் : கூடலூர்ப் பல்கண்ணனார்.
திணை : மருதம்.
துறை : தோழி தலைமகளது குறிப்பறிந்து வாயிலாகப் புக்க பாணன் கேட்பக் குயவனைக் கூவி இங்ஙனம் சொல்லாயோ என்று குயவற்குச் சொல்லியது.

[(து–வி.) பரத்தையை விரும்பித் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனுக்குச், சில காலத்திற்குப் பின்னர் அந்தப் பரத்தையின் உறவும் வெறுத்துவிட, அதன் தலைவியின் உறவை நாடுகின்றான். தன் செயலால் தலைவி சினமுற்றிருப்பாளென்பதை அறிந்தவன், அவளைத் தனக்கு இசைவிக்குமாறு தன் பாணனைத் தூதாக அனுப்புகின்றான். அவனைக் கண்டதும் தலைவியின் உள்ளம் நெகிழ்கின்றதைக் கண்ட தோழி, அவ் வேளையிலே விழாவினை அறிவிப்பானாக வந்த குயவனிடங் கூறுவாள் போலப். பாணனுக்கு மறுப்புக் கூறுகின்றாள். இங்ஙனம் தோழியின் கூற்றாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

கண்ணி கட்டிய கதிர அன்ன
ஓண்குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறுகிடந்த தன்ன அகல்நெடுந் தெருவில்
'சாறு'என நுவலும் முதுவாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ: 5
ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவாய் ஆகி
'கைகவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ வையெயிற்று
ஐதகல் அலகுல் மகளிர்! இவன் 10
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின்' எனவே.

இருபுறமும் அரும்பிட்டுக் கட்டிய ஒரு கதிரைப் போன்ற ஒள்ளிய கொத்தினைக் கொண்ட நொச்சியது மாலையைச் சூடிக்கொண்டு, ஆறு குறுக்கிட்டுக் கிடந்தாற்போன்ற அகன்ற நெடிய தெருவினிடத்தே வந்துள்ளோனே! 'இற்றை நாளால் இவ்வூரிடத்தே திருவிழா நடைபெறா நின்றது' எனக் கூறுகின்ற அறிவு முதிர்ச்சிகொண்ட குயவனே! நீ செல்லும் இடங்களில் இதனையும் அவ்வவ்விடங்களில் உள்ளார்க்குச் சொல்லியோனாகச் செல்வாயாக!

ஆம்பல் நெருங்கித் தழைத்திருக்கும் இனிதான பெரிய வயல்களையும் பொய்கையையும் உடைய ஊரின் கண்ணே செல்வோய் ஆகுக. 'கூர்மையான பற்களையும் மெல்லிதாக அகன்ற அல்குல் தடத்தையும் கொண்டோரான இளமகளிர்களே! கையின் தடவுதலை விரும்புதற்கு உரியவான நரம்புகளைக் கொண்ட யாழினை இசைத்தபடியே வாயாலும் நல்ல பாட்டுக்களைப் பாடுவோனான நம்மூாப்பாணன் செய்த துன்பங்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போகின்றன. இத்தன்மையாளனாகிய இவனது பொய்மையாற் பொதியப்பெற்று நுவலப்படுகின்ற கொடிய சொற்களை எல்லாம் மெய்ம்மை எனக் கருதி ஏற்றுக் கொள்ளாதீராய், நுங்களைக் காத்துக் கொள்வீராக' என்று சொல்வாயாக!

கருத்து : 'பாணன் கூற்றுப் பொய்யாதலின், தலைவி அதனை ஏற்றற்கு இசையாள்' என்பதாம்.

சொற்பொருள் : கண்ணிகட்டல் – அரும்புகளை இருபுறமும் நிரலே வைத்து கட்டுதல். தெரியல் – மாலை. சாறு – விழா பழனத்துப் பொய்கை – பழனங்கட்கு இடையே விளங்கும் பொய்கையும் ஆம். பனுவல் – பாட்டு: பன்னப்படுவது பனுவல். வை – கூர்மை. ஐது – மென்மை. கொடுஞ்சொல் – கொடியதாம் விளைவைக் கொண்டு தரும் இன்சொல்.

விளக்கம் : ஊர் விழாவை அறிவிப்போன் குயவன் என்று உரைத்துள்ள செய்தியைக் கவனித்தல் வேண்டும். கொற்றவை கோயில்களுட் பலவற்றிற்கு இந்நாளினும் குயக்குலத்தாரே பூசாரிகளாக விளங்குகின்றனர்; இவ் வழக்கே அக் காலத்தும் இருந்திருக்கலாம்; ஊர்விழா என்பது இக் காலத்தும் காளிகோயில் விழாவாக விளங்குதலும் இதனை விளக்கும். 'பொய்கை ஊர்க்கு' என்றது, பரத்தையின் ஊரைக் குறிப்பிட்டுக் கூறியது என்க. 'பாணன் செய்த அல்லல்'— பரத்தையர் பலரையும் மயக்கித் தலைவனுக்கு இசைவித்துப் பின்னர் அவனாற் கைவிடப்பெற்று அவர்கள் பலரும் துயருற்று நலிந்து கெடுமாறு செய்தது. 'கைகவர் நரம்பின் பனுவற் பாணன்' என்றது, இசையின் இனிமையாலும் பாட்டின் நயத்தாலும் மகளிரை மயக்கிவிடுபவன் என்றற்காம். இதனால், தலைவி தலைவனை ஏற்பதற்கு இசையாள் என மறுத்து உரைத்தனள் ஆகும். ஆனால், தலைவி கற்பு மேம்பாட்டிற் சிறந்தவளாதலினால், அவள் தலைவனை ஏற்றற்கே விழைவதனைப் பாணன் அவளது முகக்குறிப்பால் அறிந்து, தலைவனைத் தலைவியுடன் சேர்ப்பிப்பான் என்பதும் இதன் பயனாகும்.

'பொய்பொதி கொடுஞ்சொல்' என்றது, 'தலைவன் மிக நல்லன்: உம்மையனறிப் பிறரை நாடுதல் நினையான்; உம்மையே நினைத்து உருகுவான்; ஆதலின் அவனை ஏற்பீராயின் உமக்குப் பெரிதும் நன்மையாம்' என்றாற்போலச் சொல்லிப் பெண்களை மயக்கித் தலைவனுக்கு இணங்கச் செய்தல்.

நற்றிணை முதல் இருநூறு
செய்யுட்களும் புலியூர்க்கேசிகன்
தெளிவுரையும் முற்றுப்பெற்றன.