உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 'இந்து' தேசியம்

யாழ்ப்பாணம்நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவரான காசிவாசி செந்தி நாதய்யர் என்ற சைவரும் சபையினரின் பிடியில் அகப்பட்டு இருக்கிறார். விவிலிய குத்சிதம் விவிலியச் குத்சித கண்டன திக்காரம் ஆகிய இரு நூல்களும் அவரால் எழுதப்பட்டு அக்கழகத்தவரால் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயேசு கிறிஸ்துவும் கடவுளா? என்ற சிறுநூல் 15 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி மறுபதிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. ஆரிய மதம், ஆரிய தேசம், ஆரிய மதாபிமானி என்ற சொல்லாடல்கள் மிகச் சரளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ் என்னும் மதவாத அமைப்புக்கு முன்னோடி அமைப்பினைப் போல் செயல்பட்ட இந்தக் கழகம். இந்துத்துவம் என்ற கோட்பாட்டையே இந்திய தேசியம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக பரப்பியிருக்கிறது. இந்த கழகத்தின் வெளியீடுகளுக்கு எதிராக நெல்லை மாவட்ட புரோட்டஸ்டண்டு கிறிஸ்துவர்கள், உண்மை தேடுவார் கழகம் (Truth Seekers Society) என்ற பெயரிலும் அரக்கோணத்தில் இருந்து எஸ்.பி.எஸ். என்ற அமைப்பின் பெயரிலும் சில நூல்களை வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்த கத்தோலிக்கக் கிறிஸ்துவத் திருச்சபையாரும் இதே காலத்தில் அங்குள்ள சைவர்களோடு ஒரு தத்துவச் சண்டையினை நிகழ்த்தியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துச் சைவ-கிறித்துவ கருத்து மோதல் இரு தரப்பாலும் கல்வித் துறையின் நாகரிக வரம்புகளுக்குள்ளேயே நடத்தப்பட்டிருக்கிறது. ‘இந்து சாதனம்' ‘ஞானசித்தி' என்ற சைவ இதழ்களிலும், சத்திய வேத பாதுகாவலன் என்ற கிறித்துவ இதழிலும் இந்தக் கருத்துப் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது.
ஜி.சுப்பிரமணிய ஐயரும் அனந்தாச்சார்லுவும் சென்னை மகாஜன சபையினைத் தொடங்கியவர்கள் (1884) அதன் சார்பாளர்களாகப் புனேயில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.” இவர்கள் இருவரையும் சேர்த்து முதல் காங்கிரஸ் மாநாட்டில் சென்னை மகாஜன சபைப் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட 8 பேரில் 6 பேர் பார்ப்பனர்.
அனந்தாச்சார்லு, ராவ் பகதூர் பட்டம் பெற்றவர் 1890 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டவர். இந்து பத்திரிகையின் இயக்குநர்களில் ஒருவர்.? சென்னை கிறித்துவக் கல்லூரியில் மதமாற்றம் தொடர்பாக நடந்த கலவரத்தில் நீக்கப்பட்ட இந்து மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்கப் பேச்சுவார்த்தை-நடத்தியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/63&oldid=1691057" இலிருந்து மீள்விக்கப்பட்டது