தொ.பரமசிவன் 89
இது நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தொடங்கி பின்னர் சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டது. இரண்டு ஊர்களுமே அக்காலத்தில் அதிக அக்ரகாரங்களையுடைய பார்ப்பனக் கோட்டைகளாகும். இதற்கான நன்கொடை சகல சாதியாரிடமும் குறிப்பாக நாட்டுக்கோட்டை செட்டியாரிடமிருந்தும் பெறப்பட்டது. இந்தக் குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டது. (பின்னாளில் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரின் மகன் அங்கே மாணவராக இருந்து இந்தச் செய்தியை வெளியுலகத்திற்குக் கொண்டு வந்தார்.) இதற்கெதிரான கண்டனக் குரல்கள் பார்ப்பனரல்லாதவரிடமிருந்து எழுந்தன. அதுவரை சேர்க்கப்பட்டிருந்த பார்ப்பன மாணவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்களிடம் தாம் வாக்களித்தபடி தனித்தனியாக உணவு தரவேண்டும். 'இனி சேர்க்கப்படும் பார்ப்பன மாணவர்களை மற்றவர்களோடு இணைந்து சாப்பிடச் செய்வேன்', என்று வ.வே.சு.ஐயர் தமிழ்நாடு காங்கிரசுக்கும் மகாத்மா காந்திக்கும் தெரிவித்தார். மகாத்மா காந்தியும் இதை ஒப்புக் கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.இராமநாதனும், வரதராஜுலு நாயுடுவும், தலைவர்களான பெரியாரும் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.
ஐயர் நடத்திய குருகுலத்தில் பிறப்பு வழிப்பட்ட வேறுபாடு இருக்கக்கூடாது என்று எஸ்.ராமநாதன் 1925இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது 26 உறுப்பினர்களில் 7 பேர்களில் ஆறு பேர் அந்தத் தீர்மானத்தை எதிர்த்த பார்ப்பனர்களாவார்கள். ராஜாஜி(திருச்சியைச் சேர்ந்த) டாக்டர் டி.எஸ். எஸ்.இராசன், சேலம் விசயராகவாச்சாரியார் பின் நாளில் ராஜாஜியின் உற்ற தோழராக விளங்கிய கே.சந்தானம், டாக்டர்.சாமிநாத சாஸ்திரி, என்.எஸ்.வரதாச்சாரி ஆகியோரே அந்த அறுவர். காலம் கனிந்து வரும்வரை சமபந்தியைத் தனியார் நடத்தும் குருகுலத்தில் வலியுறுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை என்றார் ராஜாஜி. இதே போல் மற்றும் ஒரு சம்பவமும் இங்கே நினைக்கப்பட வேண்டும் சேரன்மகாதேவிக் குருகுலத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிதியுதவி அளித்தது. அங்கே பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் வேறுபாடு காட்டப்பட்டதால் தமிழ்நாடு கமிட்டி பொதுச் செயலாளராக இருந்த பெரியார் வாக்களித்திருந்த இரண்டாவது தவணைப் பணம் ரூபாய் 5,000-ஐத் தர மறுத்துவிட்டார். ஆனால் பெரியாருக்குத் தெரியாமல் இணைப் பொதுச் செயலராக இருந்த கே.சந்தானம் அத்தொகையைக் குருகுலத்திற்குக் கொடுத்து விட்டார்.