குழந்தைச் செல்வம்/சந்திரன்
21. சந்திரன்
மீனினம் ஓடிப் பரக்குதம்மா! - ஊடே
வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறுதம்மா! - இந்த
மாட்சியி லுள்ளம் முழுகுதம்மா!
1
முல்லை மலர்ப்பந்தல் இட்டனரோ? - தேவர்
முத்து விதானம் அமைத்தனரோ?
வெல்லு மதியின் திருமணமோ?-அவன்
விண்ணில் விழாவரும் வேளையிதோ?
2
அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா! - அயல்
ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!
இம்ப ருலகின் இயல்பிதம்மா! - மதிக்கு
இன்னார் இனியாரும் உண்டோ அம்மா?
3
மாற்றம் உலகின் இயற்கையென - இங்கு
மாந்தரும் கண்டு தெளிந்திடவோ,
போற்றும் இறைவன் இம் மாமதியம் - விண்ணில்
பூத்து நிலவ விதித்தனனே!
4
அம்புலிக் கூட்டில் முயல்வருமோ? - ஈதோர்
அண்டப் புளுகோ? அறியேன், அம்மா!
பம்பி யெழுமலை அங்குளதும் - மேலைப்
பண்டிதர் கண்ட கனவே, அம்மா!
5
கூனக் கிழவி நிலவினிலே - ராட்டில்
கொட்டை நூற்கும்பணி செய்வதைஇம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
மாமதி யோங்கி வளருதம்மா!
6
சின்னஞ் சிறுவில்லாய்க் கணடதம்மா! - பின்னர்
செம்பொற் குடம் போலே தோன்றுதம்மா!
என்ன அதிசயம் பாராயம்மா!-ஈதோர்
இந்திர சாலமோ கூறாயம்மா!
7
வளர்ந்து வளர்ந்து பெருகுதம்மா!
வட்டந் திருந்தி வருகுதம்மா ! - உடல்
தளாந்து தளர்ந்துபின் போகுதம்மா!- கண்ணில்
சற்றுந் தெரியாமல் ஆகுதம்மா!
8
பாலாழி மீது படர்ந்தவெண்ணெய் - ஒரு
பந்தா யுருண்டு திரண்டதுவோ?
மேலா யுலகில் ஒளிசெயவே - ஈசன்
விண்ணக மிட்ட விளக்கிதுவோ?
9
இரவைப் பகலா யியற்றுதம்மா! - வெப்பம்
இல்லா திளைப்பெலாம் ஓட்டுதம்மா!
அரவம் விழுங்கினும் அஞ்சாதம்மா!-எங்கள்
ஆண்டவன் சூடும் மணியே அம்மா!
10
பொன்மரம் காய்த்த கனியிதுவோ? - இந்தப்
பூமகள் ஆடும் கழங்கிதுவோ?
கன்மன முங்களி கொள்ளக் - கவினொளி
காட்டி விளங்கும் மதியிதுவோ?
11
கண்ணுதல் உள்ளக் கருணையதோ? - கொற்கைக்
காவலர் கண்ட புகழதுவோ?
மண்ணகஞ் செய்திடு புண்ணியமோ?- இன்று
வானகம் வந்து நிலவுதம்மா!
12