உள்ளடக்கத்துக்குச் செல்

சுயம்வரம்/அத்தியாயம் 5

விக்கிமூலம் இலிருந்து

பட்டிக்காட்டு மாமியின்
பார்வையில் பயாஸ்கோப்...

 5 

மாமி போட்டுக் கொடுப்பது காபியாயிருந்தாலும் சரி, சமைத்துப் பரிமாறுவது சாப்பாடாயிருந்தாலும் சரி, அவற்றைச் சாப்பிட்டே தீரவேண்டிய துர்ப்பாக்கியம் நேரும் போதெல்லாம் அதை ஒரு தண்டனையாகவே எண்ணி அனுபவிப்பது மாதவனின் வழக்கம். அந்தத் தண்டனையைக் காலையில் ஒரு தடவையும், மத்தியானம் இன்னொரு தடவையும் அனுபவித்த பின், ஒரு ‘மினித் தூக்கம்’ போட்டால் தேவலை என்று தோன்றிற்று அவனுக்கு. முதல் நாள் இரவு மதனாவுடன் கொஞ்சிக் குலாவுவதற்குப் பதிலாக மாமாவுடன் சீட்டாடிக் கொண்டிருந்தவனல்லவா அவன்? கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது தூக்கம்; படுத்தான்.

பகற் கனவு...

த்தானும் என்னுடன் சினிமாவுக்கு வந்தால்தான் ஆச்சு!’ என்று அடம் பிடிக்கிறாள் நீலா.

இல்லை; அவள் அடம் பிடிக்கவில்லை. அவளை அடம் பிடிக்க வைக்கிறாள் மாமி.

இது என்ன தர்மசங்கடம் ? அன்று மாலை ‘பெண்கள் விடுதி’க்கு வந்து மதனாவைப் பார்ப்பதாக அல்லவா தன் கடிதத்தில் எழுதியிருந்தான் அவன்?

‘கச்சேரி கிச்சேரி எல்லாம் உங்கள் மாமாவுக்குத்தான் பிடிக்கும்; குழந்தைக்குப் பிடிக்காது!’ என்கிறாள் மாமி, கதவிடுக்கில் நின்றுகொண்டு.

‘எதிர்கால மாப்பிள்ளை’யை நேருக்கு நேராகப் பார்த்துப் பேச அத்தனை கூச்சம் அவளுக்கு! 'சினிமா என்றால் எனக்குப் பிடிக்காதே, நான் என்ன செய்ய?' என்கிறான் இவன், மாமியைப் பார்ப்பதற்குப் பதிலாக அவளை மறைத்துக்கொண்டிருக்கும் கதவைப் பார்த்து.

'ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது, குழந்தை ஆசைப்பட்டுக் கூப்பிடுகிறாள்...'

அவள் முடிக்கவில்லை; 'அதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. மாமி! குழந்தையை சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போகக்கூடாது. சமய சந்தர்ப்பம் தெரியாமல் அது கத்தும்; சுற்றியிருப்பவர்கள் தங்கள் சுவாரஸ்யம் கெட்டுப் போய்விடுகிறதே என்பதற்காக 'ஸ், ஸ்' என்று சீறுவார்கள். நாம் படம் பார்ப்பதை விட்டுவிட்டுக் குழந்தையை வெளியே தூக்கிக்கொண்டு போய் சாக்லெட், கீக்லெட் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்ய வேண்டியிருக்கும். ஏன் அந்தத் தொல்லையெல்லாம்? வேண்டாம், மாமி!' என்று கை கழுவப் பார்க்கிறான் இவன்.

அப்போது நீலா இரு கைகளையும் சேர்த்துக் கால் இடுக்கில் வைத்து முறுக்கிக்கொண்டே அம்மாவுக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்று, 'அம்மா, அம்மா! அத்தான் ரொம்ப வேடிக்கையாப் பேசறாரு, இல்லேம்மா?" என்கிறாள் தன் உடம்பையும் அஷ்ட கோணலாக வளைத்து.

'ஐயோ, ஐயோ! அம்மாவும் பெண்ணுமாய்ச் சேர்ந்து ஏன்தான் இப்படி வெட்கப்படுகிறார்களோ, தெரியவில்லையே?' என்று தனக்குள் எண்ணிப் பொருமுகிறான் இவன்.

இந்தச் சமயத்தில் நீலா தன் அம்மாவின் காதோடு காதாக ஏதோ சொல்ல, 'அதை என்னிடம் சொன்னால்?... அத்தானிடம் நேரே போய்ச் சொல்லேன்!' என்கிறாள் மாமி.

'அத்தான் அத்தான்னு கலியாணத்துக்கு முன்னால் சொல்லக்கூடாது. மாமி!' என்று அதற்கும் ஓர் ஆட்சேபணையைக் கிளப்பப் பார்க்கிறான் இவன்.

'அதெல்லாம் அசலாருக்குத்தான்; சொந்தக்காரர்களுக்குக் கிடையாது!' என்று அடித்துச் சொல்கிறாள் அவள்.

அதைக் கேட்டு, 'அத்தான், என் அத்தான்!' என்று தனக்குத் தெரிந்த ஏதோ ஒரு சினிமாப் பாட்டை மெல்ல முணு முணுக்கிறாள் நீலா. பதிலுக்குச் 'செத்தான், செத்தான்!' என்று முணுமுணுத்து, இவன் அவளைப் பழிக்குப் பழி வாங்குகிறான்.

அதற்குள் அங்கே வந்த மாமா, "நமக்கு வேண்டிய சீட்டுக்கு ரிசர்வேஷன்கூடச் செய்துவிட்டு வந்துவிட்டேன்!" என்கிறார், தம் மனைவியிடம்.

'மாப்பிள்ளைக்கும் சேர்த்துத்தானே?' என்கிறாள் மாமி, முன்றானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு.

'அவனுக்கு இல்லாமலா? அவன் இல்லாமல் அவள்தான் சினிமா பார்க்க வருவாளா?' என்கிறார் மாமா, வாயெல்லாம் பல்லாக.

'அவளை அவளைச் சொல்கிறீர்களே, அவள் இல்லாமல் அவர் மட்டும் சினிமா பார்க்கிறேன் என்றா சொல்கிறார்?' என்று மாமி சிரித்துக்கொண்டே அவன் தலையில் 'ஐஸ்' வைக்கிறாள்...

"ஐயோ, இது என்ன அநியாயம், அக்கிரமம்!" என்று மாதவன் அலறிப் புடைத்துக்கொண்டே எழுந்து உட்கார, "ஏதாவது கனவு கினவு கண்டீர்களா?" என்று மெல்லக் கேட்டுக்கொண்டே வந்தாள் மாமி.

"ஆமாம், நரகத்துக்குப் போவது போல் கனவு கண்டேன்!" என்றான் மாதவன்.

“அப்படி என்ன பாவம் செய்துவிட்டீர்கள், நீங்கள்?” என்றாள் அவள், ஒன்றும் புரியாமல்.

“என் அப்பாவுக்குப் பிள்ளையாய்ப் பிறந்தது நான் செய்த முதல் பாவம்; உங்களுக்கு உறவு முறையில் மாப்பிள்ளையாக இருப்பது நான் செய்த இரண்டாவது பாவம்” என்று சொல்ல நினைத்த அவன், போனாற் போகிறதென்று அப்படிச் சொல்லாமல், “ஒன்றுமில்லை, தூக்கத்தில் ஏதோ உளறினேன்!” என்று சொல்லிக்கொண்டே, முகம் கழுவச் சென்றான்.

“அந்த விஷயத்தில் உங்கள் மாமாவுக்கு நீங்கள் தோற்றவர் இல்லைபோல் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே அவள் அவனுக்காக அவசரம் அவசரமாகக் காபி போடச் சென்றாள்.

“என் தலையையும் சேர்த்து ஏண்டி, உருட்டறே?” என்று சொல்லிக்கொண்டே திண்ணையைத் தேடி வெளியே சென்ற மாமா, அங்கே திண்ணையைக் காணாமல் ‘திண்ணை இல்லாத வீடு என்ன வீடு?’ என்று தமக்குள் பொருமிக் கொண்டே நின்றார்.

‘பலிக்காது; பகற் கனவு பலிக்காது!’ என்று தன்னைத் தானே தைரியப்படுத்திக்கொண்டு, குளிக்கும் அறைக்குள் நுழைந்தான் மாதவன்.

‘முன்னெல்லாம் ஒரு பெண் கலியாணத்துக்குத் தயாராகி விட்டால் எவனாவது ஒருவன் வீடு தேடி வந்து பார்க்கும்வரை அவளைப் பெற்றவர்கள் வீட்டோடு வைத்துக் கொண்டிருப்பார்கள். இப்போது என்னடாவென்றால் அவர்களே எவனாவது ஒருவன் வீட்டைத் தேடி அவனை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார்களே?’ என்ற ஆற்றாமையுடன் அவன் தன் முகத்தைக் கழுவிக்கொண்டு திரும்பியபோது, 

-

“'கொடுடி, கொடுடின்னா'” என்ற மாமியின் குரல் அவன் காதில் விழுந்தது.

‘என்னத்தைக் கொடுக்கச் சொல்கிறாள் மாமி, இந்தப் பட்டப் பகலில்?’ என்று அவன் திடுக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்க்க, நீலாவின் கையில் முகம் துடைக்கும் துண்டு ஒன்றைத் திணித்துவிட்டு, “'போடி, போடின்னா”' என்று கட்டை வண்டிக்குப் பின்னால் தலையை முட்டுக் கொடுத்துத் தள்ளும் வண்டிக்காரன் போல, அவள் முதுகில் கையை வைத்துத் தள்ளிக்கொண்டிருந்தாள் மாமி.

'என்ன கஷ்டம், என்ன கஷ்டம்' என்று அவளுக்குத் தெரியாமல் தன் தலையில் அடித்துக்கொண்டே, "அவளுக்கு ஏன் மாமி, அனாவசியமா தொந்தரவு கொடுக்கிறீங்க?" என்றான் மாதவன், அந்த ஆபத்திலிருந்து தப்ப.

'அனாவசியம் என்ன, அனாவசியம் கலியாணத்துக்கு ஒரு பையன் இருக்கிறான்னா, கண்டவளெல்லாம் மேலே விழுந்து பழகுகிற காலமாச்சே, இது? இந்தக் காலத்திலே இவள் இவ்வளவு கட்டுப்பெட்டியாகவா இருப்பது?"

'“அதற்காக அவளை இப்போது என் மேலே விழுந்து பிடுங்கச் சொல்கிறீர்களா, என்ன? ” 'மேலே விழுந்து பிடுங்க வேண்டாம்; எட்ட இருந்தாவது பிடுங்கலாமோ, இல்லையோ?" என்ற அவள், '“போடி, போடின்னா”' என்று தன் மகளை மறுபடியும் மாதவனை நோக்கித் தள்ளிவிட்டாள்.

அவளோ சண்டி மாடு மாதிரி நின்ற இடத்திலேயே நின்று கொண்டு, 'எனக்கு வெட்கமாயிருக்கு, அம்மா!' என்றாள்.

'இந்தக் காலத்திலே அவர் இல்லேடி, உன்னைப் பார்த்து வெட்கப்படனும்? நீ எதுக்கு வெட்கப்படறே பயாஸ்  கோப்பிலே பார், இப்படி ஒரு துண்டை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கக்கூட அதிலே வர்றவ என்ன துள்ளுத்துள்ளறா, என்ன பாட்டுப் பாடறா, எப்படி எப்படியெல்லாம் இளிக்கிறா!' என்று மாமியும் அதே மாதிரி ஆடிக் காட்ட, "வேண்டாம் மாமி, சினிமாக்காரன் பார்த்தா உங்களை வேன்'லே தூக்கிப் போட்டுக் கொண்டு போய் விடுவான்' என்று கண்ணை மூடிக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான் மாதவன்.

அதற்குமேல் அவனுடைய பொறுமையைச் சோதிக்க விரும்பாமலோ என்னவோ, தன் மகளிடம் இருந்த துண்டை வாங்கித் தானே மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு, “இங்கே வாடி' என்று அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள் மாமி.

அடுத்த முற்றுகை எதுவாயிருக்குமோ? அந்த முற்றுகையின்போது நிராயுதபாணியான தன்னைத் தாக்குவதற்கு இவர்கள் எந்தெந்த ஆயுதங்களையெல்லாம் பயன்படுத்துவார்களோ? அது ஒருவேளை பலகாரம், காபியாக இருந்தால், அவற்றை எப்படிச் சமாளிப்பது? காலையில் இவர்கள் கொடுத்த காபியையும், அதற்குப் பின் இவர்கள் போட்ட சாப்பாட்டையும் சமாளிப்பதற்குள்ளேயே தன் பாடு போதும், போதும் என்றாகிவிட்டதே, என்ன செய்யலாம்? எப்படி இவர்களிடமிருந்து தப்பலாம்? சொல்லிக் கொள்ளாமல் ஓடி விடலாம் என்றாலும் வெளியே மாமா நிற்கிறார் பாழும் வீட்டுக்குப் புழக்கடை வழி என்று ஒரு வழியாவது இருக்கிறதா?அதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் அங்கே போய் மாமி நிற்பாளோ, என்னவோ? கடவுளே இந்தத் திட்டமிட்ட சதி”யிலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா? ஏதாவது ஒரு நல்ல ஒட்டலில் நல்ல 'டி.பன் சாப்பிட்டுவிட்டுப் போய் என் ஆசை மதனாவைப் பார்க்க எனக்கு நீ அருள் புரிய மாட்டாயா?" என்று பலவாறாக எண்ணி அவன் பயந்துகொண்டிருந்தபோது, பலகாரத் தட்டும்

கையுமாக நீலா பாய்ந்து வந்து அவன் காலடியில் விழுந்தாள். "தீர்க்க சுமங்கலீ பவ!" என்று அவளை வயிற்றெரிச்சலோடு வாழ்த்திக்கொண்டே, அவன் அவளைத் தூக்கிவிடுவதற்காகக் கீழே குனிந்தபோது, "ஐயோ, பெண்ணே போடின்னு சும்மா ஒரு தள்ளுத் தள்ளி விட்டா, இப்படியா போய் அவர் காலிலே விழுந்து அதற்குள்ளே, ஆசீர்வாதம் பண்ணிக்குவே?' என்று அவள் அம்மா வழக்கம்போல் கதவிடுக்கில் நின்று முகவாய்க் கட்டையின் மேல் கையை வைத்தாள். 'போம்மா, என்னைப் பிடிச்சு ஒரே தள்ளாத் தள்ளிட்டு உஊஉஊ...' என்று கண்ணைக் கசக்கிக்கொண்டே அவசரம் அவசரமாக எழுந்து, அவளுக்கு எதிரே அரக்கப்பரக்க வந்து நின்றாள் அவளுடைய அருமைமகள் நீலா.

'“அடி, என் கண்ணே! அழும்போதுகூட நீ எவ்வளவு அழகாயிருக்கேடி!'” என்று அவள் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் வழித்து நெட்டி முறித்தாள் அம்மா.

“போதாது மாமி, அவள் அழகுக்கு அது போதவே போதாது. அவளை உள்ளே அழைத்துக்கொண்டு போய் இன்னும் ஏதாவது நல்ல திருஷ்டியாகக் கழித்துப் போடுங்கள்!'” என்றான் மாதவன்.

அதைக் கேட்டுச் சற்றே முகம் சிவந்த மாமி, '“அதிருக்கட்டும், லட்டு எப்படி இருக்கு?'” என்று தன் பேச்சை மாற்றினாள்.

'“அதை ஏன் கேட்கிறீங்க போங்க, யாருக்கோ பட்டு மாமின்னு பேர் வைத்திருக்கிறார்களாமே, அந்த மாதிரி உங்களுக்கு லட்டு மாமின்னே பேர் வைத்துவிடலாம் போல இருக்கு'” என்றான் மாதவன்.

“நான் ஒண்னும் அதைப் பிடிக்கல்லே, இவதான் உங்களுக்காகப் பிடித்து வைத்தாளாக்கும்”" என்றாள் அவள் தன் பெண்ணைச் சுட்டிக்காட்டி. 

“அப்படியா, காராபூந்திக்குப் பதிலா வேறு ஏதாவது பண்ணியிருக்கலாம்' என்றான் இவன், அவளை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல்.”

“'ஏன்?”

“ஒண்ணொன்னா தின்னு முடியறதுக்குள்ளே பொழுது விடிந்துவிடும் போல இருக்கே? ” “அதெல்லாம் ஒண்ணும் விடியாது; சாப்பிடுங்க. இதோ, நான் போய்க் காபி கொடுத்தனுப்பறேன்!” என்று லட்டு மாமி திரும்பினாள்.”

“அம்மாம்மா அத்தான் ரொம்ப வேடிக்கையாப் பேசறாரு, இல்லேம்மா?' என்றாள் நீலா.”

'எல்லாம் உன்னைப் பார்த்த சந்தோஷந்தாண்டி, இப்படி வா' என்று மறுபடியும் அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் மாமி.

அப்போது, 'டாக்ஸிகூட வந்து வாசலில் நின்று விட்டது, மாப்பிள்ளை நீங்கள் 'ரெடி'யாக வேண்டியதுதான் பாக்கி' என்று சொல்லிக்கொண்டே மாதவனுக்கு எதிர்த்தாற் போல் வந்து நின்றார் அவருடைய மாமா.

"எதற்கு?' என்று ஒன்றும் புரியாமல் கேட்டான்மாதவன்.

'உங்களுக்குத் தெரியாதா, சினிமாவுக்கு சீட்டெல்லாம் கூட ரிசர்வ் செய்தாகிவிட்டதே' என்றார் அவர்.

அட இழவே பகற்கனவுகூட இவர்களுக்காகப் பலித்து விட்டதுபோல் இருக்கிறதே? என்று அவன்திரும்ப, 'ஆகட்டும் மாப்பிள்ளை, சீக்கிரம்' என்று அவசரப்படுத்தினார் மாமா.

அப்போது அவர் நின்ற தோரணையைப் பார்த்தால், அவனாக வராவிட்டால் அவர் அவனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் டாக்ஸியில் போட்டுவிடுவார் போலிருந்தது.

வேறு வழியின்றி, ‘மதனா! நேற்றும் உன்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கினேன்; இன்றும் உன்னை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறேன். என்னை மன்னித்து விடு, மதனா!’ என்று மானசீகமாக வேண்டிக்கொண்டே, சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான் மாதவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_5&oldid=1673062" இலிருந்து மீள்விக்கப்பட்டது