உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணனின் தூய்மையை உலகிற்குக் காட்டி விடவே, சங்கற்பம் செய்து கொண்டிருக்கிறேன். நீ உன் அண்ணன் கவனித்து வரும் அனாதை நிலையத்தையும், தர்ம ஆஸ்பத்ரியையும் சரியான முறையில் கவனித்து நடத்தி வா. அவன் இல்லை என்றதனால், அந்த ஸ்தாபனங்கள் சரி வர நடக்காது, வீணாகி விடக் கூடாது. எரிகிற வீட்டில் கிடைத்தது லாபம் என்று எவராவது சுரண்டிக் கொண்டு போய் விடுவார்கள். தம்பீ! ஜாக்ரதையாய்ப் பார்த்துக் கொள்ளு” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இவர்களே ப்ரமிக்கும்படி மிகவும் எளிய முறையில், சர்வ சாதாரணமான உடையில், கம்பீரமான பார்வையுடன் உஷாதேவியும், அவளுடைய தாயாரும் வந்தார்கள்.

“அண்ணா! இதென்ன? அநியாயமான விஷயத்தைக் கேள்விப்பட்டு, நாங்கள் திடுக்கிட்டு ஓடோடி வந்தோம். பெரிய அண்ணா இப்போது எங்கிருக்கிறார்? ஏன் ஜாமீனில் விடுதலை செய்ய ப்ரயத்தனப்படக் கூடாது?… பெரியம்மா! பழைய விஷயங்கள் சகலத்தையும் மறந்து மன்னித்து விடுங்கள். உங்கள் இந்திரா, சந்திராவைப் போல் நானும் ஒரு மகள் என்பதனால் என் மீது கருணை காட்டவேண்டும். முத்தண்ணாவின் உத்தம குணமும், த்யாகச் சுடரும், அவருடைய வாழ்க்கையின் அபாரமான பண்பாடும், யாவும் நான் நேற்றுதான் என் சினேகிதர் ஒருவரால் அறிந்து பரம சந்தோஷப்படுவதற்குள், இத்தகைய அதிர்ச்சியான விஷயத்தைக் கேட்டு, இதயம் தவித்துப் போகிறது. என்னுடைய நேற்று வரையிலிருந்த டாம்பீக வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து, நானும் எளிய வாழ்க்கையில் வாழத் துடங்கி விட்டதன் பலன் பரோபகாரமே செய்து, என் காலத்தை நல்ல முறையில் அண்ணாவுடன் கூடவே சேர்ந்து, நர்ஸ் தொழில் செய்து சந்தோஷமாய்க் கழிக்கத் தீர்மானம் செய்து விட்டேன். என்னுடைய மனக் கோட்டையின் விபரீதத்தினால்தான் இப்படி ஆய் விட்டதோ என்று கூட எண்ணித் துடித்தவாறு, ஓடி வந்தேன்…

சா-11