சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 2
2
அந்தப் பார்வையின் பயங்கரம், பெற்ற தாயின் வயிற்றில் சுருக்கென்று அம்பு போல் தைத்து வருத்தியது. குமுறும் உள்ளத்துடன்… இதென்ன இப்படிப் பார்க்கிறாளே! ஐயோ! இந்தப் பார்வை மிகவும் விபரீதமான பயங்கர நிலையைக் காட்டுகிறது. உடனே டாக்டரையாவது கூப்பிடுங்களேன்; ஐயோ ! டெலிபோன் செய்யுங்கள்…அம்மா ஸரஸா !… ஸரஸா!… ஏன் இப்படிப் பார்க்கிறாய்?... இதோ பார்… என்னைப் பாரம்மா ! கண்ணூ!… என்று அடக்க முடியாது, துக்கம் பொங்கி வழியக் கதறுகிறாள். அதே சமயம் டெலிபோன் மேல் டெலிபோன் பறந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் டாக்டர் ஸ்ரீதரன் வெகு பரபரப்புடன் வந்தான்…
டாக்டரின் வருகை, பெண்ணின் தாயாருக்கு சாக்ஷாத் கடவுளே வருவதாகத் தோன்றியதேயன்றி, வெறும் மனித வைத்தியர் வருவதாகத் தோன்றாது, நம்பிக்கையின் துடிப்புடன்… டாக்டர்! டாக்டர்! இதோ பாருங்கள்! ஸரஸா ஏதோ மாதிரி பார்க்கிறாளே!…… அவளுக்கு எத்தகைய பயமும் இல்லையே? டாக்டர்! அவளுக்கு உயிர்ப் பிச்சை தந்து, என் வயிற்றில் பாலை வார்க்க வேண்டும் டாக்டர்… என்று கத்துகிறாள்.
டாக்டர் ஸ்ரீதரன், வெகு நிதானமாய் நோயாளியைக் கூர்ந்து கவனித்துப் பின், “தாயே பயப்படாதீர்கள்! அதிக ஜுரத்தின் வேகத்தினால் இப்படி இருக்கிறது. உயிருக்கு பயமே இல்லை. இப்போதே சரியாகி விடும். அதைரியப்படாதீர்கள். நோயாளியின் எதிரிலா இம்மாதிரி பேசுவது. தைரியலக்ஷ்மியின் துணையுடன், சாந்தமாயிருங்கள்" என்று கூறி விட்டுத் தகுந்த சிகிச்சை செய்தான்.
கடவுளின் கருணையும், பெரியார்களின் ஆசீர்வாதமும் நிறைந்திருக்கும் நல்ல சமயம் வாய்த்து விட்டால், அரை க்ஷணத்தில் சகலமான நன்மைகளும் உண்டாகி விடுமல்லவா? அம்முறையில் டாக்டர் ஸ்ரீதரனை அதிர்ஷ்ட தேவதை பரிபூர்ணமாய் ஸ்வீகரித்திருப்பதால், உயர்ந்த மருந்தை ஊசி குத்திய அடுத்த நிமிஷமே படுத்திருக்கும் பெண் நன்றாகக் கண்களை, சுயமான அழகுடன் திறந்து நாற்புறமும் நினைவுடன் பார்த்தாள். இதைக் கண்ட பெற்ற தாயின் வயிற்றில் அமுதத்தை அள்ளி வார்த்தது போன்ற ஒரு தனித்த சந்தோஷமும், வாத்ஸல்யமும் ஊற்று போல் சுரந்தது.
டாக்டரை அவள் உள்ளம் நேருக்கு நேராக வந்துள்ள தெய்வம் என்று மதித்துப் போற்றியதேயன்றி, மனிதனாக நினைக்கவில்லை. “டாக்டர்! நீங்கள்தான் தெய்வம்!… நீங்கள் கலியுக தெய்வம் என்றால் மிகையாகாது! என் வயிற்றில்பாலைக் கறந்த பரம தயாளன் நீங்கள்தான்…” என்று அந்தம்மாள் தோத்திர மலர்களை உதிர்க்கும் போது, டாக்டருக்கு இரண்டு விதமான உணர்ச்சிகள் உண்டாயின. பெற்ற தாயாரின் அன்புத் துடிப்பின் உணர்ச்சி எத்தனை தூரம் எழும்பி உச்சத்தை எட்டியிருக்கிறது?… தாய் உள்ளத்தின் சக்தியே தனித்ததொன்றல்லவா? அதனால்தான், முற்றுந் துறந்த முனிவராயினும், பட்டினத்து அடிகள் தாயாரின் பால் மீளாத அன்பு கொண்டு, அவளுடைய அந்திம கரியைகளைத் தாமே செய்ய முன் வந்தார். மகான்களறியாததா! மற்றொன்று: பெற்ற தாயை முதலில் அலக்ஷியம் செய்த ஹரிதாஸர், அந்த விலையிலா மதிப்பை உணர்ந்து அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற தத்துவத்தை நிலை நாட்டினார். இது போல், இன்னும் எத்தனையோ உபமானங்கள் நம் நாட்டில் புதையல் போல் கிடக்கின்றன. அவைகளைப் படிப்பவர்கள் ஆயிரக்கணக்கான மக்களாக இருக்கலாம். ஆனால், அந்த நுட்பமான ஸாரத்தை அறிந்து, க்ஷண நேரமாவது அனுபவித்துச் செய்கிறவர்கள் உண்டா? அல்லது சிந்தித்துப் பார்ப்பவர்களாவது உண்டா!
மருத்துவத் தொழில் மூலம், எத்தனை விதமான உள்ளத் துடிப்புகளை… மகிழ்ச்சிகளை, ஆனந்தச் சிறகடித்துப் பறக்கும் புதிய, புதிய உத்ஸாகங்களைக் காண சந்தர்ப்பம் கிடைக்கின்றன. இத்தகைய அனுபவங்களை நேராகக் காட்டிப் பயிற்சியளிக்கும் ஒரு அனுபவப் பள்ளிக்கூடமென்றோ! இத்தகைய உணர்ச்சிக் கலையை போதிக்கும் உயர்ந்த கலாமன்றமென்றோ! இதைச் சொல்லலாம். இதே நிமிஷத்தில் அந்தப் பெற்ற தாயின் துடிப்பையும் கண்டேன். அதே தாயின் நிகரிலாத ஆனந்தத்தையும் காண்கிறேன்… என்ன உருக்கமான காட்சி!… என்று ஸ்ரீதரன் தனக்குள் எண்ணியபடியே, நோயாளியைக் கவனிப்பது போல், சிந்தனைச் சுழலில் சிக்கிச் சுழல்கிறான்.
அதே சமயம்… அடாடா! இத்தகைய அநித்யமான பாசபந்தத்தில் உழன்று மாறி, மாறி சுகமும், துக்கமும் அனுபவிப்பதையே மக்கள் சாச்வதமாய் எண்ணுகிறார்களே! இந்த அல்ப விஷயங்களில் உண்மையான மனச்சாந்தியை அடைய முடியுமா ! இவைகள் காலை வழுக்கும் பாசியல்லவா! மக்கள் பிறந்ததன் லக்ஷ்யத்தை அறியும் மார்க்கத்தைக் கூடச் சிந்திக்கத் தோன்றாமல் உண்டியே, உடையே! என்றும், ஊனே, ஊனே, உடலே! என்றும் சுயநலத்திற்குப் பாடுபட்டுக் காலத்தைக் கழிப்பதா சகலமான பிறவிகளைக் காட்டிலும் உயர் தரமான ஆறறிவு படைத்த மக்களின் லக்ஷ்யம்? என்ன விசித்திரமான உலகம்! துன்பத்தையே இன்பமாக நினைப்பதும், இன்பத்தையளிக்கும் சகலமான சிறந்த விஷயங்களையும், கடுமையான துன்பத்திற்குச் சமமாக நினைப்பதுமே, ஆனந்த வாழ்க்கையாக எண்ணும் உணர்ச்சியைக் காண வியப்புக்கு மேல் வியப்பாகவன்றோ இருக்கின்றது! உலகம் போகிற வழியை விட்டு, என் தாயார் மட்டும் வேறு வழியில் போக முடியுமா? என்னையும், இந்த ஆழங்கால் சேற்றில் பந்தப்படுத்தி, அதையே பேராநந்தமாகக் கண்டு களிக்க ஆசைப்பட்டுத்தான் என்னைத் தொந்தரவு செய்கிறாள் பாவம்!… என்று இந்தச் சிந்தனையின் சுழலில் தாயாரின் நினைவும் ஒரு அலை போல் மோதி கண் முன்பு காட்சியளிக்கச் செய்தது.
எத்தகைய பதிலுமே சொல்லாமல், டாக்டர் ஏதோ பலமான யோசனையில் அப்படியே அசைவற்று ஆழ்ந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டதும், பெண்ணின் தாயாருக்கு மிகவும் திகிலும், பலவிதமான எண்ணங்களும் தோன்றி வருத்துகிறது. சற்று முன்பு பயப்படாதீர்கள் என்று சொல்லிய அதே டாக்டர், எதனால் இத்தனை மவுனமாய் சமாதி நிலையில் உட்கார்ந்திருக்கிறார் என்ற பயம் தோன்றியதால், ஆவலே வடிவாய் டாக்டரை நோக்கி, “டாக்டர்! நீங்களிருக்கும் நிலைமையைப் பார்த்தால், என் வயிற்றில் சங்கடம் செய்து, அபாரமான பயத்தை உண்டாக்குகிறதே! என் கண்மணிக்கு எத்தகைய பயமும் இல்லையே? என் செல்வக் கனிக்கு எத்தகைய அபாயமும் இல்லையே?”… என்று மறுபடியும் துடிக்கும் உள்ளத்துடன் கேட்டாள்.
அதன் பிறகே, சுய நினைவு பெற்று விழித்துக் கொண்ட டாக்டர், சிரித்தபடியே, “தாயே! உயிருக்குப் பயமேயில்லை. நான் ஏதோ வேறு சிந்தனையி லாழ்ந்திருந்தேன். பகவான் உங்களுக்கு எத்தகைய குறையும் வைக்க மாட்டார். நான் சாயங்காலம் வரும் போது, ஜுரமே குறைந்து விடும்; பயப்படாமல், கடவுளை நம்பி இருங்கள். அவன் சாந்தியைக் கொடுப்பான்" என்று தத்வோபதேசமும் கூடச் செய்து விட்டுக் கிளம்பும் சமயம்... “டாக்டர்! கொஞ்சம் காப்பி சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும்”… என்று மிகவும் அன்புடன் கூறினாள்.
டாக்டர்:— தாயே! மன்னிக்க வேண்டும். நான் ஆங்கில முறையில் பயின்று, தொழில் செய்யும் டாக்டராயினும் நம் நாட்டு இயற்கையான பண்டைய பெருமையை, பழக்க வழக்க மகிமையைப் புறக்கணித்து, நாகரீகத்தில் மூழ்கும் மோகத்திற்கு அடிமையானவனல்ல. நான் வைத்யம் செய்யும் இடங்களில் எல்லாம் காப்பிக் குடியை விட்டு ஒழியுங்கள்; பதிலுக்குக் கேழ்வரகு கஞ்சியோ, வெறும் பாலோ அல்லது மோரோ சாப்பிட்டால், உடம்புக்குத்தானே வலிவு கொடுக்கும். வ்யாதியும் சிலவற்றை அண்ட விடாமல் தடுக்கும் சக்தி உண்டாகும் என்றுதான் நான் சொல்வது வழக்கம்.
பெண்மணி:— டாக்டர்! காப்பி குடித்தால் உண்டாகும் சுறுசுறுப்பு, மோரினாலும் பாலினாலும் வருமா? காலையில் இவைகளை எப்படிக் குடிப்பது?
டாக்டர்:—(பெரி தாகச் சிரித்துக் கொண்டே) தாயே! உங்களுக்கு ப்ரமாண, ப்ரத்யக்ஷம் ஸோடா வாட்டர் ஒன்றைப் பாருங்கள். அதன் காஸ் பவர் ஆறும் வரையில் அது ப்ரமாதமாய்ச் சீறுகிறது. ஆறி விட்டால், அந்தத் தண்ணீரை யாராவது சீந்துகிறார்களா! ஸோடாவிற்கு எத்தனை சக்தியிருக்கிறதோ, அதை விட அதிகமான சக்தி நம்முடைய பழய பாட்டிமார்கள் செய்யும் பெருங்காய கஷாயத்தில் இருக்கிறது! அது உடம்புக்குள் ஊற, ஊற வாயுவினாலும், உஷ்ணத்தினாலும் உண்டாகும் ரோகத்தை நன்றாகக் கண்டித்து, பூர்ண குணத்தை நிரந்தரமாக உண்டாக்கும் அது போல், காப்பி குடித்ததும் ஏதோ தேவலோகத்தில் உங்களை உயர்த்துவது போல் தோன்றுகிறதேயன்றி, இயற்கையாய் உள்ள சுய ஆரோக்யத்தை, சக்தியை அது கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறது! மோரிலோ, பாலிலோ உள்ள சத்து பதார்த்தம் காப்பியில் கிடையாது. தற்போது, மேல்நாட்டினர்கள் கண்டு பிடித்துள்ள பென்ஸிலின் என்கிற மருந்தில் என்ன ஸத்துக்கள் இருக்கிறதோ, அத்தனை சத்தும்... அதை விட உயர்ந்த ஸத்தும்… நாம் தினப்படி உபயோகப்படுத்தும் மோரில் இருக்கிறது! இவைகளை எல்லாம் நன்றாகத் தெரிந்து, நம் பெரியவர்கள் அந்தச் சிறந்த பதார்த்தத்தை நமது ஆகாரத்திற்கே பரதானமாய் வைத்திருக்கிறார்கள். இவைகளை நாம் கவனித்தால்தானேம்மா!… கேழ்வரகுக் களியும் கூழும் குடித்து விட்டு, வேலை செய்யும் உழவனுக்குள்ள பலம் நமக்கிருக்கிறதா பாருங்கள்!
பெண்மணி:- டாக்டர்! காலையில் நாங்கள் எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தயிரை விட்டுப் பழயதுதான் போடுகிறோம்.அதைக் கண்டு பிறர் பரிகஸிக்கிறார்களே!
டாக்டர்:- தாயே! ஊராருக்காக, நாம் வாழ்க்கையைச் செப்பனிட முடியுமா? நமக்காகவே நாம் வாழ வேண்டும். நமக்காகவே நாம் ஒரு கொள்கையைத் தீர்மானமாய் வகுத்துக் கொள்ள வேண்டும். கடவுளுக்கு முகோல்லாஸமாய் அவனுடைய தினக் குறிப்புப் புத்தகத்தில், சிறந்த முறையில் பதிவாகும்படியாக நடந்து கொள்ள வேண்டுமேயன்றி, ஒருவருக்குப் பயந்து வேஷம் போடுவது முட்டாள் தனமல்லவா? அம்மாதிரி, பிறரை த்ருப்தி செய்யும் முறையில் நாம் இறங்கி விட்டால், வாழ்க்கையில் சாந்தியை அடைய முடியாது. பழய சாதத்தை சிலர் பரிகஸிக்கலாம். இலை போட்டு கையால் எடுத்துச் சாப்பிடுவதைச் சிலர் பரிகஸிக்கலாம். தலையை லட்ச்மீகரமாக வாரிப் பின்னலிடுவதை சிலர் பரிகஸிக்கலாம். ஜாதி, மத வழக்கப்படி உடையணிவதையும், நெற்றியில் அலங்காரமாய்ப் பொட்டிடுவதையும் சிலர் பரிகசிக்கலாம். இவைகளுக்காகத் தம், தம் கொள்கைகளை விட்டு விட்டு, டேபிலில் கரண்டியினால் சாப்பிடவும், தலையை பாழ் செய்யவும், முகத்தை அவலக்ஷணமாய் பாழும் முகமாய் வைக்கவும், துணிந்தால் வாழ்க்கை வெகு விரைவில் வேம்பாகி விடுமேயன்றிக் கரும்பாக இருக்க முடியாது.
பதார்த்தங்களுடன், வாயில் சுரக்கும் உமிழ் நீருடன் கலந்து, சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் ஆகாரத்தின் ஸத்துக்களை விட, உமிழ் நீரின் ஸத்து அமுதம் போன்றதாகும். அதுவும் கலந்தால், வெகு நன்றாக இருக்கும். காக்காய் கொத்துவது போல் கரண்டியினால்… ஊசியினால் குத்தித் தின்பது ஒரு பெருமையும் அல்ல! ஆரோக்யமும் அல்ல!.… அடடா!… நான் ஏதேதோ விஷயங்களைப் பேசிக் கொண்டு காலத்தை வீணாக்கி விட்டேனே… நான் வருகிறேன்; பயப்படாதீர்கள்” என்று கூறிக் கொண்டு கிளம்பினான்.
இதற்குள் வீட்டு எஜமானர் ஓட்டமாக ஓடி வந்து, “குழந்தை எப்படி இருக்கிறாள்… டாக்டர்! நன்றாக பார்த்தீர்களா?” என்றார். “நன்றாகப் பார்த்தேன்; பயமில்லை” என்று பொதுவாகக் கூறினார். “டாக்டர். இங்கு வந்ததற்கு…” என்று முடிப்பதற்குள், ஸ்ரீதரன் சற்று கம்பீரமான தொனியில், “விஸிட்டிங் பீஸ் 25 ரூபாய் ; இந்த ஊசி குத்திய மருந்தின் விலை 15 ரூபாய்; இந்த மாத்திரை 10 ரூபாய்; ஆக 50 ரூபாய் கொடுக்க வேண்டும்”… என்றதைக் கேட்டதும், இத்தனை நேரம் தடபுடலாகப் பேசி, பல விஷயங்களையும் அறிந்து கொண்ட அந்த அம்மாளின் முகம் சுருங்கியது.
தன் கணவன் முகத்தைப் பார்க்கிறாள். அவர் மனைவியைப் பார்க்கிறார். இருவரையும் கடைக்கண்ணால் டாக்டர் பார்த்து, உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். தம்பதிகள் உள்ளே சென்று... “நான் வருவதற்குள் டெலிபோன் செய்து, இந்த டாக்டரை ஏன் அழைத்தாய்? நான்தான் ஓடி, ஓடி வருகிறேனே... இவன் பெரிய மொடா முழிங்கியல்லவா! பணக்காரர்களிடம் அட்டைபோல் உறிஞ்சும் பிசாசல்லவா! ஒரு நிமிஷம் வருவதற்கு 50 ரூபாயா?…” என்றார்.
மனை:- சரிதான்! குழந்தை இருந்த இருப்பைப் பார்த்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்களோ! உயிரே நின்று விட்ட மாதிரியல்லவா ஆய் விட்டது. எலக்ஷன் செலவில் இதுவும் ஒன்று என்று வைத்துக் கொண்டு பணத்தைக் கொடுத்தனுப்புங்கள்—என்று கூறியபடி 50 ரூபாயை எடுத்துக் கொடுக்கும் போது, கையில் தேள் கொட்டுவது போலவே தோன்றியது!
“குழந்தைக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றினீர்கள். மாலையில் எப்படி இருக்கிறது என்பதை போனில் சொல்லுகிறேன்…” என்று இழுப்பதற்குள், டாக்டர் சிரித்துக் கொண்டே, “சரிதான் ஸார்! தாங்கள் தெரிவித்த பிறகே வருகிறேன்” என்று கூறி விட்டு, பணத்தை ஜேபியில் போட்டுக் கொண்டு கம்பீரமாய்ச் சென்றான். “ஏண்டீ! ஸமயா ஸமயம் அறியாமல், டாக்டர்களைக் கூப்பிடலாமா? இந்த டாக்டர்தான் கொள்ளையடிக்கும் வள்ளலாயிற்றே! இவனையா கூப்பிடுவது? இந்த 50 ரூபாயிருந்தால், ஆளுக்கு 5 ரூபாய் வீதம் பத்து ஓட்டுக்கள் எனக்கு வந்திருக்குமா? அனாவச்யமான செலவை இப்போதா வைப்பது?” என்று மனைவியைக் கடிந்து கொண்டார்.
மனைவி:- நான் மட்டும் சும்மாக் கூப்பிடவில்லை. உங்கள் சகோதரியார், இந்த டாக்டருக்கு நமது மகளைக் கொடுக்கலாம் என்றும், அவர்களைப் பற்றி வானளாவிப் புகழ்ந்தும் பேசினார்கள். அதோடு, அவர்களுடைய வீட்டிற்கும் சென்று விசாரித்துக் கொண்டு வந்தார்களாம். அந்த நன்மையை உத்தேசித்து, இந்த ஆபத்தான சமயத்தில் அவரைக் கூப்பிட்டேன்… அடேயப்பா! டாக்டராக வந்திருக்கையிலேயே கொள்ளையடிக்கும் பேர்வழி, மருமகப் பிள்ளையாய் வந்து விட்டால், நம்மைக் கசக்கிச் சாறுதான் பிழிந்து விடுவான் போலிருக்கிறது! போதும்!… இந்த சம்மந்தம் நமக்கு வேண்டாம். வேண்டுமாயின், அக்கா மகளையே கொடுக்கட்டும்—என்று முற்றுப் புள்ளி வைத்துக் கூறினாள். தம்பதிகளின் இதயங்களில், தம் மகளுக்கு ஆபத்து நீங்கி, குணமுண்டாகியதே என்கிற சந்தோஷம் பொங்குவதை விட்டு, 50 ரூபாய் போய் விட்டதே என்ற துக்கந்தான் அதிகமாய் பாதித்தது!