உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 3

விக்கிமூலம் இலிருந்து

3

டாக்டர் சந்தோஷத்துடன் வெளியே வந்தவர், நேராக தர்ம வைத்யசாலைக்கு வழக்கம் போல் சென்றார். இவர் வரவுக்காக, ஏராளமான நோயாளிகள் காத்திருப்பவர்களை எல்லாம் ஒரு முறை பார்த்துத் தனது ஆதரவைக் காட்டி, மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு, அந்த ஸ்தாபனத்தின் மானேஜராகிய ராமனைக் கூப்பிட்டு, “ஸார்! எந்தெந்த மருந்துகள் ஆய் விட்டதோ, அதன் ஜாபிதாவைக் கொண்டு வாரும், எழுதிக் கொடுக்கிறேன். இதோ 500 ரூபாய்! இதைக் கொண்டு போய், மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்து வையும்; இவ்வாரத்தில் பெரிய மனிதர்களின் வீட்டில் கிடைத்த துகை இது; இந்தாரும்” என்று கூறி, 500 ரூபாயைக் கொடுத்து, மருந்துகளின் ஜாபிதாவின்படி எழுதிக் கொடுத்து விட்டு, வழக்கப்படி சில நோயாளிகள் வீடுகளுக்குச் சென்று பார்த்துப் பின்பு வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

தன் தாயாருடன் யாரோ பேசிக் கொண்டிருப்பது கண்டு தான் வந்தது தெரியாமல், தன் விடுதிக்குச் செல்லப் போகும் வழியில், தன் தாயார் விசும்பி, விசும்பி அழும் குரலும், அதற்கு மிக மெல்லிய குரலில் சமாதானம் கூறும் வார்த்தையும் காதில் பட்டதும், தன்னையறியாத விதம், அவ்வறையின் ஜன்னலுக்கருகில் சென்று நின்று கவனிக்க வாரம்பித்தான்.

கமலவேணி:-நிஜமாகவா நீங்கள் சொல்கிறீர்கள்? என்னால் நம்பவே முடியவில்லையே ! என் செல்வ மகனா இப்படிப்பட்டவன்?

கிருஷ்ணவேணி:- கமலம்! நானும், நீயும் இன்றய சினேகிதிகளா? ஆதிமுதல் பழக்கப்பட்டவர்களல்லவா? தன் கண்ணாலேயே பார்த்த பிறகுதான், என் கணவர் என்னிடம் சொன்னார்… ஐயோ பாவம்! உன் சினேகிதி, கமலவேணி, தன் மகனைப் பற்றி ப்ரமாதமாய் எண்ணி ஏமாறுகிறாளே! அவன் கல்யாணம் வேண்டாம் என்றதற்குச் சரியான காரணமும் கூறாமல், ஏதோ சாந்தியாம், சிகரமாம் எதையோ கூறி அந்தம்மாளை அவன் ஏமாற்றி விடுகிறான். அவன் ப்ரதி தினமும் இரவு 8 மணிக்கு, செங்குன்றத்திற்குச் சமீபத்திலுள்ள ஒரு பெரிய பங்களாவுக்குச் செல்கிறான். இரவு 10, 12 மணிக்கு மேல் வெளியில் வருகிறான். இந்த அதிக ப்ரஸங்கித்தனமும், ஊழலும் இருப்பதனால்தான், அவன் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, கல்யாணம் வேண்டாம் என்று, தான் மகா உத்தமன் போல் ஸாதிக்கிறான். எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கிறது; இதை உடனே உன் சினேகிதை இடம் சொல்லு… என்று என் கணவர் வற்புறுத்திச் சொல்லியதால், நான் வந்தேன். நீ என்னமோ, அவன் சொல்வதை நம்பித்தானிருக்கிறாய்... விஷயமோ விபரீதமாயிருக்கிறது!

கமல:- எனக்கு உண்மையில் நம்பிக்கையே கொள்ளவில்லையே… என் ஸ்ரீதரனா இப்படி துன்மார்க்க விஷயத்தில் இறங்குவான்?… அந்த இடத்தில் யாரிருக்கிறார்கள்? நல்ல குல ஸ்த்ரீயாக இருந்தால், நாமே பார்த்து, அவன் இஷ்டப்படியே விவாகத்தை முடித்து விடலாமே. அவன் மனதும் சந்தோஷமாகும், என் குறையும் தீரும்…

கிருஷ்:- ஐயோ பைத்தியக்காரி! அந்த வீட்டில் யாரோ தேவதாசி புதிதாகக் குடி வந்திருக்கிறாளாம்; அவளுக்கு நான்கு பெண்கள் இருக்கிறார்களாம். அந்த தாசி மிகவும் படித்தவளாம்: கச்சேரிகாரியாம். ஒரு பெண்ணை பரதநாட்டியக் கலையிலும், ஒரு பெண்ணை ஹரிகதா காலக்ஷேபக் கலையிலும், ஒரு பெண்ணை உயர்தர உபாத்தியாயினியாகவும், ஒரு பெண்ணை டாக்டராகவும் படிக்க வைத்திருக்கிறாளாம்…

கமல:- என்ன ! என்ன ! தேவதாசிப் பெண்களையா இப்படிப் பழக்கி இருக்கிறாள்? டாக்டராக வேலை செய்கிறாளா? அல்லது இப்போதுதான் படிக்கிறாளா?…

கிருஷ்:- வேலை பார்க்கிறாளாம்; ப்ரஸவ ஆஸ்பத்ரியில் அவள் டாக்டராம்; அவளுக்கு அபாரமான புகழாம்; கைராசிக் காரியாம்; நல்ல அழகியாம்; தொழில் முறையில்தான் அவளிடம் பழகுகிறானோ? அல்லது…

கமலவேணியினால் இதைச் சற்றும் தாங்க முடியாது, விம்மி விம்மி அழத் தொடங்கினாள். ஆதியில் தன் கணவன், இத்தகைய துர்ச்செய்கையின் விளைவினாலேயே, சகல விதத்திலும் கெட்டுப் பாழாகிக் கடைசியில் தாய் நாட்டையும் விட்டு ஓடி மறைந்த பயங்கர சம்பவம் அவள் கண் முன்பு படம் போல் சுழன்று, இதயத்தைத் தாக்கியதால், அப்படியே கண்களை மூடியவாறு சாய்ந்து விட்டாள்.

அதே சமயம், கமலவேணியின் சிறிய குமாரன் அங்கு வெகு படபடப்புடன் வந்து, “அம்மா சற்று முன் நான் சொல்லியதை நீ நம்பாது, என்னையே எதிர்த்தடித்துப் பேசினாயே ! இதோ உன் ஆப்த சினேகிதையே சொல்வதைக் கேட்டாயா? நானும் வெளியில் நின்று கவனிததுத்தான் வந்தேன். அண்ணா வர, வர வெகு மோசமான நிலைமையில் இறங்கி விட்டதைக் கண்டித்துத் திருத்த வழி தெரியாமல், அவனுக்காக என் வாழ்நாளையும். பாழ் நாளாக்குகிறாயே! இது எந்த வீட்டில் நடக்கும் அம்மா! முதலில், நான் விரும்பும் பெண்ணை எனக்கு மணம் செய்து வைத்து, எனக்குள்ள சொத்துக்களை உடனே பாகம் செய்து கொடுத்து விடவேண்டும் தெரிந்ததா? இவனுடைய வீண் அட்டகாஸ ஆடம்பரச் செலவிற்கும், ஊதாரித் தனத்திற்கும் நான் இடங் கொடுக்க முடியாது. இக்காரியத்தை நீ முதலில் கவனித்துச் செய்யா விட்டால், எது எப்படி நடக்கும் என்று சொல்லமுடியாது. நீ சொல்லும் நொண்டிச் சாக்கு இனி எனக்கு வேண்டாம். அண்ணன் ஒரு தேவதாசியை ரிஜிஸ்தர் மணம் செய்யப் போகிறான்; தம்பி எந்த ஜாதிக்காரியை இழுத்துக் கொண்டு ஓடப் போகிறானோ ? என்று இப்போதே சுற்று வட்டாரங்களில் பெரிதாக கலாட்டா செய்து, என்னிடம் நேரிலேயே பேசுகிறார்கள். இந்த அவமானத்தை விடப் பெரியதா, அண்ணனுக்கு முன்பு எனக்கு மணம் செய்வது?”.

என்று வெகு ஆத்திரத்துடன் கூறியதைக் கேட்ட கிருஷ்ணவேணியம்மாள் அதை ஆமோதிக்கும் முறையில், “இதோ பாரு கமலம்! இவன் சொல்வது மிகவும் சரியான பேச்சு. உன் மூத்த மகன் என்னவோ சீர்திருத்தவாதி என்றும், சமூகத் தொண்டு செய்து புரட்டி விடப் போகிறேன் என்றும், ஏதேதோ பறைசாற்றி, மக்களை ஏமாற்றுகிறான். தகாத முறையில் ரிஜிஸ்தர் மணம் செய்த பிறகு, ஏற்கெனவே உள்ள கரும்புள்ளியுடன் இதுவும் சேர்ந்தால், யார் பெண்ணைக் கொடுப்பார்கள்? என் தம்பியின் மகள் தாராபாய் வெகு அழகாயும், புத்திசாலியாயும் இருக்கிறாள்! அவளை மணம் முடித்து விடு. நான், இன்றே அதற்கான ஏற்பாடுகளும் செய்து விடுகிறேன். நீ இனி மேலும், மூத்த மகனின் பொய் பித்தலாட்டங்களை நம்பி ஏமாறாதே. இவனுக்கு நீ சரியான சமயத்தில் விவாகம் செய்யா விட்டால், இவனும் தகாத வழியில் போய் விட்டால், உன் குடும்பம் உருப்படுவது எப்படி? உன் மருமகப்பிள்ளைகளும், சம்மந்திகளும் உன்னை ஏசிப் பேசிக் கேலி செய்ய மாட்டார்களா? இதனால், உன் பெண்களுக்குச் சிறுமையல்லவா விளையும்! உன்னிடம் அனுப்புவார்களா? பிறந்தகத்தின் சீரும், சிறப்பும் அறவே மறைந்து விடுமானால், அந்தப் பெண்களின் உள்ளம் உடைந்து, வியாதியில் வீழ்ந்து விட்டால், உன் கதி என்னவாகும்” என்று வெகு கனிகரத்துடன், கார ஸாரமாய்க் கூறி, மனத்தைக் கலைத்து, சரியானபடி தூப, தீபம் போட்டு உடுக்கையடித்தாள்.

பக்கம் 16

இத்தனை நேரமும் ஜன்னலுக்கு வெளிப்புறம் நின்று, சகல விஷயங்களையும் கேட்டுக் கொண்டு நின்ற ஸ்ரீதரனுடைய மனத்தில், சற்றும் ஆத்திரமோ, கலக்கமோ உண்டாகவில்லை. உலகம் போகிற போக்கைப் பார்த்துத் தனக்கு இதுவும் ஒரு பாடமாகவே எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டான். தான் வந்து நிற்கும் ஜாடையைக் கூடக் காட்டிக் கொள்ளாமல், மேலும் என்ன நடக்கிறது பார்ப்போம் என்று மவுனமாக நின்றான்.

கமலவேணியின் கலக்கத்தில் பதில் பேசவே முடியாது தவித்தவாறு, “ஏற்கெனவே குழம்பித் தத்தளிக்கும் என் மனத்தை நீயும் கூடச் சேர்ந்து வாட்டாதேம்மா! எப்படித்தான் நீங்கள் சொன்னாலும், என் கண்மணி ஸ்ரீதரன் மீது என் மனம் சந்தேகமே கொள்ள மாட்டேனென்கிறது. என்னவிருந்தாலும், இத்தகைய விஷயங்களைச் சட்டுபுட்டென்று நம்பி மேல்கொண்டு, ஏதாவது செய்து விட்டால், பிறகு எத்தனையோ துன்பமாக முடியும்.

மூத்த மகன் ராஜாவைப் போல், அழகாயும், செல்வாக்குடனும் உலகோரால் போற்றப்படும் முறையிலும் இருக்கையில், அவனை விட்டு விட்டு, இளையவனுக்கு மணம் செய்து விட்டால், உலகம் என்ன நினைக்கும் தெரியுமா? மூத்தவனுக்கு ஏதோ கொடிய வ்யாதியோ, அன்றி யோக்யதை யற்று விட்டதோ, அன்றி வீரம் நிறைந்த ஆண் பிள்ளையில்லையோ என்கிற பலவிதமான கேள்விகளுக்கு இடம் உண்டாகும்; எப்படியாவது அவனைக் கெஞ்சிக் கூத்தாடி, மன்றாடிக் கேட்டுக் கொண்டு, தகுந்த பெண்ணைப் பார்த்து மணம் செய்வித்து, அவனுடைய நன்மையைக் கோருவேனே யன்றி, ஆத்திரப்பட்டு எதையும் செய்ய மாட்டேன்... தம்பீ!… நீயும் சற்று பொறுமையாயிரப்பா! உன் அண்ணா ஸாமான்யப் பட்டவனல்ல. அவனே உனக்குச் சரியான இடத்தில் பெண்ணைத் தேடி மணம் செய்து வைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பதறாதே தம்பீ!” என்று மிகவும் சாந்தமாய்க் கூறினாள்.

முன்னிலும் அதிகமான ஆத்திரத்தையடைந்த தம்பி, பதிலே பேசாமல் தட,தடவென்று விறைப்புடன் சென்றான். கிருஷ்ணவேணியும் சென்று விட்டாள். தன் தாயின் உள்ளத் துடிப்பின் உச்சத்தையறிந்த ஸ்ரீதரனுக்கு, என்ன விதமாய் நாம் இந்த மகத்தான சோதனையிலிருந்து தப்ப முடியும்? எவ்வாறு என்னருமைத் தாயாருக்குப் பதில் சொல்ல முடியும்? என்ற மகத்தான கலக்கம் உண்டாகி விட்டது. தன் மீது அளப்பரிய அன்பை ஆழமாய் வைத்து, உருகும் தாயை இந்நிலைமையில் தனியாக விட்டுச் செல்லவும் மனமின்றித் தத்தளித்தான்.

சற்று முன்புதான் தாயின் தவிப்பை அறிந்து, மனத்தில் நன்றாகத் தோய்ந்திருக்கும் உணர்ச்சிக் கனல் மீண்டும் தலை தூக்கி நின்றது. தன்னுடைய அடிப்படையான லட்சியத்தின்—தீவிரமான தீர்மானத்தின் - முடிவைச் சிதைத்துக் கொலை செய்து, ஊழல் குப்பையில் ஊடாடுவது முக்யமா? பெற்ற தாயாரின் ஆழமான அனபிற்குக் கட்டுப்பட்டு, முன்னறி தெய்வமான அன்னையின் இதயத்தைக் குளிரச் செய்வது முக்யமா? இத்தகைய மகா சோதனையான தர்மசங்கடத்தில், அவன் உள்ளம் குழம்பித் தவிக்கிறது. உலகிற்கெல்லாம், சகல வ்யாதிகளுக்கும் மருந்து கொடுத்து, குணப்படுத்தும் சக்தி வாய்ந்த நான் என் தாயின் மனோவ்யாதியைக் குணப்படுத்தா விட்டால், நான் சண்டாளனிலும் கேடு கெட்ட சண்டாளனாக வன்றோ ஆய் விடுவேன். அந்தப் பாபத்தைச் செய்து விட்டு, நான் எனது லட்சிய ஸித்தி பெற்றால் மட்டும், மனச் சாந்தியை—சாந்தியின் சிகரத்தை— அடைய முடியுமா? அப்படி என்னுடைய லக்ஷ்யப்படிக்கு நான் செய்து முடித்தாலும், அதைக் கடவுள் ஏற்று மகிழ்ந்து, என்னை வாழ்த்தி என்னுடைய சகல மனோபீஷ்டத்தையும் நிறைவேற்றுவாரா? இதென்ன சோதனையின் கொடுமை?… ஐயோ! அம்மா, ஏன் இப்படி விம்மி, விம்மி அழ வேண்டும் ? தம்பியின் முறைப்பால் நாசம் விளைந்து, அம்மாவின் இதயமே உடைந்து விடுமே யன்றி, ஏற்கெனவே நொந்து அளிந்த புண்ணாயுள்ள அவளது இதயத்திற்கு ஆறுதலும், சந்தோஷமும் எப்படி உண்டாகும்? அக்கினி சாட்சியாகக் கட்டிய கணவனால் ஒரு சுகமும்—மகிழ்ச்சியும்—-அடையாது, பெருத்த ஏமாற்றத்தையடைந்து நொந்து போன என் அன்னையின் உள்ளத்தைப் பின்னும் அளிந்த புண்ணாகச் செய்வது கொடுமையிலும் கொடுமையல்லவா?… நான் என்ன செய்வேன்?” என்று தத்தளித்தவாறு நின்றான். சில வினாடிகள் ஏதோ யோசனை செய்து கொண்டு, சடக்கென்று தன் தாயாரின் முன்பு ஓடி, அவள் முன் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து எழுந்து பின், “அம்மா! நீ கண் கலங்காதே! என்னுள்ளம் வெடித்து விடும் போல் இருக்கிறது, இங்கு நடந்த சகல விஷயங்களையும் நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன். இதோ பார்? அம்மா!” என்று கூறியவாறு ஒரு கடிதத்தில் பரபரப்புடன் சில வரிகளை எழுதினான். அதாவது:-

"என்னாருயிர்த் தம்பீ! தாமோதரா! நம்முடைய சொத்துக்கள்… வீடு வாசல், நகை நட்டு, நிலம், தோப்பு, ரொக்கம் முதலிய சகலத்தையும் நீயே அடைந்து, உன்னிஷ்டப்படியே செலவு செய்து கொள்ளும் உரிமையை, சத்யமாய், நான் த்ரிகரண சுத்தியாய் உனக்குக் கொடுத்து விட்டேன்; நீ வீணாக மனக் கலக்கமடையாதே. நம் முன்னறி தெய்வமாகிய தாயார் மனத்தை நோக வைக்காதே. நீ விரும்பும் பெண்ணை, நானே முன் நின்று விவாகத்தை சம்பிரமமாகச் செய்து வைக்கிறேன். என்னால் உன் விவாகம் தடைபடுவதை நான் சற்றும் சம்மதிக்க மாட்டேன்… என்னைப் பற்றி நீ என்னென்ன விதமாய்க் கேள்விப்பட்டாலும், அது பற்றி நான் கவலை கொள்ளவில்லை. அதனால், எனக்கு எத்தகைய தீங்குமில்லை. பகவானின் பதிவுப் புத்தகத்தில் என்னுடைய பெயர் சரியான முறைப்படி பதிவானால் போதும். தம்பீ! இக்கடிதத்தை என் பூர்ண எண்ணத்துடன் எழுதுவதால், இதையே நீ உயிலாக எண்ணிக் கொள்; எந்தக் காலத்திலும், எந்தச் சமயத்திலும் இதைப் பற்றி நான் எவ்வித கேள்வியும் கேட்க மாட்டேன். இது சத்யம். என் மனோபீஷ்டம் நிறைவேறி, நான் எதிர்பார்க்கும் சாந்தியின் சிகரத்தில், என்னைச் சேர்ப்பதற்கு இனி எந்தவிதமான தடையும் இல்லை என்று எண்ணுகிறேன். நீ சகலவித ஸௌபாக்யங்களுடனும், சந்தான சம்பத்துக்களுடனும் க்ஷேமமாயிருக்க பகவானை வேண்டுகிறேன். மறுமுறையும் சொல்கிறேன்: ஒரு செல்லாத காசுகூட எனக்கு வேண்டாம். நான் விரோத பாவத்துடன் இதைச் சொல்லவில்லை. இதய பூர்வமாய்ச் சொல்கிறேன். இதற்குச் சாட்சி ஆண்டவனே !

இங்ஙனம்,
உன் க்ஷேமத்தைக் கோரும் அண்ணா,
டாக்டர் ஸ்ரீதரன்

என்பதை வெகு விரைவில் எழுதி, ஒரு முறை படித்துப் பார்த்துப் பின் தன் தாயாரிடம் கொடுத்து, “அம்மா! இதைப் படித்துப் பாரம்மா!” என்று வினயமாய்க் கூறினான். கமலவேணியம்மாளும் பரபரப்புடன் படிக்கத் தொடங்கினாள்.

தன் காலில் முதலில் டாக்டர் விழுந்து நமஸ்கரித்த போது, அவன் மனம் மாறி விட்டதாயும், தான் விவாகம் செய்து கொள்வதாய்ச் சொல்லப் போகிறான் என்னும் எண்ணம் மின்வெட்டுப் போல், பளிச்சென்று தோன்றி, ஒரு க்ஷணத்திற்குள் ஏதேதோ எண்ணங்களாகிய அலைகள், இதயக் கடலில் கொந்தளிக்க வாரம்பித்தன. எந்தப் பெண்ணைத் தேடி, விவாகத்தைச் செய்து வைக்கலாம்? என்று கூட யோசனை உண்டாகிப் புதிய உணர்ச்சி வயப் பட்டுள்ள அடுத்த க்ஷணமே இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு ஈட்டியால் குத்துவது போன்ற அதிர்ச்சி உண்டாகித் துள்ளச் செய்தது. பெருமாள் பெரிய பெருமாளாகிய கதை போல் கல்யாணம் மட்டும் வேண்டாமென்று சொல்லியது மட்டுமின்றி, சகல சொத்துக்களையும் பரித்யாகம் செய்து எழுதியிருப்பதைக் கண்டு குடல் குமுறுகிறது. கடிதத்தைப் பிடித்துள்ள கைகள் கிடுகிடு என்று நடுங்குகிறது. கண்ணீர் ஆறாய்ப் பெருகுகிறது. வெயர்வை வெள்ளம், கால் முதல் தலை வரையில் பொங்கி ஓடுகிறது. இருவரும் வாய் திறவாத மவுன நிலையில் கல்லாய்ச் சமைந்து சில வினாடிகள் பதுமை போலானார்கள்! “அம்மா!”… என்று குரல் தடுமாறக் கூப்பிட்டான் …“ஸ்ரீதரா!… இதுதான் நான் செய்த பாக்யத்தின் சாயலா?… உன்னைக் குளுகுளுப்பான அழகிய அடர்ந்த தோப்புப் போல் பார்க்க எண்ணிய என் கண்களுக்குப் பாலைவனம் போன்ற பயங்கரக் காட்சியையா காணச் செய்யப் போகிறாய்? இதென்ன கடிதம்? இது என்ன செய்கை?… அப்பா ! இது கடிதமா? காலன் விடும் ஓலையா ? பெற்ற வயிற்றின் துடிப்பை அறியும் சக்தி உனக்குக் கடுகளவும் இல்லையா? உன்னிதயத்தை நான் பூஞ்சோலை என்று எண்ணி இருந்தேனே. அது வெறும் வரண்ட காடாகவன்றோ இருக்கிறது! இக்கடிதத்தை நான் ஒரு போதும் உன் தம்பியிடம் கொடுக்க மாட்டேன்.

இரட்டை மாடுகளைப் பூட்டிய வண்டியிலிருந்து, ஒரு மாட்டைப் பிரித்து வண்டியையும், வண்டியிலுள்ள சாமான்களையும் சின்னாபின்னமாய்ச் சிதறவடிப்பது போல் நம் குடும்பத்தின் கட்டுக்கோப்பான நிலைமையை அழித்துச் சிதறிப் போகச் செய்வது ஒரு பெற்ற தாயின் கடமையல்ல. நீ எத்தனை உயர் தரப் படிப்பு படித்திருந்தாலும், சாதாரண இச்சிறிய விஷயத்தில், உன்னிதயம் துளாவிப் பார்க்கவில்லை. ஒரு நாட்டின் கண்ணியம் அழிவது ப்ரஜைகளின் அக்ரமத்தினால்; அது போல், ஒரு வீட்டின் கண்ணியம் குலைவது, மக்களின் மதி கெட்ட தனத்தினால் என்பதை நீ உணரவில்லையா?… ஸ்ரீதர்!… ஏன் இந்த மவுனம்?… உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் வயிறு குளிரச் செய்ய உனக்கு மனமில்லையா? பாலூட்டி வளர்த்த தாயின் வயிற்றில், பாலை வார்க்க நீ ப்ரியப்படவில்லையா? எத்தனை வேதாந்தம் பேசினாலும், அதுவும் வாழ்க்கைக்கு ஒரு சிறிது வேண்டியதுதான். எனினும், அதற்காக உன் குடும்பம் கிளைத்துச் செழித்து, இம்மைக்கும, மறுமைக்கும் ஸார்த்தகத்தைத் தேடிக் கொள்ள வேண்டாமா?…

என்று தனது உணர்ச்சிக் கனலை அள்ளி வீசி, மெஷின் போல் சொல்லும் வார்த்தைகள் எதற்கும் டாக்டர் பதிலே பேசாமல், சிலை போல் கைகளைக் கட்டி நிற்கிறான். அந்த ஹாலில் மாட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், மகாத்மா காந்தி அடிகள், ஸ்ரீராமாநுஜர், சங்கரர், பட்டினத்தார் முதலிய மகான்களின் படங்கள் மீதே அவன் கண்கள் சென்று லயித்திருப்பதைக் கண்ட கமலவேணி உள்ளம் கதி கலங்கியது!… “ஸ்ரீதர்! என்ன பார்க்கிறாய்?… என்று வருத்தம் தேங்கிய குரலில் கேட்டாள்.

ஸ்ரீதர:- தாயே! அந்த மகான்களைப் போல் த்யாகத் தீயில் குளித்துப் புனிதமான தொண்டாற்றி, அப்பழுக்கற்ற பேரின்ப நிலையை அடைந்து, உள்ளம் பூரித்துச் சாந்தியின் சிகரத்தில், ஆனந்த வாழ்க்கையை நடத்தவே பார்க்கிறேன்…

“என்ன என்ன!… சன்யாசியாகவா? துறவியாகவா? …ஸ்ரீதர்! உன் பெற்ற தாயின்…”

“அம்மா! உன்னை அரை க்ஷணமும் விட்டுப் பிரியவே மாட்டேன். மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையை வளர்க்கப் பெரும் உதவி புரிந்த ச்ரவணன் கதையைப் போல், உன்னை நான் என் சிரசில் சதா தூக்கித் தாங்கிக் காப்பாற்றுவேன். அநித்யமான உலக பாச பந்தங்களில் உழன்று ஆத்மஹத்தி செய்து கொள்வதற்கொப்பான பாபக் குட்டையில் உழல வேண்டாம். தாயே!… நித்யமான வஸ்துவின் பாதங்களில் சேருவதற்கு வழியைத் தேடிக் கொள்வோம்… இந்த சொத்து, சுதந்திரம், சகல பந்தங்களையும் விட்டு விடு… என்னோடு நீ வந்து விடு…

“ஐயோ!… போதும்… போதும்… நிறுத்து! தம்பீ! நிறுத்து!… என் வாழ்நாளில் நான் கண்ட பயங்கர சோதனைகள் போதாமல், நீ வேறு என்னைச் சோதிக்கப் போகிறாயா? உன் தந்தை சென்ற இடம் தெரியாது மறைந்த அதிர்ச்சியும், ,அவமானமும் இன்னும் என்னிதயத்தில் மறையாத புண்ணாயிருக்கிறதை, நீ உணராமல் அளிந்த புண்ணில் அம்பை எய்து வேடிக்கை பார்க்கிறாயா? ஐயோ என்னுயிர் நீங்கி விடக்கூடாதா?… கடவுளே!… ரக்ஷகா! உனக்கு இத்தகைய விளையாட்டுக்களைச் செய்து வேடிக்கை பார்ப்பதா அழகு?…” என்று படபடத்துக் கூறிய வேகத்தில், தடாரென்று உணர்ச்சி மிஞ்சி ரத்தக் கொதிப்பும், அதிக வேகமும் உண்டாகி விழுந்து விட்டாள்.

மகா மேதாவியான டாக்டர் தான் பட்டங்கள் பெற்றுப் புகழடைந்ததை விட, அனுபவம், அன்பு, பணிவு, நோயின் நுட்பமறிந்து வைத்தியம் செய்யும் திறமை, கைராசி, தயாள குணம் முதலிய சகல அம்சங்களும் நிறைந்திருப்பினும்… நாட்டிற்கு அரசனாயினும் வீட்டிற்குக் குழந்தைதான்… என்பது பழமொழி; அது போல், பெற்ற தாயாருடைய தவிப்பையும், உணர்ச்சியின் உச்ச ஸ்வரத்தையும் அன்பின் ஆழத்தையுங் கண்டு, கதி கலங்கி நின்ற சமயம், அவள் விழுந்து விட்டதைக் கண்டதும் ஒன்றுமே தோன்றாமல், அலறிப் போய் “அம்மா!” என்று ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து தாங்கிக் கொண்டான். அவனுடைய உள்ளத்தில் விவரிக்க இயலாத சங்கடம் உண்டாகி வதைக்கின்றது.

சிறு குழந்தையை வாரி எடுப்பது போல், அவளைத் தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். தான் எழுதிய

கடிதத்தை அடியோடு மறந்தான். கமலவேணியின் கையிலிருந்து கடிதம் நழுவி ஒரு பக்கம் விழுந்து விட்டது. தாயாரின் நிலைமையை டாக்டர் என்ற முறையில் சோதித்துப் பார்த்த ஸ்ரீதரனுக்கு, தன் தலையில் வானமே இடிந்து விழுந்து விட்டது போல் தோன்றியது!… “ஐயோ! அம்மாவின் நிலைமை திடீரென்று படுமோசமாகி விட்டதே!… பாவி என்னாலல்லவா இத்தகைய விபரீதமான அபாய நிலைமை வந்தது?… தம்பீ! தாமோதரா!… இங்கு வாயேன்!…” என்று தன்னை மீறிய அன்புடன் கத்தினான்.

தன்னறையிலிருந்த தாமோதரனுக்கு இச்செய்தி எட்டியதும், ஓட்டமாக ஓடி வந்தான். “தம்பீ! அம்மாவைப் பார்த்துக் கொள்; இதோ ஒரு க்ஷணத்தில் போன் செய்து, பெரிய டாக்டரை வரவழைக்கிறேன்” என்று கூறி ஓடினான்... தாமோதரனின் கோபம் நிறைந்த உள்ளத்திலும், தாயின் பரிதாபகரமான நிலைமையின் காட்சி அன்பையும், துக்கத்தையும் உண்டாக்கியது… “அம்மா!” என்று கத்தி அழைத்தான்… திடீரென்று எக்காரணத்தினால் இப்படி நேர்ந்து விட்டது?… அண்ணா ஏதாவது செய்து விட்டானோ?… என்று கொடுமையான எண்ணமே முதலில் தோன்றிய அதே சமயம், கமலவேணியின் கையிலிருந்து விழுந்திருந்த கடிதம் பளிச்சென்று காட்சியளித்ததும், அதை எடுத்து, ஒரு க்ஷணத்தில் படித்துப் பார்த்தான். இன்னதென்று விவரிக்க இயலாத உணர்ச்சியுடன், அக்கடிதத்தை அப்படியே ஜேபிக்குள் பதுக்கிக் கொண்டான். அவனது கண் முன் கிடக்கும் தாயின் பாசத்தையும், மீறிக் கொண்டு ஏதேதோ உணர்ச்சிகளும், எண்ணங்களும் அலை மோதித் திக்குமுக்காடச் செய்தன.