உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 4

விக்கிமூலம் இலிருந்து

4

“ஹலோ !… ஹலோ!… ஆம்! நான்தான்! என்ன?… உங்கள் தாயாருக்கா பேராபத்தான நிலைமை?... இதோ, இப்போதே புறப்பட்டு விட்டேன்; பயப்படாதீர்கள்!… நீங்களே பயப்படலாமா? உங்கள் மார்பு அடித்துக் கொள்ளும் வேகம் உங்கள் குரலிலேயே காட்டுகிறதே!… என்ன?… அன்னையின் பாசமா?… உண்மை! முக்காலும் உண்மை! பெற்ற தாயின் அன்பு இவ்வுலகில் வேறு யாருக்கு ஸார் உண்டு? இதோ வந்து விட்டேன்…” என் று டெலிபோனில் பெரிய டாக்டர் சொல்லிய உடனே ஸ்ரீதரன் ஓடி வந்தான்.

அப்போதும் கமலவேணியின் நிலைமை அப்படியே இருப்பதைக் கண்ட ஸ்ரீதரன் ஏதோ சிகிச்சை செய்யத் தொடங்கிய சமயம்… “அண்ணா! சற்று முன் என்னோடு நன்றாகப் பேசிக் கொண்டிருந்த அம்மாவுக்குத் திடீரென்று இப்படிப்பட்ட அபாயகரமான நிலைமை எதனால் உண்டாகியது? நீ என்ன செய்தாய்?…” என்று கரகரத்த குரலில் கேட்டான், தம்பி தாமோதரன்.

இக்கேள்வியால் திடுக்கிட்ட ஸ்ரீதரன்; “தம்பீ! என்ன கேள்வி கேட்கிறாய்? நான் என்ன செய்தேனா?… என் தாயாரையா நான் என்ன செய்தேன் என்று மனந் துணிந்து கேட்கிறாய்?”… என்று கூறித் தம்பித்துத் தடுமாறி நின்று விட்டான்.

தாமோதரன்:- ஆமாம்; மனந் துணிந்துதான் கேட்கிறேன். மூன்று டாக்டர்கள் சேர்ந்து ஒரு திடமான மனிதனைக் கொன்று விட்டதாக ஒரு கதை சொல்வார்கள். அது போல், வைத்தியர்கள் தங்கள் தொழிலின் மேன்மையால் உயிர் கொடுப்பது போல், வேண்டாதவர்களின் உயிரை எடுக்கவும் சாகஸம் கற்றவர்கள்தான்…

“தம்பீ! வாயை மூடு! அதிக ப்ரஸங்கித்தனமாய்த் துடுக்காகப் பேசாதே! உயிருக்கு மன்றாடிக் கொண்டுள்ள அருமை அன்னையின் பக்கத்திலமர்ந்தா, இம்மாதிரி பேசுகிறாய்?… அறிவிலி நீ என்பதை நான் அறிந்து வாளாவிருக்கிறேன்…” என்று முடிப்பதற்குள், “ஆம். நான் அறிவிலிதான். நீ மகா மேதாவியாயும், அபாரசக்தி வாய்ந்த சூரனாயும் இருப்பதனால்தான், பெற்ற தாயின் மனத்தை நோகச் செய்து, குடும்பத்தையும் பாழடித்து தேவடியாள் வீட்டில் தாஸனாய்க் கிடக்கிறாய். அந்த வயிற்றெரிச்சலின் காரணமாய் உன்னை ஏதாவது சொல்லி இருக்கக் கூடும். அந்த ஆத்திரத்தில், நீ ஏதோ…” என்று வெகு கடுமையாகச் சொல்லும் போது, பெரிய டாக்டர் மிக்க அவசரமாய் வந்தார். அவருடன் கூடவே வரும் நர்ஸ் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.

“நமஸ்காரம், டாக்டர்!” என்று வணக்கமாயும், பதறியவாறும் வரவேற்றுத் தன் தாயாரிடம் அழைத்துச் சென்று காட்டினான். டாக்டர் முற்றிலும் பரிசோதித்துப் பார்த்த பின், “இதயமும், நாடியும் இத்தனை பலஹீனமாகி விட்டதே! என்ன காரணமாக இருக்கும்? ரத்த ஓட்டம் மிகவும் அதிகமாயிருக்கிறது. ஏதாவது பயங்கரமான—அதிர்ச்சியான—சம்பவம் நடந்ததா?… உங்களுக்குத் தெரியுமா?…” என்று கேட்டபடி தக்க மருந்தை ஊசி குத்தினார்.

ஸ்ரீதர:- நீங்கள் கேட்கிறபடி எத்தகைய பயங்கரமும், அதிர்ச்சியும் நடக்கவில்லை, டாக்டர்! வழக்கப்படி என் விவாகத்தைப் பற்றித்தான் கேட்டாள். நானும் வழக்கப்படித்தான் வேண்டாம் என்றேன். இதோ… இப்படங்களைக் காட்டி… இம்மாதிரி நான் வாழ விரும்புவதாகச் சொன்னேன்; அவ்வளவுதான் காரணம்—இம்மாதிரி விழுந்து விட்டார்கள்… எனக்கும் ஒன்றுமே புரியவில்லை…

பெரிய டாக்டரின் முகம் மாறிச் சுருங்கியது! “ஸார்! நீங்கள் மகா மேதாவி என்பதில் ஆக்ஷேபணையே இல்லை. உம்மை விட வயதிலும் அனுபவத்திலும் நான் பெரியவனாக இருப்பினும், உங்களுடைய அதிசாமர்த்தியத்தை நான் வியந்து ஒப்புக் கொள்கிறேன். இருப்பினும், மகத்தான புத்திசாலிகளுக்கும், ஒரு சிறு மதியீனம் இல்லாமலில்லை. மகா பெரிய ஆனைக்குக் கண்கள் மிகச் சிறியதாக வைத்திருப்பதையும் ஒரு உதாரணம் கூறலாம். அது போல், வெகு திறமை வாய்ந்த உமக்குப் பெற்ற தாயின் உணர்ச்சியை அறிந்து, பதில் சொல்லத் திறமை போதவில்லை. உங்கள் மூலம் அந்தம்மாள் எதிர்பார்க்கும் உன்னத வாழ்வின் ஸாரமறியாது, அரை வினாடியில் அதைத் தகர்த்தெறிந்து விடுவது போல், பேசியதைப் பெற்ற உள்ளம் தாங்குமா?… எந்தத் தாயார்தான் தன் மகனை மனந் துணிந்து சன்யாசியாக வாழ விடுவாள்? சங்கராசாரியர் ஸ்வாமிகளின் வாழ்க்கைச் சரிதையை நீர் படிக்கவில்லையா? க்ரகஸ்தாச்ரம வாழ்க்கை நடத்தாததால், சாக்ஷாத் ப்ரம்மாவும், ஸரஸ்வதியும் வேறு வேஷத்தில் வந்து, தர்க்கவாதத்தில் சங்கராசார்யரைத் தோற்கடித்து, க்ரகஸ்தாச்ரம சாஸ்திரம் கற்று வரும்படி உபதேசித்ததும், அவர் கூடு விட்டுக் கூடு பாய்ந்து காம சாஸ்திரம் படித்துப் பின் வந்ததாயும் உள்ள சரித்திரத்தை மறந்தீரா? சன்யாசி வாழ்வு மட்டும் உயர்ந்தது என்று நினைப்பதை விரும்ப மாட்டேன்; வள்ளுவர் மனைவியுடன் க்ரகஸ்தாச்ரம வாழ்க்கையிலிருந்தபடியே, ஒப்புயர்வற்ற திருக்குறளைச் செய்து உலகிற்கு உதவவில்லையா? நீர் சொல்கிற ராமகிருஷ்ணர், மகாத்மா காந்தி, ராமாநுஜர் முதலியோரும் தர்ம பத்னியுடன் வாழ்ந்தபடி, அபாரமான ஸேவை செய்து உலகிற்கு உதவவில்லையா? இதை எல்லாம் மறந்து, பெற்ற தாயைச் சோதிக்கலாமா?” என்று உபதேசம் செய்தபடியே சிகிச்சை செய்கிறார்.

தாமோதரனும், இச்சந்தர்ப்பத்தில் ஆத்திரமாகப் பேசி அண்ணனைத் தாக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்குள் பெரிய டாக்டரே, சரியானபடி கண்டித்துப் பேசுவதைக் கண்டு, சற்று பொறுமையுடன் இருந்தான்.

ஸ்ரீதானுக்கு ஒன்றுமே பதில் சொல்லத் தெரியவில்லை. ஒரே குழப்பமாகி விட்டது. “என் தாயாருடைய உயிர் வருமா? போய் விடுமா? இத்தகைய சோதனை வரும் என்று நினைக்கவே இல்லையே! உயிர் போய் விடுமாயின், நான் பெரிய கொலைகாரானாகவன்றோ ஆய் விடுவேன்! பெரிய டாக்டர் சொல்கிறபடி இந்த விஷயத்தில் அறிவு குன்றி, அவசரப்பட்டுப் பேசி விட்டேனே! ஆண்டவனே! முதலில் என் அன்னையை இந்தக் கண்டத்திலிருந்து காப்பாற்று. எனக்கு ஒரே குழப்பமாயிருக்கிறது. தாயைக் கொன்று விட்டான் என்கிற வசைச் சொல்லுக்கு என்னை ஆளாக்காதே… என்னைக் காப்பாற்று” என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டு தவிக்கிறான்.

இதற்குள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. கமலவேணியம்மாளுக்கு நன்றாக ப்ரக்ஞை வரவில்லை என்றாலும், நாடி சற்று நல்ல குறியைக் காட்டியது கண்ட பெரிய டாக்டர் முகத்தில் சற்று தெம்பு உண்டாகியதும், “ஸ்ரீதர்! இதோ நாடியைப் பாருங்கள்!… இதயத்தையும் பாருங்கள்!…” என்று கூப்பிட்டார்.

தன்னை மறந்து ஒரே பித்துப் பிடித்த மாதிரி நின்றிருந்த ஸ்ரீதரன் இதைக் கவனிக்கவே இல்லை. அவனை உற்றுக் கவனித்த பெரிய டாக்டர், “ஸ்ரீதர்! இதென்ன ப்ரமை பிடித்த நிலைமை! தாயாருக்குக் குணமாகுமா என்று கவலைப்படுகிறீர்களா? இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், உயிருக்கு அபாயம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. வந்து பாருங்கள்”… என்று கையைப் பிடித்திழுத்து, நாடியைப் பார்க்கச் செய்தார்.

ஸ்ரீதரன் நாடியைப் பரிசோதித்துப் பார்த்ததும், குணமான சூசிகை தெரிவதைக் கண்டதும், சந்தோஷத்தினால் முகம் மலர்ந்தது; “டாக்டர்! இனி பயமில்லையல்லவா? என் தாயின் இந்த கண்டம் தீர்ந்து விட்டதல்லவா?” என்று ஆனந்தத்துடன் கூறியவாறு, தாயாரின் முகத்தோடு முகம் பதித்தவாறு, “அம்மா! அம்மா!… கண் திறந்து பாரம்மா!”… என்று அன்பு கனியக் கூப்பிட்டான். மேலும் சில நிமிஷங்கள் சென்றன. கமலவேணியம்மாள் மெல்ல அசைந்து கொடுத்துப் பின் கண்ணைத் திறந்தாள். “ஸ்ரீதர்! ஸ்ரீதர்! என்னுயிர் இப்படியே போய் விட வேண்டுமென்று ப்ரார்த்தனை செய்யப்பா! என் பாவிப் பிறப்பின் தொல்லை நீங்கி, இத்துடன் முடிவு பெற்றால் போதும்”… என்று பேச முடியாது, திக்கித் திக்கி ஒவ்வொரு வார்த்தையாய் அக்ஷர அக்ஷரமாய்ச் சொன்னாள். கண்கள் சரியானபடி விரிந்து திறக்கவில்லை எனினும், நீர் கொட்டுவதில் பின்னடையவில்லை. மறுபடியும் சில நிமிஷம் மயக்கமாய்க் கிடந்தாள்.

சில நிமிஷங்கள் கழித்து மறுபடியும் கண்ணைத் திறந்த போதுதான், ஸ்ரீதரன் தன்னிடம் கொடுத்த கடிதத்தின் நினைவு வந்தது: உடனே தன் கைகளைப் பார்க்கிறாள். சுற்றுமுற்றும் பார்க்கிறாள். அப்போதுதான் பெரிய டாக்டரும், தன் சிறிய மகனும் அங்கிருப்பதை அறிந்தாள்… “ஸ்ரீதர்! இதென்ன பெரிய டாக்டரை ஏன் அழைத்தாய்? எனக்கென்ன வந்து விட்டது கேடு?… ஒன்றுமில்லையே…” என்று கூறியபடி, எழுந்து மெல்ல உட்காரப் போனாள்.

ஸ்ரீதரன் அப்படியே தடுத்துப் படுக்க வைத்துப் பின், “அம்மா! நான் டாக்டர், நீ என்னுடைய பேஷண்ட்; இனி நான் சொல்கிறபடிதான் கேட்க வேண்டும்;நீ எழுந்திருக்கக் கூடாது. உன்னுடைய நிலைமை சற்று நேரத்திற்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? நாங்கள் தாயற்ற பிள்ளைகளாகி விடுவோமோ என்று பயப்படும்படி இருந்தது…” என்று சொல்லி முடிப்பதற்குள்… “உம்!… தாய் இருந்தும், பெற்ற தாயின் மனத்தை மகிழ்விக்காமல், வயிற்றைக் குளிர வைக்காமல் இருப்பதை விட, தாயற்ற மக்கள் உலகத்தில் கோடிக் கணக்கிலிருப்பவர்களுடன் நீங்களும் இருந்தால் நல்லதாயிற்றே! பெற்ற தாயின் இதயத் துடிப்பை… பேராவலை… அறியாமல் நடக்கும் உங்களுக்கு தாய் எதற்கப்பா? …டாக்டர்! நீங்களாவது சற்று புத்தி சொல்லக் கூடாதா? இம்மாதிரி இவன் இருப்பதைப் பார்க்கும் போது, என் உள்ளம் துடிக்கிறதே!… அதே கவலையில்தான் எனக்கு அடிக்கடி மயக்கம் வருகிறது. அதைக் கூட நான் இவனிடம் சொல்லவில்லை… ஊருக்கெல்லாம் டாக்டரேயன்றி, உற்றாருக்கும், பெற்ற தாயாருக்கும் மருத்துவனல்ல! மறுத்துப் பேசும்… மறுத்து வரட்டுப் பேச்சுப் பேசும்… மேதாவியாகத் தானிருக்கிறான்! இவைகளை எல்லாம் பார்த்து, நன்றாக அனுபவித்துக் குட்டுப்பட்டவர்கள், புழக்கடைப் பச்சிலை வீரியத்திற்கு உதவாது… என்றும் “வீட்டுச் சாக்கு வாட்டப் படாது” என்றும் பழமொழிகளைச் செய்தார்கள் போலும்!… டாக்டர்! வேதாந்த ஞானமும், வைராக்ய உள்ளமும் வேண்டியதுதான். அதற்கு நமது குடும்பத்தின் வாழ்வு அடியோடு சூன்யமாகி, வம்சமே நாசமாகி விடும்படி நடப்பது விரும்பத் தக்கதா? சாக்ஷாத் நாராயணனே ராமனாகப் பிறந்தார், கிருஷ்ணனாகப் பிறந்தார்; ஸீதையையும், ருக்மிணியையும் முறையே மணக்கவில்லையா?

லோக ரக்ஷணார்த்தம் அவதாரம் செய்த பகவானே, மனைவியுடன் சேர்ந்துதான் சகல ஜெயத்தையும் அடைந்தார். அந்த வழியைப் பின்பற்றி, நீயும் மணந்து கொண்டு, உத்தம மனைவியுடன் வாழ்க்கையை நடத்தியவாறு, எத்தனையோ ஸேவைகளைச் செய்யலாமே! ஒண்டிக்கட்டை வாழ்வு ஒரு வாழ்வா?”… என்று ஆயாஸத்துடன் கூறியபடியே மறுபடியும் கடிதத்தைத் தேடவாரம்பித்தாள்.

“ஸ்ரீதர்! என்னதான் உம்முடைய நோக்கங்களும், லட்சியங்களும் வேறாயிருப்பினும் பெற்ற தாயை மகிழ்விக்காது, என்ன வேலை செய்தாலும் உபயோகமே இல்லை. ஆகையால் உலகத்தோடொத்து வாழ்… என்றபடி செய்வதுதான் உசிதம். இதென்ன வீண் பிடிவாதம்? சரி, நான் வருகிறேன். உயிருக்குப் பயமில்லை. மறுபடியும் இம்மாதிரி இதயக் கோளாறு உண்டாகுமானால் சொல்ல முடியாது; உமக்குத் தெரிந்த விஷயந்தான். ஜாக்ரதையாய்ப் பார்த்துக் கொள்வதோடு, மணம் செய்து கொள்வதாக வாக்குக் கொடுத்துக் காப்பாற்றும். எனக்குக் கூடத்தான், விவாக விஷயத்தில் சிறிது மாறுதல் ஏற்பட்டிருந்தது. உம்மைப் போல், நான் பீஷ்மாசாரி வ்ரதம் அனுஷ்டிக்கவில்லை. என்னிஷ்டப்படி, படித்த பெண்ணை மணக்க நான் நினைத்தேன். ஆனால் என் தாயார் தன்னிஷ்டப்படி, தன் நாத்தனாரின் மகளைத்தான் முறைப்படிக்குக் கல்யாணம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டாள். அப்படியே செய்து, என் அன்னையை மகிழ்வித்தேன்.

என் தாயின் ஆழமான, கரையிலாத அன்பின் ஆசியினால், என் மனைவியும், நானும் தேனும், பாலும் போலத்தான் வாழ்க்கை நடத்துகிறோம். வெகு சந்தோஷமாக எங்கள் குடும்பம் நடக்கிறது. பகவானின் க்ருபையால் குழந்தைகளும், நல்ல வருவாயும் கிடைக்க, ஏதோ பகவானின் நாமத்தை பூஜித்தவாறு, காலம் நடந்து வருகிறது. நானும், ஏதோ வைத்ய முறையில் கூடிய வரையில், தருமமும் செய்துதான் வருகிறேன்… அடாடா! நான் வந்து ஏகப்பட்ட நேரமாகி விட்டது, நான் வருகிறேன்”; என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.

டாக்டர் சென்ற பிறகு, கமலவேணியம்மாள் “ஸ்ரீதர், என் கையிலிருந்த அக்கடிதமெங்கே?” என்றாள். இதற்குள், சிறிய மகன் ஏதோ காரியமாய்ச் செல்வது போல், போய் விட்டான். தாயார் கேட்ட பிறகே, இவனுக்கு அந்த நினைப்பு உண்டாகியது. “கடிதமா? நான் அதைப் பற்றி மறந்தே போய் விட்டேனே… நீதானேம்மா கையில் வைத்திருந்தாய்… சரியாகப் பார்க்கிறேன். நீ படுத்திரம்மா” என்று கூறி விட்டு, பின், அவ்வறை பூராவும். தேடினான்; எங்கும் காணவில்லை.

கமல :- அகப்பட்ட தா தம்பீ!

ஸ்ரீதா:- காணவில்லையம்மா, இங்குதானே இருக்க வேண்டும், இதற்குள் எப்படி மாயமாய் மறைந்திருக்கும்? வேலைக்காரி கூட பெருக்க வரவில்லையே! ஒரு வேளை, தம்பியின் கையில் கிடைத்திருக்குமா?

கமல:- ஐயையோ! நான் இவ்விஷயமே அவனுக்குத் தெரியக் கூடாது… கடிதத்தை உடனே கிழித்து விட வேண்டும் என்று எண்ணினேனே! நான் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக ஆய் விட்டதே. இப்போது என்ன செய்வேன்?… அவனுடைய கையில் கடிதம் அகப்பட்டிருக்குமானால்…?

ஸ்ரீதர:- அம்மா! இதற்கு நீ கவலையே படாதேம்மா! கடிதம் அவனுக்கே நேராகக் கொடுப்பதற்காகத்தானே அம்மா நான் இதய பூர்வமாய் எழுதினேன். அவனிடம் அகப்பட்டதனால், ஒருவித தீங்கும் வராது. எனக்கதைப் பற்றிக் கவலையே இல்லை. இந்த சொத்தை நான் த்ருணமாக எண்ணுகிறேன். எனக்குக் கடவுள் கருணையுடன் உவந்து கொடுத்துள்ள தொழிலில், என்றைக்கும் வயிறு வளர்க்கப் பஞ்சமில்லை; நீ இன்னிலைமையில் இதைப் பற்றிக் கவலைப்படாதேம்மா. முதலில் நீ பரிபூர்ண ஓய்வு எடுத்துக் கொள்—என்று தேறுதல் கூறும் போது, டெலிபோன் மணியடித்தது கேட்டு ஸ்ரீதரன் சென்று பேசத் தொடங்கினான.

“ஹலோ… ஓ! லேடீ டாக்டர் துளஸீபாய் அவர்களா? குட்மார்ணிங் டாக்டர்! என்ன சமாச்சாரம்? … என்ன டேஞ்சர் கேஸா? ஆண் குழந்தையா பிறந்தது?… குழந்தைக்கு ஒன்றுமில்லை, திடீரென்று ப்ரக்ஞையற்று விட்டதா… ஜுரம் இருக்கிறதா பார்த்தீர்களா?… என்ன! 95 டிகிரியா?… அடாடா சீதளமல்லவா வந்து விட்டது?… நான் வர வேண்டும் என்று அந்த வீட்டினர் விரும்புகிறார்களா?... சரி… என் தாயாருக்கும் உடம்பு சரியில்லை. இப்போதுதான் பெரிய டாக்டர் நாராயணன் வந்து பார்த்துச் சென்றார். இப்போது தேவலை… இதோ உடனே வருகிறேன்… என்று கூறும் போது, தட்டித் தடுமாறியபடி

தன் தாயார் எப்படியோ எழுந்து வந்து, இவனுக்குத் தெரியாமல் நிற்பதையறிந்து திடுக்கிட்டு, “இதென்ன செய்கையம்மா! நீ ஏன் எழுந்து வந்தாய். மறுபடியும், உடம்பு அதிர்ச்சியடைந்து விட்டால், என்ன செய்வது?” என்று அவளைக் கையைப் பிடித்து, மெல்ல நடத்தி அழைத்து வந்தான். பெற்ற தாயாரின் பாசம் எத்தனை வேகமானது? எத்தகைய ஆழமானது? எத்தனை கூர்மையானது?… என்ற உண்மை பளிச்சென்று ஸ்ரீதரனுக்குத் தெரிந்தது!

கமல:- ஸ்ரீதர்! என்னைக் கோபிக்காதே… இப்போது பேசிய லேடீ டாக்டரா தேவதாஸி குலத்தவள்?… அவள் பெயரா துளஸிபாய்? அவளிடமா உனக்கு ஸினேகம்? தேவடியாள் பெயரா பவித்திரமான துளஸிபாய் என்பது?

ஸ்ரீதரன் கடகடவென்று சிரித்தான். சற்று முன்புதான் கிருஷ்ணவேணி என்பவள், இது விஷயங்களைக் கலகம் செய்திருப்பது இவனுக்கு நினைவிற்கு வந்ததால், இக்கேள்வியால் இவனுக்கு எத்தகைய அதிர்ச்சியோ, ஆச்சரியமோ உண்டாகவில்லை. மிகவும் சாவதானமான சூரலில், “அம்மா! வீணான விஷயத்தில் மனத்தை அலட்டிக் கொள்ளாதே. நான உன் கேள்விக்குப் பிறகு பதில் சொல்கிறேன். அங்கொரு நோயாளி மிகவும் ஆபத்தான நிலைமை யிலிருக்கிறாளாம். உடனே போய்ப் பார்க்க வேண்டும். நான் வருகிறேன்; படுத்துக் கொள்ளம்மா!” என்று கூறி, அவளைப் படுக்கையில் தானே படுக்க வைத்துப் பின் வேலைக்காரியைப் பார்த்துக் கொள்ளச் செய்து விட்டுச் சென்றான். கமலவேணியின் சந்தேகம் சற்றும் குறையாமல், மேலும் வலுத்தது.