உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 14

விக்கிமூலம் இலிருந்து

14

டாக்டர் தொழில் செய்பவர்களுக்குள்ள தொல்லை சொல்லி முடியாது. அதிலும், குடும்பத்திலும் பல பல சோதனைகள் உண்டாகுமானால், அவர்களுடைய மனத்தின் தவிப்புக்கு எதைத்தான் உபமானமாகக் கூற முடியும்? டாக்டர் ஸ்ரீதரனுக்கு ஏற்கெனவே உள்ள குழப்பங்களுடன், இந்தப் புதிய தாக்குதலின் வேகம், உண்மையில் பலமான கவலையையே உண்டாக்கி விட்டது. இந்த அல்ப ஆசையை, மிக ப்ரமாதமாக எண்ணியுள்ள தம்பியின் நிலைமை இந்த ஏமாற்றத்தினால், என்ன ஆய் விடுமோ! எப்படி எல்லாம் மாறி விடுமோ! தாயாரின் கதி எந்த விதம் முடியுமோ என்ற ஏக்கமும், கவலையும் சேர்ந்து பாதிக்கும் குழப்பத்துடன் டெலிபோனில் தெரிவித்த விலாஸத்திற்கு வந்து சேர்ந்தான்.

சுமார் 60 வயதுக்கு மேல்பட்ட வயோதிகர், ப்ரமாதமான ஜூரத்தினால் படுத்திருக்கிறார். வேறு டாக்டர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிழவரின் கட்டிலுக்குச் சமீபத்தில், 25 வயது கூட நிரம்பாத ஒரு யுவதி கண்ணீர் பெருக நிற்கிறாள். இன்னும் சுற்றத்தார்கள் ஏராளமானவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்… பெரிய டாக்டர் வந்து விட்டார்… என்ற பரபரப்பு உண்டாகியதும், சிறிய டாக்டர்கள் இவனையழைத்து, சகலமான விஷயங்களையும் கூறி, தாம் உபயோகப்படுத்தியுள்ள மருந்துகளையும் தெரிவித்தார்கள்.

கிழவருக்கோ ஜுர வேகத்தில், நினைவு தப்பி விட்டது. நிலைமை மிகவும் மோசமாகி விட்டதால், வீடே அமளி குமளி படுகிறது. ஸ்ரீதரன் வெகு அக்கறையுடன் கவனித்து, வேறு சில மருந்துகளை ஊசி மூலம் ஏற்றுகிறான். அவனுடைய காது சிலவற்றைக் கவனிக்கின்றது, கண் சிலவற்றை வெகு கூர்மையாகக் காண்கிறது; கருத்து ஒருபுறம் வேலை செய்கிறது. அதே சமயம் வாசலில் ஒரு பிச்சைக்காரன்,

“காயமே இது பொய்யடா
 காற்றடைந்த பையடா”

என்கிற பாட்டைப் பாடி பிச்சை எடுப்பதும், காதில் விழாமலில்லை. வீட்டுக்குள்ளேயே அடுத்த ரூமிலிருந்தும், தாழ்வாரம் கூடத்திலிருந்தும் இன்னார் என்ற விவரம் புரியாத நிலைமையில்… வயதாகிய கிழந்தானே?… ஏதோ மேல் கொண்டு செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டாமா… கிழவர் கைப்பெட்டி சாவி யாரிடம் இருக்கிறது… உயில் ஏதாவது எழுதியிருக்கிறாரா… பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாயில் சொல்லிக் கொண்டிருந்தார்… அப்பவே எழுதி வைக்கும்படி சொன்னோம். கிழப் பிணம் கேட்கவில்லை. இப்போது வாயைப் பிளந்து விட்டால், இனி பணமேது. மண்ணேது… தர்மமாவது, தானமாவது. கர்மி கிழமா செய்யும்… நீங்களும் இப்படி குழம்பினால் எப்படி? பெட்டியை உடைத்துப் பார்த்து, ஏதாவது கிடைத்ததை…… இனி இந்த வீட்டில் எங்களுக்கென்ன வேலை… என்று ஒவ்வொருவர் வாக்கிலும், ஒவ்வொரு வித வார்த்தை உதிருவது காற்றில் மிதந்து வந்து, ஸ்ரீதரனின் காதுகளில் விழும் போது, வியப்பும், திகைப்பும் கூற முடியாது பொங்கியது.

“இந்த நோயாளியின் முன்பு, இத்தனைக் கும்பல் கூடி, சத்தமிட்டுப் பேசுவதே கூடாது. தயவு செய்து, எல்லோரும் விலகிச் செல்லுங்கள். பகவானின் கருணை இருந்தால், குணமாவது நிச்சயம், வீணாக கலாட்டா செய்யாதிருப்பது நல்லது,” என்று எல்லோரையும் விலகச் செய்து விட்டு, பலமான சிகிச்சைகள் செய்து வந்தான்.

பின்னும் சில நிமிஷங்களாயிற்று. கட்டிலின் பக்கத்திலேயே நின்று கண்ணும், கண்ணீருமாய் உருகும் பெண்மணியின் பிம்பம், ஸ்ரீதரனின் உள்ளத்தை உருக்கியது. அவன் தானாகவே பேசத் தொடங்கி, “அம்மணீ! கண்ணீர் விடுவதில் உபயோகமென்ன! அதை விட்டு, பகவானை ப்ரார்த்தனை செய்யுங்கள். இவர் உங்களுடைப் பிதாவா, அல்லது பாட்டனாரா…” என்று வினயமாய்க் கேட்டான்.

அந்தப் பெண், இது வரையில் அடக்கி வைத்திருந்த துக்கத்தைத் தடுக்க முடியாமல், பீறிக் கொண்டு வந்து விட்டதால், விம்மி, விம்மி அழுதுகொண்டு, "டாக்டர்! நான் பெண்ணாகவும், பேத்தியாகவும் இருந்திருந்தால், அதோ உள்ளிருந்து பல பல குரல்களால், பல பல வார்த்தைகள் வருகிறதே, அதில் என் குரலும் கலந்திருக்கும், உலகம் அவ்வளவுதான். இந்தக் கிழவரின் மனைவியாகிய பாபி நான்தான்…”

“என்ன! என்ன! மனைவியா! இவருக்கா…” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்… ஆமாம் டாக்டர்! இவர் ப்ரபல வக்கீல், என் பிதா பல குழந்தைகளையுடைய பெரிய குடும்பி. போதாத காலத்தின் விளைவால், ஒரு மகத்தான கொடிய வழக்கில் என் பிதா அகப்படுக் கொண்டார்! அந்த வழக்கில், இந்த மகான் ப்ரவேசித்து, ஜெயத்தை வாங்கிக் கொடுத்து, என் பிதாவை மீட்டு வைத்ததற்காக, இவர் என்னையே வக்கீலின் சன்மானமாக அபேக்ஷித்தார். வேறு வழியின்றி என் பிதா கொடுத்து விட்டார்! நான் குற்றம் செய்யாமலேயே, குற்றவாளியாய் ஆயுள் தண்டனையடைந்து, இந்தக் கம்பியில்லாச் சிறையில் சுமார் 5 வருஷமாக அவதிப் படுகிறேன். பகவானுக்கு இது கூட பொறுக்காமல், என்னை இன்னும் என்னென்ன செய்ய எண்ணுகிறாரோ, தெரியவில்லை. இந்த குடும்பத்தில் நான் ஒரு வேலைக்காரியைப் போல் இருப்பினும், என் பிதாவின் தவிப்பை உத்தேசித்தும், இவர் ஏதோ என்னிடம் பக்ஷமாக நடத்துவதாலும், நான் மூத்தவள் மக்களால் படும் துன்பங்களைச் சகித்துக் கொண்டு காலந் தள்ளுகிறேன்… டாக்டர் ! இவர் பிழைப்பாரா மாட்டாரா! சொல்லி விடுங்கள்…” என்று தன்னை மீறிய துக்கத்துடன் கேட்டாள்.

மனங் குழம்பியவாறு டாக்டர் அவளைப் பார்த்து, “தாயே! நாங்கள் ஏதோ கற்ற வித்தையை புத்திசாலித் தனமாகக் கையாண்டு வரும் தொழிலாளிகளேயன்றி, உயிரைக் கொடுக்கவோ, போக்கவோ சக்தி சர்வேச்வரன் கையிலிருக்கிறது. நீங்கள் பேசும் த்வனியிலிருந்து இவர் பிழைக்க மாட்டார் என்று தெரிந்த உடனே, தற்கொலை செய்து கொள்ள துணிந்திருப்பதை அறிகிறேன். அம்மாதிரி வீணான காரியம் செய்து விடுவதில், உங்களுக்கும் லாபமில்லை, உலகமும் இதை வெறுத்து ஏளனம் செய்யும். இந்த எண்ணத்தைக் கட்டோடு விட்டு விடுங்கள். மனித வாழ்க்கையில் உள்ள அனேக படிப்பினைகளை அறியக் கூடிய அதிக சந்தர்ப்பம் பெற்றவர்கள் நாங்கள். இது போல், பல இடங்களில் பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறோம். தற்கொலை என்பது மகா பாதகம். தாயே! இப்படி எல்லாம் அசட்டுத்தனம் செய்யாதீர்கள்!” என்று உபதேசம் செய்யும் போது, உஷாவின் நினைவு சடக்கென்று தோன்றியது.

எத்தனை விசித்திரங்கள் கண்முன்பு காண நேருகிறது. தன் மனமின்றி, வலுக்கட்டாயமாய் மணந்த வெறுப்புக்காக, இவள் தற்கொலையை நாடுகிறாள்; தன் மனம் நிறைந்து, காதலித்தது கைகூடாததால், அந்தப் பெண்ணின் கதி என்னவாகுமோ, அதுவும் ஒரு வேளை தற்கொலையில் வந்து பாயுமோ! என்று தோன்றும் போது, மிகவும் பயமாகவே ஒரு அதிர்ச்சி உண்டாகியது. அம்மாதிரி தற்கொலைக்குத் துணிந்து ஏதாவது செய்து விடுவாளேயானால், அந்த மகத்தான பாதகம் நம்மையும், நம் குடும்பத்தையுமல்லவா பாதிக்கும்? ஒரே மூர்க்கத் தனமாயிருந்த தம்பியின் நிலைமை எப்படியாகுமோ! என்கிற புதிய, புதிய கவலைகள் வந்து சூழ்ந்து கொண்டு, வாட்டத் தொடங்கியது.

‘இம்மாதிரி கிழட்டுப் பிணங்களுக்கு, கல்யாண ஆசை எதற்கு பகவானே! இம்மாதிரி மனிதர்களைப் பாழாக்கும் நாசமாய்ப் போன ஆசையை ஏன் நீ படைத்து, மக்கள் வாழ்க்கையைச் சிதறவடிக்கிறாய்!’ என்று தனக்குள் மனத்தில் எண்ணியபடியே, கிழவருக்குச் சரியானபடி சிகிச்சை செய்யும் போது, இவனே ப்ரமிக்கும்படி கிழவருக்கு நல்ல குறிகள் காணத் தொடங்கியதைக் கண்டு, சந்தோஷமடைந்தான். இந்த இளம்பெண்ணின் மஞ்சள் குங்குமம் நன்றாயிருக்கும் பொருட்டாவது, இந்த கிழவன் பிழைத்து எழுந்தால் போதும் என்று பலமான யோசனையுடன் மற்றும் சில ஊசிகளைக் குத்தி வயித்தியம் செய்யும் சமயம், அன்று காலையில் ஒரு பெரிய கனவான் கண்ணபிரான் தன் பெண்ணைப் பற்றிப் பேசியவர் இங்கு மெல்ல வந்து, “எப்படி ஸார் இருக்கிறார். தேவலையா.. உயிருக்கு பயமில்லையே” என்று கேட்டுக் கொண்டே வந்தார். இங்கு ஸ்ரீதரன் இருப்பதைக் கண்டு, “பலே டாக்டர்! நீங்கள் வந்தீர்களா! இங்கு வந்து பார்த்து விட்டு உங்களையே அழைக்க வேணும் என்ற ஆவலுடன் வந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரியா கிவிட்டது. இந்த மனிதன் என் க்ளாஸ்மேட்டு, வெகு நல்லவன், ஆனால், கடைசி காலத்தில் அவன் செய்துள்ள இந்த விவாக விஷயந்தான் எனக்குப் பிடிக்கவில்லை. எத்தனையோ சொல்லியும் கேட்காது, பாழ் பண்ணி விட்டான். இனி இதைப் பற்றிச் சொல்லி என்ன லாபம்? எப்படியாவது பிழைத்தால் போதும் என்றுதான் ப்ரார்த்தனை செய்ய வேண்டும். இதை எல்லாம் உத்தேசித்துத்தான் என் குழந்தையின் சுக வாழ்க்கைக்காக, என்னை நான் சிறந்த மார்க்கத்தில் செப்பனிட்டுக் கொண்டேன்…” என்று ஏதேதோ சொல்லும் போது, ஸ்ரீதரனுக்கு சடக்கென்று ஒரு எண்ணம் உண்டாகியது.

இவருடைய பெண்ணைத் தான் மணக்க வேண்டுமென்று சொல்லியது இவனுக்கு நினைவுக்கு வந்தது. தன் தம்பியின் இன்றய சோதனை சம்பவத்தினால், மனமுடைந்துத் தவிக்கும் உள்ளத்திற்கு ஆறுதலாய், இந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்தால் என்ன! அவனோ, படாடோப டாம்பீகத்திற்கு ஆசைப்பட் டுழலுகிறான். இவர் சொல்வதிலிருந்து உஷாவைப் போலவே… ஏன், உஷாவை விட அதிகமான படிப்பும், நாகரீகமும் கண்ணியமான குடும்பத்துப் பெண்ணாயுமிருப்பதால், இவரை எப்படியாவது சரிப்படுத்தி, இக்காரியத்தை தாமோதரனுக்கு முடித்து விட்டால், சகல அம்சத்திலும் நன்மையாக முடியும் என்ற எண்ணம் தீவிரமாகத் தோன்றியதால், வந்தவரை பலமாக உபசரித்துத் தானே தடபுடல் மரியாதை செய்தான்.

பின்னும் அரைமணிக்கெல்லாம் கிழவருக்கு நன்றாகத் தெளிவு கண்டு, கண் திறந்து பார்த்தார். இள நங்கையாகிய அப்பெண்மணியின் முகத்தில் புன்னகை பூத்தது கண்டு, ஸ்ரீதரன் மனத்திலும் சந்தோஷம் உண்டாகியது. மற்றபடி சிறிய டாக்டர்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, ஸ்ரீதரன் கிளம்பினான்.

வந்த பெரிய மனிதரும், மற்றவர்களுக்குத் தேறுதல் கூறி விட்டுக் கிளம்பியவர், டாக்டரிடம் தனிமையில் வந்து “ஸார்! நன்றாக யோசித்து, நாளை காலையில் என் மனங் களிக்கும் முறையில் பதில் சொல்ல வேணும். உங்களையே நான் ப்ரமாதமாய் நம்பி இருக்கிறேன். நாளை காலையில் நீங்கள் வரவில்லை என்றால், நான் அங்கு வந்து விடுவேன்” என்றார்.

“கட்டாயம் வருகிறேன் ஸார்! நாளைய தினம் நாம் இந்த விஷயத்தில், பரஸ்பரம் ஒரு மனப்பட்டு முடிவு செய்து விட்டுத்தான் மறு காரியம் என்று நான் கூட முடிவு செய்து விட்டேன். நாளைய தினம் நான் கட்டாயம் வருகிறேன்”—என்று கூறிச் சென்றான். இவ்விஷயத்தை, இப்போதே அம்மாவிடம் கூறி யோசனை கேட்டுக் கொண்டு பிறகு, தம்பியிடமும் தெரிவித்துச் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் சென்றான். இன்று நடந்த ஒவ்வொரு புதிய, புதிய சம்பவமும் இவனுடைய வாழ்க்கையில் பெரும் படிப்பினை போல் தோன்றி, ஒரு இன்பமே உண்டாகியது.

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".