உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 17

விக்கிமூலம் இலிருந்து

சாந்தியின் சிகரம்

இரண்டாம் பாகம்

-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-._.-=-

17

ந்த அதிர்ச்சிகரமான விஷயத்தைக் கேட்ட அந்த ஊர் ஜனங்கள்—ஸ்ரீதரனின் அபிமானிகள்—அப்படியே கலங்கித் தவிக்கிறார்கள். பல பத்ரிகைகளில், பல விதமான தலையங்கங்களுடன் வந்துள்ள விஷயத்தைக் கண்டு, பொது மக்கள் ப்ரமித்துத் திடுக்கிட்டார்கள். “டாக்டர் ஸ்ரீதரனா இப்படிக் கொலை செய்திருக்கக் கூடும்? இது வெறும் கட்டுக்கதைதான, ஸார்! அவரைப் போன்ற தயாளன், உத்தமன் வேறு யாருமில்லை. அவருடைய மனத்தினால் கூட கொலையை நினைக்க மாட்டார் ஸார்! இது வேண்டுமென்றே, அந்த வெள்ளையர்கள் ஜோடித்துக் கூறிய கற்பனைதான். நிச்சயமாய் நான் சொல்வேன்” என்று பலர் மார்தட்டிப் பேசுகிறார்கள்.

ஏழைப் பங்காளனாய், ஏழைகளின் நலனுக்கே பல விதத்திலும் உழைத்துக் காப்பாற்றும் உத்தமனாய், விளங்கும் ஸ்ரீதரனுக்கு, இத்தகைய படாப்பழி வந்து விட்டதை, ஒருவருமே நம்பாது கூட்டங் கூட்டமாய் அவனைப் பார்க்க, போலீஸ் ஸ்டேஷனில் கூடி விட்டனர். ஸ்ரீதரன் சற்றும் கண் கலங்காமல், வந்தவர்களை எல்லாம் நோக்கிப் பரம வேதாந்தியாய்ச் சாந்த குண சம்பன்னனாய்க் கை குவித்தவாறு…"அன்பர்களே! போலீஸ் ஸ்டேஷன் வாசலில், இத்தகைய கூட்டம் கூடுவது சரியில்லை. பிறகு, போலீஸார் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி ப்ரயோகம் செய்ய நேரும். இத்தகைய குழப்பத்திற்கு, இடம் வைக்காதீர்கள். என்னிடம் இத்தனை அன்புடன் நீங்கள் பார்க்க வந்தது பற்றி, நான் பரம சந்தோஷமடைகிறேன். அன்பர்களே! ஒரே ஒரு வார்த்தை சொல்கிறேன்:

இச்சரீரத்தைச் சிறையில் அடைப்பதற்கும், தூக்கிலிடப் போவதற்கும் இத்தனை வருத்தப்படுகிறீர்களே! இச்சமயம், ஒரு வினாடி சிந்தித்துப் பாருங்கள். நிரந்தரமான சிறையில் நமது பவித்திரமான ஆத்மாவைப் போட்டு வருத்துவதை நாம் சற்றும் நினைத்தே பார்ப்பதில்லை. அத்தகைய விஷயம் ஒன்று இருக்கிறது என்பதைக் கூட எண்ணிப் பார்ப்பதில்லை. சிந்திக்க நினைப்பதுமில்லை. மகத்தான குற்றங்களை—பாபங்களை—சிறிது சிறிதாகச் செய்து, அழியாத சிறையில், பயங்கரமான கொடிய நரகத்தில், விழுந்து தவிக்கத் துணியும் நாம், இந்தச் சாதாரண சிறை வாஸத்திற்குப் பயப்படுகிறோம். இதெப்படி இருக்கிறதென்றால், மனிதன் சிறு தூரலுள்ள மழைக்குப் பயந்து, நடுங்கி ஒதுங்கப் பார்க்கிறான். ஆனால் கால வெள்ளத்தின் கர்ஜனை, இவனைக் கூவியழைக்கின்ற பயங்கரத்தை நினைப்பதே இல்லை… மழைத் துளிக்கு பயமா!… காட்டு வெள்ளத்தையும் மிஞ்சிய கால வெள்ளத்திற்குப் பயமா!… இதை நினைத்துப் பாருங்கள். என்னிதயம் ஏழைகளுக்குச் சேவை செய்யவும், அனாதைகளுக்கு உதவி புரியவும், தூய த்யாக வாழ்க்கை வாழ்ந்து, அந்த உத்ஸாகத்துடன், சாந்தியின் சிகரத்தில் நிம்மதியாக வாழவுமே விரும்பியது. அந்த விருப்பத்தை பகவான் தூக்கு மரத்தின் மூலம் அளிக்கத்தான், இந்த விஷப்பரீக்ஷையில் என்னை மாட்டியிருக்கிறார் என்று நான் சந்தோஷமே படுகிறேன். உங்களை நான் மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் தயவு செய்து, இனி இப்படிக் கூட்டம் போடாமல் போய் விடுங்கள். போலீஸாருக்கு வீண் தொந்தரவு கொடுக்காமல், கலாட்டா செய்யாமல் போய் விடுங்கள். இதுதான் வேண்டிக் கொள்கிறேன்” என்று வாய் விட்டுப் பெரியதாகக் கூறிய கம்பீரத்தையும், அழகையும் கண்ட பொதுமக்கள் அடைந்த வியப்புக்கும், ஆனந்தத்திற்கும் எல்லையே இல்லாது போய் விட்டது.

“இத்தகைய கருணாமூர்த்தியா கொலை செய்வார்? இத்தகைய வேதாந்தியா கொலை செய்வார்? அநியாயம்! கேவலம் மதம் விட்டு மதம் மாறச் செய்து, ஒரு இந்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, சொத்துக்காக ஆசைப்பட்டு வந்த வெள்ளைக்காரனின் சாட்சியங்களையும், சந்தர்ப்ப சாட்சியங்களையும் வைத்து இந்த மகானுபாவனை இப்படிக் கைது செய்யலாமா! போலீஸ்காரர்கள் செய்தது அக்ரமமேயன்றி வேறில்லை. இந்த அநியாயத்தைப் பொது மக்களாகிய நாங்கள் பொறுக்க மாட்டோம். இந்த ஏழைப் பங்காளனை நிரபராதி என்று விடுதலை செய்துவிட்டுத்தான், நாம் சும்மா இருப்போம். அநியாயத்திலும் கொடிய அநியாயம் இது!… ஊரறிந்த பெரிய டாக்டரா இத்தகைய கேவலமான காரியத்தைச் செய்வார்? என்று கொஞ்சங்கூட யோசிக்காமல், போலீஸார் கைது செய்தது தவறு தவறு" என்று ஒரே கூக்குரலிட்டுக் கத்தும் பொதுமக்களைப் போலீஸார் எத்தனையோ ப்ரயாஸைப்பட்டு விலக்கினார்கள்.

சில மனிதர்களின் ஸ்வபாவத்தில், சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் மனம் அதிர்ச்சி தாளாமல் சோர்ந்து மூர்ச்சையாகி விடுவதும், இதயமே நின்று விடுவதும் அல்லது பலஹீனப்பட்டுப் பல பல வ்யாதிகளில் கொண்டு விடுவதுமாக ஆகி விடுகின்றன. ஆனால், அவர்களுக்கே மகத்தான பெரிய, பெரிய அதிர்ச்சிகள் உண்டாகி விடும் போது, அதே மனிதர்களின் இதயத் தளர்ச்சி எப்படியோ மாறிப் போய்க் கெட்டிப்பட்டு, மேலும் மேலும் உழைக்கப் பின் வாங்காத நிலையை அடைந்து விடுவதை உலகில் ப்ரத்யக்ஷமாகப் பார்க்கிறோம்.

தற்சமயம் கமலவேணியம்மாளின் நிலைமை அதே ரகத்தைச் சேர்ந்து, உரம் பெறத் தொடங்கியது. மகன் விவாகம் செய்து கொள்ளாமல், சன்யாசியாகி விடுகிறான் என்றதைக் கேட்டு இடிந்து போன இதயம், இப்போது கொலைக் குற்றத்திற்காகத் தன் மகனை. அக்ரமமாய், அநியாயமாய்க் கைது செய்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டதும், தீவிரமான ஆக்ரோஷம் உண்டாகி, எப்படியாவது சண்டை செய்து, தன் மகன் நிரபராதி என்பதை நிலை நாட்டி உலகமறியச் செய்ய வேண்டும் என்கிற ஆவேசம் வந்து விட்டதால், கத்துவதும், கதறுவதும் வீராவேசத்துடன் திட்டித் துடிப்பதும் அவனைக் கைது செய்த பாவிகளை நானே கொலை செய்து விடுகிறேன் என்று அதீதமான நிலைமையில் பயித்தியம் பிடித்தவள் போல் இரைவதும், சிறிய மகனிடம் ஓடி, “தாமோதரா! கிளம்பு ! உடனே கிளம்பு! அந்த அதிகார மடையன்களிடம் எல்லாம் போய், உண்மையின் உயர்வைக் கூறி முறையிட்டு, அண்ணாவை அழைத்து வருவோம், வா! வா !” என்று வற்புறுத்தும் படியான நிலைமையில் வந்து விட்டது.

உண்மையில், தன்னுடைய அண்ணனின் உத்தம குணமும், மதிப்பும் தெரியாமல், தனக்கு த்ரோகம் செய்யும் பங்காளி, பகையாளி, தன்னுடைய க்ஷேமத்தையே கருதாத கல் நெஞ்சன் என்றெல்லாம் தவறுதலாகவே எண்ணி, அதற்கேற்ற முறையிலேயே தன் மனோபாவத்தை விரிய விட்டதோடு, அதே இதய உணர்ச்சியுடன் அதே கண்களால், அண்ணனை நோக்கி வந்ததால், இது பர்யந்தம் விரோதியாகவே காணப்பட்டான்.

இன்றய சம்பவத்தின் பயனால், பூகம்பத்தில் ஒரு கட்டிடம் அழிந்து மறைந்து போய் நூதன கட்டிடம் ஒன்று புதுமையாக எழுவது போல், தாமோதரனின் பழைய பகைமையான எண்ணம் அடியோடு மாறிப் போய், அண்ணனின் உண்மை யன்பும், தயாகத்தின் சிறப்பும், அவன் சத்யமான கொள்கை யுடையவன் என்கிற தத்துவமும், நன்றாக மனத்தில் பதிந்து ஊர்ஜிதமாகி விட்டதால், அடியோடு புதிய மனிதனாக மாறிப் போய் விட்டான்! தன்னுடைய கல்யாண விஷயமாய்ப் பெண் பார்க்கப் போனதின் பலனல்லவா, இத்தகைய விதியமைந்தது என்று தனக்குள் எண்ணி, எண்ணி உருகித் தவிக்கிறான். அண்ணனின் தீவிரமான ப்ரம்மசரிய வ்ருத அனுஷ்டானத்தின் உயர்வும், தான் மனத்தை அடக்காது திரிய விட்டு விட்ட வேகத்தின் அலங்கோலத்தினால் உத்தமனாகிய அண்ணனையே, தீராத விரோதி போல் எண்ணி விட்டோமே என்ற விசனமும், அவனை வெகுவாய்ப் பாதித்து வாட்டுகிறது.

‘எந்த விதமான காரியத்தைச் செய்தால், நிரபராதியான அண்ணனின் இந்த அபவாதப் பழியை நீக்கி, விடுதலை பெறச் செய்யலாம்?… என்னுடைய பாபத்தைப் போக்கிக் கொள்ள வழி தேடலாம்’ என்கிற அபாரமான உணர்ச்சிதான் தலை தூக்கி நின்றது. இந்த நிமிஷம் வரையில், ஆத்மார்த்தமான எந்த விஷயத்திலும் சம்மந்தப்படாது, வெளி வேஷத்திலும், டாம்பீகத்திலும், சிற்றின்பத்திலும், அநாகரீகத்தையே தனது வாழ்க்கையின் சாச்வதமான நாகரீகம், பண்பாடு, சுக்ருதம் என்றெல்லாம் எண்ணி, மனத்தையும், தனத்தையும் நாசம் செய்து வந்த ஊதாரித்தனத்தின் அவகேடு, இப்போதுதான் நன்றாகப் பளிச்சென்று தெரிந்தது.

முதல் நாள் உஷாதேவி மூலம் ஏமாற்றம் உண்டாகிய போது, அண்ணன் மீதுதான் அஸாத்ய கோபம் வந்தது. தேவதாசி வகுப்பில் பிறந்தவர்களுக்கு உறவு முறை என்ன வேண்டிக் கிடக்கிறது! “தேவடியாள் மக்களுக்குத் தகப்பன் யாரு?” என்பது பழமொழி! அங்ஙனமிருக்க, தேவடியாளின் உறவில் அண்ணனாவது, தம்பியாவது? இதெல்லாம், வீணான வார்த்தைகள். ஆதலால், இதைப் பற்றி அண்ணனை எதிர்த்தடித்துப் பின், உஷாவையே மணந்து உல்லாஸமாயிருப்பதே சரி என்று தீர்மானித்த அதே மனிதன்… உஷாவின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, மனது குழம்பிய அதே மனிதன்… இன்று இச்சம்பவத்தினால், முற்றிலும் மாறி விட்டான் என்றால், எத்தனை ஆச்சரியம்!

அவன் ஜென்மத்தில், ஜாதி வழக்கப்படி வேஷ்டி உடுத்தியதே கிடையாது. சதா கால்சட்டையே அணிந்திருப்பவன். இன்று அண்ணனைக் கைது செய்து, அழைத்துச் சென்றதும், அனலிடை மெழுகெனத் துடித்து உருகியவாறு, வீட்டிற்கு வந்தான். அந்தோ! பூஞ்சோலை போல் குளுகுளுவென்று காட்சியளித்த அதே மாளிகை, சூனியமே குடி கொண்ட பயங்கர நரகம் போல் காட்சியளிக்கும் உணர்ச்சியை, கமலவேணியை விட தாமோதரன் அதிகம் உணர்ந்து துடித்தான். நேரே சென்று ஸ்நானம் செய்து விட்டு, அவன் ஜென்மத்தில் முதல் தடவையாக வேஷ்டியை அணிந்து, நெற்றியில் விபூதி குங்குமமணிந்து கொண்டு, நேரே பூஜா ரூமுக்குச் சென்றான். காலையில், தன் அண்ணன் பூஜை செய்து விட்டுச் சென்ற அழகும், வாஸனா த்ரவ்யங்களின் பரிமளமும் தீப ஜோதியின் ப்ரகாச எழிலும், பகவானின் தரிசன அழகும். ஒன்று கூடி, இது வரையில் அனுபவித்திராத ஒரு தனி உணர்ச்சியும், வசீகரமும் மின்ஸார சக்தி போல், இதயத்தில் பாய்ந்து, விசித்ரமான தாக்குதலை உண்டாக்கிக் கண்ணீரை அவனறியாத படியே உதிரச் செய்தது.

“அடாடா! இத்தகைய அபூர்வமான ஆனந்தத்தை உண்மையான ஆனந்தமென்றே மதியாமல், இது காறும் பாழாகி விட்டோமே” என்று தானே நெஞ்சுருகும்படியான நூதன உணர்ச்சி உண்டாகியதும், சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரித்தான். “என்னப்பனே! ரக்ஷகா! என் அஞ்ஞான இருளைப் போக்கி, ஏதோ ஒரு சிறிது புத்தியுண்டாக்கிக் கண் திறக்கச் செய்தது மட்டும் போதாது. இத்தகைய உணர்ச்சிக்குக் காரணமாயமைந்த கொலைக் குற்றச்சாட்டை என் அண்ணன் மீது சாராது மாற்றி, அவன் உடனே விடுதலையாகி வந்து, உங்களை ஆனந்தமாய் ஸேவிக்குபடியான சந்தர்ப்பத்தைக் கொடுத்து, எங்களை ரக்ஷிக்க வேண்டும். என்னருமைத் தாயாரின் உள்ளத்தை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் நீ உண்மையான கடவுளாக இருந்தால், உத்தமனை உத்தமன் என்று உலகமறியச் செய்து காட்ட வேண்டும். என் அண்ணனின் மகிமையை நான் இதுகாறும் அறியாத பாவியாகி விட்டது போதும். இனி உலகம் அவனைப் போற்றி, அவன் புகழை அறியும்படிக்குச் செய்தால்தான், நீ சத்தியமான தெய்வமென்று நம்ப முடியும் … ஐயோ! எனக்குத் தோத்திரம் செய்யக் கூடத் தெரியவில்லையே! பகவானைப் பற்றிய தோத்திரப் பாடல்களோ, ச்லோகங்களோ ஒன்றுமே தெரியாது மரத்த கட்டையாய்த் தடிமரம் போல், வளர்ந்து விட்டேனே! ஒன்றுமே தெரியாத முட்டாள் பிழைப்பில் காலம் கடந்து விட்டதே!” என்று மனமுருகித் துக்கித்தவாறு உட்கார்ந்து விட்டான்.

ஸ்ரீதரன் ப்ரதி தினம் பாராயணம் செய்யும் புத்தகங்களை, அங்கு ஸரஸ்வதி பீடத்தில், அழகாக வைத்து அதன் மீது புஷ்பம் சாத்தியிருக்கும் அழகும், இவன் கருத்தைக் கவர்ந்து இழுத்தது. உடனே அவைகளை எடுத்துப் பார்த்தான். ஸ்ரீராமாயணம், பகவத் கீதை, திருப்புகழ், திருக்குறள், தேவாரம், ஸ்ரீஸ்துதி, ஸ்தோத்ர ரத்னாகரம், திவ்ய ப்ரபந்தம், ஸ்காந்த புராணம், லலிதா ஸ்தோத்ரம், திருவருட்பா, முகுந்த மாலை, திருவேங்கட சதகம் முதலிய பல பல புத்தகங்கள் இருப்பதைக் கண்டு அவற்றில் ஏதோ சில தோத்திரப் பாடல்களைப் பாடி தோத்திரம் செய்தான்; வேண்டிக் கொண்டான்; மனத்தில் ஏதோ ஒரு புனிதத் தன்மை… இன்பம்… சாந்தியின் திவலை முதலியவைகள் படருவது போன்ற ஒரு உணர்ச்சி உண்டாகியது!…

கடவுளை வணங்கி விட்டு, நேரே தாயாரிடம் வந்தான். அந்தம்மாளே எதிர்பாராத விதம் தாயாரின் காலில் விழுந்து வணங்கி, “அம்மா! என்னுடைய போதாத காலக் கொடுமையினால்தான் அண்ணனுக்கு இத்தகைய அவமான கதி உண்டாகியது. இதற்குக் காரணம் நானேதான்; எனக்காகப் பெண் பார்க்கும் பொருட்டு என்னை அழைத்துச் சென்றதனால்தானே இம்மாதிரி ஆகி விட்டது. இத்தகைய உத்தமனான அண்ணனை நான் மிகவும் கடுமையாக எண்ணி விட்டேன். அநியாயமாய்த் தாக்கிப் பேசி, மனத்தைப் புண்படுத்தி விட்டேன். அவன் பரம பக்தன், உத்தமன், அனாதைகளின் போஷகன் என்ற சிறந்த செய்கைகளை எல்லாம் நான் வெறும் வேஷம், போலி டாம்பீகம், ஊரை ஏமாற்றும் மோசடிச் செய்கைகள் என்று எண்ணி விட்டது மகா பாதகம் என்பதை இன்று உணர்ந்து விட்டேன்.

இனி நான் எதை உணர்ந்து என்ன உபயோகம்? காரியம் கரை கடந்து விட்டது. இனி நான் அழுதாலென்ன! முட்டிக் கொண்டால்தான் என்ன! அண்ணாவை நிரபராதி என்று ருஜு செய்யும் வரையில், நான் ஒரு வேளை உபவாஸமிருந்து, தீக்ஷை வளர்த்து, கங்கணங் கட்டிக் கொண்டு உழைக்கப் போகிறேன். துப்பறியும் நிபுணர் ஸ்ரீ ராஜாராம் நாயுடுகாருவின் உதவியைக் கோரி, அவருடைய திறமையினால், இந்த வழக்கில் அண்ணனுக்கு ஜெயத்தைப் பெற வேண்டும் என்று மனது துடிக்கிறது. அண்ணாவோ, எதையும் செய்யக் கூடாதென்று தெய்வ சாட்சியாக ஆணையிட்டு உத்திரவு செய்திருக்கிறார். நான் என்ன செய்வேன் அம்மா!” என்று கதறினான்.

கமலவேணியின் நிலைமையில் சிறிய மகனின் மாறுதலைக் கண்டு, ஒரு புறம் வியப்பும், ஒரு புறம் சந்தோஷமும் உண்டாகியது. “குழந்தாய்! தாமோதரா! இத்தனை நாள் உன்னுடைய நலனுக்காகவே, நான் சொல்லிய சகல மொழிகளும் உனக்கு விபரீத தீமைகளாகவே தோன்றின. பெற்ற தாயின் தவிக்கும் உள்ளத் துடிப்பை நீ அறியாது வீணாகி விட்டாய். போனது போகட்டும்; இப்போதாவது உனது நல்ல காலத்திற்கு இத்தகைய மாறுதல் உண்டாகியது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். அண்ணனின் ஆணையின் படிக்கு நீ வேண்டுமானால், நேரடியாக எந்த ப்ரயத்தனமும் செய்ய வேண்டாம்; என் மனம் கேட்கவில்லை; தவிக்கின்றது; நானும் உன்னைப் போல், துப்பறியும் ராஜாராம் நாயுடுவின் உதவியைப் பெற்று, எப்பாடு பட்டேனும் அண்ணனின் தூய்மையை உலகிற்குக் காட்டி விடவே, சங்கற்பம் செய்து கொண்டிருக்கிறேன். நீ உன் அண்ணன் கவனித்து வரும் அனாதை நிலையத்தையும், தர்ம ஆஸ்பத்ரியையும் சரியான முறையில் கவனித்து நடத்தி வா. அவன் இல்லை என்றதனால், அந்த ஸ்தாபனங்கள் சரி வர நடக்காது, வீணாகி விடக் கூடாது. எரிகிற வீட்டில் கிடைத்தது லாபம் என்று எவராவது சுரண்டிக் கொண்டு போய் விடுவார்கள். தம்பீ! ஜாக்ரதையாய்ப் பார்த்துக் கொள்ளு” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இவர்களே ப்ரமிக்கும்படி மிகவும் எளிய முறையில், சர்வ சாதாரணமான உடையில், கம்பீரமான பார்வையுடன் உஷாதேவியும், அவளுடைய தாயாரும் வந்தார்கள்.

“அண்ணா! இதென்ன? அநியாயமான விஷயத்தைக் கேள்விப்பட்டு, நாங்கள் திடுக்கிட்டு ஓடோடி வந்தோம். பெரிய அண்ணா இப்போது எங்கிருக்கிறார்? ஏன் ஜாமீனில் விடுதலை செய்ய ப்ரயத்தனப்படக் கூடாது?… பெரியம்மா! பழைய விஷயங்கள் சகலத்தையும் மறந்து மன்னித்து விடுங்கள். உங்கள் இந்திரா, சந்திராவைப் போல் நானும் ஒரு மகள் என்பதனால் என் மீது கருணை காட்டவேண்டும். முத்தண்ணாவின் உத்தம குணமும், த்யாகச் சுடரும், அவருடைய வாழ்க்கையின் அபாரமான பண்பாடும், யாவும் நான் நேற்றுதான் என் சினேகிதர் ஒருவரால் அறிந்து பரம சந்தோஷப்படுவதற்குள், இத்தகைய அதிர்ச்சியான விஷயத்தைக் கேட்டு, இதயம் தவித்துப் போகிறது. என்னுடைய நேற்று வரையிலிருந்த டாம்பீக வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து, நானும் எளிய வாழ்க்கையில் வாழத் துடங்கி விட்டதன் பலன் பரோபகாரமே செய்து, என் காலத்தை நல்ல முறையில் அண்ணாவுடன் கூடவே சேர்ந்து, நர்ஸ் தொழில் செய்து சந்தோஷமாய்க் கழிக்கத் தீர்மானம் செய்து விட்டேன். என்னுடைய மனக் கோட்டையின் விபரீதத்தினால்தான் இப்படி ஆய் விட்டதோ என்று கூட எண்ணித் துடித்தவாறு, ஓடி வந்தேன்…

பெரியம்மா!… அண்ணா! நீங்களிருவரும் கவலையே பட வேண்டாம். நான் இப்போது லேடி டாக்டர் துளஸீபாயைப் போய்ப் பார்த்து வந்தேன். எந்த விதமாவது பாடுபட்டு, அண்ணாவை நிரபராதி என்று உலகமறியச் செய்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பது என்று நாங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டோம். நானே இனி அனாதை நிலயத்தின் பொறுப்பை, சகல விதத்திலும் முன் நின்று கவனிப்பதாகச் சொல்லி விட்டுப் பின்னர்தான் இங்கு வந்தேன். போலீஸ் கமிஷனர் ஸ்ரீமான் அச்சுதன் அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும்: (குறிப்பு: ஸ்ரீமான் அச்சுதனைப் பற்றி அறிய ஆவலுள்ளவர்கள் வை. மு.கோ.வின் 50-வது புத்தகமாகிய ஆத்ம சக்தி என்கிற துப்பறியும் நாவலை வாங்கிப் படித்தால் தெரியும்) அச்சுதனின் மகளும், நானும் க்ளாஸ்மேட்டுகள். அடிக்கடி அவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்: அவர் மிகவும் கெட்டிக்காரர்; நல்ல உத்தமர். அவருடைய மனைவி மகா மேதை; தர்ம லட்ச்மி என்றால் தகும். அந்த உபகாரியிடம் போய், நான் இது விஷயமாக விசாரித்துப் பின் பெயிலில், அண்ணாவை மீட்க ப்ரயத்தனம் செய்யப் போகிறேன்… எப்படியும் அண்ணாவுக்கு விடுதலை கிடைத்து விடும்…”

என்று மூச்சு கூட விடாமலும், எதிரிலுள்ளவர்கள் பேச இடமில்லாமலும், படபடவென்று, தானே பேசுகிறாள். தாமோதரனும், முற்றிலும் புதிய வாழ்க்கையை ப்ரமாண பூர்வமாய் மேல்கொண்டு விட்டதால், இப்போது உஷாவைப் பார்த்ததும், பழைய கல்மஷமான எண்ணங்கள் தோன்றாமல், ஒரு வித வியப்பும், புனிதத் தன்மையின் சாயலும் தோன்றித் திகைக்கச் செய்தது. உஷாவின் தாயார் சுந்தராம்பாள், மிகுந்த வணக்கத்துடன், “அக்கா! நான் பலவிதத்திலும் கீழ்த்தரமானவள். எனினும், முறை தவறி ஒழுங்கற்றுக் கற்பிழந்து வாழவில்லை. அவரை மணந்து, அவருடன் சகலமும் மறைந்தது; எனினும், நம் உஷாவுக்காக எனக்குள்ள சங்கீதம், நடிப்புக் கலை இரண்டையும் உபயோகித்துப் பொருள் சம்பாதித்தது உண்மை. அது கூட விட்டுச் சில வருஷங்களாகி விட்டன. எத்தனை குற்றங்களிருப்பினும், மன்னித்து, குழந்தை உஷாவின் எதிர்காலத்தின் வாழ்க்கைக்கு, நீங்கள்தான் துணை புரிந்து உதவியளிக்க வேணும். நம் குழந்தை டாக்டரைப் பற்றி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் துப்பறியும் ராஜாராம் நாயுடுவைப் பார்த்துத் தகுந்த ஏற்பாடு செய்து, கட்டாயம் விடுதலை பெறும்படிச் செய்கிறேன். பயப்பட வேண்டாம். பெற்ற வயிற்றின் துடிப்பு எத்தகையது என்பதை என்னுள்ளம் அறியாமலில்லை… தம்பீ! நீயும் கண்ணீர் விடாதே. பணத்தை ஜலமாகச் செலவிட்டு, கடைசி வரையிலும் ,அப்பீல் செய்தே தீர்த்து விடுவது என்று உஷாவும், நானும் சங்கல்பம் செய்து விட்டோம். இனி ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்காமல், கண்ணீர் விட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்கக் கூடாது; வா, தம்பீ! நாம் நாயுடுகாருவின் வீட்டிற்குப் போகலாம்”… என்று மரியாதையாய்க் கூறினாள்.

கமலவேணியின் ஆச்சரியம் கரை புரண்டது. நேற்று ப்ரமாதமான ஆடம்பரத்திலிருந்த அதே பெண்ணா, இன்று இப்படி மாறி விட்டதோடு அல்லாமல், பழைய எண்ணங்களை அடியோடு மறந்து போய், முற்றிலும் புனர் ஜென்மம் எடுத்த மாதிரி ஆகி விட்டது என்ன விசித்திரம்? பாவம்! சிறு பெண்ணாயிருந்தும், எத்தனை விவேகம் உதயமாகி விட்டது!…என்ற பச்சாத்தாபமும், அன்புமே தோன்றிய வேகத்தில், உஷாவை இழுத்து அணைத்துக் கொண்டு, “குழந்தாய்! உலகச் சுழலில் எத்தனை விசித்ரமான மாறுதல்களை நாம் காண்கிறோம் பார்த்தாயா! சகலமும் பூகம்பத்தின் அதிர்ச்சியும், விசித்திரமுமாகவே இருக்கிறது. சகலமும் பகவானின் செயல். அந்த ரக்ஷகன் நம் ஸ்ரீதரனின் நிரபராதித்தனத்தை வெளியிட்டு, அவனுடைய லக்ஷியப்படி அவனை சாந்தியின் சிகரத்தில் வைத்து ரக்ஷித்தால், போதும். ஒருவருடைய முறையீட்டிற்கு இரங்காவிடினும், மற்றொருவருடைய அவக்குரலுக்கு இரங்கி, அபயந் தர மாட்டானா! என்று நம்பித்தான் இருக்கிறேன்… அம்மா சுந்தரா!… நீயும் உன் முயற்சியினால், நம் குழந்தையின் விபத்தை நீக்கி, உதவினால் போதும். எந்தக் காரியமாவது செய்து, அவனை விடுதலை செய்து, அழைத்து வாருங்கள். மகா பாபியாகிய என் துரதிருஷ்டத்தின் பலனால் உண்டாகிய சோதனைகள் நீங்கி, உங்கள் போன்றவர்களின் நல்லெண்ணத்தினால், நன்மையாகவே முடிந்தால் போதும்" என்று கண்ணீர் விட்டாள்.

தாமோ:- உஷா! ‘நான் எத்தகைய முயற்சியும் செய்யக் கூடாது. பகவானே சத்தியத்திற்கு ஜெயமுண்டு என்பதை உலகத்திற்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்; நீ ஒன்றும் ப்ரயத்தனம் செய்யக் கூடாது’ என்று அண்ணா ப்ரமாணமாய் ஆணை வைத்துக் கட்டளை இட்டிருப்பதால், நான் எந்த விதமும் செய்ய முடியாமல் தவிக்கிறேன். நல்ல வேளையாய், நீயும் சின்னம்மாவும் வந்தீர்கள். அண்ணாவுக்குத் தெரியாமலேயே, முயற்சிகள் செய்து, வெற்றியைப் பெற வேண்டும். நீங்கள் இப்போதே அந்த இரண்டு சவங்களும் அடக்கமாவதற்கு முன்பே, நாயுடுகாருவைப் பார்த்து, விஷயத்தைச் சொல்லி விட வேண்டும்—என்றான்.

உடனே உஷாவும், அவள் தாயாரும் உத்திரவு பெற்றுச் சென்றார்கள். கமலவேணியம்மாளின் புகைந்து கொண்டு கிளம்பும் துக்கத்திலும், தனது சிறிய மகனின் மாறுதலும், சேர்ந்தாப் போல் உஷாவின் மாறுதலும், அபாரமான வியப்பைக் கொடுத்துத் தம்பிக்கச் செய்தன. Script error: No such module "Custom rule".