உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 21

விக்கிமூலம் இலிருந்து

21

சிறைச்சாலையிலுள்ள ஸ்ரீதரனைக் கண்டு, சிறைச்சாலை அதிகாரிகளே வியப்புற்று, மூக்கின் மீது விரலை வைக்கிறார்கள். காரணம்: ஸ்ரீதரன், தான் ஒரு விபரீதமான கொலைக் குற்றத்திற்காகச் சிறையிலிருப்பது போல் எண்ணி, ஒரு கடுகளவு கூடக் கலங்காமல், கண்ணீர் விடாமல், சர்வ சகஜ பாவத்துடன், ஒரு விதமான பற்றுதலும் இன்றி, பரிசுத்தமான இதயத்துடன், சதா ஏதோ ஜபிப்பதும், பஜனை செய்வதுமாக இருப்பதைப் பார்த்தால், யார்தான் வியப்புற மாட்டார்கள்?

ஜெயிலர் அன்று காலையில் வந்தார்; “குட்மார்ணிங்கு ஸார்!” என்று ஸ்ரீதரன் வரவேற்றதும், அவருக்கு மிக்க வியப்பாகி விட்டது. 'கீழ்க்கோர்ட்டு விசாரணையிலிருந்து, மேல் கோர்ட்டுக்கு மாற்றிவிட்ட அதிர்ச்சியினால் குன்றிப் போய் சோகமே வடிவாய்ப், புலம்பிக் கொண்டிருப்பார், சிபார்சுக்கு வேண்டுவார், என்றெல்லாம் மனத்திற்குள் எண்ணியவாறு, அட்டகாஸமாய் வந்தவருக்கு, தாமரை இலை நீர்த் துளி போன்ற வைராக்யத்துடன், தன்னை வரவேற்கும் டாக்டரைப் பார்த்து, உண்மையில் முழ உயரம் தூக்கி வாரிப் போட்டது! சற்று நேரம், ப்ரமிப்புடன் மவுனமாகவே நின்றார்.

இவரைக் கண்ட டாக்டர் மிகவும் சாந்தமாயும், அமைதியாயும் பார்த்து, “ஸார்! ஏன் ஏதோ மாதிரி நிற்கிறீர்கள்? என்ன சமாச்சாரம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

ஜெயிலர்:--ஸார் ! நீங்கள் அஸகாய சூரர், ஸார்! நானும், ஜெயில் உத்யோகத்தில் வந்து பல வருஷங்களாகின்றன. இதற்குள், கணக்கற்ற கைதிகளை அதிலும் வித விதமான குற்றங்களைச் செய்தவர்களை, செய்ய உடந்தை இருந்தவர்களை, தூண்டி விட்டவர்களை, படாப் பழி ஏற்றவர்களை—ஆக, பல ரகங்களில் நான் பார்த்திருக்கிறேன். எப்படிப்பட்டவர்களும், இம்மாதிரி மேல் கோர்ட்டுக்கு மாற்றி விட்ட பிறகு ஒரு அப்பீல் செய்வார்கள்… அதிலும் தோல்வியான பிறகு ஒரு அப்பீல்… இப்படியாக கடைசி வரையில் எட்டிப் பார்த்து விடுவதே தொழிலாகச் செய்வார்கள். அத்தகைய லீலையைத்தான் நான் கண்டிருக்கிறேன். அதோடு அத்தகையவர்களின் பரிதாபகரமான புலம்பலையும், சோகக் கண்ணீரின் நெஞ்சுருக்கும் தன்மையையுந்தான் பார்த்திருக்கிறேனேயன்றி, உம்மைப் போல் நிச்சிந்தையாய், ஒரு அணுவளவும் விசனமே இல்லாத, மன உறுதியுடன் கூடிய மனிதரை, என் ஜீவிய காலத்தில் நான் இது வரையில் பார்த்ததே இல்லை, ஸார்! உம்மைத்தான் முதல் முறையாகப் பார்க்கிறேன். என் வியப்பு கரை கடந்து செல்கிறது.

ஸ்ரீத:-(மறுபடியும் ஒரு பெரிய சிரிப்பு சிரித்தபடியே) ஸார்! இதற்கா தாங்கள் இப்படி வியப்புக் கடலாடுகிறீர்கள்! மனிதர்களே பார்த்துச் செய்த சிறையில், மனிதர்களாலேயே அடைக்கப்பட்ட இந்தச் சரீரத்தை மட்டும் மதித்து அனுதாபப்படுகிறீர்களே! அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய், சர்வ வ்யாபியாய் இருக்கும் எம்பெருமானின் சொந்தப் பொருளாகிய நமது ஆத்மா, பகவானால் செய்யப்பட்ட சரீரமென்கிற சிறையில் அடைப்பட்டு, விடுதலை பெற முடியாது தவிக்கின்றதே! அதைப் பற்றி இவ்வுலகத்தில் யாராவது ஒரு கடுகளவேனும் சிந்தித்துப் பார்க்கிறார்களா? அந்தச் சிறையிலிருந்து விடுதலையானால், சகல மோட்ச சாம்ராஜ்யத்தையும் பெறலாம்…

இந்தச் சிறையைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேணும் ஸார்? நான் இதை மிக மிக மகிழ்வுடன் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேனே. இதற்காக நான் ஏன் ஸார் கவலைப்படப் போகிறேன்? நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடம், சிபார்சுகளில் பல்லை இளிக்க, நான் தயாராயில்லை. நிம்மதியான, ஆனந்த நிலைமையில், இந்த இடத்தில்தான், சாந்தியின் சிகரத்தை எட்டிப் பேரின்பத்தை யடைய முடியும். ஆகையால்தான், சந்தோஷமாயிருக்கிறேன். எனக்காக, எத்தகைய ப்ரயத்தனமும், யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது என் வேண்டுகோள். என்னை நம்பி, நீங்கள் அனுமதித்தால், நான் வைத்தியத் தொழிலில் இங்கு ஸேவை செய்து இன்புறுகிறேன். இல்லையேல், கல்லை உடைக்கச் சொன்னாலும் சரி, கட்டை வெட்டச் சொன்னாலும் சரி, தயாராக இருக்கின்றேன்—என்று ஏதோ அபரிமிதமான சந்தோஷத்தை யடைந்தவன் பேசுவது போல், சொல்லும் மன உறுதியைக் கண்ட ஜெயிலர் அசையாது நின்று பின், “ஸார்! பிறகு வந்து உம்மைப் பார்க்கிறேன்” என்று கூறி, மற்றொரு கைதியிடம் சென்றார்.

வழக்கம் போல், அக்கைதி புலம்பித் தவிப்பதும், தனக்கு எப்படியாவது அப்பீல் செய்து விடுதலை வாங்கித் தர வேண்டும். என்று கதறியதோடு, தன் குடும்பத்தில் மனைவி மக்கள் தவிப்பார்கள் என்றெல்லாம் கூறி, ப்ரலாபிப்பதைக் காண, ஜெயிலருக்கு மன வெறுப்பே உண்டாகியதால், அங்கு அதிக நேரம் தங்காமல் சென்றார்… இந்த உலகத்தின், விசித்திரப் போக்கும், மக்களின் அதிசயமான மனோபாவத்தின் வேறுபாடுகளும் ஒன்று கூடி, அவர் உள்ளத்திலும் கூடச் சிந்தனை அலைகளை எழுப்பித் திகைக்க வைத்தது. Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".