உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 31

விக்கிமூலம் இலிருந்து

31

ன்ன ஆச்சரியமப்பா! சென்ற வருஷம், வெறும் பங்களாவாக இருந்த துரைக்கண்ணனின் இடம், இன்று எத்தகைய அத்புத தேஜஸுடன் விளங்குகிறது. “சாந்தியின் சிகராலயம்” என்கிற பெயரைத் தாங்கி, கம்பீரமாய்க் காட்சியளிக்கும் பலகையைப் பார்க்கும் போதே, மனத்தில் ஓர் பேராநந்தமல்லவா உண்டாகிறது! என்ன அன்புப் பணி, எத்தனை ஆர்வம். அந்த இடத்தில் போய்ப் பார்த்தாலல்லவா தெரியும்? நம் பாரத நாட்டின் பண்டைப் பெருமைகள் எல்லாம் செத்து மறைந்து விட்டது, நாசமாகி விட்டது, நாஸ்திகம் தலை எடுத்துத் தாண்டவம் செய்கிறது, நாகரீகம் நிர்த்தனம் செய்கிறது, தெய்வமில்லை, தேவாதி இல்லை—என்றெல்லாம் மனம் குமுறி, இரைச்சலிடும் பக்தர்களும், ஆஸ்திகத்தைக் கேலி செய்து, நங்கு காட்டும் தற்கால விசித்ர மக்களும், அங்கு போய்ப் பார்த்தால், என்ன நிலைமையை அடைவார்கள் தெரியுமா!

அடாடாடா!… ஒரு புறம் பகவன்னாம பஜனை! ஒரு புறம் சத்காலக்ஷேபம், ஒரு புறம் விஞ்ஞான வகுப்பு, ஒரு புறம் சித்திரக் கலை, சிற்பக் கலை, சங்கீதக் கலை, கைத் தொழில் வகுப்பு, இது போல் எத்தனையோ வகுப்புகளும், உபதேசங்களும் நடக்கின்ற அழகைப் பார்த்தால், நான் இந்தப் பாழும் உத்யோகத்தை விட்டு விட்டு, அங்கேயே சதா இருந்து விடலாமா என்றுதான் தோன்றுகிறது.அங்குள்ள ஸ்வாமிகளின் தேஜஸ்ஸும் முகத்தில் பொங்கி வழியும் சாந்தியும், பார்க்கப் பார்க்க நாஸ்திகன் கூட, உடனே ஆஸ்திகனாய் மாறி விடுவான். இத்தனையும் செய்து வைத்திருக்கும் பெருமை டாக்டர் ஸ்ரீதரன் ஒருவனுக்கே உரிமை என்றால், மிகையாகாது. பாவம்! அத்தகைய சுத்தாத்மாவையும், ஏழரை நாட்டுச் சனியன் ஆட்டியே விட்டதே! ஸார்! நீங்கள் போய்ப் பார்த்தீர்களா!” என்று ஒரு உத்யோகஸ்தர் மற்றொரு வயதானவரைக் கேட்டார்.

அவரும் வியப்புடன், “இப்போது என்னிலைமை வேடிக்கையாகி விட்டது. நான்தான் முதலில் பார்த்ததாகப் பெருமையடைந்து, உம்மை அங்கு அழைத்துச் செல்வதற்கல்லவா வந்தேன். என்னை விட, நீர் முந்திக் கொண்டு விட்டீரே! என்று இப்போது பொறாமையா யிருக்கிறது. நான் ஏற்கெனவே ஸ்ரீதரனின் பேஷண்டு. என் முட்டாள் தனத்தினால், நான் நான்காம் தாரம் மணந்து, நாசமாய்ப் போன அவமானத்தைப் பிறகே, உணர்ந்தேன். என்னுடைய உத்தம மனைவி… இளம் நங்கை—அவள் மனம் சாந்தியடையும் பொருட்டு, அந்த ஆச்ரமத்தில் சேர்ப்பதற்கு, ஏற்பாடு செய்து விட்டேன். ஸார். இந்த சாந்தியின் சிகராலயத்தைப் பார்த்து நம் பாரத நாடே பூரிக்கின்றது…”

“ஆமாம்! அந்த அஸகாய சூரனான டாக்டர் ஸ்ரீதரன், தான் இருந்த ஜெயிலின் அதிகாரியின் மகளுக்கு, ஆச்சரியமாய் ஒரு சிகிச்சை செய்திருக்கிறாராமே. ஒரு கண்ணில்லாது அப்பெண் தவித்தாளாம். அவளுடைய வயது, அவளுடய பலம் முதலிய சகல விஷயத்திலும் ஒத்திருக்கும் மற்றொரு பெண், நோய் வாய்ப்பட்டு உயிர் நீத்து விட்டாளாம். உடனே, அவளுடைய ஒரு கண்ணை எடுத்து இந்தப் பெண்ணுக்கு வைத்து, வெகு வெகு திறமையுடன் சிகிச்சை செய்ததில், இந்தப் பெண்ணுக்குக் கண்ணு மிகவும் நன்றாகத் தெரிகிறதாமே! இந்த ஆச்சரியத்தை ஊரே கொண்டாடி, ஸ்ரீதரனைக் கடவுளென்றே எண்ணி பூஜிக்கின்றது ஸார்! என்ன மேதாவி ! என்ன நிபுணன் ஸார். அந்தப் பெண்ணைத் தனது தம்பிக்கு விவாகம் கூட செய்து விட்டாராமே, இப்படிப்பட்ட பரோபகாரியைக் கண்ட துண்டா ஸார்.”

“அடேடே! நானும் கேள்விப்பட்டேன். யாரோ ஒரு பெண்ணுக்குப் புது மாதிரி வைத்யம் செய்து, கண்ணைக் கொடுத்தாராம் என்று. தன்னை அடக்கி ஆண்டு ஜெயிவில் வைத்திருந்த ஜெயிலர் பெண்ணுக்கா, இத்தகைய உபகாரம் செய்திருக்கிறார்! கேட்கக் கேட்க அதி ஆச்சரியமா யிருக்கிறதே! கூடிய சீக்கிரத்தில், ஸ்ரீதரனை, வெளி நாடுகளுக்கு மறுபடியும் அழைத்துப் போவார்களென்று ஒரு வதந்தி உலாவுகிறது அதற்கவர் இசைய மாட்டார். கூடிய சீக்கிரத்தில், அவரே ஒரு காஷாயம் தரித்த லக்ஷ்ய புருஷனாய் விடுவார் என்று ஒரு வதந்தி வருகிறது. எப்படி நடக்குமோ, தெரியாது. ஸரி, இன்று ஸ்ரீக்ருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஏதோ பெரிய உத்ஸவம் அங்கு நடக்கிறதாம். நான் இன்று பூராவும் அங்குதான் இருக்கப் போகிறேன். நீங்களும் வாருங்கள்,” என்று இருவரும் பேசிக் கொண்டு, சாந்தியின் சிகராலயத்திற்குச் சென்றார்கள்.

டாக்டரின் நிரபராதித் தன்மையை மட்டும் கொண்டாடி வியப்புற்ற உலகம், இன்று அவரால் நிர்மாணிக்கப்பட்ட சாந்தியின் சிகராலயத்தையும், அவர் நூதன முறையில் கண் வைத்தியம் செய்ததையும் பற்றி, அபாரமாகக் கொண்டாடத் துடங்கி விட்டது. என்றாலும், கமலவேணியம்மாளின் உள்ளத்தில் மட்டும் ஒரு சிறு குறை மாறவே இல்லை. அதுதான் ஸ்ரீதரன் கல்யாண விஷயத்தில், பிடிவாதமான உறுதியாகும். கல்யாணம் செய்துத் தன் கண் குளிரக் காண வேணும் என்று எத்தனையோ மன்றாடினாள். அது மட்டும் நடக்கவே இல்லை.

உலகத்தவர்களுக்கு மட்டும் ராஜரத்தினம் ஒரு சாமியாராகக் காக்ஷியளிக்கவில்லை; உண்மைத் து றவியாகவே ஆகி விட்டார். அவருடைய பழுத்த ஞான வைராக்யம், சுடர் விட்டு ப்ரகாசிக்கின்ற அழகைப் பார்த்துப் பூரித்தது அவருடைய குடும்பம். உலகத்திலேயே ஒப்புயர்வற்ற பேராநந்த வெள்ளத்தையனுபவிக்கும் நிர்மலமான இதயமும், த்ருப்தியும் டாக்டரின் உள்ளத்தில் தேங்கி விட்டது. ஏற்கெனவே இருந்த மகத்தான கண்ணியமும், புகழும் இப்போது பதினாயிர மடங்காகப் பெருகிப் பெரும் சிகரத்தில் சிறகடித்துப் பறக்கத் தலைப்பட்டது.

எனினும், தன்னைப் பெற்ற தாயாரின் மனத்தை நோக வைப்பதற்கொப்ப, கல்யாண விஷயத்தில் பிடிவாதம் செய்வதைக் கண்டு, தனக்குத்தானே சில சமயம் வருந்தாமலும் இல்லை… “கண்மணீ ஸ்ரீதர்! உன்னை தம்பதிகளாகக் கண்டு களித்தால், என் மனக் குறை தீரும். இத்தனை ஸாதித்த நீ, அந்த ஒரு ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடாதா!” என்று கமலவேணி மீண்டும் கெஞ்சலானாள்.

ஸ்ரீதர்.-அம்மா! உங்களுக்கு ஆயிரங் கோடி நமஸ்காரம் செய்து வேண்டுகிறேன்! “ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்கிற வள்ளுவரின் தெய்வீக வாக்கின்படி நீ இப்போது அடையும் பேரானந்தத்தையும் இதை விட, பெரியதோர் சந்தோஷம் உண்டாகிவிடப் போகிறதென்பதையும் நீயே சற்று யோசித்துப் பாரு. உன் வயிறு செய்த பாக்கியமும், நீ செய்த புண்ணியமும், இன்று உன் மகனை லட்சிய புருஷன் என்றும், கலியுக தன்வந்திரி என்றும், கைராசிக்காரன் என்றும், இன்னும் ஏதேதோ சொல்லி மகிழ்கிறார்களே, அதற்கு அடியோடு ஹானி வந்து விடும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். என் அந்தராத்மா சொல்லுகிறது. எனக்கு இப்போதுள்ள சகலமான புகழும், மண்டிப் போய், நான் வெறும் சக்கையாக மதிக்கப்பட்டால், அதைக் கண்டு உன் மனந்தானேம்மா, துடிதுடித்து வருந்திக் கண்ணீர் சொரியச் செய்யும். அதைச் சற்று யோசித்துப் பாரேன்.

கமல :- நீ சொல்வது எனக்குப் புரியவே இல்லையேப்பா! உலகம் பூராவும் கடவுள் உள்பட, மணவாழ்க்கையின் மூலம், பலவித இன்பத்துடனிருக்கையில், உனக்கு மட்டுமா அவ்வாழ்க்கை கசந்து விட்டது. அதனால் துன்பங்களும், அபகீர்த்தியும் வரும்…

ஸ்ரீதர்:- அம்மா! உலக விவகாரமறியாதவர்களைப் போல், கேட்கிறாயேம்மா! நான் இன்னும் விவரித்தா சொல்ல வேண்டும்? மணவாழ்க்கை என்கிற தடாகத்தில், காலை வைத்து விட்டால், முதலில் ஆசை, சுயநலம் என்கிற முதலைகள் இரண்டு காலையும் பிடித்து இழுத்து, என்னுடைய சகலமான பலத்தையும் தான் உறிஞ்சிக் கொண்டு, என்னைக் கையாலாகாதக் கட்டையைப் போலாக்கி, எந்தக் காரியத்திலும் திடசித்தமில்லாத ஒரு பலவீனத்தைக் கொடுத்து விடும். அதன் பலனாக, இத்தனைப் புகழும் அழிந்து போய், என் மனைவி, என் மக்கள், அவர்களுக்கே சொத்து சேர்க்க வேண்டும். அவர்களுக்கே உழைக்க வேண்டும் என்கிற போக்கில், என் புத்தி மாறி விடும்! இத்தனை அனாதைகளின் கதி என்னவாகும். இந்த ப்ரம்மச்சரிய அனுஷ்டானத்தின் மூலந்தான் உலகமே இன்று கொண்டாடி மகிழ்ந்து போற்றும், விவேகாநந்தர், ராமக்ருஷ்ண பரமஹம்ஸர், மகாத்மா காந்தியடிகள்… இன்னும் எத்தனையோ சிறந்த மேதைகளாக விளங்குகிறார்கள்; அவர்களில் மகாத்மாவும், ராமக்ருஷ்ணரும் மணவாழ்க்கையை மேற்கொண்டும், உண்மைத் துறவிகளாய், த்யாகிகளாய் வாழ்ந்தார்கள். அம்மாதிரி, நானும் ஒரு பெண்ணை மேலுக்காக மணந்து கொண்டு, அவளையும் வருத்தி, அவள் கவலையைக் கண்டு நானும் கலங்கி, இரண்டாங்கெட்டான் வாழ்க்கை வாழ வேண்டுமென்கிறாயா? அம்மா! மணவாழ்க்கையினால் என் பிதாவின் கதி, அடுத்த வீதியிலிருக்கும் அம்பலவாணனின் கதி, டாக்டர் தணிகாசலத்தின் கதி இப்படியே சொல்லிக் கொண்டு போனால், வருஷக் கணக்கில் சொல்லலாம். நம் ஸந்ததி விளங்குவதற்குத் தம்பி இருக்கிறான். இதோடு என்னை விட்டுவிடம்மா! என்னுடைய சக்தியும், என்னுடைய கீர்த்தியும் தினே,தினே புது மெருகிட்டு, மணக்க வேண்டுமாயின், இந்த அல்பத் திருமண ஆசையை விட்டு விடு. அம்மா! ஏனம்மா இப்படிப் புலம்புகிறாய்! ஐயோ, என்னுடைய லக்ஷ்யத்திற்கு வெற்றியைக் கொடுக்க நீ ஸம்மதிக்க மாட்டாயா?

கமல :- செல்வா! உன் புகழ் உச்சஸ்தாயியில் ஆனந்தமாய்ப் பாடி ஆடுகிறது என்பது நானறிவேன். உலகத்தில் தம்பதிகளாய் வாழ்ந்து புகழ் பெறுவதுதான் உயர்வே அன்றி, ஒண்டிக்கட்டை வாழ்வு உயர்வாகாது. ஏற்கெனவே ஊர் ஜனங்கள், உன்னை எத்தனைதான் கொண்டாடிய போதிலும், ப்ரம்மச்சாரி கட்டை வேஷதாரி, தன்னுடன் கூடவிருக்கும் துளஸிபாயை, ராதாவை… சேச்சே… என் வாயால் சொல்லவும் பிடிக்கவில்லை; அப்படி அவதூறாகச் சொல்கிறார்கள். அதற்கெல்லாம் இடங்கொடுக்காமல், நீயும் உலகத்தவர்களைப் போல், மணந்து கொண்டு உன்னுறுதியுடன் தளராது, உழைக்கவே நான் ஆசைப்படுகிறேன். இதோ பாரு,ஸ்ரீதர்! எனக்கோர் யோசனை தோன்றுகிறது. அதாவது திருவுள்ளச் சீட்டுப் போட்டு பார்க்கலாம், அதில் எப்படி வருகிறதோ, அதே போல் நான் விட்டு விடுகிறேன். என்ன சொல்கிறாய் என்று கெஞ்சினாள்.

பாக்குவெட்டியில் அகப்பட்டது போல், டாக்டர் மனது குழம்பித் தவிக்கிறது. தனது உறுதியான லக்ஷ்யத்தைக் கைவிடுவதா அல்லது பெற்ற தாயாரின் மனோரதத்தைப் பூர்த்தி செய்யாது, புறக்கணித்து வாட வைப்பதா! எதுவும் எனக்கு மிகுந்த பாதகமாகவன்றோ இருக்கிறது… அம்மா சொல்படி திருவுள்ளச் சீட்டுப் போட்டு, விவாகம் செய்து கொள்ள வேண்டுமென்று வந்து விட்டால், என்ன செய்வது.. ஹா… இதுதான் சரியான சோதனை. என் வாழ்நாளில் இது போல், கலங்கியதில்லை… மகா ஞானியாயும், முற்றுந் துறந்த முனிவராயும் இருந்த பட்டிணத்தடிகள் கூட, பெற்ற தாயின் பாசத்தைப் புறக்கணிக்கவில்லை; நான் அந்த அபக்யாதிக்கு ஆளாக வேண்டுமா! பகவானே! எனக்கித் தகைய மன உறுதியைக் கொடுத்தவனும் நீயே; அதை சோதிக்க முன் வந்திருப்பனும் தீயே; எப்படியாவது, என் தாயாரின் மனது சாந்தியடைந்தால் போதும்… எனக்கும் ,அனுகூலமான பதிலாகவும் என் தாயாருக்கும்

பக்கம் 261

சாந்தியை யளிக்கக் கூடியதாயும், நீ திருவுள்ளம் பற்றி, அருள் பாலிக்க வேண்டும்! என்று தனக்குள் எண்ணியபடியே, “அம்மா! சரி! உன் இஷ்டப்படியே போடு! அதில் எந்த சீட்டு வந்தாலும், பகவானின் கட்டளை என்று நான் தேருகிறேன். நீயும் அப்படியே சந்தோஷப்பட வேண்டும்” என்றான்.

கமலவேணி அதற்கு இசைந்து, தாமோதரனையே அழைத்துச் சீட்டுக்களை எழுதச் செய்து, அதைத் தானே வாங்கி, கடவுள் ஸன்னிதானத்தில் குலுக்கிப் போட்டு, பாரபக்ஷமற்ற த்யாகியான உஷாவைக் கொண்டு, சீட்டை வெகு ஆவலாக எடுக்கச் செய்தாள்.

கமலவேணியே சீட்டை வாங்கிப் பார்த்தாள். “ப்ரம்மசரியமே சாந்தியின் சிகரம்” என்றிருந்ததைப் பார்த்ததும், “செல்வா! நீயே லக்ஷ்யவீரன், நீயே கர்மயோகி, நீயே வெற்றி பெற்றாய்! புகழ் என்கிற மாதை மணந்து, இன்ப வாழ்க்கையுடன் சாந்தியின் சிகரத்தில், தன்னரசு புரிந்து மகிழ்ச்சியடைவாய். இனி நான் உன்னிடம் இது விஷயமாகப் பேசுகிறதில்லை…” என்று கூறி, மகனைக் கட்டியணைத்துத் தடவிக் கொடுத்தாள். தாமோதரனின் கண்களில் ஆநந்த பாஷ்பம் பெருகியது…

தன் தாயாரை ஸ்ரீதரன் அப்படியே தூக்கிக் கொண்டு குதித்தான். “என் முன்னறி தெய்வமாகிய உன் மனம் பூரித்து விட்டால் போதும். இனி இதை விடநித்ய கல்யாண மங்கள வைபவ சுகம் நமக்கென்ன வேண்டும்? அம்மா! சாந்தீ! சாந்தி —எங்கும் சாந்தி!” என்று கோஷித்தான். அதைக் கண்ட கமலவேணியின் உள்ளம் பூரித்தது. உடனே டாக்டர், சாந்தியின் சிகராலயத்திற்கு ஓடிச் சென்று, ஸ்வாமிகளை தரிசித்து, விஷயங்களைச் சொல்லி மிகவும் குதூகலத்துடன் கும்மாளமிட்டான். நேரே அனாதை நிலையத்திற்குச் சென்று, அங்குள்ள அனாதைக் குழந்தைகளுடன் குதித்துக் கூத்தாடி, களி வெறி கொண்டு, பொங்கிப் பூரித்தான். இதை விட நித்ய கல்யாண சுகம் அந்தக் குழந்தைகளுக்கு வேறென்ன இருக்கிறது. இந்த சந்தோஷத்தைக் கண்டு, தானும் பகிர்ந்து கொண்டு, சந்தோஷிப்பது போல், தோட்டத்திலுள்ள புஷ்பங்களின் பரிமளம், மெல்லிய காற்றில் மிதந்து வந்து, எல்லோருடைய உள்ளங்களையும், களிக்கச் செய்தது. அனாதைக் குழந்தைகளுடன், பூஜாமண்டபத்திற்குச் சென்று, ஆநந்தமாய் ப்ரார்த்தனை செய்து, பஜனை பண்ணவாரம்பித்தான்.

அந்த பஜனாம்ருத இசையின் நாதம், ரீங்காரத்துடன் ஓங்காரத்தை எழுப்பி, அந்த கட்டிடம் பூராவும் எதிரொலித்துப் பூரிக்கச் செய்தது. அங்கு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பகவானின் முகத்தில், திவ்ய தேஜஸுடனும், ஆநந்தத்துடனும், புன்முறுவல் தவழ்ந்து, அந்த மின்ஸார சக்தி ஸ்ரீதரனின் இதயத்தில் அம்ருதம் போல், பாய்ந்து ஆநந்த சாகரத்திலாழ்த்தி, சாந்தியின் சிகரத்தில் அமரச் செய்தது என்றால், அது மிகையாகாது. இதை விட, பேரின்ப சுகம் வேறென்ன இருக்கின்றது!

மங்களம்.

சுபம்.சுபம்.சுபம்.

வை. மு. கோதைநாயகி அம்மாள்
எழுதிய 104 நாவல்கள்

வைதேகி
பத்மசுந்தரன்
சண்பக விஜயம்
ராதாமணி
கௌரீமுகுந்தன்
நவநீதகிருஷ்ணன்
கோபாலரத்னம்
மாதவமணி
சாருலோசனா
சுகந்த புஷ்பம்
வீரவஸந்தா
சாமளநாதன்
ருக்மிணீகாந்தன்
ஸாரமதி
நளின சேகரன்
பரிமள கேசவன்
மூன்று வைரங்கள்
உத்தம சீலன்
கதம்ப மாலை
ஸரஸராஜன்
காதலின் கனி
சோதனையின் கொடுமை
படாடோபத்தின் பரிபவம்
தியாகக் கொடி
ஜெயஸஞ்சீவி
பக்ஷமாலிகா
புத்தியே புதையல்
மங்கள பாரதி
பட்டமோ பட்டம்
சுகுணபூஷணம்
பிச்சைக்காரக் குடும்பம்
ஆனந்தஸாகர்
அம்ருததாரா
இன்ப ஜோதி
ராஜமோஹன்
அனாதைப் பெண்
ப்ரேமப்ரபா
அன்பின் சிகரம்
சாந்தகுமாரி
மாய ப்ரபஞ்சம்
சந்திர மண்டலம்
வானக் குயில்
உளுத்த இதயம்
மகிழ்ச்சி உதயம்
ஜீவியச் சுழல்
மாலதி
வத்ஸகுமார்
கஸ்தூரீதிலகம்
கானல் நீர்
படகோட்டி
ஆத்ம சக்தி
உணர்ச்சி வெள்ளம்
சந்தோஷ மலர்
கருணாலயம்
புகழ் மாலை
தயாநிதி
சுடர் விளக்கு
கலா நிலயம்
ஞான தீபம்
வாத்ஸல்யம்
க்ருபா மந்திர்
மதுர கீதம்
பிரார்த்தனை
இதய ஒலி
மலர்ந்த இதழ்
அமுத மொழி
பிரதிக்ஞை
ஆசை ப்ரவாகம்
வாழ்க்கை தோட்டம்
அபராதி
வெளுத்த வானம்
ப்ரதிபலன்
பவித்திரப்பதுமை
பெண் தர்மம்
உண்மைச் சித்திரம்
தெய்வீக ஒளி
சிலாசாஸனம்
புதுமைக் கோயில்
மனத் தாமரை
தபால் விநோதம்
ஓவியப் பரிசு
இனிய முரசு
ஆண்டவனின் அருள்
இசைப்புயல்
அமரத்யாகி
காலக்கண்ணாடி
ஜெயபேரிகை
ஜீவநாடி
வீராங்கனை
கானகலா
தூயஉள்ளம்
ஸௌபாக்யவதி
ப்ரேமாச்ரமம்
நியாய மழை
அருணோதயம்
மனச் சாட்சி
ப்ரபஞ்ச லீலை
வெற்றிப் பரிசு
ரோஜா மலர்
இந்திரமோஹனா
பாதாஞ்ஜலி
அமைதியின் அஸ்திவாரம்
நம்பிக்கை பாலம்
சாந்தியின் சிகரம்
கடமையின் எல்லை

௸104 நாவல்களில் பெரும்பாலும் தற்போது கைவசமில்லாததால், தேவையான புத்தகங்கள் கிடைக்குமா என்றும், தற்கால விலையையும் பற்றி எழுதித் தெரிந்து கொண்டு, பிறகு பணம்‌ அனுப்பவும்‌.