உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 30

விக்கிமூலம் இலிருந்து

30

ங்கு பார்த்தாலும், சிலுசிலுப்பான காற்று வீசுகிறது. இரவு பூராவும், பெய்த மழையினால் தண்ணீர் தேக்கமும், குளிரான வாடையும் கலந்து வீசுகிறது.பறவைகள் ஒன்றிரண்டு கூண்டிலிருந்து தண்ணீர் உதிர, சிறகடித்துக் கொண்டு பறந்து செல்கிறது. காலையில் சிறைக் கதவுகளைத் திறந்து விடும் வார்டர், ஸ்ரீதரனின் தனிக் கம்பிக் கதவைத் திறந்து… “என்னப்பா! ஜபம் பண்றாயா?” என்று ஏளனமாய்க்கேட்டான்… அதே சமயம், ஜெயிலர் மிக மிக சந்தோஷத்துடன், புன்முறுவல் பூத்த வதனத்துடன் ஸ்ரீதரனின் முன்பு தோன்றி, ஒரு கடிதத்தைத் தானே நீட்டினார்.

எப்போதும், ஜெயிலர் ஆபீஸில் இருந்தபடியே, ஆட்கள் மூலம் கைதிகளை வரவழைத்து விஷயத்தைச் சொல்வாரேயன்றி, தானாக வந்து அழைப்பது என்பது ஸாதாரண கைதிகளுக்குக் கிடையாது. தேசியத் தலைவர்களில் சிலருக்கு அந்த மரியாதை உண்டு. இவ்விஷயத்தில் உள்ளுக்குள் இருக்கும் ரகஸியம் பிறர் அறியாததால், ஜெயிலரே வந்ததைப் பார்த்து, வார்டர்கள் வியந்தார்கள். ஸ்ரீதரன் அந்தக் கடிதத்தைப் பார்த்தான். தான் நிரபராதி என்பது ருஜுவாகி விட்டதால், விடுதலை செய்து விடும்படி ஆர்டர் வந்திருப்பதைப் படித்து, முதலில் பகவானை, திக்கு நோக்கிக் கை குவித்தான். சிறையிலுள்ளவர்களுக்கு சில புத்திமதிகள் கூறிப் பின், ஜெயிலருடன் நடந்தான்.

கண்ணீர் மட்டும் ஆறாய்ப் பெருகுகிறது. ஆபீஸையடைந்ததும், ஜெயில் உடையை மாற்றித் தனது சொந்த உடையை அணிந்த ஸ்ரீதரனை, ஜெயிலர் அப்படியே சேர்த்துக் கட்டிக் கொண்டார். “டாக்டர்! நான் ஒரு நிரந்தரமான கைதி. ஆனால், மனிதர்களின் கண்ணுக்கு, பெரிய மனிதனாய் விளங்குகிறேன், குற்றமற்ற குணக்குன்றாயும் காண்கிறேன்! ஆனால், என்னிதயத்தில் கரையானறிப்பது போன்ற ஒரு ஆறாத புண்ணின் பாதை, என்னை வதைக்கிற ரகஸியத்தை, ஆண்டவன் தானறிவான். அந்த பாதகத்தை எத்தனை ஜென்மங்களில்தான் கழிப்பேனோ தெரியாது. டாக்டர்! நான் தங்கள் பிதாவின் விஷயமாக மிகவும் அழுத்தமாய் எழுதி விட்டேன். அவருடைய ரகஸியம் தெரியாததால், ஏகப்பட்டக் கரும் புள்ளிகள் முன்பெல்லாம் விழுந்து விட்டது. அதை இனி மறைக்க முடியாததால், இப்போது எப்படி எழுதியிருக்கிறேன் என்றால், அவருடைய உடல் நிலை மோசமாகி விட்டதால், உயிருக்கே ஹானி நேரக் கூடும் என்று தோன்றுகிறது; காலில் ரணம் ஆறாததால், காலையே எடுக்கும்படியாகி விடுமோ என்றும், டாக்டர்கள் கூறுவதாலும், இப்போதெல்லாம் மிகவும் யோக்யமாய்த் திருந்தி விட்டதாலும், புது வருஷத்தின் ஞாபகார்த்தமாக, விடுதலை செய்யலாம் என்று எழுதியிருக்கிறேன். சர்க்கார் என்னிடமுள்ள மதிப்பினால், விடுதலை செய்து விடுவார்கள். அப்போது உமக்கு எழுதுகிறேன்; நீர் வந்து அழைத்துச் செல்லலாம். இந்தப் பாவியை மறக்காமல், என்றும் மன்னித்து, அன்புடனிருக்க ப்ரார்த்திக்கின்றேன். இத்தகைய ஒரு பந்தம் நமக்குள் இருப்பதனால்தான், நீர் இந்த இடத்திற்கு மாற்றப்பட்டு வந்த நாள் முதல், உம்மிடம் என்னையறியாத ஒரு அலாதி ப்ரீதியும், மதிப்பும், நம்பிக்கையும் இருந்தது போலும். டாக்டர்! உங்கள் பிதாவை ஒரு முறை பார்த்து விட்டுப் போங்கள்!” என்று அன்பு ததும்பக் கூறி, அவனை தனி விடுதிக்கு அழைத்துச் சென்று, ஏற்கெனவே அங்கு தயாராக வந்துள்ள ஸ்ரீதரனின் பிதாவைச் சந்திக்க வைத்தார்! எங்குமில்லாத ஆநந்தம், என்றுமில்லாத ஆவேசம் பொங்கி வந்ததால், ஸ்ரீதரன் தன் ஜென்மத்திலேயே கண்டிராத ஒரு புத்துணர்ச்சியுடன் ‘அப்பா!’ என்று அழைத்து, மார்புற அப்படியே தழுவிக் கொண்டு, ஆநந்தக் கண்ணீரைச் சொரிந்தான்.

பிதாவும், தனது உணர்ச்சி வேகம் தணியும் வரையில், மெய் மறந்த நிலைமையில் மூழ்கி இருந்து பின்பு… “கண்மணீ! க்ஷேமமாகப் போய் வா! இந்தக் கொலை வழக்கில் நீ வந்திருந்ததானது, நம் குடும்பத்திற்கே ஒரு க்ஷேமத்தையும், சாந்தியையும் கொடுப்பதற்காகத்தான்! மேலும், நாம் எல்லாம் நல்லதற்கே என்றே எண்ண வேணும்! நீ இங்கு வரா விட்டால், இந்தப் பாவிக்கு இப்போது கிடைத்த ஆநந்தம் கிடைக்குமா! ஒரு நன்மையைக் காட்ட, ஒரு தீமை உண்டாவது உலகவியல்புதானே? பாத்திரம் நெருப்பில் பொசுங்கினால்தானே, நாம் அதனுள் வேகிய பண்டத்தைப் புசிக்க முடிகிறது… கண்மணீ… உண்மை.. உமை… பக்தி… பத்தி… இந்த மந்திர உபதேசத்தை நான் உன்னிடம் பெற முடியுமா! என்னுள்ளம் பூரிக்கிறது. குழந்தாய், என்னுடைய வேண்டுகோள் இரண்டே இரண்டுதான் இருக்கிறது; அவைகளை நீ பூர்த்தி செய்து கொடுக்க வேணும். அப்படியே செய்வதாக, வாக்குக் கொடுக்கிறாயா?” என்று குரல் தழதழக்கக் கேட்டார்.

டாக்:- அப்பா! இதென்ன கேள்வி, எந்த ஒரு கட்டளையை நீங்கள் இட்டுச் செய்யும்படிச் சொன்னாலும் கார்த்திருக்கிறேன்; ஆனால், ஒன்று… என் கல்யாண விஷயம் தவிர, வேறு எதுவாயினும் சரி. என்னுயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றுவேன்; இது சத்யம்… சொல்லுங்களப்பா.

பித:-செல்வா! ஒன்று, நான் இனி மானமிழந்து, சீர் குலைந்து, ஊரார் காறி துப்ப, கண்டார் நகையாடும் படியாய், உற்றார், உறவினர், சினேகிதர்கள், முன்பு நான் வாழச் சற்றும் ப்ரியப்படவில்லை; என் காலம் பூராவும், இங்கேயே துலைத்துத் தலை முழுகி விட எண்ணினேன்; விதி வேறாக அமைத்து, என்னை வெளியுலகிற்கு தானே தள்ளி இழுத்துச் செல்கிறது. இதை நான் தடுக்க விரும்பி, நேற்றிரவு பூராவும், ஜெயிலர் என்னிடம் தனிமையில் பேசுகையில், போராடி கெஞ்சினேன். இதற்கு நான் இசையவில்லை என்றால், அவர் பழைய குப்பைகளைக் கிளறித் தாமே அகப்பட்டுக் கொண்டு, சட்ட பூர்வமாய்த் தான் இந்த ஸ்தானத்தை ஏற்று, என்னை ராஜபாட்டையில் வெளியேற்றி விடத் துணிந்து விட்டதாயும், இனி, இதை மாற்ற முடியாதென்றும் சத்தியமும், குலதெய்வத்தின் மீ து ஆணையும் வைத்துக் கூறி விட்டதால், நான் அவருடைய க்ஷேமத்தைக் கோரி, ஆதியில் இந்த இடத்திற்கு வந்தது போல், இன்றும் அவருடைய நன்மையைக் கோரி, நான் வெளியே செல்ல ஒப்புக் கொண்டேன்.

கண்மணீ! இந்தக் கட்டையை இதோடு நீ மறந்து விடு. நான் எங்காவது கண்காணாத இடம் சென்று, சரியானபடி ஸ்வாமிகளை—ஆசாரியனை— அடைந்து, அவருடன் இருந்து பேறு பெற்றுப் போகிறேன். இதை நீ வெளியிடாமல் இதற்கு உத்திரவு கொடுக்க வேண்டும்.”

என்று முடிப்பதற்குள், ஸ்ரீதரன் அவரைத் தடவிக் கொண்டு, “அப்பா! உங்கள் வயிற்றில் பிறந்ததன் மகிமையாலும், மகா உத்தமியான என் தாயாரின் ரத்தத்தில் ஊறியதாலும், நானும் சிறிது மூளையுடன்தான் வேலை செய்கிறேன். உங்களுக்கு முன்பு, நான் என்ன தீர்மானம் செய்திருக்கிறேன் தெரியுமாப்பா! உங்களுக்கு இனி மேல், உலகத்தில் நன்மதிப்பும், பெருங்கீர்த்தியும் உண்டாகும்படியான புதிய உலகத்தை ச்ருஷ்டித்து, அதில் உங்களை அமர்த்தி, உங்கள் இதயத்தில் சாந்தி நிலவி, நாளாவட்டத்தில் சாந்தியின் சிகரத்தில் நீங்களே அமர்ந்து, பூரித்து, அந்த பூரிப்பின் பலனால், பல ஜனங்கள் பயனடைந்து, வாழ்ந்து போகும் படியான ஒரு நூதன திட்டத்தை, நான் உங்களைப் பார்த்த அன்றே, போட்டு விட்டேன் தெரியுமா! நமது ரகஸியம் இங்கு சம்மந்தப்பட்ட ஒரு சிலரைத் தவிர, இந்திரா, சந்திராவுக்குக் கூட தெரியக் கூடாது என்றல்லவா நான் தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் வெளியே வந்ததும், எனக்கு ஒரு பரமாசாரிய குரு ஒருவரிருக்கிறார்: அவரிடம் உங்களை ரகஸியமாகவே கொண்டு விட்டு, உங்களுடைய வாழ்க்கையைப் புனிதமாக்கவும் சாந்தியின் சிகரம் என்ற பெயருடன் ஒரு மடமே ஸ்தாபித்து, அதில் சதா பகவன்னாம பஜனையும், சத்காலக்ஷேபமும், தர்ம வைத்ய சாலையும் நிறுவி, அதன் மூலம் நாம் எல்லோரும் புனிதமடைய ஏற்பாடு செய்து விட்டேனப்பா! எப்போது துரைக்கண்ணன் வழக்கு நமக்கு அனுகூலமாகி விட்டதோ, இனி அவருடைய சொத்துக்களும், பங்களாவும், தோட்டமும், தர்மத்திற்கு அவர் எழுதியுள்ள வில்லின்படி, சொந்தமாகி விட்டதல்லவா! அதைக் கொண்டே, சரீர நோயிக்கும், ஆத்ம நோயிக்கும் நிரந்தரமான ஆரோக்யமும், சாந்தியும் கிடைக்கும்படிச் செய்து விடுகிறேன். இது சரிதானேப்பா! நீங்கள் வெளியே வரும் நாளை, இவர் எனக்குத் தெரிவிப்பார்; நான் அதற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்து, உங்களைச் சாமியாராகவே செய்து விடுகிறேன். இது த்ருப்திதானேப்பா!”

என்ற வார்த்தைகளைக் கேட்டதும், பிதாவின் உள்ளம் காட்டாற்று வெள்ளம் போல் பூரித்து வியப்புக் கடலாடியது. மகனை மீண்டும் தழுவிக் கொண்டார். கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. ஜெயிலருக்கும் கண்ணீர் வெள்ளமிட்டது என்றால், மிகையாகாது. ‘அப்பா! ஒரு வரன் முடிந்தது. அடுத்தது என்னப்பா!’ என்று ஸ்ரீதரனே கேட்டான்.

“குழந்தாய்! நமக்கு இத்தனை சந்தோஷத்தையும் கொடுத்து, நன்மைகளைச் செய்த இந்த ஜெயிலரின் இதயத்தில், ஆறாத ஒரு புண்ணிருக்கிறது. நீ டாக்டராகையால், அதைக் கிள்ளிக் களைந்தெறிந்து, அவருக்கு சாந்தியைக் கொடுக்க வேண்டும்: அதைச் செய்வதாய் சத்தியம் செய்து கொடு…” என்றார். ஸ்ரீதரனின் அப்போதிருந்த உணர்ச்சிப் பெருக்கின் வேகத்தில், “அப்படியே செய்கிறேன். இது சத்யம்…” என்று கூறி விட்டான். மகனை மார்புறத் தழுவிக் கொண்ட பிதா… “கண்மணீ, எமனிடம் ஸாவித்ரி வரம் வாங்கியது போல், உன்னிடம் நான் வாங்கி விட்டேன். இனி மாறக் கூடாது, இந்த உத்தமருக்கு என்ன குறை தெரியுமா! இவருக்கு ஐந்தாறு குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு கால விதியின் கோலத்தினால், பிரம்பு வேலை செய்யும் போது, எக்கச்சக்கமாய்க் கண்ணில் பட்டு, ஒரு கண் போய் விட்டதாம் ஒரு கண்தான் நன்றாகத் தெரிகிறதாம். அந்த ஊனத்தினால், அவளை யாரும் மணக்க மறுத்து விட்டார்களாம். வயதாகிக் கொண்டு வருகிறதாம்; அதுதான் பாவம் கவலை, சதா வேதனைப்படுகிறார். நீயோ லக்ஷயவாதி, அவருடைய மகளை நீ மணந்து, அவருக்கு சாந்தியைக் கொடுக்க வேண்டும்,” என்று சொல்லும் போது, ஸ்ரீதரனைத் தூக்கி வாரிப் போட்டது.

ஜெயிலருக்கும் மனது குழம்பி, விசனம் மேலிட்டு வருந்தியதால், தவித்தார். இம்மாதிரி இந்த மனிதன் கேட்பார் என்றே அவர் நினைக்காததால், திடுக்கிட்டுப் போய்… “ஸார்! இந்த தண்டனைக்கு நான் ஒப்பவே மாட்டேன். நேற்றிரவு இவரிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கையில், என் குடும்ப வரலாற்றையும் சொல்லும்படியாகி விட்டது. நான் செய்த துர்ப்பாக்ய வசத்தில், என் விதியிப்படியானால், அதைக் கொண்டு, உம்மை பாதிக்க வைக்க நான் தயாராக இல்லை. இதற்கு நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். நான் ஏற்கெனவே செய்துள்ள பாதகம் போதும். இனியும் பாதகத்தைச் செய்ய நான் சம்மதிக்க மாட்டேன். இந்த விஷயத்தை நீங்கள் வாபஸ் வாங்கத்தான்வேணும்,” என்று ஜெயிலர், ஸ்ரீதரனின் பிதாவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்!

இதன் பிறகே, ஸ்ரீதரனுக்கு சற்று சரியாக மூச்சு வந்தது. “அப்பா ! கல்யாண விஷயத்தில் லவலேசமும் ஆசையே இல்லாத என்னை, இந்த ப்ராமணமென்கிற பிணைப்பில் மாட்டிக் கொண்டு தவிக்க வைத்துக் கடவுள் வேடிக்கைப் பார்க்காமல் காப்பாற்றினாரே, அதுவே போதும். ஸார்! நான் இன்னொரு ப்ரமாணம் உங்ககளுக்குச் செய்கிறேன்: தற்கால வைத்திய முறையில், பல பல புதிய புதிய அம்சங்கள் கையாளப்படுகின்றன. அம்முறையில், உங்கள் மகளுடைய கண்ணுக்கும், என்னால் கூடிய வரையில், வைத்யம் செய்து, கண்ணைக் குணப்படுத்தப் பார்க்கிறேன். கண் குணமாகி விட்டால், நல்ல வரனாக நானே தேடி, கல்யாணத்தையும் செய்து வைக்கிறேன். அப்படி இல்லை என்றால், நானே மணந்து கொண்டு, அவளைக் காப்பாற்றுகிறேன்; சரிதானா…” என்று கூறும் போது, அவன் முகத்தில் ஒரு புதிய சக்தியின் சோபையும், கண்களில் ஒரு தனித்த ப்ரகாசமும் உண்டாகி ஜ்வலித்தது.

அதற்கு மேல் வார்த்தைகள் அதிகம் நடக்கவில்லை; நேரமும் ஆகி விட்டதால், ஜெயிலர் தன் மீது பிறருக்குச் சந்தேகம் இல்லாமலிருப்பதற்காக, கிளம்ப யத்தனித்தார். அந்த ஜாடையைத் தெரிந்து கொண்டு, ஸ்ரீதரனும் கிளம்பினான். இத்தனை நாளாக வறண்ட கட்டை போலிருந்த இதயத்தில், இன்றுதான் புத்திர வாத்ஸல்யத்தின் அலைகள், ப்ரமாதமாய் எழுந்து கொந்தளித்ததை, டாக்டரின் பிதா உணர்ந்து, உள்ளூரக் குமுறிப் போய்க் கண் கலங்கி விட்டார்.

“டாக்டர்! உங்களை வரவேற்கும் வைபவத்திற்காக, நேற்றிரவு முதல் சிறை வாசலில், நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்… அவர்கள் கையிலுள்ள புஷ்ப மாலைகள் உமது கழுத்தையலங்கரிக்க ஆவலுடன் துடிதுடிக்கின்றன. உமது தாயார் உம்மை உச்சி முகர்ந்து, ஆசீர்வதிக்கப் பதைபதைக்கிறார்கள். உமது சகோதான் பரதன் தவித்தது போல், அண்ணாவின் வரவுக்காகத் தவிக்கிறார். இனி தாமதம் செய்வது தகாது. நீங்கள் சிரஞ்சீவியாய், லக்ஷிய புருஷராய் வாழ, பகவான் அருள் புரிவானாக,” என்று வாழ்த்திப் பின், பெரிய கதவும் தாண்டி, ஸ்ரீதரன் செல்லும் வரையில் வழியனுப்பினார்.

அடாடா! என்ன ஆநந்தக் காட்சி. ‘நானு! நீ!’ என்று போட்டியிட்ட வண்ணம், ஒவ்வொருவரும் ஓடோடி வந்து, மாலைகளைச் சூட்டி, டாக்டரை வணங்கியும், தழுவியும் அவரவர்களின் அன்பைக் கொட்டியளந்து, வரவேற்ற காட்சியை வர்ணிக்க முடியவே முடியாது.

ஜெயிலர் தம்மையே மறந்து, ஆனந்தக் கண்ணீர் பெருகச் சிலை போல், நின்று விட்டார்… “அம்மா, தம்பீ!… அருமைத் தங்கச்சி! ஆத்ம நேயர்களே… அன்று நான் முதல், முதல் கைதியாகி, போலீஸாருடன் செல்லும் சமயம், என்ன சொன்னேன், அது நினைவிருக்கிறதா! அதை மறுபடியும் நினைத்துப் பாருங்கள். ஆண்டவனே சத்யம்! சத்யமே ஆண்டவன், அப்படிப் பட்டவன் தன்னுடைய சத்யமும், தானும் உண்மையாயிருந்தால், அதை அவனே நிலை நாட்டி, நான் நிரபராதி என்பதை நிரூபிக்கட்டும்; இல்லையேல், நான் என் விதி என்று எண்ணி அனுபவிக்கிறேன்—என்று உறுதியுடன், நம்பிக்கையுடன் கூறினேன். இப்போது அந்த பரந்தாமன் அதை நிரூபித்துக் காட்டி விட்டான் பார்த்தீர்களா! அந்த மாதிரியாய், ஆழமான நம்பிக்கையும், பக்தியும் என்றென்றும் எல்லோருக்கும் இருந்து விட்டால், அவன் தனது கண்ணின் மணி போல் காத்து ரக்ஷிப்பான்!” என்று கூறியபடியே, முதலில் தன் தாயாரின் காலில் விழுந்து, கால்களில் முகத்தைப் பதித்துக் கொண்டான். இந்த உருக்கமான காட்சி, எல்லோருடைய மனதையும் உருக்கி, அடி பாதாளம் வரையில், ஊடுருவிப் பாய்ந்து, உணர்ச்சி வயமாக்கியது. Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".