சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 29
29
‘இதென்ன இது, மேரியை இன்னும் காணவில்லையே! அவள் எங்கு சென்றிருப்பாள். இத்தனை நாட்களாக என்னை விட்டுப் பிரியாமல், நம்பிக்கையா யிருந்ததனால்தானே, நேற்றிரவு அவளைக் கூடவும் அழைத்துச் சென்று விட்டேன். எங்கு போயிருக்கக் கூடும்,’ என்று எண்ணியபடியே, அந்த வெள்ளை மாது உள்ளுக்குள்ளேயே தவிக்கிறாள். பட்ளரை விசாரிக்கலாமென்று கூப்பிட்டாள். அம்புஜத்தின் கணவனாகிய பட்ளர், தனக்கு ஒன்றுமே தெரியாது. அவள் யாரோ என்னவோ என்று திட்டமாகக் கூறி விட்டான். வெள்ளை மாது மிக்க பயத்துடன், மேரியின் வரவை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கையில், அன்று இரவு மேரி மிகுந்த பயத்துடன், நடுநடுங்கியவாறு வேர்க்க, விறுவிறுக்க கை கால்கள் உதற, முகம் வெளிர் தட்டி, விகாரமடைய அலங்கோலமான நிலைமையில் வந்து சேர்ந்தாள்.
இவளைக் கண்ட வெள்ளை மாது மிகுந்த கோபத்துடன், “இதென்ன செய்கை! ஒரு நாள் பூராவும் என்னை விட்டு விட்டு நீ சொல்லாமல், கொள்ளாமல் எங்கு போனாய்? நேற்றுதான் நம்பிக்கையாயிருப்பதாய், ப்ரமாணம் செய்து கொடுத்த நீ இன்றே என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? எங்கு சென்று விட்டாய்? ஏன் என்னிடம் சொல்லவில்லை? சொல்லாமல் சென்றதுமன்னியில் பயப்படுவது போல், நடிக்கிறாயே, நடிப்பு!” என்று அதட்டினாள.
உடனே மேரி, வெள்ளை மாதின் கைகளைப் பிடித்துக் கொண்டு “தாயே! மன்னிக்க வேண்டும். நான் உங்களுக்கு நம்பிக்கை த்ரோகம் செய்யவில்லை. என் உடைகள் எவ்லாம் அழுக்காகி விட்டதால், லாண்டரிக்குச் சென்று, உடைகளை வாங்கி வரச் சென்றேன். நீங்கள் தேள் கொட்டிய அதிர்ச்சியால், அயர்ந்து தூங்கி விட்டீர்கள். சீக்கிரம் வந்து விடலாம் என்று போனேன். தாயே! சொல்லக் கூட பயமாயிருக்கிறது. நானோ, இந்த ஊருக்கே புதியவள். மனம் உடைந்து போன வேகத்தில், எப்படியோ பிழைக்கலாம் என்று வந்த இடத்தில், உங்களுடைய பேராதரவு கிடைத்ததே என்று பூரித்தேன். அதை பகவான் உடனே சிதறவடித்து விட்டார். நான் இனி இங்கு வரவே மாட்டேன். உங்களிடம் நேற்று நம்பிக்கையாய் சொல்லியதற்காக, ஒரு பரம ரகஸியத்தை உங்களிடம் சொல்லி, உங்களையும் எச்சரிக்கவே வந்தேன்…”
இதைக் கேட்டதும், வெள்ளை மாதின் இதயம் நூறு மைல் வேகத்தில் அடிக்கத் தொடங்கியது. “என்னை எச்சரிப்பதற்காக வந்தாயா? பரம ரகஸியமா? சொல்லு மேரி, சீக்கிரம் சொல்லு” என்று பதறினாள். மேரி தன்னை சமாளித்துக் கொள்வது போல் நடித்து, “தாயே! இந்த ஊரில் யாரோ துரைக்கண்ணன் என்ற ஒரு ப்ரபு இருந்தாராம். அவர் பெண் சீமையில் படித்தாளாம். எந்த வெள்ளையனையோ மணந்தாளாம்… இங்கு வந்தாளாம்… ஏதேதோ கொலை நடந்ததாம்… விவரம் எனக்கு ஒன்றுமே தெரியாது தாயே! அந்தக் கொலை வழக்கில் நீங்களும் சம்மந்தப்பட்டிருப்பதாயும், போலீஸார் இது பற்றி சகல விவரங்களும் விசாரித்து விட்டதாயும், உடனே உங்களைக் கைது செய்யப் போவதாயும், நானும் கூட இருந்தால், என்னையும் கைது செய்து விடுவார்கள் என்றும், ‘இனி நீ அங்கு போகவே கூடாது. உன்னை நான் காப்பாற்றுகிறேன், நீ இங்கேயே இருந்து விடு’ என்று ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் ரகஸியமாகக் கூறி என்னை எச்சரித்தார். இது சுத்தப் பொய்யாக இருக்கும் என்று நான் நம்பவில்லை… இருந்தாலும், அப்படி உண்மையாயிருக்குமானால், இது விஷயத்தை உங்களிடமே கூறி, உங்களை உடனே இங்கிருந்து வெளியேற்றிக் காப்பாற்றி விடலாம் என்பதற்காக ஓடி வந்தேன். தாயே! ஏதாவது உண்மை இருக்குமானால், உடனே ஓடி விடுங்கள். இல்லையேல், தாராளமாக வந்து வாதாடுங்கள்! பயப்படவே வேண்டாம். நான் போய் விடுகிறேன்…”
என்று மேரி சொல்லும் போதே, வெள்ளை மாதிற்கு உயிரே போய் விடும் போலாகி விட்டது. “ஹா… இது உண்மையா மேரி? நிஜமாகவா என்னைக் கைது செய்யப் போகிறார்கள்… ஐயயோ…” என்று தவித்த க்ஷணமே “நிஜமாகவே கைது செய்ய சகல ஏற்பாடுகளுடன், இதோ சர்க்கார் வாரண்டுடன் வந்திருக்கிறோம்'” என்று கூறியவாறு, அதே சமயம் போலீஸ்காரர்கள் அரெஸ்டு வாரண்டுடன் வந்து கைதியாக்கினார்கள்.
வெள்ளை மாதின் இதயத் துடிப்பு பின்னும், அதிகரித்து ‘ஹா…’ என்று கூச்சலிட்டாள். இன்ஸ்பெக்டர் சாவதானமான த்வனியில், “அம்மா கப்பலேறி வந்து, கை விலங்கு மாட்டிக் கொண்ட பெருமையுடன் தப்ப வேண்டுமானால், கொலை நடந்த விஷயமான சகல உண்மைகளையும் சொல்லி விட்டால், உனக்குத் தூக்கு தண்டனை வராது. சாதாரண தண்டனையிலும் சற்று குறையும். நீ இனி மேல், எதையும் மறைக்கவோ, தப்பவோ முடியாது: சட்டைப் பைக்குள் பதுக்கியுள்ள விஷ மருந்தை… கடிதங்களை எடுத்து வெளியே வை… உம்… அவைகளை மரியாதையாய் நீங்களே எடுத்து வையுங்கள்” என்றார்.
பக்கம் 242
வெள்ளை மாதின் நிலைமையை விவரிக்கவா வேண்டும்? சந்தடி செய்யாமல், எடுத்துக் கொடுத்தாள். போலீஸாருடன் இன்னும் பல அதிகாரிகள் வந்திருந்தார்கள். நாயுடுகாருதான் ப்ரதானம் வகிக்கிறார். கடிதங்கள் கிடைத்ததால், இவர்கள் வெறும் சோதாக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்; துரைக்கண்ணனின் மகளை ஏமாற்றி, அவளுடைய சொத்தை அடைவதற்காகவே, அவள் தாய்நாடு திரும்புவதற்கு சில தினங்களுக்கு முன்பு, தான் அவளை மணந்ததாக நாடகம் நடத்தினார்கள்—என்பது போன்ற உண்மைகள் வெளியாகி விட்டது. வெள்ளை மாதின் இதயம் ஏற்கெனவே பலவீனப்பட்டுப் படுக்கையுடன் இருந்ததாலும், திடீரென்று இந்த அதிர்ச்சி உண்டாகி விட்டதால், இதயம் நின்று விடும் போன்ற நிலைமை உண்டாகி விட்டது. இதையறிந்த நாயுடுகாரு… “அம்மணீ! நீங்கள் கடைசி மூச்சு போகும் வரையில், செய்த பாபம் போதும்; இப்போதாவது கொலை நடந்தது எப்படி என்கிற உண்மையைச் சொன்னால், உங்கள் மதப்படிக்கு கர்த்தன் உங்களை மன்னிப்பார்! பாதகத்தை மறைத்தால், பயங்கர நரகந்தான் என்பதை மறக்க வேண்டாம்..” என்றார்.
வெள்ளை மாதின் மூச்சு திக்கு முக்காடத் தொடங்கியது… அந்த நிலைமையில், ஆவேசம் வந்தவளைப் போல், துள்ளி குதித்தவாறு.. “நான் பாவி… படுபாவி. நான் கேவலம் வேசிகள் இனத்தைச் சேர்ந்தவள். என்னோடு வந்த இருவரும், கேவலமான சோதாக்கள். இந்தியா முழுதும் சுற்றிப் பார்க்கவும், துரைக்கண்ணனின் செல்வத்தை விழுங்கவுமே, நாங்கள் அவர் மகளைக் குல்லாய் போட்டு மணந்ததாக ஒரு நாடகமாடி, கப்பலேறி வந்தோம். எந்த சமயம் என்ன விபத்து நேருமோ, அப்போது இதைக் குடித்து விடவே, விஷத்தையும் கையுடன் கொண்டு வந்தோம். துரைக்கண்ணன் மனமுடைந்து, அவர் மகளை அவரேதான் அடித்துத் தள்ளினார். அந்த வேகத்தில், அவள் இறந்தாள். மகளின் பரிபவத்தினால் தவிக்கும் சமயம், மருமகனாய் வந்த படுபாவிதான் அவரை அடித்துக் கொன்றான். வில்லை என்னிடம் மறைக்கும் படிக்குக் கொடுத்தான். அச்சமயம், அங்கு ஏகப்பட்ட ஆட்கள் வந்து விட்டதால், ஒரு சாக்கடையில் புதைத்தேன்; எந்த சாக்கடை என்கிற இடம், குறி தெரியாது தேடித் தேடி அலைந்து ஏமாந்தேன். துரைக்கண்ணனைக் கொன்றவன் என் அண்ணனாக வேடமணிந்தவன்தான். டாக்டர் நிரபராதி என்பதை, நான் சத்யமாய்ச் சொல்கிறேன். வில்லு கிடைத்தால், அதை தாக்கல் செய்து, டாக்டரை மீட்டு விட்டு, நான் சாகவே எண்ணினேன்: என் விதி வேறு மாதிரியாகி விட்டது. என்னை கர்த்தன் மன்னிப்பானாக…” என்று ஆவேசம் வந்தவளைப் போல் கூறினாள். சகலமும் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. “மேரி… உன்னையும் நான் ஏமாற்றி…” என்பதற்குள் நாயுடுகாரு, “அம்மா! மேரியை உன்னால் ஏமாற்ற முடியாது. அவள் வெறும் மேரியல்ல, துப்பறியும் ராஜாராம் நாயுடுவின் அருமை மகள் அம்புஜந்தான். தெரிந்ததா? உன்னிடம் துப்பறிவதற்காகவே, வேலைக்காரியாயிருந்து, சகல உளவையும் அவளே கண்டு பிடித்தாள்”—என்று நாயுடு சொல்வதைக் கேட்ட வெள்ளை மாதும், கூட இருந்த அதிகாரிகளும் வியப்புற்றார்கள். அடுத்த க்ஷணமே மேரி, அம்புஜமாய்க் காட்சியளித்ததைக் கண்டு பூரித்தார்கள்.
வெள்ளை மாது மறுபடியும் வியப்புடன் அம்புஜத்தை நோக்கி, “தாயே! புனிதவதீ! இத்தகைய பரோபகார மார்க்கத்தில், என் காலத்தைக் கடத்தியிருந்தால், எத்தனை பயனடைந்திருப்பேன். துப்பறியும் கதை களைப் பல புத்தகங்கள் படித்திருக்கிறேன். நேரில் என் வாழ்க்கையிலேயே பார்த்து விட்டேன்,” என்று கூறி முடிப்பதற்குள், கீழே விழுந்து விட்டாள்.
ஏற்கெனவே, துரைக்கண்ணன் எழுதிய வில்லை தாக்கல் செய்திருப்பதால், சகல விஷ்யமும் விளங்கி விட்டது. இனி மேல், விவரிக்க வேண்டுமா! சர்க்காரின் சட்டப்படிக்குச் சகல காரியங்களும் விமரிசையாக நடந்து, தக்க ருஜுவுடன் நிறைவேறியது. இந்த வழக்கின் அபரிமிதமான ஜெயத்தைக் கண்டு, அந்த ஊரே ஆனந்தக் கூத்தாடியது என்றால் மிகையாகாது.