உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பித்தளை அல்ல,

அப்பாசாமியை எஜமானர் எம்பெருமாள், கேவலமாகப் பேசுவதும், கொடுமைப் படுத்துவதும், சிறுவன் முத்துச்சாமிக்கு அடக்க முடியாத ஆத்திரத்தைக் கொடுத்து வந்தது.

'பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசவேண்டும் என்று தனக்கு அப்பாசாமி புத்தி கூறிவருகிறார். எம்பெருமாளுக்கு முப்பது வயதுதான் இருக்கும்; அப்பாசாமிக்கு ஐம்பதுக்குமேல் ஆகிறது. ஆனால் அப்பாசாமியை எம்பெருமாள், எவ்வளவு கேவலமாகப் பேசுகிறான்; பேசலாமா?—மரியாதை காட்ட வேண்டாமா. வயதில் பெரியவர் என்பதற்காக காட்டக்காணோமே! அடிக்கக்கூடச் செய்கிறானே! இது அக்ரமம் அல்லவா! இதை யாரும் கேட்கமாட்டேன் என்கிறார்களே!' என்று முத்துச்சாமியின் பிஞ்சு உள்ளம் எண்ணிக் குமுறும். பணம் படைத்தவர்களானால், அவர்கள் பொதுநீதிகளுக்குச்கட்டுப்பட்டு நடக்கவேண்டியதில்லை என்ற தெளிவு முத்துச்சாமிக்கு பதினெட்டு வயதுக்குத்தான் பிறந்தது.

"சோம்பேறி! தடிக்கழுதை!" என்று ஒருநாள் எம்பெருமாள் அப்பாசாமியைத் திட்டியதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்துச்சாமியால் கோபத்தை அடக்கவே முடியவில்லை. 'நீதான்கழுதே! நீ தான் சோம்பேறி!' என்று எம்பெருமாளைப் பார்த்துக் கூச்சலிட்டுவிட்டான். 'என்ன சொன்னே!' என்று எம்பெருமாள் கூச்சலிட்டார். பாய்ந்துசென்று முதுகு பிய்ந்து விடும்படி அடித்துவிட்டான், அப்பாசாமி. எட்டு வயது முத்துச்சாமியை ; 'போதும்! விட்டுத்தொலை! சிறுவன்!' என்று ஒப்புக்குக்கூடச் சொல்லவில்லை எம்பெருமாள்,'பிள்ளையை வளர்க்கற இலட்சணம் இதுதானா! இது உதைபட்டு, அடிபட்டு, ஊர்ப்பொறுக்கி, ஆகப்போகுதுப்பார்!' என்று சாபமே கொடுத்தார் எம்பெருமாள்.

அடங்கி ஒடுங்கி அப்பாசாமி, எம்பெருமாள் எதிரே நிற்பதைப் பார்க்கும்போது எல்லாம், முத்துச்சாமிக்கு, அடக்க முடியாத கோபம் வரும். ஒருநாள் பக்கத்துச் சாவடியில் சிலபேர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் முத்து என்று