கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/குடி மரபு
3. குடி மரபு
மன்னர் மரபிலே தோன்றி, மன்னர் ஆனவரும் உண்டு; குடிமரபில் தோன்றி, மன்னரானவரும் உண்டு. புகழிலும், ஆற்றலிலும், பண்பிலும் பிந்திய வகையினரே மேம்பட்டவர்கள் என்று வரலாறு காட்டுகிறது. உண்மையில், புகழ் மிக்க மன்னர் மரபுகளை ஆக்கியவர்களே குடிமரபினர்தான். ஆயினும், மன்னர் மரபுக்கே புகழ் தந்தவர்கள் கூடத் தம் குடி மரபை மறைக்கவே விரும்பியுள்ளனர். முடி மரபின் மாயப் புதிர் இது. மன்னரின் இம்மயக்க ஆர்வத்தைப் பயன்படுத்தி, மன்னவைத் தன்னலப் பசப்பர்களும், புரோகிதர் குழாங்களும், போலி அரச மரபுகளையோ, தெய்வீக மரபுகளையோ படைத்துருவாக்க முனைந்துள்ளனர். இவற்றின் மூலம், அவர்கள் மன்னரைத் தம் வயப்படுத்தவும், குடி மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து வைத்துத் தன்னலம் பெருக்கவும் தயங்கியதில்லை.
குடி மரபிலே பிறந்து கோ மரபுக்கு மதிப்பளித்தவன் ஹைதர். ஆனால், மேற்கூறிய ஆர்வத்துக்கு, அவன் கூட விலக்கானவன் என்று கூற முடியாது. தன் வீரப் புகழ் ஆட்சியின் உச்ச நிலையிலே கூட, அவன், தான் பீஜப்பூர் மன்னர் மரபினன் என்று கூறி, தன் பெருமையை பீஜப்பூரின் பெருமையாக்கி, மகிழ்வதுண்டாம்! ஆனால், கால நிலையை ஊன்றி நோக்கினால், ஹைதரின் இவ்வார்வம் கண்டிக்கத் தக்கதல்ல என்னல் வேண்டும். ஏனென்றால், அந்நாளைய இஸ்லாமிய உயர் குடியாளரும், அவர்களைப் பின் பற்றி, வெள்ளையரும் பீஜப்பூர் போன்ற தென்னாட்டு அரசுகளின் மரபுகளைக் கூட உயர் மரபாகக் கருதவில்லை. உயர்குடி என்றால், தென்னாட்டுக்கு அயலான குடி என்றே அவர்கள் கருதினர். மரபின் பழமைக் கொடி வடபுலத்திலிருந்தோ, இஸ்லாமிய மேலைப் புறங்களிலிருந்தோ வந்திருந்தால்தான், உயர் குடிச் சிறப்பும், மதிப்பும் அதற்கு இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள்.
இந்நிலையில், ஹைதர் மரபைப் பெருமைப்படுத்த எண்ணிய இஸ்லாமிய வரலாற்றாசிரியர், அவன் குடி மரபின் பழமையை லாகூருக்கும், பாக்தாதுக்கும் கொண்டு சென்று, அதன் மீது அயல் நாட்டுப் பழமைப் புகழொளி பரப்ப முயன்றுள்ளனர்.
இம்முயற்சி முழு வெற்றி காணவில்லை. ஏனென்றால், பாட்டன் முப்பாட்டன் கடந்து, குடி மரபுப் பட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒத்து வரவில்லை.
ஒரு சாராரின் குல மரபுக் கொடியின்படி, ஹைதரின் தொலைமுன்னோன் ஹஸன் என்பவன். இவன் இஸ்லாமியரிடையே புகழ் முதன்மை பெற்ற ‘குரேஷ்’ குடியினன். இன்றைய ஈராக்கின் பழங்காலத் தலைநகரான பாக்தாதிலிருந்து, சிந்து வெளியிலுள்ள ஆஜ்மீருக்கு வந்து, அங்கே குடியேறியவன். அவன் புதல்வன் வலி முகம்மது தன் சிற்றப்பனுடன் மனத்தாங்கல் கொண்டு, தென்னாட்டிலுள்ள குல்பர்கா நகருக்கு ஓடி வந்தான். அவன் மகனே, ஹைதர் அலியின் பாட்டனான அலி முகமது.
மற்றொரு கூற்றின்படி, முதல் முன்னோன் முகமது பாய்லோல் என்பவன். இப்பெயர் மொகலாயருக்கு முன் தில்லியை ஆண்ட லோடி மரபினரின் பெயரை நினைவூட்டுவது. அவன் தன் புதல்வர்கள் வலி முகமது, அலி முகமது என்பவர்களுடன் பாஞ்சாலத்திலிருந்து பிழைப்புக்காக குல்பர்கா வந்து சேர்ந்தான். முந்திய மரபில் அலி முகமதுவின் தந்தையாகக் காணப்பட்ட வலி முகமது,. இம் மரபில் அவன் தமையனாகத் தோற்றமளிக்கிறான்.
ஹைதர் குடி மரபில், அலி முகமதுவுக்குப் பின் குளறுபடி எதுவும் இல்லை. ஆகவே அலி முகமதுவின் கால முதலே குடி மரபு வரலாறு மெய்யானது என்று கொள்ளலாம்.
அலி முகமது கல்வி, கேள்விகளில் வல்லவன். இப்புகழ் குல்பர்கா நகரில், அவன் மதிப்பை உயர்த்திற்று. அந்நகரில் வாழ்ந்த சயித் பர்ஸா முன்ஷி என்ற சமயத் துறைப் பெரியாரின் புதல்வியை, அவன் மணம் செய்து கொண்டான். குல்பர்காவில் ஏற்பட்ட ஆட்சி மாறுதல் காரணமாக, அவன் அந்நகரை விட்டு வெளியேற நேர்ந்தது. அவன் மைத்துனர்கள் ஏழு பேர் இருந்தார்கள். ஏழு பேருமே, பீஜப்பூர் சுல்தானிடம் படைத் துறை அலுவலில் அமர்ந்திருந்தவர்கள். அவர்கள் ஆதரவால், அலி முகமதுவும் பீஜப்பூர் சென்று, பணியமர்வு பெற்றான். இனித் தன் வாழ்வு, பட்டு மெத்தை விரித்த வாழ்வாகவே இருக்கும் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். ஆனால், அது அவ்வாறு அமையவில்லை. அவுரங்கசீப் பீஜப்பூரைப் படையெடுத்த போது, அவன் மைத்துனர் ஏழு பேரும், ஒருவர் பின் ஒருவராக அரிய வீரச் செயல்களாற்றிக் களத்திலேயே புகழுடன் மாண்டனர். இச்செய்தி கேட்ட அவர்கள் தங்கையாகிய அலியின் மனைவி, வாழ்விலே முழுதும் வெறுப்படைந்து, வாடி வதங்கினாள். எவர் தேற்றினாலும் தேறாமல், அவள் வாழ்வு— மாள்வுக்கிடையே ஊசலாடினாள்.
இட மாற்றத்தால், மனைவியின் உயிர் காக்க எண்ணி, அலி மீண்டும் குடி தூக்கினான். சுரா மாகாணத்திலுள்ள கோலார் (கோலாறு) அவனுக்குத் தஞ்சம் அளித்தது. கோலார்த் தலைவன் ஷா முகமது அவனுக்கு ஆதரவு காட்டி, அவனைத் தன் அரண்மனையில் பணியரங்கத் தலைவன் ஆக்கினான். அவன் குடி மீண்டும் தழைத்தது. முகமது இலியாஸ், முகமது, முகமது இமாம், ஃவத்தே முகமது ஆகிய நான்கு புதல்வரைப் பெற்று வளர்த்தான். அவன் 1678-ல் உலகு நீத்தான்.
தலை மூத்தவனான முகமது இலியாஸுக்கும், கடைசி இளவலான ஃவத்தே முகமதுவுக்கும் வாழ்க்கைப் பண்பிலே, மிகவும் முரண்பாடு இருந்தது. இலியாஸ் சமயப் பற்றார்வம் மிக்கவன்; ஃவத்தே இளமைத் துடிப்பும், வீரமும் உடையவன். அவர்கள் முரண்பாடு முறுகிப் பிணக்கமாயிற்று. இலியாஸ் குடும்பத்தையே துறந்து விட்டு, தஞ்சையிலிருந்த பர்ஹான் உதீன் என்ற ‘பீர் சாதா’—அதாவது ஞான குருவையடைந்து, அவர் பணியில் நாட் கழித்தான். ஃவத்தே முகமது, ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லாவிடம் தானைத் தலைவன் (பௌஜ்தார்) ஆக வேலை பார்த்தான். செஞ்சிக் கோட்டையை, நவாப் முற்றுகையிடும் போது, செஞ்சித் தலைவன் தீப்சிங் நவாபின் மீது மூர்க்கமாகத் தாக்கினான். நவாபின் உயிருக்கே பேரிடையூறு ஏற்படவிருந்தது. ஃவத்தே முகமது, தீப் சிங்கை எதிர்த்து வீழ்த்தி, நவாபைக் காப்பாற்றினான். இதனால், அவனுக்கு ஆனை, அம்பாரி, முரசம் முதலிய மதிப்புகளும், ‘நாய்கன்’ என்ற பட்டமும், புகழும் கிட்டின.
1701-ல் இலியாஸ் உயிர் நீத்தான். அவன் சார்ந்த ஞான குருவின் புதல்வியை மணந்து கொண்டு, ஃவத்தே முகமது தன் படி முறையை உயர்த்திக் கொண்டான். ஏனென்றால், இம்மண உறவு மூலம் ஆர்க்காட்டுக் கோட்டை முதல்வன் இப்ராஹிம் அவன் மைத்துனனானான்.
இலியாஸுக்கு ஹைதர் சாகிபு என்ற புதல்வன் இருந்தான். அவன் கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலியின் பெரியப்பன் புதல்வனாதலால், மூத்த ஹைதர் சாகிப் எனக் குறிக்கப்படுகிறான். அவன் சிற்றப்பன் ஃவத்தே முகமதுவைப் போலவே, சிறந்த வீரன். மைசூரை அப்போது ஆண்டவன் சிக்க தேவராயரின் புதல்வனான தொட்ட கிருஷ்ணராஜ் ஆவன். மூத்த ஹைதர் சாகிபு, மைசூர் அரசன் படைத் துறையில் ‘நாய்கன்’ என்ற பட்டத்துடன், நூறு குதிரைகளும், இருநூறு காலாட்களும் உடைய படைப் பிரிவின் தலைவனானான்.
புகழும், குடி மதிப்பும் ஃவத்தே முகமதுவுக்கு இன்பம் தரவில்லை. நவாபின் சூழலிலிருந்த பொறாமைப் பூசல்கள் அவன் மீது புழுக்கத்தையும், வெறுப்பையும் வளர்த்தன. அரசுரிமை மாற்றத்துடன், அவன் அங்கிருந்தும் வெளியேற வேண்டியதாயிற்று. சில காலம் தமையன் மகன் மூத்த ஹைதர் சாகிபுவின் உதவியால், அவன் மைசூரில் அலுவல் பார்த்தான். பின் சுரா மாகாணத் தலைவனான, தர்கா கலீ கானிடம் சென்று, பெரிய பலாப்பூர்க் கோட்டை முதல்வனாக அமர்வு பெற்றான். இங்கே மாகாணத் தலைமை, அரசுரிமைப் பதவி அடிக்கடி மாறிற்று. ஃவத்தே முகமதுவின் திறமையும், புகழும் என்றும் பெரிதாகவே இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றம், கட்சி- எதிர்க்கட்சிப் பூசல் காரணமாக, அடிக்கடி அவன் அல்லல்பட்டு இக்கட்டுகளுக்கு ஆளானான்.
ஃவத்தே முகமதுவுக்கு பர்ஹான் உதீனின் புதல்வியல்லாமல், மற்றும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அவர்களில் இளையாள் மூலம், அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். இரண்டாவது புதல்வன், இளமையிலேயே காலமானான். ஷாபாஸ் கான், ஹைதர் அலி கான் என்ற மற்ற இரு புதல்வர்களுமே அவன் குடி மரபின் புகழ்ச் சின்னங்களாக நிலவினர். ஷாபாஸ் 1718-லும், ஹைதர் 1721-லும் பிறந்தனர். இளையவராகிய ஹைதரே பின்னாளில், கன்னடத்தின் போர் வாளாகப் புகழ் பெற்ற சிங்கக் குருளை ஆவார்.
ஃவத்தே முகம்மது அந்நாளைய தன்னல, தன்னாதிக்கப் பூசல்களிடையே தன் தலைவனாகிய, தர்கா கலி கானுக்கும், அவன் பின்னோர்களுக்கும், உண்மை தவறாமல் உழைத்து வந்தான். ஆயினும், உடனிருந்தோர் தவறுகளால், அவன் தோல்வியுற்றுப் போரில் மாள நேர்ந்தது. தர்கா கலி கானின் புதல்வனாகிய அப்பாஸ் கலி கான் நன்றி கெட்ட தனமாக, அவன் செல்வ முழுவதையும் பறிமுதல் செய்து எடுத்துக் கொண்டான். அத்துடன் நில்லாமல், அக்கொடியோன், பணப் பேராசையால், ஃவத்தேயின் மனைவி, மக்கள் அணிமணி, ஆடைகளையும் பறித்துக் கொண்டு, அவர்களைச் சிறையிலிட்டுக் கொடுமைக்கு ஆளாக்கினான். எட்டு வயதான ஷாபாஸும், மூன்றே வயதுடைய ஹைதரும் ஒரு பெரிய முரசத்தினுள் வைத்து, அதிர்ச்சியில் துடிதுடித்து வீறிடும்படி, முரசறைவிக்கப் பெற்றனராம்!
மைசூரில் வாழ்ந்த மூத்த ஹைதர் சாகிப், தன் சிற்றன்னையரும், தம்பியரும் படும் அவதி கேட்டு, அவர்களைச் சென்று விடுவித்தான். அவர்களைத் தன் பாதுகாப்பிலேயே வைத்து, அவன் வளர்த்தான். ஷாபாஸுக்கு வயது வந்ததும், அவன் தன்னுடன், அவனையும் படைத்துறை அலுவலில் சேர்த்துக் கொண்டான்.
1749-ல் தேவனஹள்ளிக் கோட்டை முற்றுகையின் போது, மூத்த ஹைதர் சாகிப் வீரப் போர் செய்து மாண்டான். ஷாபாஸ், போரில் காட்டிய வீரத்தை மெச்சி, மைசூர் அமைச்சனான நஞ்சி ராஜ் அவனை மூத்த ஹைதரின் பதவியில் அமர்த்திக் கொண்டான். இளைய ஹைதர், இப்போரில் ஒரு புதுப் படை வீரனாகவே சேர்ந்திருந்தான். அந்நிலையிலும், அவன் ஆற்றிய அஞ்சா வீர தீரச் செயல்கள், அமைச்சனின் மதிப்பையும், பாராட்டையும் பெற்றன. ஆகவே ஹைதரிடமும், ஒரு சிறிய படைப் பிரிவின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
கன்னடத்தின் போர் வாளாக ஹைதர் இது முதல் வளரலானான. வாள் கொண்டு, அவன் தன் வீரப் புகழ்க் கழனியை உழத் தொடங்கினான்.
அடுத்து நடைபெற்ற ஆர்க்காட்டு முற்றுகையின் போதும், அதன் பின் நடைபெற்ற போராட்டங்களின் போதும், ஹைதர் புகழும், ஆற்றலும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தன.
மைசூர் இச்சமயம் ஈடுபட்டிருந்த போராட்டம் நிஜாம். ஆர்க்காட்டு நவாப் ஆகிய இரண்டு அரசர் குடிகளிலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எழுந்த அரசுரிமைப் போராட்டமேயாகும். இதுவே கர்நாடகப் போர் என்ற பெயரால், 1748 முதல் 1754 வரை தென்னாடெங்கும் சுழன்றடித்த போராட்டப் புயல் ஆகும். இப்போராட்டப் புயலின், கருவிலிருந்தே ஹைதர் அலியின் புகழ் முதிர்ச்சியுற்று வளர்ந்து, தென்னக வாழ்வில் தவழத் தொடங்கிற்று. அப்புயலின் வரலாறே, அவன் புகழ் வரலாற்றின் தொடக்கம் ஆகும்.