கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி/குடிலன் வீழ்ச்சி
6. குடிலன் வீழ்ச்சி
ஆட்சி என்பது இரண்டு பக்கமுள்ள ஒரு கொடுவாள். அதன் ஒரு புறம் கூர்மை வாய்ந்தது. எதிர்த்தோரை அடங்கொண்டு சாடுவது; அழிவு செய்வது. ஆனால், அதற்கு மற்றொரு புறம் உண்டு. அது அக்கூர்மைக்கு வலுவும், பாதுகாப்பும் அளிப்பது. அழிவைத் தடுத்து, ஆக்கத்தை உண்டு பண்ணும் நற்பக்கம் அதுவே! ஹைதரின் செயலாட்சியில், இந்த இரு பக்கங்களையும் தெளிவாகக் காணலாம். ஆனால் குந்தி ராவ் போன்றோர் ஆட்சியில், வாளின் ஒரு புறமே செயலாற்றிற்று. அவர்கள் கூரிய புறத்தால் அழிவு செய்தனர். அதனை வலுப்படுத்த, மட்டுப்படுத்தவில்லை. மொட்டைப் பக்கத்தின் அருமையை, அவர்கள் அறிய மாட்டார்கள். குந்தி ராவைத் தனக்கு மேல் உயர்த்தி விட்ட ஹைதருக்கு, இது விரைவில் அனுபவ உண்மையாயிற்று.
ஆளத் தெரிந்தவர் கையில், குந்தி ராவ் ஓர் ஒப்பற்ற ஆட்சிக் கருவியாகச் சமைந்தான். ஹைதரின் கீழ் அவன் செயலாளராக இருக்கும் போது, அவன் நிலை இதுவே. அவன் திறமையறிந்து, ஹைதர் அவனைத் தன்னிடம் வேலைக்கமர்த்தினான். குடிகள் மீது வரி விதிப்பதில்—வழுவில்லாமல் வரி வசூலிப்பதில் - இம்மியும் பிசகாமல் கணக்கு வைத்துக் கொள்வதில், குந்தி ராவுக்கு ஈடு யாரும் இல்லை. இதைக் கண்டே, ஹைதர் அவனுக்குப் படிப் படியாக உயர்வு தந்து, இறுதியில் அவனைத் தன் நம்பகமான அந்தரங்கச் செயலாளனாக்கிக் கொண்டான். ஆனால், இந்நிலை அடைந்த பின், ஒப்பற்ற ஆட்சிக் கருவியான அவன், அத்துடன் அமையாமல், ஆட்சியையே கைப்பற்றும் பேரார்வம் கொண்டான். பெருந்தன்மை மிக்க ஹைதர், இங்கும் அவனுக்கு உதவினான். அந்நிலையிலும் அவனுக்கு உண்மையுடனிருந்து, தன்னிலும் அவனை உயர்த்தி, ஆதரவு தர முனைந்தான். ஆனால், ‘ஆட்சிக் கருவி’ ஆளும் பீடத்தில் அமர்ந்த பின், ஆளத் தெரியாதவன் ஆகத் தலைப்பட்டான்.
ஹைதரின் வலிமை அவனுக்குத் தெரியும். ஆனால், ஹைதரின் குறைபாட்டையும் அவன் உள்ளங் கை நெல்லிக் கனி போலக் கண்டான். ஹைதரை எதிர்த்து வெல்லுவது அருமை. ஆனால், சூழ்ச்சியால் அவனை வீழ்த்துவது எளிது. எனவே, குந்தி ராவ் வெளித் தோற்றத்தில் நண்பனாகவே நடித்தான். உள்ளூர, மன்னனை ஹைதருக்கெதிராகத் திருப்பி வந்தான். மன்னனுக்கு அவன் மீது பொறாமை ஏற்படும்படி செய்தான்.
“மன்னரே, தாங்கள் ஆளும் மரபில் பிறந்தவர்கள். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இயற்கைப் படியில், தாம் அரசர் மரபினர். நானோ அமைச்சர் மரபினன். அப்படியிருக்க, பிறப்பால் நீசன், சமயத்தால் வேறுபட்ட முசல்மான், நம் மைசூர் அரசுக்கு வெளியேயிருந்து வந்த ஒரு முரடன்—இப்படிப்பட்டவன், நம் நாட்டில்—நம் ஆட்சிக் கயிற்றில் கை வைப்பதா? இதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? மானமுடைய மன்னர் மரபுக்கு, மாளாத நம் வைதிக நலனுக்கு இது இழுக்கல்லவா?” என்று அவன் மன்னன் மனத்தில் சாதி மத வேறுபாட்டுக் கருத்துக்களைப் புகுத்தினான்.
மன்னன் மனம் கரைந்தது. ஆனால், ஹைதரைப் பகைத்துக் கொள்ள அஞ்சினான். எனினும், குள்ளநரிக் குடிலனான குந்தி ராவ், மன்னனுக்குத் தேறுதல் தந்தான். “எதிர்க்கும் பொறுப்பை என்னிடம் விட்டு விடுங்கள், அரசே! நீங்கள் செய்ய வேண்டுவது வேறு எதுவுமல்ல; நான் சொன்னபடி நடந்து கொண்டால் போதும். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் அவன்.
மன்னன் மனத்தைக் கரைத்த பின், குந்தி ராவ் நாட்டின் எதிரியாகிய மராட்டியப் பேரரசன் பேஷ்வாவைத் தன் கருவியாக்கத் துணிந்தான். தான் பேஷ்வாவின் வகுப்பினன் என்பதை அவனுக்கு நினைவூட்டினான். ஹைதரின் மரபையும், குடியையும் இழித்துக் கூறினான். இவை போதாவென்று பேஷ்வாவின் பண ஆசை, ஆட்சி ஆசையையும் அவன் தூண்டினான். மைசூரின் மீது படையெடுத்து, ஹைதர் அழிவுக்கு உதவினால், படையெடுப்புச் செலவுக்காக ஐந்து இலட்சம் வெள்ளி தருவதாகவும், அத்துடன் ஆண்டு தோறும் திறையாக இரண்டு இலட்சம் அனுப்பி வர இணங்குவதாகவும் அவன் தெரிவித்து மறைவாகக் கடிதம் வரைந்தான்.
சூதறியாத ஹைதர், இச் சூழ்ச்சி வலையில் மெல்ல, மெல்லச் சிக்கினான். சந்தர்ப்பங்கள் இங்கே அவன் எதிரிக்குப் படிப்படியாகச் சாதகமாகி வந்தன.
தன் ஆற்றல் எதுவுமில்லாமல், ஆர்க்காட்டுக்கு நவாபாக, இச்சமயம் வாலாஜா-சுராஜ் உத்தௌலா முகமதலி விளங்கினான். சூழ்ச்சியால் பெற்ற அரசை, அவன் சூழ்ச்சியாலேயே பேண எண்ணினான். ஆகவே, பிரஞ்சுக்காரரைப் பற்றி, ஓயாத கோள் மூட்டி, ஆங்கிலேயரை அவர்கள் மீது ஏவி விட்டான். ஆங்கிலேயப் படைகளும், அவன் ஆணைப்படி புதுச்சேரியை முற்றுகையிட்டன. ஆங்கிலேயர் வீரத்தை விட, ஹைதரின் வீரத்துக்கே இது வரை பிரஞ்சுக்காரர் அஞ்சியிருந்தனர். ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் ஹைதர் உதவியை நாடினர். தமக்கு ஆதரவு தந்தால், அதற்கு மாறாக, செஞ்சியையும் தியாக நகரையும் மைசூருக்கு அளிப்பதாக வாக்களித்தனர்.
ஹைதர் தன் படைகளின் பெரும் பகுதியை சையத் மக்தூம், அசூத் கான், மகூரி நாயுடு ஆகிய படை முதல்வர்களின் தலைமையில் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தான். மக்தூம் கான், பார்மால் வட்டம்—அதாவது தென் ஆர்க்காட்டின் ஒரு பகுதியை—வென்று, அதை அசூத் கானின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டுப் புதுச்சேரி சென்றான். முற்றுகை வளையம் கடந்து, கோட்டைக் காவல் வீரருக்கு, அவன் உதவியும், ஊக்கமும் அளித்தான். ஆனால் முற்றுகை தகர்ந்து விடவில்லை. மைசூர் வீரரே, கோட்டையைக் காத்து வந்தனர்.
புதுச்சேரி நடவடிக்கை காரணமாக, ஹைதரிடம் இப்போது ஒன்றிரண்டு படைப் பிரிவுகளே இருந்தன. ஆயினும், குந்தி ராவின் போக்குகளில் சிறிது ஐயத்துக்கு இடமிருப்பதாக ஹைதர் காணத் தொடங்கியதிலிருந்து, அவன் தன் குடும்பத்தினரைப் பாதுகாக்க, ஒரு ‘படை காவல் அரண்’ அமைத்துக் கொண்டிருந்தான். சின்னாட்களுக்குள், குந்தி ராவின் பகைமை வெளிப்படையாயிற்று. அவன் வேண்டுகோளுக்கிணங்கி, புதிய பேஷ்வாவான மாதவ ராவ், ஈசாஜி பண்டிட் என்ற படைத் தலைவனை அனுப்பினான். அவனுடன், நாற்பதினாயிரம் குதிரை வீரரும், இருபதினாயிரம் காலாள் வீரரும் வந்து சேர்ந்தனர். அந்த விநாடியே, குந்தி ராவ் ஹைதரின் அரணை வளைத்துக் கொண்டு, பீரங்கிக் குண்டுகளை அதன் வாயில் நோக்கிப் பொழிய வைத்தான்.ஹைதர் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளில் முதன்மையானது இதுவே. படை வலு இல்லாத இந்த நேரத்திலும், அவன் வீரப் படைத் திறம் சிறிதும் தளரவில்லை. தன் பீரங்கிகளைத் தற்காலிகப் பாதுகாப்பில் ஈடுபடுத்தி, அவன் எதிரியின் தாக்குதலுக்கு எதிர் தாக்குச் செய்தான். அதே சமயம், அவன் குந்தி ராவின் சூழ்ச்சிப் பொறியிலிருந்து தப்பும் திட்டங்களிலும் முனைந்தான்.
உடனே திரும்பி வரும்படி அவன் மக்தூமூக்கு ஆணை பிறப்பித்தான். தன் சட்டகனான மீர் அலி ரஸா கானுக்கும், விரைந்து வரும்படி அழைப்பனுப்பினான். அவர்கள் திரும்பி வரும் வரையில் காத்திருக்காமல், அவன் தன் பணித் துறைச் செல்வங்களனைத்தையும் தொகுத்து, அவற்றிற்கான கணக்குத் தயாரித்துக் கொண்டான். ஒரு சிறு படையை அனுப்பி, யாரும் அறியாமல் அரணை அடுத்திருந்த ஆற்றின் படகுகளையும், படகுக்காரர்களையும் பிடித்து அடைத்து வைத்தான். நள்ளிரவில் தன் அரும் பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டு, குடும்பத்துடன் இரவோடிரவாக ஆற்றைக் கடந்து, காற்று வேகமான குதிரையில் ஏறி, எதிரியின் வலையிலிருந்து தப்பியோடினான்.
தன் அவசரத் தேவைகளை எண்ணி, ஹைதர் திடுமெனப் பங்களூர் கோட்டையுள் நுழைந்து, அதைக் கை வசப்படுத்திக் கொண்டான். அதன் தலைவன் கபீர் பேகும், நகரின் வணிகச் செல்வரும், அவன் துணிகர வீரங்கண்டு, அவனை ஆதரிக்க முன் வந்தனர். அவர்களிடம் பண உதவி பெற்றுக் குடும்பத்தை, அவர்கள் பாதுகாப்பில் விட்ட பின், அவன் மீண்டும் நாடோடியாகப் புறப்பட்டான்.
குந்தி ராவும், மராட்டியரும் பங்களூரை முற்றுகையிட்டனர். இச்சமயம் மக்தூம் சாகிபு, ஹைதரின் ஆணைக்கிணங்கிப் புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டான். வழியில் அசூத் கானிடமிருந்து படைக்கலங்களும், உணவுப் பொருள்களும் பெற்று, ஹைதரை நோக்கி வந்தான். மராட்டியரும், குந்தி ராவும் பங்களூர் முற்றுகையை விட்டு விட்டு, ஆனைக்கல் என்னுமிடத்தில் அவனைச் சூழ்ந்தனர். மக்தூம் தன் நிலையையும், படைக்கலமும், உணவும் கொண்டு வந்தும், அவற்றைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும் இக்கட்டையும் தெரிவித்து, ஹைதருக்குக் கடிதம் வரைந்தான்.
ஹைதர் தங்க இடமின்றி, தன் துணைவர் இடர் தீர்க்க வகையின்றி, காடுமேடாக அலைந்து வந்தான். அவனுக்கு இச்சமயம் தன் பழைய நண்பனும், தலைவனுமான நஞ்சி ராவின் நினைவு இருளில் ஒளியாக மின்னிட்டது. இருவரிடையேயுள்ள நட்பு அணிமையில் முறிவுற்றிருந்தது. ஆனால், நஞ்சி ராவின் பெருந்தன்மையிலும், நன்றியுணர்விலும் ஹைதருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. குந்தி ராவின் சூழ்ச்சியில், தான் விழுந்ததற்கு மன்னிப்புக் கோரி, அதே சூழ்ச்சியில் சிக்கித் தான் அடைந்த நிலையையும் விளக்கி, அவன் நஞ்சிராவுக்கு முடங்கல் வரைந்தான்.
“நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.”
என்ற மூதுரை, நஞ்சி ராவ் வகையில் பொய்க்கவில்லை. அவன் ஹைதரைக் கை தூக்கி விட ஆர்வத்துடன் முன் வந்தான். அத்துடன் இடரில் சிக்கிய ஹைதரின் தோழன் மக்தூமுக்கு உதவும்படி, தன் வசமிருந்த அஞ்சிடி துருக்கத் தலைவனுக்கு அவன் ஆணை பிறப்பித்தான்.
அஞ்சிடி துருக்கத்தின் ஆதரவிலிருந்து கொண்டு மக்தூம், எதிரிகளை விரைவில் எதிர்த்துத் துரத்த முடிந்தது. அவன் வீரர்கள் இரவில் எதிரி முகாம்களைப் பின்னிருந்து தாக்கி, அவர்கள் படைகளைச் சிதறடித்தனர். நரியுடன் சேர்ந்த சிறுத்தையும், யானையின் சீற்றத்துக்கு ஆளாகிச் சீரழிந்தது போல, குந்தி ராவுடன் சேர்ந்த பழிக்கு ஆளாகி, ஈஸாஜி பண்டிட் பல தொல்லைகளை அடைய வேண்டி வந்தது. இந்நிலையில், நஞ்சி ராஜன் அவனுக்கு ஒரு முடங்கல் வரைந்தான். “மராட்டியப் பேரரசில் பெறும் பொறுப்பு வகிப்பவர் தாங்கள். குந்தி ராவோ ஒரு சிற்றரசின் எல்லையில் அடாது செய்து, உட்பகை வளர்ப்பவன். இத்தகையவனுடன் சேர்ந்து, செயலாற்றுவது தங்கள் பெருமரபுக்கு இழுக்காகும் என்று கூற வேண்டி வந்ததற்கு வருந்துகிறேன். ஆயினும், தம் ஆய்ந்தமைந்த அறிவமைதிப்படியே நடக்கவும்” என்று அவன் நயம்பட எழுதினான்.
ஏற்கெனவே மனம் புண்பட்டிருந்த ஈஸாஜி ராவ், குந்தி ராவுடனே பூசலிட்டு, அவனிடம் போர்ச் செலவு கோரினான். குந்தி ராவ் மறுக்கவே, மராட்டியத் தலைவன் அவன் படைகளையே கொள்ளையிட்டு, அப்பணத்துடன் திரும்பினான்.
மீர் அலி ரஸா கானின் படைகளும் இச்சமயம் வந்து சேர்ந்தன. அவற்றுடனும், மக்தூம் படைகளுடனும், ஹைதர் குந்தி ராவை வேட்டையாடத் தொடங்கினான். கோட்டை, கோட்டையாக அவன் சென்று புகலிடம் தேடினான். கோட்டையின் பின் கோட்டையாக எல்லாம் நஞ்சி ராவ், ஹைதர் ஆகியவர் வசப்பட்டன.
மைசூரில் ஹைதர் அலி இல்லாததால், அரசன் ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குந்தி ராவின் வீழ்ச்சியை எதிர் பார்த்து, ஒவ்வொருவரும் தாமே அரசராகத் தலைப்பட்டனர். இக்குழப்பத்தில், அரசன் தன் குடும்பத்தையும், செல்வத்தையுமே பாதுகாக்க முடியாமல் பேரவதிக்காளானான். அரசனின் கையெழுத்துடன், அரசன் தாயும், பாட்டியும் ஹைதரை மைசூருக்கு அழைத்தனர்.
“பெருந்தன்மை மிக்க வீர மைந்தனே! உன் வாள் வலியின்றி எமக்குப் பாதுகாப்பில்லை, புகலிடமில்லை. உன் வீரக் கரமின்றி, இங்கே ஆட்சியும் செல்லாது, வாழ்வில் அமைதியும் நில்லாது. ஆகவே விரைந்து வந்து, எம் வீர மைந்தனாகும் பேற்றையும், ஆட்சிப் பொறுப்பையும் நேரடியாக ஏற்று, எமக்கும், நாட்டு மக்களுக்கும் நல் வாழ்வளிக்கக் கோருகிறோம்” என்று அரச இலச்சினையிட்ட அழைப்பிதழ் ஹைதரை நாடி வந்தது.
ஹைதர், தன் வீர வாழ்வில் முதல் தடவையாக, தன் வீரப் போக்கில் தயங்கினான். “கேளாதே வந்த இவ்வரும் பெரும் பொறுப்பை ஏற்பதா? மறுப்பதா?” என்ற பிரச்சினை எழுந்தது. ஏற்க அவன் விரும்பவில்லை; ஆனாலும், மறுக்க அவன் துணியவில்லை. மக்கள் அனாதை நிலையை அவன் எண்ணினான். மன்னன் அகதி போல், அல்லலுறுவதைக் கண்டு, அவன் உள்ளம் உருகினான். அவன் கண் முன், தன் நண்பனான வீர அமைச்சன் நஞ்சி ராஜன் வீழ்ச்சிப் படலம் நாடகத் திரைக் காட்சி போல் இயங்கிற்று. இவற்றையெல்லாம் சிந்தித்த பின், இறுதியில் அப்பொறுப்பை ஏற்பதென்று அவன் துணிந்தான்.
துணிவுக்கு ஆதாரமான அக்கடிதத்தை அவன் தன் மூலப் பத்திரமாகப் பத்திரப்படுத்தினான்.
குந்தி ராவிடம் இன்னும் ஏழாயிரம் குதிரை வீரர், பன்னிரண்டாயிரம் காலாள் வீரர், மானுவெல் என்ற வெள்ளையன் தலைமையில் 800 ஆங்கிலப் படை வீரர், பத்துப் பன்னிரண்டு பீரங்கிகள் ஆகியவை இருந்தன. ஆனால் அகப் படையாகிய வீரம் இல்லாத போது, புறப் படைகளால் யாது பலன்? சூழ்ச்சியிலே நம்பிக்கை வைத்த அவன், தன் சூழ்ச்சிக் கோட்டை இடிந்ததும், அச்சத்துக்கு ஆளாகி, ஓடினான். அவன் படை வீரரே, அவன் கோழைமை கண்டு வெறுத்து, அவனைப் பிடித்து மன்னனிடம் ஒப்படைத்தனர்.
குந்தி ராவுக்கு இப்போதும் ஒரு பலம் இருந்தது. அரண்மனைப் பெண்டிர் மனம் போல நடந்து கொண்டவன் அவன். அவர்கள் தம் பழைய கிலியை மறந்து, அவனை ஆதரிக்கத் தலைப்பட்டனர். தனக்கென ஒரு திட்டமற்ற மன்னனும், அவர்கள் போக்கில் நின்றான்.
ஹைதர் வீரப் போரை நிறுத்தினான். உள்ளூர அவன் மன்னன் குடும்பத்தின் அவல நிலை கண்டு நகைத்தான். தன் வீரருள் சிலரை வெற்றுத் தோட்டாக்களுடன் அனுப்பி, அந்தப்புரத்தின் மாடி மீது சுடும்படி ஆணையிட்டான். பெண்டிர் கோட்டை அல்லோலகல்லோலப் பட்டது. மன்னனுக்குப் புதிய மனுக்கள் சென்றன. குந்தி ராவுக்கு மன்னிப்பும், உயிர்ப் பிச்சையும் வழங்கினால், ஹைதரிடம் முன்பு தெரிவித்தபடி அவன் பாதுகாப்பை ஏற்பதாக அரசன் இணக்கம் தெரிவித்தான்.
ஹைதர் உள்ளூர நகைத்தான். ஆனால் இணங்கினான்.
வீரம், அருளிரக்கம், நகைத் திறம், சிறிது சோகம் கலந்த பெருமிதம் ஆகிய பல வகை உணர்ச்சிகளின் கூட்டுருவாக அச்சமயம் அவன் காட்சியளித்தான்.
குந்தி ராவ் மீளாச் சிறை வாழ்வு பெற்றான். ஹைதர் மாளாப் புகழ் வாழ்வு தொடங்கினான்.
புதிய முறையில் புதிதாக ஆட்சியைக் கைக் கொண்டதன் அடையாளமாக, அவன் மைசூர் நாட்டுக்குக் ‘கோதா தாத்’—‘புனித நாடு’ என்று பெயர் கொடுத்தான். மன்னனைப் பெயரளவில் மன்னனாக மதிப்புடன் வாழ விட்டு, மன்னனுரிமைகள் யாவற்றையும் கைக் கொண்டு, அவன் நேரடி ஆட்சி தொடங்கினான்.