உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பெரியாரும்‌ சமதர்மமும்‌

கட்டுரைகளை எழுதினார். அதைப் ‘பகுத்தறிவு’ தமிழாக்கம் செய்து, தொடர் கட்டுரைகளாக வெளியிட்டது.

இதற்கிடையில் 1933 சூலையில், இந்திய அரசு பொது உடைமைக் கட்சியைத் தடை செய்தது. சுயமரியாதை இயக்கமும், அதே பணியைச் சுறுசுறுப்பாகச் செய்து வந்ததைக் கண்ட அன்னிய ஆட்சி, அதையும் தடைசெய்ய ஆலோசனை செய்து கொண்டிருந்தது.

அவ்வேளை, ஆர். பால்மர்தத்தா என்பவர் இலண்டனிலிருந்து வெளியான ‘இந்திய அரங்கம்’ என்ற இதழில் ஓர் கட்டுரை எழுதினார். அதைப் ‘பகுத்தறிவு’ தமிழில் வெளியிட்டது. அது அரசின் கண்ணை உறுத்தியது. பெரியாரின் இயக்கத்தை ஓடுக்க நினைத்த அன்னிய ஆட்சி, பகத் சிங்கின் நூலைத் தடை செய்தது.

20-1-1935 அன்று ஞாயிறு பகல் பணிக்குப் ‘பகுத்தறிவு’ அலுவலகம், காவல் துறையால் சோதனையிடப்பட்டது. ஈ.வெ. கிருஷ்ணசாமியின் வீடும் சோதனையிடப்பட்டது. அலுவலகத்திலிருந்து, பகத் சிங்கின் நூல்களைப் பறிமுதல் செய்து எடுத்துக் கொண்டு போயினர்.

29-1-1935 இல் பகுத்தறிவு இதழுக்கும், அதை அச்சிட்ட ‘உண்மை விளக்கம்’ அச்சகத்திற்கும், ரூபாய் 2000 நன்னடக்கை உறுதிப் பணமாகக் கேட்கப்பட்டது. உறுதிப் பணம் கட்டாது, மீண்டும் ‘குடிஅரசை’த் தொடங்கினார்.

இவ்விடத்தில் மற்றோர் தகவலைச் சொல்ல வேண்டும். வட ஆற்காடு மாவட்டம் சோலையார்ப் பேட்டையில், பெரியாரின் இயக்கத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் ‘சமதர்மம்’ என்ற வார இதழைத் தொடங்கி நடத்தத் தலைப்பட்டார். தோழர் ஜீவானந்தம் அதற்குத் துணையிருந்தார். அதற்கு மூவாயிரம் ரூபாய் உறுதிப் பணம் கேட்கப்பட்டது.

பகுத்தறிவு அலுவலகத்தைச் சோதனையிட்டுச் சென்ற பின், 21-2-1935 அன்று காலை 7-30 மணிக்கு, அவ்வார இதழின் ஆசிரியரான பெரியாரின் அண்ணார் ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈரோட்டில் கைது செய்யப்பட்டார்.

அதற்கு முந்தைய நாளாகிய 20-2-1935 அன்று இரவு 11 மணிக்கு, தோழர் ஜீவானந்தம் சோலையார் பேட்டையில், கைது செய்யப்பட்டார்.