ஔவையார் தனிப்பாடல்கள்/சிலம்பியின் சிலம்பு
17. சிலம்பியின் சிலம்பு.
ஒருநாள் ஔவையார் தெருவூடே போய்க் கொண்டிருந்தார். ஒரு வீட்டுச் சுவரில் ஒரு வெண்பாவின் முதல் ஏழு சீர்கள் மட்டுமே எழுதியிருப்பதைக் கண்டார். சொற்களின் இனிமை அவரைக் கவர்ந்தது. எஞ்சிய பகுதியையும் அறிந்து கொள்ள விரும்பினார். அந்த வீட்டினுள்ளே சென்றார்.
அங்கே ஓர் இளம்பெண் சோர்வுடன் இருக்கக் கண்டார். ஔவையாரின் உள்ளம் அவளைக் கண்டு இரக்கம் கொண்டது. "மகளே, நின் வீட்டுச் சுவரிலே பாதிப்பாடல் எழுதியிருப்பதைக் கண்டேன். பாடலின் சொற்சுவை எஞ்சிய பகுதியையும் அறிந்து கொள்ளத் தூண்டியது. அதனால், உள்ளே வந்தேன்” என்றார் அவர்.
அந்தப் பெண் ஏதும் பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவளுடைய வேதனையின் காரணமாக அழுகுரலும் தோன்றியது.
ஔவையார் திடுக்கிட்டார். அப்பெண்ணின் உள்ளத்திற்கு வேதனையூட்டும் ஒரு சம்பவம் அந்தப் பாதிப்பாடலுடன் புதைந்து கிடப்பது அவருக்குப் புரிந்துவிட்டது. “அழாதே அம்மா! நின் மனம் இப்படிப்புண்படும் என்பதனை அறியாது கேட்டுவிட்டேன். என்னைப் பொறுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு, வெளியே செல்லத் தொடங்கினார்.
அந்தப் பெண், அவரை உள்ளே அழைத்தாள்; தன் சோகக் கதையைக் கூறத் தொடங்கினாள்;
"என் பெயர் சிலம்பி தாசித் தொழில் செய்து வந்தேன். நான் ஏழையானாலும், என் உள்ளம் தமிழ்ப்பாக்களை விரும்பியது. தமிழ்ச் செய்யுட்களை ஆர்வமுடன் கற்று மகிழ்வேன். அந்த ஆர்வத்தால், ஒரு மடமையான செயலையும் செய்துவிட்டேன்.
"கம்பரின் செய்யுட்கள் இப்போது நாட்டில் பெரிதும் மதிக்கப் பெறுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் வாயால் என்னைப் பற்றி ஒரு செய்யுளைப் பாடச் செய்து கேட்க வேண்டும் என்று விரும்பினேன். விருப்பம் வளர்ந்து, தீராத ஆசையாகவும் உருவெடுத்தது.
என்னிடமிருந்த பொன்னையும் பொருளையும் எடுத்துக் கொண்டேன். ஐந்நூறு பொன்கள் தேறின. அவற்றைக்கொண்டு கம்பர் பாதங்களில் காணிக்கையாகச் செலுத்தி, அவரிடம் என் விருப்பத்தைக் கூறிப் பணிந்தும் நின்றேன்.
அவர் ஆயிரம் பொன்னுக்கு ஒரு பாட்டுப் பாடுகிறவராம். ஐந்நூறு பொன்னுக்கு ஓர் அரைப்பாட்டினை எழுதித் தந்து, எஞ்சிய தொகையைக் கொடுத்தால், செய்யுளை முடித்துத் தருவதாகக் கூறிவிட்டார். என் வேண்டுகோள் எதுவும் பயன் தரவில்லை. அந்தப் பாதிப்பாடல்தான் அது. என்னைப் பற்றி அதில் ஒரு சொற்கூட இல்லை!
என் தோல்வி என் உள்ளத்தைச் சிதைத்து விட்டது. என் உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து போயிற்று. இன்னமும் ஐந்நூறு பொன்னுக்கு நான் எங்கே போவேன்?”
சிலம்பியின் கதை ஔவையாரையும் கண் கலங்கச் செய்தது. அவளைத் தேற்றி அந்தச் செய்யுளின் பாதியைத் தாமே பாடி அவளை மகிழ்வித்தார். அவளுடைய அன்பும் உபசரிப்பும் அவரைத் திணறும்படிச் செய்தன. அந்தச் செய்யுள் இது.
தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே
மண்ணா வதுஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.
"தண்ணிய நீர் எனப் போற்றப்பெறுவது வளமுடைய காவிரியின் நீரேயாகும். வெற்றிமாலை பூண்ட வேந்தன் எனப் பெறுவானும் சோழனே யாவான். நல்ல நிலவளம் உடையதாகப் புகழப்படுவதும் சோழ மண்டலமே ஆகும். பெண் என்னும் பெயருக்குரிய தகுதி நிரம்பியவளும் மிக்க அழகியான சிலம்பியே ஆவாள். அவளுடைய கமலம் போன்ற தாள்களில் அணிந் திருக்கும் செம்பொன்னாலாகிய சிலம்பே போற்றத்தக்க சிலம்பும் ஆகும்” என்பது பொருள்.
இச்செய்யுளின் ஒரு பாதி பொய்யாமொழியாராற் பாடப் பெற்றது எனவும், பிற்பாதியை ஔவையார் பாடி முடித்தனர் எனவும் சிலர் கூறுவர்.
'அம்பொற் சிலம்பி’ என்பதற்குப் பதில், 'அம்பர்ச் சிலம்பி’ எனப் பாடபேதம் கொள்பவரும் உளர். அப்போது 'அம்பர் என்னும் ஊரினளான சிலம்பி’ என்று பொருள் கொள்ள வேண்டும்.
பொன் பெற்றுப் பாடிய பாதிப்பாட்டு காவிரியையும் சோழனையும் சோழ நாட்டையும் போற்றுவதுடன் நின்றது. ஔவையார் அருள்கொண்டு பாடியதோ சிலம்பியைப் போற்றியதுடன் அமையாது, அவள் காற்சிலம்புகளையும் சேர்த்துப் புகழ்ந்ததாக அமைந்தது. அந்த அளவுக்கு அவள் வாழ்வு செழிக்க வாழ்த்தியதாகவும் விளங்கியது. இந்த நயத்தை நுட்பமாக அறிந்து இன்புறல் வேண்டும்.