உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/344

விக்கிமூலம் இலிருந்து

344. செந்தினை உணங்கல்!

பாடியவர் : மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது.

[(து-வி.) களவிலே வந்தொழுகுவானாகிய தலைவன், வந்து, ஒருபக்கமாக மறைந்திருத்தலை அறிந்த தோழி, அவன் மனத்தை வரைவு வேட்டலில் செல்லுமாறு தூண்டக் கருதுகின்றாள். அவள், அவன் கேட்கும்படியாகத் தலைவிக்குச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இதுவாகும்.]


அணிவரை மருங்கின் ஐதுவளர்ந் திட்ட
மணியேர் தோட்ட மையார் ஏனல்
இரும்பிடித் தடக்கையின் தடைஇய பெரும்புனம்
காவல் கண்ணினம் ஆயின்—ஆயிழை!—
நம்நிலை இடைதெரிந்து உணரான், தன்மலை 5
ஆரம் நீவிய அணிகிளர் ஆகம்
சாரல் நீளிடைச் சாலவண் டார்ப்பச்
செல்வன் செல்லுங் கொல் தானே—உயர்வரைப்
பெருங்கல் விடரகம் சிலம்ப, இரும்புலி
களிறுதொலைத் துரறுங் கடியிடி மழைசெத்துச் 10
செந்தினை உணங்கல் தொகுக்கும்
இன்கல் யாணர்த்தம் உறைவின் ஊர்க்கே.

தெளிவுரை : ஆராய்ந்த அணிகளைப் பூண்டுள்ளவளே! அழகிய மலைப்பக்கத்திலே செழுமையாக வளர்ந்ததும், நீல மணி போன்ற தோட்டினைக் கொண்டதுமான, கருமை பொருந்திய தினைக்கதிர்கள், கரிய பிடியானையின் பெருங்கையைப் போல வளைந்து தொங்கும் பெரிய தினைப்புனத்தினை, நாம் காவல் காப்பதனை நினைத்தோமாயின்,

நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்து உணராதேயே வருபவன். தன் மலையிடத்தேயுள்ள சந்தனத்தைப் பூசியுள்ள அழகு கிளர்கின்ற மார்பிலே, மலைச்சாரலின் நெடுவழியிலேயுள்ள மிகுதியான வண்டினம் வீழ்ந்து மொய்த்து ஆரவாரிக்க வருபவனும் அவன். அவன்தான், உயர்ந்த மலையிடத்துள்ள பெரிய பிளப்பிடம் எல்லாம் எதிரொலிக்கும்படியாக, பெரிய புலியானது களிற்று யானையைத் தொலைத்து முழங்கும் கடுமையான முழக்கத்தைக் கேட்டு, 'இடியின் முழக்கமோ?' என்று நினைத்து, முற்றத்திலே காயவைத்திருக்கும் செந்தினையின் காய்ந்த மணிகளைக் கூட்டிக் குவிக்கும், இனிய மலைவருவாயினையுடைய, தம் உறவினரோடு தான்வாழும் தன் ஊருக்கும் மீண்டு போவான் போலும்!

கருத்து : 'அவன் தலைவியை மணந்து, தன் ஊருக்குத் தன்னுடன் அழைத்துச் சென்று, முறையாகப் பிரியாதுறையும் குடும்பவாழ்வை இனி நடத்தவேண்டும் என்பதாம்.

சொற்பொருள் : அணிவரை – அழகிய மலை; மருங்கு –பக்கம்; மலைச்சாரல். ஐது வளர்தல் – சிறப்பாகச் செழித்து வளர்தல். மணியேர் தோடு – நீலமணி போன்ற கரும்பின் தோடு. மையார் ஏனல் – கருமைபொருந்திய தினைக்கதிர்; தடைஇய –வளைந்துள்ள. பெரும்புனம் – பெரிய தினைப்புனம்; கண்ணுதல் – நினைத்தல். அணிகிளர் – அழகுகிளர்தல்; அணிகள் ஒளிர்தலும் ஆம். சால – மிகுதியாக. கடியிடி – கடுமையான முழக்கம். செத்து – என்று நினைத்து. தினைஉணங்கல் – காய்ந்த தினை மணிகள். யாணர் – புதுவருவாய். தம் உறைவின்ஊர் – தம்மவரோடு வாழும் வாழ்தற் கினிதான ஊர்.

உள்ளுறை : புலி யானையை வீழ்த்தி முழங்கிய வெற்றி முழக்கத்தை, இடிமுழக்கம் என்று பிழைபட நினைத்து, மழை வருமென அஞ்சிக் காய்ந்த தினையைக் குவிக்கும் ஊர் என்றனள். தலைவனை வரவொட்டாதபடி எழுந்த ஊரலரினைத் தாய் திரியவுணர்ந்து, கட்டும் கழங்கும் காணற் பொருட்டுத் தலைவியைப் புனங்காவலின் விலக்கி, இல்லத்திற்கு அழைத்தேகுவாள் என்பதாம்.

விளக்கம் : 'செழித்த தினைக்கதிர் பிடியானை கைபோலத் தொங்கும் பெரும்புனம்' என்றது, அங்ஙனம் மயங்கிக் களிற்றி யானை வருதல் கூடும் என்பதாம். இது, புனங்காவல் மேற்கொண்ட தலைவியுடன் தலைவன் வந்தொழுகும் களவை நுட்பமாகச் சுட்டியதுமாம். 'இடை தெரிந்து' என்றது, எழுந்த ஊரலரையும், அன்னை ஏற்பாடு செய்துள்ள வேலனை அழைத்துக் கட்டுக்காண முயலும் முயற்சி போன்றவற்றையும். இதனால், இனி இற்செறிப்பு ஏற்படக்கூடும் என்பதையும் உணர்த்தினள். 'சந்தனம் பூசிய மார்பிலே சால வண்டு ஆர்ப்பச் செல்வன் செல்லுங்கொல்' என்றது, பிற மாதர் அவனை விரும்புமாறு நம்மைக் கைவிட்டுப் போவான் போலும் என்றதாம். புலிமுழக்கை இடிமுழக்கென மயங்கித் தினை தொகுக்கும் ஊரன் என்றது, அவனும் நம்முடைய உண்மை நிலையினை உணராதே, தன் இன்பநாட்டமே மிகுதியான மயக்கினன் என்றதாம்.

பாடபேதங்கள் : செல்வன் செல்லுங்கொல் தானே; இன்பல்யாணர்.

பயன் : தலைவன் தலைவியை மணங்கொள்ளுதலிலே முயற்சி செய்பவனாகி, அவளைப் பிரியாது இன்புறும் மனையுறை வாழ்க்கையைப் பெறுவதற்கு நாடுவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/344&oldid=1698327" இலிருந்து மீள்விக்கப்பட்டது