நற்றிணை-2/211
211. குருகும் தாழைப் போதும்!
- பாடியவர் : கோட்டியூர் நல்லந்தையார்.
- திணை : நெய்தல்.
- துறை : வரைவு நீட, ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி, சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.
[(து-வி.) களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுகிவரும் தலைவனின் உள்ளத்திலே, 'தலைவியை விரைந்து முறையாக மணஞ்செய்துகொள்ளல் வேண்டும்' என்னும் உணர்வை எழுப்பக் கருதுகின்றாள் தோழி. ஆங்கே, ஒருபுறமாக வந்து நின்றானாகிய தலைவன் கேட்டு உணருமாறு, தான் தலைவியிடம் கூறுவதுபோல இவ்வாறு சொல்லுகின்றாள்.]
யார்க்குநொந்து உரைக்கோ யானே! ஊர்கடல்
ஓதஞ் சென்ற உப்புடைச் செறுவில்
கொடுங்கழி மருங்கின் இரைவேட் டெழுந்த
கருங்கால் குருகின் கோளுய்ந்து போகிய
முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை
5
எறிதிரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத்
துறுமடல் தலைய தோடுபொதி தாழை
வண்டுபடு வான்போது வெரூஉம்
துறைகெழு கொண்கன் துறந்தனன் எனவே.
சொற்பொருள் : ஊர் கடல்–ஊர்ந்து செல்லும் கடல்; கடல் ஊர்தல் என்றது, அலைகளின் தொடர்ந்த இயக்கத்தை. ஓதம்–கடல்நீர். செறு-'வயல்'; என்றது உப்பு விளையும் உப்புப் பாத்திகளை. கொடுங்கழி–வளைந்த உப்பங்கழிகள். கோள்–குத்து. முடங்குபுறம்–வளைந்த மேற்புறம். 'மோவாய்' என்றது, இறாமீனின் மீசையை. ஏற்றை–ஆண்; மீசை ஆணுக்கு மட்டுமே என்க. எக்கர்–மணல் மேடு. நெடுங்கோடு–நெடியதான கரைப் பகுதி. துறு மடல்–செறிந்த தாழையின் மடல். தோடு–இதழ். வான்போது–வெள்ளை நிற மொட்டு; உருவால் வெண்குருகைப் போலத் தோற்றுவது இது. வாலிமை–வெண்மை.
விளக்கம் : 'கொண்கன்' என்றது, வரையாது ஒழுகினன் ஆயினும், அவனே நம்மை மணக்கும் தலைவன் எனத் தாம் கொண்டுள்ள கற்புறுதி தோன்றக் கூறியதாம். 'யார்க்கு உரைக்கோம்?' என்றது, 'அவனையன்றி வேறு யார்தாம் நமக்கு உறுதுணையாவார்? அவனே துணையிலன் எனில் பிறர் யாவர் நமக்கு உதவுவார் என வருந்திக் கூறியதாம். இறவு முடங்கு புறத்தை உடையதாதலை, 'முடங்குபுற இறவொடு இனமீன் செறிக்கும்' எனப் பிறரும் கூறுவர் (அகம் 220). மோவாய் மீசை தாடிகளைக் குறிப்பதனைப் 'புன்றாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை' என (அகம் 133) வருவதனால் உணர்க. தாழையின் வெண்பூ குருகெனத் தோற்றுதலைத் 'தயங்கு திரை பொருத தாழை வெண்பூக் குருகென மலரும்' என வருவதனாலும் அறிக (குறு. 226).
உள்ளுறை பொருள் : 'கருங்காற் குருகின் கோள் உய்ந்து போகிய இறவின் ஏற்றை, தாழை வெண்போதுக்கு அஞ்சி மெலியுமாறு போல, இவளும். இனியும் நீதான் வரைவு நீட்டித்தாயாயின், எழுகின்ற ஊரலரானே வரும் ஏதப்பாட்டிற்கு உய்ந்து பிழைத்துள்ள யாம், இனி நின் வரைவும் வாய்க்காது இறந்து படுதலே உறுவேம் என்பதாம். ஊரவர் காவலும் பிறவும் கடந்துவந்து முன்னர் இவளைத் துய்த்துச்சென்ற நீதான், இனி வரைந்து வருதற்கு அஞ்சினையாய், நீன் ஊர்க்கண்ணேயே ஒடுங்கினை போலும் என்றதூஉம் ஆம்.
இதனைக் கேட்கலுறும் தலைவன், வரைந்து சென்று மணங்கொள்ளுதலிலேயே நாட்டத்தைச் செலுத்துவானாவான் என்பதாம்.