உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/224

விக்கிமூலம் இலிருந்து

224. இன்ப வேனிலும் வந்தது!

பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ,
திணை : பாலை.
துறை : தோழியாற் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள், பெயர்த்துஞ் சொற்கடாவப்பட்டு, அறிவிலாதேம் என்னை சொல்லியும் பிரியாராகாரோ?' என்று சொல்லியது.

[(து-வி.) தலைவன் பிரிவைத் தோழி தலைவிபாற் சென்று கூறுகின்றாள். அவன் பிரிந்தது அறிந்த பின்னரும், அவன் பிரிவைத் தாங்கமாட்டாளாய்த் துயரங்கொள்ளும் தலைவி, தோழியிடத்தே கூறி நொந்து கொள்வதுபோல அமைந்த செய்யுள் இது.]


அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலைப்
பின்பனி அமையம் வருமென முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவரும் பினவே
புணர்ந்தீர் புணர்மி னோவென இணர்மிசைச்
செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் 5
இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து
இனியெவன் மொழிகோ யானே—பயன்றக்
கண்ணழிந்து உலறிய பன்மா நெடுநெறி
வினைமூசு கவலை விலங்கிய 10
வெம்முனை அருஞ்சுரம் முன்னி யோர்க்கே ?

தெளிவுரை : தோழீ! நம் தலைவர்தானும் நம்மிடத்தே அன்புடையவர், மிகவும் பெரியவர்! அதன் மேலும், பின் பனிக் காலமானது அடுத்துவரும் என்பது குறித்ததாய், முன்பனிக் காலத்தே தளிர்களை முற்படற் தோற்றுவித்தபடி அரும்புகளைக் குராமரங்களும் கொள்ளா நின்றன. "தலைவனும் தலைவியுமாகி ஒன்று கூடினீர்! பிரியாதே கூடியிருந்து இன்புறுவீராக' என்று கூறுவனபோல, மாமரத்தின் பூங்கொத்துக்களைத் தாங்கியுள்ள கொம்புகளிலே இருந்தபடி, சிவந்த கண்களையுடையவான கருங்குயில்கள் எதிர்எதிர் ஒன்றோடொன்று மாற்றி மாற்றிக் கூவியபடியே இருக்கின்றன; இத்தகு இன்பந்தரும் இளவேனிலும் வந்தது; ஆதலினாலே நம்மிடத்தேயிருந்தும் பிரியமாட்டோம் என்று நம்மைத் தெளிவித்தோரும் அவர். இப்போதோ,

பயன் அற்றுப் போனதாய்ச் செவ்வியழிந்து காய்ந்து கிடக்கின்ற பல பெரிய நெடிய வழியிடத்தே, வில்லேந்திய ஆறலைகள்வர்கள் மொய்த்துச் செவ்வி நோக்கியிருக்கும்படியான கவர்த்த வழிகள் குறுக்கிட்டுக் கிடக்கும் வெண்மை கொண்ட பகைவரூர்களையும், கடத்தற்கரியதான சுரத்தினையும் கடத்துபோகக் கருதியவரான அவருக்கு, யான் இனியாது சொல்ல மாட்டுவேனோ?

சொற்பொருள் : பெரியர் – பெரிதும் பண்புடையவர். கொழுந்து–துளிர்கள். அரும்பு–பூவரும்பு. இணர்–பூங்கொத்து. இருங்குயில்–கருங்குயில். எதிர்குரல் பயிற்றல்–ஒன்று மாற்றி மற்றொன்றாகத் தொடர்ந்து கூவுதல். தெளித்தோர்–தெளிவு கொள்ளச் செய்தோர். தெளித்தோர் தேஎத்து–தெளித்தோரிடத்து. பயன்–பசுமையும் வளனுமாகிய பயன்; 'கயன்' எனவும் பாடம்; கயன்–குளம். கண்ணழிதல்–இடத்தின் செவ்வி கெட்டுப் போதல். கவலை–கவர்த்த வழிகள். விலங்கிய–குறுக்கிட்ட. 'வெம்முனை' என்றது முனையிடத்துள்ள வெம்மைமிக்க பகைவர் ஊர்களை.

விளக்கம் : அன்பற்றாரும் பண்பற்றாரும் பிரியக் கருதினால் யாமும் பொறுத்திருப்போம். அன்புடையரும், பெரியரும், 'காலமல்லாக் காலத்தே பிரிவேனோ' எனக் கவலைகொண்ட என்னை முன்பு தெளிவித்தோருமாகிய அவரே பிரிந்து போயினரே! இனி அவரைப்பற்றி யாது கூறுவது காண்?

இன்பத்தை விட்டுக் கொடிய வெம்மையான நெறியையே நாடியதனால், அவர் மனமும் அவ்வாறு கொடியதாயிற்றுப் போலும் என்று நினைத்து வருந்துகின்றாள்.

'அன்பர்! பெரியர்!' என்றது, அன்பும் மறந்தார், சொற்பிழைத்துப் பெருமையும் மறந்தார் என்று அசதியாடிச் சொல்லியதாம். இதனால், தலைவி அயா வுயிர்த்து ஆற்றியிருப்பாள் என்பதும் உணரப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/224&oldid=1698386" இலிருந்து மீள்விக்கப்பட்டது