உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/235

விக்கிமூலம் இலிருந்து

235. குன்றின் தோன்றும் குவவுமணல்!

பாடியவர் : பழைய பிரதிகளில் பெயர் காணப்படவில்லை; வெள்ளி வீதியார் எனக் கொள்வர் ஔவை அவர்கள்.
திணை : நெய்தல்.
துறை : வரைவிடை ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.

[(து. வி) மணம் செய்து கொள்ளாது தலைவன் காலம் நீட்டிப்பக் கண்டு பொறாளாயின தலைவிக்கு, தோழி, 'அவன் வரைவொடு வருதல் உறுதி' எனக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல்
அரவுவாள் வாய முள்ளிலைத் தாழை
பொன்னேர் தாதின் புன்னையொடு கமழும்
பல்பூங் கானல் பகற்குறி வந்துநம்
மெய்களின் சிதையப் பெயர்ந்தனன்; ஆயினும் 5


குன்றின் தோன்றும் குவவுமணல் ஏறிக்
கண்டனம் வருகஞ் சென்மோ தோழி—
தண்தார் அகலம் வண்டிமிர்பு ஊதப்
படுமணிக் கலிமா கடைஇ
நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. 10

தெளிவுரை : தோழீ! வலிமையான அலைகளாலே மோதப்பட்ட, சருச்சரை பொருந்திய வளைந்த அடியை உடையதும், ஆராயப்பட்ட வாளின் வாய்போல விளங்கும் முள்ளமைந்த இலைகளை உடையதுமான தாழையின் கண்ணேயுள்ள, பொன்போலும் அழகிய பூந்தாதின் மணமானது, புன்னையின் மலரோடுஞ் சேர்ந்து கலந்தபடி கமழுகின்ற தன்மையுடையது, பலவாகிய பூக்கள் உடையதான கானற்சோலை. அவ்விடத்தே, பகற்குறிக்கண் வந்து நலன் நுகர்ந்து நம்முடைய மெய்யிடத்திருந்த கவினைச் சிதையச் செய்தவனாகத் தலைவன் பிரிந்து போயினான். ஆயினும், தண்ணிய தாரணிந்த மார்பிடத்தே வண்டுகள் மொய்த்துத் தேன் உண்டபடி இருக்க, ஒலிக்கும் மணிபூண்ட செருக்கிய குதிரைகளைச் செலுத்தியபடி, நெடிய நீரையுடைய நெய்தல் நிலத்தானாகிய நம் தலைவன் வரைவொடு வருகின்றதனை—

குன்றுபோலத் தோன்றுமாறு மணல்குவிந்த மேடுகளின் மேலேறி நின்று யாமும் கண்டு வருவதற்குச் செல்வோமா!

சொற்பொருள் : உரவு – வலிமை ; பொருத – மோதிய. பிணர்படு – சருச்சரை பொருந்திய. தடவு – வளைந்த. அரவுவாள் – வாளரம். பொன்னேர் தாது – பொற்றுகள் போலத் தோன்றும் மகரந்தத் துகள்கள். 'கானல்' என்றது கானற் சோலையினை. குவவு மணல் – குவிந்த மணல்மேடு. அகலம் – மார்பு. கலிமா – செருக்குடைய குதிரை. சேர்ப்பன் – நெய்தல் நிலத்தலைவன்.

விளக்கம் : 'தாழைப் பூவின் மணம், புன்னைப்பூவின் மணத்தோடு சேர்ந்து கமழும் பலவாகிய பூக்களையுடைய கானல்' என்றது, அதுவும் மணம் பெற்றுத் திகழ்ந்த அழகினை வியந்ததாம். அவ்விடத்தே வாய்த்த பகற்குறிக் கண் தலைவனும் தலைவியும் இன்புற்றனர் என்க. அவன் தலையளியால் அவளது எழில் புதுப் பொலிவு பெற்றது. எனினும், அவன் வரைவொடு வைத்துப் பிரிய, அவள் மெய்க்கவின் சிதையலாயிற்று என்றதாம். இதனைக் கூறுவாள், 'சிதையப் பெயர்ந்தனன்' என்றனள். அகலத்தே தண்தார் வண்டிமிர்பு ஊதவும், குதிரைகளின் மணியொலி முழங்கவும் வருகின்றான்; ஆதலின் வரைவொடு வருவானாகவே கொள்ளல் வேண்டும். அவ்வொலியைக் கேட்டவள், வழியிடைச் சென்று அவன் வருகின்ற செவ்வியைக் காணலாம் எனத் தலைவியை அழைக்கின்றனள்!

இறைச்சிப் பொருள் : 'தாழையும் புன்னையும் கலந்து மணம் பரப்பும் கானல்' என்றது, தலைவனும் தலைவியும் ஊரவர் வாழ்த்த முறைப்படி மணம் பூண்டு சேரி புகழ இல்வாழ்வு நடத்துவர் என்றதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/235&oldid=1698399" இலிருந்து மீள்விக்கப்பட்டது