உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/237

விக்கிமூலம் இலிருந்து

237. இன்னுயிர் அன்ன காதலர்!

பாடியவர் : காரிக்கண்ணனார். திணை : பாலை. துறை : தோழி உரை மாறுபட்டது.

[(து.வி.) பிரிவுக் காலத்திலே தலைவியின் தனிமைத் துன்பத்தை நீக்குமாறு தேற்றுவதற்குச் சில சொல்ல முற்படுகின்றாள் தோழி. அதனை ஏற்காது, தலைவி ஆற்றியிருப்பதைக் கண்டதும், அவளது மனவுறுதியைத் தோழி வியந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நனிமிகப் பசந்து தோளும் சாஅய்ப் பனிமலி கண்ணும் பண்டு போலா இன்னுயிர் அன்ன பிரிவருங் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உட்கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை! 5 உவக்காண் தோன்றுவ ஓங்கி வியப்புடை இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் புரவெதிர்ந்து தொகுத்த யானை போல உலகம் உவப்ப ஓதரும் வேறுபல் உருவின் ஏர்தரு மழையே! 10

தெளிவுரை : மடந்தையே! வியப்புடைய இரவலர் வரும்பொழுது, அவர்க்குக் கொடுத்தலைக் கருதினனாக, வள்ளல் ஆய் ஆண்டிரன் யானைத்திரள்களைச் சேர்த்து வைப்பான். அப்படி அவன் சேர்த்துவைத்த யானைத்திரள்களைப் போல, உலகத்து உயிர்கள் எல்லாம் உவப்படையுமாறு, சொல்லுதற்கரியவான பற்பல உருவங்களோடுங் கூடியவையாக, மழை மேகங்கள் வானில் எழுந்து ஓங்கித் தோன்றுவதனை, அதோ காண்பாயாக! இஃது அவர்தாம் வருவதாகக் குறித்த பருவம் அல்லையோ! 'இதுகாறும் மிகப்பெரிதும் பசந்தனையாய்த் தோள்களும் மெலிந்துபோக, நீர் நிரம்பிய கண்களையும் கொண்டிருந்தனை. இருப்பினும், "இவை முன்னைப் போலன்றி இவ்வாறு வேறுபட்டுப் போகுமாறு, நமக்கு இனிய உயிரைப் போன்றவரான நம் பிரிதற்கரிய காதலரும் நம்மைப் பிரிந்து சென்றவர், தாம் வருதற்குக் குறித்த காலத்தையும் நீடிக்கச் செய்தனரே!" என்று சொல்லப்படும் புலவியை உள்ளத்துக் கொண்டனையாய், அவர் வந்தவிடத்து அவரிடத்து ஊடுகின்றதனையேனும் நீ செய்யமாட்டாயோ? இஃது என்னே வியப்பு!

சொற்பொருள் : நனிமிக – மிகப் பெரிதும். சாஅய் –மெலிந்து. பனிமலி கண் – நீர் நிரம்பிய கண். பிரிவருங் காதலர் – பிரிதற்கு அருமை யுடையவரான காதலன்பை உடையவர். நீத்து – கைவிட்டு அகன்று. நீடினர் – வினை குறித்துச் சென்ற தேயத்தே காலத்தை நீட்டித்தனர்! புலவி – ஊடல். ஏர்தரல் – எழுதல்; அழகுதருதலும் ஆம்!

விளக்கம் : வியத்தற்கரிய திறத்துடன் இசையும் கூத்தும் பாட்டும் நிகழ்த்தும் புலமையாளர் ஆதலின், வியப்புடை இரவலர் என்றனர். இனி, அவர்தாம் சிறிது பொருளே பெற்றுப் போதலைக் கருதினராகவும், ஆய் அண்டிரன் அவர்க்கு யானைகளையே பரிசிலாக அளிக்கும் செயலை நினைந்து வியந்தனர் எனினும் ஆம். அண்டிரனின் இத்தகைய கொடைச் சிறப்பினை வியந்து, 'வாய்வாள் அண்டிரன் பாடின கொல்லோ, களிறு மிகவுடைய இக்கவின்பெறு காடே!' என்று பாடுவர் சான்றோர். வானத்தே எழுந்து மொய்த்த கருமுகில்களின் தோற்றத்தை இவ்வாறு களிற்றுக் கூட்டங்கட்கு ஒப்பிட்டு இன்புறுகின்றனர். 'உட்கொண்டு ஊடிற்றும் இலையே' என்றது, 'ஆற்றியிருப்பாரும் அவன் வந்த காலத்து ஊடுதல் இயல்பாக, நீதான் அதுதானும் செய்திலை!' என வியந்து கூறியதாம்.

'அன்பிலள் கொடியள்' எனப் பிற பெண்டிர் பழிப்பர்; அது குறித்தேனும் புலப்பாயாக' என்று கேட்பாள் போன்று, 'ஊடின்றுமிலையோ' என்றனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/237&oldid=1698402" இலிருந்து மீள்விக்கப்பட்டது