உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/244

விக்கிமூலம் இலிருந்து

244. மாதர் வண்டின் தீங்குரல்!

பாடியவர் : கூற்றங் குமரனார்.
திணை : குறிஞ்சி.
துறை : அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம்புக்கது.

[(து.வி.) வரைவிடை வைத்துப் பிரிந்துறைந்த காலத்திலே, தலைவியின் நலங்கெடக் கண்ட தோழி, 'இனி நமராவார்க்கு உண்மை அறிவுறுத்தி வரைவு எதிர் கொள்ளுவிப்பன்' என்கின்றாள். அவளுக்குத் தலைவி தன் ஆற்றாமை தோன்றக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

விழுந்த மாரிப் பெருந்தண் சாரல் கூதிர்க் கூதளத்து அலரி நாறும் மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் உயர்மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ 5


துயர்மருங்கு அறியா அன்னைக்கு இந்நோய்
தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலிற் கொடியை தோழி
மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த
செயலை அந்தளிர் அன்னவென் 10
மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே.

தெளிவுரை : தோழீ! மணிகள் நிரம்பக் கிடந்து ஒளியெறிக்கின்ற நெடிதான மலைப்பக்கத்தே, அழகுண்டாக உயர்ந்து நிற்கும் அசோகினது செவ்விய தளிரைப் போன்றதாகிய என் நல்ல மேனியினது அழகானது முற்றவும் கெடும்படியாகச் செய்த, வலியிழந்த என் மாமைநிற மெய்யிற் படர்ந்துள்ள இப்பசலை நோயினை நீயும் கண்டனை. கண்டும்,

மழை பெய்தமையாலே பெரிதும் குளிர்ந்து போயுள்ள மலைச்சாரற் பகுதிகளிலே, கூதிர்க்காலத்தே பூப்பதாகிய கூதளத்தின் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பியபடி இருக்கும். அப்பூக்களின்பால் மொய்க்கின்ற அழகிய வண்டுகளின் இனிதான இசைக்குரலை, மணம் வீசும் பக்கமலையிடத்தேயுள்ள அசுணமாவானது, யாழோசையென மயங்கிக் கேட்டபடியும் இருக்கும். அத்தகைய உயர்மலை நாடனுக்கு, 'இந்நோய் தீர்தற்கான வழிதான் இது' வெனச் சொல்லுதலான ஒன்றையோ, அல்லது,

'நாம் படுகின்ற துயருக்குரியதான காரணந்தான் இது'வென அறியாதாளான அன்னைக்கு. 'இந்நோய்தணியும் வழிதான் இது' என உரைத்து, அறத்தொடு நிற்றலான ஒன்றையோ, நீதான் செய்கின்றாய் அல்லை! ஆதலின் நீதான் கொடியையாவாய் காண்!

சொற்பொருள் : கூதிர் – கூதிர்காலம். கூதளம் – கூதாளி எனப்படும் கொடியினம். அலரி – அலர்ந்த பூக்கள். மாதர் –அழகிய. நயவரும் – விருப்பம் வரச் செய்யும். தீங்குரல் – இனிதான இசைக்குரல். அசுணம் – அசுணமா; புள் எனவும் கொள்வர். மணி – நீலமணி. செயலை – அசோகு. மதன் வலி. மாமெய் – மாமைக் கவின் கொண்ட மெய்.

விளக்கம் : 'மணம் நாறு சிலம்பு' என்றது, வேறு பலவாய பூக்களின் மணத்தோடுங் கூடியதாக மண்ணின் குளிர்ந்த மணமும் கலந்து மணப்பதைக் குறித்ததாம், 'செய்யாய்; ஆதலிற் கொடியை' என்றது, செய்யின் எனக்கு இனியை என எதிர்மறைப் பொருள்படக் கூறியதாகக் கொள்வதுமாம். 'உயர் மலை நாடன்' என்றது, நீ அவன்பாற் குறையைக் கூறின், விரைந்து குறைமுடிக்கும் உயர் பண்பினன் அவன் என்றதும் ஆம்.

அன்னை வெறியயர்தல் குறிகேட்டல் முதலாயின செய்தற்கண் ஈடுபட்டுக் கவலையுறல் கண்டும், அதனைத் தடுக்கு மாற்றால், 'நாடனது மார்பு செய்த இந்நோய்க்கு மருந்து அவனே' எனக் கூறி அறத்தோடு நில்லாமையை நினைவாள், அதுதானும் செய்திலை என்றனள். இதன் பயன், தோழி அறத்தோடு நிற்றலைச் செய்ய முற்படுவாள் என்பதாம்.

உள்ளுறை : கூதாளியிலே மொய்த்து இசைக்கும் வண்டின் குரலை யாழிசைபோலும் என மயங்கும் அசுணமாப்போலே, தலைவன் நலனுண்டு துறத்தலாலே வேறுபட்டுவிட்ட என் நோயை முருகு அணங்கியது போலும் என அன்னையும் பிறழ உணர்ந்தனள் என்பதாம்.

மேற்கோள் : (1). 'அறத்தோடு நிற்கும் காலத்தன்றி, அறத்தியல் மரபிலள் தோழி என்ப' என்னும் தொல்காப்பியச் சூத்திர (203) உரைக்கண், இச்செய்யுளை எடுத்துக்காட்டி, 'இது தலைவி அறத்தொடு நிற்குமாறு' என்பர் இளம் பூரணர்.

(2) 'உயிரினும் சிறந்தன்று நாணே' என்னும் சூத்திர உரைக்கண் (113) இதனை எடுத்துக் காட்டி,இஃது அறத்தொடு நிற்குமாறு தோழிக்குத் தலைவி கூறியது' என்பர் நச்சினார்க்கினியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/244&oldid=1698411" இலிருந்து மீள்விக்கப்பட்டது