நற்றிணை-2/268
268. காதல் செய்தலும் காதலம் !
- பாடியவர் : வெறிபாடிய காமக்கண்ணியார்; காமக்காணியார் எனவும் பாடம்.
- திணை : குறிஞ்சி.
- துறை: தலைமகட்குச் சொல்லியது (1), தலைமகன் வந்து ஒழுகவும் வேறுபாடு கண்டாள், 'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉம் ஆம் (2).
[(து.வி.) தலைவன் சிறைப்புறமாகத், தலைமகட்கு உரைப்பாள் போலத் தோழி தலைமகன் கேட்டுணருமாறு சொல்லியதாக அமைந்த செய்யுள் இது (1); தலைவன் களவிற்கூடிப் பிரியுங்காலச் சிறுபிரிவிலும் தலைவிக்கு உண்டான வேறுபாடுகளைக் காணும் தோழி, 'நீதான் இப்படி யாயினை' என அவளுக்கு உரைப்பாள் போலத், தலைவன்பால் வரைவு வேட்கையை உண்டாக்கியதாகவும் கொள்ளப்படும்.]
சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க
மால்பெயல் தலைஇய மன்னெடுங் குன்றத்துக்
கருங்கால் குறிஞ்சி மதனில வான்பூ
ஓவுக்கண் டன்ன இல்வரை இழைத்த
நாறுகொள் பிரசம் ஊறுநா டற்குக்
5
காதல் செய்தலுங் காதலம் அன்மை
யாதனிற் கொல்லோ?—தோழி!—வினவுகம்
பெய்ம்மணல் முற்றங் கடிகொண்டு
மெய்ம்மலி கழங்கின் வேலன் தந்தே.
தெளிவுரை : தோழீ முற்றத்திலே புதுமணலைப் பெய்து விளக்கம் செய்து, கழங்கினாலே மெய்ம்மை தேர்ந்து கூறுவோனாகிய வேலனையும் வருவித்து, வெறியாடற்கும் அன்னை ஏற்பாடு செய்தனள். அச்சம் பொருந்திய அகன்ற இடத்தேயுள்ள சுனைக்கண்ணே நீர் நிறையும்படியாக, மேகமானது பெரும் பெயலைச் செய்வதற்குத் தலைப்பட்ட மிகவும் நெடிதான குன்றத்திடத்தே, கரிய கரம்புகளையுடைய குறிஞ்சியது வன்மையில்லாத வெண்மையான பூக்களிலே, வேட்டுவரது இல்லங்களிலே ஓவியத்துக் கண்டாற்போலக் கட்டப் பெற்றுள்ள, மணங்கமழும் தேன் அடைக்கு வேண்டியவளவு தேன் ஊறிக்கொண்டிருக்கின்ற நாடன், நம் தலைவன்! அவனுக்கு யாம் பலபடியாகக் காதல் செய்து ஒழுகியபோதும், அவனாலே அந்த அளவுக்கு யாமும் காதலிக்கப்படாமை தான் எந்தக் காரணத்தாலோ? இதனை யாமும் வேலனிடம் வினவுவோம்; வருக, தோழி!
சொற்பொருள் : சூர் – அச்சம். நனந்தலை – அகன்ற இடம். மால்பெயல் – பெரும் பெயல். மன்னெடுங் – மிகவும் நடுமையான. மதனில் – வலிமையிலவாகிய; மென்மை மிகுந்த. வான்பூ – வெண்மையான பூ. ஓவு – ஓவியம். இழைத்த – கட்டியுள்ள; தேனீக்கள் இல்லச் சார்பிலே கட்டியுள்ள தேனடையானது ஓவியந் தீட்டினாற்போல இல்லத்தை அழகு செய்தபடி இருந்தது என்பதாம். பிரசம் – தேன். கடிகொள்ளல் – விளக்கங் கொள்ளல்.
விளக்கம் : தலைமகன் வரைந்து கொண்டு வருதலை நினையாது களவினையே நாடியவனாதலைக் கண்டு, அவனுக்குத் தலைவியின் நோயை அன்னை அறிந்தனள் என்பதனையும், இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதனையும், அவள் அவனின்றி வாழாள் என்பதனையும் குறிப்பாக உணர்த்தக் கருதுகின்ற தோழி இவ்வாறு உரைக்கின்றனள். இதனைக் கேட்டலுருவானாகிய தலைமகன், தலைவிபாற் பெருங்காதலன் தானுமாதலின், தலைவியை மணந்து கொள்ளுதலை நினைந்து செயற்பட முற்படுவானாவன் என்பது இதன் பயனாகும். 'காதல் செய்தலும் காதலம் அன்மை' என்றது, அவன் இன்ப மாத்திரையே தம்மை விரும்புகிறவனாயினான் என்று வருந்துவதாகும்.
உள்ளுறை : குறிஞ்சிப் பூவின் தேனானது இல்லத்தே இழைத்திருக்கும் தேனடையிலே ஊறும் என்றது, சோலைக் கண்ணே தலைவனால் தலையளி செய்யப் பெற்ற நினைவுகளாலே, இல்லத்துச் செறிப்புண்டிருக்கும் தலைவியும் இறந்துபடாளாய் உயிரோடிருப்பாள் என்பதாம்.