உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/270

விக்கிமூலம் இலிருந்து

270. கூந்தல் முரற்சியிற் கொடிதே!

பாடியவர் : பரணர்.
திணை : நெய்தல்.
துறை : தோழி வாயில் நேர்கின்றாள், தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது, உடனிலைக் கிளவி வகையால்.

[(து.வி.) தலைமகனின் பரத்தைமை உறவாலே தலைவிக்கு அவன்பால் வருத்தமிகுதி உண்டாயிருந்தது. அவன் மனைக்கு மீண்டு வந்தபோது, அவள் அவனை ஏற்க உடன்படாள் ஆயினாள். அதனையறிந்த தோழி, அவர்களுக்குள் சந்து செய்விப்பாளாக, அவனைக் குறைகூறுவாள் போலத், தலைவியின் மனமும் அவனுக்கு இரங்குமாறு, அவளும் உடனின்றபோது கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத்
தண்தலை கமழும் வண்டுபடு நாற்றத்து
இருள்புரை கூந்தல் பொங்குதுகள் ஆடி
உருள்பொறி போல எம்முனை வருந்தல்
அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாய் 5
பெருந்தோள் செல்வத்து இவளினும் எல்லா
ஏற்பெரி தளித்தனை நீயே பொற்புடை
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே 10
மறப்பன் மாதோநின் விறல்தகை மையே.

தெளிவுரை : பெருத்த தூற்றினை உடையதான தாழையிடத்தே அமைந்த தன் கூட்டினிடத்தே இருக்கவியலாதாகியது ஒரு வண்டு, குளிர்ந்த நறுமணமானது மிகுதியாகக் கமழ்தலை உடையவும், வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்தை உடையவுமான மலர்களைச் சூடியுள்ள, இருளைப்போலும் கருமையான மகளிரது கூந்தலை நோக்கி அது சென்றது. அவ்விடத்தேயுள்ள பூக்களிலுள்ள மிகுதியான மகரந்தத் துகள்களினுள்ளே ஆடியதனாலே மயக்கமுற்று, நிலத்தே அது உருண்டும் விழுவதாயிற்று. அதனைப் போல, எம்முன்பாக வந்து நீயும் வருந்துதல்தான் நினக்கு அழகாயிருக்கின்றது. இதுவல்லாது, இவளை நின்பால் அன்பினாலே பிணித்துக் கொள்ளுதலுக்காவன எதனையும் நீதான் தெளியமாட்டாய். பெருத்த தோள்களாகிய செல்வத்தையுடைய இவளைக் காட்டினும், ஏடா, நீதான் எதனிடத்தே பெரிதும் அன்பு காட்டுகின்றனையோ? இதுதான்—

அழகுடைய விரிந்த பிடரி மயிராற் பொலிவுற்றவும், விரைந்த செலவைக் கொண்டவுமான நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரசராகிய பலரையும் தோற்று ஓடச் செய்தவனும், அதனைச் செய்து முடித்த வெற்றி வேலினை ஏந்தியவனுமான நன்னன் என்பான், அவ்வரசரது உரிமைமகளிர் கூந்தலைக் கொய்து முறுக்கிய கயிற்றாலே, அவர்களின் போர் யானைகளைப் பிணித்துக் கொணர்ந்த கொடுஞ் செயலினும் காட்டில் கொடிதானதாகும். ஆதலாலே, நினது வலிமையான தகுதிப்பாட்டினையும் யானும் மறந்துவிடுவேன், காண்பாயாக!

சொற்பொருள் : தடந்தாள் – பெரியதான தூறு; தூறு என்றது அடிமரத்தை. குடம்பை – கூடு. நோன்றல் – பொறுத்தல்; நோனா – பொறுக்க மாட்டாமை. முனை – முன்பாக; 'ஐ'சாரியை. பொறி – வண்டு. பொங்கு துகள் – பொங்கும் மகரந்தத் துகள்; துகள் பொங்குதல் வண்டு கிண்டுதலால். தேற்றா – தெளியாத. பெருந்தோள் செல்வம் – பெருத்த தோள்களாகிய செல்வம்; மகளிர்க்குத் தோள்கள் பெருத்திருப்பது பேரழகு தருவதாகலின் அதனைச் செல்வம் என்றனர். அளித்தல் – அன்பு செய்தல். பொற்பு – அழகு உளை – பிடரிமயிர். பரி – குதிரையின் விரைந்த செலவுக்குப் பெயர். நன்மான் – நல்ல சாதிக் குதிரைகள். வேந்தர் – அரசர்; இவர் பகையரசராகிய பிண்டன் முதலியோர். முரற்சி – முறுக்கிய தன்மை விறல் – வலிமை.

விளக்கம் : 'மணத்தாலே சிறந்த தாழையின்பால் அமைந்த தன் இருப்பிடத்தை வெறுத்துச் சென்ற வண்டானது, பிற பூக்களாலே அழகுபெற்ற மகளிரது கூந்தலிடத்தே சென்று மொய்த்து, அவ்விடத்தே பொங்கிய துகளிலேயும் ஆடியபடி மயங்கித் தரையிலே வீழ்ந்தாற்போல, நீதானும் நின் மனைக்குரிய சிறந்தவளாகிய இவளை வெறுத்துச் சென்று, பகட்டுக் கவர்ச்சியினராகிய பரத்தையரிடத்தே கூடிக் களித்தனையாய் மயங்கி, அந்த அடையாளங்கள் நின் மேனியிடத்தேயும் தோன்றும்படியாக, எம்முன்னேயும் வந்து தாழ்ந்து நிற்பாய் ஆயினை' என்கின்றாள் தோழி. வண்டு தலைவனுக்கும், தாழைக் குடம்பை தலைவிக்கும், வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல் பரத்தையருக்கும், உருண்டு வீழ்ந்த தரை தோழிக்கும் உவமையாகக் கொள்க.

தாழையின் பூவை மகளிர் தம் சடையிலே சேர்த்து முடித்துக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும்போது, அந்தச் சடையினது தோற்றம் கூடுபோலத் தோன்றும்; ஆதலின் அதனைச் சூடியிருந்த தலைவியின் கூந்தற்சிறப்பைத் தாழைக் குடம்பை என்றனர். 'வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல்' என்றது, வண்டினங்களைத் தன் நறுநாற்றத்தால் தன்பால் ஈர்க்கும் மலர்களைச் சூடிய இருள்போலும் கூந்தல் என்க. இதனால், தலைவன் தன் குற்றத்தை உணர்ந்து நாணத், தன் முன்னே தலைவனைப் பழித்தலைப் பொறாதவளான தலைவியும், தோழியைக் கடிந்து, அவனை ஏற்றுக்கொள்வதற்கு முற்படுவாள் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/270&oldid=1698462" இலிருந்து மீள்விக்கப்பட்டது