உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/289

விக்கிமூலம் இலிருந்து

289. அருளிலேன் அம்ம அளியேன் !

பாடியவர் : மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்.
திணை : முல்லை.
துறை : பிரிவிடைப் பருவங் கண்டு சொல்லியது.

[(து.வி.) வருவதாகக் குறித்த கார்ப்பருவத்தும் தலைவன் மீண்டுவரக் காணாது வருத்தமிகுதியால் நலியும் தலைவி, தோழியிடத்தே மனம் நொந்து தன்நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


அம்ம வாழி தோழி! காதலர்
நிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய
சொற்புடை பெயர்தலோ விலரே வானம்
நளிகடல் முகந்து செறிதக இருளிக்
கனைபெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக் 5
கார்செய் தென்னுழை யதுவே யாயிடைக்
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெருமர வேரடிப் போல
அருளிலே னம்ம அளியேன் யானே!

தெளிவுரை : தோழீ! யான் கூறுகின்ற இதனையும் கேட்பாயாக; "இந்நிலமானது தானிருக்கும் நிலையிலிருந்து ஒருபக்கமாகச் சாய்ந்து பெயர்ந்தாலும், நம் காதலர் தாம் சொல்லிய சொற்கள் தம்மிற் சாய்ந்து பெயர்தல் என்பது இல்லாதவராவர். மேகம் பெருங் கடலுக்குச் சென்று, நீரை முகந்து, வானகமெங்கணும் செறிவு பொருந்த இருளைச் செய்து, மிக்க பெயலையும் பொழிந்து, கடுமையான இடிக்குரலையும் முழக்கிக்கொண்டு, கார்காலத்தைச் செய்தபடி, என்னைத் துன்புறுத்துதற்கு எதிரே தோன்றா நின்றது. அவ்விடத்தே, புன்செய்க் காட்டுக் கொல்லைகளிலே நிரைமேய்க்கும் கோவலர்கள், இரவுப் போதிலே எரிகொளுத்தி வைத்துள்ள பெருமரத்தினது வேரடிக்கட்டையைப் போலக் காமநோயும் உள்ளேயே கனிந்து பெருகிக் கனலாகின்றது. அவர் அருளும் இல்லாதேன்; யான் அளிக்கத்தக்கேன்! என் நிலையைக் காண்பாயாக!

சொற்பொருள் : புடை பெயர்தல் – குடை சாய்தல்; நிலைகெடல். நளிகடல் – பெருங்கடல். செறிதக – செறிவு பொருந்த. உழை – பக்கம்; கொல்லை – புன்செய்த் தோட்டக் கால்கள். கோவலர் – பசுநிரை மேய்ப்போர்; எல்லி – இரவுக்குத் துணையாகக் கொளுத்திய நெருப்பு. வேரடி – வேராகிய அடிக்கட்டை; இது நின்று நெடுநேரத்துக்கு எரியுமாதலின் இதைப் பயன்படுத்துவர்.

விளக்கம் : கொல்லையிற் கோவலர் கொளுத்திய எரிதணலானது இராப்பொழுது முற்றவும் கனிந்து எரியுமாறு போலத், தன் உள்ளத்துக் காமநோயும் இரவு முற்றவும் கனிந்து தன்னை அணுவணுவாக எரித்தபடி யிருக்கும் என்றனள். தன்னைப் பெருமரவேருக்கு ஒப்பிட்டது, தன் குடிப்பெருமை கருதியும், தானுற்ற நோயை உள்ளத்தளவானே அடக்கிக்காக்க முயன்றும், அது கைகடந்து மிகுதலை நினைந்தும் ஆம்.

'நிலம் புடை பெயர்வதாயினும் கூறிய சொற் புடை பெயர்வதோ இலரே' என்றது, தலைவனின் வாய்மை பிறழா மாண்பை உணர்த்தியதாம். அதனை நினைப்பித்து அவனை வரைவுக்கு விரைவுபடுத்தியதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/289&oldid=1698508" இலிருந்து மீள்விக்கப்பட்டது