உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/295

விக்கிமூலம் இலிருந்து

295. முதிர்ந்து முடிவேம் யாமே!

பாடியவர் : ஔவையார்.
திணை : நெய்தல்.
துறை : (1) தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. (1) சிறைப் புறமும் ஆம்.

[(து.வி.) (1) தோழி தலைமகனை நெருங்கி, 'நம் உறவை அறிந்தனள் அன்னையாதலின், தலைவியை இற்சிறை வைக்கவும் எண்ணினள்' என்று கூறுகின்றாள். ஆகவே, இனிக்களவுறவு வாயாது; வரைந்துவந்து இவளை மணந்து கொள்ளுதற்கு விரைவாயாக என்று குறிப்பாகப் புலப்படுத்துகின்றனள். (2) தலைவன் சிறைப்புறத்தானாக, அவன் கேட்குமாறு தோழி கூறியதும் இதுவாகும்.]


முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின்
புறனழிந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும்அஃ தறிந்தனள்
அருங்கடி அயர்ந்தனள் காப்பே எந்தை
வேறுபல் நாட்டிற் கால்தர வந்த 5
பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்
கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம்
இளநலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமே!

தெளிவுரை : பசுமை கெட்டுப் போன மலைப்பக்கத்திலே காய்ந்து கிடக்கும் வள்ளிக் கொடியைப் போலத், தன் புறவழகெல்லாம் அழிவுற்றதாகிப் போயின. தழைந்து தாழ்ந்த கருங்கூந்தலை உடையவரான ஆயமகளிரும், மனம் அழுங்கா நின்றனர். எம் தாயும் தலைவியின் களவொழுக்கமாகிய அதனை அறிந்து விட்டனள். அதனாலே, தலைவியை இல்வயிற் செறித்தனளாகி, அரிய காப்பையும் ஏற்படுத்தினள். ஆதலினாலே,

வேறாகிய பலப்பல நாடுகளின்றும் காற்றுச் செலுத்துதலாலே வந்தடைந்த, பலவான செய்வினைச் சிறப்புடைய நாவாய்கள் காணப்படும், எம் தந்தையது பெரிதான கடல் துறையினிடத்தே வைக்கப் பெற்றுள்ள, உண்டாற் செருக்கை மிகுவிக்கும் கள்ளின் சாடியைப் போன்றதான எம்முடைய இளமையது நலமெல்லாம், இல்லத்திடத்தேயேயாகிக் கெட்டு ஒழியும்படியாக யாமும் எம்மனையகத்தே செல்லா நிற்போம்! அவ்விடத்திருந்தபடியே அவனைப் பெறாதே முதுமையடைந்தும் முடிவை எய்துவோம்! இதனை எமக்கு நேர்வித்த நீதான் நெடிது வாழ்வாயாக!

கருத்து : எம்பால் அன்புடையையாயின், நீதான் மணத்தோடு விரைய வந்தனையாய் அவள் நலிவைப் போக்குவாயாக என்றதாம்.

சொற்பொருள் : முரிந்த சிலம்பு–கோடை வெம்மையாலே பசுமை நலன் கெட்டழிந்து போய்க் காணப்படும் மலைப்பகுதி. எரிந்த – காய்ந்து பட்ட. புறன் – மேற்புறம். ஒலிதல்–தழைத்தல். தாழ்தல்–தொங்குதல். அழுங்குதல்–பெரிதும் வருந்திச் சோர்தல். கடி–காவல். கடி அயர்தல்–காவலைச் செய்தல். கால்–காற்று. பலவினை நாவாய்–பலவான செய்வினைத் திறன் பெற்ற நாவாய்; பல நாட்டின ஆதலின் அவை பல வினைத்திறன் உடையவாயின. தோன்றும்–வந்து சேர்ந்து காணப்படும். கலி–செருக்கு. மடை–மடுத்தல்–உண்டல். இள நலம்–இளமை நலம்–இளமையும் நலமும் என்றும் கொள்ளலாம். சேறும்–சென்றடைவேம். முதிர்கம்–முதிர்ந்து போவேம்.

விளக்கம் : வளமை செறிந்த சிலம்பினிடத்தே பசுமை தோன்றத் திகழ்ந்த வள்ளிக்கொடி தானும், மழைவளத்தைப் பெறாமையினாலே காய்ந்து போயினாற் போல், தலைவியின் துயர்கண்டு அழுங்கிய ஆயமகளிரது ஒலிவரும் தாழிருங் கூந்தலும் எண்ணெய்யிட்டுப் பேணப் பெறாமையிலே அழகழிந்தது என்று கொள்க. சாடியைத் தலைவிக்கும், அதன்பாலுள்ள கள்ளைத் தலைவியது அழகுக்கும் உவமையாகக் கொள்க. சாடி கண்டாரை இன்புறுத்துவது, தன்னை நாடி வரச் செய்வது, கள் உண்டாரைச் செருக்குறச் செய்து களிப்பது.

'முதிர்கம் யாமே' என்பது சிந்தனைக்கு உரியது. வேற்று வரைவுக்கும் கற்பிற் சிறந்தாளாகிய தலைவி இசையமாட்டாள்; களவிலும் நின்னை அடையாள்; நீதானும் அவளை மணத்தலைக் கருதமாட்டாய்; ஆகவே, அவள் வருந்தினளாக இளமையும் அழகும் வறிதே கழிய முதிர்ந்து சாவையே அடைவாள்; அவளுக்கு அணுக்கராகிய யாமும் அவள் பயின்ற துயரைப் பொறேமாய் அந்நிலையே எய்துவேம்; இத்துணைக்கும் காரணமாகிய நீ தான் நெடிது வாழ்வாயாக என்கின்றனள். தோழி கூற்றாக அமைந்த இச்சொற்களிலே பெருமிதப் பண்பும், வரைவுகடாதலும், ஒருங்கிணைந்து மிளிர்கின்றன!

வேறு பல் நாட்டிற் கால்தர வந்த பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை என்பது, பழந்தமிழ் நாட்டு வாணிக வளத்தை உணர்த்துவதாம். மகளிரது இளமை நலத்தைக் கட்சாடிக்கு உவமித்த நயத்தைச் சிந்தித்து உணர்ந்து களிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/295&oldid=1698522" இலிருந்து மீள்விக்கப்பட்டது