உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/313

விக்கிமூலம் இலிருந்து

313. ஒலிக்கும் தினைப்புனம்!

பாடியவர் : தங்கால் பொன்கொல்லன் வெண்நாகனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ப் புனம் அழிவுரைத்துச் செறிப்பறிவுறீஇயது.

[(து-வி.) புனம் காவலுக்கு நின்ற விடத்திலே, தலைவி, தலைவனைக் கண்டு காதல்கொண்டு, அவனோடு கலந்து ஒன்று பட்டனள். அவன், களவாகிய அவ்வுறவையே தொடர்ந்து நாடிவருதலையும், மணத்தைப் பற்றி விரைவு கொள்ளாமையையும் கண்டாள் தோழி. அவள் அவனுக்கு அதை வலியுறுத்த விரும்பினாள். அவன் சிறைப்புறமாக, தலைவிக்குச் சொல்வாள் போலத், தன் கருத்தை நுட்பமாக அவனும் கேட்டுணரக் கூறுகின்றாள். இவ்வாறு தோழி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப்
பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத்
தகைவனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து
ஒலிபல் கூந்தல் அணிபெறப் புனைஇக்
காண்டற் காதல் கைம்மிகக் கடீஇயாற்கு 5
யாங்கா குவள்கொல் தோழி—காந்தள்
கமழ்குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும்பொழில் புலம்ப ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும் தோடுபுலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா 10
கொய்பதம் கொள்ளும்நாங் கூஉம் தினையே!

தெளிவுரை : தோழீ நாம் கூவிக் கிளிகளை வெருட்டும் தினைப்புனம் எல்லாம் கதிரைக் கொய்யும் பதத்தினைப் பெற்றுள்ளன. மேலுள்ள இலைகள் காய்ந்தவாய், மலையருவியைப் போல ஒலிப்பனவாயும் தினைப்பயிர்கள் ஆகிவிட்டன. ஆதலினாலே, காந்தளின் மணம் கமழ்கின்ற பூக்கொத்து இதழவிழ்ந்து மணத்தைப் பரப்புகின்றதும், விருப்பம் வருகின்றதுமான மலைச் சாரலானது கூதாளி படர்ந்துவிட்டதாக ஆயிற்று. நறிய பொழிலும் நம்மையில்லாதே தனிமையாயிற்று என்று ஆகுமாறு, அதனையும் கைவிட்டு, யாமும் ஊரிடத்தே மீண்டும் செல்வேம் போலவும் தோன்றுகின்றது. கருமையான அடிமரத்தையுடைய வேங்கை மரத்திலே, நாட்காலையிலே பூத்துள்ள புதுப்பூக்கள், பொன்னினாலே பணிசெய்யும் கம்மியனின் கைவேலைப்பாட்டினைப்போல, மிகவும் வனப்பினையும் பெற்றன. தடைகளை முற்றவும் அழித்து, தழைத்த பலவாகிய கூந்தலை அழகு பெறுமாறு ஒப்பனை செய்து காண்பதற்குள்ள விருப்பமானது அளவு கடந்ததனாலே, நம்மை இதுகாலை கைவிட்டுப் போயின நம் காதலருக்கு, நாம் தான் இனி எவ்வாறு உதவுவோமோ?

கருத்து : தலைவன், விரைவில் வந்து தலைவியை மணந்து கொண்டு இல்லறம் பேணவேண்டும் என்பதாம்.

சொற்பொருள் : நாளுறு – நாட்காலைத் தோன்றிய. பொன் செய்கம்மியன் – பொற்கொல்லன். கைவினை – கை வேலைத்திறம். தகை வனப்பு – மிகுந்த அழகு. கண்ணழி – தடை. கட்டழித்தல் – முற்றவும் ஒழித்தல். கடீஇயாற்கு – நீத்துப் போயினவருக்கு. நயவரும் – விருப்பம் வருகின்ற. கூதளம் –கூதாளி. புலம்ப – தனிமையுற. தோடு – தினையின் இலை. கூஉம்தினை – கூவிக் கிளியோப்பும் தினைப்புனம்.

விளக்கம் : 'கடீஇயான்' என்றாள், தம்மை மறந்து விட்ட அவனது கொடுமையை நினைத்து நொந்து கூறினாள். 'கொய்பதம் கொள்ளும் தினை' என்றதனால், இனிப் பகற்குறிவாய்த்தல் அரிதாதல் கூறினாள். 'ஊர்வயின் மீள்குவம்' என்றாள், இரவுக்குறி வேட்டது போலச் சொல்லினும், வரைவு கடாதலே அவள் கருத்தாதலை உணர்த்தினாள்.

வேங்கை பூத்தது கூறியது, அதுதான் மணவினைக்கான காலமும் வந்தது என்பதை உணர்த்தி, இனி இல்லத்தார் அது குறித்து முயலுவர் என்று கூறியதாம். 'கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத், தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து' என்றது, தாம் வரைந்து வரும்வரை பொறுத்திருப்பதாக எண்ணினும், வேங்கை மலர்ந்தது மணவினைக் காலமாக, அந்த எண்ணம் தடைப்படலும் கூடும் என்பதாம். இதனால், தாம் வருந்தி நலனழிவேம் என்பதும் கூறினளாம். தினை முற்றியது கூறியதனால், இற்செறிப்பு உளவாதலும் கூறினளாம். ஆதலின் இனிப்பகற்குறியும் இரவுக்குறியும் வாய்ப்பதரிது எனவும், விரைய வரைந்து வந்து மணந்து கூடி இல்லறமாற்றலே செயற்குரியது என்பதும் உணர்த்தினாள்.

பயன் : வேங்கை பூத்தது மணவினைக்கு உரிய காலமாதலின், விரைவில் மணவினையினைப் பெறுவதற்குத் தலைவன் முயல்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/313&oldid=1698577" இலிருந்து மீள்விக்கப்பட்டது