உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/318

விக்கிமூலம் இலிருந்து

318. பிடி புலம்பிய குரல்!

பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாலை.
துறை : பிரிவுணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.
[(து-வி.) தலைவியைத் தன்னோடு உடனழைத்து வந்து, தன்னூரில் தலைவியை மணந்து இல்லறம் பேணி வருபவன் தலைவன் ஒருவன். சிறிது காலத்திற்குப்பின் அவனுள்ளத்தில் பொருள்தேடி வருவதற்குப் போகும் எண்ணம் வலுக்கின்றது. அதனை, அவன், தலைவியின் தோழிக்கு உணர்த்த, அவள் தலைவியின் தன்மையைக்கூறி, அவன் செலவைத் தடுப்பதற்கு முயல்வதாக அமைந்த செய்யுள் இது.]


நினைத்தலும் நினைதிரோ வைய வன்றுநாம்
பணைத்தா ளோமைப் படுசினை பயந்த
பொருந்தாப் புகர்நிழல் இருந்தன மாக
நடுக்கஞ் செய்யாது நண்ணுவழித் தோன்றி
ஒடித்துமிசை கொண்ட வோங்குமறுப்பு யானை
பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர்
அறியிடை இட்ட அளவைக்கு வேறுணர்ந்து
என்றூழ் விடரகம் சிலம்பப்
புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே!

தெளிவுரை : ஐயனே! உடன்போக்கில் உம்முடன் வந்த அந்நாளிலே, பருத்த அடியைக் கொண்ட ஓமை மரத்தின் தாழ்ந்த கிளைகளினாலுண்டான, நிழல் என்னும் சொல்லுக்குப் பொருந்தாத புள்ளிபட்ட நிழலிடத்தே, களைப்பாறுதலின் பொருட்டாகத் தங்கியிருந்தோம் அன்றோ! அப்போது, நமக்கு எவ்வித நடுக்கத்தையும் செய்யாதாய், நாமிருந்த இடத்து வழியாகவே வந்து தோன்றிற்று, உயர்ந்த தந்தங்களையுடைய யானை ஒன்று. தழையை ஒடித்துத் தின்னுதலை மேற்கொண்டதான உயர்ந்த தந்தத்தையுடைய அந்த யானையானது, புள்ளியையுடைய தன் நெடிய கையினைச் சுருட்டித் தூக்கியபடியே, பிறிதொன்றனை அறிகின்றதன் காரணமாக, இடையீடுபட்டுப் பிளிறியது. அது அவ்வாறு பிளிறியவுடனே, அதனை வேறாகக் கருதிற்றாய், அதன் புல்லிய தலையையுடைய இளைய பிடியானையானது, வெயில் பரவிய மலைப்பிளப்பிடம் எல்லாம் எதிரொலிக்குமாறு குரலெடுத்துப் புலம்பிற்று. அதன் அத்தகு புலம்பற் குரலையும் கேட்டிருந்தீர் அல்லவோ! அதனைக் கேட்டிருந்தீர் ஆயின், கொடிய சுரநெறியில் எம்மைப் பிரிந்து செல்லாதிருப்பீர்; நும் காதலியான இவளைப் பிரியாதும் இருப்பீர் அல்லவோ!

கருத்து : 'நும் பிரிவை இவள் பொறுத்து நீர் வரும் வரைக்கும் உயிர் தரியாள்' என்பதாம்.

சொற்பொருள் : நினைத்தல் – பண்டு நிகழ்ந்ததனை நினைவு கூர்தல். பணைத்தாள் – பணைத்த அடிமரம்; பணைத்தல்–பருத்தல்; பனைத்தாள் ஓமை என்றும் வேறுபாடம். படு சினை – தாழ்ந்த கிளை; பட்டுப்போன கிளையும் ஆம். பொருந்தா–பொருத்தமல்லாத; அஃதாவது நிழல் என்று சொல்லுதற்குப் பொருந்தாத. புகர் – புள்ளி; புகர் நிழல் – புள்ளிபட்ட நிழல்; நிழலும் வெயிலும் கலந்த நிலை இது. நடுக்கஞ் செய்தல் – அச்சமுறும்படி செய்தல். நண்ணுவழி – அடைந்துள்ள வழியிடையே. மிசைதல் – உண்ணல். ஓங்கு மருப்பு – உயர்ந்த கொம்பு. பொறி – புள்ளி. அறியிடையிட்ட – அறிவதற்கேற்ப இடையிடைப்பட்ட. வேறு உணர்ந்து – மனம் வேறுபட்டதாகக் கருதி. என்றூழ் – வெயில். புன்தலை – புல்லிய தலை; இளமையின் அமைதி இது.

விளக்கம் : 'வேறு உணர்தல்' என்பதனை, அது தான் புலியோடும் பொருதலைத் தொடங்கிற்றோ எனக் கருதி, அதனால் அதற்கு நேரும் ஊறுக்கு அஞ்சுதல். எதனையோ கருதிற்றாய்க் களிறு பிளிறவும், அதன் வரவு இடையீடுபடவும், பிடியானை புலம்பலுற்றாற்போல, நம் தலைவியும், நும் கருத்தை உணரின் ஆற்றாளாய்க் கலுழ்வாள் என்பதாம்.

இறைச்சிப் பொருள் : களிறு வேறொன்றனைக் கருதித் தாழ்த்தமையினை, அது புலியோடு பொருதும் போலும் என மாறுபாடாக உணர்ந்து, அதன் பிடியானை புலம்பும் என்றனள். இது, தலைவியும், நும் பிரிவால், வழியிடை நுமக்கு ஏதம் நிகழுமோ எனக் கருதினளாய்ப் பெரிதும் வருந்தி நலிவடைவள் என்பதாம். இதனைக் கேட்டலுறும் தலைவன், தன் போக்கைக் கைவிடுவன்! தலைவியை அகன்று போதலை மறந்திருப்பன் என்பதாம்.

பாடபேதம் : துறை : பிரிவுணர்த்தப்பட்ட தலைமகள், தோழிக்கு, 'நினைக்கலும் நினைத்திரோ வைய புன்றலை மடப்பிடி புலம்பிய குரலே என்பது சொல்லாமோ" எனச் சொல்லியது எனவும் கூறப்படும்.

பயன் : மடப்பிடி புலம்பியது போலத் தலைவியும் குரலெடுத்துப் புலம்பிக்கூடத் தன் ஆற்றாமையைப் போக்க வியலவில்லையே என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/318&oldid=1698589" இலிருந்து மீள்விக்கப்பட்டது