உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/347

விக்கிமூலம் இலிருந்து

347. காண விடுமோ?

பாடியவர் : பெருங்குன்றூர்க் கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது.

[(து-வி.) தலைவன் சொன்னபடி மணந்து கொள்ளும் முயற்சியிலே மனஞ் செலுத்தாமல் இருப்பது கண்டு தலைவி மனம் கலங்கி நலிகின்றாள். அவன் சொற்பிழையான் என்று தோழி தேறுதல் கூறுகின்றாள். அவளுக்குத் தலைவி தன்னுடைய மனநிலைமையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]


முழங்கு கடல் முகந்த கமஞ்சூல் மாமழை
மாதிரம் நனந்தலை புதையப் பாஅய்
ஓங்குவரை மிளிர வாட்டிப் பாம்பெறிபு
வான்புகு தலைய குன்றம் முற்றி
அழிதுளி தலைஇய பொழுதில், புலையன் 5
பேழ்வாய்த் தண்ணுமை இடம்தொட் டன்ன,
அருவி இழிதரும் பெருவரை நாடன்,
'நீர்அன நிலையன்; பேர் அன்பினன்' எனப்
பன்மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய
காண விடுமோ—தோழி என் நலனே? 10

தெளிவுரை : தோழீ! வேனிற்காலத்திலே தவளையானது மணலினுள்ளே சென்று அடியிற் புகுந்துகொண்டு, வெப்பத்திற்கு மறைந்து வாழும். அதனைப் போலவே, என் நலனும், அவர் பிரிவின் வெம்மைக் காலத்திலே என்னை வாட்டி வதைத்து விடுவதே அல்லாமல், என்னுள்ளேயே சென்று மறைந்து ஒடுங்கிக் கிடக்குமோ? முழங்கும் கடலினிடத்தே நீரினை முகந்த, நிறைந்த சூலையுடைய கருமேகங்கள், அகன்ற திசையிடம் எல்லாம் மறையும்படியாக வானிலே எழுந்து பரவும்; உயர்ந்த மலையிடம் எல்லாம் ஒளிரும்படியாக மின்னலைச் செய்து வருத்தும்; பாம்புகள் தலைதெறித்து இறந்து வீழுமாறு இடிகளை முழக்கும்; வானத்தே புகுவதுபோல உயர்ந்த முடிகளைக் கொண்ட குன்றங்களைச் சூழ்ந்து வளைத்துக் கொள்ளும்; கொண்டு, மிகுதியான மழையினையும் பெய்யத் தலைப்பட்ட பொழுதிலே, புலையன், அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணிடத்தே மோதுதலால் எழுகின்ற ஓசை போல அருவியும் ஒலியோடு வீழுகின்ற பெரிய மலைநாட்டவன் நம் தலைவன். அவன், 'இன்ன நிலையினன்; பேரன்பினை உடையவன்' எனப், பலவாறாக அவன் சிறப்புக்களை எல்லாம் கூறும் பரிசிலர்களுடைய பெரிய பேச்சுக்களை யான் காணவும் கேட்கவும் உயிரோடிருக்க, விதிதான் என்னையும் நெடுநாள் இனியும் விட்டு வைக்குமோ? என்பதாம்.

கருத்து : 'அவர் மனங்கனிந்து வந்து மணம் செய்து கொள்ளும் வரைக்கும் யான் உயிரோடு இரேன்' என்பதாம்.

சொற்பொருள் : கமஞ்சூல் – நிறைந்த சூலையுடைய. மாமழை – கார்மேகம். மாதிரம் – திசை. நனந்தலை – அகன்ற இடம். புதைய – மறைந்து போய்ப் புலப்படாது போக. மிளிர – ஒளிசெய்ய; தெறித்து வீழ என்றும் ஆம். வான் புகுதலைய – வானிற் புகுவது போன்ற உயர்ந்த முடிகளைக் கொண்ட. அழிதுளி – சிதைந்த துளிகளும் ஆம். புலையன் – தண்ணுமை கொட்டுவோன். பேழ்வாய் – அகன்ற வாய். இடம் – கண்ணிடம். தொடுதல் – அடித்தல். பெருவரை – பெரு மலை. நெடுமொழி – பெரும்பேச்சு; வாழ்த்திப் பாடுதலும் ஆம். தேரை – தவளை வகை.

இறைச்சி : மலையிலே மழைபெய்த காலத்திலே, புலையன் அடிக்கும் தண்ணுமையின் ஒலிபோல அருவி வீழும் என்றனர்; இது தலைவன் வந்து தலையளி செய்து திரும்பியதும் எங்கும் அலர் எழுந்து ஒலிக்கும் என்றதாம்.

விளக்கம் : மழை பெய்து அருவியும் ஒலியோடு வீழ்தலைக் குறிப்பிட்டுக் கூறியது, கார்காலம் வந்து கழிந்தபின்னும், அவன் மனம் வரைந்து மணந்து கொள்வதிற் செல்லவில்லை என்று வருந்திக் கூறியதாம். எங்கும் குளிர்ச்சி பரவியபோதும் தன்னுளத்து வெம்மை மாறிற்றில்லை என்றதும் ஆம். 'வேனில் தேரையின் அளிய என் நலன்' என்றது, 'வேனிற் காலத்துத் தேரைபோல ஒட்டியுலர்ந்து வெளிறிப்போன என் அழகு' என்று குறித்துக் கூறியதும் ஆம். அதுதானும், கார்மழை பெய்யத் தன் வாட்டம் தீர்ந்தது; யானோ என் வாட்டம் தீரப் பெற்றேனில்லை என்றதும் ஆம். 'புலையன் தண்ணுமை கொட்டி எழுப்பும் ஒலி' என்று அருவி ஒலியைக் கூறியது, அதுதான் மங்கல நாளில் ஒலிக்காது, அமங்கல நாளிலே ஒலிக்கும் ஒலியாதலின், தன் அழிவே உறுதி என்ற மன அழிவால் கூறியது எனவும் கொள்க.

'வான்புகு தலைய குன்றம்' என்ற சொற்றொடரையும் பாடிய ஆசிரியரின் 'பெருங் குன்றூர் கிழார்' என்பதையும் பொருத்திக் கண்டு மகிழ்க.

பயன் : தலைவியின் மனநெகிழ்வால் துடிப்படையும் தலைவன், வரைந்து வருதலிலே மனஞ்செலுத்துபவனாவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/347&oldid=1698664" இலிருந்து மீள்விக்கப்பட்டது