நற்றிணை-2/369
369. நீந்துமாறு அறியேன்!
- பாடியவர் : மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்.
- திணை : நெய்தல்.
- துறை : பட்ட பின்றை வரையாது பொருள் வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.
[(து-வி.) அறத்தொடு நின்றனள் தலைவி. அதன் பின்னும் வரைந்து வராமல், வரைபொருள் குறித்துப் பிரிந்து போயினான் தலைவன். இதனால், தலைமகள் ஆற்றாமை மிகுதியாகின்றது. அதனைப் பொறுத்திரு என்று தேறுதல் கூறும் தோழிக்கு அவள் கூறும் எதிர் உரையாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]
சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேர
நிறைபறைக் குருகினம் விசும்புகந்து ஒழுக
எல்லை பைபயக் கழிப்பி முல்லை
அரும்புவாய் அவிழும் பெரும்புன் மாலை
இன்றும் வருவது, ஆயின், நன்றும்
5
அறியேன் வாழி—தோழி!—அறியேன்
ஞெமை ஓங்கு உயர்வரை இறையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்குவெள் அருவிக்
கங்கையம் பேர்யாற்றுக் கரையிறந் திழிதரும்
சிறையடு கடும்புனல் அன்னவென்
10
நிறையடு காமம் நீந்து மாறே.
தெளிவுரை : தோழீ! கதிரோன் தன் சினம் தணிந்தவனாக மேற்றிசைக் குன்றத்தைச் சென்றடையவும், நிறைந்த சிறகையுடைய நாரைக் கூட்டமானது ஆகாயத்திடத்தே நெருங்கிச் செல்லவும், பகற் பொழுதையெல்லாம் மெல்ல மெல்லப் போக்கி முல்லையின் அரும்பு வாய்திறந்து மலரவும், பெரிய புன்மையுடைய மாலைக் காலமானது நேற்றுவரையும் நம்மைத் துன்புறுத்தியது. இன்றும் அதுதான் வருமானால்—
மூங்கில்கள் வளர்ந்த உயர்ந்த இமயமலைத் தொடரின் உச்சியிடத்தே, வானினின்றும் வீழ்கின்றதுபோல விழும் விளங்கும் வெள்ளிய அருவிகளை உடைய அழகிய கங்கைப் பேராற்றினைக் கரைகடந்து இடித்துச் செல்லும், அணையை உடைத்துச் செல்லும் வெள்ளத்தைப் போன்றதான், என்னுடைய நிறையை அழித்துப் பெருகும் காமவெள்ளத்திலே நீந்திக் கரையேறும் வழியினை, நான் நன்றாகத் தெரிந்தேனாகவும் இல்லையே! இனி, நான் எவ்வாறு உய்வேனோ? என்பதாம்.
கருத்து : 'இனி, யான் உயிரோடு இருப்பதரிது' என்பதாம்.
சொற்பொருள் : சுடர் – கதிரோன். சினம் – வெம்மை. குன்றம் – மேற்றிசைக் குன்றம். நிறை பறை – நிறைந்த சிறையுடைய; நிறைத்துப் பறத்தலையுடைய எனினும் ஆம். விசும் புகந்து – வானத்தை விரும்பி. எல்லை – பகற்போது. பெரும்புன் –பெரிய புன்மையுடைய. ஞெமை – மூங்கில். கரையிறந்து – கரை கடந்து. இழிதரும் – வழிந்தோடும். நிறை – நாண் முதலியவை. அடு காமம் – அவற்றை மோதிக் கடந்து வெளிப்படும் காமத் துயரம்.
விளக்கம் : மாலைப் பொழுது வருகின்றது; கதிரவனின் சினம் தணிந்துள்ளது; அவன் மேற்கு மலையைச் சேர்கின்றான்; இரையுண்ட நாரையினம் வானை அடைத்தாற்போலப் பறந்து கூடுநோக்கிச் செல்லுகின்றன; முல்லையரும்பும் இதழவிழ்ந்து மலர்ந்துள்ளது; இவ்வாறு எங்கும் இன்பமே பெருகும் காலத்திலும், துணைவரை அடையாது புலம்பும் தான்மட்டும் வருந்தியிருப்பேன் என்கின்றனள். 'இன்றைக்கும் வருவது ஆயின்' என்றது, வரின் தான் உயிர் தரிப்பதரிது என்பதாம். அடக்கவும் அடங்காது கரைகடக்கும் காமமிகுதிக்குக், கங்கையின் கடும் புது வெள்ளம் கரைகடந்து சென்று, இடைப்படும் தடைகளை உடைத்துக்கொண்டு ஓடுவதைக் கூறுகின்றனள். நீந்தும் ஆறு – நீந்திக் கரை சேரும் வழி.
பயன் : இதனால், தலைவியின் ஆற்றாமைத் துயரமானது சிறிது தணிவதனால், அவள் மேலும் சிலகாலம் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருப்பாள் என்பதாம்.