உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/368

விக்கிமூலம் இலிருந்து

368. வெய்ய உயிர்த்தனள்!

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.

[(து-வி.) தலைமகன் தலைமகளை வரைந்து வருவதற்கு முயலாதவனாகத் தொடர்ந்து களவுறவிலேயே ஈடுபட்டு வருதலால், தோழிக்குக் கவலை மிகுதியாகின்றது. அவள், தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதை அவனுக்கு அறிவுறுத்துவதன் மூலம், அவனால் இனியும் களவுறவிலே இன்பங்காண்பது இயலாதென்பதைச் சுட்டிக்காட்டி, அவன் உள்ளத்தை மணவினையின்பாற் செலுத்த முயல்கின்றாள். அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]


பெரும்புனம் கவரும் சிறுகிளி ஓப்பிக்
கருங்கால் வேங்கை ஊசல் தூங்கிக்
கோடேந்து அல்குல் தழையணிந்து, உம்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ,
நெறிபறி கூழைக் கார்முதிர்பு இருந்த 5
வெறிகமழ் கொண்ட நாற்றமுஞ் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிதுகு நெஞ்சினள் பிறிதொன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே—
ஐய! அஞ்சினம், அளியம் யாமே! 10

தெளிவுரை : ஐயனே! பெரிய தினைப்புனத்திலே புகுந்து கதிர்களைக் கவரும் சிறுகிளிகளை ஒப்பியும், கருமையான அடியையுடைய வேங்கை மரத்திலே தொடுத்துள்ள ஊசலிலே அமர்ந்து ஆடியும், பக்கம் உயர்ந்த அல்குலிடத்தே பசுந்தழையால் அமைந்த உடையணிந்தும், உம்மோடு அருவியாடியும் வருதலைக் காட்டிலும் இனிதாவது ஒன்றும் எமக்கு உளதாகுமோ? நெறிப்பமைந்த கூந்தலிலே கருமை முதிர்ந்திருந்த நறுமணம் கமழ்தலைக் கொண்ட புதுநாற்றத்தையும், சிறிதளவிலே பசலைபரவிய நெற்றியையும் பார்த்து, பயனின்றிச் சிதைந்த உள்ளத்தினள் ஆயினள்யாய், பிறிதொன்றைக் காரணமாகக் குறித்தவளாக அவள் சுடுமூச்செறிபவளும் ஆயினள். அதனால், இனி யாம் என் செய்வேம்! இரங்கத் தகுந்தவராகவே யாம் ஆவோம் போலும்! என்பதாம்.

கருத்து : 'இனி இற்செறிக்கப்பட்டு வாடி நலிவோம்' என்பதாம்.

சொற்பொருள் : பெரும்புனம் – பெரிய தினைப்புனம்; தலைவியது தந்தையின் வளமையைக் குறித்துச் சொல்லியது. சிறுகிளி – சிறிய உருவினதான கிளி. ஓப்பி – வெருட்டி. தூங்கி – தொங்கியாடி. கோடு – பக்கம். தழை – தழையுடை. நெறி –நெறிப்பு. கார் – கருமை. முதிர்பு – முதிர்ந்து. வெறி – நறுமணம். பசலை – பசலை நோய். அளியம் – இரங்கத் தக்கவராவோம்.

விளக்கம் : 'பெரும்புனம் கவரும் சிறுகிளி ஓப்பி' என்றது, புனம் பெரிதாயினும் தினையைப் பிறர் கவர்ந்து போகாதே காத்துப் பேணும் கடமையுணர்ச்சியைக் கூறியதாம்; இதனால் தலைவியைக் களவுறவில் தலைவன் கூடியின்புறுவதறியும் பெற்றோர் சீறி எழுவர் என்பதும் குறிப்பாக உரைத்தனளாம். காவல் கடமைகொண்டு வந்தபோதும், வேங்கையில் ஊசலாடி மகிழும் இயல்பான தன்மையும் உளது என்றது, அவன் ஊசலாட்ட ஆடி மகிழ்ந்ததனை நினைவுபடுத்திக் கூறியதாகும். 'தழை அணிந்து' என்றது, அவனால் தரப்பட்ட கையுறையான தழையுடையை ஏற்று அணிந்து என்றதாம். 'ஆடினம்' என்றது, சோலையிலே நின்னோடு விளையாடினம் எனவும், அருவியாடி இன்புற்றனவும் எனவும் குறித்ததாம். 'பிறிது ஒன்று சுட்டி' என்றது, தெய்வம் அணங்கியதாகக் குறித்து, வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்ய முற்பட்டனள் என்றதாம். 'அளியம்' என்றது, இற்செறிப்பு உணர்த்தியதாம்; உண்மையை உரைக்கவியலாதும், அன்னையின் வெறியாட்டை ஏற்க முடியாதும் அலமரலால், இவ்வாறு கூறியதாகவும் கொள்ளலாம்.

பயன் : தலைவன் தெளிவடைந்து மணந்துகொள்ள வேண்டிய முயற்சிகளிலே மனம் விரைவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/368&oldid=1698688" இலிருந்து மீள்விக்கப்பட்டது