உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/367

விக்கிமூலம் இலிருந்து

367. பரியாது வருவர்!

பாடியவர் : நக்கீரர்.
திணை : முல்லை.
துறை : வரவுமலிந்தது.
சிறப்பு : அருமனின் சிறுகுடி.

[(து-வி.) தலைவன் குறித்த காலத்தில் திரும்பிவரத் தவறியதால், அதுவரை பொறுத்திருந்த தலைவிக்கு, மேலும் பொறுத்திருக்க முடியாமல் ஆற்றாமை மிகுதியாகின்றது. அவள் வேதனையை மாற்றக்கருதிய தோழி, தலைவனின் உடன் சென்ற வீரர்கள் முல்லைசூடித் திரும்பியது காட்டி, அவனும் விரைவில் வருவான் எனத் தேற்றுவதாக அமைந்த செய்யுள் இது.]


கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை
நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து
கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு
சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால்
கூழுடை நன்மனை குழுவின இருக்கும் 5
மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி
மெல்லியல் அரிவைநின் பல்லிருங் கதுப்பிற்
குவளையொடு தொடுத்த நறுவீ முல்லைத்
தளையவிழ் அலரித் தண்நறும் கோதை
இளையருஞ் சூடி வந்தனர் நமரும் 10
விரியுளை நன்மா கடைஇப்
பரியாது வருவர், இப் பனிபடு நாளே.

தெளிவுரை : வளைந்து பார்க்கும் கண்ணினையும், கூர்மையான வாயினையும் உடையதான காக்கையின் பேடையானது, நடுங்குகின்ற சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டதாய், தன் சுற்றத்தைக் கூப்பிட்டழைத்து, கருங்கண்ணையுடைய கருணைக்கிழங்கின் கறியோடு கூடிய செந்நெல் அரிசியாற் சமைத்த வெண்சோற்றுத் திரளையை, அச்சமுடைய தெய்வத்திற்கு இடப்பெற்ற பலியோடு கவர்ந்து கொள்ளும்படியாக, குறிய கால் நாட்டிக் கட்டிய சோறூட்டும் இடங்களையுடைய நல்ல மனையினிடத்தே கூட்டமாக அமர்ந்திருக்கும், பழமையான வீடுகளையுடையது அருமன் என்பானின் பெரும் புகழ்பெற்ற சிறுகுடி என்னும் ஊர். அவ்வூரைப் போன்ற மென்மையான சாயலையுடைய அரிவையே! நின்னுடைய பலவான கரிய கூந்தலிலே சூடிய மாலைபோல, குவளையோடு கலந்து தொடுத்த நறிய முல்லைப்பூவின் கட்டு அவிழும் மலராலாகிய குளிர்ந்த மாலைகளைச் சூடியவராக, நம் தலைவனுடன் சென்றிருந்த வீரர்கள் திரும்பி வந்து விட்டனர். நம் காதலரும், விரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக்கொண்டு, இடையில் எங்கும் தங்கி வருந்தாது. இப்பனிகொட்டும் நாளிலேயே வந்துவிடுவார்; ஆதலின், நீயும் வருந்தாதிருப்பாயாக என்பதாம்.

கருத்து : நம் தலைவர் இன்றே வருவர்; நின் ஏக்கமும் தீரும் என்பதாம்.

சொற்பொருள் : கொடுங்கண் – வளைந்து ஒரு பக்கமாகப் பார்க்கும் கண். பேடை – பெட்டை. நடுங்குசிறைப் பிள்ளை – நடுங்கும் சிறகையுடைய காக்கைக் குஞ்சு; நடுங்குவது குளிரால் என்று கொள்க. பயிர்ந்து – அழைத்துக் கூப்பிட்டு. கருனை – கருணைக்கிழங்குப் பொறிக்கறி. சூருடைப் பலி – அச்சத்தையுடைய தெய்வத்திற்கு இடப்பெற்ற பலிச்சோறு. குறுங்கால் – குறுகிய கால்கள் கொண்ட பந்தர். கூழ் – உணவு. மூதில் – பழைமையான வீடுகள்; இது ஊரின் பழமையைக் குறிப்பது. 'பல்லிருங் கதுப்பு—பலவாகப் பகுத்து முடிக்கும் கரிய கூந்தல். 'பல்லிருங் கதுப்பிற் குவளை' எனக்கூட்டி, கதுப்பினைப்போன்ற கரிய குவளைமலர் என்றும் பொருள்கொள்ளலாம். கோதை – தலைமாலை. உழை – பிடரிமயிர். பரியாது – தங்கி வருந்தாது.

விளக்கம் : மூதில் அருமனின் சிறுகுடியிலுள்ள பெண்கள் தாம் நேர்ந்து கொண்டபடி, தம் கணவர் வந்ததும், பலிச்சோறிட்டுக் காக்கையைப் போற்றினர் என்று கருதலாம். 'சிறுகுடி மெல்லியல்' என்றது, அச்சிறுகுடிபோன்ற மென்மைத் தன்மை கொண்ட பெண், தலைவி என்று கூறியதாம். குவளையும் முல்லையும் சேர்த்துக்கட்டிய மாலையானது, நீலமும் வெள்ளையும் விரவியதாக அழகுடன் விளங்குவதோடு, கார்காலத்தின் வரவையுணர்த்துவதும் ஆகும். இளைஞர் – போர் மறவர்; இதனால் தலைவன் படைத்தலைவன் என்பதும் அறியப்படும்.

உள்ளுறை : காக்கையின் பெடையானது தன் குஞ்சைத் தழுவிக்கொண்டு சோற்றுப்பலியைக் கவரக் கூடியிருக்கும் மனை என்று குறித்தனர்; இவ்வாறே தலைவியும் தன் மகனைத் தழுவிக் கொண்டு சுற்றம் பேணி நல்விருந்தாற்றி இல்லறத்தைப் புகழுடன் நடத்துபவாளாவள் என்பதாம்.

'பாளைதந்த பஞ்சியங் குறுங்காய், ஓங்கிரும் பெண்ணை நுங்கோடு பெயரும் ஆதியருமன் மூதூர்' என்று குறுந்தொகையுள் கள்ளில் ஆத்திரையனார் (193) கூறுவர். ஆகவே, ஆதி அருமனின் ஊர் மூதூர் என்றே வழங்கியது எனலாம். சிறுகுடி— சிறிய குடியிருப்பென்று கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/367&oldid=1698687" இலிருந்து மீள்விக்கப்பட்டது