உள்ளடக்கத்துக்குச் செல்

அபிராமி அந்தாதி/ஆசிரியர் வரலாறு

விக்கிமூலம் இலிருந்து


ஆசிரியர் வரலாறு

சோழ நாட்டில் காவிரி நதியின் தென்கரையில் உள்ள தேவாரம் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகிய திருக்கடவூரில் சற்றேறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் அந்தணர் வகுப்பில் கெளசிக கோத்திரத்தில் அமிர்தலிங்க ஐயர் என்பவருடைய புதல்வராக உதித்தவர் அபிராமி பட்டர். அவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன் என்பது. பரம்பரை பரம்பரையாகச் சங்கீதப் பயிற்சியும், தேவி உபாசனையும் அமைந்த குடும்பத்தினராதலின் அவ்வந்தணர் இளமை முதலே திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அபிராமியம்மையை மிக்க அன்புடன் வழிபட்டுவரலாயினர். தமிழிலும் வடமொழியிலும் சங்கீதத்திலும் அவர் கற்றுத் தேர்ந்தார். அபிராமியம்பிகை விஷயமாக ராக மாலிகையில் ஒரு கீர்த்தனம் பாடியதோடு அவ்வப்போது தம் உள்ளத்தே தோற்றிய பக்தி விளைவினால் பல துதிகளை அவ் வம்பிகையின் மீது பாடி வந்தார்.

உபாசனையில் சிறந்து நின்ற அவர் சரியை, கிரியை என்னும் இரண்டு சோபானமும் கடந்து யோக நிலையில் யாமளையின் திருக்கோலத்தை ஆதாரபீடங்களில் கண்டு கண்டு இடைப்பட்ட கிரந்திகளைத் தாண்டிச் சென்று பிரம்மரந்திரத்தில் ஸஹஸ்ரார கமலத்தில் ஒளி மயமாக எழுந்தருளியிருக்கும் லலிதாம்பிகையின்திருவருளின்பத்தில் திளைத்துப் பித்தரைப்போல ஆனந்தாதிசய வெறி மூண்டு உலவினர். அவருடைய அநுபவநிலையை உணராத சிலர், 'இவர் ஏதோ தேவதையை உபாசித்து அந்தணருக்கு மாறுபாடான ஆசரரங்களை மேற்கொண்டு பித்துப்பிடித்து அலைகிறார்' என்று ஏசத் தொடங்கினர். அவர்கள் ஏசுவதைக் காதில் வாங்காமல் அபிராமிசமயம் நன்றென்று கடைப்பிடித்து, 'உள்ளத்தே விளைந்த கள்ளால் உண்டான களியிலே' பெருமிதத்தோடு மிதந்து. வந்தார் அப்பெரியார்.

அக் காலத்தில் தஞ்சையில் இருந்து அரசு புரிந்த மகாராஷ்டிர மன்னராகிய சரபோஜி அரசர் தை அமாவாசைத் தினத்தன்று காவிரிப்பூம்பட்டினம் சென்று புகார் முகத்தில் நீராடி மீண்டவர், இடையில் திருக்கடவூரில் தங்கினர். தங்கித் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தபொழுது வழக்கம்போல அபிராமியின் சந்நிதியில் அபிராமி பட்டரைக் கண்டார். யோகம் கைவரப் பெற்று மதமத்தராகிய அவருடைய தோற்றத்தைக் கண்டு அதிசயித்த மன்னர், 'இவர் யார்?’ என்று அருகில் உள்ளவர்களை வினவியபொழுது. அவ்ர்கள், 'இவர் ஒரு பித்தர்; வேத நெறி கடந்து, பரிவார சக்தியாகிய ஒரு தேவதையை வழிபடுகின்றவர்’ என்று சொன்னர்கள், அது கேட்ட மன்னர் ஏதாவது, ஒரு தலைக்கீடு கொண்டு அபிராமி பட்டரோடு பேச எண்ணி, 'இன்று அமாவாசை உண்டா? எவ்வளவு நாழிகை இருக்கிறது?’ என்று கேட்டார். சந்திர மண்டலத்து அமுதமயமாய் வீற்றிருக்கும் அம்பிகையைத் தம்முள்ளே தரிசித்து, அங்கே சூழுஞ் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற திருக்கோலத்தில் ஈடுபட்டிருந்த பட்டர், மன்னருடைய வார்த்தைகள் காதில் அரைகுறையாக விழவே விழித்துக்கொண்டு, "இன்று. பெளர்ணமி' என்று சொன்னார். அருகில் இருந்தவர்கள் பிரமித்தனர். அவரைப்பற்றிக் குறை கூறியவர்கள் தாம் கூறிய கருத்தை மன்னர் நேரிலே உணர்ந்து கொண்டாரென்று மகிழ்ச்சி அடைந்தனர். சரபோஜி மன்னர் அவர்கள் கூறிய வார்த்தைகள் உண்மையென்றே எண்ணிப் பட்டரை மதியாமல் போய்விட்டார்.

அபிராமிபட்டர் உலக உணர்ச்சி பெற்றபோது தாம் தவறாகப் பெளர்ணமியென்று சொல்லிவிட்டதை எண்ணி வருத்தமுறலானார். தம்மைக் குறை கூறுவார் சொல் உண்மையென்று தோன்றும்படி வந்த நிலைக்கு இரங்கினார் "நன்றே வரினுந் தீதே விளைகினும் நானறிவ தொன்றேயும் இல்லை" என்ற பக்குவமுடையராதலின், இனி என் செய்வது? எல்லாம் அம்பிகையின் திருவருள்!” என்றெண்ணி உடனே அபிராமியம்மையைத் தியானித்து இவ்வந்தாதியைப் பாடத் தொடங்கினர். தம்மை உலகினர் பழி கூறுவதையும், அபிராமியின் உயர்வையும், தாம் பெற்ற அநுபவச் சிறப்பையும் இவ் வந்தாதிப் பாடல்களில் வெளியிடலானர்.

சரபோஜி அரசர் அபிராமி பட்டரைக் கவனியாமல் சென்றாலும் பட்டருடைய தோற்றம் அவர் உள்ளத்தே பதிந்து கிடந்தது. அன்று முன் இரவிலே சிறிது துயில் வரவே பரிபூரணமான சந்திரன் உதயமானாற் போலவும், அபிராமியம்மை தன் திருத்தோட்டைக் கழற்றி வீசியருள, அதுவே அமாவாசையிருட்டில் சுடர்விட்டுத் தண்ணிலவு பொழிந்து மதி என விளங்குவதைப் போலவும், அபிராமி பட்டர் தம் அருகே நின்று, அதோ பாருங்கள்; முழுமதி கதிர் வீசுகின்றது என்று காட்டுவதுபோலவும் கனவு கண்டார். அந்தக் கனவில் அம்பிகையின் தரிசனம் ஒருவாறு பெற்றமையால் அவர் உடலம் புளகித்து ஆனந்தம் மேலிட விழித்துணர்ந்தார். கனவிலே பெற்ற இன்பம் பின்னும் அவரைக் கவர்ந்தது, அப்பொழுதுதான் மன்னருக்கு அபிராமி பட்டர் மிகச் சிறந்த ஞானியென்பதும், செயற்கரிய செய்யும் பெரியாரென்பதும் புலப்பட்டன. உடனே பட்டரின் விடுநோக்கிச் சென்று அவரை வழிபட்டு, ”தங்கள் பெருமையை அறியாமல் புறக்கணித்த பிழையைப் பொறுக்க வேண்டும்” என்ருர் அம்பிகையின் திருவருளை நினைந்து வியந்த அபிராமி பட்டர், 'எல்லாம் அவள் திருவருள்!' என்று கூறினார்.

அப்போது சரபோஜி அரசர் அவரை வணங்கி, அவருக்குச் சில விளைநிலங்களை மானியமாக அளிக்க எண்ணி அக்கருத்தைக் கூறவே, பட்டர் அதற்கு இணங்கவில்லை; "தங்கள் சந்ததியாரின் நன்மையை உத்தேசித்தாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று வற்புறுத்தி வேண்டிக்கொண்டார். பட்டர் ஒருவாறு உடன்படவே, அரசர் அக்கிராமத்திலும் அருகிலுள்ள கிராமங்களிலும், வருஷம் ஒன்றுக்கு வேலிக்கு எட்டு நாழி நெல் அவருடைய சந்ததிக்கு அளிக்கும்படி சுரோத்திரிய உரிமையை அளித்துச் சாசனம் செய்து கொடுத்தார். இவ்வுரிமையை இன்றும் அந்தப் பரம்பரையினர் அநுபவித்து வருகின்றனர்.[1]

அபிராமி பட்டர், நூறு பாடல்கள்பாடி அந்தாதியை நிறைவு செய்தார். அவர் இந்த நூலையன்றித் திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள கள்ள விநாயகர் பதிகம், அமுத கடேசர் பதிகம், கால சங்கார மூர்த்தி பதிகம், அபிராமிபம்மை பதிகங்கள் இரண்டு ஆகிய பிரபந்தங்களையும் இயற்றியிருக்கிறார்.[2]

அபிராமி பட்டரைப்பற்றிக் கர்ணபரம்பரையாகச் சில வரலாறுகள் வழங்கி வருகின்றன. அவை வருமாறு: சரபோஜி மகாராஜாவிடம் அபிராமிபட்டர் நிதானம் தவறி, "இன்று பௌர்ணமி திதி” என்று விடை கூறினார். அதைக் கேட்ட அம் மன்னர், சிலர் அவரைப் பற்றிக் குறை கூறியது உண்மை என்றுகருதிச் சிறிது கோபமடைந்து, "நீர் போய்வரலாம்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

தம் வீட்டிற்கு வந்த அபிராமி பட்டர் தாம் வாய் சோர்ந்து கூறியதை நினைந்து, 'நம்மை ஆட்கொண்ட அபிராமவல்லியே இந்தப் பிழையினின்றும் காப்பாற்ற வேண்டும்' என்று எண்ணித் திருக்கோயிலுக்குச் சென்று ஒருவகை அரிகண்டம் பாடத் தொடங்கினராம். அம்பிகையின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் அக்கினியை மூட்டி அதற்குமேல் ஒரு விட்டத்திலிருந்து நூறு கயிறு களால் ஆகிய ஓர் உறியைத் தொங்கவிட்டார். பின்பு அதன்மேல் ஏறியிருந்து, "அம்பிகை எனக்குக் காட்சி தந்து எனக்கு வந்த பழியை மாற்றாவிடின் இந்த அக்கினியில் விழுந்து உயிர்விடுவேன்" என்று சங்கற்பம் செய்து கொண்டு, "உதிக்கின்ற”, என்று ஆரம்பித்து. இவ்வந்தாதியைப் பாடலானார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் அபிராமி அம்பிகையின் திருக்காட்சி பெறாமை காரணமாக உறியில் ஒவ்வொரு கயிறாக அரிந்து கொண்டு வந்தார். "விழிக்கே அருளுண்டு” என்ற 79 ஆவது பாடல் முடிந்தபோது மாலைக்காலம் வந்துவிட்டது. அப்பொழுது அபிராமியம்பிகை அவருக்குக் காட்சி கொடுத்தருளித்

தனது திருத்தோடு ஒன்றைக்கழற்றி வானமண்டலத்தில் வீச, அதுசென்று சந்திரனைப் போலச் சுடர் விடலாயிற்று. அம்பிகை பட்டரை நோக்கி, "அன்ப, நீ மன்னனிடம் கூறிய சொல் மெய்யாகும்படி செய்துவிட்டோம். இந்தப் பிரபந்தத்தை நீ நிறைவேற்றுவாயாக. இதனை அன்புடன் பாராயணம் செய்பவர்கள் நம் அருளை அடைவார்கள்” என்று கூறி மறைந்தருளினாள்.

அம்பிகையின் திருக்காட்சியாலும் அவள் அருளிச் செய்த இன்மொழியாலும் தம்மை மறந்து பேரின்ப வாரிதியில் ஆழ்ந்து நின்ற பட்டர் அந்த ஆனந்தாதிசயத்தை "கூட்டியவா என்னை” என்ற 80ஆவது பாடலிற் புலப்படுத்தி மேல் இருபது பாடல்களைப் பாடி நிறைவேற்றி இறுதியில் ஒரு பயனும் இயற்றினார். ' அந்த இரவில் அம்பிகையின் திருத்தோடு வானத்தில் ஒளி விடுவதைக் கண்டு சரபோஜி அரசரும் பிறரும், அமாவாசையை அடுத்த பிரதமையாகிய இன்று பூரண சந்திரன் உதயமாயிற்றே! அற்புதம், அற்புதம்" என்று வியப்புற்றார்கள்; இது அம்பிகையின் திருவிளையாடல்; தன் அடியார் வார்த்தையை மெய்ப்பிக்கும் பொருட்டு இயற்றிய அற்புதம்" என்று தெளிந்தனர். பிறகு மன்னரும் பிறரும் அபிராமிபட்டரை அணுகி அடிவிழுந்து பணிந்து, "நாங்கள் செய்த குற்றத்தைப் பொறுக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தனர். அரசர் முன்பு சொன்ன மானியத்தை என்றும் பரம்பரை பரம்பரையாக அனுபவித்துக் கொள்ளும்படி பட்டருக்கு வழங்கினர்.

இவ்வரலாற்றின் உண்மை யாதாயினும், சரபோஜி அரசர் முதலில் அபிராமிபட்டரின் பெருமையை உணராமல் அசட்டையாக இருந்தாரென்றும், பிறகு அவர் உணர்ந்து கொள்ளும்வண்ணம் ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது என்றும் நாம் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

சரபோஜி மன்னர் இந்த அன்பரிடம், “இன்று முதல் தங்களுக்கு அபிராமி பட்டர் என்ற திருநாமமும், தங்கள் பரம்பரையினருக்குப் பாரதியார் என்ற பட்டமும் வழங்குவனவாகுக” என்று கூறினர் என்பர்.


  1. சரபோஜி மன்னர் அளித்த செப்புப் பட்டயம் இன்றும் இருக்கிறதென்பர். திருக்கடவூர் வட்டம், ஆக்கூர் வட்டம், திருவிடைக்கழிவட்டம், நல்லாடை வட்டம், செம்பொன்பள்ளி வட்டம் என்ற ஐந்து இடங்களிலும் இப்படி நெல் பெறும் உரிமை இப் பரம்பரையினருக்குக் கிடைத்தது. ஆனால் இப்போது இந்தப் பரம்பரையில் வந்த திரு நா. அமிர்த பாரதியார் என்பவர் திருவிடைக்கழிவட்டம், நல்லாடை வட்டம் ஆகிய இரண்டிடங்களில் மட்டும் நெல் தொகுத்து அதனைக் கொண்டு நவராத்திரி ஒன்பது நாட்களிலும் திருக்கடவூர் அபிராமியம்பிகைக்குச் சிறப்பான பூசை முதலியவற்றை நடத்தி வருகிறார். அவர் வயலின் வித்துவான். திருச்சிராப்பள்ளி ஸ்ரீ வரதசாசப் பெருமாள் கோயில் தெருவில் இப்போது வாழ்ந்து வருகிறார்.
  2. இவை 'திருக்கடவூர் அபிராமி பட்டர் பிரபந்தம்' என்ற பெயரோடு ஸ்ரீ வைகுண்டம் குமரகுருபரன் சங்கத்தாரால் வெளியிடப் பெற்றிருக்கின்றன.