உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

நிதிநிலை அறிக்கை மீது

அமைகிறதோ அதைப் பொறுத்து எங்களால் முடிவெடுக்கப் படும் என்ற நிலையை கழகத்தினுடைய பொருளாளர் திரு. சாதிக் பாட்சா அவர்களும், நேற்றையதினம் பேசிய மாண்புமிகு உறுப்பினர் திரு.பழனிவேல் ராஜன் அவர்களும் இங்கே விளக்கியிருக்கிறார்கள்

இப்படி தாமதாவதைக் குறித்து நம்முடைய மாண்புமிகு அமைச்சர் டாக்டர் காளிமுத்து அவர்கள் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில், இந்திய இராணுவத்திடம், துப்பாக்கி இருப்பது நவராத்திரியிலே கொலு வைத்து அழகு பார்ப்பதற்காகவா என்று அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, வேடிக்கையாக ஒரு நாட்டுப் பாடல் பாடுவார்கள். ஸ்ரீலங்காவிற்கு தன் கணவனை அனுப்பி வைக்கிறாள் மனைவி ஒருத்தி. அவன் திரும்பி வருகிறான். அவனைப் பார்த்து மனைவி கேட்கிறாள். “கண்டிக்குப் போன மச்சான் கடல் கடந்து போன மச்சான், எனக்கு என்ன மச்சான் வாங்கி வந்தாய்?" என்று கேட்கிறாள். அதற்குக் கணவன் பதில் சொல்லுகிறான்; கண்டியிலே ஆறு மாதம்; கப்பலிலே ஆறு மாதம், சீக்கிலே ஆறு மாதம் செலவழித்து போச்சுதடி" என்கிறான் கணவன். அதைப் போல ஸ்ரீலங்காவிலே இனப் படுகொலைகள் நடந்து மூன்று மாதங்களாகின்றன. மாதங்கள் முடிந்தனவே தவிர, பிரச்சினைகள் முடியவில்லை. கவலை தெரிவிப்பதிலே 10 நாள், கண்டனம் தெரிவிப்பதிலே 10 நாள், திரு. நரசிம்மராவை அனுப்ப 10 நாள், பிறகு திரு. பார்த்த சாரதியை அனுப்ப 10 நாள் என்று தன்னுடைய கவலையை, ஆழ்ந்த வேதனையை அமைச்சர் அவர்கள் அதிலே தெரிவித்திருக்கிறார்.

மாண்புமிகு மேலவைத் தலைவர் : ஆமாம், இவ்வளவையும் ஒன்று தவறாமல் படிப்பதற்கு உங்களுக்கு எங்கே நேரம் கிடைக்கிறது ?

மாண்புமிகு டாக்டர் கா. காளிமுத்து : எல்லாவற்றையும் படிக்காவிட்டாலும், நான் என்ன எழுதுகிறேன் என்பதை நிச்சயமாகப் படித்துப் பார்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.