கலைஞரின் சட்டமன்ற உரைகள்
169
விட்டுப் போகட்டும் என்ற அந்தக் கருத்தைக்கூட இந்த மன்றத்திலே சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு அதோடு நில்லாமல் தேசியமயக் கொள்கையினுடைய கழுத்தையே நெரித்து, அதனுடைய உயிரையே அறவே போக்குகின்ற அளவுக்கு 1987ஆம் ஆண்டு இதே மன்றத்தில் ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போது திரு. ரமணி அவர்கள் இங்கே இருந்திருப்பார்கள் என்று கருதுகிறேன். (குறுக்கீடு) எல்லோரும் இருந்தார்கள். அதை எதிர்த்திருக்கிறார்கள். எல்லாக் கட்சிக்காரர்களும் எதிர்த்திருக் கிறார்கள். இடதுசாரி மனப்பான்மை கொண்ட அத்தனை பேரும் எதிர்த்திருக்கிறார்கள். வெளிநடப்பு எல்லாம் அன்றைக்குச் செய்திருக்கிறார்கள்.
1987ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட அந்தக் கொள்கைக்கு விரோதமாக ஒரு மசோதா, ஒரு 'அமென்ட்மென்ட்', திருத்த மசோதா இந்த அவையிலே கொண்டுவரப்பட்டது. என்ன அந்த மசோதாவின் கருத்து என்றால் தேசிய மயமாக ஆக்கப்பட்ட அல்லது ஆக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 'பஸ் ரூட்' வழித்தடங்கள் உட்பட எல்லா வழித்தடங்களிலும் தனியார் வழித்தட உரிமை கோரினால் தடையின்றிக் கொடுக்கவேண்டும். இது திருத்தம். என்ன ஆவது தேசியமயமாக்கப்பட்ட கொள்கை? கேட்டால் தடையின்றிக் கொடுக்கவேண்டுமென்ற ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியிருந்த தேசியமயக் கொள்கையை ஆதரித்து, தீர்ப்பு வழங்கிவிட்டது. இது ஒரு சமதர்மத் திட்டம் தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த இந்தத் திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொள்கிறது என்று ஆணையிட்டு, அது தீர்ப்பு அளித்துவிட்டது.
அதற்கிடையே இவர்கள் இந்த மசோதாவை, திருத்த மசோதாவைக் கொண்டு வருவதற்கு முன்பே; இந்த மசோதாவிலே காணப்படுகின்ற கருத்துக்களைச் செயலாக்கு கின்ற வகையில் எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பிறகு மசோதா நிறைவேற்றப் பட்டது. வழித்தடங்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டன.