கலைஞரின் சட்டமன்ற உரைகள்
331
அவ்வளவு தானே தவிர நாங்கள்தான் உயர்த்தினோம் என்ற குற்றச்சாட்டை எங்கள்மீது கூறக்கூடாது
சட்டமன்றக் கூட்டம் அறிவித்தபிறகு, மின் கட்டண உயர்வை அறிவிக்கலாமா என்று திருநாவுக்கரசு அவர்கள் இங்கேயும் கேட்டார். வெளியிலேயும் கேட்டார். நண்பர் ஞானசேகரன் அவர்கள் இங்கே கேட்கவில்லை. வெளியிலே கேட்டார். நான் பத்திரிகையில் பார்த்தேன். 'பட்ஜெட் நடக்கும்போது, அதை அறிவித்த நேரத்திலே அவ்வாறு தெரிவிக்கலாமா' என்று கேட்டார். நேற்று மின்சாரத்துறை அமைச்சர் அதற்கு ஒரு வரியிலே மின்சாரத் துறை பட்ஜெட் வேறு, அரசாங்க பட்ஜெட் வேறு என்று குறிப்பிட்டார் இருந்தாலும் கூட நானும் சொல்ல விரும்புகிறேன். 1992ம் ஆண்டு மின் கட்டணம் 24.1.1992ஆம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் உயர்த்தப்பட்டது. அந்த ஆண்டு கவர்னர் உரை 29.1.1992 – மின் கட்டணம் உயர்த்தப்பட்டது 24.1.1992, அதாவது 5 நாட்களுக்கு முன்பாக
அது மாத்திரமல்ல. 1993ஆம் ஆண்டில் ஆளுநர் உரையின் தொடக்கம் 4.2.1993. நிதிநிலை அறிக்கை தாக்கல் 12.3.1993. இந்த நான்கிற்கும், பன்னிரெண்டிற்குமிடையிலே, 26.2.1993 அன்று அறிக்கை மூலம் மின்கட்டணம் 1993ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருக்கிறது. நான் தவறு என்று சொல்லவில்லை. இது து தவறல்ல என்பதற்காக இந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொன்னேனே அல்லாமல் வேறு அல்ல.
திரு. எஸ். திருநாவுக்கரசு: மாண்புமிகு பேரவைத்
தலைவர் அவர்களே, இது அறிவிப்பாக இருந்தாலும் சரி, கட்டண உயர்வாக இருந்தாலும் சரி, முதலமைச்சர்கள்தான் மாறியிருக்கிறீர்கள். நான் மாறவில்லை. இதே இடத்தில் உட்கார்ந்து அப்போது அதையும் கண்டித்திருக்கிறேன். இப்போது இதையும் கண்டித்திருக்கிறேன். நீங்கள் இரண்டு பேரும் மாறியிருக்கிறீர்களே தவிர, அதையும் கண்டித் திருக்கிறேன், இதையும் கண்டித்திருக்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: எல்லாம் மாறலாம். நான் எதிலேயும் மாற மாட்டேன். நான் எப்போதும் ஒரே நிலையிலேதான் இருப்பேன். (மேசையைத் தட்டும் ஒலி)