உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

மொழித் திட்டத்தால் அவர்களுக்குச் சங்கடங்கள் இருக்கின்றன, அவர்களுடைய உணவு விடுதியில் இத்தகைய கஷ்டங்கள், கல்லூரியில் வசதியில்லை போன்ற கோரிக்கைகளை வைத்துப் பேச்சுவார்த்தை மூலமாக, அமைதியான கிளர்ச்சியின் மூலமாக தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவேண்டுமே யல்லாது எடுத்ததற்கெல்லாம் கிளர்ச்சி, போராட்டம், யாரோ ஒருவரை ஒரு கட்சியில் இருந்து விலக்கினால் அதற்குப் போராட்டம், அதற்காகக் கல் எறிதல், சர்க்கார் உடைமைகளுக்குச் சேதம் என்ற காரியங்களில் மாணவர்கள் ஈடுபடுவது உள்ள படியே தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், மாணவர்களுடைய எதிர்காலத்திற்கும்

உகந்தது அல்ல. மாணவர்கள். எடுத்ததற்கெல்லாம் போராட்டத்தில் ஈடுபடுவோம், வன்முறை களில் ஈடுபடுவோம் என்று சொன்னால் அதை யாரும் வரவேற்க மாட்டார்கள். திரு.ஹாண்டே அவர்களும் அதைத்தான் வலியுறுத்திப் பேசினார்கள். திரு.பொன்னப்ப நாடார் அவர்களும் அதை வரவேற்கத் தயங்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இந்த அவையின் சார்பாக மாணவர்களைக் கேட்டுக் கொள்வேன். அவர்களுடைய எதிர்காலத்தை மறந்து விடாமல், ஒளி மயமான எதிர்காலத்தை இந்த இளமைத் துடிப்பின் குறும்புகளால், இப்படிப்பட்ட கிளர்ச்சியால் அவர்கள் கெடுத்துக் கொள்வது நல்லது அல்ல என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

குற்றச்சாட்டுகள் எல்லாம் இங்கே எடுத்துப் பேசப்பட்டன. நம்பிக்கை இல்லை இந்த அரசின்மீது. ராஜினாமா செய்யவேண்டும் இந்த அரசு என்று பேசிய திரு, பொன்னப்ப நாடார் அவர்களும், திரு.ஜேம்ஸ் அவர்களும், டாக்டர் ஹாண்டே அவர்களும் குற்றச்சாட்டுகளையெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள். ஒரு வகையில் எங்களுக்கு நிம்மதி. பிரதமரிடத்திலிருந்து நாங்கள் அனுமதி பெறுவதற்கு முன்பே மர்மப் பேழையின் முக்கால் பகுதி திறக்கப்பட்டுவிட்டது. ஆனால் டெல்லிக்குக் குற்றச்சாட்டுகளைக் கொண்டு போனவர்கள் நல்ல சாமர்த்தியசாலிகள். அவர்கள் தாங்கள் வந்து இங்கே ஆழம் பார்ப்பானேன் என்று பொன்னப்ப நாடார் அவர்களையும், ஜேம்ஸ் அவர்களையும் விட்டு ஆழம் பார்த்துவிட்டார்கள் (டாக்டர் ஹாண்டே எழுந்தார்) நீங்கள் இல்லை. அவ்வளவு சாமர்த்தியமாக அவர்கள் அந்தக் காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.