636
உரை : 98
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
குஜராத் நில நடுக்கம்
நாள்: 30.01.2001
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, குடியரசு நாளன்று குஜராத்தில் நடைபெற்ற நில நடுக்கம், அங்குள்ள பூமிப் பகுதியை மாத்திரம் பிளக்கவில்லை ; நம்முடைய நெஞ்சங்களை எல்லாம் பிளந்துவிட்ட கொடுமையான நிகழ்ச்சியாகும். பல்லாயிரக் கணக்கிலே உயிர்ச் சேதம், பொருள் சேதம் அங்கே ஏற்பட்டு, இந்திய பூபாகத்திலே உள்ள அனைத்து மக்களும் தங்களுக்கு உற்ற பாதிப்புபோல வருந்துகின்ற ஒரு சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது.
குஜராத்திலே புஜ் என்ற நகரமும், கட்ச் வளைகுடா பகுதியும் முழுவதும் நாசமடைந்துள்ளன. வர்த்தக நகரமான அகமதாபாத், ஜவுளித்தொழில் நகரமான சூரத், ராஜ்காட் போன்றவைகளும் இந்த நில நடுக்கத்தால் சிதறிக் கிடக்கின்றன என்று செய்திகள் வந்துள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், புஜ் நகரமே கான்கிரீட்களிலான குப்பைமேடாகக் காட்சியளிக்கிறது என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் அறிவிக்கின்றன.
ஏறத்தாழ 550 கிராமங்கள் அறவே அழிந்துவிட்ட தாகவும், 70 கிராமங்களுக்கு இன்னும் மீட்புக் குழுவினர் செல்ல முடியாத அளவுக்கு அந்தப் பகுதிகளில் சாலைகளும், பாலங்களும் சேதமடைந்து கிடக்கின்றன என்ற செய்திகளும் ஈட்டி என நம்மைத் தாக்குகின்றன. தொடக்கத்திலே 500 பேருக்குமேல் உயிரிழந்தார்கள் என்று சொல்லப்பட்ட தகவல் பின்னர் இரண்டாயிரமாக, பத்தாயிரமாக, இருபதாயிரமாக,